சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ உண்மைகளும்
சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளில் எல்லாத் தெய்வ வழிபாடுகட்கும் தலைமை யானதாகவும் குறிஞ்சி முல்லை முதலிய நில எல்லையைக் கடந்த விரிவுடையதாகவும் விளங்கும் சிறப்புடையது சிவவழிபாடு ஒன்றேயாகும். பண்டை நாளிற் போர் மறவர்களால் வழிபடப் பெற்ற கொற்றவையாகிய வனதுர்க்கையும், தியோரைச் சினந்தழிக்கும் காடுகிழாளாகிய காளியும், ஆருயிர்கட்கெல்லாம் அப்பனாகிய இறைவனொடு பிரிவின்றி அவனது ஒரு கூறாகியமர்ந்து அருள்சுரக்கும் அம்மையாகிய மலைமகளும் என உலகமக்களால் வழிபடப் பெறும் மூவகைத் திருமேனியும் நுதல் விழிநாட்டத் திறைவனாகிய சிவபெருமானுடன் பிரிவின்றியுள்ள சிவசத்தியே என்பது பண்டைத் தமிழர் துணியாகும். இவ்வுண்மை,
“வெள்ளேறு.
வலவயின் உரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்” (திருமுருகு. 151-154)
எனத் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை உமையொரு பாகனாகவும்,
“நெடும்பெருஞ்சிமையத்து நீலப் பைஞ்சனை
ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி'
(திருமுருகு. 253-259)
என முருகப்பெருமானை ஆலமர் செல்வனாகிய சிவபெருமானுக்கும் அம்முதல்வனுடைய சத்திகளாகிய உமாதேவி கொற்றவை - காடுகிழாள் (காளி) என்போர்க்கும் மகனாகவும் நக்கீரனார் பரவிப் போற்றியுள்ளமையால் நன்கு புலனாகும். ஆகவே பண்டைநாளில் தனித்தனியே வேறுவேறு திருவுருவமைத்து வழிபாடு செய்யப்பெற்ற சிவசத்திகளும் சத்தியின் மைந்தனாகவும் குறிஞ்சி நிலத்தெய்வமாகவும் வழிபடப் பெற்ற முருகவேளும் செம்பொருளாகிய சிவத்துடன் நெருங்கிய தொடர்புடைய தெய்வங்களாக மக்கள் மேற்கொண்ட தெய்வ வழிபாடுகளில் இணைக்கப்பட்டுச் சிவபரம்பொருளே முழுமுதற்கடவுள் எனக் கருதிப்போற்றும் ஒரு தெய்வ வழிபாட்டுமுறை தமிழகத்திற் சங்கககாலத்திற்குப் பன்னூ றாண்டுகட்கு முன்னரே உருவாகி நிலைபெற்று விட்டதென்பது மேற்குறித்த திருமுருகாற்றுப்படைத் தொடர்களாலும் ஏனைய சங்கச் செய்யுட்களிற் சத்தியைப் பற்றியும் முருகப் பெருமானைப் பற்றியும் ஆங்காங்கே காணப்படும் பல்வேறு குறிப்புக்களாலும் நன்கு விளங்கும்.
மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத் தெய்வங்கட்கும், முல்லை. நிலத் தெய்வமாகிய மாயோனது அருட்பிறப்பாகிய கண்னன், பலதேவன் ஆகிய தெய்வங்கட்கும் மாயோனுடன் தொடர்புடைய திருமகள், நான்முகன், காமன் முதலிய தெய்வங்கட்கும், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரள் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என்னும் நால்வகைப் பிரிவினராகிய முப்பத்து முக்கோடி தேவர்கட்கும் பதினெண்கணங்கட்கும் தலைமையுடைய முழுமுதற் கடவுளாகச் சிவபெருமான் சங்கச்செய்யுட்களிற் குறிக்கப்பெற்றுள்ளார்.
பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான் மதுரை மாநகரில் அமைந்த (கடவுட்பள்ளியைத் தெய்வத் திருக்கோயில்களைக் குறிப்பிடும் நிலையில் அத்திருக்கோயில் களில் எழுந்தருளியுள்ள தெய்வங்கட்கெல்லாந் தலைமை யுடைய தெய்வமாகவும் நிலம் தீ நீர் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களாலியன்ற உலகினை முதன் முதற் படைத்தருளிய முழு முதற்கடவுளாகவும் மழுவாகிய வாட்படையினையுடைய சிவபெருமானைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.
“நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர் வாடாப்பூவின் இமையாநாட்டத்து நாற்ற வுணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபின் உயர்பல் கொடுமார் அந்தி விழவில் துரியம் கறங்க (மதுரைக், 453-450)
என வரும் மதுரைக் காஞ்சித்தொடர், மதுரை மாநகரில் உள்ள திருக்கோயில்களின் மாலைவழிபாட்டினைக் குறிப்பதாகும்.
“திக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் நெருப்பும் நீரும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த மழுவாகிய வாட்படையினை யுடைய பெரியோன் (மகாதேவன்) ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு தீர்த்தமாடிய வடிவினை யுடையராய்த் தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையும் உடைய அச்சம் பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு விலக்குதற்கு அரிய முறைமையினையுடைய அந்திக் காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே து ரியம் (பலவகை வாத்தியம்) ஒலிக்க” என்பது மேற்காட்டிய தொடரின் பொருள்.மதுரை மாநகரிலே மழுப்படையினையேந்திய சிவபெருமானைத் தலைமைக் கடவுளாகக் கொண்டு மாயோன் சேயோன் முதலிய தெய்வங்கள் எழுந்தருளிய திருக்கோயிலிலே பலவகை வாத்தியங்களும் முழங்கத் தொடங்கப் பெற்ற திருவிழாவிலே மாலைக் காலத்தில் மனைவாழ் மங்கல மகளிர் தாம் பெற்ற மழலைச் செல்வங்களாகிய குழந்தைகளோடும் தம் கணவரையும் உடனழைத்துக் கொண்டு வயதின் முதிர்ந்தோராகிய பேரிளம்பெண்டிர் கடவுட் பூசைக்கு இன்றியமையாத பூவும் நறும்புகையும் ஏந்திக்கொண்டு இறைவனைத் தொழுது போற்றிப் பாதுகாத்து உடன்வரத் திருக்கோயிலில் இறைவனை வழிபடச் சென்ற அன்பின் திறத்தினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,
'திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஒம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப்போது பிடித்தாங்குத் தாமும் அவரும் ஒராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்”
(மதுரைக். 461-468)
எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராகும்.
“மகiன்ற மகளிர் திண்ணிய ஒளியினையுடைய பதக்கம் அணிந்த ஒண்மைவாய்ந்த இளங்குழந்தைகளைத் தாது சேர்ந்த செவ்வித்தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் தழுவியெடுத்துக் கொண்டு தாமும் கணவரும் தம்குழந்தை களும் சேரச் சீலமுடையராகச் சிறந்து விளங்கப் பெரு விருப்பமும் அழகுமுடையராய்த் திகழும் செம்முது பெண்டிராகிய பேரிளம் பெண்கள் கடவுட் பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய் நறும்புகையினையுடையராய் றைவனை மிகுத்துத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் வத் திருக்கோயில்களும்” என்பது மேற்குறித்த வளியும், மாகவிசும்போடு ஐந்து உட ன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக........................ உருகெழு பெரியோர்க்கு உயர்பலி தருமார் அந்திவிழாவில் துரியம் கறங்க” என்ற தொடரில் உள்ள கறங்க என்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம், சிறந்து புறங்காக்கும்’ எனப் பின்வரும் தொடரில் அமைந்த 'புறங்காக்கும்’ என்னும் பெயரெச்சத்தின் பகுதியாய்ப் புறங்காத்தல்’ என்னும் பிற வினைமுதல் விைைனகொண்டு முடியக் காக்கும்’ என்னும் அப்பெயரெச்சம் 'கடவுட்பள்ளி என்னும் பெயர்கொண்டு முடிந்தது, ஆகவே கடவுட் பள்ளி என்ற இத்தொடரிலுள்ள ‘கடவுள் என்றது முதற்குறித்த மழுவாள் நெடியோன் ஆகிய சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட தெய்வங் களையே குறித்தல் தெளிவு. இதற்குமாறாகப் புத்தரைக் குறித்ததென்று கொள்ளுதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும் இக்கடவுட் பள்ளியையடுத்துச் சிறந்த வேதம் விளங்கப்பாடும் அந்தனர்.பள்ளி கூறப்பட்டிருத்தலும் இங்குச் சிந்தித்தற்குரியதாகும். மாங்குடி மருதனார் காலத்தில் மதுரை மாநகரில் பெளத்தப்பள்ளி தனியே எடுத்துக் கூறும் முறையிற் சிறப்பிடம் பெற்றிருக்குமானால் அமணர்பள்ளியினை விதந்தெடுத்துக் கூறினாற்போன்று பெளத்தப் பள்ளியையும் தனியே விதந்து கூறியிருப்பர். அவ்வாறன்றி,வண்டு படப் பழுநியதேனார் தோற்றத்துப் பூவும் புகையுஞ் சாவகள் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட்டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து வானமும் நிலனும் தாமுழுதுணருஞ் சான்ற கொள்கை சாயாயாக்கை ஆன்றடங்கறிஞர் செறிந்தனர் நோன்மார் கல்பொளிந்தன இட்டுவாய்க் கரண்டைப் பல்பொறிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கண்டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்பமேக்குயர்ந்த தோங்க இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்'(மதுரைக் 475-488)
என அமண்சமயச் சான்றோர்களையும் அவர்களது விரதக் கோலத்தினையும் விரித்துக்கூறிய ஆசிரியர் "இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கை” என்பதனால் பெளத்தப் பள்ளியையும் குறிப்பாகச் சுட்டியுள்ளார் என்றே கருத வேண்டியுளது.
இனி, மதுரைக் காஞ்சியில் கடவுட்பள்ளி என்பதற்கு நச்சினார்க்கினியர் பெளத்தப் பள்ளி’ என உரை வரைதற்குரிய காரணம் யாது என்பதும் இங்குச் சிந்தித்தற் குரியதாகும்.
தொல்காப்பியம், சங்கவிலக்கியம்,திருக்குறள் முதலிய பழந்தமிழ்த் தொன்னூல்களில் 'பள்ளி என்ற சொல் 'இடம் என்ற பொதுப் பொருளிலும் துயிலுமிடம், படுக்கை, சிற்றுர், அறவோர் இருப்பிடம், கல்விபயிலும் இடம் என்ற சிறப்புப் பொருள்களிலும் பயின்று வழங்கக் காண்கின்றோம். 'அறவோர் பள்ளி (சிலப். இந்திர. 179) எனவரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அருகர்பள்ளி, புத்தர்பள்ளி' என அடியார்க்கு நல்லார் உரைவரைந்துள்ளார். 'அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி (சிலப். ஊர்காண்.11) எனவரும் சிலப்பதிகாரத்தொடர் அருகர்பள்ளி, புத்தர்பள்ளி என்னும் புறச் சமயத்தார்க்குரிய பள்ளிகள் இரண்டினையும் பொதுப்படச் சுட்டி நிற்றல் காணலாம். புத்தநோன்பிகள் வாழும் இடத்தினை ‘மாதவர்.பள்ளி (மணி. 18:8) எனக் குறிப்பிடுவர் சாத்தனார். 'பள்ளி’ என்னும் இச்சொல் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் புத்தர் சமணர் என்னும் புறச்சமயத்தார் தங்குமிடம் என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கப் பெறுவதாயிற்று.
“பொங்கு போதியும் பிண்டியும் உடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை” (திவ்ய. பெரிய. 2.5) எனப் பெரிய திருமொழியிலும், "பள்ளிகள் மேலும் மாடு பயில மண் பாழிமேலும்” (பெரிய சம்பந்தர். 682) எனப் பெரிய புராணத்திலும் இவ்வழக்கு இடம்பெற்றுள்ளமை காணலாம். முதலாம் இராசராச சோழன் ஆட்சியில் நாகப் பட்டினத்தில் கட்டப்பட்ட புத்த விகாரம் 'இராசராசப்பெரும்பள்ளி' எனப் பெயரிடப்பட்டுள்ளமை இச்சொல் வழக்கினை மேலும் வலியுறுத்துவதாகும். இவ்வாறு தம்காலத்தில் பள்ளியென்னும் சொல் புத்தநோன்பியர் தங்கி வழிபடும் பெளத்தப் பள்ளிக்குச் சிறப்பு முறையில் வழங்குவதனையறிந்த நச்சினார்க்கினியர், மதுரைக்காஞ்சியில் சிவன் மாயோன் முதலிய தெய்வங்களுக்கு உரியதாகவமைந்த தொடருடன் இணைந்த கடவுட்பள்ளி என்பதனைத் தனியே பிரித்துப் 'பெளத்தப்பள்ளி’ எனப் பொருள் வரைந்தார் எனக் கருத வேண்டியுளது.
எனினும், பள்ளி’ என்னும் சொல், தமிழ்த் தொன்னூல்களில் இடம் என்ற பொதுப்பொருளிலன்றிப் “புறச்சமயத்தார்க்குரிய இடம் என்ற சிறப்புப் பொருளில் வழங்கப்படாமையானும், பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற காப்பியங்களிலும் 'அறவோர் வாழும் இடம்’ என்ற பொதுமையின் நீங்காது புத்தர் சமனர் தங்குமிடங்களுக்குச் சிறப்பாக வழங்கப் பெற்றிருத்தலையும் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் பள்ளி என்னும் இச்சொல் சக்கரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி, அகத்தியான்பள்ளி எனச் சைவத் திருக்கோயில்களையும், பார்த்தன்பள்ளி என வைணவத் திருக்கோயிலையும் குறித்து வழங்கப்பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், மதுரைக்காஞ்சியில் கடவுட்பள்ளி, அந்தனர் பள்ளி எனவரும் தொடர்களிலுள்ள பள்ளி என்னும் சொல் இடம்’ என்ற பொதுப் பொருளிலேயே வழங்கப்பெற்றதென்பதும், எனவே கடவுட்பள்ளி’ என்ற தொடர்க்குத் தெய்வம் உறையும் கோயில்’ எனப் பொருள் கொள்வதன்றிப் ‘பெளத்தப்பள்ளி’ எனப் பொருளுரைத்தல் சிறிதும் பொருந்தாதென்பதும் நன்கு புலனாகும்.