முன்னுரை
சங்க கால மக்கள் தங்கள் வாழ்க்கை இயல்பினை இரு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கின்றனர். ஒன்று அகம்; மற்றுது புறம் அகம் காதலையும் புறம் வீரத்தையும் குறிக்கும் எனப்பொதுவாகக் கூறப்படுகிறது. அகம், காதலைக் குறித்தாலும் புறம், வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரம் என்பது முதன்மையான ஒன்றாகக் கருதப்பட்டு பிற ஒழுகலாறுகள் குறித்த செய்திகளும் புறத்தில் அடங்குகின்றன. அகமும் புறமும் சில கூறுகளில் ஒப்பு நோக்கிக் கூறப்படுகின்றன. அகத்திணைகளான கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகியன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி ஆகியவற்றோடு ஒப்புமையாக்கப்பட்டு உணரப்படுகின்றன. ஏழாக உரைக்கப்பட்ட புறத்திணைகள் தொல்காப்பிய காலத்திற்குப் பிறகு பன்னிரண்டாக விரித்துரைக்கப்படுகின்றன. பாடாண், காஞ்சி தவிர புறத்தின் மற்ற திணைகள் போர் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றன போரில் வெற்றி பெற்ற நிகழ்வினை உரைக்கின்ற வாகைத்திணையில் அமைந்துள்ள பார்ப்பன வாகை குறித்த கருத்துக்களை முன்வைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. புறநானூற்றில் பார்ப்பன வாகை
சாதிப்பிரிவுகள்
சங்ககாலம் பழமையானது மட்டுமில்லாமல் தமிழர்களின் உயர்வான வாழ்க்கை நெறிமுறைகளைப் பறைசாற்றும் காலம் எனலாம். சங்ககாலச் சமுதாயத்தில் பல்வேறு சாதிப்பிரிவினர் இடம்பெற்றிருக்கின்றனர். நால்வகை வருணம் பேசப்பபடுகின்றன. ஆனால் சாதி வெறி உணர்வு பேசப்படவில்லை, குறவர், வேட்டுவர், ஆயர், கானவர், உழவர், பரதவர், நுளையர், எயினர், மறவர் எனச் சுட்டப்பட்ட தமிழ்க்குடிகள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது” (தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் – வாழ்வியல் – ப.5) குடிகள் நில அடிப்படையில் தத்தம் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இத்தகைய குடிகளில் பார்ப்பனர் இடம்பெறவில்லை. இருப்பினும் சங்கச் சமுதாயத்தில் பார்ப்பணர்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர். ஐம்பெருங்குழுவில் இடம்பெறும் புரோகிதர் பார்ப்பனராக இருக்கலாம். சங்ககாலத்தில் சாதிகள் இருந்தன. ஆனால் வேற்றுமைகள் பெரிதாகப் பாராட்டப்படவில்லை.
சங்க காலப் பார்ப்பனர்கள்
பார்ப்பனர்கள், அந்தணர், ஐயர் என்று அழைக்கப்படுகின்றனர். நால்வகை வருணத்தில் பிராமணர் எனச் சுட்டப்படும் சொல் வழக்கு சங்க இலக்கிய நூல்களில் எங்கும் இடம்பெறவில்லை. அந்தணர் என்றும் பார்ப்பார் என்றும் சுட்டப்படுவதை சங்க இலக்கியங்களில் காணலாம். அந்தணர் என்ற சொல் பார்ப்பனரை மட்டும் குறிக்கவில்லை என்பதற்கு
அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30)
என்ற வள்ளுரின் வாய்மொழி சான்றாக அமைகிறது. பார்ப்பனர் அல்லாதவர்ககளும் சிறப்பான குணநலன்களால் அந்தணர் என்று அழைக்கப்படலாம் என்ற கருத்திணை இக்குறட்பா எடுத்துரைக்கின்றது. ஐயர் என்ற சொல் தலைவர், உயர்ந்தோர், சான்றோர், என்பதைக் குறிக்கின்றன. பார்ப்பனர் என்ற சொல்லே பிராமணரைக் குறிப்பிடும் சொல்லாகும்.
