இந்தியாவின் தொன்மையான் ஒடிசாவின் அசன்பத் நடராஜர் சிலை.
நடராஜர் சிலை மேலே; கீழே நாகர் குல மன்னன் சத்ருபஞ்சா என்ற் அரசன் புகழை சம்ஸ்கிருத மொழியில் 13 வரி கல்வெட்டு பலகை தற்போது புவனேஸ்வர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள நடராசரின் கல்வெட்டு சமசுகிருத மொழியில், பிற்கால பிராமி அல்லது ஆரம்பகால கலிங்க எழுத்துகளுடன் மன்னர் சத்ருபஞ்சா(பொ.ஆ.261 - 340) , வெற்றியாளர் எனவும் ஆன்மீக மனிதராக இவர் செய்த சாதனைகள் பற்றியும் விரிவான விவரங்களை வழங்குகிறது. பதின்மூன்று வரிகளைக் கொண்ட கல்வெட்டு பகுதி வசனமாகவும், பகுதி உரைநடையாகவும் எழுதப்பட்டுள்ளது.
மன்னன்சத்ருபஞ்சா இதிஹாஸங்கள், வியாகரணம், சமிக்ஷம், நியாயம், மீமாம்சம், சந்தஸ், வேதங்கள், பௌத்த சாஸ்திரங்கள் மற்றும் சாங்கியம் ஆகிய அறிவில் தேர்ச்சி பெற்றும், கலைகளிலும் வல்லுனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. சத்ருபஞ்சா தனது ஆட்சியில் பௌத்த, சமண, பிரம்மசாரிகள், பிக் ஷுக்கள் என எல்லா மதத்தினருக்கும் மடங்களையும் குடியிருப்புகளையும் கட்டினார். கல்வெட்டின் முடிவில் அவர் இந்துக் கடவுளான சிவனுக்காக ஒரு பெரிய கோவிலைக் கட்டியதாகவும் குறிப்பிடுகிறது. இந்த கோவிலின் எச்சங்கள் என பல அறிஞர்களால் நம்பப்படும் அசன்பட் பகுதியில் பழங்கால கட்டிடத்தின் உடைந்த எரிந்த செங்கற்கள் மற்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன.
தலைக்கு மேலே உயர்த்திய இருகரங்கள் ஒரு நாகத்தினை பிடித்துள்ளன. இடது கரமொன்றில் முத்தலை சூலம் ஏந்தி மற்றொரு கரமோ இடபத்தை வருடிய வண்ணம் காண்பிக்கப்பட்டுள்ளார்.
வலப்பக்கம் இரு கைகளில் ஒன்றில் டமருகமும் மற்றொன்றில் அக்கமாலையும் பிடித்துள்ளார். இவரது மெலிந்த தேகத்தில் முப்புரிநூல் தெளிவாக விளங்க சதுர தாண்டவ அமைப்பில் கால்கள் நடனமிட ஒரு பூதகணம் அவரை வணங்கும் பாவனையில் அவருக்கு வலப்புறத்தே அமர்ந்துள்ளது நோக்கத்தக்கது.
சிரசின் மீது கொண்டை போல இறுக்கிக்கட்டிய ஜடாமகுடமும் அங்கு இலங்கும் பிறைச்சந்திரனும் அழகாக அதன் மேல் ஒரு ருத்ராஷ மாலையும் இவரது மேனிக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.
இந்த சிற்பம் ஒடிசாவின் வரலாற்றில் அசன்பேட் கல்வெட்டு என மிக முக்கியமானதாக தொல்சியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில், பூப்பரா கோயில், பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின்சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது.சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது. தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.ஆடல்வல்லானின்சிற்பம். உடைந்தநிலையில்இருப்பினும்இங்கேடோலஹஸ்தமாகவலக்கரத்தைஇடப்புறத்தேவீசும்வண்ணம்வடிக்கப்பட்டுள்ளதைகாணுங்கள். குப்தர்கள்காலத்திலேயேநடனகோலத்தில்எம்பெருமான்வடிக்கப்பட்டதற்குமுக்கியமானதரவுஇச்சிற்பமே.
காதணியும்பிற்காலத்தைஒட்டியநடைமுறையின்றிவலக்காதில்பத்ரகுண்டலமும்இடதுகாதுமடலினில்ஸ்படிககுண்டலமும்அணிவிக்கப்பட்டுள்ளதுவிந்தையிலும்விந்தை... Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra. Image from VMIS Gallery
இராஷ்டிரகூடரின் காலத்தைச் சார்ந்த மும்பையின் புறநகர்ப்பகுதியான கரபுரி என்னும் எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லானைப்பற்றி விவரித்திருந்தது
மும்பையின் புறப்பகுதியில் கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரபுரி தீவுகளில் உருவாக்கப்பட்ட எலிபெண்டா குகைக்கோயில்கள் உருவான காலம் பற்றி வேறுபட்ட தரவுகள் பல உள்ளன.
நடராஜரின் தாண்டவக்கோலம் பதின்மூன்று அடி அகலமும் பதினொன்று அடி உயரமும் உள்ள புடைப்புச் சிற்பமாக மேற்கு சுவற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. நிருத்தமூர்த்தியாக கருதப்படும் இவர் பெரும்பாலும் சேதமுற்றவரே. இவரது எட்டு கரங்களில் பலவற்றைக் காணவில்லை. லலித கரணத்தில் நடனமிடும் இவரின் இடுப்பிற்கு கீழே உள்ள பெரும்பகுதிகளையும் காணவில்லை. வலக்கரம் ஒன்றில் தூக்கிப்பிடிக்கப்பட்ட பரசுவில் வளைந்து நெளிந்து தொங்கும் நாகம் நம்மை வியப்புற வைக்கிறது. இடது கரம் ஒன்றினில் தனது உத்தரீயத்தின் ஒரு பகுதியை தூக்கி பிடித்தவாறும் இந்த சிற்பத்தில் காண்பித்துள்ளனர் ( இத்தகு பாணி இன்னும் நிறைய சிற்பங்களில் நம்மால் காண முடிகிறது. ஒருவேளை இதுவே பின்னாளில் சோழஅரசர்களின் காலத்தில் செப்புப்படிமங்களில் இடது தோளின் மீது வடிக்கப்படும் உத்தரீயத்திற்கு முன்னோடியோ தெரியவில்லை. ஆயினும் எனக்கு அப்படியும் இருக்கலாம் என்று ஊகிக்கத்தோன்றுகிறது ). பிற கரங்களுள் வலது முன் கரம் டோலஹஸ்தமாக இடப்புறமாக வீசி ஆடும் வண்ணம் காணப்படுகிறது. இவரது வலது துடையின் மேலெழும்பிய பகுதி வலது முழங்காலை மடித்து லலித கரணமாகவே வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றது. ஸ்தித பாதமாக இருக்கவேண்டிய இடது கால் முழுவதிலும் முற்றாக சேதமடைந்து இடுப்பு பகுதியிலிருந்தே இல்லாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. இவரைச்சுற்றி உள்ள மேற்பகுதிகளில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அரம்பையர் முதலானோர் இருக்க பிருங்கியும் கணேசரும் இந்திரனும் கார்த்திகேயனும் இவரது வலப்பக்கத்தில் காட்சி தருகிறார்கள். ஈசனின் இடப்பக்கம் அம்பிகையும் பரமனின் களி நடனத்தைக் காண, இருபுறமும் சேடியரும் பூதகணங்களும் பிற இருடியரும் சுரர்களும் படை சூழ, பிரபஞ்ச இயக்கத்தை, தனது தாள லய ஸ்ருதிகளுடன் பரமேஸ்வரன் நிருத்த மூர்த்தியாக தரிசனம் அளிக்கிறார். என்னே சிற்பிகளின் கற்பனை வளம். என்னே அவர்தம் சீரிய பணி. எத்துணை நேரம் நோக்கினும் சலிக்காத ஆனந்த காட்சியல்லவா இது. இதுவன்றோ நமது பிறவிப்பேறு. இதைக்காணத்தானே நாவுக்கரசர் கயிலையை நோக்கி மெய் தேய கடும் பயணம் செய்தார். ஈசனால் அம்மை என அழைக்கப்பட்ட காரைக்கால் கண்ட கனிஅமுதம் பரமனின் பேரானந்தத்தருளினால் ஆலங்காட்டிலேயே இக்காட்சியை தரிசனம் செய்ய நேர்ந்தது. இந்த காணுதற்கரிய காட்சியை காணவல்லோ புலிக்கால் முனிவரும் பதஞ்சலி மகரிஷியும் தில்லை வனக்காட்டில் கடுந்தவம் செய்து இறைவனடி ஏகினர்...
ஆடல்வல்லானின் அணிவகுப்புத் தொகுப்பு அவரது நர்த்தனத்தை பல்வேறு தெய்வங்கள் காண்பதுபோல் வடக்கில் உள்ள குடைவரையின் பக்கவாட்டு சுவற்றில் அமைந்துள்ளது. மையத்தில் நாம் காணும் நடராஜரின் ஜடாமகுடத்தில் எத்துணை நுண்ணிய வேலைப்பாடுகள் ! அவரது முகம் காலத்தின் போக்கில் மிகவும் தேய்ந்து போயிருந்தாலும் எலிபெண்டா அளவுக்கு பிரம்மாண்டமாக இல்லையென்றாலும் அவரது லலித கரண நாட்டியம் மட்டுமே இங்கே பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரு காதுகளில் ஸ்படிக குண்டலம் இலங்க, ஜடாமகுத்தினை மேலும் அழகூட்ட முத்துச்சர வரிசையும், மகுடத்தில் காணும் ரத்னாபரணங்களும் நம்மை வியப்புற வைக்கின்றன. இவரது வீசுகரமும் இடப்பக்கமாகவே நீட்டப்பட்டுள்ளது. பிற கரங்களும் பெரும்பாலும் பின்னப்பட்டுள்ளன. இடது பாதம் ஸ்திதபாதமாக கீழே வைத்து வலது முழங்காலினை மடித்து சதுர தாண்டவ அமைப்பில் களிநடம் புரிகிறார் போலும். ஆயினும் முழங்காலுக்கு கீழே இரு கால்களையும் காணவில்லை. இரு பாதங்கள் மட்டுமே கீழே தரையில் பாவி அவரது பண்டைய திருநடனத்தை நமக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறன. இந்த நடனக்காட்சி நமக்கு கொங்குநாட்டின் பாண்டிக்கொடுமுடியின் செப்புப்படிமத்தின் சதுர தாண்டவ அமைப்பை ஒத்ததாக நாம் கூறலாம்.
வலது பாதத்தை சற்றே முன்னிறுத்தி இவர் ஆடும் அழகோ சொல்லவொண்ணா ஆனந்தத்தை நம் மனதில் ஊற்றுவிக்கிறது. இவரின் கால்களுக்கு இருமருங்கிலும் ஆடும் கோலத்தில் இரு இருடியர் காணப்படுகின்றனர். இவருள் நமது இடப்பக்கத்தே காணப்படும் முனிவர் ஜடாமுடியுடன் எலும்பும் தோலுமாக பரமனின் சதுர தாண்டவ அமைப்பிலேயே தோற்றமளிக்கிறார். நிச்சயம் இவர் பிருங்கிதான். மற்றொருவர் மனித உருவில் காணப்படும் நந்தியாகவோ அல்லது மஹாகாளராகவோ ஏதேனும் சிவகணமாகவோ இருக்க வாய்ப்பு அதிகம். இவர் ஊர்த்வரேதஸுடன் காணப்படுகிறார். பிருங்கியின் அருகில் தாள வாத்யம் இசைப்பது பாணாசுரன்தான். இசையில் ஒன்றி மிருதங்கம் மற்றும் டோல் போன்ற இரண்டு தோலிசைக்கருவிகளை வாசிக்கும் பாவனையில் நாம் காண்கிறோம். தென்னகத்தில் காணப்படும் குடமிழவின் அமைப்பில் இந்த இசைக்கருவிகள் இல்லை. அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிவகணம் சுருட்டைமுடி கேச அலங்காரத்தில் கனத்த பனை ஓலைச்சுருள் காதணியுடன் கைகளில் தாள வாத்தியத்தை வைத்திருக்கிறார். ஓஹோ !!! இங்கே நாம் காண்பது கைலாயத்தில் சந்தியா நிருத்தம் செய்யும் பரமேஸ்வரனின் லீலா வினோத கூத்தல்லவா. இன்னும் வேறு எவரெல்லாம் இங்கே குழுமியுள்ளனர் என்பதையும் பார்ப்போமே.
நமது இடதுபக்கத்தில் நேர் மேலே நான்முகன் அமர்ந்துள்ளார். அவரது மகுடமும் முற்கால குப்தர்கால காந்தாரக்கலையினை சார்ந்துள்ளது சிறப்பு. அவரது அருகில் ஒரு ஆணும் பெண்ணும் வித்யாதர்களாக மேகமூட்டத்தின் மேலே பறக்கும் கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். அருகில் மேலும் இரண்டு கணங்களோ அல்லது சுரர்களோ காட்டப்பட்டுள்ளனர். பிரம்மாவிற்கு கீழ் கணேசரும் ஒரு சிவகணமும் அமர்ந்திருக்க இன்னும் கீழே குழந்தையாக ஸ்கந்தரும் அவரைப் பிடித்தவண்ணம் வேறு ஒரு தேவரும் உள்ளனர். இவர் ஒரு வேளை இந்திரனோ தெரியவில்லை. இந்த பகுதியில் காணப்பெறும் அனைவரும் ஸ்வாமியின் நாட்டியத்தில் ஒன்றி கைகளை குவித்து வணங்கியும் வாத்தியங்களை இசைக்கும் பல கோலங்களில் காட்டப்படுகிறார்கள். இனி எதிர்ப்பக்கத்தில் காணும் உருவங்களை ஆய்வோம்.
நமது வலப்பக்கத்தில் நேர் மேலே கருடனின் மீது ஆரோகணிக்கும் மஹாவிஷ்ணு ! இவர் வலது கரமொன்றில் கதையை மேல் நோக்கி பிடித்துள்ளார். இடது கரம் ஒன்று அவரது முழங்காலில் ஊன்றப்பட்டுள்ளது. கருடனின் முகம் இங்கேயுள்ள கணங்களின் சாயலிலேயே காட்டப்பட்டுள்ளது. இவரது கேச அலங்காரத்தையும் கவனியுங்கள். குப்தர்களின் தேவ்கர் தசாவதார ஆலயத்தில் காட்டப்படும் சேஷசயன விஷ்ணு சிற்பத்தின் ஆயுதபுருஷர்களின் அதே அலங்காரம்தான் இங்கும் உள்ளது. இங்கும் கந்தர்வ ஜோடி ஒன்றும் மற்றும் மேலும் இரண்டு தேவபுருஷர்களும் ( திக்பாலகராக இருக்கலாம் ) உள்ளனர். இவர்களின் கீழே வானத்தின் மேகக்கூட்டம் காட்டப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கீழ்ப்புறத்தில் கௌரியும் அவரை கைத்தாங்கலாக லாகு கொடுத்து தாங்கிப் பிடித்துள்ள அவரது சேடிப் பெண்ணான விஜயாவும் நிற்க, அவர்களுக்கு அருகில் மலர் ஒன்றினை ஏந்திப் பிடித்துள்ள கோலத்தில் மற்றுமொரு பெண் தெய்வமும் உள்ளன. இவரும் திருமகளாக இருக்க வாய்ப்பு அதிகம். அறிந்தவர் தெளிவுபடுத்தலாம். இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து பெண் உருவங்களும் வாகாடக ராஷ்டிரகூட சிற்ப எழிலின் சாயலில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை எட்டாம் நூற்றாண்டில் இந்த குடைவரை அமைக்கப்பட்டிருந்தால் இங்கே உள்ள சிற்பங்களின் பாணி வெகு நூற்றாண்டுகளாக தொடரப்பட்ட வழுவாத சிற்பக்கலை மரபினை ஒத்ததாக இருப்பதை நாமும் நன்கு உணர்வோம். இதற்கு இவர்களின் உடலுறுப்புகள், முகபாவனை, அணிகலன்கள், கேச அமைப்பு, நிற்கும் தொனி போன்றவை நமது கருத்திற்கு கட்டியம் சொல்லுகின்றன.
இனி மீண்டும் நமது நடேசமூர்த்திக்கு வருவோம். இவரது சமகால சிற்பங்களைப் போலவே இவரும் எண்கரத்தினரே. வலது கரங்களை மேலிருந்து ஆராய முற்பட்டோமேயானால் முதல் கரம் கோடரியை பிடித்துள்ளது. மேலும் இரண்டு கரங்கள் உடைந்துள்ளதினால் அவைகளில் என்ன காட்டப்பெற்றிருக்கும் என்பது புரியவில்லை. எனினும் வேறு சிற்பங்களுடன் ஒப்பிட்டு இதனைப்பற்றி பின்னர் ஆராய்வோம். முன்னே உள்ள வலக்கரம் இடப்பக்கமாக வீசிய கஜஹஸ்தமாக வடிக்கப்பட்டுள்ளது. இடது மேல்கரம் நான் முன்பதிவுகளில் சொன்னதுபோல தோளிலிருக்கும் உத்தரீயத்தை தூக்கிப் பிடித்துள்ளது. மற்றொரு கரம் இடது தொடையின்மீது ( கடிஊரு ஹஸ்தம் ) வைக்கப்பட்டிருக்கிறது. பிற கரங்களும் உடைந்துள்ள நிலையில் அவற்றைப்பற்றிய தெளிவான கருத்தினை முன்வைக்க இயலவில்லை.
இதேபோலவே மஹாமண்டபத்தினுள்ளே பிரவேசித்ததும் உள்ளே நமது வலப்புறத்தில் உட்பக்க சுவற்றில் நின்ற கோலத்தில் உமாமஹேச்வர சிற்பம் அருகில் ஒரு முனிபுங்கவருடன் வடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேல்புறத்தில் மூன்று வித்யாதர பெண்கள் காணப்படுகின்றனர். முனிவரும் வலது காலை மடித்து இடது ஒற்றைக்காலில் நின்றபடி கைகளை தலைக்கு மேலுயர்த்தி தவம் புரியும் கோலம் ஆச்சர்யப்படத்தக்கது. மறைந்த நண்பர் Prakash Manjrekar இதனை YouTubeல் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இச்சிற்பத்தை பகீரதன் என்றும் கணிக்கின்றனர் தொல்பொருள் ஆர்வலர்கள். இதற்கு ஒரு பிரத்யேகக் காரணம் உள்ளது. சிவபெருமான் தனது பின்னிரு கரங்களால் தனது சடைமுடியினை லாகவமாக இருபுறமும் பிரிக்கின்றார். அப்படிக்காணப்படும் சிற்பம் பெரும்பாலும் கங்காவதாரண மூர்த்தியாகத்தான் உணரப்படுகிறது. அப்படியிருப்பின் அருகில் ஒற்றைக்காலால் தவம் செய்யும் தபோவனர் நிச்சயமாக பகீரதன்தானே. அதுமட்டுமின்றி சிவபெருமானின் ஜடாமகுடத்திற்கு மேலே காட்டப்பட்டுள்ள மூன்று பெண்ணுருவங்கள் யார் ? நமஸ்கார முத்திரையுடன் இடுப்பளவே காட்டப்பட்டுள்ள இவர்கள் நதிமங்கையரே.. கங்கை யமுனா சிந்து என்றோ கங்கை யமுனா சரஸ்வதி என்றோ இவர்களை நாம் கருதலாமே. இவர்களும் சிவபெருமானின் ஜடையிலிருந்து அவதரிப்பதாக நாமும் புரிந்துகொள்ளலாம். இங்கே அருகில் உள்ள அன்னை பார்வதி ஆச்சர்யக்குறியுடன் பரமனை நோக்குவதாக நாம் புரிந்து கொள்கிறோம். இச்சிற்பத்தொகுதியின் பீடப்பகுதியில் பல்வேறு சிவகணங்களும், மண்டியிட்டு வணங்கும் மற்றோரு மெலிந்த தேகம் கொண்ட முனிவரும் உள்ளனர். முனிவரின் கைகளில் ருத்ராக்ஷமாலையும் உள்ளதால் இவரையும் பகீரதனாகத்தான் உணரவேண்டும்.
இந்த மண்டபத்து மையத்தில் பத்து கரங்களுடன் ஆடல்வல்லானும் அவரது இடப்பக்கத்தில் ஸ்கந்தனும் கௌரியும் நிற்க வலப்புறத்தில் இருகரம் கொண்ட விநாயகரும் சப்தமாதர்களில் ஒருவரும் உள்ளனர். சப்தமாதர்களின் பிற வடிவங்கள் மற்றோரு பக்கவாட்டு சுவர்களில் காட்டப்பட்டுள்ளது. சப்தமாதர்களின் புடைப்புச்சிற்பம் காலத்தால் முந்தையது. எனவே இருகரங்களுடன் அழகான தேவப்பதுமைகளைப்போல பக்கவாட்டு மண்டபத்தின் இருபக்க சுவர்களிலும் ஆடல்வல்லானின் நர்த்தனக்கோலத்தை நோக்கிய வண்ணம் வடிக்கப்பட்டுள்ளனர். சப்தமாதர்களில் பிராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியோர் நடராஜரின் வலப்பக்கத்திலும் வாராஹி, ஐந்த்ராணி, சாமுண்டா ஆகியோர் அவருக்கு இடப்பக்கத்திலும் காட்டப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஏதாவது ஒரு நாட்டிய தோரணையில் காட்டப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். இந்த சிறிய மண்டபத்தின் இரண்டு பக்கவாட்டு சுவர்களில் தலா மூவரும் இருக்க வைஷ்ணவி மட்டும் நடேசமூர்த்திக்கும் விநாயகருக்கும் அருகிலும் உள்ளவாறு சித்தரித்துள்ளார்கள். இங்கேயே ஒரு மூலையில் எலும்பும் தோலுமாக பிருங்கியும் வேதாளம் போல நடம் புரிகிறார் பாருங்கள். இங்கே உள்ள அன்னையர் எழுவரும் பூட்டியுள்ள ஆபரணங்களிலிருந்து ஆடைஅலங்காரங்கள், மகுடம், முகபாவனை வரை வெகு வெகு சிறப்பான வகையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடைவரையில் இவ்வளவு நுணுக்கங்களை கொண்டு வந்த இவர்களின் திறந்த வெளி ஆலய கட்டுமானங்களில் இன்னும் எத்தனை எத்தனை சிறப்புகளை நாம் பார்க்கமுடியும் என்று எண்ணிப் பாருங்கள் புரியும். நிற்க.
ஆடல்வல்லான் உள்ள பக்கவாட்டு மண்டபத்தின் இரு தூண்களும் வேறு விதத்திலும் மையத்தில் உள்ள கருவறையின் இரு தூண்களும் உள்ளே உள்ள தூண்களின் அமைப்பும் வெவ்வேறாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த தூண்களின் போதிகைகளும் கூட வித்தியாசமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது நமக்கு சற்றே வியப்பூட்டும் விஷயம். பொதுவாக ஒரு குடைவரையின் அமைப்பில் ஒரே இழையாகச் செல்லும் சிற்பத்தொகுதிகளும் தூணமைப்புகளும் கபோதங்களும் போதிகைகளும் காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கோ பலதரப்பட்ட இயல்புகள் இருப்பது மிகவும் அரிது. பல விதங்களிலும் சாளுக்கியர் தங்களது கட்டிடக்கலையில் தனி முத்திரை பதித்துள்ளது மதிப்புக்குரிய விஷயம்.
மகாமண்டபத்தின் வலப்பக்கத்தில் உள்ளே உள்ள பக்கவாட்டு மண்டபம் சிற்பத்தொகுதிகள் எதுவுமின்றி அமைக்கப்பட்டுள்ளது. எதிர்பக்கத்தில் ஆடல்வல்லான் காட்டப்பட்டபொழுது இங்கு எந்த சிற்பங்களும் வடிக்கப்படவில்லை என்பதுவும் ஏனேன புரியவில்லை. இந்த மண்டத்தினுள்ளே ஏறிச்செல்லுவதற்கும் சோபானப்படிகளும் முன்பக்கத்தில் இரு தூண்களுடன் உள்ளது. கீழே பீடப்பகுதியில் பூதகணங்களை அழகாக வரிசைப்படுத்தி செதுக்கியுள்ளனர். இதனை ஒரு முற்றுப்பெறாத குடைவரையாகத்தான் நாம் காண்கிறோம்.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பிரகாசம் மாவட்டங்களுக்கு நடுவில், நல்லமலை வனப் பகுதியில் பைரவகோணாவின் எட்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. அம்பாவரம் கொத்தப்பள்ளி கிராமங்களுக்கு அருகாமையில் அமைந்த இந்த தலம் கடப்பாவிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இந்த குடைவரைகளில் காணப்படும் தெய்வ உருவங்கள் மாமல்லபுரத்தின் சாயலை ஒட்டி அமைந்துள்ளன. மலை முகத்தில் வெட்டப்பட்ட இந்த குடைவரைகள் முகப்பு மண்டபத்தோடு அமைக்கப்பட்டு கோஷ்ட புடைப்புச் சிற்பங்களுடன் அழகுடன் அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பல்லவ அரசர்களால் இவை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. மேலும் ராஷ்டிரகூட, சாளுக்கிய சிற்ப பாணிகளும் இவற்றுள் காணப்படுகின்றன.
இரண்டு வகைகளாக இந்த குடைவரைகளைப் பிரித்தோமேயானால் சில ஆலயங்கள் முகமண்டபமின்றி வெறும் கருவறை மட்டுமே உள்ளவைகளாகவும் மற்றும் சில மண்டபங்களோடு கூடிய முழு குடைவரைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளவை என்பது புரியும். முதல்வகைகளில் இருபுற முகப்பில் துவாரபாலகர்களும் உள்ளே கருவறையில் சிவலிங்கம் மட்டுமே உள்ளவாறு அமைந்துள்ளன. இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார் மட்டுமே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னே ஒரு நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள முழுமையான குடைவரைகளின் முன்மண்டபத்தின் தூண் அலங்கார அமைப்பை கூர்ந்து கவனித்தால் சதுர வடிவ பிரம்மகாந்த தூண்களின் இடைப்பகுதி எட்டு பட்டைகளுடனும் மேல்பகுதி உருண்டும் அதற்கு மேலே கபோதத்தில் நாசிக்கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளவை புரியும். பிரஸ்தாரத்தில் சிம்மவரியும் உண்டு. இந்த தூண்களின் போதிகைகளின் அமைப்பு சற்றே முற்காலத்தவை எனக்கருதலாம். கருவறையும் முன்மண்டபமும் வெளியில் இருந்து வெட்டப்பட்டு பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.
ஆடல்வல்லானை நாம் காண்கிறோம். இந்த சிற்பங்களின் காலங்கள் வேறுபட்டவைகளாக பகிரப்படுகின்றன. சரியான காலத்தை வரலாறு மற்றும் சரித்திர ஆர்வலர்கள் தகுந்த ஆதாரங்களுடன் பின்னூட்டமாக பகிரலாம்.
பொதுவாக நாம் காணும் அமைப்பிலிருந்து மிகவும் வேறுபட்ட நிலைதனில் இந்த நடேசமூர்த்தம் காணப்படுகிறது. இடது காலை சற்றே உயர்த்தி முழங்காலையும் பாதத்தினையும் வளைத்து கால்விரல்கள் மட்டுமே தரையினில் ஊன்றியவாறு லலித கரணமாக இவர் எழில் கொஞ்சும் முகபாவனையில் வடிக்கப்பட்டுள்ளார். டோலஹஸ்தமாக விளங்கும் வீசுகரம் இடப்பக்கம் முழுவதுமாக நீட்டப்பட்டுள்ளது. அப்பக்கத்தின் மற்றொரு கரமோ மேலே ஏதோவொன்றை தூக்கி பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது ( கடக முத்திரை என கருதலாம் ). பெரும்பாலும் முற்காலத்திய நடேச மூர்த்தியின் இடது கரம் ஒன்று நாகத்தையோ, குழல்கற்றையையோ அல்லது உத்தரீயத்தையோ பிடித்தவாறு காணப்படுவது வழக்கம். இங்கோ அக்கரத்தில் ஒன்றும் இல்லை. ஒரு வேளை பிடிக்கப்பட்ட வஸ்து சேதமுற்றதோ தெரியவில்லை. மற்றுமொரு கரம் ரிஷபக்கொடியைப் பிடிக்கும் பாவனையில் உள்ளது. ஆனால் இந்த கொடிக்கு மேலே நந்தியைக் காணவில்லை. ஆயினும் ஆலம்பூர் ஆடல்வல்லானை இதற்கேற்ற சம உதாரணமாக கொள்ளலாம். சாளுக்கியரின் படைப்பான அந்த சிற்பத்தில் நேர்த்தியாக ரிஷபம் த்வஜத்தின்மீது அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. பைரவகோணா தாண்டவேஸ்வரரின் மற்றுமொரு இடது கரமோ வளைவாக சுருட்டிய நாகத்தினையும் லாகவமாக பிடித்துள்ளது. வலது கரங்களில் மேலிருந்து காண்கையில் தூக்கிப் பிடித்த கோடரியும், வலுவாய் பிடித்த முத்தலை சூலமும், கீழ் உள்ள கரம் உடுக்கையினையும் பிடிக்க, மற்றுமொரு கரம் சேதமுற்ற நிலையிலும் அபய முத்திரை தரித்தலும் தெளிவாக நமக்கு விளங்குகிறது.
சிகைப்பகுதியில் கொண்டையாக தூக்கிப்பிடித்து கட்டிய ஜடாமகுடத்தில் பிறைச் சந்திரனும் நேர்த்தியாக இலங்குகின்றான். இடது காதில் தொங்குகின்ற ஸ்படிக குண்டலம் நன்கு தெரிந்தாலும் வலது காதிற்கு அருகில் இருப்பது மகரக்குழையா அல்லது சடைமுடியா எனப்புலப்படவில்லை. கழுத்தினில் ஓர் ருத்ராக்ஷ மாலையும் உள்ளது. கரங்களில் வளைகளும் காலில் சிலம்பும் மென்மேலும் அழகு சேர்க்கின்றன இந்த ஆடல்வல்லானுக்கு... இடுப்பினில் சுற்றியுள்ள மற்றுமொரு நாகம் சீறி படமெடுக்கின்றது. இடையினில் உள்ள அரைக்கச்சு கூட மிகவும் விரிவாக வடிக்கப்பட்டுள்ளதிலிருந்தே இவரது கலைவண்ணம் சீரிய விதத்தில் துலங்குவதை நாம் மிகவும் ரசிக்கமுடிகிறது. இவரது முகபாணியும் லலித கரண பாவனையும் நமக்கு ராஷ்டிரகூடர்களின் எலிபெண்டா குடைவரையை ஞாபகப்படுத்துகின்றன.
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிற்கு ஐந்து கிலோமிட்டர் தொலைவில் உள்ள ஒரு பாரம்பர்ய சின்னம் மொகலராஜபுரம் குடைவரைகள். இந்த குடைவரைகள் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டினை சார்ந்தது
நாம் விஷ்ணுகுண்டின் மஹாராஜாவினால் உருவாக்கப்பட்ட இந்த முதலாம் கருவறையின் ஆடல்வல்லானைப்பற்றி சற்றே பார்ப்போம்.
ஊர்த்வஜானு கரணத்தில் காணப்படும் இந்த நடராஜரும் அபஸ்மார பூதத்தின் மீதே நடனமாடுகிறார். இந்த சிற்பமும் சேதமுற்றதே.. ஆயினும் பல்லவ காலத்திற்கு முற்பட்டதாகையினால் இந்த குடைவரையைப்பற்றி இவ்வளவு விரிவாக நான் பகிர நேர்ந்தது. வடஇந்திய பாணியை ஒத்து பற்பல கரங்களுடன் தென்னகப்பாணியை ஒத்து திருவடிக்குக் கீழே முயலகனோடு வடிக்கப்பட்டுள்ளது ஆறாம் நூற்றாண்டு காலத்தில் அரிதல்லவா !!
எனினும் எங்கு தேடினும் இந்த குடைவரையினுள்ளே அமைக்கப்பட்டுள்ள நடராஜ மூர்த்தத்தின் நிழற்படம் எங்குமே கிடைக்கவில்லை. நண்பர்கள் இந்த பதிவினைப் படித்த பின்னர் ஏதேனும் கிட்டினால் தயை கூர்ந்து எனக்கு பகிருமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நண்பர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்றபோதும் அவரால் குடைவரையின் உள்பக்கம் படம் பிடிக்க இயலவில்லை என்பதும் வருந்தத்தக்கதே. ஆயினும் இந்த தொடருக்காக பல்வேறு தரவுகளுடன் படங்களை சேகரித்து பகிர்வினை எழுத்தாக்கம் செய்திட்டபோது அவரது பதிவு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. நமக்கு அதிகம் தெரிந்திராத இடத்தைப்பற்றி இரு வேறு நபர்கள் ஒரே சமயத்தில் தகவல்களை திரட்டி பகிர்வு இடுவது என்பது அனைவரின் வியப்பை தூண்டும் என்பதில் ஐயமில்லை.
அதெல்லாம் சரி. எங்கோ உள்ள ஆந்திர மாநில பகுதியில் அதுவும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இல்லை இல்லை, அதற்கும் முன்னரே உருவாக்கப்பட்ட குடைவரைகளில் எப்படி பல்லவரின் பாணி போன்ற அமைப்புகள் வந்தன
சாளுக்கிய பதாமி குகை நாட்டிய முத்திரைகள் காட்டும் நடராஜர் (பொஆ. 550 வாக்கில்)
சிவபெருமான் ஆடலுக்கும் இசைக்கும் மூலமாக அமைவதைப் புராணங்கள் கூறுகின்றன
84 முத்திரைகள் கொண்ட பதாமி குகை நடராஜர் சிற்பம் (பொஆ. 550 வாக்கில்)
ஒரு பக்கத்துக்கு 8 கரங்கள் என்று மொத்தம் 16 கரங்களுடன் பலவித பரத நாட்டிய முத்திரைகளை வெளிப்படுத்தி நிற்கிறார். எந்த இரு கரங்களை ஒன்று சேர்த்தாலும் நாட்டியத்தின் ஒரு முத்திரை கிடைக்கும்.
இப்படி 84 முத்திரைகளை வெளிப்படுத்தும் சிற்பம் உலகில் வேறு எங்கும் இல்லை.
மண்டபத்துக்குள் சென்றால் மகிஷாசுர மர்த்தினி, கணபதி, கார்த்திகேயன் சிற்பங்கள் உள்ளன.
ஹரப்பாவில் கிடைத்த தலையற்ற உடைந்த ஆடும் வடிவமும் சிவபெருமானின் ஆடல்வல்லானின் வடிவமாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஒரு பக்கமும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஹரிஹரன் சிற்பம் மறுபுறமும் உள்ளன. எல்லாமே கலையழகு!
இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை நமக்கு விளக்குகிறது. வராக அவதாரம், திரிவிக்ரம அவதாரம் பிரமாதமாக செதுக்கப்பட்டுள்ளன.
நடராஜ பெருமான் நான்கு கரங்களுடன் இடது கரத்தை வலப்பக்கமாக வீசி வலது முன்கரம் கடக முத்திரை காட்ட சதுர தாண்டவமாக கால்களை கீழேயிருத்தி வலது பின்கரம் முத்தலை சூலத்தையும் இடது பின்கரம் துடியினை இசைப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் சிவபெருமானின் ஆடல் கோலத்தில் அக்னியை ஒரு கைதனில் காண்பிப்பது இங்கு வழக்கத்தில் இல்லை என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். இவருக்கு இருபுறங்களிலும் சிவகணங்கள் இசைக்கருவிகளை வாசிப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளனர். வாயில் நிலவின் பிறபகுதிகளில் தாமரைக் கொடிகள், கொடிக்கருக்கு ஆகியவை அழகு சேர்க்க இருபுறங்களிலும் கும்ப சின்னங்களும் நாகர சிகர நாசிக்கூடு வடிவங்களும் அரைத்தூண்களின் அங்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதனுள்ளே முகங்களும் காணப்படுவது நமக்கு மென்மேலும் கலிங்கத்து ஆலயப்பாணியினை நினைவுறுத்துகின்றன.