…
…
…
மோயாறு என்கிற ஒரு ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரியில் – மசினகுடி – ஊட்டி வழியில் , முதுமலை அருகே உற்பத்தியாகிறது.
இந்த ஆற்றின் போக்கு பற்றி அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல், இந்த விஷயத்தை விவரமாக கவனிக்கத் தூண்டுகிறது.
நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு செய்திக்குறிப்பை எனக்கு அனுப்பி இருந்தார். ( ttp://tamil.nativeplanet.com/travel-
guide/do-you-know-about-moyar-river-001082.html#slide12286 )
அதன் சாராம்சம் வருமாறு –
—————————-
தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு பாயும் மோயாறு ஆற்றை வழிமறித்து, ஊட்டியில் ஒரு அணை கட்டினால், தமிழகத்தின் தண்ணீர் தேவைகளுக்கு கர்நாடகாவை எதிர்பார்க்க வேண்டாம்…..!!!
————
இந்த தகவல் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று… என்பதால், இதனைப்பற்றி நிறைய மேலதிக தகவல்களை சேகரித்தேன்….
கிடைத்த தகவல்களையும், புகைப்படங்களையும் கீழே தந்திருக்கிறேன்….
…
மேற்கு தொடர்ச்சி மலையில், முதுமலை அருகே உருவாகும் மோயாறு, ஒரு காட்டாறாக, தேக்கமாக, தெப்பக்காடு அருகே பொங்கும் நீர்வீழ்ச்சியாக – மோயாறு அருவி என்று – பல உருவங்கள் எடுத்து, பெரிய ஆறாக ஓடத்துவங்கி,
முதுமலை வனவிலங்கு சரணாலயம் வழியாக பாய்ந்து, கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய வனவிலங்கு பூங்கா அருகே இரண்டாகப் பிரிந்து,
ஒரு பிரிவு தென் கிழக்கு நோக்கி பாயத்துவங்கி, சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் துணை ஆறாக, பவானி அணைக்கட்டில் சங்கமமாகிறது.
அதன் இன்னொரு பிரிவு, வட மேற்கே திரும்பி, கர்நாடகாவிற்குள் நுழைந்து, பந்திப்பூர் ஊடாகப் பாய்ந்து, நூகு, கபினி நதிகளுடன் இணைந்து, கர்நாடகாவின் கபினி அணையில் சங்கமமாகிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை, பவானி ஆற்றின் துணை ஆறாக மோயாறு குறிப்பிடப்படுகிறது….
ஆனால், கர்நாடகாவை பொருத்த வரை, நிறைய இடங்களில் தேடிப்பார்த்து விட்டேன் – எங்குமே கபினியின் துணை ஆறாக குறிப்பிடப்படவில்லை. கர்நாடகாவில் அதன் போக்கு, நீர் வரத்து பற்றிய விவரங்களும் தெளிவாக
கிடைக்கவில்லை.
—————
TOP 10 Amazing Wilderness Resorts of Kabini (Nagarhole) & Bandipur
என்று பந்திப்பூர் சரணாலத்தின் ரிசார்ட் குறித்து பேசும் ஒரு வெப்சைட்… இதில் –
The park is flanked by the Kabini river in the north and the Moyar river in the south. The Nugu river runs
through the park.
என்று குறிப்பிடப்படுகிறது.
——————–
ஆக மொத்தம், மோயாற்றின் ஒரு பிரிவு தமிழ்நாட்டிற்குள்ளிருந்து – கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர் கொண்டு போய்ச்சேர்க்கிறது என்பது உண்மையே….
மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாவதால், ஆண்டில் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது இதில் நல்ல நீரோட்டம் இருக்கும்என்பதும் உண்மையே…
இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில், கர்நாடகாவிற்குள் – எந்த வழியில், எவ்வளவு உயரத்தில் பாய்கிறது, இதில் தோராயமாக எவ்வளவு தண்ணீர் கபினி அணைக்கு போய்ச்சேருகிறது என்கிற தகவல்கள் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்…. இருந்தாலும், இது குறித்த எந்த தகவல்களும் இதுவரை
வெளியே வந்ததாகத் தெரியவில்லை….
இந்த மோயாறின் குறுக்கே, தமிழ்நாட்டின் எல்லைக்குள் எதாவது ஒரு இடத்தில் அணை கட்டி, நீரை தமிழ்நாட்டின் பக்கமே திருப்பி விட முடியுமா என்பது குறித்த சாத்தியக்கூறுகள் எதாவது இதுவரை பரிசீலிக்கப்பட்டனவா என்பதும் தெரியவில்லை.
தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில், தங்களுக்கு தோன்றுகிற அத்தனை விதங்களில் தண்ணீரை உறிஞ்சி / தடுத்து,
தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கூட விட மறுக்கும் கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தியாகும் ஒரு ஆற்றின் நீர் எதற்காக போக வேண்டும் என்பது நியாயமான ஒரு கேள்வி.
பெரிய அளவிற்கு நம் எதிர்பார்ப்பை தீர்த்து விடாது என்றாலும், ஆண்டிற்கு ஒரு 40 – 50 டிஎம்சி தண்ணீராவது
இதன் மூலம் கூடுதலாக கிடைக்கும் என்றால் அதுவே பெரிய விஷயம் தான்.
எனவே, தமிழக பொதுப்பணித்துறை சீக்கிரமாக இது குறித்து ஒரு விவரமான சர்வே நிகழ்த்தி, விவரங்களை வெளியிட வேண்டும். தமிழக அரசு, தமிழகத்தின் நலன் கருதி, மோயாற்றிலிருந்து அதிக பட்சம் தமிழ்நாட்டிற்கு பலன் கிடைக்கும் வண்ணம் திட்டங்களை உருவாக்கி, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் …..
இது தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு, கோரிக்கை.
நமது வலைத்தள நண்பர்கள் யாரிடமாவது இது குறித்து கூடுதல் தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை
இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.