திருக்குறள் என்னும் ஒப்பற்ற நூலைச் செய்த திருவள்ளுவரின் வரலாற்றை இன்றளவும் நாம் கண்டறிய முடியவில்லை. அவருடைய உண்மை வரலாற்றைக் கூறும் நூல் ஒன்றும் இல்லை. உண்மை வரலாற்றைக் உணர முடியாத காரணத்தால் யார் யாரோ, ஏதேதோ கதைகள் கட்டி விட்டனர். அக்கதைகளையெல்லாம் வள்ளுவர் தலையிலே சுமத்தி வைத்திருக்கின்றனர்.
1. ஞானாமிர்தம் என்பது ஒரு பழைய நூல்; அகவற்பாவால் அமைந்தது. அதில் ஒரு அகவலில்
யாளி - கூவல் தூண்டும் ஆதப் புலைச்சி
காதல் சரணி யாகி, மேதினி
இன்னிசை எழுவர்ப் பயந்தோள் ஈண்டே
என்ற அடிகள் காணப்படுகின்றன. “யாளி தத்தன் தனக்கு விகிர்தமாய்த், தன்னானே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த்தப் பட்ட, அறிவில்லாத ஒரு சண்டாளப் பெண்ணை, ஒரு பிராமணன் எடுத்துக் கொண்டுபோய் உத்தர பூமியில் வளர்த்து இவனுக்கே பின்னர்க் கொடுக்க; இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இந்நில உலகின் கண்ணே இனிய கீர்த்திபெற்ற கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவரை ஈங்குப் பெற்றாள்” இது அவ்வரிகளுக்கு எழுதப்பட்டி ருக்கும் பழைய உரை.
யாளிதத்தன் என்ற அந்தணன், புலைச்சி ஒருத்தியை மனைவியாகக் கொண்டான். அவன் ஏழு மக்களைப் பெற்றாள். அவர்கள் கபிலர், அதிகமான், வள்ளி, முறுவை, அவ்வை, உப்பை என்பவர்கள்.
கபிலர், அதிகமான், கால்குறவர் பாவை
முகில் அனைய கூந்தல் முறுவை - நிகர்இலா
வள்ளுவர் அவ்வை வயல்ஊற்றுக் காட்டில் உப்பை
எள்இல் எழுவர் இவர். என்று ஒரு வெண்பா வழங்குகின்றது. அதனால் வள்ளுவருடன் பிறந்த எழுவர் இன்னார் என்று அறிகின்றோம்.
2. இக்கதை வேறு விதமாகவும் மாறி வழங்குகின்றது. ஆதிஎன்னும் புலைச்சிக்கும், பகவன் என்னும் அந்தணனுக்கும் மேற்கூறிய எழுவர் பிறந்தனர். அதியும் பகவனும் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை அப்படியே பிறந்த இடத்திலேயே விட்டுப் போரய்விடுவர். இவ்வாறே ஏழு பிள்ளைகளையும் விட்டுப் போயினர். அக்குழந்தைகளைக் கண்டவர்கள் எடுத்துக்கொண்டு போய் வளர்த்தனர். இவ்வகையில் வள்ளுவரால் கண்டெடுக்கப் பட்டு வளர்ந்தவர் வள்ளுவர் என்று பெயர் பெற்றார். இக்கதை கபிலர் அகவல் என்னும் சிறு நூலிலே காணப்படுகின்றது. பகவனுக்கும் ஆதிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான கபிலரே இந்த அகவலைப் பாடினர் என்று சொல்லப்படுகின்ற து.
இக்கபிலர் அகவல் பிற்காலத்தது; ஆரியர் திராவிடர் வேற்றுமையைக் கிளப்பிவிடும் எண்ணத்துடன் எழுதப்பட்டது; இக்கதை மேலே காட்டிய “ஞானாமிர்தத்தை” அடிப்படையாகக் கொண்ட கதையாகத்தான் இருக்கவேண்டும்.
3. வள்ளுவர் என்ற பெயரைக் கொண்டு அவர் வள்ளுவர் குடியிலே பிறந்தவர் என்று மட்டுந்தான் தெரிகின்றது.
என்பது திருவள்ளுவமாலை. மாமூலனார் என்னும் புலவர் பெயரால் காணப்படும் வெண்பா. “அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அந்த நான்கின் வகைகளையெல்லாம் ஆராய்ந்து உரைத்தவர் திருவள்ளுவர்; அவரை வள்ளுவன்தானே என்று ஒருவன் மறந்து கூறுவானாயின் அவன் ஓர் அறிவற்றவன்; அவன் வாய்ச்சொல்லை அறிவுள்ளவர் ஒரு சொல்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.” என்று கூறுகிறது இவ்வெண்பா. இதனால் திருவள்ளுவர் தமிழ் நாட்டுப் பழந் தமிழ்க் குடி.களுள் ஒன்றாகிய வள்ளுவர் குடியிலே பிறந்தவர். அல்லது வளர்ந்தவர்; வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.
4. திருவள்ளுவர் பிறந்த இடம், வளர்ந்த இடம், வாழ்ந்த இடம் இதுவென்று தீர்மானிக்கவும் முடியவில்லை. அவர் மயிலாப்பூரிலே வளர்ந்தார் என்பது ஒரு கதை. மயிலாப்பூரில் வள்ளுவர்க்கென்று ஒரு கோயிலும் உண்டு. இதற்குக் கபிலர் அகவல் என்னும் புது நூல் தான் ஆதரவு.
இது, நல்கூர்வேள்வியார் என்னும் புலவர் செய்யுள். இதுவும் திருவள்ளுவ மாலைப் பாட்டு. இவ்வெண்பாவினால் திருவள்ளுவர் மதுரையிலே பிறந்தவர்; என்று எண்ண இடம் உண்டு. இவ்வெண்பா, கபிலர் அகவற் கதையைப் பொய் யாக்குகின்றது.
3. சேரனூர் என்பது இப்பொழுது சோரஜனூர் என்று வழங்குகின்றது. இவ்வூரைச் சேர்ந்த வட்டாரத்திற்கு வள்ளுவ நாடு என்பது பழந்தமிழ்ப் பெயர். வள்ளுவர் என்னும் அரசர்கள் ஆண்டதனால் இப்பகுதிக்கு வள்ளுவ நாடு என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். திருவள்ளுவர் இந்த வள்ளுவ நாட்டில் - வள்ளுவர் குடியில் - பிறந்தவராக - வாழ்ந்தவராக இருக்கலாம் என்று எண்ணுவோரும் உண்டு.
வள்ளுவநாடு இன்று மலையாளப் பகுதியில் இருக்கின்றது. திருவள்ளுவர் காலத்திலே இன்றுள்ள மலையாளப் பகுதி சேர நாடாகத்தான் இருந்தது. அதலால் திருவள்ளுவர் வள்ளுவ நாட்டைச் சேர்ந்தவர் என்றால் அதை மறுப்பதற்கு இடமில்லை. இது உண்மையானால் வள்ளுவர் அரச பரம்பரையில் பிறந்தவர் என்று கருதலாம்.
இவ்வரலாறுகளையெல்லாம் பார்த்தால், திருவள்ளுவர் எங்கே பிறந்தார்? எங்கே வாழ்ந்தார்? அவருடைய பெற்றோர்கள் யார்? என்று வரையறுத்துக் கூற இடமில்லை. திருவள்ளுவர் தமிழகத்திலே பிறந்தார்; தமிழ் நாட்டிலே வளர்ந்தார்; தமிழ் மக்களிடையிலே வாழ்ந்தார்; என்று மட்டுந்தான் சொல்ல முடியும்.