ஊர்த்துவ தாண்டவம்
தொன்மான்புலம் :
http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-sculpture-html-urttuva-thandavam-279855
ஏழுவகைத் தாண்டவங்களுள் ஊர்த்துவ தாண்டவம் என்பது ஆனந்த தாண்டவத்திற்கு அடுத்த நிலையில் சிறப்பு பெற்ற நாட்டியக் கோலமாகும். இந்நாட்டியமும் தில்லைவனம் என்று அழைக்கப்பட்ட இன்றைய சிதம்பரத்தில் நடந்தேறிய ஓர் நிகழ்வாகும். தில்லைவனம் என்ற இடத்தில் இன்றைக்குக் காணப்படும் ஆடல்வல்லான் திருக்கோயில் அமைவதற்கு முன்னதாகக் காளி வழிபாட்டிற்கென்று இவ்விடத்தில் தனிக்கோயில் அமைந்திருந்த்து. இவ்விடத்தில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாகரபாதர், பாம்பு வடிவில் தலையினைப் பெற்ற பதஞ்சலி முனிவர் சிவனை வேண்டி தவம் மேற்கொண்டனர். தில்லைவனத்தில் ஆடல்வல்லான் தமது ஆனந்த தாண்டவத்தினை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திட விரும்பினார். இந்நிலையில் அவ்விடத்திலிருந்த காளி தமது தற்பெருமையினால் சிவனை நாட்டியப் போட்டிக்கு அழைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட சிவன் இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தில்லையை விட்டு விலகி அதன் புறப்பகுதியில் வாழ்ந்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்நிபந்தனையுடன் முனிவர்கள், தேவர்கள் முன்னிலையில் இருவருக்குமிடையே நாட்டியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓர் கர்ண அமைப்பில் சிவன் தமது காலினை விண்ணை நோக்கி உயர்த்தினார். அந்நிலையில் அது போன்ற ஓர் கர்ணத்தைப் பெண் என்ற நிலையில் காளியினால் நிறைவேற்ற முடியாததால் வெட்கிக் தலை குனிந்தார். எனவே, ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைபடி காளி தில்லையின் புறப்பகுதியில் குடியேறினார் என்பது ஊர்த்துவ தாண்டவம் தொடர்பாகக் கூறப்படும் கதை நிகழ்வாகும். நிகழ்வின் தொடர்ச்சியாக தில்லைக்காளி எல்லைக்கப்பால் என்ற பழமொழி அப்பகுதியில் இன்றளவும் நிலவி வருகிறது. இக்காளி தில்லைக்காளி என்ற பெயரில் தில்லை நடராஜர் ஆலயத்தில் வலப்புறத்தில் தனி ஆலயத்தில் வழிபடப்பட்டு வருகிறார்.
படிமக்கலை :
ஊர்த்துவ தாண்டவ படிமத்தின் கலைக்கூறுகள் சில்பசாத்திரம் மற்றும் பிற சில்ப சாஸ்த்திர நூல்களில் சிற்சில மாறுபாடுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஊர்த்துவ தாண்டவம் என்பது பெயருக்கேற்ற வகையில் இப்படிமத்தினுடைய வலதுகால் சிவனின் ஜடாமகுடம் வரை உயர்த்தப்பட்டு இருக்கும். ஜடாமகுடத்தில் கங்கை மற்றும் பிறை நிலவு காட்டப் பெற்றிருக்கும். இப்படிமத்தின் முன் வலது கை வரத முத்திரையுடனும், இடது கை மேலே உயர்த்தப்பட்டு ஜடாமகுடத்தைத் தொடுவது போன்றும் காணப்படும். பின் இடது கையில் அக்னி, வலது கையில் உடுக்கையும் அமைக்கப்பட்டிருக்கும். இடது கால் சற்றே வளைந்த நிலையில் அபஸ்மாறன் மீது ஊன்றப்பட்டிருக்கும். இப்படிமத்தின் வலது புறத்தில் காளியின் படிமம் சிற்றுருவமாகக் கைகளை அஞ்சலி முத்திரையுடன், அச்சமுற்ற முகத்தோற்றத்துடன் அமைக்கப்படும். சில படிமங்களில் ஆடல்வல்லான் வடிவம் எட்டு கைகளுடன் காட்டப் பெற்றிருப்பதும் உண்டு.
கலையில் ஊர்த்துவ தாண்டவர் படிவம் :
இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்களும் புராணப் பின்னணி, இலக்கியச் சான்றுகளைப் பெற்றுள்ள போதிலும் அக்கோலங்களில் ஆனந்த தாண்டவம் என்று கூறப்படும் சிறப்பு பெற்ற ஆடல்வல்லான் கோலமே கலை வரலாற்றில் அதிக அளவில் காணக்கூடியதாகும். தொடக்கத்தில் கல் திருமேனியாகவும், கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் செப்புத் திருமேனியாகவும் இப்படிமம் உருவாக்கப்பட்டுள்ளது. கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் கலைப் படைப்பான சீயமங்கலம் குடவரையில் ஓர் தூண் பகுதியில் புடைப்புச் சிற்பமாக ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவ படிமத்தின் முன்னோடி படிமம் ஒன்று காணப்படுகிறது. நாட்டிய இலக்கணத்தில் இதனை புஜங்கசிதம் என்று அழைக்கின்றனர். இதனை அடுத்து பல்லவர்களால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் கோட்டப் படிமமாகக் காணப்படும் ஆடல்வல்லான் படிமம் கால வரிசையில் இரண்டாவதாக அமைகிறது. இதனைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியின் கலைக் கொடையாகக் கருதப்படும் தஞ்சை மாவட்ட கோனேரி ராஜபுரத்தில் அமைந்துள்ள ஆனந்த தாண்டவ படிமம் சிறப்பு பெற்ற படிமமாகக் கருதப்படுகிறது. செப்புத் திருமேனி என்ற நிலையில் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு தற்போது லண்டன் கெனின்ஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ள படிமம் தொன்மையானது. சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள ஒக்கூர் நடராஜர் படிமம், தண்டான் தோட்டம் நடராஜர் படிமம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள ஆனந்ததாண்டவம் படிமம் காலவரிசையில் முந்திய படிமங்களாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.