வள்ளுவம் பௌத்தமும்: சைவர் மற்றும் வைணவரைப் போலவே, சிலர் திருக்குறளைப் பௌத்த நூலென்றும் கூறிவருகின்றனர். அதனையும் ஆய வேண்டுமன்றோ! கடவுள் வாழ்த்திலுள்ள ~மலர்மிசை| ஏகினான் - 3 - என்ற தொடரும் ~பொறி வாயில் ஐந்தவித்தான் -6- என்ற தொடரும் புத்தனையே குறிக்கும் என்பர். மற்றுஞ் சிலர் இவ்விரு தொடர்களும் சமண முனிவரான ரிஷப தேவரைக் குறிக்கும் என்பர். புத்த சமயம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் வள்ளுவர் திருக்குறளை யாத்திருக்கலாம் மற்றும் ஏனைய சமயங்களைக் காட்டிலும், புத்தம் முற்போக்குச் சிந்தனையை உடையதாக இருந்தாலும், இத்தொடர்களுக்குரிய கருத்து வள்ளுவரைக் கவர்ந்திருந்தாலும் வள்ளுவர் அத்தொடர்களைப் பயன் படுத்தி -யிருக்கலாம். இத்தொடர்களைக் கொண்டு மட்டும் அந்நூலைப் பௌத்த நூலென்று கூறிவிட முடியாது.அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுதான், ஒரு நூலை ஒரு சமயத்திற்குரிய நூலாகக் கூற முடியும். பௌத்தம் அடிப்படையில் கடவுட் கொள்கையை மறுப்பது. திருக்குறளோ அதற்கு முற்றிலும் மாறானது. வள்ளுவர் நூல் தொடக்கத்திலேயே, அகர முதல எழுத்தெல்லாம ஆதிபகவன் முதற்றே உலகு (குறள்.1)
என்றார் அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதன்மையாகவும் காரணமாகவும் இருத்தல் போல, கடவுள் உலகிற்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளார் என்கிறார். ஓர் அதிகாரம் முழுமையும் கடவுளின் பண்பையும், அவனை வழிபடுவதால் அடையும் பயனையும் வள்ளுவம் முனைப்புடன் அறிவுறுத்துகிறது. கடவுளைச் சிறிதும் ஏற்காத பௌத்தத்திற்கு இது முற்றிலும் மாறானது. மேலும், தொடக்கக் காலப் பௌத்தமான ஈனயானம் புலாலை மறுக்கவில்லை. தாமே ஓர் உயிரைக் கொன்று உண்ணக் கூடாதேயன்றிப் பிறர் கொன்ற விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்பது அதன் கொள்கை. ஆனால் வள்ளுவமோ இதற்கு மாறானது. அருள்ல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்(குறள்.237) கொல்லாமையே உண்மையான அருள் என்கிறார் வள்ளுவர். கொல்லுதலும், கொன்ற ஊனை, உண்ணலும் சிறுமை என்கிறார். மற்றும் தொடக்கக் காலப் பௌத்தத்தை மறுப்பது போன்றே,
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்(குறள்.256) என்கிறார். அதாவது உயிர்க்கொலை பெருகுவதற்கே காரணம், ஊன் உண்பவர் பெருகுவதேயாகும் என்கிறார். மற்றும், புத்த சங்கத்தைப் பற்றியோ, பிக்குகளைப் பற்றியோ பிக்குணிகளைப் பற்றியோ திருக்குறளில் சிறு குறிப்பும் இல்லை. பௌத்த கொள்கைகளை மக்களிடத்துப் பரப்பச் சங்கம் மிக இன்றியமையாதது என்றார் புத்தர். திருக்குறளில் அது காணப்படவில்லை. பௌத்த சமயத்தின் முக்கியக் கோட்பாடுகளான (Major Principle) அட்டாங்க மார்க்கத்தைப் பற்றியும் (நன்னம்பிக்கை, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை, நல்லொறுத்தல் எங்கும் அவர் குறிப்பிடவில்லை. இவையெல்லாம் பௌத்தத்தின் மிக அடிப்படையான கொள்கைகள். இக்கொள்கைகளை நோக்காமல், வெறும் தொடர்களைக் கொண்டு வள்ளுவத்தைப் பௌத்த நூலெனப்புகல்வது உண்மை ஆராய்ச்சியாகாது. ஈங்கு மற்றொன்றையும் நோக்கல் வேண்டும். புத்தர் தம் பிக்குகளைப் பிச்சை எடுத்தே உண்ணல் வேண்டுமென்று பணித்தார். காரணம் அவர்களுக்கு ஆசையின் பொருட்டுச் சிறிது சிறிதாகச் சொத்துச் சேர்க்கும் எண்ணம் வந்துவிடக் கூடாதென்பதற்கும், அர்பபணிப்புணர்வு குன்றிவிடும் என்பதற்கும் அவர் அவ்வாறு கூறினார். அக்கூற்று அவர் காலத்துக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அஃது எக்காலத்துக்கும் பொருத்துமா என்பது ஐயமே வள்ளுவர் எதனையும், எவர் கூறினாலும், அதனை ஆழ்ந்து நோக்கி, அது காலா காலத்துக்கும், பொருத்துமா என்பதை எண்ணிப் பார்த்தவர் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணப தறிவு(குறள்:423) என்றார் புத்தர் பிக்குகளைப் பிச்சையெடுக்கப் பணித்தார். அப்பழக்கம் அவர் காலத்துக்குப் பின் நின்றுவிட்டது. பிற்காலத்தில் பிக்குகள் ஆடம்பரத்தில் மூழ்கி,விலையுயர்ந்த பொருட்களும், இருக்கைகளும் குவியும் இடமாகச் சங்கத்தை ஆக்கிவிட்டதாகப் பௌத்த பேரறிஞர் கோசாம்பி கூறியுள்ளார்.4
பிச்சை எடுத்தல், பிக்குகளிடம் குறைந்ததற்குக் காரணம் மன்னர், செல்வர், மற்றும் மக்கள் வழங்கிய கொடைகள் குறைந்தது பெருங் காரணமாக இருந்தாலும், அடிப்படைக் காரணம், பிற்காலத்தில் மக்களின் ஆதரவு பிக்குகளுககு இல்லாமற்போனதேயாகும். இதற்குப் பல்வேறு பொருளியல் சமுக சமயக் காரணங்கள் உண்டு. அவற்றை விரிப்பின் கட்டுரை விரியும். எனினும், ஒரு முக்கியக் காரணத்தைச் சுட்டுவது ஈங்குப் பெரிதும் பொருத்தமுடைத்து. பிற்காலத்தில் பிக்குகளுக்கு மக்கள் ஆதரவு குன்றியதால் பிச்சை எடுப்பதில் மானம் குறுக்கிட்டு விட்டது. மற்றொன்றும் இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆதரவு இருந்திருப்பினும், நாளடைவில் பிக்குகளுக்குப் பிச்சையெடுப்பதில் மானப்பிரச்சனை தோன்றியே இருக்கும். மக்கள் மனத்திலும், பிக்குகளின் மனத்திலும், சமுதாயச் சூழ்நிலையால், பிற்காலத்தில் பிச்சை எடுப்பதில் மாற்றம் நிகழும் என்பதைப் பௌத்த சமயத்தினர் எப்படியோ அறியத் தவறினர். மாற்றத்தை ஓர் அரிய கோட்பாடாகக் (கணபங்கவாதம் -Theory of Momentariness) கொண்ட புத்தர் இதில் எப்படியோ தவறியுள்ளார். ஆனால், வள்ளுவர் இதனைப் பல நிலையில் ஆய்ந்துள்ளாரென்று எண்ணத்தோன்றுகிறது. அதனாற்றான் அவர், ' நல்லாறு எனினும் கொளல்தீது" - 222 என்றார். பிக்குகளின் பிச்சையெடுத்தலை நயத்தக்க நாகரிகத்துடன் மறுக்க வேண்டியே ~நல்லாறு| எனக் குறிப்பிட்டார். இரவு, இரவு அச்சம் ஆகிய அதிகாரங்களில் வறுமையால் பிச்சையெடுப்பதையே கூறுகிறார். ஆனால், இங்கு ~நல்லாறு எனக்குறிப்பிட்டிருப்பது பௌத்த சமயக் கோட்பாட்டையேயாகும். பொதுநத்துக்காக ஒருவன் உயிரைப் போக்கவும் துணியலாம். அஃது இயற்கையே ஆகும். காட்டாக, நம்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் போது, பலர் தத்தம் உயிரைத் துச்சமாகப் போக்கினர். பொதுநலத்துக்காக உயிரை இழக்கத் துணியும் ஒருவர் மானத்தை இழக்க ஒருப்படார்.இந்த மானப்பிரச்சனை குறுக்கிட்டதால்தான் நாளடைவில் பிக்குகளும் பிச்சை எடுத்தலை விட்டனர் எனலாம். மானப்பிரச்சனையை உளவியல் அடிப்படையிலும் நோக்கியதால்தான் அதனை வள்ளுவர் மறுத்துரைத்தார். அதனாற்றான் அவர்,
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும (குறள் - 1061) என்றும்,
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் (குறள் - 1066) என்றும் கூறினார். பொருளை மறைக்காது உளம் மகிழ்ந்து ஈயுபவரிடத்தும் இரக்கக் கூடாதென்றும், மற்றும் இறக்கும் நிலையிலுள்ள ஆவைக் காப்பாற்ற வேண்டியும் இரக்கக் கூடாதென்றும் அவர் கூறுகிறார். இதிலிருந்து மானத்தை எத்துணை நுட்பமாக அவர் உணர்த்தியுள்ளார் என்பதை நன்கு உணரலாம். அவ்விரவான் மானந்தீராதென்னுந் துணையல்லாது அதற்கு மிகுதி கூடாமையின் வல்லதோர் முயற்சியான உயிரோம்பலே நல்லதென்பது கருத்து, 5 என்று பல்கலைக் குரிசல் பரிமேலழகர் கூறியிருப்பதும் ஈங்கு ஊன்றி ஊன்றி உன்னத்தக்கது. மெலும் ~மானம்| என்ற அதிகாரத்தை வகுத்து, ~உயிர் நீப்பர் மானம் வரின் -969 என்று அவர் உணர்த்துவதால் மானத்தை எத்துணை உயர்வாக மதித்துள்ளார் என்பதையும் தௌ;ளிதின் உணரலாம்.
மேலும், சமணமும், பௌத்தமும் துறவுக்கே முதலிடம் தந்தன. சமணத்தைப் போன்று கடுந்துறவைப் பௌத்தம் கூறாவிடினும், பௌத்தம் கூறிய துறவம் சற்றுக் கடுமையானதே. வள்ளுவரோ இவற்றிற்கு மாறானவர். அவர் கருந்துறவைப் போதிக்கவில்லை. மற்றும் துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்துக்கே அவர் முதலிடம் தந்தார். இதனை
ஆற்றின் ஒழுக்கி அறனிமுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து (குறள்.48) என்று வலிவாக உணர்த்துவதன் மூலம் உணரலாம்.
இதுகாறும்விளக்கியவற்றால் வள்ளுவர்,அடிப்படையான பௌத்த கோட்பாடுகளுக்கு எத்துணை மாறானவர் என்பதை நன்கு அறியலாம்.