Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
Permalink  
 


 திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு!

 
 
GetImage.png
 

தமிழனை ஒரே வரியில் வரைவிலக்கணப்படுத்துவதென்றால், உணர்ச்சிபூர்வமானவன் என்று சொல்லிவிடலாம். உணர்ச்சிகரமான எதையும் மறுபேச்சின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு மாற்றுத்தரப்பை மிகக்கடுமையாக விமர்சிப்பதே தமிழ்ப்பற்றாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோரின் வழமையாக இருக்கிறது. அதற்கான மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று திருவள்ளுவர் ஆண்டு. திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு என்ற பெயரில் இணையத்தில் காணக்கிடைக்கும் கட்டுரைகள் எல்லாமே வரலாற்று நோக்கு என்பதே துளியும் இன்றி, யாரோ ஒருவர் சொன்ன ஒரேவிடயத்தை மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் சொல்பவை. எவ்வித ஆதாரங்களும் அற்றவை! அவற்றைப் படித்தபோது அடைந்த கசப்பில் எழுந்ததே இக்கட்டுரை!



திருவள்ளுவர் ஆண்டு என்பது,  தமிழரின் ஆண்டுக்கணக்கு என்பதும்,  தை முதலாம் திகதி அது பிறக்கின்றது என்பதும்,  நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.  எதிர்வரும் தைப்பொங்கலன்று (ஜனவரி 14), திருவள்ளுவர் ஆண்டு 2049 பிறக்கின்றது. அதாவது கிரகோரியன் நாட்காட்டியுடன் 31 ஆண்டுகள் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும். ஆனால் அது எத்தகைய பின்னணியில் தோற்றமுற்றது, அதன் தோற்றத்தின் பின்னே இருந்த சமூக, அரசியல் காரணிகள் என்னென்ன என்பன பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. அதை, இன்று சுருக்கமாக நாம் பார்க்க இருக்கிறோம்.

மேலை நாடுகளின் காலக்கணிப்புக்காக கிரகோரியன், யூலியன் என்பனவும், அரபுலகு மற்றும் இஸ்லாமியர் மத்தியில்  ஹிஜ்ரி நாட்காட்டியும், இந்திய சமூகங்கள் மத்தியில் சக வருஷம், விக்கிரம வருஷம், கலியுகாதி வருஷம் என்பனவும் வழக்கில் இருக்கின்றன. தமிழிலிருந்து பிரிந்த கடைக்குட்டி மலையாளத்துக்கே கூட "கொல்லம் ஆண்டு" என்று தனியே ஒரு ஆண்டுக்கணக்கு இருக்கின்றது. ஆனால், முன் தோன்றிய மூத்த குடி என்று பெருமை பீற்றிக்கொண்ட தமிழினத்துக்கென தனி ஆண்டுக்கணக்கு ஒன்று கிடையாது. தமிழை நேசித்த எவருக்குமே இது ஒரு பெரிய உறுத்தலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. அவ்வாறான ஒரு தனி ஆண்டு பிறப்பதற்கான காலமும் கனிந்து வரவேண்டுமல்லவா? இந்த நிலையில் தான் தமிழரின் புத்தாண்டுக்கான கால்கோள்  1935ஆம் ஆண்டு இடப்பட்டது. அதற்குப் பெயர் "திருவள்ளுவர் திருநாள்!"
 
திருவள்ளுவர் திருநாள்
உலகப்பொதுமறை எனும் புகழை தமிழர் மத்தியில் தக்கவைத்துக்கொண்ட நூல், திருக்குறள். உலகின் 35இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ள திருக்குறள், பல்வேறு நாடுகளிலும் புகழ்பெற்ற ஒன்று. பிரான்ஸ் முதலான மேற்குலக நாடுகளில் பேருந்து வாசகங்களாக திருக்குறள் திகழ, சிங்கப்பூர் முகாமைத்துவ விருத்தி நிறுவனத்திலுள்ள (MDIS) உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர் சிற்பத்தொகுதியில் திருக்குறள் ஆசான் வீற்றிருக்கிறார். திருக்குறளின் உலகளாவிய தன்மையால், தமிழின் ஏனைய தலைசிறந்த மெய்யியலாளர்களை விட, வள்ளுவப்பிரானை தமிழின் அடையாளமாக முன்வைப்பதே பொருத்தம் என்ற கருத்து, பல்லாண்டுகளுக்கு முன்பே நிறையப்பேருக்குத் தோன்றிவிட்டது. இந்நிலையில், வள்ளுவன் புகழை விழாவெடுத்துக் கொண்டாடி நாடெங்கும் பரப்ப வேண்டும் என்ற வேணவா, முதலில் இருவருக்கு ஏற்பட்டது. அவர்கள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின் சென்னைப் பொறுப்பாளாராக இருந்த பத்மஸ்ரீ.வ.சுப்பையாபிள்ளை  மற்றும் அவர் நண்பர் காழி. சிவகண்ணுசாமிப்பிள்ளை. இவர்கள்,  17.01.1935 செய்துகொண்ட தீர்மானத்தின் பயன் தான் "திருவள்ளுவர் திருநாட்கழகம்" எனும் அமைப்பு.
 
அக்கழகத்தில் பணியாற்றவென பல்வேறு தமிழறிஞர்களை அவர்கள் இருவரும் ஒன்றிணைத்தனர். அவர்களில் முதன்மையானவர், தொல்காப்பியம், ஆத்திசூடி முதலான பல்வேறு நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்த தமிழறிஞர் நமச்சிவாய முதலியார். இவர்களது முயற்சியில் உருவான திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் முதன்மையான பணி, வள்ளுவனுக்கென ஒருநாளை ஒதுக்கி அன்று ‘திருவள்ளுவர் திருநாள்’ எனும் விழாவைக் கொண்டாடுவது. சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் கோயிலில் வள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்த வைகாசி மாத அனுச நட்சத்திரம், அதற்கான நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நாளை இந்தியாவில் மாத்திரமன்றி தமிழர் விரவி வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளிலும் கொண்டாடுவதற்கான கோரிக்கை அக்கழகத்தினரால் விடுக்கப்பட்டு 1935இல் வைகாசி அனுசம் அமைந்த மே 17, 18 திகதிகளில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
 
இவற்றில் முதன்மையான விழா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரம்பிள்ளை முதலான முக்கியமான  தமிழறிஞர்களின் தலைமையில் இடம்பெற்றது. வெற்றிகரமாக இடம்பெற்ற அன்றைய விழாவில், திருவள்ளுவர் திருநாளை இனி ஆண்டு தோறும் கொண்டாடுவதென்றும், தமிழகம் மாத்திரமன்றி, உலகெங்கும் தமிழர் பரந்து வாழும் இடங்களிலும் அது அதே நாளில் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகின்றது.
 
குறள் புகழ் பாடிய ஈழத்தவர்
"நண்பா.... எல்லாம் கொஞ்ச காலம் தான்" என்ற ஆன்மிக அரசியல்வாதியாரின் அரிய பொன்மொழியை இந்த இடத்தில் நாம் நினைவுகூர வேண்டும். அந்தப் பொன்மொழி சொல்வது போல, 1940களில் திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போயிற்று. அதையெண்ணி தமிழகத் தமிழறிஞர்களை விட அதிகம் வருந்தியவர் ஒரு ஈழத்தமிழ்மகன். பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள்!
 
திருக்குறளின் பெருமையைப் பரப்புவதற்காக தமிழ்மறைக் கழகம் என்ற அமைப்பை நிறுவியிருந்த கா.பொ.இ அவர்கள், 13.1.1952 அன்று அந்த அமைப்பூடாக "வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள், தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்" என்ற சொலவடையுடன் அனைத்துலகத் தமிழ் அமைப்புகளுக்கும், அவ்விழாவை மீண்டும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். குன்றக்குடி அடிகளார், டாக்டர். மா.இராசமாணிக்கனார், டாக்டர் மு.வரதராசன், அ.ச.ஞா, கி.வா.ஜ, முதலான பல்வேறு தமிழறிஞர்களும் அதை ஏற்று வழிமொழிந்ததை அடுத்து, 1954ஆம் ஆண்டு, திருவள்ளுவர் திருநாள் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது.
 
தமிழகம், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மாத்திரமன்றி, தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தென்னாபிரிக்காவின் ஜொகன்னர்ஸ்பேர்க் முதலான நாடுகளிலும் அது கொண்டாடப்பட்டிருக்கிறது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலிருந்து கிடைக்கின்ற 1956 மற்றும் 1959 ஆண்டறிக்கைகளில், அங்கு திருவள்ளுவர் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளைக் காணலாம். சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் சிலையை திருவள்ளுவர் திருநாளான 1966 யூன் 02ஆம் திகதி, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
 
வைகாசி அனுசம்
மேற்படி விவரங்களிலெல்லாம் நாம் குறிப்பாகக் காணவேண்டியது, திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது வைகாசி அனுசம் அன்று தான் என்பதையே! அதை உறுதிப்படுத்த 1950களில் வெளியான பிரபல இதழ்களின் கீழ்வரும் செய்தித்துணுக்குகளையும்  சுட்டிக்காட்டலாம்:
 
”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டியதுதான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக் ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”
- கலைமகள் (வைகாசி 1952)
 
“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை(அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”
-  செந்தமிழ்ச்செல்வி (வைகாசி, 1953)
 
“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்”
- குமுதம் ( 20.4.54)
 
 
“மகான்களுடைய திருநாட்களை கொண்டாடவேண்டியது அவசியம்” என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்படும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”
- கல்கி (ஏப்ரல் 12, 1958)
 
இந்தக் குறிப்புகளைப் பார்க்கும் போது ஒன்று தெளிவாகப் புரிகிறது. இந்த எல்லா இதழ்களும் ஒரே குரலில் "வைகாசி அனுடமே திருவள்ளுவர் திருநாள்" என்ற வலியுறுத்துகின்றன. திருவள்ளுவர் திருநாளாக எந்நாளைக் கொண்டாடுவது என்ற குழப்பம் ஏற்படாமல், இவை இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே, அப்போது வைகாசி அனுடம் திருவள்ளுவர் திருநாள் அல்ல என்று வாதாடிய எதிர்க்குரலும் இருந்திருக்கவேண்டும். அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்களையும் நமக்கு வரலாறு அடையாளம் காட்டாமல் விடவில்லை! அவர்களில் மிக முக்கியமானோர் மூவர். கி.ஆ.பெ.விசுவநாதம், சோமசுந்தர பாரதியார், கலைஞர் கருணாநிதி!
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: திருவள்ளுவர் ஆண்டு – ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
Permalink  
 


தமிழர் திருநாளே திருவள்ளுவர் திருநாள்!
1954இல் வைகாசி அனுடமன்று திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருச்சி வானொலி நிலையத்துக்கும், கா.பொ.இ.யிற்கும், விசுவநாதம் ஒரு கடிதம் எழுதினார். "திருவள்ளுவர் பிறந்தது வைகாசி அனுடம் என்பதற்கு சான்று எதுவும் இல்லை. திருவள்ளுவர் திருநாளை இனி நாம் தைப்பொங்கலன்றே கொண்டாட வேண்டும். ஏனெனில் அதுவே காலம் காலமாக தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது" என்பது அந்தக் கடிதத்தின் சாராம்சம்.
 
அடுத்த ஆண்டு 1955இல் வெளியான திருவள்ளுவர் திருநாள் மலரில், விசுவநாதம் அவர்களின் கருத்தை மறுத்துரைத்தார் கா.பொ.இ. அவரது மறுப்புரையின் ஒரு பகுதியாக இது சொல்லப்படுகிறது:
 
“வைதிகக் கொள்கை, தனித்தமிழ்க் கொள்கை, திராவிடக் கொள்கை முதலிய பல கொள்கைகளையுடைய பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தமை எமக்கு பேரூக்கத்தை தந்ததெனினும், ஒருவரேனும் வைகாசி அனுடத்தை விட்டுவிட்டுத் தைமாதம் முதல் நாளைக் கொண்டாடவேண்டும் என்று எமக்கு எழுதவும் இல்லை. 1935இல் தமிழ்நாட்டிலிருந்த தமிழ்ப் பேரறிஞர்கள் யாவரும் சாதி, மத அரசியற் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல கட்சித் தலைவர்களும் பெரியார். ஈ.வே இராமசாமிநாயக்கர், அறிஞர்.சி,என். அண்ணாத்துரை முதலியோரும் கூட அவ்வாண்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டனர். அன்பர் விசுவநாதம் அப்பொழுது அந்த விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. அவர் கூறியிருக்க மாட்டார் என்றே நாம் கருதுகிறோம்.அரசியற் கட்சி வேறுபாடுகளைத் திருவள்ளுவர் திருநாளுடன் மோதச் செய்யாதிருக்குமாறு தமிழ்மக்கள் யாவரையும் வேண்டிக்கொள்கிறோம்."
 
விசுவநாதத்தின் கோரிக்கையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை, மேலே 1966ஆம் ஆண்டு கூட வைகாசி அனுடத்திலேயே திருவள்ளுவர் சிலை திறப்பு  நிகழ்வதைக் கொண்டு நாம் ஊகிக்கலாம். ஆனால், அத்தரப்பு முழுமையாக வாயடைக்கப்படவில்லை.  விசுவநாதம் மாத்திரமன்றி சோமசுந்தரபாரதியார், முதலான தமிழறிஞரின் மனதிலும் தோன்றியிருந்த "திருவள்ளுவர் திருநாள், தமிழர் திருநாளிலேயே கொண்டாடப்படவேண்டும்" என்ற கருத்து, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நீறுபூத்த நெருப்பாகக் காத்திருந்தது.
 
தை வந்த தமிழ்மறையார்!
திருவள்ளுவர் திருநாளை உணர்வு பூர்வமாகக் கொண்டாடவேண்டும் என்பதற்காக, அன்று விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டு, 1962இலிருந்து, யூன் 02ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1967இல் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, 1971இல், திருவள்ளுவர் திருநாள் தைப்பொங்கலன்று மாற்றப்பட்டது.  அது ஏற்கனவே விடுமுறை நாள் என்பதால், அதற்கடுத்த தை 02ஆம் நாள், திருவள்ளுவர் திருநாளுக்கான விடுமுறையானது. இறுதியில், அரசியல் - கட்சி வேறுபாடுகளால், கா.பொ.இ அஞ்சியதே வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது!
 
மலர்ந்தது திருவள்ளுவர் ஆண்டு!
இதே காலத்தில் தான், தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு இருக்கவேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டு வந்தது. திருவள்ளுவர் திருநாள் தை முதலாம் திகதியாக அமைந்துவிட்டதாலும், வெளிப்படையாக எவ்வித மதச்சார்பும் இல்லாமல் திருக்குறளைப் படைத்த அவர் பெயரிலேயே "திருவள்ளுவர் ஆண்டு" என்ற ஆண்டுக்கணக்கை தை ஒன்றில் ஆரம்பிக்கலாம் என்றும் சோமசுந்தரபாரதியார் முதலியோர் முன்மொழிந்திருந்தனர். ஏற்கனவே மறைமலையடிகள், "திருவள்ளுவர் பிறந்தது கி.மு 31" என்று முடிவுசெய்திருந்தார். எனவே தமிழ் ஆண்டுக்கணக்கு கிரகோரியன் ஆண்டு + 31 என்று ஆனது. 1971இல் இதைத் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. 1981இல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்,  மதுரையில் இடம்பெற்ற உலகத்தமிழ் மாநாடு தொடர்பான சகல அரச ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார். அதையடுத்து நாட்காட்டிகளிலும் பஞ்சாங்கங்களிலும்  திருவள்ளுவர் ஆண்டு இடம்பெற்றது. தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு பிறந்த கதை இது தான்!
 
இன்னும் சந்தேகம் தீராதவர்கள் நேரடி ஆதாரங்களையே மின்னூலாகப் படித்துப் பார்க்கலாம்:
 
 
என்னென்ன சாதகங்கள்?
தமிழருக்கென ஒரு ஆண்டுக்கணக்கு இருப்பது, தமிழின் தனித்துவத்துக்குச் சிறப்பானதே. உலகின் பெரும்பாலான சமூகங்கள், தம் மதம் சார்ந்து அல்லது தம் இனம் சார்ந்து தத்தமக்கென தனித்துவமான ஆண்டுக்கணக்கைக் கொண்டிருக்கின்றன. உலகின் பழம்பெரும் இனக்குழுமங்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருக்கு ஒரு ஆண்டுக்கணக்காக திருவள்ளுவர் ஆண்டு முன்னிலைப்படுத்தப்படுவது பொருத்தமானது தானே?
 
பாதகங்கள் ஏதும் இருக்கின்றனவா?
 
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று - முப்பெரும் பாதகங்கள் இருக்கின்றன.
 
ஒன்று, மறைமலையடிகள் கணித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு முற்றிலும் வரலாற்று பூர்வமானதல்ல. கி.மு 31 வள்ளுவர் பிறந்தார் என்று அவர் முன்வைக்கும் கருத்துக்கு எவ்வித புறச்சான்றுகளும் இல்லை. ஒரு இனக்குழுமத்தின் ஆண்டுக்கணக்கானது, எவ்வித புறச்சான்றுகளும் இல்லாத ஒரு ஆண்டைத் தன் முதல் ஆண்டாகக் கைக்கொள்வது சரி அல்ல.
 
இரண்டு, தைப்புத்தாண்டு! திருவள்ளுவர் ஆண்டால் விளைந்த முக்கியமான பாதகம் இது! 2000களில் மிக வலுவாக தைப்புத்தாண்டு கோஷமிட்டவர்கள் முன்வைத்த வாதங்களின் அபத்தத்தை எல்லோரும் அறிவார்கள். திருவள்ளுவர் திருநாளுக்காக 1935இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூட்டப்பட்ட கூட்டம், 1921இற்கு மாற்றப்பட்டது. "திருவள்ளுவர் பிறந்தது கி.மு 31இல்" என்று கூறிய மறைமலையடிகள், திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை அறிமுகப்படுத்தியவராக சுட்டிக்காட்டப்பட்டார். மறைமலையடிகளும், ஏன், ஈ.வெ.ராவுமே கூடக் கலந்துகொண்டதாகச் சொல்லப்படும் வைகாசி அனுசத் திருவள்ளுவர் திருநாள், தைப்பொங்கலன்று நடந்ததாக மாற்றப்பட்டது! இத்தனையும் பரவாயில்லை, ஈழத்தமிழறிஞர் கா.பொ.இ.யின் குரலுக்கு செவிசாய்த்து 1953இல் திருவள்ளுவர் திருநாள் கொண்டாட ஆதரவு தெரிவித்த எல்லாத் தமிழறிஞர்களுமே "ஆரியர் திணித்த புத்தாண்டுக்கெதிராக தைப்புத்தாண்டு கொண்டாட" சம்மதம் தெரிவித்தவர்களாக சோடிக்கப்பட்டார்கள்!
 
இத்தனைக்கும் மேற்படி திருவள்ளுவர் புத்தாண்டின் வரலாற்றைச் சொல்லி, "திருவள்ளுவர் என்று பிறந்தார் என்றே தெரியாது. ஆனால் வைகாசி அனுசத்தை விட தை முதல் நாளில் கொண்டாடுவதே பொருத்தம். அவர் பெயரிலுள்ள  புத்தாண்டையும் அதே நாளிலேயே தொடங்குவோமே" என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை! அண்டப்புளுகு, ஆகாசப்புளுகைச் சொல்லி, அவர்கள் இந்த ஆதரவை பெருக்கிக்கொள்ள நினைத்தது தான் ஏன்? வெறும் அறுபது ஆண்டுகளில் வரலாறு எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது!
 
மூன்றாவது பாதகம், தை முதலாம் திகதி, தமிழர் தனித்துவம் என்ற ஆண்டுக்கணக்கையே ஆட்டம் காணச்செய்கின்றது!. போதுமான ஒப்பீட்டியல் ஆய்வுகள் நிகழாத ஐம்பதாண்டுகளுக்கு முன், தைப்பொங்கலை தமிழர் திருநாள் என்று நம்மவர் சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இன்றும் அதைச் சொல்லலாமா? தமிழருக்குச் சிறப்பானது, மதம் சாராதது என்பதால் தானே தைப்பொங்கலை 'தமிழர் திருநாள்' என்ற பெயரில் முன்வைத்தார்கள்! மதம் சாரா என்பது சரி. ஆனால் அது தமிழருக்கு மட்டுமே உரியதா? இமாச்சல - உத்தர பிரதேசப் பகுதிகளில் "லோஹ்ரி", வங்கத்தில் "கங்கா சாகர் மேளா", பஞ்சாபில் "மகி", தெலுங்கு - கன்னட நிலங்களில் "மகர சங்கிராந்தி" என்றெல்லாம் கொண்டாடப்படும் தை முதலாம் திகதியை, எப்படி தமிழருக்கே மட்டும் தனித்துவமான ஒரு நாள் என்று சொல்லமுடியும், கூறுங்கள்?
 
என்ன தான் செய்வது?
இப்போது நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி, திருவள்ளுவர் ஆண்டின் எதிர்கால வகிபாகம் என்ன என்பது தான். எந்த அறிவியல் பூர்வமான சான்றுமற்ற “கிரகோரியன் + 31”  என்ற சூத்திரத்தை, இந்த அறிவியல் யுகத்தில் ஒரு பழம்பெருமை மிக்க  இனக்குழுமம் தன் நாட்காட்டியாக அறிவித்துக்கொள்வது அழகல்ல. ஆனால், தமிழரின் ஆண்டுத்தொடருக்குப் பெயர் கொடுக்கக்கூடிய எல்லாத்தகுதியும் வள்ளுவருக்கு உண்டு. வள்ளுவரோ, அவர் சார்ந்த எந்தவித தொன்மங்களோ கூட தொடர்புறாமல், தமிழரின் ஆண்டுக்கணக்குக்கு அவரை முன்னிறுத்துவதும், திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்டுவதும் பொருத்தமானதே! ஆனால், எந்த ஆண்டிலிருந்து அந்தத் தமிழ் ஆண்டுக்கணக்கைத் தொடரலாம்?
 
தமிழர் புத்தாண்டு சித்திரையே என்பதற்கான போதுமான சான்றுகள் இப்போது பொதுவெளிக்கு வைக்கப்பட்டு விட்டதால், அன்று தான் திருவள்ளுவர் ஆண்டு துவங்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது! தைப்புத்தாண்டு பற்றிய இறுதி நம்பிக்கையும், மேற்படி திருவள்ளுவர் ஆண்டின் வரலாறு மூலம் சுக்குநூறாவதால், "அதைக் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்" என்று சொல்லிக் கடந்துசெல்ல முடியாது. தமிழர் ஆண்டுக்கணக்கைத் திருத்த தமிழ் சார் அமைப்புகள் கூடிய விரைவில் ஒன்றுகூட வேண்டும். (நடக்கும் காரியமா அது? 😟)
 
கல்வெட்டு அல்லது குகை ஓவியம், பிராமிச்சாசனம் எதுவும் ஆகட்டும் -  தமிழ் சார்ந்த மிகப்பழைய தொல்பொருளாக இன்று இனங்காணப்படும் பொருள்  எதுவோ, அதன் ஆயுளை காபன் திகதியிடல் மூலம் அல்லது, சமகால முன்னேற்றகரமான ஒரு  தொழிநுட்பம் மூலம் காலம் கணித்து, அன்றிலிருந்து திருவள்ளுவர் ஆண்டைத் தொடரலாம். எதிர்காலத்தில் அதைவிடப் பழைமையான தமிழ் சார் தொல்பொருள் கிடைத்தாலும் இதை மாற்றவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இது வெறுமனே சொல்லப்படும் "கிரகோரியன் + 31"ஐ விட, நம்பகரமானது, ஆதாரபூர்வமானது.
 
கிறிஸ்துவுக்குப் பின்பு தான் அது காலம் காட்டுகிறது என்றால் கூடத் தயங்கத்தேவையில்லை. நமக்குத் தேவை ஒரு ஆதாரபூர்வமான ஒரு ஆண்டுக்கணக்கு. அது நாம் நம் வரலாற்றின் அதிகுறைந்த எல்லையிலுள்ள எச்சத்துக்கு நாம் கொடுக்கும் கௌரவமாக இருக்கட்டும். அது ஏனைய ஆண்டுக்கணக்குகளுடன் ஒப்பிட்டு  கூடவா குறையவா என்றெல்லாம்  ஆராய்ந்து நாணத் தேவையில்லை.  தமிழர் குறைந்தது கி.மு 4ஆம் நூற்றாண்டுக்கு முந்திய இனக்குழுமத்தினர் என்பது வரலாறே சொல்லும் உண்மை!
 
அதுவரை, சாதகங்களை விட பாதகங்கள் அதிகமான, இன்றைய திருவள்ளுவர் ஆண்டின் பாவனையைத் தவிர்த்து அல்லது மட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். இயன்ற விரைவில் இதற்கான பதிலை தமிழ்ச்சமூகத்துக்கு, தமிழறிஞர் அமைப்புக்கள் சொல்லியே ஆகவேண்டும் என்று கோருவதைத் தவிர, நம்மால் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை!


உசாத்துணைகள்:
1. கணேசன், நா (5 மே 2012). "திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்". குமரிநாடு.நெற்.  2 சனவரி 2018 அன்று http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=2665:2012-05-04-16-32-54&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71 இலிருந்து மீள்விக்கப்பட்டது.

2. தியாகராஜன், சாமி (15 மே 2014). "வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்". Vedic Science Research Centre. பார்த்த நாள் 2 சனவரி 2018 அன்று http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/435-2014-07-23-19-11-29 இலிருந்து மீள்விக்கப்பட்டது.


3. Thiagarajan, Sami. and Gauthaman, Bala., (28 December 2014), "Thiruvalluvar Birth Anniversary Celebrations: Heralding a glorious future" Retrieved from http://indiafacts.org/thiruvalluvar-birth-anniversary-celebrations-heralding-glorious-future/ on 3rd January 2018.


4. 14,15ஆம் ஆண்டறிக்கை (1956-57),  மற்றும் 16,17ஆம் ஆண்டறிக்கை, (1958-59), கொழும்புத் தமிழ்ச்சங்கம்.


5. விசுவநாதம், கி.ஆ.பெ, (1984). "எனது நண்பர்கள்", பப.8-51


6. விசுவநாதம், கி.ஆ.பெ, (1953) “வள்ளுவரும் குறளும்”, ப.13


(உவங்கள் இதழில் [சனம் 02 ஆள் 01] வெளியான கட்டுரை)



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்

 

இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம். எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர்.

 


23.11.1952 இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகச் சார்பில் உலகத் தமிழர்கள் மத்தியில், அரும்பாடுபட்டு, வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டி அதில் வெற்றியும் பெற்றார் திரு. இரத்தினம் அவர்கள்.

 


திரு. இரத்தினம் அவர்களின் வேண்டுதலைக்கு உடன்பட்டு அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பெருமக்களில் சிலர்.

 

1. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
”தாங்கள் முடிவு செய்த குறிப்புப்படியே வைகாசி அனுடத் திருநாளில் கொண்டாடுவதற்குத் தடையில்லை” (13.2.53)

 

2 .நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
”தமிழுக்கு மாட்சி தருவது குறளை ஆக்கிய புலவர் பெருநாள்” (1.4.54)

 

3. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
”மாசி உத்தரத்தை அடைந்த குருபூசைத் தினமாகக் கொண்டாடுவதில் தங்களுக்கும் பிறருக்கும் அபிப்பிராய பேதமில்லாத போது வைகாசி அனுடத்தை அவதரித்த தினமாகக் கொண்டாடுவதில் நிறையன்றிக் குறையொன்றுமில்லையே” (13.6.53)

 

4. பெங்களூர் மத்திய கல்லூரிப் பேராசிரியர் எஸ். உருத்திரபதி எம்.ஏ
”தங்கள் முயற்சியானது மிகவும் சாலப் பொருத்தமான நன் முயற்சியாகும்” (19.7.54)

 

5. பாலம்கோட்டைப் புனித சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் திரு. ஆ, அருளப்பன் பி.ஏ.,
”1935 முதல் வைகாசி அனுடநாள் அந்நன்னாளாக அமைந்து விட்டது எனலாம். ஆதலின் அதனை நிலைத்திடச் செய்தல் நன்றே” (19.8.54)

 

6. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை
”திருவள்ளுவர் திருநாள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வைகாசி அனுடத்திலேதான் நடைபெறுகிறது” (24.2.54)

 

7. திரு. ம.பொ. சிவஞான கிராமணி
”வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதில் நானும் தமிழரசு இயக்கத்தாரும் பரிபூரணமாக ஒத்துழைப்போம்” (15.3.54)

 

8. வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
”தங்கள் தொண்டு பெரிதும் பாராட்டுதற்கு உரியதாகும்”(20.3.54)

 

9. டாக்டர். மா. இராசமாணிக்கனார்
”திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டம் மிகப் பாராட்டத்தக்கது. தங்களது பெருமுயற்சிக்கு எனது வாழ்த்தும் ஒத்துழைப்பும் உரியதாகுக” (12.3.54)

 

10. சித்தாந்த சிரோன்மணி சி.எஸ். கந்தசாமி முதலியார்
”தங்கள் கழகத்தின் பெருமுயற்சியால் வள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுடநாள் என்பது உறுதியாய் நிலைபெற்றுவிட்டது. “(16.3.54)

 

11. கவியோகி சுத்தானந்த பாரதியார்
”முயல்க முயல்க முயல்க மேன்மேலும்
பயன்களை வைத்தீசன் பதம்” (15.3.54)

 

12. புலவரேறு அ. வரத நஞ்சையன்
”தங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஒழுக எம் போல்வார் பெரிதும் கடப்பாடுடையவர்களேயாவர்”(12.3.54)

 

13. பாலகவி வயிநாகரம் வே. இராமநாதன் செட்டியார்.
”மயிலை திருக்கோயிலில் திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடப்பெற்று வருவதொன்றே தங்கள் கருத்துக்குப் போதிய சான்றாகும்” (விசய. மாசி.30)

 

14. டாக்டர். மு. வரதராசன்
”தங்கள் முயற்சியைப் போற்றுகிறேன்.
ஆக்கம் அதர்வினாய்ச் சேர்வதாக” (17.3.54)

 

15. புலவர். சி. இலக்குவனார்
”தங்கள் வேண்டுகோளின்படி மே 18இல் (வைகாசி 3இல்) திருவள்ளுவர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம்” (23.3.54)

 

16. பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன்
”இந்நாட்டில் இயற்கையாகவே வைகாசி அனுடத்தில் இந்நாள் பலராலும் கொண்டாடப் பெறுகிறது (6.3.54)

 

17. சுவாமி சித்பவானந்தா
”தாங்கள் எடுத்துள்ள முயற்சி மிக மேலான முயற்சியாகும். இது நன்கு நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” (13.3.54)

 

18. திரு. கி.வா. ஜகந்நாதன்
”குறள்நூலை வேதமெனக் கொண்டுதிரு வள்ளுவரைக்
கொண்டாடற்குத்
திறமுறுநாள் வைகாசி அனுடமென மரபறிந்து
சிறப்ப ஏற்றே”…... (26.5.54)

 

19. இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்
”திருவள்ளுவர் திருநாளை மிக்க சிறப்போடு நடத்துகிறீர்கள். என் சந்தோஷத்தைத் தங்களுக்கும் மற்றத் தொண்டர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.” (28.1.53)

 

20. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
”தங்கள் அருமுயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்”
பட்டியல் நீளச் செல்லும் ஆதலின் இதுபோதும் எனவிடுத்து மேலே செல்வோம்.

 


பண்டிதர் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கருத்துரைத்த பத்திரிக்கைகள் சில:
1. கல்கி- ஏப்ரல் 12 – 1958
”மகான்களுடைய திருநாட்களை கொண்டாடவேண்டியது அவசியம்” என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்படும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”

 

2. செந்தமிழ்ச்செல்வி – வைகாசி, 1953
“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை(அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”

 

3. ஆத்ம சோதி – வைகாசி 1953
“திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதில் எல்லாரது கவனத்தையும் கருத்தையும் ஒரு நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது நற்பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வித விழாவிற்கும் பெரும்பாலார் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுடமே பொருந்தியதெனலாம். மாசி உத்தரத்தை வள்ளுவர் பரகதியடைந்த நாளாகப் பாவிப்பதில் குற்றமொன்றில்லை”

 

4. குமுதம் – 20.4.54
“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்”

 

5. திருவள்ளுவர் – மே, 1953
“மறைமலையடிகளார் போன்ற பேரறிஞர்கள் பலரும் வைகாசி அனுடத்தையே துணிந்துள்ளார்கள். ஆதலின், வரும் வைகாசி அனுடமே பொருந்துமெனக் கொள்கின்றோம்.

 

6. தமிழோசை – ஏப்ரல் 1954 (சிங்கப்பூர்)
“வள்ளுவர் பெருந்தகையின் திருநாள் வரும் வைகாசித் திங்கள் 5 ஆம் (18.5.54) நாளாகும். இத்திருநாளைத் தமிழரனைவரும் தத்தம் இல்லங்கள், கழகங்கள், சங்கங்கள், கல்விச்சாலைகள் தோறும் கொண்டாடுக. இன உணர்ச்சி கொண்டு இணைந்து நின்று எழுச்சி கொள்க”

 

7. குறள் மலர் 12.3.54
“ஒரு பெரியாரை உலக அறிஞரை எப்போது எம்முறையில் கொண்டாடினால்தான் என்ன? [இந்த வினாவிற்குக் கல்கி நல்ல விடைதருகிறது]

 

8. தர்ம சக்கரம் – சித்திரை 1953 – சித்திரை 1954
“உலகத்தில் உள்ளவற்றுள் தலைசிறந்த இலக்கியமாகிய குறள் தமிழிலே இருப்பதும் அதனையாத்த பெரியோன் தமிழ் மகனாக இருப்பதும் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் தனிப்பெருமையாகும். இப்பெருமைக்குப் பாத்திரமாகத் தம்மை ஆக்கிக் கொள்வதற்குரிய வழி தமிழர் தாம் வாழும் மூலை முடுக்குகளிலெல்லாம் வள்ளுவர் விழாக் கொண்டாடுவதாகும். ஆகவே, இவ்வாண்டு வைகாசித்திங்கள் ஐந்தாம்நாளாகிய (18.5.54) திருவள்ளுவர் திருநாளை எல்லா இடங்களிலும் எல்லாரும் கொண்டாடவேண்டும்”

 

9. கலைமகள் – வைகாசி 1952
”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டியதுதான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக் ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”

 

10. சமூகத் தொண்டன் – 13.4.58
“28.5.53 திருவள்ளுவர் திருநாள். இந்த நாளை எல்லா நிலையங்களிலும் கொண்டாடித் தமிழினத்தின் வாழ்க்கை பொங்கி வழிய வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம்.” மேலும் சுதந்திரன், தமிழ்நாடு, தினமணி கதிர் முதலிய பத்திரிகைகள் ஆசிரியருரை, குறிப்புரை எழுதியுள்ளன. காவேரி, குமரகுருபரன், சங்கப்பலகை, சித்தாந்தம், செங்கோல், செட்டிநாடு, திருப்புகழமிர்தம், திராவிடநாடு, திராவிடன், தினமணி, தொண்டன், விந்தியா, அமுதசுரபி, மாணவர் சோதி, உதயம், தமிழ்முழக்கம், ஈழகேசரி, தினகரன், தமிழ்முரசு, தமிழ்நேசன், ஆகிய பத்திரிக்கைகள் திரு. இரத்தினம் அவர்கள் கண்ட கழகத்தின் அறிக்கைகளை வெளியிட்டு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளன.

 

இவற்றில் ஒன்றான திராவிடநாடு அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ் என்பது கவனத்திற்குரியது.

 

அடுத்து, தமிழ்மறைக் கழகத்தின் வேண்டுதலை ஏற்று வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய சங்கங்கள், சபைகள், மன்றங்கள் ஆகியவற்றில் சில

 

இலங்கை
1. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம்
2. கொழும்பு சைவ மங்கையர் கழகம்
3. கொழும்பு விவேகானந்த சபை
4. இலங்கை வானொலித் தமிழ்க் கலை மன்றம்
5. கொழும்பு, திருவள்ளுவர் நாடக சபா
6. நெல்வீதி, அரசினர் மத்திய சல்சாரித் தமிழ்மன்றம்
7. பாரதி கழகம்
8. உனுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கம் – என 65 அமைப்புகள் இலங்கையில் கொண்டாடியுள்ளன.

 

இந்தியா
1. திருவள்ளுவர் ஆலயம், மயிலாப்பூர்
திரு. சி, இராசகோபாலாச்சாரியார், திரு ஓ.பி. இராமசாமி செட்டியார், திரு. சி.நரசிம்மன், திரு.ஆ.கசபதிநாயகர். திரு.வி.சி. பழனிச்சாமி கவுண்டர், திரு.சி. சுப்ரமணியம், திரு. எம் மாணிக்க வேலு ஆகியோர் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் சொற்பொழிவாற்ற வைகாசி அனுடநாளைக் கொண்டாடியுள்ளனர்.
2. தியாகராய நகர் திருவள்ளுவர் கழகம்
3. தென்காசித் திருவள்ளுவர் கழகம்
4. புதுச்சேரி மங்கள கான சபா
5. புதுக்கோட்டை திருக்கோகரண நிலையம்
6. சென்னைத் திருவள்ளுவர் மன்றம்
7. குன்னூர் பாரதி பழஞ்சிக வாலிபர் மன்றம்
8. தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம்
9. தியாகராய நகர் இந்திப் பிரச்சார சபை
10. மதுரை திருவள்ளுவர் கழகம் –இப்படியாக பல ஊர்களில் வைகாசி அனுடநாளில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடியுள்ளனர்.

 

குண்டக்கல், சித்தூர், கல்கத்தா, பம்பாய், பெங்களூர், ஆகிய இந்திய மாநிலத்தலைநகர்களில் விழாக் கொண்டாடியுள்ளனர்.

 


அகில பர்மாத் தமிழர் சங்கச் சார்பில் பர்மாவிலும், கோலாலம்பூர், சமயப் பிரச்சார சபை, மலாயா தமிழ்ப் பண்ணை சிலாங்கர் கிளை, மலாயா தமிழ் இளைஞர் சங்கம், சிறம்பான் தமிழ்ப் பண்ணைக்கிளை ஆகியவற்றின் சார்பில் மலாயாவிலும் (மலேசியா) சிங்கப்பூர் தமிழர் சங்கம், சிங்கப்பூர் தமிழர் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சிங்கப்பூரிலும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடியுள்ளனர்.

 


யோகேனஸ்பேக் திருவள்ளுவர் மறைக்கழகம் சார்பில் தென்னாப்பிரிக்காவில் விழாக் கொண்டாடப்பட்டிருக்கிறது. மேலும், டர்பன் டிரான்ஸ்வால் முதலிய இடங்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது.

 


மிகவும் விரிவான செய்திகள் அடங்கிய ஒரு வரலாற்றை மிகச் சுருக்கி இங்கே தந்துள்ளேன். இலங்கைத் தமிழராகிய பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் உழைப்பையும், உறுதியையும் எண்ண வியக்காமல் இருக்க முடியாது. 52-இல் கழகம் கண்டு 53 மற்றும் 54 ஆம் ஆண்டுகளில் உலகத் தமிழர்கள் அனைவரையும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட வைத்த அந்த மாபெரும் மனிதனை மனத்துள் வைத்தும் பூசிப்பதைத் தவிர அவருக்கு வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

 


ஈதெல்லாம் சரி! திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக முன்வைத்தாரா? அல்லது அவருக்கு முன்னவர்கள் கொண்ட வழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என வலுயுறுத்தினாரா?

 





__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

வைகாசி அனுடம் என்பது அவரது சொந்தக் கருத்தன்று. அவருக்கு முன்னவர்கள் கொண்ட கருத்து, கடைப்பிடித்த ஒழுக்கம். அப்படியாயின் அதனை எங்கிருந்து கொண்டார்? அதனைத் தெரிந்து கொள்வோம்.

 


சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் ஒன்று இருப்பதை யாவரும் அறிவர். அந்தக் கோயிலைப் பற்றி மறைமலை அடிகள் பின்வருமாறு கூறியுள்ளார். “இன்றும் அவ்விலுப்பை மரமும், அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவம் நிறுத்திய திருக்கோயில் ஒன்றும் திருமயிலையில் இருக்கின்றன”

 


1837 ஆம் ஆண்டிலே திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயர் பதிப்பித்த திருக்குறள் பதிப்பிலும் இக்கோயிலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

 


ஏறக்குறைய 230 ஆண்டுகட்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த “எல்லீஸ்துரை” அவர்களும் இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

 


சுமார் 600 ஆண்டுகட்கு முன்பு இத்திருக்கோயில் தோன்றியிருக்கலாம். என்பதும், மறைமலை அடிகள் குறிப்பிடும் சடாமுடியுடன் கூடிய சிதைந்த திருவுருவம் திருவள்ளுவருடையதே என்பதும் தொல்லியல் ஆய்வறிஞரான திரு. இராமச்சந்திரன் அவர்களது கருத்தாகும்.

 


இந்தத் திருவள்ளுவர் கோயிலில், திருவள்ளுவர் அவதார நாளாக வைகாசி அனுடமும் அவர் அடைந்து போன நாளாக மாசி உத்தரமும் கடைப்பிடிக்கின்றன. அதற்கான பூசைகள் நடைப்பெற்று வருகின்றன. தற்போது இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் பார்வையில் இருந்து வருகிறது.

 


இந்த நிலையில் 80 ஆண்டுகட்கு முன்பு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின் சென்னைப் பொறுப்பாளாராக இருந்த “பத்மஸ்ரீ. திரு. வ. சுப்பையாபிள்ளை” அவர்கட்கு ஓர் எண்ணம் உருவானது. அந்த எண்ணத்தை அவர் நண்பர் திரு. காழி. சிவகண்ணுசாமி பிள்ளையுடன் பகிர்ந்து கொண்டதின் பயனாக அவ்விருவரும் சேர்ந்து 17.01.35 அன்று ஒரு முடிவு செய்தனர்.

 

அந்த முடிவு எது?
உலகம் முழுவதும் போற்றிக் கொண்டாடும் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கென குறிப்பிட்ட நாளில் விழா எடுத்துச் சிறப்பிக்க வேண்டி “திருவள்ளுவர் திருநாட் கழகம்” என்னும் பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கவேண்டும் என்பதே அந்த முடிவாகும்.

 


அந்த முடிவின்படி வித்துவான் பாரிப்பாக்கம் உண்ணப்ப முதலியார், தமிழ்ப்புலவர் சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், திரு. காழி சிவ கண்ணுசாமிபிள்ளை, பி.ஏ; திரு. எம். பாலசுப்பிரமணியம் எம்.ஏ, திரு.T.செங்கல்வராய பிள்ளை பி.ஏ.எல்.டி; திரு.வ.சுப்பையா பிள்ளை, திரு.C.M. கோவிந்தராஜ முதலியார் ஆகிய எழுவரையும் கொண்ட ஓர் இயக்குநர் கழகம் முதலில் தொடங்கப்பட்டது.

 


இந்த இயக்குநர்களும், இவர்களால் தெரிவு செய்யப்பட்ட செயலுறுப்பினர்களும் சேர்ந்து சென்று, பெரும்புலவர் பேராசிரியர் திரு. கா. நமச்சிவாய முதலியார் அவர்களைச் சந்தித்துத் திருநாட் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டினர். அவர்களும் இவர்கள் வேண்டுதலை ஏற்றுத் தலைவராக இருக்க இசைவு தெரிவித்தனர். இவ்வாறு திருவள்ளுவர் திருநாட்கழகம்” முழுமையாக உருப்பெற்றது.

 


திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் திருவள்ளுவர் திருநாளை 1935 ஆம் ஆண்டு மேத்திங்கள் 18,19 ஆம் நாட்களில் சென்னையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும், இவ்விழாவினைக் கொண்டாட ஏற்பாடு செய்வது என்றும் முடிவெடுத்து அதற்கென மூன்று மாதங்கள் கடுமையாக உழைத்தனர்.

 


1935 மேத்திங்கள் 18 ஆம் நாள் அனுடநட்சத்திர நாள் அந்த நாளில் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலைச் சேர்ந்து திருவள்ளுவர் திருமேனிக்கு நீராட்டி பூச்சூட்டி பூசைகள் செய்து வழிபாடாற்றினர்.

 


விழாப் பொதுக்கூட்டம் மே,18, 19 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூடியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 


திருநாட் கூட்டத்தில் பங்கு பற்றியோர், கலந்து கொண்டோரில் முக்கியமான பெரியோர்கள்.

 


பொதுக்கூட்டத் தலைவர் மறைமலை அடிகள், திருநாட்கழகத் தலைவர் கா. நமச்சிவாய முதலியார், ச.சச்சிதானந்தம்பிள்ளை, B.தாவூத்ஷா, E.T. இராஜேஸ்வரி அம்மாள், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன், சிவ. அருணகிரி முதலியார், மா. பாலசுப்பிரமணிய முதலியார், சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், மணி. கோட்டீச்சுர முதலியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, T.செங்கல்வராய பிள்ளை, காழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, R.S. சாம்பசிவ சர்மா, வ. சுப்பையா பிள்ளை, நின்றை தங்கவேலு முதலியார்.

 


சென்னை அரசாங்க மந்திரியாயிருந்த உயர்திரு. எல். முத்தைய முதலியார், திவான் பகதூர், தெய்வசிகாமணி முதலியார், செ. தெய்வநாயகம் பிள்ளை முதலியோர் உள்ளிட்ட பல பெரியவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

 


இந்த இருநாட் பொதுக்கூட்டம் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடும் முகத்தான் கூடிய கூட்டமே தவிர, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றியது அன்று என்பதை வாசகர்கள் அன்பு கூர்ந்து நெஞ்சில் நிறுத்த வேண்டுகிறேன். பிறந்த நாளையும், பிறந்த ஆண்டையும் சேர்த்துப் பின்னை குழப்பில் போட்டார்கள். அந்தக் குழப்பம் இங்கே வேண்டாம்.

 


1935 மேத் திங்கள் 18,19 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. அவற்றில் இன்றியமையாச் சில இடங்கள்

 

1. சென்னை திருமயிலாப்பூர் திருவள்ளுவர் திருநாட் கோயில் தருமகர்த்தர் திரு. சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையில் கொண்டாட்டம்

 

2. சென்னை இராயபுரம் திவான்பகதூர் திரு. A.இராமசாமி முதலியார் தலைமை

 

3. சென்னை, ஏழுகிணறு வாலிப சங்க ஆதரவில் 24, ஏழுகிணறு தெருவில் திரு. சி.என் அண்ணாதுரை தலைமை

 

4. கோயம்புத்தூர், கோவைத் தமிழ்ச் சங்க ஆதரவில் திரு. சி.எம். இராமச்சந்திர செட்டியார் தலைமை.

 


பெங்களூர், பெல்லாரி, புதுச்சேரி, தஞ்சை, திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, எனப்பல ஊர்களில் விழா நடைபெற்றது.

 


1935 ஆண்டிற் போலவே 1936 ஆண்டில் வைகாசி அனுடநாளைச் சென்னை திருநாட்கழகம் நடத்தியது. அந்நாள் விழாவிற்குத் தலைமையேற்றவர் டாக்டர். உ.வே. சாமிநாதையர். தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் அக்காலம் சென்னைத் திருநாட்கழகத் தலைவராக இருந்த திரு.வி.க அவர்கள். கோவையில் துடிசைக்கிழார் அ.சிதம்பரனார் தலைமையேற்றனர். 1937இல் திருவள்ளுவர், திருநாட்கழகத்தின் விழா பாசனேரியில் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்தது.


இவ்வாறு வைகாசி அனுடநாளில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் காலப்போக்கில் தமிழ்நாட்டு வழக்கப்படி வலிமை குன்றி வழக்கொழிந்தது. இந்தப்படிக்கு வழக்கு ஒழிந்து போன அந்த நாள் விழாவினைத்தான் 17 ஆண்டுகள் கழித்து 1952இல் மீண்டும் புதுப்பித்து உலகம் முழுவதும் கொண்டாட வகைச் செய்தார் பண்டிதர் கா.பொ. இரத்தினம்.


1935இல் தொடங்கி 1940 முடிய திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடியதை எவரும் மறுக்கவில்லை. ஈ.வே.ரா. பெரியார், சி.என். அண்ணாதுரை, சர்.பி.டி.இராசன், ஆ.கசபதி நாயகர் முதலிய பெரியோர்களும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.


வைகாசி அனுடநாளைப் பண்டிதர் மீளக்கொண்ட காலத்தில் 1953இல் திருச்சி வானொலி நிலையத்தார் ஏற்படுத்திய அனுடநாள் விழாவில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையில் பண்டிதருடன் சேர்ந்து கலந்து கொண்ட திருச்சி. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், 1954 இல் தை முதல் நாளில் திருவள்ளுவர் விழாக் கொண்டாடலாம், அவ்வாறு சிலர் கொண்டாடுகின்றனர் எனப் பண்டிதருக்கும் பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.


திரு. கி. ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் கடிதத்திற்குப் பண்டிதர் எழுதிய பதில் கடிதத்திலிருந்து திருச்சி சென்னை வானொலி நிலையத்தாருக்கு கி.ஆ.பெ அவர்கள் தை முதல் நாளில் திருவள்ளுவர் பற்றி விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என எழுதியதை வானொலி நிலையத்தார் ஏற்காமல் பண்டிதர் வேண்டுதலை ஏற்று 1954இல் வைகாசி அனுடத்தில் விழாவிற்கு மறுதலைக் கொள்கைக்கு காரணம் என்பது தெரியவருகிறது.

 


“அன்பர் விசுவநாதம் கேட்க மறுத்துவிட்டு யாம் கேட்க அவை (சென்னை திருச்சி வானொலி நிலையங்கள்) உடன்பட்டன என்றால் அதற்குரிய காரணத்தை ஆராய்ந்து அதை நீக்க முயற்சித்தல் அவர் கடன். இதைவிடுத்துத் தோல்வி மனப்பான்மையைக் காட்டுதலும், பிறர் மேல் சந்தேகப்படுதலும் பொருத்தமற்றன. அரசியற் கட்சி வேறுபாடுகளைத் திருவள்ளுவர் திருநாளுடன் மோதச் செய்யாதிருக்குமாறு தமிழ்மக்கள் யாவரையும் வேண்டிக்கொள்கிறோம்” – கடிதத்தின் ஒரு பகுதி இது.

 

பண்டிதர் அவர்கள் மேலும் தமது கடிதத்தில் “தமிழகத்திலே தை முதல் நாளைச் சிலர் கொண்டாடுகிறார்கள் என்பதை அன்பர் விசுவநாதம் இப்பொழுது தான் கூறுகிறார் என்றும்; வைதிகக் கொள்கை, தனித்தமிழ்க் கொள்கை, திராவிடக் கொள்கை முதலிய பல கொள்கைகளையுடைய பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தமை எமக்கு பேரூக்கத்தை தந்தது என்றும்; ஒருவரேனும் வைகாசி அனுடத்தை விட்டுவிட்டுத் தைமாதம் முதல் நாளைக் கொண்டாடவேண்டும் என்று எமக்கு எழுதவும் இல்லை” என்றும் எழுதியுள்ளார்.

 

இதற்கு மேலும், அக்காலத்தில் 1935இல் தமிழ்நாட்டிலிருந்த தமிழ்ப் பேரறிஞர்கள் யாவரும் சாதி, மத அரசியற் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல கட்சித் தலைவர்களும் பெரியார். ஈ.வே இராமசாமிநாயக்கர், அறிஞர்.சி,என். அண்ணாத்துரை முதலியோரும் கூட அவ்வாண்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டனர்.

 

அன்பர் விசுவநாதம் அப்பொழுது அந்த விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. அவர் கூறியிருக்க மாட்டார் என்றே நாம் கருதுகிறோம் எனப் பண்டிதர் எழுதியுள்ளார்.

 

அப்பொழுது தை முதல் நாளிலே தான் வள்ளுவர் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்னும் புதுக்கருத்து மரபு வழிவந்த வைகாசி அனுடநாளுக்கு மாறாக தோன்றவில்லை.

 

தமிழினத்துக்குத் தொண்டு செய்கிறோம் என்று கூறுகிறவர்கள் ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டுமேயன்றி, வேற்றுமையை உண்டாக்கும் முறையில் வேசுதலோ, எழுதுதலோ கூடாதென்பதை அன்பர் விசுவநாதம் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

 

நம் முன்னோர்கள் பெருந்செயலைப் பின்பற்றாமலும், சிறந்த மரபதைத் தழுவாமலும், நம்மினத்தின் ஒற்றுமையைச் சிதைத்துப் பழியையும், அழிவையும் தேடிக்கொள்ளும் நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த நிலைமையை மாற்ற இனியாவது யாம் எல்லோரும் முயலல் வேண்டும்” எனப் பண்டிதர் எழுதியுள்ள கடிதம் திரு. கி.ஆ.பெ. போன்று “பகல் விரும்பா பறவைகளாகச்” சிலர் இன்றும் இருந்து கொண்டு நல்ல காரியங்களுக்கு இடையூறாக இருத்தலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

 


தை முதல் நாளில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்பது மரபுக்கு மாறானது. திருவள்ளுவர் ஆண்டை நிலைநாட்டிய மறைமலையடிகள் போன்றோர் கருத்துக்கும் மாறானது என்பது வெள்ளிடைமலை.

 


இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன்பு திருவள்ளுவர் தோன்றினார் என்பது எனது ஆராய்ச்சி முடிவு எனச்சொல்லி திருவள்ளுவர் ஆண்டினை நிலைநாட்டிய மறைமலையடிகளின் கருத்தினை ஏற்றுக்கொண்ட கி.ஆ.பெ.விசுவநாதம், கலைஞர். கருணாநிதி போன்றோர், அதே மறைமலையடிகள் திருவள்ளுவர் பிறந்தநாளாக ஏற்றுப்போற்றிக் கொண்டாடிய வைகாசி அனுட நாளை மறுக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ சுயநலம் கலந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

 


பெரும்பாலும் தை முதல் நாள் பொங்கல் திருநாள் என்பது தான் தமிழ் மக்கள் கொண்டுள்ள வழக்கம். பல காரணங்களுக்காக கொண்டாடப்படும் தைத் திங்கள் முதல் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடச் சரிப்பட்டு வராது எனக்கருதிய தமிழ்நாடு அரசு 70களில் தை இரண்டாம் நாளைத் [அதாவது மாட்டுப் பொங்கல் நாளை] திருவள்ளுவர் தினமாக அறிவித்து இன்றுவரைக் கடைப்பிடித்து வருகின்றது.

 


அரசு தான் அந்த நாளைத் திருவள்ளுவருக்குரியது எனக் கொண்டாடுகிறதே தவிர தமிழ்மக்கள் ஒட்டு மொத்தமாகக் கொண்டாடுகிறார்கள் எனச் சொல்ல முடியாது. திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவர் சிறப்பிக்கப்படுவதில்லை. ஆளும் அரசினர் பல பெரியவர்களின் பெயர்களில் பல விருதுகளையும் பரிசுத் தொகையையும் அறிவித்து அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசு பணத்தை அன்று வழங்குவதைக் கடனாகக் கொண்டுள்ளார்களே தவிர ஒன்றும் அங்கே நடைபெறுவதில்லை.

 


தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் தினத்தில் பல தமிழ்க்குடும்பங்களில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்தல் வழக்கத்தில் இருந்து வருகின்றது. வீட்டுத் தெய்வ வழிபாட்டிற்கென படைக்கப்படும் படையலில் ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, மீன், கருவாடு முதலிய அசைவ பொருட்கள் படைக்கப்படுகின்றன. சில வீடுகளில் கள், சாராயம், சுருட்டு முதலியனவும் வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் எந்த அளவிற்கு திருவள்ளுவருக்கு ஏற்புடையன என்பதை தை இரண்டாம் நாளைத் ”திருவள்ளுவர் தினம்” என அறிவித்தவர்கட்கே வெளிச்சம்!

 


தனித் தமிழ்க் கொள்கையுடையவர் அனுடத்தைப் பனைநாள் எனக் கொண்டு கொண்டாடலாம். நாற்களும், கோள்களும் நமக்காகா எனக்கூறும் பகுத்தறிவாளர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை மறுக்க முடியாது. பழந்தமிழ் மக்களின் கொள்கைகளையும் வரலாறுகளையும் நன்கு அறிந்தவர்கள் சங்ககாலத் தமிழர் நட்சத்திரங்களிலேயே விழாக் கொண்டியுள்ளனர் என்பது உணர்வர். பண்டைத் தலைவர்கள் தாம் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடி வந்தனர் என்பதற்குத் தொல்காப்பியமே சான்று பகிர்கிறது. முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பாடல்களில் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களுக்கும் உரிய சில நட்சத்திரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை தொல்காப்பிய புறத்தினையியல் 36ஆம் சூத்திர உரையில் காணலாம். நட்சத்திரத்தைக் கொண்டாடுவது தான் தமிழ்மரபு என்பதை உணரவேண்டும். நாளைக் கொண்டாடுவது பிறநாட்டார் மரபு.

 


நாள்களையும், கோள்களையும் ஆதாரமாகக் கொண்டு காலத்தைக் கணிப்பதில் நமது முன்னோர் சிறந்து விளங்கினார். அவர்களையே அக்காலத்தில் கணியர்கள் என்றனர். அவர்கள் கண்டுபிடிப்யே “பஞ்சாங்கம்” என இன்று வழங்குகிறது. பஞ்சாங்கத்தை “ஐந்து கேள்வி” எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.

 


தை மாதம் முதல் நாளை மாத்திரமின்றி ஏனைய தமிழ் மாதங்களின் முதல் நாளையும் பஞ்சாங்கம் உதவியின்றி அறிந்து கொள்ள முடியாது என்பதை உள்ளத்தில் கொள்ள வேண்டும். தை முதல் நாள், இரண்டாம் நாள் ஆகிய பொங்கல் நாள்கள் வெவ்வேறு காரணங்களால் போற்றப்படுவதால், வள்ளுவருக்கு மட்டுமே உரியதாகக் கொண்டாடுவதற்கு எனத் தனியே ஒரு நாள் வேண்டும். புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள்நாயகம் போன்றோர்க்கெனத் தனிநாட்கள் அவர்கள் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.

 


அந்த வரிசையில் நமது வள்ளுவரையும் வைத்து அவரின் அவதார நாளாக தனிநாள் ஒன்றைக் கடைப்பிடிக்கவேண்டும். பொங்கல் நாட்களோடு சேர்த்துக் குழப்பக் கூடாது. அந்த வகையிலேதான் வைகாசி அனுட நட்சத்திரத்தைத் திருவள்ளுவருக்குரியது எனக் குறைந்தது 300 வருடங்களாக மயிலைத் திருவள்ளுவர் கோயிலில் கொண்டாடி வருகிறார்கள். இதனை உணர்ந்துதான் மறைமலையடிகள், திரு.வி.க, பெரியார், அண்ணா போன்றோர் நட்சத்திர நாளை உடன்பட்டுக் கொண்டாடியுள்ள்னர். நட்சத்திரத்தைக் கொண்டாடுவது பழந்தமிழர் கொள்கை என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர்.


ஆகவே தமிழ்மக்கள் அனைவரும் எவ்வித மாறுபாடுமின்றி வைகாசி அனுட நாளைத் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வோம்.

 


மாண்புமிகு. கலைஞர் அவர்கட்குப் பணிவான வேண்டுதல்:
ஐயா! தாங்கள் தான் மறைமலையடிகள் கண்டு காட்டிய திருவள்ளுவராண்டைத் தமிழ் மக்களிடையே கொண்டுவந்து காட்டினீர்கள். இன்று அது நிலைத்து விட்டது. ஆனால், அதேபோது மறைமலை அடிகள் மட்டும் அல்லாமல் பெரியாரும், அண்ணாவும் உடன்பட்டுக் கொண்டாடிய திருவள்ளுவரின் அவதாரநாளாகிய அனுடநாளை உடன்படாமல் பொங்கல் நாளைக் கொண்டீர்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பது புதிராகவே உள்ளது. அது பற்றி ஆய்வில் நான் இறங்க விரும்பவில்லை. தாங்கள் அதற்கும் ஒரு விளக்கம் வைத்திருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். தங்கள் பொதுவாழ்க்கையில் தாங்கள் தவறு செய்துள்ளீர்கள் என ஒரு நிகழ்வை தக்க ஆதாரங்களுடன் ஒருவர் எடுத்துக்காட்டினால் அதனை உடன்படாது அதற்கும் ஒரு விளக்கம் தருவது என்பது தங்கள் வழக்கம் என்பதைத் தமிழகம் நன்கறியும். அந்த வகையில் இதற்கும் ஒரு விளக்கம் தராமல் அன்புகூர்ந்து பெரியார், அண்ணா, மறைமலையடிகள், திரு.வி.க. நாவலர் பாரதியார், குன்றக்குடி அடிகளார், கா.நமச்சிவாய முதலியார், டாக்டர்.மு.வ. டாக்டர்.உ.வே.சா., A.இராமசாமி முதலியார் எனத் தங்களுக்குப் பிடித்தமான பெருமக்கள் கண்டு கொண்டு காட்டிய வழியைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் வைகாசி அனுடநாளில் திருவள்ளுவர் திருநாளைத் தமிழர்கள் கொண்டாடவேண்டும் என ஓர் அறிக்கையைத் தாங்கள் வெளியிடவேண்டும் எனத் தங்களை வணங்கி வேண்டுகின்றேன். இவ்வாறு ஓர் அறிக்கையைத் தாங்கள் தந்தால் தங்கள் பெருமை பனையளவு உயருமே தவிர திணையளவு கூடக்குறையாது என்பது திண்ணம்.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கட்குப் பணிவான வேண்டுதல்:
அம்மையீர்! இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து, இனித் தைத்திங்கள் இரண்டாம் நாளில் (மாட்டுப் பொங்கல் நாள்) திருவள்ளுவர் தினம் தமிழ்நாடு அரசால் கடைப்பிடிக்கபடாது அதற்கு மாறாக வைகாசி அனுட நாளிலேயே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படும் என ஓர் அரசாணையை பிறப்பித்து, சென்ற காலத்தின் பழுதிலாதிறத்தை எதிர்காலம் ஏற்கச் செய்யவேண்டும் எனத் தங்களை வணங்கி வேண்டுகின்றேன். இந்த வகையில் தாங்கள் ஓர் அரசாணையைப் பிறப்பித்தால் ஒரு வராலாற்றுப் பிழையைத் திருத்திய புண்ணியம் தங்களைச் சாரும் என்பதுடன் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் தாங்கள் ஓர் அழுத்தமான இடம் பெறுவீர்கள் என்பது உறுதி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard