இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம். எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர்.
23.11.1952 இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகச் சார்பில் உலகத் தமிழர்கள் மத்தியில், அரும்பாடுபட்டு, வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டி அதில் வெற்றியும் பெற்றார் திரு. இரத்தினம் அவர்கள்.
திரு. இரத்தினம் அவர்களின் வேண்டுதலைக்கு உடன்பட்டு அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பெருமக்களில் சிலர்.
1. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
”தாங்கள் முடிவு செய்த குறிப்புப்படியே வைகாசி அனுடத் திருநாளில் கொண்டாடுவதற்குத் தடையில்லை” (13.2.53)
2 .நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
”தமிழுக்கு மாட்சி தருவது குறளை ஆக்கிய புலவர் பெருநாள்” (1.4.54)
3. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
”மாசி உத்தரத்தை அடைந்த குருபூசைத் தினமாகக் கொண்டாடுவதில் தங்களுக்கும் பிறருக்கும் அபிப்பிராய பேதமில்லாத போது வைகாசி அனுடத்தை அவதரித்த தினமாகக் கொண்டாடுவதில் நிறையன்றிக் குறையொன்றுமில்லையே” (13.6.53)
4. பெங்களூர் மத்திய கல்லூரிப் பேராசிரியர் எஸ். உருத்திரபதி எம்.ஏ
”தங்கள் முயற்சியானது மிகவும் சாலப் பொருத்தமான நன் முயற்சியாகும்” (19.7.54)
5. பாலம்கோட்டைப் புனித சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் திரு. ஆ, அருளப்பன் பி.ஏ.,
”1935 முதல் வைகாசி அனுடநாள் அந்நன்னாளாக அமைந்து விட்டது எனலாம். ஆதலின் அதனை நிலைத்திடச் செய்தல் நன்றே” (19.8.54)
6. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை
”திருவள்ளுவர் திருநாள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வைகாசி அனுடத்திலேதான் நடைபெறுகிறது” (24.2.54)
7. திரு. ம.பொ. சிவஞான கிராமணி
”வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதில் நானும் தமிழரசு இயக்கத்தாரும் பரிபூரணமாக ஒத்துழைப்போம்” (15.3.54)
8. வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
”தங்கள் தொண்டு பெரிதும் பாராட்டுதற்கு உரியதாகும்”(20.3.54)
9. டாக்டர். மா. இராசமாணிக்கனார்
”திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டம் மிகப் பாராட்டத்தக்கது. தங்களது பெருமுயற்சிக்கு எனது வாழ்த்தும் ஒத்துழைப்பும் உரியதாகுக” (12.3.54)
10. சித்தாந்த சிரோன்மணி சி.எஸ். கந்தசாமி முதலியார்
”தங்கள் கழகத்தின் பெருமுயற்சியால் வள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுடநாள் என்பது உறுதியாய் நிலைபெற்றுவிட்டது. “(16.3.54)
11. கவியோகி சுத்தானந்த பாரதியார்
”முயல்க முயல்க முயல்க மேன்மேலும்
பயன்களை வைத்தீசன் பதம்” (15.3.54)
12. புலவரேறு அ. வரத நஞ்சையன்
”தங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஒழுக எம் போல்வார் பெரிதும் கடப்பாடுடையவர்களேயாவர்”(12.3.54)
13. பாலகவி வயிநாகரம் வே. இராமநாதன் செட்டியார்.
”மயிலை திருக்கோயிலில் திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடப்பெற்று வருவதொன்றே தங்கள் கருத்துக்குப் போதிய சான்றாகும்” (விசய. மாசி.30)
14. டாக்டர். மு. வரதராசன்
”தங்கள் முயற்சியைப் போற்றுகிறேன்.
ஆக்கம் அதர்வினாய்ச் சேர்வதாக” (17.3.54)
15. புலவர். சி. இலக்குவனார்
”தங்கள் வேண்டுகோளின்படி மே 18இல் (வைகாசி 3இல்) திருவள்ளுவர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம்” (23.3.54)
16. பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன்
”இந்நாட்டில் இயற்கையாகவே வைகாசி அனுடத்தில் இந்நாள் பலராலும் கொண்டாடப் பெறுகிறது (6.3.54)
17. சுவாமி சித்பவானந்தா
”தாங்கள் எடுத்துள்ள முயற்சி மிக மேலான முயற்சியாகும். இது நன்கு நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” (13.3.54)
18. திரு. கி.வா. ஜகந்நாதன்
”குறள்நூலை வேதமெனக் கொண்டுதிரு வள்ளுவரைக்
கொண்டாடற்குத்
திறமுறுநாள் வைகாசி அனுடமென மரபறிந்து
சிறப்ப ஏற்றே”…... (26.5.54)
19. இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்
”திருவள்ளுவர் திருநாளை மிக்க சிறப்போடு நடத்துகிறீர்கள். என் சந்தோஷத்தைத் தங்களுக்கும் மற்றத் தொண்டர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.” (28.1.53)
20. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
”தங்கள் அருமுயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்”
பட்டியல் நீளச் செல்லும் ஆதலின் இதுபோதும் எனவிடுத்து மேலே செல்வோம்.
பண்டிதர் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கருத்துரைத்த பத்திரிக்கைகள் சில:
1. கல்கி- ஏப்ரல் 12 – 1958
”மகான்களுடைய திருநாட்களை கொண்டாடவேண்டியது அவசியம்” என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்படும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”
2. செந்தமிழ்ச்செல்வி – வைகாசி, 1953
“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை(அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”
3. ஆத்ம சோதி – வைகாசி 1953
“திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதில் எல்லாரது கவனத்தையும் கருத்தையும் ஒரு நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது நற்பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வித விழாவிற்கும் பெரும்பாலார் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுடமே பொருந்தியதெனலாம். மாசி உத்தரத்தை வள்ளுவர் பரகதியடைந்த நாளாகப் பாவிப்பதில் குற்றமொன்றில்லை”
4. குமுதம் – 20.4.54
“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்”
5. திருவள்ளுவர் – மே, 1953
“மறைமலையடிகளார் போன்ற பேரறிஞர்கள் பலரும் வைகாசி அனுடத்தையே துணிந்துள்ளார்கள். ஆதலின், வரும் வைகாசி அனுடமே பொருந்துமெனக் கொள்கின்றோம்.
6. தமிழோசை – ஏப்ரல் 1954 (சிங்கப்பூர்)
“வள்ளுவர் பெருந்தகையின் திருநாள் வரும் வைகாசித் திங்கள் 5 ஆம் (18.5.54) நாளாகும். இத்திருநாளைத் தமிழரனைவரும் தத்தம் இல்லங்கள், கழகங்கள், சங்கங்கள், கல்விச்சாலைகள் தோறும் கொண்டாடுக. இன உணர்ச்சி கொண்டு இணைந்து நின்று எழுச்சி கொள்க”
7. குறள் மலர் 12.3.54
“ஒரு பெரியாரை உலக அறிஞரை எப்போது எம்முறையில் கொண்டாடினால்தான் என்ன? [இந்த வினாவிற்குக் கல்கி நல்ல விடைதருகிறது]
8. தர்ம சக்கரம் – சித்திரை 1953 – சித்திரை 1954
“உலகத்தில் உள்ளவற்றுள் தலைசிறந்த இலக்கியமாகிய குறள் தமிழிலே இருப்பதும் அதனையாத்த பெரியோன் தமிழ் மகனாக இருப்பதும் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் தனிப்பெருமையாகும். இப்பெருமைக்குப் பாத்திரமாகத் தம்மை ஆக்கிக் கொள்வதற்குரிய வழி தமிழர் தாம் வாழும் மூலை முடுக்குகளிலெல்லாம் வள்ளுவர் விழாக் கொண்டாடுவதாகும். ஆகவே, இவ்வாண்டு வைகாசித்திங்கள் ஐந்தாம்நாளாகிய (18.5.54) திருவள்ளுவர் திருநாளை எல்லா இடங்களிலும் எல்லாரும் கொண்டாடவேண்டும்”
9. கலைமகள் – வைகாசி 1952
”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாட வேண்டியதுதான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக் ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”
10. சமூகத் தொண்டன் – 13.4.58
“28.5.53 திருவள்ளுவர் திருநாள். இந்த நாளை எல்லா நிலையங்களிலும் கொண்டாடித் தமிழினத்தின் வாழ்க்கை பொங்கி வழிய வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம்.” மேலும் சுதந்திரன், தமிழ்நாடு, தினமணி கதிர் முதலிய பத்திரிகைகள் ஆசிரியருரை, குறிப்புரை எழுதியுள்ளன. காவேரி, குமரகுருபரன், சங்கப்பலகை, சித்தாந்தம், செங்கோல், செட்டிநாடு, திருப்புகழமிர்தம், திராவிடநாடு, திராவிடன், தினமணி, தொண்டன், விந்தியா, அமுதசுரபி, மாணவர் சோதி, உதயம், தமிழ்முழக்கம், ஈழகேசரி, தினகரன், தமிழ்முரசு, தமிழ்நேசன், ஆகிய பத்திரிக்கைகள் திரு. இரத்தினம் அவர்கள் கண்ட கழகத்தின் அறிக்கைகளை வெளியிட்டு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளன.
இவற்றில் ஒன்றான திராவிடநாடு அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ் என்பது கவனத்திற்குரியது.
அடுத்து, தமிழ்மறைக் கழகத்தின் வேண்டுதலை ஏற்று வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய சங்கங்கள், சபைகள், மன்றங்கள் ஆகியவற்றில் சில
இலங்கை
1. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம்
2. கொழும்பு சைவ மங்கையர் கழகம்
3. கொழும்பு விவேகானந்த சபை
4. இலங்கை வானொலித் தமிழ்க் கலை மன்றம்
5. கொழும்பு, திருவள்ளுவர் நாடக சபா
6. நெல்வீதி, அரசினர் மத்திய சல்சாரித் தமிழ்மன்றம்
7. பாரதி கழகம்
8. உனுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கம் – என 65 அமைப்புகள் இலங்கையில் கொண்டாடியுள்ளன.
இந்தியா
1. திருவள்ளுவர் ஆலயம், மயிலாப்பூர்
திரு. சி, இராசகோபாலாச்சாரியார், திரு ஓ.பி. இராமசாமி செட்டியார், திரு. சி.நரசிம்மன், திரு.ஆ.கசபதிநாயகர். திரு.வி.சி. பழனிச்சாமி கவுண்டர், திரு.சி. சுப்ரமணியம், திரு. எம் மாணிக்க வேலு ஆகியோர் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை போன்றோர் சொற்பொழிவாற்ற வைகாசி அனுடநாளைக் கொண்டாடியுள்ளனர்.
2. தியாகராய நகர் திருவள்ளுவர் கழகம்
3. தென்காசித் திருவள்ளுவர் கழகம்
4. புதுச்சேரி மங்கள கான சபா
5. புதுக்கோட்டை திருக்கோகரண நிலையம்
6. சென்னைத் திருவள்ளுவர் மன்றம்
7. குன்னூர் பாரதி பழஞ்சிக வாலிபர் மன்றம்
8. தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம்
9. தியாகராய நகர் இந்திப் பிரச்சார சபை
10. மதுரை திருவள்ளுவர் கழகம் –இப்படியாக பல ஊர்களில் வைகாசி அனுடநாளில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடியுள்ளனர்.
குண்டக்கல், சித்தூர், கல்கத்தா, பம்பாய், பெங்களூர், ஆகிய இந்திய மாநிலத்தலைநகர்களில் விழாக் கொண்டாடியுள்ளனர்.
அகில பர்மாத் தமிழர் சங்கச் சார்பில் பர்மாவிலும், கோலாலம்பூர், சமயப் பிரச்சார சபை, மலாயா தமிழ்ப் பண்ணை சிலாங்கர் கிளை, மலாயா தமிழ் இளைஞர் சங்கம், சிறம்பான் தமிழ்ப் பண்ணைக்கிளை ஆகியவற்றின் சார்பில் மலாயாவிலும் (மலேசியா) சிங்கப்பூர் தமிழர் சங்கம், சிங்கப்பூர் தமிழர் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சிங்கப்பூரிலும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடியுள்ளனர்.
யோகேனஸ்பேக் திருவள்ளுவர் மறைக்கழகம் சார்பில் தென்னாப்பிரிக்காவில் விழாக் கொண்டாடப்பட்டிருக்கிறது. மேலும், டர்பன் டிரான்ஸ்வால் முதலிய இடங்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது.
மிகவும் விரிவான செய்திகள் அடங்கிய ஒரு வரலாற்றை மிகச் சுருக்கி இங்கே தந்துள்ளேன். இலங்கைத் தமிழராகிய பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் உழைப்பையும், உறுதியையும் எண்ண வியக்காமல் இருக்க முடியாது. 52-இல் கழகம் கண்டு 53 மற்றும் 54 ஆம் ஆண்டுகளில் உலகத் தமிழர்கள் அனைவரையும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட வைத்த அந்த மாபெரும் மனிதனை மனத்துள் வைத்தும் பூசிப்பதைத் தவிர அவருக்கு வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?
ஈதெல்லாம் சரி! திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக முன்வைத்தாரா? அல்லது அவருக்கு முன்னவர்கள் கொண்ட வழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என வலுயுறுத்தினாரா?