திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூல். அக்காலத்தில் தமிழர் அடைந்திருந்த நாகரிகத்தையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் சீர்திருத்தத்தை உண்டாக்க வேண்டித் திருக்குறள் ஆசிரியர் செய்த முயற்சியே குறள் நூலாக உருவமாயிற்று. பழங்காலத் திலிருந்த ஒரு அறிவாளி அவர் காலத்து மக்களிடம் அவர் கண்ட பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, அவருக்கு நல்லவை என்று தோன்றியவற்றைச் சிறப்பித்தும், கெட்டவை என்று தோன்றியவைகளைக் கண்டித்தும் குறள் இயற்றினார்.
குறளாசிரியரின் சொல் வன்மையைப் பற்றியும், புத்தி நுட்பத்தைப்பற்றியும், தமது முன்னோர் என்ற முறையில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம். குறளில் வற்புறுத்தப் பட்ட பல ஒழுக்கங்கள் இன்றும், இந்த இருபதாம் நூற்றாண்டிலும், நல்லொழுக்கங்களாகவே கருதப்பட்டு வருவது தமிழ் மக்களுக்கும், தமிழ் பாஷைக்கும் பெருமை கொடுக்கத் தக்கதே.
இக்காலத்தில், குறளாசிரியர் வாழ்ந்து குறைந்த பட்சம்ஒரு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாவது கழிந்த பிறகு, குறளைப் படிப்பவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் மனித சரித்திரத்தில் இந்தப் பன்னெடுங் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பல புரட்சிகளையும் மனதில் நிறுத்திப் படிக்கவேண்டும்.
அப்படி அராய்ச்சி செய்பவர்களுக்குக் குறளிலும் சில குற்றங்கள் தோன்றத்தான் செய்யும். இது இயற்கை. ஒரு ஆயிரத்து ஐந்நூறு வருஷத்தில் மனித சமூகம் எவ்வளவோ மாறுதல்களை அடைந்துவிட்டது. ஒரு பெண் இறந்த தன் கணவனின் பிணத்தோடு கொளுத்தப்படவேண்டும் என்பது ஒரு நூறுவருஷத்திற்கு முன்பு சிறந்த ஒழுக்கமென வற்புறுத்தப்பட்டது. இன்று அப்படிப்பட்ட செயலுக்கு உடந்தையாக இருப்பவர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப் படுவர். உலகத்தில் எல்லாத் தேசத்தினரும் தங்கள் பழக்கவழக்கங்களிலும், அந்தப் பழக்க வழக்கங்களுக்குக்
ஆசிரியர் முன்னுரை
திருக்குறள் தலைசிறந்த நூல்; திருவள்ளுவர் ஓப்பற்ற புலவர்; இது தமிழர் கருத்து மட்டும் அன்று; திருக்குறளைப் படித்த அனைவரும் இவ்வாறு கூறுகின்றனர்; ஓப்புக்கொள்கின்றனர்; பாராட்டுகின்றனர். இதற்குக் காரணம் ஒன்றேதான். திருக்குறளிலே கூறப் பட்டிருக்கும் அறங்களிலே சிலவற்றைத் தவிர மற்றவைகள் எல்லாம் அனைவர்க்கும் பொதுவானவை. எல்லாச் சமயத்தினர்க்கும், இனத்தவர்க்கும், மொழி யினருக்கும் பொதுவான கொள்கைகள் பல திருக்குறளிலே அடங்கியிருக்கின்றன.
திருக்குறள் இன்ன சமயத்தினருக்கு உரியது; இன்ன இனத்தினர்க்கு உரியது; என்று கூற முடியாது. வள்ளுவர்க்கும், அவர் குறளுக்கும் தனி நாகரிகம் கற்பிப்பது, தனி இனம் கற்பிப்பது, தனிச்சமயம் கற்பிப்பது முறையன்று; இது உண்மைக்கு மாறானது. வள்ளுவர் குறள்தான் தமிழர் நாகரிகத்தைக் கூறுகின்றது; அதுவே தமிழர் சமயநூல் என்போர் உண்டு; இக்கருத்து வரவேற்கத் தக்கது; போற்றத் தக்கது. இவர்கள் கூற்று உண்மை யானால் இந்நாட்டில் ஆரியர் தமிழர் என்ற வேற்றுமைக்கே இடமில்லை.
ஆரியர்கள் என்று யாரை நினைக்கிறோமோ அவர்கள் வள்ளுவர் கருத்தை மறுப்பதில்லை. அப்படியே ஒப்புக் கொள்ளுகின்றனர். அதலால் வள்ளுவர் குறளைக்கொண்டு நாகரிக வேற்றுமை--பண்பாடு வேற்றுமை கற்பிக்க இடம் இல்லை. வள்ளுவர் கருத்துக்கும் வட நூல்களின் கருத்துக்களுக்கும் வேற்றுமையில்லை. வள்ளுவர் கருத்தை வடமொழிப் புலவர் களும் போற்றுகின்றனர். அவருடைய கருத்துக்கள் வடநூல்களிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். அதலால் வள்ளுவரைக் கருவியாகக் கொண்டு வடமொழியுடன் போர் தொடுக்க
முடியாது; வேறு இனத்தாருடன் சண்டை போட முடியாது. மொழி வெறுப்பாளர் பக்கத்தில் வள்ளுவர் நிற்கமாட்டார். இன வெறுப்பாளர் பக்கத்திலும் வள்ளுவர் நிற்கமாட்டார்.
இன்று வள்ளுவரைப் பற்றிப் பேசுகின்றவர்களிலே சிலர் அவர் சொல்லாதவைகளை யெல்லாம் சொல்லியிருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு காரணம் வடமொழியின் மீதும் ஆரியர்கள் என்று உண்மைக்கு மாறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சிலர் மீதும் கொண்ட வெறுப்பேதான்.
இம்முயற்சி பயனற்ற வீண்முயற்சி; அனைவரும் கண்டு மகிழும்படி. மாசற்ற நீலவானத்திலே உலவும் முழுமதி போன்ற வள்ளுவரை ஒரு கிணற்றுக்குள்ளே தள்ளி அடக்கி வைக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதுதான் இவர்களுடைய முயற்சி. படித்தவர்கள் சிலர்கூட இம்முயற்சியில் ஈடுபட்டி ர௬ுப்பதுதான் இரங்கக் தக்கது.
உலகமெல்லாம் ஒப்புக்கொள்ளத் தகுந்த உயர்ந்த; நூலைச் செய்தவர் வள்ளுவர்; அவரை மொழி வெறுப்புள்ள வராகக் காட்ட முயற்சிக்கின்றனர்; இன வெறுப்புள்ளவராகக் காட்ட என்ன என்னவோ சொல்லுகின்றனர். நாகரிக வெறுப்புள்ள வராகக் காட்ட முயற்சிக்கின்றனர். இவர்கள் நிலைமைக்குப் பரிதாபப்படத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது?
வள்ளுவர்க்குப் பெருமை தரவேண்டும். தமிழுக்குச் சிறப்புத் தரவேண்டும். தமிழர் நாகரிகம் பண்பட்டது; உயர்ந்தது; என்று காட்ட வேண்டும் என்பது இவர்கள் கொள்கையாக இருக்கலாம். இக்கொள்கை போற்றத் தக்கது தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்கள் தமிழரின் சிறப்பைப் போற்றுகின்றனர்; தமிழரின் நாகரிகத்தைப் பாராட்டுகின்றனர். தமிழரின் பரந்த நோக்கத்தை வியக்கின்றனர். இதுபோலவே வள்ளுவரைப் படித்தவர்கள்
உலக மக்கள் அனைவரும் போற்றும் ஒரு நூலை, ஒரு சமயப் பெட்டிக்குள் வைத்துப் பூட்ட முயற்சிப்பது அந்நூலுக்குப் பெருமையளிப்பது ஆகாது; இரு இனக் கூண்டுக்குள் அடக்க முயல்வதும் வள்ளுவர் மாண்பை மறைப்பதாகத் தான் ஆகும்.
ஒரு தனித்த நாகரிக வகைக்குள் மாட்ட முயற்சிப்பதும் வள்ளுவர் புகழுக்குத் திரை போடுவதாகத்தான் முடியும். இது வள்ளுவர்க்கோ, திருக்குறளுக்கோ, தமிழுக்கோ, பெருமை தருவதும் ஆகாது. திருக்குறளிலே உள்ள நீதிகள் எல்லாம்.
மக்கள் அனைவர்க்கும் பொதுவாகவே கூறப்படுகின்றன. ஒரு குறளாவது இன்ன நாட்டு மக்களுக்கு என்று குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. இதைக் கொண்டே வள்ளுவர் உலக மக்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறார் என்பதைக் காணலாம்.
பிற மொழியை, பிற இனத்தவரை, பிற நாட்டினரைப் பழித்துப் பேசுவது தமிழர் பண்புக்கு மாறானது; வெறுத்துப் பேசுவது தமிழர் நாகரிகம் உன்று. உலக மக்களுடன் ஓன்று பட்டு வாழவேண்டும் என்பதே தமிழர் கொள்கை, தமிழர் பண்பாட்டை வள்ளுவர் மறந்தவர் அல்லர். தமிழர் பண்புக்கு மாறான கொள்கைகளைத் திருக்குறளிலே காணமுடியாது. இப்பண்புள்ள திருக்குறளை வைத்துக் கொண்டு சிலர் வெறுக்கத் தக்கவைகளைப் பேசுவது தான் வியப்பிற்குரியது. திருவள்ளுவரின் உண்மையான கருத்துக்களை உணர்ந்தவர்கள், ஒருவரிடமும் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள்; வெறுப்பாளர் பேச்சுக்களை நம்பவும் மாட்டார்கள்.
உயர்ந்த இலக்கியங்களுக்கும், இலக்கியங்களைச் செய்த புலவர்களுக்கும், குறுகிய நோக்கங்களைக் கற்பிப்பது வெறுக்கத் தக்கது. இப்படிக் குறுகிய நோக்கங்களைக் கற்பித்துக் கூறுவோற் நாட்டுக்கோ, மக்களுக்கோ, மொழிக்கோ நன்மை செய்கின்றவர்கள் ஆகமாட்டார்கள் இவர்கள் கொள்கை தவறானது; இதைப் பொது மக்களுக்கு எடுத்துக் காட்டி யாகவேண்டும்.
இலக்கியங்களின் மூலம் பரப்பப்படும் வெறுப்பு நஞ்சை, இலக்கியங்களில் உள்ள மருந்துகளைக்கொண்டே மாற்றியாக வேண்டும். இது தமிழ்ப் புலவர்களின் கடமை, மக்கள் முன்னேற்றத் தைக் கருதும் பொதுஜன இயக்கங்களின் கடமை; தமிழ் நாட்டு மக்கள், தங்களுடன் வாழ விரும்பும் அனைவரோடும் இணைந்து வாழும் இயல்புள்ளவர்கள். இந்த உண்மையைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்கு அடிக்கடி அறிஞர்கள் எடுத்துக் காட்டவும் வேண்டும்.
இன்று தமிழ் மக்களிடையே வெறுப்பு விதைகள் பல விதைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கியங்களில் உள்ள உண்மைப் பண்புகளை எடுத்துரைப்பதன் மூலம் அவ்வெறுப்பு விதைகளை முனையிலேயே கிள்ளியெறிந்துவிடலாம். இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டே திருக்குறளில் உள்ள உண்மைக் கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன; திருக்குறள் உண்மையைத் தமிழர் காணவேண்டும்; திருவள்ளுவர் கருத்தைத் தமிழர் அறியவேண்டும்; தமிழ் இலக்கியத்தின் சிறப்பைத் தமிழர் உணரவேண்டும்; இந்நோக்கமே வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் பிறந்ததற்குக் காரணம்.
திருக்குறளைப் பற்றி ஒரு சிலர், இன்று தமிழ் நாட்டிலே பரப்பி வரும் தப்பும் தவறுமான கருத்துக்களைத் திருத்துவதற்கு இந்நூல் பயன்படும். இதுவே நமது நம்பிக்கை. இந்நம்பிக்கை வெற்றி பெறுமானால், இது தமிழர்க்கும், தமிழுக்கும் செய்த பணியாகும். இக்கருத்தைப் பெரும்பாலான தமிழர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் தமிழ் மக்களுக்குக் காட்டப்படுகின்றது.
உண்மையறியாத சிலர்--- உண்மையை அறிந்திருந்தாலும் அதை ஒளிக்க வேண்டும் என்று விரும்புகின்ற சிலர்--- இந்நூலாசிரியர் மேல் சீறி விழலாம்.; வசை பாடலாம். அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. உண்மையைக்கூற வேண்டும் என்பதே நமது நோக்கம். இந்நோக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்றாலும் போதும்; அதுவே எமக்குப் பெருமகிழ்ச்சி. இந் நூலால் வள்ளுவர் மாண்பு இன்னும் வளரும்; திருக்குறளின் கொள்கை பரவும்; தமிழின் சிறப்பு ஓங்கும்; தமிழர் பண்பாடு பாராட்டப்படும்; திருக்குறளைப் படிக்கும்படித் தமிழர்களைத் தட்டி எழுப்பும்.
திருக்குறளில் உள்ள எல்லாவற்றையும் இந்நூலிலே எடுத்துக் காட்டி விட்டாதாக யாரும் எண்ண வேண்டாம் சொல்லியவை சில; சொல்லாமல் விடப்பட்டவை பல திருக்குறளைப் படிப்போர்க், இது ஒரு வழி காட்டியாகப் பயன்பட்டால் போதும். இக்கருத்துடன் எழுதப்பட்ட சிறு நூல்தான் இது மக்கள் திருக்குறள் முழுவதையும் படித்து உண்மை உணரவேண்டும் என்பதே நமது அவல்.
இந்நூலில் உள்ள குற்றம் குறைகளை எப்பொழுது யார் எடுத்துக் காட்டினாலும் நன்றியறிவோடு திருத்திக் கொள்வோம். இந்நூல் நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டி ருக்கின்றது. முதற்பகுதியில் வள்ளுவர் பெருமை, வரலாறு, திருக்குறளின் பெருமைக்குரிய காரணங்கள் விளக்கப்பட்டி ருக்கின்றன.
இரண்டாவது பகுதி, அறத்துப்பாலில் உள்ள செய்யுட்களை ஆதரவாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டது. மூன்றாவது பகுதி பொருட்பாலை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டது நான்காவது பகுதி காமத்துப்பாலின் சிறப்பை விளக்குவது.
இந்நூலிலேயே ஏறக்குறைய 200 குறள் வெண்பாக்கள் வருகின்றன. அவைகள் உதாரணமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவ்வெண்பாக்களின் பொருளும் அவ்வவ்விடங்களிலே விளக்கப்பட்டிருக்கின்றது. இந்நூலைப் படிப்போர் எண்ணத்திலே அவ்வெண்பாக்கள் பதியும் என்று நம்புகின்றோம்.
“வள்ளுவர் நூலை வழுவறக் கற்றுண்மை கொள்ளுவதே நல்லோர் குணம்”.