Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எண்ணாயிரம் நான்மறை கல்வி ராஜேந்திர சோழன் கல்வெட்டு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
எண்ணாயிரம் நான்மறை கல்வி ராஜேந்திர சோழன் கல்வெட்டு
Permalink  
 


எண்ணாயிரம் நான்மறை கல்வி ராஜேந்திர சோழன் கல்வெட்டு 

Ennaayiram%2B01.jpg Ennaayiram%2B02.jpg Ennaayiram%2B03.jpg

Ennaayiram%2B04.jpg Ennaayiram%2B05.jpg Ennaayiram%2B06.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: எண்ணாயிரம் நான்மறை கல்வி ராஜேந்திர சோழன் கல்வெட்டு
Permalink  
 


Ennaayiram%2B07.jpg Ennaayiram%2B08.jpg Ennaayiram%2B09.jpg Ennaayiram%2B10.jpg Ennaayiram%2B11.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

நம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்!

ஊர் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்கும், ஓர் ஆலயத்தை மையப்படுத்தி என்னென்ன நற்காரியங்கள் நிகழ்ந்தன என்பதற் கும் இலக்கணமாகவும் சாட்சிகளாகவும்  திகழ் கின்றன, எண்ணாயிரம் எனும் ஊரும் அங்கே அமைந்துள்ள ஸ்ரீஅழகிய நரசிம்மர் திருக்கோயிலும்!

ஊரின் மையப் பகுதியில், சுமார் நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது கருங்கல் கட்டுமானமாக, மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீஅழகிய நரசிம்மர் திருக்கோயில். கோயிலுக்குள் பலி பீடமும், கொடி மரத்துக்கான கருங்கல் பீடமும் காணப்படுகின்றன.

எளிமையாகக் காட்சி தரும் முன்மண்டபத்தில், நம் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம், காலம் கடந்தும் சிற்பக்கலைஞர்களின் கலைத் திறனைப் பறைசாற்றியபடி காட்சி தருகின்றன பல புடைப்புச் சிற்பங்கள்.

கோயிலுக்குள் நுழைந்ததுமே, அந்தக் காலத் திலேயே நம் முன்னோர்கள் செய்துவைத்திருக்கும் மழைநீர் சேகரிப்புக்கான அமைப்புகள் நம்மை வியக்கவைக்கின்றன. மேலும், கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்துவிடாதபடி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் மழைநீர் வடிகால் வசதிகள், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அந்தக் கட்டமைப்புகளுக்குள்ளும் ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், பல புதிய தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

 

எண்ணியது நிறைவேறும்!

 

வியப்பும் சிலிர்ப்புமாக ஆலயத்தை வலம் வருகிறோம். கருவறை முன்மண்டபத்தில், தெற்கு நோக்கியபடி பிரமாண்ட திருமேனியராக அருள் கிறார் ஸ்ரீவராகர். அவரின் அருகிலேயே ஸ்ரீலட்சுமி பிராட்டி. இருவரையும் நாள் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்; அந்த அளவுக்கு எழிலார்ந்த திருக்கோலங்கள்!

கருவறையில், `கேட்ட வரத்தைக் கேட்டவுடன் அருள்வேன்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், அருள்கோலம் காட்டுகிறார் அருள்மிகு அழகிய நரசிம்மர். ஸ்ரீமகாலட்சுமியைத் தன் மடி மீது அமர்த்திய கோலத்தில், தமது திருபெயருக்கேற்ப அழகிய வடிவில் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஅழகிய நரசிம்மர்.

சுவாதி நட்சத்திரத் திருநாளில் இந்த ஆலயத் துக்கு வந்து, ஸ்ரீஅழகிய நரசிம்மரை தரிசித்து வழிபட்டால், நம் எண்ணங்கள் யாவும் ஈடேறும்; விரும்பிய வரங்கள் விரைவில் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
ஸ்ரீஅழகிய நரசிம்மர், ஸ்ரீவராக மூர்த்தி ஆகியோரை மட்டுமின்றி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளும் ஸ்ரீவரதராஜர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஎம்பார் ஸ்வாமிகள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். கருவறை விமானம் மூன்று நிலைகளுடன், கிழக்கு நோக்கிய பெரிய மாடங்களுடன் திகழ்கிறது. அந்த மாடங்களில் திருமேனிகள் எதுவும் இல்லையென் றாலும், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் சுதைச் சிற்பங் களை தரிசிக்க முடிகிறது. ஸ்ரீராமாநுஜரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.

கல்விச் சாலைகள்

‘கோயில் இல்லாத ஊரில்  குடியிருக்கவேண்டாம்’ என்பதுடன், ‘கல்விச் சாலைகள் இல்லாத ஊரிலும் குடியிருக்கவேண்டாம்’ என்பதையும் அந்தக் கால மன்னர்கள் உணர்ந்திருந்தனர் போலும்! அதனால்தான் ஊர்தோறும் கோயில் களை எழுப்பியதோடு நின்றுவிடாமல், கல்விச் சாலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

அந்த வகையில், எண்ணாயிரம் எனும் இந்த ஊரிலும்…  உயர்கல்வி பயிலவும், வேதங்களைப் போதிப்பதற்கும் பல கல்விச்சாலைகள்  அமைக்கப் பட்டிருந்த விவரங்களை முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுச் செய்திகளின் மூலம் அறியமுடிகிறது.

கல்விச் சாலைகளுக்கு 300 காணி நிலம் வழங்கப்பட்ட விவரம், கற்பிக்கும் பாடத்துக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கான உதவித்தொகை, உணவு, உடை, தங்குமிடம் போன்ற வசதிகள், அவர்களுக்குத் திருப்பதிகம் மற்றும் திருவாய்மொழி கற்பிக்கப்பட்ட விவரம் ஆகியவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப் பட்டிருக்கின்றன. மேற்சொல்லப்பட்ட விஷயங் களை முறையாகக் கவனிக்க அரசு அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தாராம்.

மேலும், இளநிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் முதுநிலைக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் என்னென்ன பாடங்கள் மற்றும் வேதங்களைப் படித்தார்கள் என்பது குறித்த விவரங்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

 

சோழமும் விஜயநகரமும்…

இந்த ஆலயத்தில் தொல்லியல் துறையினரால் 1917-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 15 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மன்னர்கள் காலத்தில் இந்த ஆலயத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நம்மால் அறியமுடிகிறது. அதாவது, சோழர்களும் பிற்காலத்தில் விஜயநகர அரசர்களாலும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம்.

முதலாம் ராஜேந்திரன் காலத்திலிருந்து 3-ம் குலோத்துங்கன் காலம் வரை, சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் போற்றிப் பராமரித்த ஊர் இது. ஸ்ரீஅழகிய நரசிம்மரின் ஆலயம், ‘இராஜராஜ விண்ணகரம்’ என்றும், இவ்வூர், ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து இராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக் கப்பட்டிருக்கிறது. எந்தக் கல்வெட்டிலும் `எண்ணாயிரம்’ என்ற பெயர் காணப்படவில்லை. தற்போது இந்தியத் தொல்லியல் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்த ஆலயம்.

தமிழகத்தில் சமணம் எழுச்சியுற்றிருந்த காலத்தில், ஏராளமான சமணர்கள்  இந்த ஊரில் வாழ்ந்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக   இவ்வூருக்கு அருகிலுள்ள எண்ணாயிரம் மலை மற்றும் திருநந்தகிரி குகைகளில் ஏராளமான கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இத்தலத்தில், வைகாசியில் ஸ்ரீநரசிம்மர் ஜயந்தி விழா, ஸ்ரீராமாநுஜருக்குப் பத்து நாள்கள் பிரம்மோற்சவம் ஆடிப்பூரம், ஆவணி கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி தனுர் மாத பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

நீங்களும் ஒருமுறை எண்ணாயிரத்துக்குச் சென்று, அதன் தொன்மைச் சிறப்புகளை கண்டு மகிழ்வதுடன், ஸ்ரீஅழகிய நரசிம்மரை தரிசித்து, வேண்டும் வரங்களைப் பெற்று வாருங்களேன்.


 

பக்தர்கள் கவனத்துக்கு

மூலவர்: ஸ்ரீஅழகிய நரசிம்மர்

தலம்: எண்ணாயிரம்

எப்படிச் செல்வது?: விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் நேமூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள எண்ணாயிரம் கிராமத்துக்குச் செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

தரிசன நேரம்: காலை 7:30 முதல் 10:30 மணி வரை; மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை.

அருகில் தரிசிக்கக்கூடிய தலங்கள்: திருநந்திபுரம், பிரம்மதேசம், எசாலம் போன்ற தலங்களில் அமைந்திருக்கும் சோழர் கால சிவாலயங்களை தரிசித்து வரலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

வரலாற்று வரைவுகள்
இரா. கலைக்கோவன்
 

திருமுக்கூடல், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையின் வலப்புறத்தே அமைந்துள்ள சிற்றூர். பறவைகளின் கீச்சொலியும் காற்றடித்தால் படபடக்கும் கிளையொலியும் தவிர வேறு துணையில்லாத ஒதுக்குப்புறத்தில் வெங்கடேசப் பெருமாள். இந்தியத் தொல்லியல் துறையினர் எப்போதும் பூட்டி வைத்திருக்கும் இந்த நினைவுச்சின்னம், தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் பயிலும் கல்லூரியொன்றையும் அந்த மாணவர்களும் கோயில் அலுவலர்களும் நோய்வாய்ப்பட்டால் உடன் கவனித்து மருத்துவம் செய்ய மருத்துவமனையொன்றையும் கொண்டு, மக்கள் குழுமும் மகேசன் தலமாய் மகிழ்ந்திருந்தது.

ரிக், யஜுர், வியாகரணம், ரூபாவதாரம், சிவாகமம், வைகானசம் மற்றும் மகா பாஞ்சராத்ரம் என வேதங்களையும் இலக்கணங்களையும் தர்க்க சாத்திரங்களையும் ஆகமங்களையும் முறையாகப் பயிற்றுவிக்கும ஆசிரியர்கள் இந்த மண்ணில்தான் நடமாடினர்.

கற்பூரங்களாய் பற்றி, கற்றதும் கேட்டதும் நெஞ்சிலேற்கும் முதல் நிலை மாணவர்களாய் இங்குப் புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட்டன. இலட்சம் இலட்சமாய் அள்ளிக் கொடுத்துப் பயிலும் இற்றை நாளைப் போல் இல்லாமல், அரசும் கோயிலும் அரவணைத்த படிப்பு.

படித்தவருக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தவருக்கும் நெல்லும் பொருளும் வழங்கப்பட்டன. இன்றைய உதவித் தொகைகளைப் போல் அல்லாது இவை தொடர்ந்தும் தொல்லையின்றியும் யாருக்கும் எதுவும் தராமலும் பரிந்துரைகள் இல்லாமலும் ஏழைகளை நோக்கியும் தகுதியுள்ளாரைக் கருதியுமே வழங்கப்பட்டன.

கல்வி சொல்லித்தர ஞானநாத மண்டபமும் மாணவர் உணவருந்தச் சாலையொன்றும் திருக்கோயில் வளாகத்திலேயே இருந்தன. சனிதோறும் எண்ணை தேய்த்துக் குளிக்க வாய்ப்பாக, அது நல்ல வழக்கமென்று அந்நாளில் கருதப்பட்டதால், ஆண்டு முழுவதும் ஐம்பத்தோரு சனிக்கிழமைகளிலும் இலவசமாக இவர்களுக்கு எண்ணெய் தரப்பட்டது. படுத்துறங்கப் பாயும் வழங்கப்பட்டது.

இக்கல்லூரி மாணவர்க்கோ, இங்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்க்கோ அல்லது பணியாளர்க்கோ உடல் நலம் குன்றினால் கவனித்து நோய் நீக்கக் கோயில் வளாகத்திலேயே வீரசோழன் மருத்துவமனை செயற்பட்டது. பொதுமருத்துவர் ஒருவரும் அறுவை மருத்துவர் ஒருவரும் நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பப் பணியாற்றினர். மூலிகைகள் பறித்து வரவும் மருந்துகளைக் காய்ச்சவும் விறகு கொண்டு வரவும் பணியாட்கள் இருந்தனர். நோயாளிகளை கவனித்துக் கொள்ளப் பெண் செவிலியர் இருவர் இருந்தனர்.

நோயாளிகளுக்கு ஒரு நாளைக்குத் தலைக்கு (ஒருவருக்கு) ஒரு நாழி உணவு அளிக்கப்பட்டது. அவர்கள் அருந்த வாய்ப்பாக நீர் பிடித்து வைக்கப்பட்டது. இரவு நேரங்களில் தொல்லைகள் தவிர்க்க விளக்கெரிக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும்விட வியப்பைத் தருவது மிகத் தேவையான மருந்துகளைத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருந்ததும் அந்தக் கையிருப்பு குறையாமல், அவ்வப்போது குறைவதை நிறைவு செய்யப் பொருள் ஒதுக்கீட்டை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்கள் ஒதுக்கியிருந்ததும் தான்! இந்த நாள் இலவச மருத்துவமனைகளில் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இந்த வசதிகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோயில் மருத்துவமனை வழங்கி வந்தது.

கல்வி தந்து, பக்திக்கு வடிகாலாய் நின்று, உள்நோயும் புறநோயும் நீக்கிய இந்தக் கோயில் எந்தச் சமுதாயத்திற்காகத் தன்னைத் தந்ததோ அந்தச் சமுதாயத்தாலேயே இன்று முழுவதுமாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் இந்த வரலாறு கூறும் கல்வெட்டுத் தொடர்கள்கூட இன்றைக்குச் சுண்ணாம்புப் பூச்சுகளுக்குள் சிதைந்து கொண்டிருக்கின்றன.

விழுப்புரத்திற்குப் பக்கத்தில் சின்னஞ்சிறு கிராமமாய் வறுமைக் கோலம் பூண்டு வாடிக்கிடக்கும் எண்ணாயிரம், சரியாகத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செழிப்பும் வனப்புமாய்ச் செம்மாந்திருந்த ஊர். தமிழ்நாட்டின் மதிப்பைத் தாம் எழுப்பிய இராஜராஜீசுவரத்தின் வழி விண்முட்டச் செய்தாரே முதல் இராஜராஜர், அந்த மாமனிதரின் பெயரைக் கொண்டிருந்த மகத்தான மண். ஆம், எண்ணாயிரத்தின் அன்றைய பெயர் இராஜராஜ சதுர்வேதிமங்கலம்.

முதல் இராஜேந்திரர் காலத்தில் இவ்வூரில் பல திருக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் இராஜராஜ விண்ணகரம். அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலாய்ப் பிற்காலத்தில் பெயர் மாற்றம் பெற்ற இத்திருக்கோயில் இன்று இடிந்து சிதிலமாகி, பார்ப்போர் கண்களில் இரத்தத்தை வரவழைக்கும் நிலையில் உள்ளது.

நினைக்கமுடியாத அளவிற்கு இண்ரு நிலை தாழ்ந்து போய்விட்ட இந்த இராஜராஜ விண்ணகரில் இராஜேந்திர சோழன் காலத்தில் புகழ் பெற்ற கல்லூரியொன்று இயங்கி வந்தது. அந்தக் கல்லூரியில் எத்தனை மாணவர்கள் பயின்றனர், எவ்வளவு ஆசிரியர்கள் இருந்தனர், என்னென்ன பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன என்பன பற்றியெல்லாம் விரிவான செய்திகளை, விரிசல் விட்டுப்போயிருக்கும் சுவர்களில், விக்கித்து நிற்கும் வரித் தொடர்பற்ற கல்வெட்டுகள் வேதனையோடு எடுத்துரைக்கின்றன.

இருநூற்று எழுபது பட்டப் படிப்பு மாணவர்களும் எழுபது பட்டமேற்படிப்பு மாணவர்களும் பயின்ற இக்கல்லூரியில் பல்வகைப் பாடங்களையும் பயிற்றுவிக்கத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பன்னிருவர் இருந்தனர். இவர்கள் அனைவர்க்குமாய்ச் சேர்த்து ஆண்டுதோறும் பத்தாயிரத்து ஐந்நூற்று ஆறு கலம் நெல்லும் அறுபத்தொன்றரைக் கழஞ்சுப் பொன்னும் செலவிடப்பட்டது.

இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அரசோ, பல்கலைக்கழகமோ, நகராட்சியோ மேற்கொண்டிருக்கவில்லை. ஒரு கிராம சபையே மிக ஒழுங்குடன் இதைச் செய்துவந்திருக்கிறது. அந்நாளைய ஊரவைகளின் செயல்திறமைக்கு இது ஒன்றே போதுமான சான்றாகும்.

ஆண்டுதோறும் நேரக்கூடிய இந்தச் செலவுகளைத் தொடர்ந்து சரிக்கட்ட வாய்ப்பாக, வருடம் தோறும் இத்தொகையை வருவாயாகத் தரவல்ல 45 வேலி நிலத்தை இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துச் சபையார் இக்கல்லூரியை நடத்திவந்த கோயிலுக்குக் கொடையளித்தனர். இன்றைக்கு வங்கிகளில் வைப்பு நிதி போட்டு வட்டி பெறுவது போல், இந்த நிலம் வைப்பு நிதியாகக் கொள்ளப்பட்டு இதன் விளைச்சல் கல்லூரிச் செலவுகளை ஈடுகட்டும் வட்டியாகப் பெறப்பட்டது.

இது போல் திரிபுவனையில் ஒரு கல்லூரி, பார்த்திவசேகரபுரத்தில் ஒரு கல்லூரி, திருவாவடுதுறையில் மருத்துவக் கல்லூரி என்று அந்நாளைய கோயில் கல்லூரிகளின் பட்டியலைக் கல்வெட்டுகள் வளத்துக்கொண்டே போகின்றன. கல்வி வளர்த்த இந்தக் கோயில்கள் மனித நேயத்துடன் மருத்துவச் சாலைகளையும் நடத்தின.

திருவரங்கத்தில் ஒய்சளர் காலத்தில் தன்வந்தரி மருத்துவமனை மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. இறைவனே, 'இவர் நம் மருத்துவர்' என்று பெருமைப்படுத்திய கருடவாகன பட்டர், கஷாயம் கொடுத்தே நோய்களை நலப்படுத்தியதாகக் கல்வெட்டுப் பேசுகிறது. ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்குமாய் நடத்தப்பட்ட ஆதுலர் சாலைகளைப் பற்றிப் பல கல்வெட்டுகள் பேசுகின்றன.

நலிந்தோரை நோக்கி நேசக்கரம் நீட்டிய கோயில்களை இன்று இந்த நலிந்தவர்கள்கூடத் திருப்பிப் பார்ப்பதில்லை. தேவையானவர்களைத் தேடித் தேடிப் படிப்பறிவு ஊட்டிச் சரியான குடிமக்களாக மாற்றித் தந்த கோயில்களை மக்கள் மறந்துவிட்டனர். வரலாற்றை உருவாக்கி வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் திருக்கோயில்கள் அழிந்துவிட்டால் தமிழக வரலாற்றுக்கு வரிவடிவங்களே இல்லாமல் போய்விடும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள் ஏறத்தாழப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் அழிந்துபோய்விட்டதை உறுதிபடுத்துகின்றன. அண்மைக்கால ஆய்வுகள் இருக்கும் கோயில்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவை, அதாவது, மூன்றில் ஒரு பங்கு அழிவின் பாதையில் விரைந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இழந்தவையும் இழந்துகொண்டிருப்பனவும் போதாவா? இருப்பதையும் இழந்துவிட்டு அடையாளம் தெரியாமல் போவதா? உறக்கம் கலைந்து விழிக்க வேண்டாமா? இந்த வரலாற்று வரைவுகளை அரவணைத்துக் காப்பாற்ற ஆளுக்கொரு கையேனும் உயர்த்தவேண்டியது சமுதாயக் கடமையல்லவா?

இனியும் மௌனமென்றால் ஒரு சகாப்தம் அழிந்துவிடும். ஒரு சமுதாயம் மண்மூடிப்போகும். இந்த நிலவுலகில் தோன்றிய மிக உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் இருக்குமிடம் தெரியாமல் தேய்ந்தகலும். தடுக்கப் போகிறோமா? தூக்கம் கலையாமல் இருக்கப் போகிறோமா?


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2020/02/11144733/Education-News-in-inscription.vpf

கல்வெட்டில் கல்விச் செய்திகள்...!

கல்வெட்டில் கல்விச் செய்திகள்...!
பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் காலத்தில் இருந்த கல்வி நிலைமைகளைக் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. மடங்கள், கோவில்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன.
பதிவு: பிப்ரவரி 11,  2020 14:47 PM
மன்னர்களும், மக்களும், கிராமசபைகளும், கோவில் நிர்வாகங்களும் கல்வி நிலையங்கள் செயல்படத் தானங்களும், மானியங்களும், நன்கொடைகளும் அளித்தன.
 
கற்றவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும் பெரிதும் மதிக்கப்பட்டனர். பொதுகல்வி, மருத்துவம், ஜோதிடம், கணிதம், வானவியல், வேதகல்வி ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன. கல்வி நிலையங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கி இருக்க விடுதிகளும் இருந்தன. விடுதிகளில் தங்கி இருப்போருக்கு இலவசமாகத் தங்கும் இடங்களும், உணவும், உடையும், பிற தேவைகளும் வழங்கப்பட்டன.
 
எண்ணாயிரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு ரிக் வேதம், அதர்வண வேதம், பிரபாகரம், வேதாந்தம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. 300 மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துக் கிராமசபை 45 வேலி நிலத்தை இக்கல்வி நிலையத்துக்கு வழங்கியது. இந்நிலத்தில் பயிரிட்டு கிடைக்கும் வருமானம் விடுதி மாணவர் உணவுக்காகவும், உடைக்காகவும் செலவு செய்யப்பட்டன. ராஜாதிராஜன் காலத்தில் திரிபுவனி என்ற ஊரில் இருந்த கல்வி நிலையத்துக்கு 72 வேலி நிலம் வழங்கப்பட்டது. 260 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் இங்கு இருந்தனர். மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு வாரியங்களில் பணி செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
 
வீரராஜேந்திரன் காலத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில் வைஷ்ணவ மாதவன் என்பவன் கல்வி நிலையம் நிறுவியதாக அவ்வூர்க் கல்வெட்டு தெரிவிக்கிறது. இரண்டாம் ஆதித்த சோழன் காலத்தில் கும்பகோணத்தில் இருந்த கல்வி நிலையத்தில் பிரபாகரம் வேதங்கள் கற்பிக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் இருந்த சமணர்களின் கடிகையில் கதம்ப அரசனான மயூரசன்மன் வேதம் கற்றதாகத் தாளகுண்டா என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
 
திருப்பாதிரிப்புலியூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் சமணர் கல்வி நிலையங்கள் இருந்தன. இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் சோளிங்கர் என்ற ஊரில் வேதங்கள் கற்பித்த சோமாஜி என்ற அந்தணருக்கு வேதவீரமங்கலம் என்ற சிற்றூரைத் தானம் கொடுத்தான். ஞானகாண்டம், இதிகாசம் ஆகியன கற்றுக்கொடுக்கப்பட்டதாகக் காசக்குடிச் செப்புப்பட்டயம் கூறுகிறது.
 
விக்கிரம சோழன் கல்வெட்டு திருவாடுதுறையில் மருத்துவசாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்ததாகக் கூறுகிறது. பசுநெய், மூலிகைகள் மூலம் மருந்துகள் தயாரிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. வீரசோழன் காலத்தில் மருத்துவசாலையில் சிறப்பான மருத்துவர்களும், தாதியர்களும் இருந்ததாகத் தெரிகிறது.
 
ஒரத்தநாடு முத்தாலம்மாள்புரம் கல்வெட்டு, மராத்திய மன்னர் காலத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விடுதி மாணவர்களுக்கும் தினசரி வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மருத்துவ நூல்கள், நூல் நிலையங்கள் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. இலவச கல்வியே அளிக்கப்பட்டது.
 
திருவாவடுதுறை மருத்துவக்கல்லூரியில் அஷ்டாங்க ஹிருதயம் என்ற மருத்துவ நூல் கற்பிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் இருந்தது. நீலகண்ட நாகம் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் அமைத்தவர். முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் மருத்துவக் கல்விச்சாலையில் 270 இளங்கலை மாணவர்களும், 70 முதுகலை மாணவர்களும் இருந்தனர். மாணவர்களில் 40 பேர் பிரம்மச்சாரிகள். நான்கு வேதங்கள், பிரபாகரம், வியாகரணம், பீமாம்சம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். வாத்தி என்று ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். நித்த வினோதப் பேரரையார் என்பன போன்ற பட்டங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.
 
மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து நாடு, நகரங்களை அழித்தான். ஆயினும், பட்டினப்பாலை என்ற நூலைப் பாடியதற்காகப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவருக்குக் கரிகால் சோழன் கொடுத்திருந்த மண்டபத்தை மட்டும் இடிக்கவில்லை. புலவர்கள் பெற்ற மதிப்பை இது காட்டுகிறது. இச்செய்தி சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.
 
திருவாச்சூர் வியாகரண மண்டபத்தில் இருந்த கல்லூரியில் பாணினி எழுதிய இலக்கண நூல் கற்பிக்கப்பட்டது. நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவர் குலோத்துங்க காவனூர் என்ற ஊரை திருவாச்சூர் கல்வி நிலையத்திற்குத் தானமாக வழங்கினான். திருபதுங்கன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் இசைக்கலை கற்பிக்கப்பட்டதாகப் பாகூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது.
 
படைக்கலப் பயிற்சிக்கென கல்வி நிலையம் இருந்ததையும் அறிகிறோம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சோமநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஆத்தூர்ச் சேனாவரையர் மாணவர்களால் தனக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் கோவிலுக்குத் தானம் வழங்கினார் என்று கூறுகிறது. இம்மன்னர் காலம் கி.பி. 1276. இந்தச் சேனாவரையர் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரையும் எழுதியுள்ளார். பாண்டியனின் சேனைக்குத் தலைவராகவும் இருந்தார். கடைக்கலப் பயிற்சியும், இலக்கியக் கல்வியும் கற்பித்துள்ளார். இவரது உரையில் தென்பாண்டி நாட்டு பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்குகள் ஆகியன எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. சேனைக்குத் தலைவர் என்பதால் சேனாவரையர் என்று பட்டம் பெற்றார். இக்கல்வெட்டு ஆத்தூரைச் சேந்தமங்கலம், சேர்ந்தபூமங்கலம், அவனிபசேரமங்கலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறது. சேனாவரையர் செல்வந்தர், நல்லவர், வல்லவர் என்று மயிலைநாதர் உரை குறிப்பிடுகிறது.
 
வேதக்கல்வியும், வேள்வியும் பாண்டியர் காலத்தில் போற்றப்பட்டது. கொற்கை நற்கொற்றன் என்பவனுக்குப் பாகனூர்க் கூற்றம் என்னும் இடத்தில் வேதத்தில் வல்ல அந்தணர்களைக் கொண்டு வேள்வி செய்து அந்த இடத்தை வேள்விக்குடி என்று பெயரிட்டு நற்கொற்றனுக்குப் பாண்டிய மன்னன் வழங்கினான். இச்செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேடு கவிதை நடையில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் உள்ள மெய்க்கீர்த்தி என்னும் பகுதி கவிதை நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியிலும், புலமையிலும் சிறந்தவர்களே கல்வெட்டுகளை எழுதியுள்ளனர். மன்னர்கள் காலத்தில் கல்வி நிலை சிறப்பாக இருந்தது கல்வெட்டுகளால் உறுதி செய்யப்படு கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

வீரராஜேந்திரரின் திருமுக்கூடல் கல்வெட்டு தரும் செய்திகள் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

நம்முடைய பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருமளவு உதவுகின்றன. இந்த அரசன் அந்த நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான், அந்த அரசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் போன்ற செய்திகளைத் தவிர, அக்கால நிர்வாகம், நிதி மேலாண்மை, சமூக வாழ்வு போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த சாசனங்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட பல செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகளில் ஒன்றுதான் பொயு 1063 – 1070க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழரின் திருமுக்கூடல் கல்வெட்டு. 

 

திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோவில் மிகப் பழமையானது. திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கே வந்து தங்கள் பிரார்த்தைனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பெருமை உடையது இந்தத் தலம். இக் கோவிலைப் பற்றிப் பல புராணக் கதைகள் உண்டு. பாலாற்றோடு வேகவதி ஆறும் செய்யாறும் கலந்து மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால் புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பழைய சீவரத்திலிருந்து ஆற்றைக் கடந்தால் இந்த ஊரை அடைந்துவிடலாம். பல்லவர்களால் இந்தப் பெருமாள் வழிபடப்பட்டதற்கு ஆதாரமாக பல்லவன் நிருபதுங்க விக்கிரம வர்மனின் இருபத்து நாலாவது ஆண்டுக் கல்வெட்டு இங்கே உள்ளது. அந்தக் கல்வெட்டு பெருமாளை ‘விஷ்ணு படாரர்’ என்று அழைக்கிறது. 

கோ விசய நிருபதுங்க பல்லவ விக்கிரம வருமக்கு யாண்டு இருபத்து நாலாவது 

காடுபட்டிமுத்தரையர் மகனார் அரிகண்டப்பெருமானாருக்கு 

ஊற்றுக்காட்டுக்கோட்டத்து சீயபுரத்து சபையோமொட்டிக்கொடுத்த 

பரிசாவது திருமுக்குடல் விஷ்ணுபடாரர்க்கு நுந்தாவிளக்கெரிப்பதற்க்கு

இப்படிப் பொயு 9ம் நூற்றாண்டிலிருந்தே பல திருப்பணிகள் இந்தக் கோவிலில் நடைபெற்று வந்திருக்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற பிற்காலச் சோழ மன்னர்களும் இந்தக் கோவிலுக்குப் பல்வேறு நிவந்தங்களை அளித்து அவற்றைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கின்றனர். அந்த மரபைத் தொடர்ந்தே முதலாம் ராஜேந்திர சோழரின் மகனான வீர ராஜேந்திரரும் இந்தக் கோவிலுக்கு நிவந்தம் ஒன்றை அளித்து அதை ஒரு நீண்ட கல்வெட்டில் (சுமார் 55 வரிகள் கொண்டது) பொறித்து வைத்துள்ளார். இந்தக் கல்வெட்டு விவரங்களை ‘Epigraphia Indica’ தொகுதியில் கே.வி.சுப்பிரமணிய ஐயர் தொகுத்துள்ளார். அதுகுறித்த அறிமுக உரையில் தொல்லியல் துறை பிரதி எடுத்துள்ள மிகப்பெரிய கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

வீரராஜேந்திரரின் ஆறாம் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கல்வெட்டு, வழக்கமான சோழர் பாணியில் “திருவளர் திருபுயத் திருநில வலயந்’ என்ற வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியோடு துவங்குகிறது. சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனின் புதல்வனான விக்கிரமாதித்தனையும் அவனுடைய மா சாமந்தர்களையும் கங்கபாடியில் முறியடித்து அவர்களைத் துங்கபத்திரைக்கு அப்பால் துரத்திய வீரச்செயலிலிருந்து துவங்கி வீரராஜேந்திரன் அடைந்த வெற்றிகளைப் பட்டியிலிடுகிறது இந்த மெய்க்கீர்த்தி. பாண்டியன் ஸ்ரீவல்லபனைத் தோற்கடித்தது, சோழர்களுக்கு இணக்கமாக இருந்த கீழைச்சாளுக்கியர்களிடமிருந்து வேங்கியைக் கைப்பற்ற முயன்ற மேலைச்சாளுக்கியர்களை வீழ்த்தியது, ஈழத்தின் மேல் படையெடுத்து விஜயபாகுவை வென்றது ஆகியவை இதனுள் அடங்கும். 

இப்படிப்பட்ட வெற்றிகளைக் குவித்த ராஜகேசரிவர்மன் வீரராஜேந்திரதேவன் தன்னுடைய ஐந்தாவது ஆட்சியாண்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகேரளன் என்ற அரண்மனையில் ராஜேந்திர சோழ மாவலிவாணராஜன் என்ற அரியணையில் அமர்ந்திருந்தான். காளியூர்க் கோட்டம் பணவூர் நாட்டைச் சேர்ந்த வயலைக்காவூர், திருமுக்கூடல் மகாவிஷ்ணு கோவிலுக்கு தேவதானமாக இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அன்னதான சாலை ஒன்றுக்கு வழங்கிவந்த 75 கழஞ்சுப் பொன்னையும், அவர்கள் சாலபோகமாக செலுத்திவந்த வரிகளையும் அந்த வருடம் முதல் திருக்கோவிலின் கணக்கில் இறையிலியாக (வரி இல்லாமல்) சேர்க்க அரசர் உத்தரவிட்டார் என்று இந்தக் கல்வெட்டு குறிக்கிறது. இந்த ஆணையை திருமந்திர ஓலையான திருப்பனங்காடுடையான் வல்லவன் வாணவரையன் எழுதியதாகவும் திருமந்திர ஓலை நாயகங்களான ராஜராஜ பிரம்மமாராயரும் வீரராஜேந்திர கங்கையரையனும் ஒப்பமிட்டதாகவும் கூறும் இந்தக் கல்வெட்டு, ஆறு உடன்கூட்டத்து அதிகாரிகளும் (அரசனின் நிர்வாக முறைகளைக் கவனிக்கும் அதிகாரிகள்) 28 விடையில் அதிகாரிகளும் (அரசிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அதிகாரிகள்) நான்கு நடுவிருக்கை அதிகாரிகளும் (மத்தியஸ்தம் செய்பவர்கள்) அதற்குச் சாட்சியாக இருந்ததையும் குறிப்பிடுகிறது. அதன்பின் புரவரித் திணைக்களம் (நிலவரி வசூலிப்போர்) உட்பட முப்பத்து இரண்டு அதிகாரிகள் இது தொடர்பான கணக்குகளை சரிபார்த்து எழுதி வைத்தனர்.

இப்படிப்பட்ட நிர்வாக அடுக்குகளைக் கொண்டிருந்த சோழ ஆட்சிமுறையில், மேற்சொன்ன கணக்காளர்கள் இது தொடர்பான வரவையும் செலவுகளையும் எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை இக்கல்வெட்டு மேலும் விளக்குகிறது. அரசன் ஆணையிட்ட 75 கழஞ்சுப் பொன்னோடு ஏற்கெனவே தேவதானமாக விடப்பட்டிருந்த 72 கழஞ்சு 9 மஞ்சாடிப் பொன்னையும் சேர்த்து கோவிலின் மொத்த வருவாய் 147 கழஞ்சு 9 மஞ்சாடியாக இருந்தது. இதிலிருந்து ராஜகேசரி என்ற அளவையால் அளக்கப்பட்டால் ஒரு கழஞ்சுக்கு 16 கலம் நெல் கிடைக்கும். இதோடு மேற்சொன்ன வரிகளையும் சேர்த்துக் கிடைத்த மொத்த வருவாய் 3243 கலம் நெல்லாகவும் 216.5 காசுகளாகவும் இருந்தது. இந்த வரவுக்கு ஈடான திருக்கோவில் தொடர்பான செலவினங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 1) திருக்கோவில் தொடர்பான செலவுகள் 2) அங்கே செயல்பட்ட வேதபாடசாலைக்கு ஆன செலவுகள் 3) கோவில் அருகில் ஏற்படுத்தப்பட்ட ஆதுர சாலைக்கான செலவுகள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

திருக்கோவில் தொடர்பானவை

திருமுக்கூடல் ஆழ்வாரான பெருமாளுக்கு சிறுகாலைச் சந்தி நிவேனத்திற்கான செலவுகள், இரவில் பால்பாயசம் அளிப்பதற்கு, ஸ்ரீ ராகவச்சக்ரவர்த்திக்கு (ராமபிரானுக்கு) மதியத்தில் அளிக்கும் நிவேதனத்திற்கு, ஆழ்வாருக்கு சந்தனக்காப்பு அணிவிப்பதற்கு, சன்னதிகளில் விளக்கேற்றுவதற்கு ஆகும் செலவுகள் ஆகியவை விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. தவிர அழகிய மணவாளருக்கு ஐப்பசித் திருநாளில் அளிக்கும் நிவேதனம், கார்த்திகைத் திருநாளுக்கும் மாசித் திருநாளுக்கும் செய்யப்படும் நிவேதனம், வீரசோழன் நந்தவனத்தில் நடைபெறும் பாரிவேட்டையின் போது அளிக்கப்படும் நைவேத்தியங்கள், ஜயந்தாஷ்டமி (ஜன்மாஷ்டமி)யின் போது வெண்ணெய்க் கூட்டாழ்வாருக்கு (கிருஷ்ணருக்கு) அளிக்கப்படும் நிவேதனம் ஆகியவற்றின் விவரங்கள் தேவையான நெல், பருப்பு, நெய், சர்க்கரை, பழம் உட்பட பொருட்களின் அளவோடு குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசர் வீரராஜேந்திரர் பிறந்த தினமான ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்றும் கோவிலின் சுற்றுச் சுவரையும் ஜனநாத மண்டபத்தையும் கட்டிக்கொடுத்த வைசிய மாதவன் தாமியனுடைய பிறந்த தினத்தன்றும் நடைபெறவேண்டிய அபிஷேக ஆராதனைகள், நைவேத்தியங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள், கோவிலிலுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவாய்மொழி சாதிப்பதற்காக அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதிய விவரங்கள், கோவில் திருவிழாக்களைக் குறித்துக்கொடுக்கும் ஜோசியருக்கு அளிக்கவேண்டிய ஊதியம், அமாவாசை புரட்டாசித் திருவோணம் போன்ற முக்கிய தினங்களின் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னதானம் அளிக்க ஆகும் செலவுகள் ஆகியவையும் விரிவான முறையில் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இவற்றைத் தவிர வீரசோழன் நந்தவனத்தைப் பராமரிப்போர், பஞ்சாங்கம் வாசிப்போர், வைகானச தேவகன்மி, கோவில் கணக்குகளை நிர்வகிப்போர், மடப்பள்ளிக்குப் பானைகளை வழங்கும் குயவர், கோவில் காவலைக் கவனிக்கும் திருமுக்கூடல் பேரரையன் ஆகியோருக்கு வழங்கவேண்டிய ஊதிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. 

வேதபாடசாலை

இக்கோவிலை ஒட்டி ஒரு வேத பாடசாலையும் இயங்கியது. அதற்கான செலவினங்களும் விவரமாகத் தரப்பட்டுள்ளன. அங்கு ரிக் வேதம் பயில்விக்கும் ஒருவருக்கும், யஜூர் வேதம் பயில்விக்கும் ஒருவருக்கும் நாள் ஒன்றுக்கு 1 பதக்கு நெல்லும் 4 காசுகளும் வழங்கப்பட்டன. அங்கே வியாகரணத்தையும் ரூபாவதாரம் என்ற சாஸ்திரத்தையும் பயில்விக்கும் ஒரு பட்டருக்கு நாள் ஒன்றுக்கு 2 பதக்கு நெல்லும் 10 காசுகளும் வழங்கப்பட்டன. அதைத் தவிர அந்தப் பாடசாலையில் பயிலும் 60 மாணவர்களுக்கு உணவளிக்க நாள் ஒன்றுக்கு 2 கலம் 1 தூணி 1 நாழி நெல் அளிக்கப்பட்டது. இந்த 60 பேரில் ரிக் வேதம் பயில்வோர் 10 பேர், யஜுர் வேதம் பயில்வோர் 10 பேர், வ்யாகரணத்தையும் ரூபாவதாரத்தையும் பயில்வோர் 20 பேர், மகாபாஞ்சராத்திரர்கள் 10 பேர், சிவ பிராமணர்கள் 3 பேர், வைகாசனர்கள் 5 பேர் ஆகியோர் இருந்தனர். வைணவம் சார்ந்த கோவிலாக இருந்தாலும் சிவ ஆகமங்களும் இங்கு பயிற்றுவிக்கப்பட்டு சிவ பிராமணர்களும் மாணாக்கர்களாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தவிர இந்தப் பாடசாலையில் சமையல்காரர், அவருக்கு 3 உதவியாளர்கள், வயலைக்காவூரிலிருந்து பொருட்களை வாங்கிவர ஒருவர், இரண்டு பணியாளர்கள் ஆகியோரும் இருந்தனர். அவர்களுக்கான செலவினங்களும் கல்வெட்டில் தரப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் ஆண்டில் 51 சனிக்கிழமைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியிருப்பதால் அந்த எண்ணெய்க்காகும் செலவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, சனியன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. 

ஆதுரசாலை

இக்கோவிலை அடுத்து ஒரு ஆதுரசாலை (மருத்துவமனை) இருந்தது. வீரசோழன் ஆதுரசாலை என்று வீரராஜேந்திரரின் மற்றொரு பெயரால் இந்த ஆதுரசாலை அழைக்கப்பட்டது. இந்த அரசரின் ஆட்சியில்தான் வீரசோழீயம் என்ற இலக்கண நூல் எழுதப்பட்டது என்பதும் இங்கு நினைவுகூரப்பட வேண்டியது. இந்த வீரசோழ ஆதுரசாலைக்கான செலவினங்களும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளன. ஆதுரசாலையில் 15 படுக்கைகள் இருந்தன. இவற்றில் தங்கி உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறும் நபர்களுக்கான செலவு, தலைமை மருத்துவர், சஸ்திர சிகிச்சை செய்யும் ஒருவர், இரு உதவியாளர்கள், மருந்துகளைத் தயாரிக்கும் இருவர், நாவிதர் ஆகியோருக்கான ஊதியம் குறிப்பிட்ட அளவு நெல் மூலமாக அளிக்கப்படவேண்டும் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, இந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட வேண்டிய மருந்துகளில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை

  1. பிராஹமியம் கடும்பூரி
    2. வாஸாஹரிதகி
    3. கோமூத்ர ஹரிதகி
    4. தஸமூல ஹரிதகி
    5. பல்லாதக ஹரிதகி
    6. கண்டிரம்
    7. பலாகேரண்ட தைலம்
    8. பஞ்சாக தைலம்
    9. லசுநாகயேரண்ட தைலம்
    10. உத்தம கா்ணாபி தைலம்
    11. ஸுக்ல ஸகிரிதம்
    12. பில்வாதி கிரிதம்
    13. மண்டுகரவடிகம்
    14. த்ரவத்தி
    15. விமலை
    16. ஸுநோரி
    17. தாம்ராதி
    18. வஜ்ரகல்பம்
    19. கல்யாணலவனம்
    20. புராணகிரிதம்

மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் ஆயுர்வேதத்தைச் சேர்ந்தவை. சரஹ சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை போன்ற நூல்கள் இந்த மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளையும் அவற்றின் பயன்பாட்டையும் தருகின்றன. உதாரணமாக இன்று பரவலாகக் கேலிக்குள்ளாக்கப்படும் கோ மூத்திர மருந்தைப் பற்றிய குறிப்பு. ஹரிதகி என்னும் கடுக்காயை கோமியத்தில் ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் அந்தக் கடுக்காயை உண்டால் மூலம், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும் என்று சுஸ்ருத சம்ஹிதை கூறுகிறது. இந்த மருந்துகள் அனைத்தும் ஆதுரசாலையில் இருக்கவேண்டும் என்றும் அவை இன்னின்ன அளவுகளில் இருக்கவேண்டும் என்றும் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக வாஸாஹரிதகி இரண்டு படி, தஸமூல ஹரிதகி ஒரு படி மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் பல இன்றும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இவற்றைத் தவிர மருத்துவமனை தொடர்பான இதர செலவுகளைப் பற்றிய விவரங்கள் (விளக்கெரியத் தேவையான எண்ணெய் போன்ற) இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 

இப்படி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு செலவினத்திற்கான அளவும் குறிக்கப்பட்டு அவை மொத்தமும் குறிப்பிடப்பட்ட வரவான 3243 கலம் 2 தூணி 1 பதக்கு 6 நாழி 1 உழக்கு 3 செவிடு நெல்லிற்கு ஈடாக கணக்கிடப் பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம். இந்த அளவு எதனாலாவது குறைந்தால் அப்படிக் குறையும் ஒவ்வொரு காசுக்கும் ஈடாக தண்டவாணி மூலம் உரைக்கப்பட்ட பொன் வழங்கப்படவேண்டும் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 

சேனாதிபதி கங்கைகொண்ட சோழ தன்மபாலன் என்ற வைசிய மாதவ தாமியனின் புதல்வனின் சார்பாக இந்தத் தர்மம் வீரராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டில் கோவிலில் பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு நிறைவடையும் இந்தக் கல்வெட்டு, ஸ்ரீ மதுராந்த சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த மகாசபையில் பாதுகாப்பில் இருக்கும் என்று குறிக்கிறது. 

இந்தக் கல்வெட்டு மூலம், மிகக் குறைந்த காலமே ஆட்சியில் இருந்த வீரராஜேந்திரரின் வெற்றிகளைக் குறித்து அறிந்துகொள்வதோடு, சோழர் ஆட்சி முறை, அதன் நிர்வாக அதிகாரிகளுடைய பதவிகள், சோழர் கணக்கியல், அளவீட்டு முறைகள், அக்காலத்தில் இருந்த வேதங்கள் தொடர்பான பாடமுறைகள், மருத்துவமனை செயல்படும் விதம், அதிலுள்ள ஊழியர்கள், மருந்துகளும் அவற்றின் பயன்களும் என்று பல தகவல்கள் அறியக் கிடைக்கின்றன. நாம் செய்யவேண்டியது எல்லாம் திருப்பணி என்ற பெயரில் இதுபோன்ற கல்வெட்டுகளை அழித்துக் கெடுக்காமல் அடுத்த தலைமுறைகளுக்கு, தமிழர்களின் பெருமையைச் சொல்லும் சின்னங்களாகக் கொண்டு செல்வதுதான். 

உசாத்துணைகள் 

  1. Epdigraphia Indica vol 21
  2. பிற்காலச் சோழர் சரித்திரம் – சதாசிவப் பண்டாரத்தார்

படங்கள் நன்றி: இணையம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard