Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 101 நன்றியில் செல்வம் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
101 நன்றியில் செல்வம் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


openQuotes.jpgநன்றியில்‌ செல்வமாவது பயன்படாத செல்வம்‌, அதாவது செல்வத்தைச்‌ சேர்த்தவர்க்கும்‌ பிறர்க்கும்‌ பயன்படாத செல்வம் என்பதாம்‌.
- மு சண்முகம்பிள்ளை

 

இவ்வதிகாரம் பயன்படுத்தப்படாத பெருஞ்செல்வம் பற்றியதாகும். தேடித் தேடி பொருள் குவிப்பவன் தானும் துய்த்து, பிறர்க்கும் கொடுத்து உதவவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது இப்பாடல் தொகுப்பு. பொருட் பற்றுள்ளம் கொண்டு இறுகப் பிடித்துக்கொண்டிருப்பது கேடு பயக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஈட்டப்படும் செல்வம் எல்லாம் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கக் கூடாது; அது சமுதாயம் முழுவதற்கும் பயன்பபட வேண்டும் என்கிறது. நன்றியில்செல்வம் நோய் போன்றது எனவும் சொல்லப்படுகிறது. இச்சிந்தனைகள் இன்றைய பொருளியல் கோட்பாடுகளை ஒட்டியனவாக உள்ளன என்பது அறியத்தக்கது.

நன்றியில் செல்வம்

ஈட்டியவர்க்கும் பிறர்க்கும் பயன்படுதல் இல்லாத செல்வத்தினது இயல்பு கூறுவது நன்றியில் செல்வம் அதிகாரம். அறத்துப்பாலில் ஒப்புரவறிதலில் கூறப்பட்ட கருத்துக்கள் எதிர்மறையாகக் குடிமக்களைப் பற்றிய இப்பகுதியிலும் உள்ளன. செல்வர்கள் தாம் சேர்த்த செல்வத்தின்மீது பற்றுள்ளம் கொண்டு அதை முடக்கிவைக்காமல், கொடுத்தும் துய்த்தும் பொருளைச் சமுதாயத்துள் பரவலாக்கப்பட வேண்டும் என்று இங்கு சொல்லப்படுகிறது.
உலகம் பலரது கூட்டு உழைப்பினாலே இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் தனியாக பிறரது உழைப்பாலான உதவி இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது. இந்த உண்மையை உணர்ந்தவர் தன்னிடம் அளவிறந்த செல்வம் சேரும்போது அது பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற உள்உந்தல் பெறுவர்; பலருக்கும் உதவவேண்டும் என்ற நல்லெண்ணம் இயல்பாகப் பிறந்து விடும். அவர்களே ஒப்புரவாளர்கள். ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதுதான் ஒப்புரவாகும். இவ்வதிகாரத்தில் அதற்கு மாறாக எல்லாமே செல்வத்தால் முடியும் எனச் சொல்லித் தன் செல்வம் சிறிதும் குன்றவிடாதபடி, ஈட்டிய பொருளைப் பூட்டிவைத்துப் பாதுகாப்பது குற்றம் என்றும் நோய் என்றும் கடியப்படுகிறது. இவ்வாறு 'அறமில்லாத பொருள்' என்ற பொருளில் 'நன்றியில்செல்வம்' என அச்செல்வம் வள்ளுவரால் இகழப்படுகிறது. 'நன்றியில் செல்வம்' என்பது எவர்க்கும் உதவாத அல்லது நன்மையில்லாத செல்வம் என்ற பொருளில் ஆளப்படுகிறது.
குறளில் பல உடைமைகளைச் சொல்லியுள்ள வள்ளுவர் 'பொருளுடைமை' எனக் குறளில் எங்குமே குறிக்கவில்லை. இல்லாரை எல்லாரும் எள்ளுவர், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, பொருளானாம் எல்லாம், செல்வரைச் செய்வர் சிறப்பு, பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள், இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று எனப் பொருளின் பயன்பாட்டையும் சிறப்பையும் பலவாறு பாராட்டும் வள்ளுவர் அது தக்க வகைக்குப் பயன்படாமையை இங்கு கடிந்துரைக்கிறார். செல்வம் என்பது பயனை ஒட்டியே மதிக்கப்படுவது. அது சமுதாயம் முழுவதற்கும் பயன்படவேண்டியது.

பொருள்செயல்வகை அதிகாரம் எவ்வழியில் செல்வம் ஈட்டப்படவேண்டும் என்பதைச் சொல்வது. அங்கு ஒண்பொருள் காழ்ப்ப இயற்றவேண்டும் என்றும் அப்பொருள் திறனறிந்து தீதின்றி வந்ததாக இருக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டன. இங்கு அன்பொரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் (1009) என்பதிலுள்ள ஒண்பொருள் என்பது அறச்சிந்தனையே இல்லாமல் பொருள் தொகுக்கவேண்டாம் என்று கூறுவது. இவ்வதிகாரத்தில் பேசப்படும் செல்வம் அறவழியில் ஈட்டப்படுவதா அல்லது அறமற்ற வழியில் சேர்த்ததா என்பது சொல்லப்படவில்லை. ஆயினும் அறவழியீட்டிய பொருளும் நன்றியில்செல்வமாதல் கூடும் என்பதை இவ்வதிகாரப் பாடல்கள் வழி அறியலாம். பெருஞ்செல்வம் பெற்றபின் நற்செல்வரும் சிந்தனை மாறுவதுண்டு. எனவே இங்கு கடியப்படுபவர்கள் ஈதல் இயல்பில்லாதவர்களும், நல்லவர்களாக இருந்து பொருள் பெற்றமையால் மாறியவர்களும் ஆவர். தன்னிடம் சேரும் பொருளை அற்றார்க்கும் தக்கார்க்கும் வழங்கி நன்மை செய்யும் பொருளாகச் செய்யவேண்டும் என்பது திரண்ட கருத்து.

அவன் சேர்த்த செல்வம்தானே, அதைச் செலவழித்தால் என்ன? செலவழிக்காமல் விட்டால் என்ன? என்று வள்ளுவர் நினைக்கவில்லை. அவரது சமுதாயக் கொள்கை உடன் வாழும் மனிதர்க்கு எந்நிலையிலும் பயன்பட வாழவேண்டுமென்பதாம். எனவே பிறர்க்கு உதவ வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப கூறுவார். இவ்வதிகாரம் தவிர்த்து ஒப்புரவறிதல், ஈகை ஆகிய அதிகாரங்களிலும் மற்றும் பிறபல இடங்களிலும் வேண்டியவாறு உடன் வாழும் மனிதர்க்கு உதவ வேண்டும் என்பதை அழுத்தமாக அறிவுறுத்தியுள்ளார்.
செல்வத்தின் பெருமையைப் பேசும் குறள் செல்வம் பயனின்றிக் குவிக்கப்படுவதைச் சமூகப் பகையாகக் கருதுகின்றது. பொருளீட்டம் இருக்க வேண்டும்; பொருள் துய்ப்பும் இருக்க வேண்டும்; செல்வத்தைத் தானும் நுகரவேண்டும்; பொது நலங்களும் வளர வழங்கவும் வேண்டும். பொருள்பற்றுள்ள குணம் கூடாது; பொருள் ஓரிடத்துக் குவிந்து பயனின்றி கழியக் கூடாது. இதற்கான வழிவகைகளைக் குறள் முழுக்கச் சுட்டிக்காட்டவும் செய்கிறார் வள்ளுவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், விருந்தோம்பி வேளாண்மை செய்தல், காக்கை போல் கரவாது கரைந்து பகிர்ந்து உண்ணுதல் போன்ற பண்புகளை ஒருவன் வளர்த்துக்கொண்டால் பொருள் தன்னிடத்தே தேங்க வேண்டுமென்ற எண்ணம் அழியும் என்பது வள்ளுவர் காட்டும் புதுவழி. கொடுக்கும்போது பெறுபவன் கொள்ளும் மகிழ்ச்சியைக் கண்டு தான் இன்புறவேண்டும் என்று பொருள் குவியாமல் இருக்க ஊக்கமூட்டி கொடுக்கச் செய்வார். இவ்வழிகளில் ஈவோன் கொடுப்பதால் இன்பத்தையும் மனநிறைவையும் பெறுவான்.

செல்வர்கள் தம்மிடமுள்ள பொருளைத் தாம் நன்கு நுகர்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அடுத்து பிறர்க்குப் பயன்படுமாறு சுழற்சியில் விடவேண்டும். பொருளியலிலேயே பின்னப் பெற்றுச் சுற்றி வருகிறது உலகியல். பொருள் சுழன்றுவரும்போதுதான் உலகப்பொருளாதார அமைப்பு ஆக்கமுள்ள முறையில் இயங்கும். நன்றியில்செல்வம் - நன்றிச்செல்வம் இவைபற்றிப் புரிந்துகொள்ள இன்றைய நிதிநிலை முறை (financial system) எப்படி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது என்பதை அறியலாம். ஒருவர் தான் சேர்த்த பணத்தை வீட்டில் பெட்டியில்போட்டு மூடி வைத்திருக்கிறார். அதனால் அவருக்கும் சமுதாயத்திற்கும் எந்தவிதப் பயனும் இல்லை. ஆனால் அவர் அப்பணத்தை வங்கியில் போட்டாரானால், வங்கி அதை மற்றபல வாடிக்கையாளர்க்குக் கடனுதவி மூலம் தொழில் செய்ய உதவும். அவர் கடனைத் திரும்பச் செலுத்தும்போது வேறு பலருக்கும் கடனுதவி வங்கி செய்யும். இவ்விதம் அப்பணம் பலமுறை சுழற்சி பெறுகிறது. இவ்வழி பலர் பயனடைந்து நாட்டின் பொருளாதாரமும் மேம்பட்டு வேலையின்மை, பற்றாக்குறை போன்ற மற்ற பொருளாதாரப் பிணிகளும் நீங்கும். வள்ளுவர் வங்கி பற்றிச் சொல்லவில்லையென்றாலும் அவர் இவ்வதிகாரத்தில் வலியுறுத்தும் செல்வரின் நுகர்ச்சி, மற்றும் ஈதல்வழி பணம் சமுதாயத்துக்குள் புழங்க விடுதல் இவற்றால் உண்டாகும் பயன்களுக்கும், நிதிநிலை முறையால் ஏற்படும் பயன்களுக்கும் ஒற்றுமை உண்டு. பொருளியல் அறிஞர்கள் வங்கிச்சேமிப்பு என்பதை மிகச் சிறந்த பொருளாதாரக் கோட்பாடாகக் கருதுவர்; அதுபோல் முதலீட்டிற்குப் பயன்படாமல் வீட்டில் முடக்கி வைத்தபணம் யாருக்கும் பயன்படாமலே போய் பொருளாதார மந்த நிலையை உண்டாக்குவதையும் சுட்டுவர். கறுப்புப்பணம் என நாம் இன்று எதை அழைக்கிறோமோ அதுவும் ஒருவகை நன்றியில்செல்வம்தான்.

நன்றியில்செல்வம் மீது அமர்ந்திருப்பவனிடம் மிகுந்த சினம் கொள்கிறார் வள்ளுவர். அவனை நோக்கி 'நீ செத்தால் அச்செல்வத்தை உடன் கொண்டு செல்லப்போகிறாயா? இந்த அளவு செல்வம் சேர்த்தும் மாட்சிமை இல்லாத வாழ்வு நடத்துகிறாயே! நீ இப்பூமிக்குப் பாரமாக அல்லவா இருக்கிறாய்! உன் காலத்திற்குப் பின் எஞ்சி நிற்பது என்ன? கோடிப் பொருள் சேர்த்து வைத்தாலும் அவை யாவும் இல்லாதனவே! மணம்முடிக்காமல் இளமையையும் வாழ்க்கையும் வீணடித்துவிட்ட அழகுப்பெண் என்னத்தைக் கண்டாள்? அவள் போன்றவனே நீ! ஓடிஓடிப் பொருள் குவித்துக் கொண்டிருக்கிறாய். நச்சுமரம் பழுத்தாலென்ன பழுக்காவிட்டாலென்ன? நீ எவ்வளவு சேர்த்தும் என்ன பயன்? உனக்கும் பயனின்றி மற்றவர்க்கும் உதவாமல் கடைசியில் உன் செல்வம் அனைத்தையும் யாரோ யாரோ எடுத்துச் செல்லப் போகிறார்கள்!' என வைகிறார்.

நன்றியில் செல்வம் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 1001ஆம் குறள் இல்லத்தின் வாயில்வரை பெரும்பொருளைக் குவித்துவைத்து அதனை நுகராதவன் செத்துப்போனால் அவனுக்கு அப்பொருளில் உரிமை ஒன்றும் இல்லையே என்கிறது.
  • 1002ஆம் குறள் பொருளினாலே எல்லாஞ் செய்தல் இயலும் என்று எண்ணி யாருக்கும் கொடுக்காமல் இறுக்கி வைத்துக் கொண்டிருக்கும் மயக்கத்தினாலே வாழ்க்கை மாட்சிமையில்லாது போய்விடும் என்று சொல்கிறது.
  • 1003ஆம் குறள் பொருள் தேடுவதையே விரும்பி புகழை வேண்டாத மாந்தரின் பிறவி வாழ்க்கை நிலத்திற்குச் சுமையாகும் என்கிறது.
  • 1004ஆம் குறள் பிறர்க்கு உதவாமையால் ஒருவராலும் விரும்பப்படாத செல்வந்தன் தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? எனக் கேட்கிறது.
  • 1005ஆம் குறள் பிறர்க்கு வழங்குதலும் தாம் துய்த்தலும் இல்லாதவர்க்கு, தொகுத்த பல கோடிப் பொருள் சேர்த்து வைத்தாலும் அவை யாவும் இல்லாதவனவே எனச் சொல்கிறது.
  • 1006ஆம் குறள் தானும் துய்க்காது தக்கவர்க்கு ஒன்று ஈயும் இயல்பும் இல்லாதவன் பெருஞ் செல்வம் நோயாகும் என்கிறது.
  • 1007ஆம் குறள் பொருளில்லாதவர்க்கு யாதும் கொடாதவனது பெருஞ்செல்வம் அழகு மிகுந்த ஒரு பெண் மணவாது தனியளாய் மூத்தது போலும் என்கிறது.
  • 1008ஆம் குறள் எவராலும் விரும்பப்படாதவனது செல்வம் ஊர் நடுவேயுள்ள நச்சுமரம் பழுத்தாற்போன்றது எனச் சொல்கிறது.
  • 1009ஆம் குறள் அன்பு காட்டுதலை நீங்கி, தானும் உண்டு இனிது வாழாது வருத்திக்கொண்டு, அறத்தையும் எண்ணாது, தொகுத்த பெருஞ்செல்வத்தைக் கொள்வார் பிறர் என்கிறது.
  • 1010ஆம் குறள் சீர்மைச் செல்வமுடையவர் சிறுதுகால வறுமை, மழைபெய்யாது வறண்டுபோனாற் போன்ற நிலைமைக்கு ஒப்பானதாகும் என்கிறது.

 

நன்றியில் செல்வம் அதிகாரச் சிறப்பியல்புகள்

பொருள் பெற்றவன் உலகத்தில் பலவற்றை எளிதில் செய்துமுடிக்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால் அப்படிச் சொல்லிக்கொண்டே தன்னிடமுள்ள செல்வத்தை நழுவவிடாமல் - யாருக்கும் ஏதும் உதவாமல் - வாழ்வு நடத்தும் செல்வரை வள்ளுவர் மிகவும் கடிகிறார். அவனது வாழ்வு மாண்பற்றதாம் என்கிறார். பொருளுடைமையினாலேயே எல்லாம் ஆகிவிடாது; அது பொருளைப் பயன்படுத்தும் வகையினாலேயே அமையும். அப்பாடல்: பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. (1002).

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல் (1005) எனக் கொடுத்தலும் துய்த்தலும் இல்லாத செல்வமும் அதனைக் கொண்டவனும் இல்லாத நிலைக்கு ஆட்பட்டவர் என்று சொல்கிறது இப்பாடல். அவனிடம் கோடி கோடியாய்க் கொட்டிக் கிடந்தாலும் பொருள் இருந்தும் இல்லாதது போன்றுதான். தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன் தராத செல்வம் இருந்தென்ன?

நச்சுமரத்தில் நிரம்பப் பழுத்துக் குலுங்கினாலும் யாரும் அவற்றத் தொட அஞ்சுவர். அதுபோல கொடுக்க மனமில்லாதவனுக்குச் செல்வம் பெருகிக்கொண்டே இருந்தாலும் அவனை யாரும் அணுகமாட்டார். அவன் நச்சுமரம் ஆகிறான்; அவனிடம் செல்வம் சேர்தல். 'பழுத்தற்று' என்று குறிக்கப் பெற்றது. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று (1008) என்பது பாடல்.

அன்பொரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் (1009) என்ற பாடல் ஈயான் தேட்டைத் தீயோர் கொள்வர் என்ற கருத்தில் அமைந்தது. அது கூறுவது: தொடர்புடையாரிடம் அன்புடன் பழகி நடந்துகொண்டால் பொருள் உதவி கேட்டு வந்திடுவார்களோ எனஅஞ்சி அவர்களுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டும் தானும் உண்ணாமல் கொள்ளாமல் தன்னை வருத்திக்கொண்டும், அறம்செய்யும் நோக்கமே இல்லாமல் எப்பொழுதும் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பவன் சேர்த்துவைத்த மிகுசெல்வத்தை பின்னர் யார்யாரோ கொண்டு செல்வர்; அவன் வழியினர்க்கும் பயன்படாமல் போகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard