Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 7. தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
7. தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
Permalink  
 


7. தொல்காப்பியத்துக்கு
முன்னும் பின்னும்


மிழிலே காலத்தால் முந்தியநூல் என்று கொள்ளப்படுவது தொல்காப்பியமேயாகும். அதற்கு முன்பே பல இலக்கியங்களும் சில இலக்கணங்களும் இருந்தன என்பது உண்மையேயாயினும், அவற்றுள் ஒன்றேனும் இன்று நாம் பெற இயலவில்லை. தொல்காப்பியர் பல முடிபுக்ளைக் கூறும்போது 'என்ப,' 'என்மனார் புலவர்' என்னும் சொல்லையும் சொற்றொடரையும் பயன்படுத்துவதனாலேயே அவருக்கு முன்னரே இலக்கணப் புலவர் பலர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகின்றது. இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபாதலின், இந்தப் பேரிலக்கண நூலுக்கு முன் பல இலக்கிய நூல்கள் இருந் திருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தமிழ் வளம் பெற்ற ஒரு மொழியாய் இருந்தது என்பது தெளிவு.

இத் தொல்காப்பியத்தின் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு. இந்தியநாட்டு வரலாறு சுமார் 2500 ஆண்டுகள் அளவிலே அடங்குவதை ஆராய்ச்சியாளர் அறிவர். அதற்கு முற்பட்ட காலமெல்லாம் வரலாற்று எல்லைக்கு அப்பாற்பட்டதேயாம். தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என்று கூறுவர் வரலாற்று ஆய்வாளர். தமிழ் இலக்கியங்கள் அக்காலத்தை 'இடைச் சங்க காலம்’ எனக் கூறும். இறையனார் களவியல் உரை தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் எழுந்த நூல் என்றும். அவ்விடைச் சங்கம் கபாடபுரத்தில் இருந்த தென்றும் குறிக்கின்றது. எனவே இடைச்சங்க காலத்துக்கும் கடைச்சங்க காலத்துக்கும் இடையில் ஒர் ஊழி தோன்றியிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும்,

‘அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி'

என்னும் அடிகளின் வழி ஒர் ஊழி உண்டாயதென்றும் அதற்கு முன்னரே தொல்காப்பியர் தம் நூலை இடைச்சங்கத்தில் இயற்றினர் என்றும் கூறுவர். ஊழிக்கு முன் இருந்த நிலையைப்பற்றியும் அக்கால நாட்டு நிலை பற்றியும் தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரையில் (கழகப் பதிப்பு) திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விளக்கியுள்ளார்கள். இக் காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததென்பதை இன்றும் நூல் ஆராய்ச்சியாளர் சிலரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிலரும் கண்டுள்ளனர். இழந்த ‘இலெமூரியாக் கண்டம்'[1] என்று ஆங்கிலத்தில் ஆழ்கடலின் கீழ்ச்சென்ற அந்த நாட்டைப் பற்றி ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. மற்றும் தமிழ்நாட்டுப் பழங்கால இலக்கியங்களிலும் இவை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பஃறுளியாற்று மணலினும் பல நாள் வாழ வேண்டுமென மன்னரை வாழ்த்திய அடிகள், புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.[2] சிவதருமோத்திரம் என்ற சைவ நூல் பொதியிலுக்குத் தென்பால் மகேந்திரமலை எனப் பெயரிய மலைத்தொடர் இருந்ததெனவும், அதன் அடியில் பொன் மயமான இலங்கை இருந்ததெனவும் கூறுகின்றது. சிலப்பதிகார அடிகளுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவே நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்பர். அவற்றையே இறையனார் களவியல் உரை குறித்திருக்கலாம். எனவே, இவற்றின் எடுத்துக்காட்டுக்களால் இக்காலத்துக் குமரிமுனைக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்தது என்பது உறுதி. இந்த நிலப்பரப்பிலேயே கபாடபுரம் இருந்து அழிவு பெற்றிருக்கலாம் . அது காலைத் தொல்காப்பியத்தோடு, சில உரைகளில் காணப்பெறும் ஒரு சில இலக்கிய இலக்கண, இசை நூல்களும் பிழைத்திருக்கலாம். காலவெள்ளத்தால் அனைத்தும் கெட, தொல்காப்பியம் இன்றளவும் வாழ்கின்றது எனக் கொள்ளலாம்.

தொல்காப்பியர் காலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னது என்றும், கடைச் சங்ககாலம் கிறிஸ்து பிறந்த பொழுது என்றும் கொண்டால், அந்த ஆயிரம் ஆண்டுகள் எல்லையில் ஒரு பெரிய ஊழி நடந்திருக்குமா என்பது ஆராய்தற்குரிய ஒன்று. நிலவரலாற்று ஆராய்ச்சியாளர், கடைசியாக நடந்த பேருழி சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும் எனக் கணக்கிடுவர். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கும் கடைச்சங்க காலத்துக்கும் இடையில் அத்துணை பேரூழி நடைபெற்றது எனக் கொள்ள முடியாது. எனினும், மேலே காணும் பல்வேறு சான்றுகளினால் ஒரு சில நிலப்பகுதிகளாவது அந்த ஆயிரமாண்டு எல்லையில் மறைந்திருக்கலாம் என்றும் எண்ண இடமுண்டு அல்லவா?

ஊழி தோன்றியிருப்பினும், அன்றித் தோன்றாதிருப்பினும், அதுபற்றிய ஆரய்ச்சி இங்கு நமக்கு வேண்டா. கடைச்சங்க காலத்துக்கு நெடுநாட்களுக்கு முன்பே இருந்தது தொல்காப்பியம் என்பதும், அதன் கால எல்லை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதுமே இங்கு நாம் கொள்ள வேண்டுவன. அதன் தோற்றம் குமரிக்குத் தெற்கே அழிந்த நிலப்பரப்பில் இருந்திருக்கலாம் எனக் கொள்வதும் தவறு அன்று.

இனி இத்தொல்காப்பியத்தைப் பற்றி இந்த நூற்றாண்டில் அறிஞர் சிலர் ஆராய்ந்துள்ளனர். சிலர் ஆரியர் தமிழ்நாட்டுக்கு வருதற்கு முன்பே தொல்காப்பியம் தோன்றியது என்பர். சிலர், அதில் ஆரியர் பற்றியும் அவர்தம் வாழ்வு பற்றியும் குறிப்புக்கள் வருவதால், அது ஆரியர் வருகைக்கு நெடுங்காலம் பிந்தியே தோன்றியிருக்க வேண்டுமென்பர். முன்னவர் அத்தகைய சூத்திரங்களெல்லாம் இடைச் செருகல் எனத் தள்ளுவர். எனினும், சற்றுச் சிந்தித்து நோக்கின், இருவர் கொள்கைகளிலும் தவறு உள்ளமை காணலாம். ஆரியர் கொள்கைகள் எனப் பின்னர்க் கொள்ளும் அத்தனையும் அவர்களையும் அவர்களுடைய கொள்கைகளையும் பற்றியன அல்ல. அப்படியே ஆரியர் பற்றிய எல்லாச் சூத்திரங்களையும் இடைச்செருகல் எனத் தள்ளவும் உண்மையில் ஆராய்ச்சி இடம்தராது. நமக்குத் தேவையற்ற—நம் ஆராய்ச்சிக்கு மாறுபட்ட கருத்துக்களையெல்லாம் இடைச்செருகல் என்று தள்ளும் ஒரு முறை ஏற்பட்டுவிடுமாயின், எந்த இலக்கியத்தையும் எந்தக் காலத்துக்கும் கொண்டு வரலாம். இந்திய நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் பொதுவாக அக்காலத்தில் பரவி இருந்த கொள்கைகளையும் பிறவற்றையும் ஒரு சாராருக்கு உரியனவாக்கி, அவர்கள் வந்த பிறகே இவை இங்கு இடம் பெற்றன எனக் கொள்ளுவதும் பொருந்தாததாகும். எனவே, காய்தல் உவத்தல் அகற்றி, நடுவுநிலை நின்று நோக்கின், உண்மை ஓரளவு வெளிப்பட்டே தீரும்.

ஆரியர்கள் இந்தியாவில் கால் வைத்த காலம் கி. மு. 1500 என்பதை அனைவரும் ஒரு சேர ஏற்றுக் கொள்ளுகின்றனர்[3]. அக் காலத்தில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்—வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும்—அந்த ஆரியரினும் பல வகையினும் வேறுபட்ட ஓரினத்திார்—திராவிடர்—சிறக்க வாழ்ந்திருந்தனர்[4]. அதை வலியுறுத்தும் வகையில் இன்றும் மேற்கே பலுசிஸ்தானந்திலும், கிழக்கே அசாம் மலைப் பகுதிகளிலும், மத்திய இந்தியாவில் சாத்பூரா மலைப் பகுதிகளிலும் திராவிட மொழிகளைப் பேசும் மக்களும், திருந்தாத திராவிட மொழிகளும் திகழ்ந்து வருகின்றன என்பதைக் கால்டுவெல் அறிஞரும் பிறரும் உலகுக்கு நன்றாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். எனவே, ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தே இந்நிலப்பகுதி முழுதும் பரவியிருந்த மக்கள் இன்று தென்னாட்டில் வாழும் திராவிட இன மக்களின் முன்னோரே என்பது தேற்றம். வேதகால இந்தியா[5]’ என்னும் நூலின் எட்டாவது கட்டுரையில் திரு S.K. சட்டர்ஜி, M.A.,D.Litt என்பார், அந்தக் காலத்தில் ஆரிய மொழியால் திராவிட மொழி அமைப்புக்களும் சொற்றொடர்களும் கலந்து அந்தப் புது மொழியை வளர்க்க உதவின என்பதைத் திட்டமாகப் பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குகின்றார்[6]. பூசை என்ற சொல்லை அவர் திராவிட மொழிச் சொல் என்றே நிறுவுகின்றார். பூக் கொண்டு செய்யப்படுவது பூசையாகும். (பூ + செய் = பூசெய்: பூசை) அப்படியே ஆண்+மந்தி என்ற இரு சொற்களே அனுமன் ஆயிற்று என்றும் வேதத்தில் அனுமனுக்கு அப்பெயரே இல்லை என்றும், விருஷகபி’ என்ற பெயரே ஆளப்பெறுகின்றது என்றும்."காட்டுகின்றார்[7].” இருக்கு வேதத்தில் (X: 86) இந்த ஆண்மந்தி வழிபாடு ஆரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்ற கருத்தை அவர் ஆதாரமாகக் காட்டுகின்றார்[8] . இப்படியே திரு. P.T. சீனிவாச ஐயங்கார் அவர்கள், இந்தியாவின் கற்காலம்’ என்ற தமது ஆங்கில நூலிலே சிவன், கண்ணன், திருமால், முருகன் ஆகியோர் திராவிடர்களே என்றும், இருக்கு வேதத்தில் கண்ணன், சிவன் இருவரும் ஆரியருக்கு மாறுபட்ட காரணத்தாலே ஆரியர்கள் அவர்களோடு போரிட்டார்கள் என்றும் காட்டுவர். அதற்கென அவர் இருக்குவேத மேற்கோள்களைக் குறித்துள்ளார்[9] . சிவனைப்பற்றி முதன்முதல் அதர்வண வேதத்திலேதான் உருத்திரனாக வணங்கும் முறையில் குறிக்கப் பெற்றுள்ளதாம். இருக்கு வேதத்தில் சிவன் சில தலைவர்களுடன் சேர்த்து எண்ணப்பட்டு, இந்திரனுக்கு எதிரியாகக் காட்டப்படுகின்றான். இருக்கு வேதம் VII : 21-5, X : 9-8, Vll: 18-7, X : 27-9, X : 27.9 ஆகிய பகுதிகளில் இந்தக் குறிப்புக்கள் உள்ளன என்பர்[10]. சிவனைத் தவிரக் கண்ணன் அல்லது திருமால் எனப்படும் கிருஷ்ணனும், ஆரியருக்கும் அவர் தலைவனாகிய இந்திரனுக்கும் மாறுபட்டவன் என்பதை இருக்குவேதத்தின் VIII:85:13 to 15, | : 11 : 20.7, IV : 16:13, Vlll : 85:16, li : 42 ஆகிய பகுதிகள் விளக்குகின்றன என்பதை அவரே எடுத்துக்காட்டுகின்றார். அதில் திருமால் கறுப்பனாய், அரக்கனாய், விரும்பத் தகாதவனாய், ஆரியருக்கு மாறுபட்டவனாய்க் (The Dusky brood- the dark aborignes who opposed the Aryan Black Rakshasa, one among seven enemies) காட்டப்படுகிறான். இவையெல்லாம் ஆரியர் வடவிந்தியாவில் கால் வைத்து, இருக்குவேதம் எழுதப்பட்ட காலத்தனவாகும். யசுர்வேத தாருண முதற்பிரசினத்துள்ள ஐந்தாம் அன்வாக முதற்பஞ்சாதியில் இந்திரன், அக்கினி, முதலியோர் உருத்திரனுக்கு விரோதிகள் என உள்ளதை ரா. ராகவய்யங்கார் காட்டியுள்ளார். என்றாலும் பின்னர் இந்நாட்டு மக்களோடு வாழ்ந்து அவர்தம் பழக்கங்களையும் வழிபாடுகளையும் மேற்கொண்டாலன்றித் தமக்கு வாழ்வில்லை எனக் கண்ட பிறகு அவர்தம் கடவுளையும் தமது வேதத்தில் போற்றத் தொடங்கினர். காலப்போக்கில் வேதம் பலர் கூட்டுறவால் வளர வளர, முதல் முதல் இவர்களெல்லாம் கடவுளாக அதர்வண வேதத்தில் X :7ல்) போற்றப்படுகின்றனர். எனவே, கி.மு. 1500ல் இந்தியாவில் கால் வைத்த ஆரியர் முதலில் தம் கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் அங்கே வாழ்ந்த பழைய மக்களின்மேல் ஏற்றக்கருதி முயன்று போரிட்டு, முடியாத காரணத்தால் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. எனவே, இன்று ஆரியர் கொள்ளுகின்ற அனைத்தும் அவர்களுடையனவென்றும், திராவிடருடைய மொழி, கலை, வாழ்வியல் முதலியன அதில் கலக்கவில்லை என்றும் கூறமுடியாது என்பதைத் தெளிந்த வரலாற்று ஆசிரியர்கள் திட்டமாகக் காட்டியுள்ளார்கள். தமிழ் மொழி வரலாற்றைப் பற்றி எழுதிய ‘வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்’ அவர்கள், 'தமிழரிடத்திருந்த பல அறிவியல்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாம் அறிந்தன போலவும், வடமொழியினின்று தமிழுக்கு அவை வந்தன போலவும் காட்டியுள்ளனர்,[11] என விளக்கி இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். ஏறக்குறைய வடநாட்டில் மாறாட்டங்களைப் பெற்ற இந்தக் காலத்தை ஒட்டித்தான் தமிழ்நாட்டில் தொல்காப்பியம் தோன்றிற்று.

இவ்வாறு தொல்காப்பியம் தோன்றிய இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தமிழ் இனத்தவர் மட்டுமே வாழ்ந்தனர் எனக் கொள்ள முடியுமா? மேலை நாடுகளிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் பலர் தமிழ்நாட்டில் அக்காலத்திலேயே குடியேறியிருக்க முடியும். அன்றி, வாணிபத்தின் பொருட்டாவது அவர்கள் இந்நாட்டுக்கு வந்திருக்க முடியும். எகிப்திய தலைநகரம் தொல்காப்பியர் காலத்துக்கும் முந்தியதாகும். உரோம, கிரேக்க நாகரிகங்களே யவன நாகரிகம் என்ற பெயரோடு தமிழ்நாட்டில் நெடுங்காலப் பழக்கத்தில் வந்துள்ளன. இதே நிலையில் அன்றைக்கு ஒரு சில ஆண்டுகளுக்குமுன் வடவிந்தியாவில் நுழைந்த ஆரியருள் ஒரு சிலர் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கலாம். எனவே, பல வேற்று மொழியாளரும் பண்பாட்டாளரும் தமிழ்நாட்டில் அக்காலத்தில் கலந்து வாழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. என்றாலும், அவருள் ஆரியர் இந்நாட்டு நல்லியல்புகளைக் கொண்டு சென்று தம் இலக்கியத்திலும் வாழ்விலும் அமைத்துக்கொண்டனர். பின் காலம் அவர் தம் சார்பிலிருந்ததால், வடக்கிலிருந்து வந்த தென்னாட்டு, ஆதிக்கத்தைக் கைப்பற்றி வளர்ந்தகாலத்து, இங்கிருந்து கொண்டு சென்று உடன் திருப்பிக் கொண்டு வந்தனவற்றையே முதல் என்றும், தமிழ்நாட்டுத் தொன்மைச் சிறப்புக்களை வழி என்றும் செய்ய முயன்றனர். ஒரு சில வற்றுள் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றாலும், அவ் வெற்றி நிலைபெறாததோடு, பிறவற்றின் உண்மைகளும் உலகுக்குப் புரியலாயின. இதையே வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் முன் சொன்னபடி நன்கு காட்டுகின்றார். திரு. சட்டர்ஜி அவர்கள் தமிழ்ச் சொற்களின் அமைப்பே அவற்றின் தொன்மையைக் காட்டுவன என விளக்கியுள்ளார்.[12]

தொல்காப்பியர் காலத்தில் வடமொழி வாணர் சிலர் வந்திருக்கக் கூடும் என்றேன். ஆயினும், அவர்கள் கருத்தினையும் கொள்கையினையும் அக்காலத்தில் நாட்டில் புகுத்தியது மிகக்குறைவே. என்றாலும், இன்று வாழ்வாருட் பலர் ஆரியர் பின் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கொண்டு வந்த பலவற்றை வைத்துக் கொண்டு தொல்காப்பியர் அவர் வழிதான் இலக்கணம் எழுதினார் எனச் சாதிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் தொல்காப்பியப் பாயிரத்துக்கு விருத்தி உரை எழுதிய ஆசிரியர் சிவஞான சுவாமிகள் நல்ல பதிலைத் தந்துள்ளார்.[13] அதில் ஆசிரியர் ஆரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள அடிப்படை வேற்றுமைகளையெல்லாம் நன்கு அலசிக் காட்டி, தமிழ் இலக்கண அமைப்பே தமிழரது நீண்ட நாள் வாழ்வையும், வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்க வல்லது என்பதை எடுத்துரைத்து, பொருளதிகாரத்தின் சிறப்பே ஆரிய மொழியின் வேறுபட்ட நிலையை விளக்கும் என்பதைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியர் வடநூலார் மதம் பற்றி இலக்கணம் செய்தார் எனல் பொருந்தாது எனக் காட்டியுள்ளார். அவர்தம் கருத்தை ஒட்டியும், நச்சினார்க்கினியர் உரை நலம் முதலியவற்றைக் காட்டியும் அறிஞர் வி.கோ.சூ. அவர்கள் வடமொழிக் கலப்பு என்னும் தலைப்பிலே தமிழ் வடமொழி இலக்கண அமைப்பிலிருந்து முற்றும் வேறுபட்ட நிலையை நன்கு விளக்கியுள்ளார்கள்[14]இந்த அடிப்படையில் இனித் தொல்காப்பியத்தைப் பற்றிக் காண்போம்.

தொல்காப்பியரைப் பற்றி வழங்கும் கதை நாட்டுக்குப் புதுவதென்று. தொல்காப்பியருக்கு ஆசிரியர் அகத்தியர் எனவும், அவர் தம் ‘பத்தினி'யை அழைத்து வரும்போது அவளைத் தொடலாகாது என ஆணையிட்டதாகவும், வழியிடை வெள்ளம் காரணமாகக் கோல் வழித் தொல்காப்பியர் 'பத்தினி'யைப் பற்றிக் கரை சேர்த்தார் எனவும், ஆதனால் ஆசிரியரும் மாணவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர் எனவும் வழங்கும் கதை நாட்டுக்கும் மொழிக்கும் இழுக்குத் தருவதாகும். இக்கதை நடந்தது என யாராவது நம்ப முடியுமா? நம்பினால், யாரைச் சந்தேகிப்பது? பத்தினியையா தொல்காப்பியரையா? அவர் ஆசிரியராகிய அகத்தியரையா? எனவே, இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அன்று.

மற்றும் அகத்தியனாரே தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்பதற்குச் சான்று என்ன? அப்படியே இருந்தாலும், அவர் எந்த அகத்தியர்? அகக்தியர் என்ற பெயருடன் ஒருவருககு மேற்பட்டவர் வாழ்ந்தார் என்பதை நான் இந்நூலில் மற்றொரு கட்டுரையில் காட்டியுள்ளேன். திரு. கா. சு. பிள்ளை அவர்கள் இக்கருத்தை வற்புறுத்தியுள்ளார்கள்[15] எனவே, எந்த அகத்தியர் எனக் காட்டுவது? அப்படியே தொல்காப்பியர் அகத்தியரிடம் பயின்றார் என்றாலும். அதை எங்காவது அவர் நூல் வழி எடுத்துக் காட்ட முடியுமா? பாயிரத்தில் அவரோடு பயின்ற மாணவரும் (அதங்கோட்டு ஆசான்) குறிக்கப் பெறுகின்றார். அகத்தியர் முன் அரங்கேற்றியதாக இல்லை. அகத்தியமே இன்று நாட்டில் வழக்கொழிந்துவிட்டது. பன்னிரு படலம் போன்ற இரண்டொரு பிந்திய நூல்களில் வரும் குறிப்பைக் கொண்டு எப்படிச் சரி எனக் கொள்ளமுடியும்? அகத்தியர் நீடு வாகிழ்ன்றவர் ஆதலின், அக்காலத்தில் அவர் மறைந்துவிட்டார் என்றும் கொள்ள முடியாது. எனவே, அவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றார் என்பதே பொருந்தாது. உண்மை இதுவாக, அவரையே திரணதூமாக்கினியாக்கி, வடநாட்டிலிருந்து வந்த அகத்தியரே அவருக்குத் தமிழ் பயிற்றுவித்தார் என்ற கதையும் கூறுவது பொருந்தாது. அவருக்கு முன் ‘அகத்தியம்’ என்ற இலக்கணம் இருந்திருக்கலாம். அதில் இரண்டொரு சூத்திரங்கள்கூடப் பின்னால் இன்றுவரை வாழலாம் , ஆனால், அவற்றைக்கொண்டே அந்நூலுடையாரே தொல்காப்பியருக்கு ஆசிரியர் எனக் கொள்ளல் எப்படிப் பொருந்தும்? மற்றும் தொல்காப்பியரை “அகத்தியம் நிறைந்தவன்’ என்னாது, ஐந்திரம் நிறைந்தவன்’ எனவே பாயிரம் காட்டுகின்றது. ஐந்திரமா, ஐந்திறமா என்பது ஆராய்தற்குரியது எனக் கா. சு. பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்[16]. இந்திர வியாகரணம் என்ற நூலே ஆரிய மொழியில் இல்லை என K. சீனிவாசப்பிள்ளை அவர்கள் காட்டுவர். இனி, சிலர் சொல்வது போன்று இவர் ஜமதக் கினியின் மைந்தர் என்பார் கூற்றுப் பொருந்தாது எனவும் இவரே காட்டியுள்ளார்.[17]

இனிப்பாயிரத்தின் வழித் தொல்காப்பிரைக் காணலாம். தொல்காப்பியத்தைக் கேட்ட அதங்கோட்டாசான் என்பவர், “நான்மறை முற்றியவர்’ எனக் குறிக்கப்படுகின்றார். இந் நான்மறை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பார் சிலர். அவை அல்ல என்பதை உரை எழுதவந்த நச்சினார்க் கினியர் திட்டமாக எடுத்து விளக்குகின்றார்[18]. அவர் உரையின்படி சாமவேதமாகிய இசை இருவருக்கும் பொதுவாய் உள்ளது. அமைப்பு முதலியன மாறியிருந்தாலும், பெயர் ஒன்றாய் உள்ளது. அந்த ஆய்வு நமக்குத் தேவை இல்லை. வேதவியாசர் வேதம் செய்வதற்குமுன் தொல்காப்பியர் நூல் செய்தார் என்பது இதனால் தெரிகின்றது. கங்கை சிந்து சமவெளியில் வந்து குடியேறிய ஆரியர் மெள்ள மெள்ள வேதங்களைச் செய்தார்கள் என்பதை அறிகிறோம். அவர்கள் வந்த காலத்தில் இருந்த இருக்கு வேதமே காலத்தால் மெள்ளப் பெருகிற்று என்றும் பின்பு நான்கு வேதங்களும் உருவாயின என்றும் கூறுவர் ஆராய்ச்சியாளர்[19]. எனவே, தொல்காப்பியர் வேதங்கள் உருவாவதன் முன்பே தம் காப்பியத்தை எழுதினார் எனக் கொள்ளல் வேண்டும். மன்னன் நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையத்து நூலை அரங்கேற்றினர் என்பது கூறப் பெற்றுள்ளது. அவனது காலமும் கடைச்சங்க காலத்துக்கு நெடுங்காலத்துக்கு முந்தியது என்பது ஆராய்ந்து உரைக்கப் பெற்றது. எனவே, கடைச்சங்க காலத்துக்கு நெடுங்கால முன்னரே தொல்காப்பியம் எழுந்து வாழ்ந்தது எனக் கொள்ளல் பொருந்தும். இனி, இத்தொல்காப்பிய நூல்வழி இரண்டொரு கருத்துக்களைக் காணல் ஏற்புடைத்தாம் என எண்ணுகின்றேன். இதுவரை கண்ட பாயிரம் அவரைப் பற்றிப் பிறர் எழுதியது. இனி அவர் எழுதிய நூல் வழியே சில கருத்துக்களைக் கண்டு அமைவோம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தொல்காப்பியர் ஆரியர் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர் என்பது பொருந்துவதாகாது என்பதைக் காட்டினேன். ஆம். கி.மு. 1500-ல் வடவிந்தியாவில் நுழைந்த ஆரியர், அடுத்து ஐந்நூறு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பார் எனக் கொள்வது பொருத்தமேயாகும். எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்கள் தமிழ்நாட்டில் இருந்தமையாலும், பொருளதிகாரத்தில் நாட்டு நிலையை உள்ளபடி காட்ட வேண்டிய முறை உண்மையாலும் அவர்தம் வாழ்க்கை முறைகள் இரண்டொன்றையும் இவர் எடுத்துக் காட்டினார் எனக் கொள்ளல் தவறாகாது. இரண்டொரு சூத்திரங்கள் அந்த வகையில் அமைகின்றன என்றாலும், இன்று இவர் காட்டுவது போன்று பலவற்றை வடநூல் மதம் பற்றி எழுதினார் எனக் கொள்வது பொருந்தாது. இரண்டோர் ஆரியச் சொற்கள் கலந்து வந்துள்ளன என்பதை அறிஞர் கா. சு. அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்[20] . எனினும், வடசொற்கள் தமிழில் பயிலுதற்கு இந்நூல் விதி வகுத்திருப்பதால், ஆரியரோடு தமிழருக்குத் தொடர்பு இவ்வாசிரியர் காலத்தே ஏற்பட்டிருக்கக் கூடுமென்பது யூகிக்கப்படும்[21]” என்று அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. வடசொல் வேறு ஆரியச் சொல் வேறு என்பதை நான் முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன்[22]. வடசொல்' என்பது ஆரியமொழியைக் குறித்ததாகாது. தமிழில் வட சொல் எனவே குறிக்கப்பெறுவன வேங்கடத்துக்கு அப்பால் வழங்கப்பட்ட தெலுங்கு தொடங்கி, இன்றைய காஷ்மீரி வரையிலுங்கூடக் கொள்ளலாம். வடசொல் ஆரிய மொழியாகிய சம்ஸ்கிருதத்தைத்தான் குறிப்பதென்பதற்குச் சான்று இல்லை. பின் வந்த நன்னூலார் அவர் காலத்துக்கு ஏற்ப, வடமொழியை ஆரியம் என்னும் பெயரால் விளக்கியிருந்தார். என்றாலும், தொல்காப்பியர் அந்த வகையில் சொல்லவில்லை.

'வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'
(எச்ச .5)

என்ற சூத்திரமே இங்கு எண்ணத்தக்கது. இதிலோ, இதற்கு முன்போ வடசொல் எது என்பதே விளக்கப்பெறவில்லை. வேங்கடத்துக்கு வடக்கே உள்ள நாட்டைக் குறிக்கும் பண்டை ஆசிரியர்கள் 'மொழிபெயர் தேயம்' எனவே குறிக்கின்றார்கள். தெலுங்கை இன்றும் 'வடுகு" என்கின்றோம். எனவே, தொல்காப்பியர் வடமொழி என்றது. தெலுங்கு முதலிய வடதிசைக்கண் வழங்கிய எல்லா மொழியினையும் குறிக்கும். அவற்றை எடுத்து வழங்குவது அக்காலத்தில் தடுக்கப்பெறவில்லை. சிலர் நினைப்பது போலத் தடுக்கவும் இயலாது. எனவே, அதற்கென ஓர் இலக்கணம் தேவைப்பட்டது. அம்மொழிச் சொற்கள் தமிழில் வருமானால் அவற்றைத் தமிழ் மரபு கெடாமல், அவ்வம் மொழி எழுத்துக்களை நீக்கித் தமிழ் எழுத்துக்களால் ஆக்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலக்கணம் வகுத்தார் தொல்காப்பியர். இன்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இந்த முறையையே கையாண்டு வெற்றி பெறுவதை அறிவோம். எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்று கொண்டாலும் அக்கொள்கைக்கு இச்சூத்திரம் உறுதுணையாகாது எனக் கூறி மேலே செல்லலாம்.

 கடவுள் வாழ்த்துப் பற்றித் தொல்காப்பியர் சொல்லுகின்றார். எனவே, ஆரியர் காலத்துக்கு அவர் முற்பட்டவர் அல்லர் என்பர் சிலர். 'கடவுள் வாழ்த்து' உலகில் எல்லா மக்களுக்கும் உரிய ஒன்றாகவே இருந்தது. எகிப்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்கள் இருந்தன. மற்றும், அங்கே இறந்தார் உடம்பின்மேல் மணமிக்க மலரையும் பிறவற்றையும் தூவி அந்த இறந்தவர்களை மறு உலகம் அனுப்பச் செய்யும் சடங்குகளும் அவர்களுக்கெனக் கட்டிய ‘பிரமிடு'களும் (கோபுரங்களும்) சமய அடிப்படையில் உண்டாயினவே[23] அப்படியே தமிழ்நாட்டிலும் பழங்காலத் தொட்டே சமயநெறி போற்றப்பட்டு வந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்கள் தமிழர் அல்லது திராவிடர் கடவுளர்களே என ஆராய்ச்சியாளர் கூறுவர்[24]. வடக்கே ஆரியர் இந்திரன், அக்னி போன் றோரைக் கடவுளராகவும் தம் வெற்றிக்குத் துணை செய்பவராகவும் கொண்ட அந்த நாளிலேதான் தொல்காப்பியத்திற் கண்ட கடவுள் நெறி தமிழ்நாட்டில் போற்றப் பெற்றது. அனுப்பச் செய்யும் சடங்குகளும் அவர்களுக்கெனக் கட்டிய 'பிரமிடு'களும் (கோபுரங்களும்) சமய அடிப்படையில் உண்டாயினவே[25] அப்படியே தமிழ்நாட்டிலும் பழங்காலத் தொட்டே சமயநெறி போற்றப்பட்டு வந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்கள் தமிழர் அல்லது திராவிடர் கடவுளர்களே என ஆராய்ச்சியாளர் கூறுவர்[26]. வடக்கே ஆரியர் இந்திரன், அக்னி போன்றோரைக் கடவுளராகவும் தம் வெற்றிக்குத் துணை செய்பவராகவும் கொண்ட அந்த நாளிலேதான் தொல்காப்பியத்திற் கண்ட கடவுள் நெறி தமிழ்நாட்டில் போற்றப் பெற்றது.

'கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.' 
(புறத். 27)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் தமிழர் கடவுள் வாழ்த்தியல் முறை ஓரளவு விளக்கப்படுகின்றது. இவற்றுள் கந்தழி என்ற யாதொரு பற்றுக்கோடுமற்று அனைத்துக்கும் அப்பாலாய் உள்ள ஆண்டவனை வழிபடும் சிறப்புடன், கண்ணில் தோற்றும் சூரியனையும், சந்திரனையும் வழிபட்டார்கள் எனப் பொருள்பட நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். எனவே, கடவுள் நெறி அப்பாலுக்கப்பாலாய ஊர் பெயர் ஒன்றுமற்ற இறைவனைப் பற்றியது என்றும், அதே வேளையில் உலகுக்கு ஒளியும், மழையும், பிற தேவைகளையும் அளிக்கும் கதிரவனையும் திங்களையும் தமிழர்கள் போற்றினார்கள் என்றும் கொள்ள வேண்டியுள்ளது. சிலப்பதிகாரத்தில் முதலில் வாழ்த்தாக ஞாயிறு, திங்கள், மழை இவற்றைப் போற்றுவதும் இந்த அடிப்படையிலேதான் போலும்!

இனி, தொல்காப்பியனார் திணை நிலத் தெய்வங்களை குறிப்பிடும்போது,

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.'

                                  (அகத்திணை, 5)

எனக் காட்டுகின்றார். இதில் வரும் மாயோனைக் கண்ணனாகவும், சேயோனை முருகனாகவும், வேந்தனை இந்திரனாகவும், வருணனைக் கடற்றெய்வமாகவும் காட்டுவர் நச்சினார்க்கினியர். இக் கண்ணனும் முருகனும் தமிழ்நாட்டுக்கே உரிய கடவுளர் என்பது திரு.வி.க. அவர்கள் எழுதிய முருகன் அல்லது அழகு என்ற நூலாலும் பிற நூல்களாலும் நன்கு விளங்கும். மாயோன் திருமாலாகிப் பின் விஷ்ணுவானான். முருகன் பின் சுப்பிரமணியனானான். முருகனுடைய பிறப்பை பற்றிய பரிபாடலும், கந்தபுராணமும் இரு வேறு வகைப்பட்ட கருத்துக்களைக் காட்டுவதே இதற்குச் சான்றாகும். இனி, வேந்தனை இந்திரனாகக் காணும் நச்சினார்க்கினியர் எப்படி அப்பொருளைக் கொண்டார் என்பது தெரியவில்லை. பின் வந்த இலக்கணப் புலவர் சிலர் இந்த அடிப்படையிலேயே வேந்தன் என்பதற்குப் பதில் இந்திரன் எனவே குறித்துள்ளனர். எனினும், தொல்காப்பியர் காலத்தில் இந்திரன் வடநாட்டு வேத மரபின்படி அவர்தம் சிறந்த தலைவனாகவும் வழிபடு கடவுளாகவும் போற்றப்படுகின்றான். அவனை இங்கே ஒரு திணை நிலத் தலைவனாகத் தொல்காப்பியர் கொண்டிருக்க மாட்டார். எனவே, வேந்தன் என்பது இந்திரனைக் குறியாது எனக் கொள்ளலாம். வருணன் கடற்றெய்வம். கடற்கரையில் வாழும் மக்கள் அக் கடலையே நம்பி வாழ்ந்த காரணத்தால் வருணனைத் தெய்வமாகக் கொண்டார்களோ என்பது ஆராய்தற் குரியது. இவ்வருணன் ஆரியரின் நான்கு கடவுளரில் ஒருவனென எண்ணப்படுகின்றான். எனினும், அவர்களின் பெயர்களைப் பற்றி ஆராயும் திரு. கோஷ்[27] அவர்கள் அப்பெயர்கள் ஆரியர்தம் பெயர்களோ அன்றி மத்திய மேற்கு ஆசியாவிலிருந்து கடன் வாங்கியவையோ என ஐயுறுவதோடு, அவர்தம் மொழி பலவற்றிலிருந்து கடன் வாங்கி வளர்க்கப்பட்டதே என்பதையும் விளக்குகிறார்[28]. எனவே, வெறும் பெயர் மட்டும் கொண்டு அக்கடவுளரைப் பற்றி முடிவு செய்ய இயலாது. அன்றியும், அக்காலத்தில் ஆரியர் இங்கு வந்தமையின் அவர்கள் வழங்கிய பெயரைத்தான் தம் கடற்றெய்வத்திற்கு இட்டார்களோ என எண்ணுபவரும் உள்ளனர்.

நீர்த்தெய்வத்தைப் பற்றி மற்றொன்றும் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. சிந்துவெளி நாகரிகத்திலேயே நீரைத் தெய்வமாகப் போற்றினார்கள் என்பதைத் திட்டவட்டமாக ஜான் மார்ஷல் என்பார் கூறுகின்றார்[29] . எனவே, ஆரியர்களுக்கு முன்னரே இந்நாட்டில் உள்ளவர் நீர்த் தெய்வத்தை—வருணனை—கடற்கடவுளை-வணங்கி வந்துள்ளார்கள் என்பது புலனாகும். தொல்காப்பியர் அதைத்தான் இங்கு இவ்வாறு கூறியிருக்க வேண்டும். பல வழக்குகள் இரு மொழிகளிலும் வெவ்வேறு பெயர்களின் அடிப்படையில் காண்கின்றபடி இவ்வருணனும் தமிழிலும் ஆரிய மொழியிலும் அதே பெயரில் வழங்கப் பட்டானோ என எண்ணுவதும் தவறாகாதே!

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்மொழி வழங்கும் எல்லை 'வடவேங்கம் தென்குமரி' இடைப்பட்டதாகவே அமைந்துவிட்டது. இமயம் வரையில் போர்மேற்சென்று வெற்றி கொண்டோ, அல்லது நண்பு கொண்டோ வட நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் அக்காலத்து மன்னர்கள். என்றாலும், தமிழ் மொழிக்கு அக்காலத்தில் வேங்கடமே எல்லையாய் அமைந்துவிட்டது. அதற்கு அப்பாற்பட்ட பகுதிகள் யாவும் மொழிபெயர் தேயம்’ என்றே வழங்கப்பெறுகின்றன. எனவே, தொல்காப்பியர் காலத்தில் தெற்கே தமிழ்நாட்டு எல்லை விரிந்திருந்ததோ இல்லையோ என்று முடிவு செய்ய முடியாவிடினும், வடக்கே வேங்கடம் இன்றே போன்று தமிழ் மொழி வழங்கும் எல்லையாகவே இருந்தது. எனவேதான் பாயிரம் பாடிய பனம்பாரனார் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து எனத் தொடங்குகின்றார். வடக்கே வேங்கடம் இன்றும் அதே பெயருடன் விளங்குகின்றமையின், வேறுபாடு தோன்றவில்லை. எனினும், தென்குமரி ஆறா, மலையா, இன்றைய குமரிமுனையா என்பதே ஐயப்பாடு. உரையாசிரியர் யாவரும் யாறு என்றே கொள்கின்றனர். அரசஞ்சண்முகனார் அதை மலை என்கின்றார். அக்குமரி பற்றி வழங்கும் பழைய புறநானூற்றுப் பாடல்களும் அது எது என்பதைத் திட்டமாக அறுதியிடவில்லை; தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்’ (புறம். 6) எனவும், தென் குமரி வடபெருங்கல்’ (புறம். 17) எனவும் கூறுகின்றன. பின் வந்த காக்கை பாடினியாரும், இளங்கோவடிகளும் குமரிப் பெளவம்’ எனக் கடலாகவே குறிக்கின்றார்கள், எனவே, தொல்காப்பியர் காலத்து அது மலையாகவோ அல்லது ஆறாகவோ இருந்திருக்கலாம் எனக் கொள்வர் ஆராய்ச்சியாளர்.

தெய்வ வழிபாடு தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது எனக் கண்டோம். அதைப் பல வகையில் அவர் வற்புறுத்துகின்றார்.


‘காமப் பகுதி கடவுளும் வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.’

                                  (புறத்திணை. 23)

'வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப,' (செய் 106)
‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’. 
(புறத் 27)

என்னும் சூத்திர அடிகளால் தொல்காப்பியர் தெய்வம், கடவுள் என்ற சொற்களைக் கொண்டு பொருள் விளக்குகின்றமையாலும், பிற குறிப்புக்களாலும் கடவுள் வாழ்த்து அக்காலத்தில் இருந்தது எனக் கொள்வதே சிறப்புடைத்து. முழுமுதற் கடவுளாகப் பற்றற்ற கந்தழி'யையும், திணை நிலக் கடவுளர் பிறரையும் வழிபட்டார்கள் அக்காலத்தமிழர்கள் எனக் கொள்ளல் பொருந்தும். வருணன்' என்ற திணை நிலக் கடவுளன்றி வேறு வடமொழிக் கடவுளரோ, வழிபாட்டு முறையோ இதில் காணப்பெறவில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இனி, தொல்காப்பியர் 'மந்திரம்' என்னும் ஒன்றை விளக்குகின்றார். அதைச் சிலர் பின் ஆரியர்கள் வழிபாட்டுக்குக் கொண்டு வந்த மந்திர வழிபாடு எனக் கருதுவர். அது பொருந்தாது. அவரே திட்டமாக,

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.' 
(செய். 171)

எனக் காட்டுவர். எனவே, ‘நிறைமொழி மாந்தர்' என்று போற்றப் பெறும் அறிவும் அருளும் நிறைந்தவர் ஆணையினால் தோற்றிய மறைமொழியே மந்திரமாகும். மறை' என்பது ஆரிய வேதத்தைக் குறியாது என்பதை முன்னரே கண்டோம். அறிவுடைய நல்ல அருளாளர் வாய்ச்சொல்லே மறையாகப் போற்றப்பட்டது. இதையே பின் வந்த திருவள்ளுவர்,

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும.'

என்று விளக்கிக் கூறினார். இதை விடுத்து. சென்னைப்பல்கலைக் கழகத்து, அகராதி (Lexicon. Vol. V. P. 3068) 'மந்திரம்' என்பதற்கு 'வேதமந்திரம்' என்றே பொருள்  குறித்திருப்பது அதைத் தொகுத்தோர் மனநிலையை நன்கு காட்டுகின்றது. இரண்டையும் கூறியிருப்பினும் பொருத்தமாய் இருக்கும்.

இனி, மணவினைகளில் சில கரணங்கள் புகுத்தப்பட்ட காலம் தொல்காப்பியர் காலம் எனவும், அவை ஆரியர்தம் தீ வளர்த்தல், அம்மி மிதித்தல் போன்றன எனவும் சிலர் கூறுவர்; இதற்கு எடுத்துக்காட்டாக,

'கரணத்தின அமைந்து முடிந்த காலை’ (கற். 5)

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.'
 (கற். 4)

எனத் தொல்காப்பியர் கூறுவதைக் காட்டுவர். இவற்றிற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர், இந்தக் கரணங்களை வடநூலாரைக் கருதிச் சொன்னார் எனக் காட்டுகின்றனர். மற்றும், இக் கரணம் பற்றிக் கூறும்போது, ‘இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதல்நூல் ஆசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழந்ததென்று கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறும் கூறினார், எனக் காட்டுவர். அவர் கூற்றின்படி ஒர் ஊழிக்கு முன்பே தொல்காப்பியர் இந்நூல் செய்தார் என்பதும், இதற்கு முதல் நூல் தமிழ் மரபு பற்றிய இலக்கணமே என்பதும், அவர் காலத்தில் ஆரியர் கரணத்தொடு நாட்டில் வந்தமையின் அதையும் சேர்த்தே இதில் கூறினார் என்பதும் கொள்ளத்தக்கனவாய் உள்ளன. அவற்றை அப்படியே கொள்வதில் தவறு இல்லை. எனினும், அக்காலத்தில் ஆரியர் கரணம் அத்துணை அளவில் தமிழ்நாட்டில் கால் கொண்டுவிட்டது எனக் கொள்ள முடியாது. வடக்கே அக்காலத்தில் தம் வாழ்வுக்கும் வளத்துக்கும் ஆரியர் போராடிய காலமே அது. ஒருசிலர் இங்கே வத்தனர் எனக் கொள்ளவன்றி, அவர்தம் காரணங்களைத் தென்னாட்டில் புகுத்தும் அளவிற்கு அவர்தம் கை ஓங்கி இருக்கவில்லை என்பதும் தேற்றம். அன்றி, அது அப்படியே அவர்தம் கரணம் என்று கொள்வதிலும் இழுக்கில்லை, நாட்டில் அவர் புகுந்த நிலையையும் கரணம் புகுத்திய நிலையையும் இச் சூத்திரங்கள் விளக்கு கின்றமையின்.

இன்னும் ஆரியர் கருத்துக்கள் சில தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருப்பது உண்மையே. 'வானோர் அமுதம் புரையுமால்' (கற். 5) என அமிர்தம் குறிக்கப்பெற்றுள்ளது

'மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீலோர்க் காகிய காலமும் உண்டே.'
 (கற். 3)

என நால்வகை மக்கட் பாகுபாடு பேசப்பெறுகின்றது. மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவும் அவரவர் வாழ்வு முறையும் பிறவும் பேசப் பெறுகின்றன.

'நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க் குரிய,’
 (மரபு 66)

என அந்தணரையும் அவர்தம் பொருளையும் இதில் குறிக்கின்றார் தொல்காப்பியர். இது ஆரியரைக் குறிக்கும் என்பர் சிலர். எனினும், அந்தணர் என்பது தமிழ்நாட்டுச் செந்தண்மை பூண்டொழுகும் ஒழுக்க சீலரையே குறிக்கும் சொல் என்பதும், வள்ளுவரும் பிறரும் இதை அதே பொருளில் எடுத்தாளுகின்றனர் என்பதும் காணலாம். தமிழ் நாட்டிலும் அறிவர், தாபதர் போன்ற நல்ல உள்ளமும் பண்பும் அருளும் உடைய துறவியரும் பற்றற்றவரும் வாழ்ந்து வழி காட்டியுள்ளார்கள் எனக் காண்கின்றோம். அவருக்கு நூல் ஆகிய அறச்சுவடியும், பிறவும் இருந்திருக்கலாம். எனவே, அவரையே குறித்தன. இவை எனக் கொள்வதில் தவறு இல்லை. இவரே மற்றோர் இடத்தில்,

'பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.'
 (செய் 189)

என்று கூறுகின்றார். இவர்களும் சிறந்த அறிவு பெற்ற பண்பாட்டாளர்களே. எனினும், தமிழ்நாட்டுக்குப் பழக்கமில்லாத நால்வகை மக்கட்பிரிவை இவர் கூறுவதனால், ஆரிய மரபு அக்காலத்தில் வந்துவிட்டதென்பது பொருந்தும் என்பர் சிலர். அவர் கூற்றுப்படி இதைக் கொள்ளினும் தவறு இல்லை. எனினும், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு அந்நாள் அறிவராயினார் என்பது பொருந்தாது.

மற்றும் எழுத்ததிகாரத்தே எழுத்துக்கள் பிறக்கும் இடங்களின் அமைதி கூறும்போது தமிழுக்கும் வட மொழிக்கும் உள்ள மாறுபாட்டை இவர் எடுத்துக் காட்டுகின்றார்.

'அளபிற் கோளல் அந்தணர் மறைத்தே’
‘அஃது இவண் நுவலாது.
 (பிறப்பியல். 20, 21)

என இரண்டையும் வேறுபடுத்துவர். இங்கு அந்தணர் என்பது ஆரியரைக் குறிக்குமே என்பர். அவர்தம் எழுத்துக்கள் பிறப்பது போன்று இல்லாது தமிழ் எழுத்துக்கள் வேறு வகையாற் பிறக்கும் என்ற உண்மையை அவருக்கு முன் தமிழ் இலக்கண நூலோர் கூறியபடியே காட்டுகின்றார். இந்த எடுத்துக்காட்டாலும் ஆரியர் அக்காலத்தில் தமிழ் நாட்டில் அடியெடுத்து வைத்துள்ளனர் என்பர் ஒருசாரார். இவர் கூற்றுப் பொய் என்றும், அதற்குச் சாதகமாகச் சில சூத்திரங்களை இடைச்செருகல் என்றும் நாம் தள்ளத் தேவையில்லை. ஆரியர் அக்காலத்தில் தென்னாட்டுக்கு வந்து தமது மொழியையும் வாழ்க்கை முறையையும் பரப்ப முனைந்தனர் என்று கொள்வது பொருந்தும்.

இதுகாறும் கண்டவற்றால் தொல்காப்பியம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்பெயர் கொண்ட சிறந்த தமிழ் மகனாராலேயே, தமிழ் மரபு கெடாதபடி செய்யப் பட்டதென்பதும், அதே வேளையில் வடநாட்டில் சற்று 500 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் அடியெடுத்து வைத்த ஆரியர் அங்குள்ள திராவிட மக்களையும் பிறரையும் அடித்துத் துரத்தித் தம்மை நிலை பெறுத்திக்கொண்டு இருக்கு முதலிய வேதங்களை யாத்தனர் என்பதும், அவருள் ஒரு சாரார் மெள்ள விந்திய மலையைக் கடந்து தமிழ் நாட்டிலும் புகுந்து தம் பழக்க வழக்கங்களைப் பரப்ப முயன்றார்கள் என்பதும், சிறந்த ஒழுக்க நெறியும் பண்பாடும் பிற நல்லியல்புகளும் கொண்ட தமிழர் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், இரண்டொரு கரணங்களை எப்படியோ மெள்ளப் புகுத்தினர் என்பதும், தொல்காப்பியர் அவை பற்றியெல்லாம் எண்ணி எண்ணி அளந்தே சொன்னார் என்பதும், அவர் காலத்திற்குப் பிறகு தமிழ் நிலம் குறுகியிருக்கலாம் என்பதும், அவர் ஆரிய நூலார் வழி இலக்கணம் பயின்றார் என்பது பொருந்தா என்பதும், அவர் காலத்துக்குப்பின் ஆரியர் மெள்ள மெள்ளத் தம் ஆதிக்கத்தைப் பல வகையில் - பண்பாடு, கலை, வழக்கம் முதலியவற்றால் - செலுத்த முயன்று ஓரளவு வெற்றி பெற்றனர் என்பதும் அறியக் கிடக்கின்றன. அவர்கள் பெற்ற வெற்றி நிலையான ஒன்று அன்று என்பதையே அன்றுதொட்டு இன்றுவரை வடநாட்டுத் தென்னாட்டுப் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதையே வெல்ஸ் என்பார் தம் வரலாற்று நூலில் ஆரியர் திராவிடர் மேல்கண்ட வெற்றிவடநாட்டார் தென்னாட்டார் மேல் கொண்ட வெற்றிநிலையான ஒன்று அன்று என்றும், மேலுக்குத் தென்னாடு வடநாட்டுக்குத் தாழ்ந்துவிட்டது போலத் தோன்றினும் உண்மையில் அது சரியன்று என்றும், அவ்விரண்டின் போராட்டம் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்றும் கூறுவர்.

இவ்வாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் பின்னும் வடநாடும் தென்னாடும் பல வகையில் இணைந்தும் பிணைந்தும் சில வகையில் மாறுபட்டும் இருந்தன என்பது தேற்றம்.

  1.  Lost Lemuria, Scott Elliot.
  2.  புறம். 9.
  3.  The Vedic Age, Vol. I. p. 154.
  4.  But there is evidence, both indirect and direct, that in Central India, in North India, in Western lndia and possibly also in Eastern India,Dravidian was one time fairly widespread (The Vedic India, Edited by R.G. Majumdar, Vol. I р. 55).
  5.  The Vedic lndia, pp, 154-158,
  6.  Ibid. p. 160
  7.  The Vedic India p. 169
  8.  ibid. p. 164.
  9.  The Stone Age in India, p. 49.
  10.  Together came the Pakthas, the Bhatanns, the Alinas, the Sivas the Vistranins Yet to the Tritsus came the Arya’s comrade through love of Spoil and heroes’ war to lead them. . R. V. VII : 187. The Pakthas and rest mentioned in the first two lines of the stanza appear to have been non-aryan tribes opposed to the Tritsus.
  11.  தமிழ் மொழி வரலாறு ப. 15.
  12.  The Vedig Age, p.159
  13.  தொல். பாயிர விருத்தி.
  14.  தமிழ் மொழி வரலாறு, பக் 14—26.
  15.  தொல். எழுத்து. உரை முன்னுரை, பக் XXXIII,
  16.  தொல். எழுத். நச். உரை. முன்னுரை.பக். XXVII. Іbid. р. ХХХІХ.
  17.  தமிழ் வரலாறு.K. சீனிவாசப் பிள்ளை.
  18.  நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பெளடிகமும், தலவகாரமும், சாமவேதமுமாம். இனி, இருக்கும், யசுவும், சாமமும், அதர்வணமும் என்பாருமுளர். இது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர்ச் சின்னாள் ப்ல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற் றைச் செய்தாராகலின். (பாயிர உரை, நச்சி.)
  19.  Vedic Age W. M. Apte p. 385.
  20.  எழுத். உரை. p. XXXIX.
  21.  ௸ (மேலது) p. XXVIII
  22.  கொய்த மலர்கள், கட்டுரை எண் 13.(இந்நூலிலும் உள்ளது)
  23.  Encyclopaedia of Social Science, Vol. III, p. 644.
  24.  Vedic Age, Vol. 1. pp. 157, 158
  25.  Encyclopaedia of Social Science, Vol. III, p. 644.
  26.  Vedic Age, Vol. I. pp. 157, 158
  27.  B. K. Ghosh, D. Phil (Munich), D. Litt. (Paris)
  28.  The Vedic India, p. 204.
  29.  Indus Civillzation, p. 75.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard