Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காமத்துப்பால்‌


Guru

Status: Offline
Posts: 7468
Date:
காமத்துப்பால்‌
Permalink  
 


காமத்துப்பால்‌

காமத்துப்பால்‌ என்பது வள்ளுவர்‌ வைத்த பெயர்‌. இதை இக்காலத்தில்‌ சிலர்‌ இன்பத்துப்பால்‌ என்று பெயரிட்டிருக்‌கின்றனர்‌. காமம்‌ என்பதற்கு இன்பம்‌ என்பது பொருள்‌. இப்‌பொருளிலேயே இன்பத்துப்பால்‌ என்று சொல்லுகின்றனர்‌. வள்ளுவர்‌ வைத்த காமத்துப்பால்‌ என்ற தொடரை இன்பத்துப்‌ பால்‌ என்று மாற்றி வழங்க வேண்டிய அவசியம்‌ ஒன்றுமில்லை.

காமம்‌ என்னும்‌ சொல்‌

காமம்‌ என்னும்‌ சொல்‌ வடமொழியிலும்‌ உண்டு; தமிழ்‌ மொழியிலும்‌ உண்டு. காமம்‌ வடசொல்லா? தமிழ்ச்சொல்லா? என்ற அராய்ச்சியிலே தலையிடவேண்டாம்‌. காமம்‌ வடசொல்‌ என்று எண்ணுகிறவர்களே, அதற்குப்‌ பதிலாக இன்பம்‌ என்ற சொல்லை வழங்குகின்றனர்‌ இச்சொல்‌ தமிழிலேயே பண்டுதொட்டு வழங்கி வருகின்றது. இலக்கிய வழக்கிலே இருந்து வருகின்றது. ஆதலால்தான்‌ வள்ளுவர்‌ காமத்துப்பால்‌ என்று பெயர்‌ வைத்தார்‌.

மக்கள்‌ அடையவேண்டிய உறுதிப்‌ பொருள்கள்‌ நான்கு என்பர்‌. இந்த நான்கு உறுதிப்‌ பொருள்களையும்‌ எல்லோரும்‌ ஒப்புக்கொள்கின்றனர்‌. அவ்வுறுதிப்‌ பொருள்கள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு என்பன. இவை கலப்பற்ற தமிழ்சொற்கள்‌ இவ்‌வுறுதிப்‌ பொருள்களை வடமொழியிலேயே புருஷார்த்தங்கள்‌ என்பர்‌. இவற்றை தர்மம்‌, அதர்மம்‌, காமம்‌, மோட்சம்‌ என்பர்‌. தமிழ்‌ நூல்களில்‌ எல்லாம்‌ பெரும்பாலும்‌ பெண்ணுடன்‌ சேர்ந்து வாழும்‌ இன்பத்தையே காமம்‌ என்னும்‌ சொல்‌ குறித்து வழங்குகின்றது. இன்பம்‌ என்பதும்‌ இப்பொருள்‌ உடையதுதான்‌. பிற்காலத்தில்‌ மதக்கொள்கைகளும்‌, மத நம்பிக்கைகளும்‌ வளர்ந்த காலத்தில்‌ இன்பத்தை இரண்டாகப்‌ பிரித்தனர்‌. பேரின்பம்‌, சிற்றின்பம்‌ என்பதே அப்பிரிவு, பேரின்பம்‌ - பெரிய இன்பம்‌; அழியாமல்‌ நிலைத்து நிற்கும்‌ இன்பம்‌. சிற்றின்பம்‌-சிறு இன்பம்‌; அழிந்து விடக்கூடியது, பெண்‌ இன்பமும்‌, இவ்வுலகில்‌ நுகரும்‌ ஏனைய இன்பங்களும்‌ சிற்றின்பம்‌; பேரின்பம்‌ இறந்தபின்‌ எய்தும்‌ அழியாத இன்பம்‌.

தொல்காப்பியத்திலே பெண்ணின்பத்தைக்‌ குறிப்பிடும்‌ போது காமக்கூட்டம்‌ (தொல்‌.கள.சூ.1) என்றே குறிப்பிட்டுள்ளது.

காமக்கூட்டம்‌ என்பதற்றுப்‌ “புணர்தலும்‌ புணர்தல்‌ நிமத்தமும்‌” என்று உரை கூறுகின்றார்‌. நச்சினார்க்கினியர்‌. திருக்குறளில்‌ உள்ள காமத்துப்‌ பாலும்‌ இதைப்‌ பற்றிதான்‌ சொல்லுகின்றது. காதலர்களுக்குள்ள அன்பு; அவர்கள்‌ ஒன்று சேர்ந்து வாழ்வது; ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான காரணங்கள்‌ இவைகளைப்‌ பற்றியே காமத்துப்பாலில்‌ சுருக்கமாகவும்‌ தெளிவாகவும்‌ விளக்கப்பட்டி ருக்கின்றன.

முன்னோர்‌ முறையைப்‌ பின்பற்றியே இப்பகுதிக்கு காமத்துப்பால்‌ என்று பெயரிட்டார்‌ வள்ளுவர்‌. காமத்துப்‌ பாலில்‌ உள்ள அதிகாரங்களின்‌ எண்ணிக்கை இருபத்தைந்து இவற்றுள்‌ களவைப்‌ பற்றிக்‌ கூறுவது ஏழு அதிகாரங்கள்‌; எழுபது வெண்பாக்கள்‌. கற்பைப்‌ பற்றி உரைப்பது பதினெட்டு அதிகாரங்கள்‌; நூற்றெண்பது வெண்பாக்கள்‌.

இந்த இருபத்தைந்து அதிகாரங்களிலும்‌ வள்ளுவர்‌ காமம்‌ என்ற சொல்லையே கையாண்டிருக்கின்றார்‌. களவியலில்‌ பன்னிரண்டு சொற்கள்‌, கற்பியலில்‌ இருபத்தைந்து சொற்கள்‌ காணப்படுகின்றன. ஆகவே காமத்துப்பாலில்‌, காமம்‌ என்ற சொல்‌ 37 இடங்களில்‌ வருகின்றது.

காமம்‌ உழந்து; காழுற்றார்‌; காமக்‌ கடும்புனல்‌; கடல்‌ அன்ன காமம்‌; காமநோய்‌; காமக்கனிச்சி; மலரினும்‌ மெல்லிது காமம்‌; இவ்வாறு காமம்‌ என்னும்‌ சொல்‌ பயின்று வருகின்றது.

“ஊடுதல்‌ காமத்திற்கு இன்பம்‌; அதற்கு இன்பம்‌

கூடி முயங்கப்‌ பெறின்‌.

ஊடுவதே காமத்திற்குச்‌ சிறந்த இன்பமாகும்‌; மீண்டும்‌ கூடித்‌ தழுவிக்‌ கொள்ளுவதே அந்த ஊடலுக்கு இன்பமாகும்‌. (ஞூ.13.30) இதுவே காமத்துப்பாலின்‌ இறுதி வெண்பா; திருக்குறளின்‌ இறுதி வெண்பாவும்‌ இதுதான்‌. காமம்‌ என்னும்‌ சொல்‌ இச்‌செய்யுளிலும்‌ அமைந்திருக்கின்றது. தமிழ்‌ எழுத்துக்களில்‌ முதல்‌ எழுத்து அ என்பது. இறுதி எழுத்து ன என்பது. அகர முதல என்று தொடங்கும்‌ முதற்‌ குறளில்‌ முதல்‌ எழுத்து ௮ அமைந்‌திருக்கின்றது. இந்த இறுதிக்‌ குறளிலே ன்‌ என்ற இறுதியெழுத்து அமைந்திருக்கின்றது. இந்த இறுதி குறளிலே ன்‌ என்ற இறுதியெழுத்து அமைந்திருக்கிறது. இது வியத்தற்குரியது.

இக்காலத்திலே காமம்‌ என்ற சொல்‌ அவ்வளவு நல்ல பொருளிலே வழங்கவில்லை. நூல்‌ வழக்கிலே வழங்குவது போல உலக வழக்கில்‌ இல்லை. காலத்திற்கேற்றவாறு சொற்‌களின்‌ பொருள்‌ வேறுபட்டு வழங்குவது இயல்பு. காமாந்தகாரன்‌. காமவெறி பிடித்தவன்‌; காமத்திற்குக்‌ கண்‌ இல்லை; காமத்தால்‌ அலைகின்றான்‌; இத்தொடர்கள்‌ மக்களின்‌ இழி குணத்தை உணர்த்துகின்றன பெண்ணாசையால்‌ பித்துப்‌ பிடித்து அலை கின்றவனையே இவ்வாறு பழித்துப்‌ பேசுகின்றனர்‌.

காதல்‌ வயப்பட்டான்‌; இன்பத்தில்‌ இச்சை கொண்டான்‌; அன்பிற்கு அடிமைப்பட்டான்‌; காதலியைக்‌ கண்டு இன்புற்றான்‌; காதலனைக்‌ கண்டு இன்பம்‌ எய்தினாள்‌; என்று கூறுவதை யாரும்‌ அவ்வளவு இழிவாக எண்ணுவதில்லை. இலக்கிய வழக்குப்‌ போலவே கருதப்படுகின்றது. காதல்‌, காமம்‌ இன்பம்‌, என்னும்‌ மூன்று மொழிகளும்‌ ஒரே பொருளுடைய சொற்கள்‌ தாம்‌ ஆயினும்‌ இக்காலத்தினர்‌ சிலர்‌ காமம்‌ என்பதை இடக்கர்ச்‌சொல்லாக எண்ணுகின்றனர்‌. அதலால்‌ காமத்தை வடசொல்‌ என்று கருதியும்‌, இடக்கர்ச்‌ சொல்‌ என்று எண்ணியுமே சிலர்‌ காமத்துப்பாலை இன்பத்துப்பால்‌ என்று மாற்றிக்‌ கூறுகின்றனர்‌. காலத்திற்கேற்றவாறு இவ்வாறு மாற்றிக்‌ கொள்வதிலே தவறில்‌லைதான்‌. ஆயினும்‌ வள்ளுவர்‌ வைத்த பெயரை வழங்குவது தான்‌ சிறந்தது.

வள்ளுவர்‌ காலத்திலே காமம்‌ என்ற சொல்‌ இடக்கர்ச்‌ சொல்லாக எண்ணப்படவில்லை. இலக்கிய வழக்கிலும்‌ உலக வழக்கிலும்‌ இச்சொல்‌ தண்ணீர்பட்ட பாடாகவே வழங்கி வந்தது. அதலால்‌ தான்‌ வள்ளுவர்‌ இச்சொல்லைத்‌ தமது வெண்பாக்களிலே தாராளமாக இயங்க வைத்தார்‌.

காமத்துப்பால்‌ ஏன்‌?

வள்ளுவர்‌ காமத்துப்பாலை என்‌ பாட வேண்டும? அதிலே என்ன இருக்கின்றது? அறம்‌ இருக்கின்றதா? அரசியல்‌ இருக்‌கின்றதா? பொருளீட்டும்‌ வழி இருக்கின்றதா? ஒருவனும்‌ ஒருத்தி யும்‌ மணந்து வாழும்‌ களவைப்‌ பற்றிக்‌ கூறுவதால்‌ யாருக்கு என்ன பயன்‌? கற்பு மனத்தைப்‌ பற்றி விரிந்துரைப்பதால்‌ தான்‌ என்ன பயன்‌? இவைகளுக்காக இருபைத்தைந்து அதிகாரங்கள்‌

ஏன்‌? என்று கேட்போர்‌ உண்டு. இவர்கள்‌ தமிழ்‌ நூல்‌ முறையை அறியாதவர்கள்‌; தமிழர்‌ பண்பாட்டின்‌ பெருமையை உணராதவர்கள்‌. தமிழர்‌ பண்பாட்டின்‌ சிறப்பைக்‌ களவும்‌ கற்புமே எடுத்துக்காட்டுகின்றன. இதற்காகவே வள்ளுவர்‌ காமத்துப்‌ பாலைக்‌ கூறினார்‌

தமிழ்ச்‌ செய்யுட்கள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌ முதலிய மூன்று பொருள்களையும்‌ அமைத்துப்‌ பாடுவதற்கு உரியன என்று தொல்காப்பியம்‌ உரைக்கின்றது.

“அந்நிலை மருங்கின்‌ அறம்‌ முதலாகிய மும்முதற்‌ பொருட்களும்‌ உரிய என்ப அந்த நிலையில்‌ உள்ள செய்யுட்கள்‌, அறம்‌, பொருள்‌, இன்பம்‌ முதலிய மூன்று பொருள்களையும்‌ அமைத்துப்‌ பாடுவதற்கு உரியன என்பர்‌”. (தொல்‌,பொருள்‌,செய்‌. 106)

முப்பொருள்‌ அமைந்த செய்யுட்களே சிறந்த கவிதைகள்‌; முப்பொருள்களைப்‌ பற்றியும்‌ மொழியும்‌ நூல்களே உயர்ந்த நூல்கள்‌; இதுவே தமிழ்ச்‌ சான்றோர்களின்‌ கொள்கை.

திருக்குறளுக்குச்‌ சிறந்த உரை வகுத்த பரிமேலழகரும்‌, “அறம்‌, பொருள்‌ இன்பங்களைப்‌ பற்றிக்‌ கூறுவனவே தமிழ்‌ நூல்கள்‌ “ என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்‌. “மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரால்‌ எடுக்கப்பட்டப்‌ பொருள்‌ நான்கு; அவை அறம்‌, பொருள்‌, இன்பம்‌ வீடு என்பன. அவற்றுள்‌ வீடு என்பது சிந்தையும்‌ மொழியும்‌ செல்லா நிலையமைத்து; ஆதலின்‌ துறவறமாகிய காரண வகையால்‌ கூறப்படுவது அல்லது இலக்கண வகையால்‌ கூறப்படாமையின்‌ நூல்களால்‌ கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்‌”. இது பரிமேலழகர்‌ கூற்று. நூல்களால்‌ இவ்‌வுலக வாழ்வைப்‌ பற்றித்தான்‌ நேரடியாகக்‌ கூறமுடியும்‌; இவ்வுலக நிகழ்ச்சிகளைப்‌ பற்றித்தான்‌ இன்சுவை ததும்ப எடுத்துரைக்க முடியும்‌. இதுவே பரிமேலழகரின்‌ கருத்தாகும்‌.

அறம்‌ பொருள்‌ இன்பங்களைப்‌ பற்றி எடுத்துரைக்கும்‌ இலக்கியங்களே சிறந்த இலக்கியங்கள்‌; இவைகளே முற்ற முடிந்த முழுநூல்கள்‌. அறநெறியைப்‌ பின்பற்றி வாழ்ந்து, நன்னெறியிலே பொருளீட்டி, இன்பம்‌ நுகர்வதே இவ்வுலகில்‌ மக்கள்‌ அடையும்‌ பயன்‌. அதலால்‌ அறத்தைப்‌ பற்றியும்‌ பொருளைப்‌ பற்றியும்‌ சொல்லிவிட்டு இன்பத்தைப்‌ பற்றி  சொல்லாமல்‌ விடுவது பேரா௫ிரியர்‌ - பேரறிஞர்‌ - முதலாசிரியர்‌-

-தெய்வப்‌ புலவர்‌ என்பவர்க்கு ஏற்றதாகாது. அதலால்‌ இன்பத்தை விளக்கும்‌ காமத்துப்பாலையும்‌ கூறி முடித்தார்‌ வள்ளுவர்‌.

தமிழிலே நூல்‌ இயற்றியவர்‌ வள்ளுவர்‌. தமிழ்‌ நூல்‌ மரபை மறந்துவிடவில்லை; மறைத்துவிடவும்‌ இல்லை. தமிழ்நூல்‌ முறைப்படியே தமது நூலைச்‌ செய்தார்‌. பிற்காலத்தில்‌ நூல்‌ இயற்றுவோருக்கும்‌ இதன்‌ மூலம்‌ வழிகாட்டினார்‌. தமிழ்‌ நூல்கள்‌ எப்படி. இயற்றப்பட வேண்டும்‌ என்பதற்குத்‌ திருக்குறள்‌ ஒரு வழிகாட்டியாக நிற்கின்றது. காமத்துப்பாலிலே, வள்ளுவர்‌ தமது காலத்து நிலைக்கேற்பச்‌ சிறிது மாற்றம்‌ செய்திருக்கிறார்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard