திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன் என்றால் சூரியன்னு சொல்றாரு ஒருவர். இன்னொருவரோ இல்லை இல்லை அது "ஆதிப் பறையன்" என்கிறார். இன்னொருவரோ சமண கடவுள்னு சொல்றார், இன்னொருவரோ கர்த்தர்ங்குறார் மற்றும் மனம்போன போக்கில் ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் என்னடா ஆதாரம்னு கேட்டால் பல்லப் பல்ல காட்டுறாங்களே தவிர யாரிடமும் எந்த சான்றுகளும் இல்லை. நாம் திருக்குறள் வழி நடக்கிறோமோ இல்லையோ ஆனால் ஆளாளுக்கு திருக்குறளை சொந்தம் கொண்டாடுகிறோம், அல்லது தெய்வப்புலவனை அவரவர் சித்தாந்தம் சார்ந்து எழுதுகிறோம்.!
சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால் திருவள்ளுவமாலையில் வள்ளுவனை திருமாலாகவும், பிரம்ம தேவராகவும், கற்பக விரிட்சமகாவும் பல புகழ் மாலைகள் சூடி இருந்தாலும் முத்தமிழ் மூதாட்டியான ஔவையரே திருக்குறளை திருவாசகத்துடனும், திருமந்திரத்துடனும் ஒப்பிட்டிருந்தாலும் திருவள்ளுவர் ஓர் சமணர் என்றும், அவர் கிறிஸ்தவர் என்றும் அவர் தோமாவின் சீடர் என்றும் இல்லை இல்லை அவர் இஸ்லாமியர் என்றும் கூட ஆளாளுக்கு பொய்யிற்புலவனை உரிமை கொண்டாடுகின்றனர். ஆகவே திருக்குறளின் முதல் குறளில் வரும் அகர முதலோன் யார்? ஆதிபகவன் யார்? என்பதை பழங்கால இலக்கியங்களின் அடிப்படையில் பார்க்கலாம். அதற்கு முன்பு திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டின் அடிப்படையில் "பகவன்" என்ற சொல்லாடலுக்கு என்னென்ன பொருள் வருகிறது என்பதை பார்த்துவிட்டுத் தொடர்வோம்.
நிகண்டுகளில் காலத்தால் முந்தைய திவாகர நிகண்டின் முதல் நூற்பாவில் "அருக தேவனின்" பெயர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட பல்வேறு பெயர்களில் "பகவன்" என்ற பெயரும் இடம் பெறுகிறது. அதேப்போல் இரண்டாவது நூற்பாவில் சிவனின் பெயர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட பல்வேறு பெயர்களில் "பகவன்" என்ற பெயரும் உள்ளது. அதோடு 12ஆவது நூற்பாவில் புத்தரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பெயர்களில் பகவன் என்ற பெயரும் உள்ளது. அதாவது திவாகர முனிவர் ஓர் சமணர். அவரே "பகவன்" என்ற பெயரை அருக தேவனுக்கு மட்டுமே உரியதாகக் குறிப்பிடவில்லை என்பதை அறிக. மேலும் பிங்கல நிகண்டில் பகவன் என்ற சொல்லாடல் ஏழு கடவுளரைக் குறிப்பதாக பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது,
“பட்டா ரகன்மால் பங்கயன் பரமன்
இரவி அருகன் புத்தனும் பகவன்“
இதில் நாம் கவனிக்க வேண்டியது திவாகரம் குறிப்பிடாத, திருமாலும், பிரமனும், சூரியனும் குருவும் கூட பகவன் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் பகவன் என்ற சொல்லாடல் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நிகண்டுகளிலேயே சிவன் திருமால் பிரம்மன் என்று பல்வேறு தெய்வங்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதால் பகவன் என்ற சொல்லாடல் அருக தேவனுக்கு மட்டுமே உடையது என்ற சமணர்களின் வாதம் இங்கு ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் சிலர் "ஆதி பகவன்" என்ற சொல்லாடலை ஆதி பகலவன் என்று மாற்றி திருவள்ளுவர் ஆதி பகவன் என்று சூரியனைத் தான் சொல்கிறார் என்கிறார்கள்.!
ஒருவேளை இறைவனாகத் திருவள்ளுவர் சூரியனைத்தான் சொல்கிறார் என்பவர்கள் குறள் எண் -10ல் வரும் "பிறவிப் பெருங்கடல்" என்பது என்ன என்பதையும், "இறைவன் அடி சேரா தார்" என்ற வரியின் அடிப்படையில் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே பிறவிப் பெருங்கடலை கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் விளக்கி கூறினால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும். ஆனால் மற்ற 9 குறள்களில் அதன் அம்சமே இல்லை என்பதுதான் நிதர்சனம். உதாரணமாக,
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
இக்குறளில் திருவள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் அடியோடு மறந்துவிடுகின்றனர்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
இக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஆதி,பகவன் என்பதும், அகர முதலோன் என்பதும் சிவனையே குறிக்கும் என்பது தான் தமிழ் இலக்கியங்கள் நமக்குத்தரும் செய்தி. இதற்கு சான்றாக முதலில் திருமந்திரத்தைப் புரட்டினால் சற்று வியப்பான செய்தி கிடைக்கிறது.!
"அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே"
பொருள் : உலகுடல் உயிர்கட்குத் தாங்கும்நிலைக்களனாக நிற்பவன் சிவன். அவ் அடையாளம் அகரத்தால் குறிக்கப்பெறும். அதனால் அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் என்றருளினர். அவை இயங்குமாறு இயைந்தியக்கும் திருவருளாற்றல் சிவை. அவ் வியக்கத்தை உயிர்ப்பு என அருளினர். இவ் வடையாளம் உகரமாகும். அகர உகரமாகிய இவ்விரண்டுமே 'சத்தியும் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்' என்னும் செம்பொருட்டுணிவின் மெய்ம்மையாகும். இவற்றை உணரின் அகரவுகரமே சிவலிங்கம் என்க. அதாவது இங்கே திருமூலர் அகர முதல்வனாக சிவபெருமானைக் குறிப்பிடுகிறார் என்பது கவனிக்கப்படவேண்டியதே.!
பொருள்: தகரம் எனப்படும் மணப்பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாக வளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடிபடச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினைமாசுகளினின்று நீங்கப் பெறுவர்.
இதன் மூலம் 6, 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் சிவபெருமான் அகரமுதலோன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
"பிணக்கோலம் ஆதுஆம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றா அடியேன்உய்யப் போவதுஓர் சூழல் சொல்லே"
என்று சிவபெருமானை அப்பர் பெருமான் பாடி உள்ளார். இவ்வரிகள் திருக்குறளின் முதல் குறளை அப்படியே பிரதிபலிப்பதாகத்தான் உள்ளது. இதே பொருளைத்தான் இன்று நமக்குக் கிடைக்கும் திருக்குறளுக்கான மிகப்பழமையான உரைகளின் ஒன்றான மணக்குடவரின் உரையும் தெளிவுபடுத்துகிறது. மேலும்
"அகர வுயிர்போ லறிவாகி வெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து"
- உமாபதி சிவாச்சாரியார்.
அதாவது அகரமாகிய உயிர் எழுத்துக்கள் எல்லாவற்றினும் பொருந்தி நின்றாற் போலத் தனக்கோர் உவமனில்லாத் தலைவன், உலகுயிர் முழுவதும் ஒழிவற நிரம்பி ஞான வுருவாய் அழிவின்றி நிலைபெறும் என்க என்று அகரத்தை உவமையாக்குகிறார். மேலும்
"ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின்
உம்மை சிறப்பின் கண் வந்தது என்று அகரம்போல நின்றவன் என்று சிவபெருமானை நினைவுகூர்கிறார்.!
குறிப்பாக டாக்டர் மா . இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலின் அடிப்படையில் திருநாவுக்கரசரின் காலம் கி.பி. 575 – 656 என்றும், திருஞானசம்பந்தர் காலம் 638 – 654 என்றும் எடுத்துக்கொண்டு நான் மேலே குறிப்பிட்ட திவாகரம் மற்றும் பிங்கல நிகண்டுகளுக்கு முன்பே சிவபெருமானை திருவள்ளுவர் அழைத்ததுபோல் அகரமுதலோன் என்று அழைத்துள்ளனர் என்பது தெளிவு. மேலும்,
என்ற சித்தாந்த சிகாமணியின் வரிகளில் நேரடியாக "ஆதிபகவன்" என்ற சொல்லாடல் சிவபெருமானைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிக. மேலும் முதல் திருக்குறளில் வரும், ஆதிபகவன், எனும் சொல், திருமந்திரத்தில் ‘ஆதி’ என்றும், ‘பகவன்’ என்றும் தனித்தனியாகவும், ஆதிப்பிரான், வேதப் பகவனார்’ எனச் சிறு மாற்றங்களோடும் பயின்றுவருகின்றன.
“ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர், உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வு அறியாரே”
“அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடையார் நெஞ்சத் தங்கு நின்றானே”
“ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான்”
“படமாடக்கோயிற் பகவற் கொள் நீயில் ”
“பகவற்கே தாகிலும் பண்பில ராகில்”
- திருமந்திரம்.
இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் அவரின் நெஞ்சுவிடு தூதில் திருவள்ளுவரை அவரின் இப்பெயர்கொண்டு அவரின் திருப்பதிகங்களில் பாடியிருப்பதுபோல் வேறெந்த சமயத்தாரும் திருவள்ளுவருக்கு இத்தகு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
"நிலைத் தமிழின் தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் ஐவர்க்கு மாதுவே செய்தங் கவர் வழியைத் தப்பாமல் பாவமெனும்"
- நெஞ்சுவிடு தூது
அதாவது இங்கு உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் திருவள்ளுவரின் அறத்தை சுட்டுகையில் திருவள்ளுவரையே ஏந்தி பாடி இருப்பது அவர் ஓர் சைவ சித்தாந்தவாதியாகவே பார்க்கப்பட்டிருக்கிறார் என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். அதோடு 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்குறளை ஏந்திப் பாடி இருப்பது அவர் ஓர் சைவ சித்தாந்தி என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.!
"மற்றேல் ஒருபற் றிலனம் பெருமாள் வண்டார் குழலான் மங்கைபங் கினனே அற்றார் பிறவிக் கடல் நீந்தி யேறி அடியேனுய் யப்போவ தோர்குழல் சொல்லே"
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
இங்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவள்ளுவரின் 10 ஆவது குறளை சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கத்தக்கது. ஆக இதிலிருந்து திருவள்ளுவர் கூறும் அகர முதலோன் என்பதும், ஆதிபகவன் என்பதும் சிவபெருமானையும் குறிக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம். இங்கு வள்ளுவன் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதன் மூலம் ஆதிபகவனாகிய சிவனே உலகக்காரணன் என்று குறிப்பிடுகிறார். அதாவது உலகத்தின் ஆதியான முழுமுதற் கடவுள் பற்றி சொல்கிறார். இதுபோல் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக எண்ணி அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் சங்ககாலத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.!
"பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே"
- புறநானூறு.
நெடுநாள் வாழக்கூடிய நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்தபோது அதை தான் உண்ணாமல் ஔவையாருக்கு கொடுத்தபோது ஔவையார் அதியமானை நோக்கி, நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க! என்று சிவபெருமானை உவமையாக்கி வாழ்த்துகிறார். ஆக இங்கே திருவள்ளுவர் சிவனை முழுமுதற் கடவுளாக பாவித்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை ஏனெனில் திருக்குறளுக்கு முன்பே இங்கு சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏந்தி பாடும் வழக்கம் இருந்தது என்பதை நற்றிணை , புறநானூறு போன்ற இலக்கியங்கள் மூலம் அறியலாம்.!