மூக்குத்தி அம்மன் திரைப்படம் திறனாய்வுக் கட்டுரை
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் தவமிருக்கும் கன்னியாகுமரி அம்மனின் சிறப்பே அவளது மூக்குத்தி தான்.
இந்தப்படமும் கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டதே. படத்தின் இயக்குனர் ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகரான R.J.Balaji கடவுளின் பெயரால் சமுதாயத்தில் நடக்கும் பொய், பித்தலாட்டங்களை விவரிப்பதே கதை.
1978ல் கே.விஜயனின் இயக்கத்தில் புதுமைப்பித்தனின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட “ருத்ர தாண்டவம்” இதே ரகம் தான். பூசாரியின் கனவில் தோன்றிய சிவபெருமான் சமூக அவலங்களைக் கண்டு கொந்தளித்து இறுதியில் ருத்ர தாண்டவம் ஆடுவது போல் முடியும். ஹிந்துக்களின் கலாச்சாரத்தை, அநியாயத்தை ஹிந்து கடவுளே விமர்சிப்பது போன்ற படம். உதாரணமாகத் தேவாரம் பயின்றதற்குப் பதில் வேறு பயன் தரும் விஷயங்களைப் பயின்றிருக்கலாமே என பக்தனைக் கேலி பேசும் சிவபெருமான்.
R.Jபாலாஜியும் இதே பாணியைத்தான் கையாள்கிறார். ஆனால் ஹிந்துக்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதில் அவரது உள்நோக்கம் புரிகிறது. கிராம தேவதை மூக்குத்தி அம்மன் கஷ்டப்படும் ஒரு பக்தனின் வீட்டிற்கு வருகிறாள். அவளே அவர்களது மறக்கப்பட்ட குல தெய்வம். மதத்தின் பெயரால் நடக்கும் சமூக அவலங்களைக் கண்டு சினம் கொள்கிறாள். தனது பக்தனின் நிலத்தை அபகரிக்கத்துடிக்கும் போலிச்சாமியாரிடமிருந்து மீட்டுத்தருவது தான் கதைக் களம்.
போலிச்சாமியாரை சாடுவதை மையக்கருவாக்கி அங்கங்கே ஹிந்து எதிரிகளையும் மென்மையாக விமர்சித்து தன்னை நடுநிலையாகக் காட்டிக்கொள்ளும் பாலாஜி!
ஒரு காட்சியில் பகுத்தறிவுவாதி சொல்கிறான் “நான் கிருஸ்துவின் புனித நீரைக் குடிப்பேன், இஸ்லாமியரின் நோன்புக் கஞ்சியும் குடிப்பேன், ஆனால் அம்மன் பிரசாதம் உண்ணமாட்டேன்” என்று. நாத்திகனைக்கூட நம்பலாம் ஆனால் போலி பகுத்தறிவுவாதியை நம்பவே கூடாது என மூக்குத்தி அம்மன் அறிவுறுத்துவார். இன்னொரு காட்சியில்கிருஸ்துவப் பள்ளியில் படிக்கும் நாயகனின் தங்கை பொட்டு வைக்க மறுப்பதும் நாயகன் பள்ளியின் கன்னியாஸ்திரீயிடம் தன் தங்கையை மதம் மாற்றிவிடவேண்டாம் என மன்றாடுவதும் மேலோட்டமாகப் பார்த்தால் நடுநிலையாகத்தோன்றும். ஆனால் ஆழமாக நோக்கினால் ஹிந்துக்களை இழிவுபடுத்துவது புரியும்.
ஒரு தெய்வத்தை உயர்த்தி மற்றொன்றை இழிவு செய்யும் போலி பகுத்தறிவாளனைப் புறக்கணிக்கவேண்டும் என வசனம் உள்ளது. உண்மையில் ஒரு மதத்தைப் புகழ்ந்து மற்றொன்றை இகழ்வது தவறு என்றல்லவா இருக்கவேண்டும். அதே போல் பொட்டு வைக்க மறுக்கும் பெண் அவள் வீட்டினரால் வெறுக்கப்படுகிறாள். அதனால் அவள் குடும்பத்தை எதிர்க்கும் விதமாகப் பொட்டை அழிப்பதாகவும் பெயரையும் சோஃபியா என மாற்றிக்கொள்வதும் சொல்ல வருவதென்ன? வழக்கமாக ஹிந்து பெண்களைப் பொட்டு பூ வைக்கக்கூடாது என கான்வெண்ட் பள்ளிகளில் வலியுறுத்துவர்.
ஆனால் படத்தில் குடும்பம் தான் அந்தப்பெண்ணைப் பொட்டு வைக்கச்சொல்லி வற்புறுத்துவதால் அப்பெண் சுதந்திரமாக வாழ குடும்பம் தடையாக இருப்பது போலவும், அவள் விரும்பியே கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொள்வது போலவும் காட்டியதில் தெரிகிறது உள்நோக்கம்.
ஏசு தனது நண்பரெனவும் போலி பாதிரிகளை ஏசு நரகத்தில் தள்ளுவாரென்றும் அம்மன் சொல்வது கிருஸ்துவ மதக்கோட்பாட்டை உறுதியாக ஏற்றுக்கொள்வது போலத் தான்.
போலி பாதிரியைக் கண்டிப்பது போல் காட்டுமிடத்தில் நியாயமாக நெறியற்ற மத வியாபாரிகள் ஜெகத் கஸ்பர், மோகன் லாசரஸ் போன்றோரையல்லவா சாடவேண்டும். ஆனால் செய்யவில்லை. இந்தக்காட்சி டிரெய்லரில் இருந்தது படத்தில் இல்லை. மாறாக நில அபகரிப்பு செய்வதாக ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் ஹிந்து சாமியார் என்பதால் ஈஷா மையத்தின் மேல் வாரியிறைக்கிறார்கள்.
இந்தப்படத்தின் ஹிந்து விரோதப்போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டு கதைக்களம்
கன்னியாகுமரியில் நிலம் அபகரிப்பதாகக் கதையில் காட்டுமிடம் வெள்ளிமலை. இங்கு மிகப்பழமையான ராமகிருஷ்ண விவேகானந்த ஆசிரமம் ஸ்வாமி அம்பானந்தாவால் 1940ல் தொடங்கப்பட்டது. இன்றுவரை இந்த ஆசிரமம் ஹிந்து மறுமலர்ச்சிக்காகப் பாடுபடுகிறது. ஆன்மீக வகுப்புகள் மூலம் அப்பகுதியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதோடு மதமாற்றத்தையும் எதிர்த்து வருகிறது. தற்போதைய குரு ஸ்ரீ சைதன்யானந்தா இயக்கப்பணிகளை தமிழகம் முழுவதுமட்டுமல்லாமல் இலங்கையிலும் மேற்கொள்கிறார். எளிமையான, தவ வாழ்க்கை வாழும் இந்த ஸ்வாமிஜியை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர்.
அதே சமயம், மிஷனரிகள் நில அபகரிப்பில் பகிரங்கமாகவே ஈடுபட்டு வருகின்றனர். குமரியில் ஹிந்துக்களின் பல புனித இடங்களை ஆட்சியாளர்கள் துணையோடு மிஷனரிகள் வளைத்துப்போடுவதுண்டு.பலகாலமாக கார்த்திகை தீபம் ஏற்றி வந்த குன்று ஒரே இரவில் சர்ச்சுக்கு சொந்தமாகி, உச்சியில் சர்ச்சும் கட்டப்பட்டுவிட்டது. மருத்துவாழ்மலை, குமரக்கோவில் பகுதிகளிலும் நில அபகரிப்பு நடந்துள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க, வெள்ளிமலையைத் தேர்ந்தெடுத்து ஹிந்து சாமியார் நில அபகரிப்பில் ஈடுபடுவதாகக் காட்டியிருப்பது ஹிந்து துவேஷமே. மதமாற்றத்தைப் பொறுத்தவரை கான்வென்ட் பற்றிய குற்றச்சாட்டுகள் அநேகம் உண்டு. வலைத்தளங்களில் நாகர்கோவிலில் பிரபல பள்ளி மாணவர்களை ஜெபம் செய்ய வற்புறுத்தும் வீடியோக்கள் வலம் வந்தன. குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளே கூட மதமாற்றும் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது நிஜம்.
ஆனால், அதே ஊரில் கதை நிகழ்வதாகக் காட்டும் பாலாஜி, கான்வென்ட் செல்லும் பெண் மதம் மாறுவதைக்கூட குடும்பச் சூழலே அந்தச் சிறுமி மனம் மாறக்காரணம் என நியாயப்படுத்துவதேனோ?
படத்தில் இன்னும் சில புரட்சியெல்லாம் உண்டு.
கிராம தேவதைகள், குல தெய்வங்கள் மற்றும் மேல்தட்டு மக்களின் தெய்வங்களான சிவன், விஷ்ணு இடையே ஒரு பாகுபாடு புகுத்தப்படுகிறது. ஹிந்து துவேஷிகள் கையாளும் உத்தி அது. மேல் ஜாதி மக்கள் கிராம தேவதைகளைக் கும்பிடாமல் புறக்கணிப்பதாக ஒரு மாயையைப் பரப்பி வைத்திருக்கிறார்கள் காலம் காலமாக.
பாலாஜி அதையும் விட்டுவைக்கவில்லை. மூக்குத்தி அம்மனின் பக்தன் குடும்பம் அவளை மறந்து திருப்பதிக்குச் செல்வது ஏன் எனக் கோபிக்கிறாள்.
கமலஹாசன் கூட ஒரு பேட்டியில் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். பாலாஜி என்ற பெயருடைய இயக்குநர் ஒருவேளை அந்தக் கருத்தால் கவரப்பட்டாரோ?
வேடிக்கை என்னவென்றால் ஏசு கிருஸ்து தனது நண்பர் எனக்கூறிக் கொள்ளும் மூக்குத்தி அம்மன் திருப்பதி பாலாஜியை மட்டும் விரோதியாகப் பார்ப்பது தான்.
உண்மை நிலை என்ன? பொருளாதாரச் சிக்கலால் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள் காலப் போக்கில் குல, கிராம தேவதைகளை மறந்தே விட்டனர். ஆனாலும் ஜோதிடர்களும், குல குருவும் தொடர்ந்து குல தெய்வத்திற்குப் பூஜை போடுவதை அறிவுறுத்தியே வருகின்றனர். இதில் ஜாதி வேறுபாடு கிடையாது.
பிராமணர்கள் பலருக்குக் குலதெய்வமே கிராம தேவதைகள் தான்.
மேலும், கிராமக் கோயில்களை அபகரிக்கப் பார்ப்பதும் மதமாற்றக் கும்பல் தான். இதையெல்லாம் மறைத்து, மேல் ஜாதி கடவுள் கீழ்சாதி கடவுள் என இல்லாத ஒரு பிரச்சனையைப் புகுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சி தெரிகிறது.
மொத்தத்தில் இது சினிமா படம் அல்ல திட்டமிட்ட செயல். ஹிந்துக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்தல் குற்ற உணர்ச்சியைத் தூண்டுதல் மதம் மாற்றத் துணிதல்இது தான் திட்டம்.
தணிக்கை குழுவும் முழு ஆதரவு தந்து கிறிஸ்துவர்களைக் கேலி செய்வதை மட்டும் நீக்கி படத்தை வெளியிட வைத்தது!
அதுவே இதுவரை ரோசமின்றி இருந்த ஹிந்துக்களை, நம் மதம் மட்டும் ஏளனப்படுத்தப்படுகிறதே என ஆவேசப்பட வைத்தது என்றால் மிகையில்லை .
“கெட்டதிலும் ஒரு நல்லது!”
கட்டுரை ஆசிரியர்~அரவிந்தன் நீலகண்டன்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா
நன்றி: SWARAJYA
https://swarajyamag.com/ideas/mookuthi-amman-review-spare-us-the-propaganda-for-christs-sake