பார்ப்பார்க்குரிய செயல்களும் இருப்பியல் நிலையும்
முப்புரிநூல், கரகம், முக்கோல் மணை ஆகியவற்றை உடையவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தமையை தொல்காப்பியம் பொருளதிகார நூற்பா மரபியல் : 71 எடுத்துரைக்கின்றது. சங்க கால அகவாழ்வில் கற்பின்கண் தலைவன், தலைவியரிடையே நிகழும் ஊடலில், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களுள் ஒருவராகப் பார்ப்பார் குறிப்பிடப்படுகிறார். இதனைத் தொல்காப்பியக் கற்பியல் நூற்பா (191) சுட்டிக் காட்டுகின்றது.
பார்ப்பார்க்குரிய செயல்கள் ஆறென மொழிவதை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகின்றது. தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுந்த உரையிலும் இதனைக் காணலாம். அவை ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்
ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
என்ற சிலப்பதிகார அடிகளாலும் (கட்டுரை காதை 67-70) அந்தணர்க்குரிய அதாவது பார்ப்பார்க்குரிய செயல்களை அறியமுடிகிறது.
பார்ப்பனருள் பெரியவரைக் கொண்டு வேள்விகள் நடத்தப்பெற்றிருக்கின்றன, வேள்வியின் இறுதியில் பார்ப்பனப்புலவன் தம் மனைவியுடன் துறக்கம் அடைந்ததாகவும் நம்பப்படுகிறது. இச்செய்தியை பதிற்றுப்பத்து உரைக்கின்றது. (பதிகம்-3) பார்ப்பனச் சிறுவர்கள் குடுமியுடன் இருந்ததை ஐங்குறுநூறு வழி (202:2-3) அறிய முடிகிறது. அரசனுக்காகப் பார்ப்பனர்கள் தூது சென்றிருக்கிறார்கள். இதனை அகநானூறு தெரிவிக்கின்றது. போரினைத் தடுக்கும் முறையிலும் செயல்பட்டிருக்கின்றார்கள். அரசர்களுக்கு நிலையாமையை எடுத்துரைத்து அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள், கபிலர், பரணர், நக்கீரர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலான புலவர்களாகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றனர். அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் பணிவுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பார்ப்பனர்கள் அரசர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றனர். போர் ஏற்படும் சூழலில் பாதுகாப்பான பகுதியில் சென்று தங்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைத்தல் கொடிய பாவமாகக் கருதப்பட்டிருக்கின்றது.
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கிய கழுவாயும் உள
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் (34:3-4) மேற்கண்ட கருத்தினை அறிவிக்கின்றது. அரசர்களுடைய அரண்மனையில் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் சென்று வர உரிமை இருந்திருந்தது. எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனை,
“அருமறை நாவின் அந்தணர்க் காயினும்
கடவுள் மால் வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில்…..
என்ற சிறுபாணாற்றுப்படையின் (204-206) பாடலடிகள் குறிப்பிடுகின்றன. தங்களுடைய கடமைகளைச் செய்யும் பொருட்டு தங்கள் இருப்பிடத்தில் வேள்வித் தூண் நடுதலை
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசைஇ
என்று பெரும்பாணாற்றுப்படை (315-316) குறிப்பிடுகின்றது.
அரசரை விடவும் அந்தணர்கள் – பார்ப்பனர்கள் உயர்ந்தவராகப் கருதப் பட்டிருக்கின்றார்கள். இதனை,
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி
உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர்……..
என்று மதுரைக்காஞ்சி (468-473) எடுத்துரைக்கின்றது. இத்தகைய தன்மையுடைய அந்தணரை – பார்ப்பனரை அரசன் துணையாகக் கொண்டு வாழ்ந்தால் பெரும்புகழ் அடையலாம் என்ற கருத்தினை,
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி
ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று
நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ
என்ற பதிற்றுப்பந்து (மூன்றாம் பத்து 4: 8-1) பாடலடிகள் மூலம் அறியலாம். சங்க காலப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நடப்பவர்களுக்குப் புகழ் கிட்டும் என்ற கருத்தியல் தளத்தினடிப்படையிலும், பார்ப்பனர்கள் மேல் நிலையில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.