அறமும் ஆன்மிகமும் நமது வாழ்க்கையின் சிறப்புமிக்க அடிப்படையாக இருந்து, நம்முடைய நெறி, குறிக்கோள் போன்றவற்றிற்கு ஓரு ஆதாரமாக இருந்துள்ளன. தொன்று தொட்டு நம் நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே ஒரு தலையாய கொள்கை என்று கருதவில்லை. இறை உணர்வு, கூட்டு வாழ்வு, சமுதாய நலன் போன்ற உயர்நத் பண்புகளுக்கு முக்கிய இடம் கொடுத்து, எளிமையான வாழ்வே நம்மை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்லும் என்கிற கோட்பாட்டில் தீவிரமான நம்பிக்கை வைத்து வந்தனர் நம் நாட்டு மக்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளாக யோகிகளும் ஞானிகளிலும் இயற்கை எழில் நிரம்பிய பல இடங்களில் அமர்ந்து கொண்டு தங்களது மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றை ஒருமுகப்படுத்திக் காணும் பொருள்களுக்கு அப்பாற்பட்ட, அவற்றிற்கு மூல காரணமாக இருக்கின்ற பரம்பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார்கள். பரம்பொருளைத் தம்முள் அனுபவித்தார்கள். அந்த இறை அனுபவம் அவர்களுடைய புனித உள்ளங்களிலிருந்து ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது. திருவருள் முழுமையாகப் பெற்ற அவர்கள் உலக மக்களின் உயர்வுக்காக அருளிச் செய்தவை வேதமும் ஆகமமுமாகும். அவர்களுடைய உள்ளங்களிலே தோன்றிய இறை எண்ணங்கள் அவர்களுடையவையல்ல. இறைவனின் திருவாக்கு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வேதாகமங்கள் இறைவனுடைய மொழியாகவே கருதப்படுகின்றன. "வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடினார். வேத காலத்து முனிவர்கள் உலக விஷயங்களில் பற்று வைக்காமல் எல்லாவற்றிருக்கும் மேலான பரம்பொருளை ஆர்வத்துடன் நாடினார்கள்.
சீரிய முறையில் இறைவனைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, தங்கள் உள்ளத்தை அவர்கள் ஆழ்ந்து ஆராய முற்பட்டார்கள். அதன் விளைவாக இறை உணர்வு முழுதும் பெற்ற அருள் பெரியார்களுடைய உள்ளங்களில் வேதங்கள் கனிந்த அனுபவமாக எழுந்தன. அவர்களுடைய உள்ளங்களிலே எழுந்த வேதங்களின் ஒலி பரம்பொருளைப் பற்றிய உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது. அந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட வேத முனிவர்கள் பேரறிவைத் தம்முள் அனுபவித்துப் பேரின்பம் பெற்றார்கள். அத்துடன் நின்றுவிடவில்லை அவர்கள். தாங்கள் பெற்ற இன்பத்தை உலக மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டி, வழிவழியாக, வாய்மொழியாகத் தங்களுடைய சீடர்களுக்கு வேதங்களையும் ஆகமங்களையும் உபதேசித்தனர்.
வேதம் முதலில் ஒன்றாகே இருந்தது. எண்ணிலடங்காத மந்திரங்களைக் கொண்டிருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வியாச முனிவர் வேதத்தை ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வ வேதம் என்று நான்காகப் பிரித்தார். இவ்வாறு வேதத்தைப் பிரித்தமை காரணமாகவே அவருக்கு வேதவியாசர் என்ற பெயர் ஏற்பட்டது.
ருக் வேதம் செய்யுள் வடிவில் உள்ளது. யஜுர் வேதம் உரைநடையிலும், சில பகுதிகளில் செய்யுள்களாகவும் உள்ளது. சாம வேதம் இசையுடன் பாடும் பாணியில் அமைந்துள்ளது. சாம வேதத்தில் பெரும்பாலும் ருக்வேத செய்யுள்கள் காணப்படுகின்றன. அதர்வ வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. மூன்று வேதங்களில் உள்ள செய்யுள்கள் வேள்விகள் நடத்துவதற்கான முறைகளை விரிவாக விளக்குகின்றன. அதர்வ வேதம் உபசனைக்குப் பயன்படுகிறது. நன்மை பயக்கவும், இடர்களை நீக்கவும், பகைவரை அழிக்கவும், பொது நலம் புரியவும் தேவைப்படும் மந்திரங்கள் அதர்வ வேதத்தில் காணப்படுகின்றன.
வேதங்கள் சாகைகள் எனப்படும் உட்பிரிவுகளுடன் அமைந்துள்ளன. மேலும், இந்தச் சாகைகளில், சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம் என்ற மூன்று பகுதிகள் இருக்கின்றன. இந்த மூன்று பகுதிகளையும் முறையே கர்ம காண்டம், உபாசன காண்டம், ஞான காண்டம் என்று பாகுபடுத்தியும் கூறுவதுண்டு.
வேதங்கள் மிகப் பழமையானவை. பல ஆயிரம் ஆண்டு காலமாக முனிவர்கள் வேதங்களை அருளிச் செய்துள்ளார்கள். அவை இறைவனைப் பல நிலைகளில் துதிக்கின்றன, போற்றுகின்றன. இம்மையிலும் மறுமையிலும், மனிதர்கள் நல்ல பயனை அடைய வேண்டிச் செய்யும் வேள்விகள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செய்யப்பட வேண்டிய செயல்களையும், தவிர்க்கப்பட வேண்டிய செயல்களையும் வேதங்களின் கர்ம காண்டம் தெளிவுபடுத்துகின்றது. இறைவனை உபாசனை செய்யும் வழிகள் உபாசான காண்டத்தில் வருகின்றன. நற்கருமங்களை சுயநலமின்றிச் செய்து மனத்தூய்மையை முதலில் பெற வேண்டும். பின்னர் தியான முறைகளைக் கையாண்டு ஒருமைப்பட்ட மனநிலையை அடையும் பொழுது இறைவனைப் பற்றிய அனுபவத்தை, மெய்யுணர்வைப் பெறலாம். மெய்ப்பொருள் எத்தகையது என்பதை ஞானகாண்டம் விளக்குகின்றது. ஞானகாண்டம் இயற்கை எழில் மிகுந்த காடுகளில் தோன்றியது என்று கருதலாம். அறிவில் முதிர்ந்தவர்கள், இறைசிந்தனைகளில் தமது மனத்தை முழுமையாகச் செலுத்தி, காடுகளுக்குச் சென்று எல்லாப் பற்றுகளையும் களைந்து, தீவிர சிந்தனையில் ஈடுபட்டு, மெய்ப்பொருளின் தன்மையைத் தம்முள் உணர்ந்து உலகிற்கு அளித்ததே உபநிடதங்கள் எனப்படும். இவையே ஞானகாண்டப் பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அறியாமையை நீக்கிக்கொண்டு ஒவ்வொருவரும் தன்னுள் இருக்கும் இறைத்தன்மையை உணர்ந்து கொள்வதே உபநிடதங்களுடைய கல்வியுமாகும். உபநிடதங்கள் வேதங்களின் தத்துவ ஞான அனுபவப் பகுதிகளாக திகழ்கின்றன. எனவே உபநிடதங்கள் வேதத்தின் முடிவாக, வேதாந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆகவே, உபநிடதங்கள் வேதங்களின் உட்பிரிவுகளாகும். வேதங்கள் வேறு உபநிடதங்கள் வேறு என்பதல்ல.
பண்டைத் தமிழ்நாட்டிலும் வேதம் ஒலித்ததாகச் சங்க நூல்கள் சொல்லுகின்றன. சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் மக்கள் காலை வேளையில் முதல் கோழி கூவும் போதே எழுந்து விடுவார்கள் என்று கூறப்பட்டபொழுது, பாண்டிய நாட்டுப் புலவர் ஒருவர் மதுரை மாநகரில் பொழுது விடிவதற்கு
நெடுநேரத்திற்கு முன்பிருந்தே வேதியர்கள் வேதம் ஓத மக்கள் எழுந்து விடுவார்கள் என்று பெருமையோடு கூறினார்.
"பூவினுள் பிறந்தோன் நாவினில் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏமஇன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதுஎம் பேரூர் துயிலே".
இது பரிபாடலில் வருகின்றது.
வேதங்களை இறைவனுடைய திருவாக்காகப் பெரியோர்கள் கூறுவர். "இறைவனூல்" என்று திருமூலர் குறிப்பிடுகிறார். வேதங்கள் காட்டும் பரம்பொருள் ஒன்றேயாகும். வேதங்களில் பல தெய்வங்களுடைய பெயர்கள் காணப்பட்டாலும், வேதங்களின் முடிவான முடிவு இறைவன் ஒருவனே என்பதாகும். ஓங்கி, பரந்து, ஆழ்ந்து நிற்கும் பரம்பொருளுடைய முழு விளக்கமாக வேதங்கள் அமைந்துள்ளன. ஆகவே, வேதங்கள் ஒரு பொதுமறையாகும். இறைவனுடைய நெறியை அடைவதுதான் மக்களாய்ப் பிறந்தவர்களுடைய இலட்சியாமாகும் என்பதை வேதங்கள் உணர்த்துகின்றன. அறிவில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்று என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அப்படி அடைவதற்கான அறங்களை வேதங்கள் எடுத்துக் கூறுகின்றன. அந்த அறங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமையாகும் என்று திருமூலர் உணர்த்துகிறார். வேதத்தில் கூறப்பட்டுள்ள அறத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்றும் திருமந்திரம் அறிவிக்கின்றது. வேதங்களில் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அறங்களும் உண்டென்றும் திருமூலர் கூறுகின்றார்.
நம்முடைய அறிவுத் திறத்தினால் தர்க்க வாதம் செய்து, வாதிட்டு உண்மையை நிலைநாட்டுவதாகச் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணாக்குவதைவிடத் தர்க்காவதங்களைத் தவிர்த்து, வேதங்களில் கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே அவற்றின் உட்பொருளை உணர்ந்து மக்கள் தலையாய இன்பம் பெறக்கூடும் என்றும் திருமூலநாயனார் சொல்லுகின்றார்.
வேதங்களில் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அறங்களும் உண்டென்று திருமூலர் கூறுவதைச் சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மனிதன் பகுத்தறிவு உடையவன். அந்த அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து கிடைக்கும் உண்மையின் அடிப்படையிலேதான் வாழ்க்கை வளர இயலும் என்ற கொள்கை உடையவர்கள் பலர் உண்டு. விஞ்ஞானரீதியாக நமக்குக் கிடைக்கும் அறிவு
மிகவும் முக்கியமானதுதான். அதைப்பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் பல வகைகளில் முன்னேறி இருக்கின்றோம். ஆனாலும், பகுத்தறிவினால் மட்டுமே நாம் எல்லாவற்றையும் கண்டுகொள்ள முடியாது. பகுத்தறிவிற்கு ஒரு எல்லை உண்டு. ஆனால், பரம்பொருள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. பகுத்தறிவினால் மட்டும் அதை அடைந்து விட முடியாது.
"எதுக்களாலும் எடுத் மொழியாலும்
மிக்குச்சோதிக்க வேண்டா".
என்றார் ஞானசம்பந்தப்பெருமான். திருமூல நாயனாரும்
"காட்டுங் குறியுங் கடந்தனர் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்..."
என்று குறிப்பிடுகின்றார்.
வேதங்கள், ஆகமங்கள் போன்ற நூல்கள் அனுபவத்தை வலியுறுத்துகின்றன. அவை நமக்கு எடுத்துத் தருவது உணர்வுபூர்வமான உண்மையாகும். இறையுணர்வாளர்களின் உள்ளங்களிலிருந்து வெளித்தோன்றிய அனுபவ உண்மையானதால் அதைப் பெற்று இன்புற, தனித் தன்மை வாய்ந்த மனநிலை தேவைப்படுகின்றது. வேதங்கள் அறிவாற்றல் கொண்ட மனிதன் தன்னுடைய அறிவால் மட்டும் தெரிந்துகொள்ள முடியாத ஒன்றை எடுத்துக்காட்டுகின்றன. வேதங்களில் தோத்திரப் பகுதிகளும், வேள்விகளை நடத்துவதற்கான வழிகள் மட்டுமே காணப்படுகின்றன என்று கூறுவாறும் உண்டு. அவ்வாறு கூறுபவர்கள் வேதங்களை முற்றுணர்ந்தவர்களாகமாட்டார்கள். வேள்விகளுக்கு அப்பாலுள்ள பரம்பொருளை வேதங்கள், உபநிடதங்கள் மூலமாக நமக்கு விளக்ககின்றன என்பதைப் பெரியோர்கள் நமக்கு எடுத்துக்காட்டி உள்ளார்கள். இந்த விளக்கத்தைப் பெற்று, அறத்தைக் கடைபிடித்து இறை அனுபவத்தைப் பெற வேண்டும்.
எனவே, வேதங்களை வெறுமனே பாடம் படிப்பது போல ஓதிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது என்று திருமூலநாயனார் சொல்லுகின்றார். வேதங்கள் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறியைக் காட்டுகின்றன. அவை சுட்டிக்காட்டும் பாதையில் செல்லாவிட்டால் அவற்றைப் படித்தும் பயன் இல்லை. வேதங்களை உரைக்கின்றவர்கள் எல்லோரும் வேதியர்கள் ஆவதில்லை. வேதம் இறைவனுடைய மொழி ஆகும். இறைவன் அதை எப்பொழுதுமே நமது உள்ளங்களில் விளக்கிக் கொண்டிருக்கின்றான். பிரம்மன் வேதங்களை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றான். மற்ற தேவர்களும் விடாமல் வேதங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்கள் இறப்பிற்கும், பிறப்பிற்கும் அப்பாற்பட்ட நிலையான பதவியைப் பெறுவதில்லை. பிரம்மனுக்கும் பிறவி உண்டு. வேதங்களை நன்குணர்ந்து அவற்றால் சொல்லப் பெற்ற வேள்விகளையெல்லாம் சிறப்பாகச் செய்து வாழ்ந்தவர்களும், வேதங்கள் காட்டும் மெய்ப்பொருளைத் தெரிந்து கொண்டு வேதத்தை ஓதுபவர்கள் உண்மையான வேதியர்கள் ஆகிறார்கள். வேதங்களின் முழுப்பயனை அடைய வேண்டுமென்றால் அவை காட்டும் மெய்ப்பொருளை நாட வேண்டும். இதுவே
பிறப்பின் குறிக்கோளாகும். வேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரம்பொருளை அறிந்து கொள்வதற்கான ஒரு சாதனம் வேதம் என்று உணர்ந்து அதன் வழி நடப்பவரே வேதியர் என்ற ஒரு புரட்சிகரமான கருத்தைத் திருமூலர் வெளியிடுகின்றார்.
மெய்ப்பொருளை நமக்கு உணர்த்துவதே வேதங்களின் நோக்கமாகும். அந்த உணர்வினைப் பெறுவதற்கு வேதங்கள் நெறிகளை வகுத்துத் தந்துள்ளன. வேதங்களின் சிகரமாகிய ஞான காண்டம் வேத நெறியை நமக்குத் தெளிவாகத் தருகின்றது. ஞானகாண்டத்தின் அங்கமாகிய உபநிடதங்கள் எல்லா நெறிகளும் ஒன்று சேர்ந்து ஒரு பெரு வழியாக அமைந்து, திருநெறியாக விளங்குவதே வேதாந்தமாகும் என்று எடுத்துக்காட்டுகின்றன. தூய்மை, வாய்மை, ஞானம் இவற்றால் கிடைக்கக்கூடிய பேரின்பத்தை உபநிடதங்கள் உணர்த்துகின்றன. இறைவன் ஒருவனே. அவன் விண்ணாய்ப் பரந்து நிற்கின்றான், உயிருக்குயிராய் உள்ளந்தோறும் இடங்கொண்டுள்ளான். அவனே பேரறிவும் பேராற்றலுமாகும். அவனே உண்மை. அவனை நாம் பற்றுவதற்கு வழி கொடுக்காமல் புறத்தோற்றங்கள் நமது மனதை மறைக்கின்றன. மனதிலுள்ள மலங்களை நீக்கி, உலகப் பொருட்களில் ஒன்றை ஞானாசிரியன் வழியாக உணர்ந்து பெறுதலே திருநெறியாகும். அந்த நெறியை வேதாந்தம் விளக்குகின்றது என்கிறது திருமந்திரம்.
"திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே." (திருமந்திரம் - 54)
வேதாந்தம் காட்டும் திருநெறியைச் சிவமாம் நெறி என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். வேதத்தைச் செய்தவன் சிவபெருமானே என்பது அவருடைய உணர்வாகும். இதைக் குருநெறி என்றும் அழைக்கின்றார். ஆகவே, வேதங்களின் முடிவு சிவமாகிய பரம்பொருளைச் சுட்டிக் காட்டுகிறது என்று உணர்த்தி அதுவே சித்தாந்தங்களின் முடிவு என்றும் பின்னர் விளக்கி, சித்தாந்தங்களின் முழுமுதற் தன்மையைத் திருமூலர் விளக்கிச் சொல்லுவார்.
மக்கள் ஐம்பொறிகளின் இயக்கத்திற்கு ஆட்பட்டு இன்பத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். எங்கும் எப்போதும் சிற்றின்பத்தையே நாடுகின்றனர். நாதம் என்னும் ஒலி இறைவனுடைய புகழைப் பரவச் செய்ய அமைந்துள்ள ஒன்றாகும். கூத்தும், ஆட்டமும் இறைவனின் தன்மையை மக்கள் கண்முன்னே நிறுத்துவதற்கான சாதனங்களாகும். கணிகையர்கள் பாடலையும், ஆடலையும்
பரப்பி மக்களை உலக இயலில் அழுந்தச் செய்கின்றார்கள். மேல் நிலைக்குச் செல்ல வேண்டுமென்கின்ற விருப்பம் உள்ளவர்கள் கூட உலக ரசனைகளில் ஈடுபடும் அளவுக்கு இந்தப் பாடலும் ஆடலும் அவர்களை அழைத்துச் செல்கின்றன. பரம்பொருளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் மனதை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்கின்ற கட்டுப்பாட்டுடன் புறத்தோற்றத்தில் மயங்கிக் கெடாமல், அலைந்து திரியாமல் இருக்க வேண்டும் மக்கள் சாதாரணமாகப் பொருளை ஈட்டும் முயற்சியில் ஈடுபடுவர். வேதங்கள் மெய்ப்பொருளை ஈட்டுவதற்கான இடமாகும். அந்த இடத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் உலகக் கொள்கைகளை மறந்து வேதங்கள் கூறுகின்ற ஒழுக்கத்தையும் சீலத்தையும் பேண வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெறுமனே வேதத்தைப் படிப்பதால் மட்டும் நாம் விரும்பும் பயன் கிட்டாது.
ஆகவே, வேதத்தின் முடிந்த பொருள் வேட்கையற்ற நிலையாகும். வேதாந்த நிலையில் சீவன் இடைவிடாது சிவனோடு பொருந்தி நிற்கின்றது. புலன் வகைகள் தத்தம் பணியினைச் சிவத்தோடு இணைத்துக் கொள்கின்றன. சீவகரணங்கள் சிவகரணங்களாகின்றன. வேதத்தில் முடிவை உணர்ந்த பெரியோர்கள் உலகப் பற்றினை நீக்கி நிற்கின்றார்கள். அவ்வாறு நிற்பவர்களே வேதாந்தத்தின் முழுப்பொருளைத் தமக்குள் கண்டவர்கள். உலகப் பொருட்கள் மீதுள்ள விருப்பங்களை நீக்காமல் ஏட்டளவில் தகுதி பெற்றவர்கள், அறிவு பெற்றவர்கள் வேதாந்தத்தின் உண்மையை உணர்ந்தவர்களாக மாட்டார்கள்.
வேதங்கள் பொது, ஆகமங்கள் சிறப்பு. வேதங்களின் முடிவு வேதாந்தம். சிவாகமங்களின் முடிவு சித்தாந்தம். ஆகமங்கள் என்றால் இறைவனை அணுகுதல் என்பதாகும். மெய்ப்பொருளை உணர்த்துவது ஆகமம். அதை அணுகுவதற்கான பாதைகளை தெளிவாக்குவதும் ஆகமம். இறைவனுக்கும் உயிருக்கும் இடையே நிற்கும் மும்மலங்களான பாசத்தை அகற்றுவதற்காகத் தகுந்த வழிகளைக் காட்டி, பதியாகிய இறைவனை உயிரானது அணுகுவதற்கான முறைகளை நமக்குக்கற்பிப்பது ஆகமம்.
பேரறிவு உடைய சிவமானது ஞானமயமானது. ஆனந்தமயமானது. உயிர்களோ பாசங்களால் கட்டுப்பட்டுள்ளன. பாசம் உயிர்களுக்கு அறியாமையைக் கொடுக்கின்றது. பாசத்தோடு சம்பந்தப்பட்ட உயிரானது அறியாமையில் மயங்கி இறைவனை உணர்ந்து கொள்ளும் திறத்தினை இழந்து நிற்கின்றது. அந்தத் திறத்தினை மீண்டும் உயிரானது பெறச் செய்வது இறைவனுடைய திரு அருளாகும். அந்தத் திருவருளின் காரணமாக உலகம் தோற்றுவிக்கப்பட்டு தனு, கரண, புவன போகங்கள் உருவாகி அவற்றை உயிரானது பயன்படுத்துவதற்காக இறைவனுடைய ஐந்தொழில் இயக்கம் நடைபெறகின்றது. அந்த இயக்கத்தில் உயிர் படிப்படியாக முதிர்வு பெற்று இறைவனுடன் கலக்கும் ஒர் நிலையை அடையச் செய்வதற்கான வழிகளை ஆகமங்கள் கற்பிக்கின்றன. ஆகவே, ஆகமங்களில் நமக்குக் கிடைக்கும் பொருள்கள் மெய்பபொருளை உணர வேட்கையைக் கொடுத்து, அந்த வேட்கையைத் திருப்தி செய்ய வழிகளையும் காண்பிக்கின்றன. எனவேதான் வேதங்கள் பொது என்றும், ஆகமங்கள் சிறப்பு என்றும் கூறப்பட்டன. வேதங்களும் ஆகமங்களும் மெய்ப்பொருளை உணர்த்தும் இறைவநூல் என்றும், நாதன் உரை என்றும், திருமூலர் வலியுறுத்துகிறார். இவ்விரண்டையும் முழுமையாக நாடினால் இறைவன் என்றும், உயிர் என்றும் இரண்டாக நினைக்கும் நினைப்புகளும் வேறுபாடுகளும் மறைந்து, மனமானது இறை அமைதியில் லயிக்கும். இதை உணராதவர்களுக்குத் தான் என்றும், நான் என்றும் இரண்டு பிரிவுகள் கண்முன் நின்று மாயையின் காரணமாக அவர்களை ஆட்டிப்படைக்கும், வேறுபட்ட காட்சியினை மனதிலிருந்து நீக்கி ஒன்றுபட்ட காட்சியை நமக்கு அளிப்பது வேதங்களும் ஆகமங்களும் ஆகுமெனத் திருமூலர் கூறுகின்றார்.
இதையே சிவஞானசித்தி பின்வருமாறு விளக்கித் தருகின்றது.
"வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறுமுள நூல் இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல், அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்;
நீதியினால் உலகர்க்கும், சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது; நின்மறையின் ஒழிபொருள் வேதாந்தத்
தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம்; சிவாகமங்கள் சித்தாந்த மாகும்".
வேதம் இலட்சியம். ஆகமம் இலக்கணமாகும். வேதம் மெய்ப்பொருளை அறிவிக்கின்றது. ஆகமம் அதை அடைவதற்கான இலக்கணத்தையும், சாதனங்களையும், அடைந்ததன் பயன்களையும் கூறுகிறது. பொது நூல் உண்மையை உணர்த்தும், சிறப்பு நூல் அதற்கான வழிகளைக் காட்டும். வேதம் நிலமெனவும், ஆகமம் அதில் விளைந்த பயிரெனவும் சொல்லப்படுகிறது. மாறாக, வேதத்தை ஒரு மரம் எனவும், ஆகமத்தை அதில் விளைந்த பழுத்த கனி எனவும் சான்றோர்கள் கருத்துத் தெரிவிப்பார்கள்.
உயிர்களுக்கு இறைவன் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறிக் கொடுத்து அவற்றை அனுபவிக்க வைக்கின்றான். இயற்கையில் மழையும், கோடையும் மாறி மாறி வருவதுபோல உயிர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் காரணமாக இருப்பது உயிரைக் கட்டும் மும்மலங்களாகும். எப்பொழுது உயிர்கள் தோன்றினவோ அப்போதே உயிர்களைப் பந்திக்கும் பாசமும் உருவாகியது. ஊழிக்காலம் வரும்பொழுது உயிர்களெல்லாம் இறைவனிடம் ஓடுங்குகின்றன. உடல்களெல்லாம் மறைகின்றன. பிரபஞ்சத்தின் பொருள்களும் மறைகின்றன. தங்கிநிற்பது பேரறிவும் பேராற்றலும் மிக்க இறைவன், வினைகள் மீண்டும் உருவாகக் காரணமாகின்றான். உயிர்களெல்லாம் இறைவனிடம் ஓடுங்கி நிற்கும் பொழுது, மீண்டும் படைப்பு என்கின்ற பணி தொடங்கப்பெறுகிறது. அதன் வழியாக உயிர்கள் அனுபவங்களைப் பெற்று மெய்யுணர்வினை அடையவேண்டும் என்பது நியதி. அம்மையப்பரிடம் தேவி இது பற்றிய விளக்கங்களைக் கேட்க, சிவபெருமான் வேதங்களையும், ஆகமங்களையும் உமாதேவியாருக்கு உலகம் உய்யத் திருவருள் செய்தான் என்று திருமந்திரம் கூறுகின்றது.
மொழி எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது, மொழிக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை மட்டும் கொண்ட நிலையும் உண்டு. அதற்கும் அப்பால் மொழியற்ற, முற்றிலும் உணர்ந்த வெகு நுட்பமான அமைதி நிலையும் உண்டு. மொழிகளது நிலை நான்கு வகைப்படும். அவற்றை முறையே சூக்குமை, பைசந்தி, மந்ததிமை, வைகரி எனப்படும். இறைவனிடமிருந்து முதலில் ஆகமங்களைக் கேட்டவர்கள் சூக்கும நிலையில் அவற்றைப் பெற்றார்கள். பின்னர் பைசந்தி, மத்திமை என்கிற நுண்ணிய நிலையில் வேறு சிலர் பெற்றார்கள். அவர்களிடமிருந்து ஆகமங்களை இவ்வுலகில் வாழும் மக்கள் வைகரி என்னும் பேசப்படும் மொழியாகிய பருமொழியினால் பெற்றார்கள் ஆகவே, இறைவன் பெரும் கருணையோடு இப்புவியில் வாழும் மக்கள் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள பருமொழிகளைப் படைத்தான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சிவபெருமானுக்கு நாற்றிசை நோக்கி நான்கு முகங்கள் உண்டு. வானை நோக்கி ஒரு முகம். ஆக மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. அவை முறையே சத்தியோசாதம் (மேற்கு) , வாமதேவம் (வடக்கு) , அகோரம் (தெற்கு) , தற்புருடம் (கிழக்கு) , ஈசானம் (உச்சி) எனப்படும். இறைவன் நான்கு வேதங்களைக் கீழ் உள்ள நான்கு முகங்களாலும், ஆகமங்களை மேலே உள்ள ஈசான முகத்தாலும் அருளிச் செய்தான் என்பதைத் திருமூல நாயனார் "அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே" என்பார்.
இருபத்தெட்டு மூல ஆகமங்களுடன் இருநூற்றி ஏழு உபாகமங்கள் இருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது. முதலில் ஆகமங்கள் கணக்கற்று இருந்தனவென்றும், பின்னர் ஒரு அளவுக்கு வைக்கப்பட்டன என்பதைத் திருமூலர் "எண்ணில் இருபத்தென்கோடி நூறாயிரம்" என்றும், குறிப்பிடுகின்றார். இந்த எண்ணிக்கைகள் ஆகமங்கள் எழுதப்பட்ட கிரந்தங்களின் அளவு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் பல மறைந்துவிட்டன. இன்று நமக்குக் கிடைப்பவை மிகவும் குறைவே. இந்த இருபத்தெட்டு ஆகமங்களுள் திருமூலருடைய குருவான நந்திபிரான் ஒன்பது ஆகமங்களைக் கற்றுணர்ந்தார் என்பதை "நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே" என்று திருமூலர் பெருமான் குறிப்பிட்டுள்ளார். நந்திபெருமானிடம் ஒன்பது ஆகமங்களையும் கேட்டு உலகுக்கு உணர்த்தினவர்கள் எட்டுப்பேர்கள் என்பதும், அவர்களில் தானும் ஒருவர் என்பதும் திருமூலர் திருவாக்காகும். இவரைத்தவிர அவ்வாறு ஆகமங்களைக் கேட்டவர்கள் நான்கு நந்திகள், சிவயோக மாமுனிவர், பதஞ்சலி வியாக்ரமர் ஆவார்கள். இந்த ஒன்பது ஆகமங்கள் எவை என்று திருமூலர் பின்வரும் திருப்பாட்டில் புலப்படுத்துகின்றார்.
அதாவது இருபத்தெட்டு ஆகமங்களில் காரணம், காமிகம், சிந்தியம், சுப்பிரம் என்னும் சிவபேத ஆகமங்கள் மற்றும் வீரம், வாதுளம், காலோத்தரம், மகுடம் என்னும் ருத்திபேத ஆகமங்கள், மற்றும் வியாமளம் என்னும் தந்திர சாத்திரம் திருமந்திரத்திற்கு அடிப்படையாக அமைவது என்று கூறுவர். காலோத்தரம் என்பது மூல ஆகமம் இல்லையென்றும் கூறப்படுகின்றது. மேலும், வியாமளம் என்பது தந்திர சாத்திரமாகையால் அதைத் திருமூலர் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்றும் ஓர் கருத்து நிலவுகின்றது. எனவே, மேற்கூறிய திருப்பாட்டில் உள்ள மூன்றாவது அடியில் வரும் வியாமளம், காலோத்தரம் என்பவை பிற்காலத்தில் வேறொருவர் புகுத்தினார் என்ற கருத்தும் நிலவுகிறது.
திருமந்திர மாலை ஒன்பது தந்திரங்களைக் கொண்டது. திருமூல நாயனார் "நாள்தோறும் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன்" என்கிறார். இந்நூலில் உள்ள ஒன்பது தந்திரங்களும் ஒன்பது ஆகமங்களின் சாரம் என்று சொல்லப்படுகின்றது. ஆனாலும், திருமூலர் ஒவ்வொரு ஆகமத்தையும், ஒவ்வெரு தந்திரமாகச் செய்தார் என்று கூறுவதற்கு இல்லை. எல்லா ஆகமங்களும், எல்லாப் பொருளையும் பலவாறாகக் கூறுகின்றன. தனித்தனியாக அவை தனித்தனிப் பொருளை எடுத்துக் கூறவில்லை. சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் எடுத்துக் கூறுகின்றன. "சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே" என்று திருமூலர் கூறும்போது
நந்திபெருமான் அவருக்குச் சிறப்பாக உணர்த்திய ஆகம அறிவின் சாரத்தைத் திருமந்திர மாலையாக அருளிச் செய்தார் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். முற்றிலும் உணர்ந்த யோகியார் தான் கற்று அனுபவித்த உண்மையை ஒன்பது பகுதிகளாகப் பிரித்துக் கூறும்பொழுது, ஆகமங்களின் சுருக்கத்தை அவர் தருகின்றார் என்றவாறு எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஆகமங்கள் இறைவனை நமக்கு உணர்த்துகின்றன. இறைவன், உயிர், பாசம் ஆகியவற்றின் இயல்புகளைத் தெளிவாக்குகின்றன. ஐம்பூதங்களால் ஆகிய உடலானது உயிரினுடைய இருப்பிடமாக இருக்கின்றது. உடல் சடப்பொருளாகும். பிற பொருள்களை அறியும் தன்மையற்றது. உயிர்கள் குறைந்த அறிவைக் கொண்டவை. துணையின்றி அறியும் திறமை அவற்றிற்குக் கிடையாது. இறைவனோ பேரறிவாளன். அந்தப் பேரறிவு உயிர்கள் திரும்பும்பொழுது உயிர்கள் ஞானக்கண்ணால் பார்க்கத் தொடங்குகின்றன. அதுவே இறைவனுடைய அருளாகும். ஆனால், அந்த அருளினைப் பெறும் வரை உயிர்கள் பாசத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால், அறியாமை நிலையில் மூழ்கி நிற்கின்றன. மாயையிலிருந்து தோன்றிய உடலும், உட்கருவிகளும் உயிர்களுக்கு உலக அனுபவத்தைச் சேர்த்து - உண்மை அறிவினை மறைத்து வைக்கின்றன. இவை எல்லலாமுமே இறைவனுடைய செயலாகும். உயிர்களுக்கு அனுபவத்தைக் கொடுத்து, அறிவினைப் பெருக்கி, பேரினப் வடிவான மெய்ப்பொருளுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளிப்பதும் இறைவனே ஆகும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உயிரும் பல பிறப்புக்கள், இறப்புகள் கொண்ட பாதையில் பயணம் செய்து, இறைவன் அருளால் பக்குவத்தைப் பெறுகின்றன. முதிர்ந்த நிலையை அடைவதற்கான சிறப்பு வழிகளை உயிர்கள் மேற்கொள்வதன் காரணமாத்தான் பேரறிவின் அனுபவத்தைப் பெற முடியும். தக்க நேரத்தில் தக்க நிலையில் உயிர்களின் வினைக்கேற்ப ஞான ஒளியை அவைகளுக்குத் தருவதற்காக ஞானாசிரியன் தோன்றுகின்றான். உயிர் அந்த ஞானாசிரியனை நாடிச் சேருகிறது. இந்தச் சேர்க்கையும் இறைவனுடைய அருளினால் நடைபெறுகிறது. படைத்தல், காத்தல், மறைத்தல் போன்ற தொழில்களைச் செய்யும் இறைவன் உயிர்களுக்குத் தக்க நேரத்தில் திருவருளினைப் பொழிந்து அவைகளுடைய அகக்கண்களை விழிப்பிக்கின்றான். கன்மமும மாயையும் உயிரை உலகில் ஈடுபடுத்துகின்றன. உயிருக்கு உலகானுபவங்கள், பயிருக்குத் தேவையான உரத்தைப்போல, உயிரின் உயர்வுக்கு இவை தேவைப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்ற மார்க்கங்களில் உயிர்களை இறைவன் தக்க நேரத்தில் செலுத்தி அவைகளுக்குப் பரஞானத்தை அருளிச் செய்கின்றான்.
மலங்கள் உயிரோடு இணைந்து நிற்கின்றன. இந்தச் சேர்க்கையால் மனிதன் பெறும் வினைப்பயன்களை அவன் நுகர்ந்தேயாக வேண்டும். இந்த வழியில்தான் உயிர் தூய்மை அடைகிறது. தூய்மை பெற்ற உயிர் தன்னை ஒரு அறிவுமயமான பொருளென்று அறிந்துகொண்டு இறைவன் பேரறிவான பொருள் என்றும் உணர்ந்து கொண்டு, திருவருளில் மூழ்கி நிற்பது மனிதனின் குறிக்கோள் என்று திருமூல தேவநாயனாரால் எடுத்துக் கூறுகின்றார்.