https://en.wikipedia.org/wiki/Mogalrajapuram_Caves
https://www.trawel.co.in/city/Vijayawada/mogalarajapuram-caves
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிற்கு ஐந்து கிலோமிட்டர் தொலைவில் உள்ள ஒரு பாரம்பர்ய சின்னம் மொகலராஜபுரம் குடைவரைகள். இந்த குடைவரைகள் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டினை சார்ந்ததாக பல தரவுகள் இருந்தாலும் இங்குள்ள குடைவரைகளில் இரண்டு பௌத்த குடைவரைகளாகவும் மூன்று இந்து சமய குடைவரைகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடாவின் கஸ்தூரிபாய்ப்பேட்டை என்னும் இடத்தில் உள்ள இந்த குடைவரைகள் 19 அடி உயரம் வரையிலும் சிறிய பாறை போன்ற குன்றுப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு மலைமுகட்டின் இருபகுதிகளில் தனித்தனியே இவை உருவாக்கப்பட்டவை. கருவறை, முகமண்டபம் ஆகியவைகளுடன் பாறையின் வெளிப்பகுதிகளில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக வெட்டி உருவாக்கப்பட்ட இந்த குடைவரைகளில் இனி முதலாம் குடைவரைக்கு வருவோம். இக்குடைவரையின் மற்றோரு பக்கத்தில் அமைந்துள்ளதே இரண்டாவது குடைவரை.
முதலாம் குடைவரை கருவறை, முன்மண்டபம் ஆகியவை கொண்ட ஒரு சிறு ஆலயமாக வடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் இரண்டு தூண்கள் கொண்ட முன்மண்டபத்தில் நடுவில் அமைந்துள்ள வாயிலுக்குள் பிரவேசிக்க மூன்று படிகளையும் காண்கிறோம். சதுர வடிவ ப்ரஹ்மகாந்த தூண்களில் நடுப்பகுதி விஷ்ணுகாந்தமாக எட்டுபட்டைகளுடன் அமைந்துள்ள. மேலே உள்ள கபோதம் மற்றும் தூண்களின் பொது அமைப்பு முற்கால குடவரைகளின் பாணியை ஒத்துள்ளது. இந்த வெட்டு போதிகைகளின் மேலே அமைந்த கபோதத்தின் நெற்றியில் நாசிக்கூடுகள் வெட்டப்பட்டுள்ளன. போதிகையின் கீழ்ப்பகுதியில் வரிவடிவங்கள் தொகுப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மிகவும் முற்காலங்களில் இந்த போதிகை எந்தவித அழகு உறுப்புகளும் இல்லாமல் வெறுமனே வளைந்த வடிவுடனோ அல்லது நீள்சதுர வடிவுடனோதான் அமைக்கப்பட்டன. ஆனால் இங்கோ கீழ்ப்பகுதியில் படிப்படிகளாக அமைந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கின்றன. கபோதப்பகுதியின் முதல் நாசிக்கூட்டில் மூன்று முக உருவமும் ( ? பிரம்மா ), பிறவற்றில் தம்பதி சமேதராக மார்பளவு உள்ள தெய்வ உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. முதலாமவர் பிரம்மா என்று சிலர் கருதினாலும் எனக்கு இவர் சதாசிவ சொரூபமாகத்தான் தெரிகிறார். கபோதத்தின் நாசிக்கூடுகளில் உள்ள மற்றைய இரண்டு உருவங்களும் சிவனின் பிற ரூபபேதமே. பிரதான கருவறையில் அர்த்தநாரீஸ்வர கோலம் வடிக்கப்பட்டுள்ளதிலிருந்து இது ஒரு சிவாலயமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக அனுமானிக்கலாம்.
உள்ளே கருவறையில் ஒரு உடைந்த யோனிபீடம் ( ஆவுடையார் ) மட்டுமே எஞ்சியுள்ளது. அதனுள் இருக்க வேண்டிய பாணலிங்கத்தைக்காணோம். கருவறையின் வெளிப்பக்கம் துவாரபாலகர்கள் உருவம் மெல்லியதாக தென்படுகிறது. இவை முற்றிலும் அழிந்து விட்டனவா அல்லது முழுமையாக வடிக்கவில்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை. குடைவரையின் முகமண்டபத்தின் முற்பகுதியில் இருபுறமும் கோஷ்டங்கள் வெட்டப்பட்டு அவற்றில் துவாரபாலகர்களும் கருவறையின் இருபுறமும் விநாயகரும் ஆடல்வல்லானும் புடைப்புச் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டுள்ளனர்.