'இதுதான்' என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காதது அல்லவா இந்துமதம் ? எந்த சிறு வட்டத்திற்குள்ளும் அடங்காமல், எப்போதும் அழிவில்லாமல் பயணிக்கும் வாழ்வியல் அல்லவா சனாதன தர்மம் எனும் இந்து மதம் ?
ஓரிறை கோட்பாடு, ஒரே இறைதூதர், ஒரே புனிதப் புத்தகம் எனும் சிறு வட்டங்களுக்குள் அடங்கி விடும் கட்டமைக்கப்பட்ட மதங்களை, நம் வீடுகளில் வடிவமைக்கப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டியோடு ஒப்பிடலாம் என்றால், இந்துமதம் என்பதை ஒரு பெருங்கடலோடு ஒப்பிடலாம்.
குறுக்கு வழிகளும், புலன்களை வசப்படுத்தும் கவர்ச்சி வார்த்தைகளும் இல்லாத பெருங்கடல் அது அதில் சுறாக்கள் உண்டு, சுழல்கள் உண்டு. பேரலைகளும், சூறாவளிகளும் உண்டு. இவற்றை எல்லாம் தாண்டி நீங்கள் பயணித்தால் அதி அற்புதமான முத்துக்களை எடுக்கலாம்.
சனாதன தர்மம் எனும் இந்து மகா சமுத்திரத்தை குறித்து இந்த அடியவன் எழுத என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த புத்தகத்தில் உங்களுக்கு ஏதேனும் நல்ல விஷயங்கள் புலப்பட்டால் அது அடியேனுக்கு சொந்தமானது அல்ல. நம் ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பல அறிஞர்களின் சிந்தனையாக அது இருக்கலாம். அல்லது அடியேனை ஊடகமாக கொண்டு எல்லாம் வல்ல இறைவன் தெரிவித்த கருத்துக்களாய் அவை இருக்கலாம். அதே வேளையில் இந்த புத்தகத்தில் உள்ள குறைபாடுகள், இந்து மதம் குறித்த தவறான முன்னெடுப்புகள் ஏதேனும் இருந்தால் அதற்கு முழு முதல் காரணம் அடியேனின் பக்குவமின்மையே.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
#################################################
1
$$ சனாதன தர்மம் ஒரு முன்னுரை $$
சனாதன தர்மத்தின் அடையாளமாய் சொல்லப் படுகிற இன்றைய இந்து மதத்தின் பாதை வியக்கத் தக்கது. அது எப்போது தோன்றியது, எப்போது வளர்ந்தது, எப்போது யாரால் பரப்பப் பட்டது என்று எதுவுமே இல்லாமல் காலங்களை கடந்து அது நிலைபெற்று கொண்டிருக்கிறது.
முதலில் ‘சனாதன தர்மம்’ என்றால் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்.
'சனாதன' என்றால் அழியாத என்று பொருள். ‘தர்மம்’ என்பதற்கு நேரிடையாக ஒரு வார்த்தையில் பொருள் சொல்வது கடினம். எது அனைத்துக்கும் ஆதாரமோ, ‘அது’ என்று பொருள் கொள்ளலாம். ஆக சனாதன தர்மம் என்றால் எது என்றுமே நிலைத்திருந்து, அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளதோ, ‘அது’ என சொல்லலாம்.
சுருங்கச் சொன்னால் தர்மம் என்பது பரந்த சிந்தனையை கொண்டு விரிவடைவது, அதர்மம் என்பது அதற்கு நேர் எதிரானது.
நீங்கள் எந்தப் பெயரிலும் அதை அழைத்துக் கொள்ளலாம், எது இப்பிரபஞ்சத்தில் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் இருக்கிறதோ, எது எல்லா குருமார்கள் தோன்றுவதற்கும் முன் இருந்ததோ, எது இறைத்தூதரை சாராமல் இறைவனை சார்ந்ததோ, எது எல்லாக் காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் உகந்ததோ, எது முழுமையாகவும், பகுதியாகவும் இருக்கிறதோ, எது பாரபட்சமின்றி எல்லோரையும் தழுவுகிறதோ அது தான் சனாதன தர்மம்.
“சரிங்க...மதத்துக்கும் இந்த சனாதன தர்மத்திற்கு என்ன வித்யாசம் ?” என நீங்கள் கேட்பது புரிகிறது.
மதம் என்பது ஒருவரால் நிறுவப்பட்ட கோட்பாடுகள் அல்லது விதிகளை கொண்டது. அந்த கோட்பாடுகளை பின்பற்றுபவர்களை மட்டும் உள்ளடக்கியது, ஒரு இறை தூதரையோ அல்லது ஒரு புனித நூலையோ மட்டும் சார்ந்து இருப்பது. அதனை தழுவியவர்கள் அம்மதத்தின் விதிகளுக்கு புறம்பாக போவது, அம்மதத்தை எதிர்ப்பது போல் ஆகும். சுவர்க்கம் அல்லது முக்தி என்பது அவர்களுக்கு அவர்களின் இறைதூதரின் வார்த்தைகளைச் சார்ந்து இருக்கிறது. இந்த வட்டத்தின் இடையே சிக்கிக் கொண்ட மக்களை, இம்மதங்கள் ஒருவரோடு ஒருவரைப் பிரிக்கவும், மாற்றவும், எதிர்க்கவும், சகிப்புத்தன்மை இல்லாமலும் செய்து தீர்க்கின்றன. இன்றைய உலகில் மதச்சண்டையில் இறந்தவர்கள், போரில் இறந்தவர்களை விட அதிகம்.
சனாதன தர்மமோ, உயிர்கள் அனைத்தையும் அரவணைக்கிறது. அதற்கு என்று திட்டவட்டமான சட்டங்கள் இல்லை. ஆக்கப்பூர்வமாக அதன் கோட்பாடுகளை அலசவும், ஆராயவும், சுதந்திரத்தை அது அளிக்கின்றது. எந்த தனிநபரின் ஆதிக்கமும் முழுமையாக அதில் இல்லை. எதையும் அறிவுச் சுடரால் அலசி ஆராய்கிறது. யாரையுமே சாராதது. யாராலும் பரப்பப்படும் அவசியம் இல்லாதது.
சத்தியத்திற்கு எதற்கு விளம்பரம் ? பொய்களுக்கு ஆயிரம் முகம் இருக்கலாம், உண்மைக்கு ஒன்று தானே ?
இந்த உடல், மனம், அறிவு எனும் சிறைகளில் நாம் அடைபட்டு, இதையே உண்மை என்று நினைத்துக் கொண்டு சுருங்கிக் கிடக்கிறோம். “நான் எல்லையற்ற, அழிவற்ற ஆத்மா” எனும் உணர்தலே முழுச் சுதந்திரம். அதைத் தான் சனாதன தர்மம் முன் வைக்கிறது.