Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 367. வாழச் செய்த நல்வினை! ஔவையார்.


Guru

Status: Offline
Posts: 7468
Date:
புறநானூறு 367. வாழச் செய்த நல்வினை! ஔவையார்.
Permalink  
 


367. வாழச் செய்த நல்வினை!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
பாடலின் பின்னணி: ஒருகால், சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தனர்.  அதைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இப்பாடலை இயற்றியுள்ளார். ’வேந்தர்களே! இவ்வுலகம் வேந்தர்களுக்கு உரியதாயினும், அவர்கள் இறந்தால், இவ்வுலகம் அவர்களோடு செல்வதில்லை. ஆகவே, அறநெறிகளில் பொருளீட்டி, இரவலர்க்கு வழங்கி, இன்பமாக வாழுங்கள்.  உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்த நல்வினையைத் தவிர நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.  எனக்குத் தெரிந்தது இதுதான். ‘  என்று இப்பாடலில் ஒளவையார் மூவேந்தர்களுக்கும் அறிவுரை கூறுகிறார். 
திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து                  5

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது                           10

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; வானத்து             15

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!

அருஞ்சொற்பொருள்: 1. நாகம் = நாகலோகம் = தேவலோகம்; பாகார் = பாகு+ஆர்; பாகு = பங்கு; ஆர்தல் = பொருந்துதல்; மண்டிலம் = வட்டம், நாடு. 3. நோன்மை = வலி; நோற்றார் = வலிமையுடையோர். 4. ஏற்றல் = இரத்தல். 6. பாசிழை = பாசு + இழை; பாசு = பசுமை; பொலம் = பொன். 7. நாரரி = நாரால் வடிக்கப்பட்ட; தேறல் = கள்ளின் தெளிவு; மாந்துதல் = குடித்தல், உண்ணுதல். 8. அருகாது = குறையாது; வீசுதல் = குறையாது கொடுத்தல். 9. வைகல் = நாள். 11. ஆழ்தல் = மூழ்குதல் (இறத்தல்); புணை = தெப்பம். 12. ஒன்று – இங்கு வீடுபேற்றைக் குறிக்கிறது; புரிதல் = விரும்பல்; இருபிறப்பாளர் = பார்ப்பனர். 13. முத்தீ = வேள்வி செய்யும் பொழுது அந்தணர்கள் வளர்க்கும் மூன்று வகையான தீ (ஆகவனீயம், தட்சிணாக்கினிகாருகபத்தியம்); புரைய = போல; காண் = அழகு; தக= பொருந்த. 16. வயங்குதல் = விளங்குதல்; இம் – ஒலிக் குறிப்பு. 17. உறை = மழைத்துளி. 18. பொலிதல் = சிறத்தல், செழித்தல்
 
கொண்டு கூட்டு: வேந்திர், மண்டிலம் செல்லா ஒழியும்; சொரிந்து, சிறந்து வீசி, வாழ்தல் வேண்டும்;  புணைபிறிது இல்லை, மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டுக.
 
உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை.  அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும். பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும், மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும், இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க. நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.
 
சிறப்புக் குறிப்பு: புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்.
 
ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை, அந்தணர்கள் வேள்வி செய்யும் பொழுது வளர்க்கும் மூன்று தீ வகைகளாகும்.  அவற்றுள் ஆகவனீயம் என்னும் தீ, தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப்படுவது. தட்சிணாக்கினி என்னும் தீ, தெற்கில் எட்டாம் பிறைத் திங்கள் போன்ற வடிவமான குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ.  காருகபத்தியம் என்னும் தீ ஆகவனீயத்தை அடுத்து, வட்ட வடிவமைந்த குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ. இப்பாடலில், தமிழ் மூவேந்தர்களுக்கு முத்தீ உவமம் ஆகக் கூறப்பட்டுள்ளது.
 
மூவேந்தர்களும் அவரவர் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, அறம் சார்ந்த செயல்களைச் செய்து தம்முடைய நாட்டு மக்களைப் பாதுகக்க வேண்டும் என்பது இப்பாடலில் ஒளவையார் கூறும் கருத்து. ஆனால், தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையின்றித் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்ததால், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும், தெலுங்கரும், வெள்ளையரும் தமிழ் நாட்டை பலகாலம் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு கூறும் செய்தி


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

367. வாழச் செய்த நல்வினை!

பாடியவர்: ஒளவையார். சிறப்பு : சேரமான் மாரி வெண் கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந் தாரைப் பாடியது. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

(சோழன் இயற்றிய யாகத்திற்கு அவ்விரு பெரு வேந்தரும் வந்திருந்தனர்; மூவரும் ஒருங்கே அமர்ந்திருந்த நிலை கண்டு, ஒளவையார் அவரை வாழ்த்துகின்றனர். ‘வாழச்செய்த நல்வினை அல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை என்னும் அறவாக்கு, மிகவும் போற்றிக் கொளத்தக்கது)

நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா; வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும், ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, 5 பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல், வாழச் செய்த நல்வினை அல்லது, 10

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்; யான்அறி அளவையோ இவ்வே, வானத்து 15

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப் பரந்து இயங்கும் மாமழை உறையினும், உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

'நிலவுலகம் தம்முடையதே என்று, ஆள்வோர் எந்நாளும் சொல்வதற்கில்லை. இதற்கு அயலவரேயாயினும் வலி மிகுந்தவரானால் இஃது அவர்பாற் சேர்ந்துவிடும். அதனால், பார்ப்பார்க்கு அவர் வந்து இரந்து நிற்கும்போது, பூவும் பொன்னும் நீருடன் வார்த்துத் தருக. மகளிர் பொற்கலத்திலே ஏந்தித் தரும் தேறலை உண்டு மகிழ்ந்து, வரும் இரவலர்க்கு அருங்கலம் குறையாது வழங்கி வாழ்க ஆராய்ந்தால், இவ்வுலகில் உயிரோடு இருக்கும் வரையும் புகழுடம்புடன் இங்கே நிலைத்து வாழச் செய்யும் நல்வினைகளன்றி, வேறு எதுவும் நமக்குத் துணையாக உதவாது. இரு பிறப்பாளர் செய்யும் யாகத்தைக் கண்டவராக இங்கிருக்கும், கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தரே! யான் அறிந்தவரை வாழ்வின் இலக்கணம் இதுவே யாகும். வானத்து மீனினும், வீழும் மாமழையின் துளிகளினும் நெடுநாள் நும் வாழ்நாள் விளங்குவதாக!

1. நாரரி தேறல் தவாது நன்மகிழ்ந்து - புறத்திரட்டு

! 2. துணை பிறிது - புறத்திரட்டு

3. இயங்கும் - புறத்திரட்டு



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

புறநானூறு 367, பாடியவர்: ஔவையார்பாடப்பட்டோர்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிபாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிசேரமான் மாவெங்கோ, திணை: பாடாண்துறை: வாழ்த்தியல்
நாகத்தன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,  5
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்,
வாழச் செய்த நல்வினை அல்லது  10
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித் தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே; வானத்து  15
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நும் நாளே.

Puranānūru 367, Poet: Avvaiyār sang to Chozhan Rāsasooyam Vētta Perunarkilli, Cheraman Māvenkō and Pandiyan Kānapēreyil Kadantha Ukkira Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Vālthiyal
Even if the land with divisions is like heaven,
they cannot take it with them.  It will go to
mighty men, even if they are strangers.
To brahmins who come in need with wet hands,
give flowers and gold, pouring water.  Drink
fiber filtered toddy served in golden vessels
by women wearing fine jewels and give precious
jewels to those who come for help.  You should
live through the days allotted for you here.
When you die, the good deeds that you have done
will be the only raft, nothing else!

You kings who ride in chariots with flags and own
victorious white umbrellas, beautiful to behold
like the three flames of the virtuous, twice-born
Brahmins who have subdued their senses through
their will!  This is what I understand!  May your
living days be splendid!  May they be brighter than
the stars in the sky!  May they be more than the
raindrops from the dark thundering clouds!

Notes:  Chozhan Rāsasooyam Vētta Perunarkilli, Cheraman Māvenkō and Pandiyan Kānapēreyil Kadantha Ukkira Peruvazhuthi were great friends.  Avvaiyār sang to the three of them here.  It was the tradition for the donor to pour water when giving alms to Brahmins.  Puranānūru 361, 362, 367 and Pathitruppathu 64 have references to this.   Avvaiyār wrote Puranānūru poems 87-104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390 and 392.  There was only one Avvaiyār in the entire Sangam literature.  பார்ப்பார்க்கு ஈர்ங்கை (4) – ஒளவை துரைசாமி உரை – வலிய போர்ப்படை ஏந்திப் போருடற்றும் பண்பினரல்லர் ஆகலின், பார்ப்பார் கை உண்டற் தொழில் ஒன்றிற்கே பயன்பட்டமை தோன்ற ஈர்ங்கை என்றார்.  முத்தீ (13) – பரிபாடல் பாடல் 5 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆகவநீயம், காருகபத்தியம், தக்கணாக்கினி என்பன.

Meanings:  நாகத்து அன்ன – like heaven, நாகம், நாகலோகம் (நாகத்து – நாகம், அத்து சாரியை), பாகு ஆர் மண்டிலம் – the world with divisions, தமவே ஆயினும் – even if it is theirs, தம்மொடு செல்லா – they don’t go with them, வேற்றோர் ஆயினும் – even if they are strangers from another country, நோற்றோர்க்கு ஒழியும் – it will go to mighty men, ஏற்ற பார்ப்பார்க்கு – to Brahmins who requested with lifted hands, ஈர்ங்கை நிறைய – with wet hands full, பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து – give flowers and gold pouring water, பாசிழை மகளிர் – women wearing fine jewels, பொலங்கலத்து ஏந்திய நார் அரி தேறல் – fiber filtered toddy in gold bowls (fiber – பன்னாடை, the cloth-like fibrous piece covering the base of coconut leaf stems), மாந்தி மகிழ் சிறந்து – drink and be happy, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் – give precious jewels to those who come in need and live, இவண் வரைந்த வைகல் வாழச் செய்த நல்வினை – good actions done here with the days given to you, அல்லது ஆழுங் காலை – when you die, புணை பிறிது இல்லை – there is nothing else as a raft, ஒன்று புரிந்து – desiring just one thing (righteous), அடங்கிய இருபிறப்பாளர் முத்தீப் புரைய – like the ritual flames of twice born Brahmins who have controlled their senses (புரை – உவம உருபு, a comparison word), காண்தக இருந்த – beautiful to behold, கொற்ற வெண்குடைக் கொடித் தேர் வேந்திர் – you kings with chariots with victorious white umbrellas and banners, யான் அறி அளவையோ இதுவே – this is what I understand, to the extent of what I understand (அளவையோ – ஓகாரம் அசைநிலை, an expletive), வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் – more than the bright stars that appear in the sky, இம்மெனப் பரந்து இயங்கு மா மழை உறையினும் உயர்ந்து – higher in numbers than the loud raindrops that fall from dark thundering clouds (இம்மென – ஒலிக்குறிப்பு), மேந்தோன்றிப் பொலிக நும் நாளே – may your days be splendid (நாளே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard