Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊர்த்துவ தாண்டவம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
ஊர்த்துவ தாண்டவம்
Permalink  
 


  • ஊர்த்துவ தாண்டவம்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    தொன்மான்புலம் :

    urttuva.jpg
    ஊர்த்தவதாண்டவம்

    http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-sculpture-html-urttuva-thandavam-279855

    ஏழுவகைத் தாண்டவங்களுள் ஊர்த்துவ தாண்டவம் என்பது ஆனந்த தாண்டவத்திற்கு அடுத்த நிலையில் சிறப்பு பெற்ற நாட்டியக் கோலமாகும். இந்நாட்டியமும் தில்லைவனம் என்று அழைக்கப்பட்ட இன்றைய சிதம்பரத்தில் நடந்தேறிய ஓர் நிகழ்வாகும். தில்லைவனம் என்ற இடத்தில் இன்றைக்குக் காணப்படும் ஆடல்வல்லான் திருக்கோயில் அமைவதற்கு முன்னதாகக் காளி வழிபாட்டிற்கென்று இவ்விடத்தில் தனிக்கோயில் அமைந்திருந்த்து. இவ்விடத்தில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாகரபாதர், பாம்பு வடிவில் தலையினைப் பெற்ற பதஞ்சலி முனிவர் சிவனை வேண்டி தவம் மேற்கொண்டனர். தில்லைவனத்தில் ஆடல்வல்லான் தமது ஆனந்த தாண்டவத்தினை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திட விரும்பினார். இந்நிலையில் அவ்விடத்திலிருந்த காளி தமது தற்பெருமையினால் சிவனை நாட்டியப் போட்டிக்கு அழைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட சிவன் இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தில்லையை விட்டு விலகி அதன் புறப்பகுதியில் வாழ்ந்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்நிபந்தனையுடன் முனிவர்கள், தேவர்கள் முன்னிலையில் இருவருக்குமிடையே நாட்டியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓர் கர்ண அமைப்பில் சிவன் தமது காலினை விண்ணை நோக்கி உயர்த்தினார். அந்நிலையில் அது போன்ற ஓர் கர்ணத்தைப் பெண் என்ற நிலையில் காளியினால் நிறைவேற்ற முடியாததால் வெட்கிக் தலை குனிந்தார். எனவே, ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைபடி காளி தில்லையின் புறப்பகுதியில் குடியேறினார் என்பது ஊர்த்துவ தாண்டவம் தொடர்பாகக் கூறப்படும் கதை நிகழ்வாகும். நிகழ்வின் தொடர்ச்சியாக தில்லைக்காளி எல்லைக்கப்பால் என்ற பழமொழி அப்பகுதியில் இன்றளவும் நிலவி வருகிறது. இக்காளி தில்லைக்காளி என்ற பெயரில் தில்லை நடராஜர் ஆலயத்தில் வலப்புறத்தில் தனி ஆலயத்தில் வழிபடப்பட்டு வருகிறார்.

    படிமக்கலை :

    ஊர்த்துவ தாண்டவ படிமத்தின் கலைக்கூறுகள் சில்பசாத்திரம் மற்றும் பிற சில்ப சாஸ்த்திர நூல்களில் சிற்சில மாறுபாடுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஊர்த்துவ தாண்டவம் என்பது பெயருக்கேற்ற வகையில் இப்படிமத்தினுடைய வலதுகால் சிவனின் ஜடாமகுடம் வரை உயர்த்தப்பட்டு இருக்கும். ஜடாமகுடத்தில் கங்கை மற்றும் பிறை நிலவு காட்டப் பெற்றிருக்கும். இப்படிமத்தின் முன் வலது கை வரத முத்திரையுடனும், இடது கை மேலே உயர்த்தப்பட்டு ஜடாமகுடத்தைத் தொடுவது போன்றும் காணப்படும். பின் இடது கையில் அக்னி, வலது கையில் உடுக்கையும் அமைக்கப்பட்டிருக்கும். இடது கால் சற்றே வளைந்த நிலையில் அபஸ்மாறன் மீது ஊன்றப்பட்டிருக்கும். இப்படிமத்தின் வலது புறத்தில் காளியின் படிமம் சிற்றுருவமாகக் கைகளை அஞ்சலி முத்திரையுடன், அச்சமுற்ற முகத்தோற்றத்துடன் அமைக்கப்படும். சில படிமங்களில் ஆடல்வல்லான் வடிவம் எட்டு கைகளுடன் காட்டப் பெற்றிருப்பதும் உண்டு.

    கலையில் ஊர்த்துவ தாண்டவர் படிவம் :

    இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்களும் புராணப் பின்னணி, இலக்கியச் சான்றுகளைப் பெற்றுள்ள போதிலும் அக்கோலங்களில் ஆனந்த தாண்டவம் என்று கூறப்படும் சிறப்பு பெற்ற ஆடல்வல்லான் கோலமே கலை வரலாற்றில் அதிக அளவில் காணக்கூடியதாகும். தொடக்கத்தில் கல் திருமேனியாகவும், கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் செப்புத் திருமேனியாகவும் இப்படிமம் உருவாக்கப்பட்டுள்ளது. கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் கலைப் படைப்பான சீயமங்கலம் குடவரையில் ஓர் தூண் பகுதியில் புடைப்புச் சிற்பமாக ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவ படிமத்தின் முன்னோடி படிமம் ஒன்று காணப்படுகிறது. நாட்டிய இலக்கணத்தில் இதனை புஜங்கசிதம் என்று அழைக்கின்றனர். இதனை அடுத்து பல்லவர்களால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் கோட்டப் படிமமாகக் காணப்படும் ஆடல்வல்லான் படிமம் கால வரிசையில் இரண்டாவதாக அமைகிறது. இதனைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியின் கலைக் கொடையாகக் கருதப்படும் தஞ்சை மாவட்ட கோனேரி ராஜபுரத்தில் அமைந்துள்ள ஆனந்த தாண்டவ படிமம் சிறப்பு பெற்ற படிமமாகக் கருதப்படுகிறது. செப்புத் திருமேனி என்ற நிலையில் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு தற்போது லண்டன் கெனின்ஸ்டன் அருங்காட்சியகத்தில் உள்ள படிமம் தொன்மையானது. சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள ஒக்கூர் நடராஜர் படிமம், தண்டான் தோட்டம் நடராஜர் படிமம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள ஆனந்ததாண்டவம் படிமம் காலவரிசையில் முந்திய படிமங்களாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ஆலமரத்தின் கீழ் அரன் நிகழ்த்திய ஆனந்தத் தாண்டவம்01 Dec 2016

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு திருவாலங்காடும், குடந்தைக்கருகே நாகை மாவட்டத்தில் ஒரு திருவாலங்காடும் உள்ளன. வடவாரண்யம் என வடமொழியில் குறிப்பிடப்பெறும் இரண்டு ஊர்களும் குறிப்பிடத்தக்க சிவத்தலங்களாகும். திருவள்ளூர் மாவட்டத்துத் திருவாலங்காட்டை பழம் நூல்களும், கல்வெட்டுகளும் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மணலிற் கோட்டத்து பழையனூர் நாட்டுப்பழையனூர் என்றே குறிப்பிடுகின்றன.

11.jpg

பழையனூர் என்பதே ஊரின் பழம்பெயராகும். பண்டைய இப்பேரூரின் ஒரு பகுதியில் ஆலமரக்காடு திகழ்ந்திருந்து, பின்பு அப்பகுதியில் திருக்கோயில் எழுப்பப் பெற்றமையால் அக்கோயில் சார்ந்த பகுதி திருவாலங்காடு எனப் பெயர் பெற்றது. தற்காலத்தில் திருவாலங்காடு தனி ஊராகவும், பழையனூர் தனி ஊராகவும் கொள்ளப்பெறினும் அவை பழையனூர் ஆலங்காடே. தமிழக வேளாளர் குடிமக்களின் சத்தியவாக்கு எவ்வளவு உயரியது என்பதை உலகுக்கு காட்டிய ஊர் பழையனூராகும்.

பழையனூர் எழுபது வேளாளர் குடும்பங்கள் கொண்ட ஊராகத் திகழ்ந்துள்ளது. ஒருநாள் ஓர் அந்தணன் அவ்வூர் மக்களிடம் வந்து ஆதரவுகோரி அவ்வூரிலேயே நிலையாகத் தங்கியிருந்தான். ஒரு மாலைப் பொழுதில் அவ்வூர் நோக்கி வந்த ஒரு அபலைப்பெண் அவ்வந்தணனின் மனைவி என்று கூறி அவனைத் தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு அழுது புலம்பினாள்.

11a.jpg

பழையனூரார் அவளை விசாரித்தனர். அவளோ தன் பெயர் நீலி என்றும், கணவனால் வஞ்சிக்கப்பட்டவள் என்றும் கணவனைத் தன்னுடன் அனுப்பும் படியும் வேண்டினாள். அந்தணனோ அவள் பேய் என்றும், தன்னுயிரை மாய்க்க வந்தவள் என்றும், அவளுடன் செல்ல முற்பட மாட்டேன் என்றும், மறுப்புரைத்ததோடு, அவளுடன் சென்றால் மறுநாள் தன்னுயிர் இருக்காது என்றும் வாதாடினான். ஊர் மக்களோ கணவன் மனைவி பிணக்கைத் தீர்த்து வைத்து விடலாம் எனக் கருதினர்.

எனவே இருவரையும் அவ்வூரிலுள்ள ஓரிடத்தில் அன்று இரவு தங்குமாறும், மறுநாள் அவர்தம் பிரச்னைகளுக்கு முடிவு காணலாம் என்றும் வழி கூறினர். அந்தணனோ தான் நிச்சயம் மறுநாள் இருக்க மாட்டேன், நீலி தன்னை மாய்த்து விடுவாள் என்று கூறி பயந்தான். அந்தணனின் பயத்தைப் போக்கவும், நீலியின் கண்ணீரை நம்பி இரக்கமுற்று அவளுக்கு உதவவும் முற்பட்ட அவ்வூர் வேளாளர்கள் அந்தணனை நோக்கி, ‘நாளைக்கு அப்பெண்ணால் உன் உயிர் போகுமானால் நாளை மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு எழுபது தலைக்கட்டுக்கள் (குடும்பங்கள்) உள்ள இவ்வூரின் வீட்டுக்கு ஒருவர் என எழுபது வேளாளர்களும் உயிருடன் இருக்க மாட்டோம்’ என உறுதி கூறினர்.

11b.jpg

பயத்துடனே அந்தணனும், பழி வாங்க வந்த நீலியும் ஓரிடத்தில் தங்கினர். மறுநாள் புலர்காலை பழையனூர் வேளாளர் அனைவரும் அவரவர் தம் கழனிகளுக்கு சென்று விட்டனர். ஊரிலோ அந்தணன் இறந்து கிடந்தான். நீலியைக் காணவில்லை. வேளாளர்கள் வீடு திரும்பினர். நிகழ்ந்தது அறிந்தனர். தங்கள் வாக்குறுதியை நம்பியவன் இறந்து கிடந்ததைக் கண்டனர். திருக்கோயில் முன்பு பெரிய குழியில் தீமூட்டினர். வீட்டுக்கு ஒருவர் என எழுபது வேளாளர்களும் தீயில் இறங்கி தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர்.

சத்திய வாக்கிற்காகத் தங்களை மாய்த்து கொண்ட அந்த வேளாளர்கள்தான் கூழாண்டார் கோத்திரத்தினர் என அவ்வூர்த் தலபுராணம் கூறுகின்றது. திருஞானசம்பந்தப்பெருமான் அவர்தம் பெருமையினைப் போற்றிப் பரவியுள்ளார். ‘‘நீலிக் கண்ணீர் வடிக்கிறாயே’’ என்று பொய்யாகக் கண்ணீர் வடிப்பவர்களைப் பார்த்து கூறும் ஒரு மரபு இன்றளவும் தமிழ்நாட்டில் உண்டு.

வட ஆரண்யேஸ்வரம் என்ற பெயரால் அழைக்கப்பெறும் திருவாலங்காட்டு சிவாலயம் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாக திருச்சுற்றுகளும் பரிவாராலயங்களும் சூழ காட்சி நல்குகின்றது. கோபுரம் கடந்து உள் திருச்சுற்றினை அடைய நுழையும் இரண்டாம் திருவாயிலின் மேல் நிலையில் ஐந்து சபைகளுக்குரிய ஐந்து நடராஜர் திருவுருவங்களைக் காணலாம். தில்லைப் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலத்து சித்திர சபை, திருவாலங்காட்டு ரத்தின சபை ஆகியவற்றில் ஆடும் அம்பலக்கூத்தனின் திருவடிவங்களே அவை.

வடவாரண்யேஸ்வரர் எனும் திருவாலங்காடுடைய மகாதேவர் மூல லிங்கமாக காட்சி நல்க, அம்மை, வண்டார்குழலி என்ற திருநாமத்தோடு இத்தலத்தில் அருள்பாலிக்கின்றாள். வல்லப விநாயகர், சுப்பிரமணிய பிள்ளையார், சண்டீசர், பைரவர், சூரியன் சந்திரன், பாப ஹரேஸ்வரர் போன்ற பரிவார தெய்வங்கள் சூழ திருச்சுற்று அமைந்துள்ளது. ரத்தின சபையில் ஒரு காலைத் தலைக்கு மேல் உயர்த்தி ஊர்த்துவத் தாண்டவம் ஆடுகின்றாராகக் கூத்தப்பெருமானும், அவருடன் ஆட இயலாமல் கோபம் தனிந்தவளாகக் காளியும், தாளமிசைத்துப் பாடுபவராகக் காரைக்காலம்மையும், செப்புத் திருமேனிகளாகக் காட்சி நல்குகின்றனர்.

சோழர் கலையின் உச்ச வெளிப்பாடுகளாக இத்திருமேனிகள் காணப்பெறுகின்றன. திருச்சுற்றில் சகஸ்ரலிங்கம் எனப்பெறும் ஒரே லிங்க பாணத்தில் ஆயிரம் லிங்க வடிவங்கள் உள்ள சிவலிங்கம் காட்சி நல்குகின்றது. வெளிப் பிராகாரத்தில் திகழும் பெரிய ஆலமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். திருக்கோயிலின் தீர்த்தக் குளக்கரையில் ஆலங்காடு ஒன்றும் காளிதேவியின் கோயிலும் அமைந்துள்ளன.

காளிதேவியின் உக்கிர கோபத்தைத் தணிக்கவே சிவபெருமான் ஆலமரக்காடாம் இத்தலத்தில் ஊர்த்துவத்தாண்டவம் ஆடி அவள் கோபம் தணித்தார். காரைக்காலம்மையார் பேய் வடிவம் எடுத்த பிறகு அம்மனைத் தரிசிக்க கயிலை மலைக்குத் தலையால் நடந்து கயிலைநாதன் உமையுடன் இருக்குமிடம் அடைந்தார். உமாதேவி, ‘பேய்வடிவம் கொண்ட இவர் யார்?’ என வினவியபோது அப்புனிதவதியாரை ‘அம்மையே’ எனும் செம்மொழியால் உலகமெல்லாம் உய்ய ஈசன் அழைத்தருளினார்.

அது கேட்ட பேயார் ‘அப்பா’ என்று சொல்லி வணங்கி ‘‘பிறவாமை வேண்டும். பிறப்பு உண்டேல் உன்னை நான் என்றும் மறவாமை வேண்டும். இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’’ என்று வேண்டினார். உடன் சிவபெருமான் அம்மைக்கு அருள் செய்து ‘‘குலவு தென்திசையில் என்றும் நீடு வாழ் பழன மூதூர் நிலவி ஆலங்காட்டில் ஆடுமா நடமும் நீ கண்டு பாடுவாய் நம்மை,’’ என்று கூறினார்.

அவ்வாறே அம்மையும் திருவாலங்காடடைந்து அப்பனின் ஆனந்தத்தாண்டவம் கண்டு, அவன் திருவடி கீழ் அமர்ந்து ‘‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’’ எனும் இரண்டு பதிகங்களைப் பாடி மகிழ்ந்தார். அப்பதிகப் பாடல்களில் ஈசன் ஆடிய கூத்தின் திறத்தை தாம் கண்ட அனுபூதியின் வாயிலாக அப்படியே பதிவு செய்துள்ளார். தமிழக திருக்கோயில்களில் திருவாலங்காட்டில் ஈசன் ஆடிய காட்சியை ஊர்த்துவத்தாண்டவமாகவே சிற்பங்களில் காட்டியுள்ளனர்.

ஆனால், முதலாம் இராஜேந்திரசோழன் கங்கை நீரால் மங்கலம் செய்த பெருங்கோயிலாம் கங்கை கொண்ட சோழீச்சரத்தில் மட்டுமே திருவாலங்காட்டில் காரைக்கால் பேயார் பாடிய திருப்பதிகத்திற்கு ஈசன் ஆடிய ஆனந்தத்தாண்டவக் காட்சியை சிற்பமாகப் படைத்துள்ளான். அதனால் தான் இங்கு மட்டுமே ஆடவல்லானின் தலைக்கு மேலாக ஆலமரத்துக் கிளைகளைக் காணலாம். பல்லவர் காலத்து பழங்கோயிலாக விளங்கிய ஆலங்காட்டுத் திருக்கோயிலினைப் பின்னாளில் சோழப் பேரரசர்கள் கற்றளியாகப் புதுப்பித்துள்ளனர்.

அதன் காரணமாக பல்லவர்கால கல்வெட்டுகள் பின்னாளில் இவ்வாலயத்துச் சுவர்களில் கல்வெட்டுப் படிகளாகப் பொறிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் நிருபதுங்க பல்லவனின் தேவி காடவன் மாதேவியார் அளித்த கொடை குறிப்பிடத்தக்கதாகும். அத்தேவி திருவாலங்காடுடைய ஈசனாரின் பூசைகளுக்காக நூற்று எட்டு கழஞ்சு ெபான்னை முதலீடாக கோயிலுக்கு அளித்தார். அப்பொன்னை பெரு முளையூர் எனும் ஊர் சபையினர் கடனாகப் பெற்று அதன் வட்டியாகக் கோயிலுக்கு ஆண்டுதோறும் இருநூறு கலம் நெல்லும், விளக்கெரிக்க நாள் ஒன்றுக்கு ஒரு ஆழாக்கு நெய்யும் அளப்பதாக ஒப்புக் ெகாண்டு சாசனம் எழுதியுள்ளனர்.

அப்பழங்கல்வெட்டை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மீண்டும் புதுப்பித்து படியாக எழுதியுள்ளனர். பல்லவனின் தேவி அளித்த அறக்கொடை பல நூற்றாண்டுகள் (ஏறத்தாழ 500 ஆண்டுகள்) கடந்தும் சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. இதனை நோக்கும்போது ஆலய அறக்கொடைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் தடைப்படாமல் எவ்வாறு செயல்பாட்டில் இருந்தன என்பதை சான்றோடு நாம் அறியலாம்.

நிருபதுங்க பல்லவனின் தேவி காடவன் மாதேவியின் கல்வெட்டு சாசனத்தை இனிக் காண்போம்: ‘‘ஸ்வஸ்தி கோ நிருபதுங்க தேவர்க்கு யாண்டு 11 ஆவது. இத்தேவர் தேவியார் காடவன் மாதேவியார் பக்கல் ஈக்காட்டு கோட்டத்துக் காக்கலூர் பிரமதேசம் பெருமுளையூர் சபையோர் கொண்ட தன்ம கட்டளையால் பொன் 108. இப்பொன் நூற்று எண் கழஞ்சுக்கும் பலிசையாகப் பழையனூர் நாட்டு திருவாலங்காடுடையார்க்கு ஆட்டாண்டு தோறும் செய்யக் கடவ நிவந்தம் ஆண்டு வரை அளக்கு நெல் 200 கலம் நித்தம் நெய் ஆழாக்கு’’ - என்பதே அக்கல்வெட்டு வாசகமாகும்.

இவை போன்ற பல்லவர்கால கொடைகளும், சோழர்கால கொடைகளும் இவ்வாலயத்துக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளன. கங்கைகொண்ட இராஜேந்திரசோழன் திருவாலங்காட்டுத் திருக்கோயில் இறைவனுக்கும், தேவிக்கு அளித்த நிலக்கொடை ‘‘திருவாலங்காட்டு செப்பேடுகள்’’ என்ற தாமிர சாசனத்தில் எழுதப் பெற்று இக்கோயிலுக்கு அளிக்கப் பெற்றது. உலகப் புகழ்பெற்ற இச்செப்பேட்டுத் தொகுதி தற்போது சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ளது.

இத்தொகுதியின் துணை கொண்டு நாம் சோழர் வரலாறு அறிவதோடு திருவாலங்காடுடைய மகாதேவர் கோயிலுக்கு அந்நிலக்கொடையால் ஆண்டொன்றுக்கு எவ்வளவு ெநல் அளக்கப் பெற்றது என்ற தகவலும் அறிய முடிகிறது. நிலங்களைப் பற்றிய துல்லியமான தகவல்களை இச்சாசனம் கூறுவதோடு அவைகளுக் குரிய பாசன கால்வாய்கள் பற்றியும், அவற்றில் எவ்வாறு நீர் மேலாண்மை மேற்கொள்வது பற்றியும் விவரிக்கின்றது.

குறிப்பாக இவ்வூர் எல்லை வட்டத்திலுள்ள தென்னை மரங்களும், பனை மரங்களும் கள் இறக்குவதற்காக ஈழவர்களால் ஏறப் பெறாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அது போன்றே ஏரி நீர்ஏற்குமளவும் ஏற்று கோக்குமளவும் கோக்க தன் எல்லையில் கரையட்டிக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. சோழப் பேரரசர்கள் காலத்தில் ஈழ நாட்டு (இலங்கை) வெற்றிக்குக் காரணமாக இருந்த அம்மையப்பன் பல்லவராயன் என்ற மாவீரன் பழையனூர் ஆலங்காட்டைச் சார்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆலங்காடு செல்வோம். அற்புத நடனங் காண்போம்.

-முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard