அசையும் வெறுப்பும் அற்றவனாகிய கடவுளின் பாதங்களை அடைந்தவர்க்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.
பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம்
நெறிநின்றார் நீடுவாழ்வார். (6)
மெய், வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்து பொறிகளின் மூலம் உண்டாகின்ற ஐந்து வகையான ஆசைகளையும் ஒழித்தவனாகிய கடவுளின் உண்மையான ஓழுக்கம் நெறியைப் பின்பற்றி நடப்பவர்கள் நிலைத்து வாழ்வார்கள்.
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7
ஒப்பற்ற கடவுளின் பாதத்தை அடைந்தவர்கள் தாம் மனக்கவலை யில்லாமல் வாழ்வார்கள், மற்றவர்களால் மனக்கவலை யில்லாமல் வாழ முடியாது.
கோள் இல் பொறியில் குணம்இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)
கடவுளின் பாதத்தை வணங்காத தலை, தம்முடைய தொழிலைச் செய்யாத ஐஓம்பொறிகளைப் போல பயனற்றது.
பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)
அசையற்றவனாகிய கடவுளின்மேல் அன்பு செலுத்து வதை மாத்திரம் மனதில் வைத்துக்கொள். அந்த அன்பையும் தன் சரீரத்தின்மேல் உள்ள அசை நீங்குவதற்காகவே மனதில் கொள்ளுக.
திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. முதல் பாட்டு “அகரமுதல எழுத்தெல்லாம்” என்று தொடங்குவது. கடவுள் இல்லாமல் உலகம் இல்லை என்று கூறுகிறது.
உலகைப் படைத்தவர் கடவுள், அவரை வணங்குவது மக்கள் கடமை, கடவுளை வணங்குகிறவர்கள் தாம் சுகமடைவார்கள், மனக் கவலையின்றி வாழ்வார்கள், வணங்காதவர்கள் துன்பம் அடைவார்கள். என்ற விஷயங்களை மேலே எடுத்துக் காட்டிய பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மழை பொய்யாவிட்டால் இவ்வுலகில் தெய்வங்களுக்குக் கூட திருவிழாவும் பூஜையும் நடக்காது.
குறிப்பிட்ட சில நாட்களில் குதூகலமாகக் கொண்டாடுவது திருவிழா; தினந்தோறும் செய்வது பூஜை. பூஜையை நித்தியம் என்றும், திருவிழாவை நைமித்திகம் என்றும் கூறுவர்.
தெய்வத்தைத் தினந்தோறும் பூஜை செய்யவேண்டுமானால் அதற்கென ஒரு இடம் வேண்டும். அந்தத் தெய்வத்தைக் குறிக்க ஒரு அடையாளம் வேண்டும். இந்த அடையாளம் எந்த வகையில் இருந்தாலும் அது ஒரு உருவமாகி விடுகின்றது. இந்த உருவத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொண்டாடுவதுதான் திருவிழா. திருவள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் உருவ வணக்கம் இருந்தது, திருவள்ளுவரும் அதை ஆதரித்தார் என்று இந்தக் குறளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுக்குள் சிறந்தது அறியவேண்டிய எல்லா விஷயங்களையும் படித்தறிந்த மக்களைப் பெறுவதுதான். இதைத் தவிர வேறு உண்டு என்று நாம் தெரிந்து சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். (62)
ஒருவன் பிறரால் பழிக்கப்படாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றிருப்பானாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் துன்பம் உண்டாகாது.
தந்த மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)
தந்தை மகனுக்குச செய்யவேண்டிய கடமை, அவனைப் படித்தவர்களின் கூட்டத்தில், சிறந்தவனாகக் கொண்டாடும் படி செய்வதுதான்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும், தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய். (69)
தாயானவள், தன் மகனைப்பற்றிக் கல்வியில் சிறந்தவன் ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பிறர் சொல்லக் கேட்டால், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடஅதிக மகிழ்ச்சியை அடைவாள்.
கல்வி கற்று ஓழுக்கமுடையவனாக நடந்துகொள்ளுதல்
மகனுடைய கடமை.
மேலே காட்டிய பாடல்கள் “புதல்வரைப் பெறுதல்” அல்லது “மக்கட்பேறு” என்னும் அதிகாரத்தில் உள்ளவை.
மகனுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும்; மகனை நல்லொழுக்க முடையவனாக்க வேண்டும்; மகனும் கல்வி கற்கவேண்டும்; நல்லொழுக்கங்களைப் பின்பற்றி நடக்கவேண்டும். இவை பிரம்மச்சரிய அஸ்ரமத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை. குருகுலத்திலிருந்து கல்வி கற்றலும், குருவின் கட்டளைப் படி. நடத்தலுந்தான் பிரம்மச்சாரியின் கடமை.
திருவள்ளுவர் காலத்தில் இப்பொழுதிருப்பது போன்ற பள்ளிக்கூடங்ககள் இல்லை. அக்காலத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டுமானால் ஆசிரியர்களின் வீடுகளில் வைத்துத்தான் படிக்க வைக்க வேண்டும். இதுதான் குருகுலவாசம். குருவின் வீட்டிலேயே இருந்து கொண்டு கல்வி கற்பதுதான் ஒருவன் பிரம்மச்சரிய நிலையில் இருக்கும் காலமும்.
பிரம்மச்சரிய அஸ்ரம தர்மம், கிரகஸ்த அஸ்ரம தருமம், இரண்டும் இல்லறவியலில் அடங்கிக் கிடக்கின்றன. இல்லறவியலில் உள்ள புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் பிரமச்சரிய தருமம் அடங்கி விட்டது.
வானப்பிரஸ்த அஸ்ரமமும், சந்நியாச அஸ்ரமமும் ஏறக்குறைய ஒன்றுதான். அதலால் இவ்விரண்டைப் பற்றியும் விரிவாகத் துறவறவியவில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பவைகளில் உள்ள முக்கிய விஷயங்களைக் கவனிப்போம். வானப்பிரஸ்த, சந்நியாச அஸ்ரமங்களில் செல்லுகிறவர்கள் பின்பற்ற வேண்டிய விரதங்களைப்பற்றியும், அவர்கள் பெற வேண்டிய அறிவைப்பற்றியும் திருவள்ளுவர் துறவறவியலில் கூறுகிறார்.
செல்வத்தில் சிறந்த செல்வம் கருணையாகிய செல்வமே யாகும். பொருளால் வரும் செல்வம் அற்பர்களிடமும் உண்டு. வானப்பிரஸ்தர்களும், துறவிகளும் எல்லா வுயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும்.
இவ்விரதங்கள் பெரும்பாலும் சமண சந்நியாசிகள் பின் பற்றும் விரதங்களைப்போல இருப்பதனால் திருவள்ளுவரைச் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்று சில அராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். இது ஆராய்ச்சிக் குரிய விஷயம்.
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம்,
போக்கும் அது விளிந்து அற்று. (330)
ஒருவனிடம் பெரிய செல்வம் வந்து சேர்வது நாடகக் கொட்டகைக்கு, நாடகம் பார்ப்பதற்காக ஜனக்கூட்டம் வந்து கூடுவது போன்றதாகும். அச்செல்வம் அழிந்து விடுவது, நாடகம் முடிந்தவுடன் ஜனக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றதாகும். அதலால் செல்வம் நிலையற்றதென்று அறிந்துகொள்ள வேண்டும்.
பிறப்புஎன்னும் பேதமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)
பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்க வேண்டுமானால் மோட்சத்திற்குக் காரணமாக இருக்கின்ற உண்மைப் பொருளாகிய கடவுளை உணர்வதே அறிவாகும்.
ஆராவியற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா வியற்கை தரும். (370)
திருப்தி படையும் தன்மையற்ற ஆசையை, ஒருவன் விட்டு விட்டானாயின், அப்பொழுதே அந்த அசையின்மை அவனுக்கு மோட்சத்தைக் கொடுக்கும். அசை யின்மையே முக்தி பெறுவதற்கு வழியாகும்.
என்று உணரவேண்டும்; கடவுளை நம்பித் துதிக்கவேண்டும்; எப்பொருளிலும் அசையில்லாமைதான் முத்திக்கு வழியென்று காணவேண்டும்; தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு ஊழ்வினைதான் காரணம் என்று நம்பவேண்டும்; இவைகள் துறவிகளுக்கு வேண்டிய ஞானமாகும்.
துறவற இயலில் வானப்பிரஸ்தர்களும், சந்நியாசிகளும், அனுஷ்டிக்க வேண்டியன என்று கூறப்படுபவைகளும், அறிய வேண்டும் என்று கூறப்படுபவைகளும் புதியவைகள் அல்ல; முன்னோர் நூல்களில் அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தர்மத்தையே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
துறவறவியலில் 13 அதிகாரங்கள் உள்ளன. இவற்றுள் முதல் 10 அதிகாரங்கள் சிறப்பாக வானப் பிரஸ்தர்கள் பின்பற்ற வேண்டிய தா்மங்களைக் கூறுகின்றன; மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்னும் மூன்று அதிகாரங்கள் துறவிகளின் தர்மங்களைக் கூறுகின்றன; என்பது சில அறிஞர்களின் கொள்கை.