திருமுறைகளில் சுட்டப்பெறும் வேதங்கள் - வடமொழி வேதங்களா ( ரிக் , யஜுர் , ஸாம & அதர்வண ) அல்லது தமிழ் வேதங்களா ( அறம் , பொருள் இன்பம் & வீடு ) ?
இரண்டாம் திருமுறை
078 திருவிளநகர்
பாடல் எண் : 7
பண் : காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார்
கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.
திருச்சிற்றம்பலம்
பொழிப்புரை:
எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும்.
குறிப்புரை:
சொல்தரும் மறை - `எழுதாக்கிளவி` யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச், செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். `சொற்றருமறை முதல் தொன்மை நூல்முறை கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவரு குரவன்` (சிவபுண்ணியத்திரட்டு). கல்தருவடம் - செபமணி மாலை. தருவ்வடம் - வகரம் விரித்தல் விகாரம். மல் - வலிமை. திரள்தோளினார், பொடிப் பூசினார் - திருநீற்றையணிந்தவர். ஒற்றுமிகை. வில் - ஒளி. தரும்மணி - நீலரத்நம். முதலடியில் தருதல் துணைவினையாதலும் கூடும்.
குறிப்பு : மேலே எடுத்தாளப்பட்ட திருமுறைப்பாடலும் , பொழிப்புரையும் மற்றும் குறிப்புரையும் தருமை ஆதீன Website உதவி .
முதலில் மேலே உள்ள திருப்பாடலில் வந்துள்ள முதல் வரி :
'' சொற்றருமறை பாடினார் '' - பொருள் : எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர் / `எழுதாக்கிளவி` யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச், செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம்.
வேதங்களை இறைவன் ' வைகரி வாக்காக பிரபஞ்சத்தில் ஒலிக்குறிப்பொடு அருள , அதைக் கேட்டுணர்ந்த ரிஷிகள் , தம் சீடர்களுக்கு திரும்ப அருளினார்கள் . இறைவன் ஞானியருக்கு வேதங்களை அருளினான் / பாடிக்காட்டினான் / சொன்னான் என்ற பலவிடங்களில் நம் சமய ஆச்சாரியர்களால் திருமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன . இந்த வேதங்கள் யாவை ?
1. நம் தரப்பு
நம் தரப்பு இந்த வேதங்கள் , வடமொழியில் உள்ள வேதங்களே ( ரிக் , யஜுர் , ஸாம & அதர்வண ) என்பதாகும் .
- வேதங்களின் பெயர்கள் ரிக் மற்றும் ஸாம வேதங்களின் பெயர்கள் திருமுறைப்பாடல்களில் பயின்று வருகின்றன . வேதங்களை ' ஸ்ருதி ' என்பார்கள் , அதாவது செவியினால் உணரப்படுவது , என்று பொருள் . ஸம்ஸ்க்ருத மொழியில் வேதங்கள் முதலில் வாயினால் ஓதப்பட்டு வந்தன . வரிவடிவம் மற்றும் நூல்களாக முதலில் இல்லை . செவியால் கேட்டுணரப்படுவதில்தான் முக்கியமாக கருதப்பட்டது . ஒலிக்கே சிறப்பு , ஏன்னென்றால் தவறான ஒலிக்குறிப்பு மந்திரங்களின் அர்த்தம் பிறழ்ந்து , சரியான பலனைக் கொடுக்காது அல்லவா ? எனவே நெடுங்காலம் இவை வாயால் ஓதப்பட்டு , செவியால் கேட்கப்பட்டு , மனனம் செய்யப்பட்டு வந்தன . இதற்காக தனியான குருமார்களும் , சிஷ்ய பரம்பரைகளும் கறாரான விதத்தில் பிராமணர் குலங்களிலே நிலைநிறுத்தப்பட்டன . வரிவடிவம் உருவாக்கப்ட்டு , ஏடுகளிலே இந்த வேதங்கள் ஏறினால் , பாடபேதம் மற்றும் தவறான உச்சரிப்பு போன்ற பிழைகளினால் , இந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் சக்தி பலன் அளிக்காது என அஞ்சப்பட்டது நெடுங்காலம் கழித்தே , பிராமணர்களில் சில பிரிவுகள் இருவேதம் படித்தவர் ( துவேதி ) , மூன்று வேதங்கள் படித்தவர் ( திரிவேதி ) & நான்கு வேதங்கள் படித்தவர் ( சதுர்வேதி ) நிலைநிறுத்தப்பட்டபின்னரே வேதங்கள் ஏடுகளில் வரிவடிவம் பெற்று ஏறின.
மேலே சொன்ன வரிகளில் , நாம் சொல்ல வருவது என்னவென்றால் , வேதங்கள் தோன்றி , ஏடுகளில் வரிவடிவம் பெற்று ஏறிய பிறகும் கூட , இந்த ஏடுகள் , அந்நிய சமயத்தினர் படையெடுப்பு மற்றும் இயற்கை உற்பாதங்கள் ( ஆழிப்பேரலை , தீ , நிலநடுக்கம் ) ஏற்பட்டு அழிந்திருந்தாலும் , பல்வேறு பிராமண குரு / சிஷ்ய மரபின் நினைவிலிருந்து இவை ஒருபோதும் அழிந்துபட்டு இருக்காது . அதனால்தான் , சிறிதும் மாற்றமில்லாமல் வேதங்கள் தோன்றின காலத்திலிருந்து இன்றளவும் இடைப்பட்ட பல்லாயிரம் கால இடைவெளியை மீறி , வேதங்கள் அதன் தூய வடிவிலே நமக்கு இன்றும் இருந்து வருகின்றன.
நம் சமய பரம ஆச்சாரியரான ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான் பதிகங்களில் உள்ள " அறம் , பொருள் , இன்பம் & வீடு "' என்பனவே நம் வேதங்கள் . மேலே குறிப்பிடப்பட்ட வடமொழி வேதங்கள் ( ரிக் , யஜுர் , ஸாம & அதர்வண ) , நம் வேதங்கள் அல்ல என்கிறார்கள் .
அவர்களுக்கு பின்வருமாறு சில ஐயங்களை முன் வைத்து தெளிவு பெற விரும்புகிறோம் :
- நம் திருமுறைகளில் - மறை என்று ரிக் மற்றும் ஸாம வேதங்களின் பெயர்களை நம் சமய ஆச்சாரியர்களே குறிப்பிட்டு உள்ளார்களே ? பல இடங்களில் முதலில் தோன்றிய ரிக் வேதத்தை சிறப்பாக குறிப்பிடுவதால் , அதன் இனம் பற்றி மற்றைய மூன்று யஜுர் , சாம & அதர்வண வேதங்களையும் குறிப்பிடுவதக்கத்தானே பொருள் ?
நீங்கள் குறிப்பிடும் அறம் , பொருள் , இன்பம் & வீடு போன்ற வேதங்கள் இப்பொழுது எங்கே உள்ளன ? வேதங்களை இறைவன் '' சொற்றருமறை பாடினார் '' என்றல்லவா மேலே உள்ள திருமுறைப்பாடலின் முதல் வரி , ஆகவே இறைவனிடம் இதனை அருளக்கேட்ட குருமரபும் / சீடர்மரபும் ( வடமொழி வேத குரு மரபும் மற்றும் சீடர் மரபும் போல ) சைவர்களிடையே வழிவழியாக தற்போது உள்ளனவா ? அவர்கள் யார் ? இந்த வேதங்கள் பின்னொரு காலத்தில் ஏடுகளில் எழுதப்பட்டு எவ்வாறு மறைந்தன ? ஏடுகள் ஒருவேளை காலவெள்ளத்தில் / ஆழிப்பேரலையில் மறைந்தாலும் இந்த வேதங்களை கற்று உணர்ந்ததங்கள் நினைவில் இருத்திக்கொண்ட ஒரு சைவ மரபோ / குலமோ கூடக் கிடைக்கவில்லையா ?
-இருதரப்பு வாதங்களையும் சைவ உலகின் முன் மிகபணிவோடு வைக்கின்றேன்