26. ஊர் - நாடு – அரசு முற்காலத்தில் ஊராட்சிக்குத்தான் முதலிடம் கொடுத்திருந்தார்கள். ஒவ்வொரு ஊரும் தங்களுக்குள்ளே சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் குழுக்களாக அமைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக தங்கள் ஊரை பராமரித்தனர். ஊர் வாரியம் (ஆண்டு வாரியம்) ஏரி வாரியம், கழனி வாரியம், எனப் பல வாரியங்களாக ஊருக்குத் தேவையான பணிகளை அவர்களே செய்துகொண்டனர். இது ஒரே குடும்பத்தின் கீழ் இல்லாமல் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்து உண்மையான குடியாட்சியிலிருந்த ஊர் ஒரு சக்தி வாய்ந்த நிறுவனமாகத் திகழ்ந்தது.
எடுத்துக்காட்டாக ஊரில் உள்ள ஏரியைப் பராமரிப்பதை ஊராரேதான் செய்வர். ஏரி தூர் எடுத்தல், கம்மாயை சீராக வைத்துக்கொள்ளுதல், கலிங்குகளை நேராக வைத்துக்கொள்ளல். கரை கட்டுதல் முதலிய பணிகள் அனைத்தும் அவரவரே செய்வர். ஆனால் தற்காலத்தில் அந்தப் பணிகள் எல்லாம் பொதுப் பணி எஞ்ஜினியர் அய்யா, உதவி எஞ்ஜினீயர் அய்யா, சூப்பர்வைசர் அய்யா என்று வேறு அரசாங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர்களும் வேறு எந்தெந்த ஊரிலோ இருந்து வந்தவர்கள். சில காலம் இங்கே இருந்துவிட்டு வேறு ஊருக்குச் செல்லக்கூடியவர்கள். ஊர் ஏரிக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பல்லாண்டுகள் ஆனாலும் தூர் வாராமல், செடி கொடி வளர்ந்து, பூச்சி புழு நிறைந்து ஊரின் சுகாதாரத்துக்குக் கேடானாலும் எஞ்ஜினியர் அய்யா மனது வைத்தால்தான் அதைச் சீராக்க முடியும். அவர் மனது வைக்க வேண்டும் என்றால் அரசியல் கட்சி அய்யாவைப் பார்க்கணும். அந்த ஏரிக்கும் ஊர் மக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இதுபோல்தான் நாடாட்சியும். நாட்டுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை. நாட்டார்கள் ஏதும் செய்யமுடியாது. குடியாட்சி போய் கட்சியாட்சி வந்தாச்சு. கட்சிக்காரர்கள் வசதியாக இருந்தால்தான் நடக்கும். நாம் முற்காலத்தில் இருந்த முடியரசர் ஆட்சி கொடுமையானது என அதை ஒழித்து, குடியாட்சி என்பதை பேருக்குக் கொண்டுவந்து அதை ஒரு சாக்காகக் கொண்டு குடும்ப ஆட்சியை நிறுவி இருக்கிறோம். இப்பொழுது காங்கிரஸ் கட்சியில் 50% குடும்ப ஆட்சிதான் உள்ளது என ஓர் அறிக்கை குறித்துள்ளது. முற்காலத்தில் அரசர் ஆட்சியிருந்தாலும், மக்களையும் நாட்டாரையும் கலந்து ஆலோசித்துத்தான் அரசன் முடிவெடுத்தான். அரசன் தன்னிச்சையாய் செயல்படவில்லை.
தமிழ் நாட்டில் சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி. சுந்தர சோழன் இறந்தபோது நடந்தது. சுந்தர சோழனின் மைந்தன் அருள்மொழி என்ற இராஜ இராஜ சோழன். இராஜ இராஜன் அறிவிலும் ஆற்றலிலும் எல்லோரிடத்தும் பழகுந்தன்மையிலும் மிகச் சிறந்தவனாக இருந்தான். சோழ நாட்டு மக்களும், நாட்டார்களும் இராஜ இராஜனே அரசை ஏற்று முடி சூட்டிக்கொள்ள வேண்டினர். சுந்தர சோழனுக்கு கண்டராதித்தன் என்ற ஒரு மூத்தோர் இருந்தார். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்ற ஒரு மைந்தன் இருந்தான். அவருக்கு நாட்டை தான் ஆள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை இராஜ இராஜன் அறிந்தான். சோழ நாடே இராஜ இராஜனே ஆள வேண்டும் என்று கேட்டனர். இராஜ இராஜன் ஒரு மாபெரும் ஆட்சி தனக்கு வரவிருந்ததை வேறொருவர் கொள்ளப் பார்க்கிறார் என்று மதி கெட்டு சூழ்ச்சியில் இறங்கவில்லை. வெறி பிடித்து அங்கும் இங்கும் ஓடவில்லை. அவரைத் திருடன் என்று திட்டவில்லை. அவரை அழைத்து நீங்கள் எனக்கும் மூத்தவர்; மரியாதைக்கு உரியவர்; என் வணக்கத்துக்கு உரியவர். அதனால் நீங்கள் இந்நாட்டை ஆளுங்கள். அதன் பிறகு பார்க்கலாம் என்று தனக்கு வந்த ஆட்சியை விட்டுக் கொடுத்து ஒரு தியாக சீலனாகத் திகழ்ந்தான். 970 ஆண்டுமுதல் 985 வரை உத்தம சோழர் ஆண்டார். அவருக்கு உடன் நின்று நாட்டு மக்களுக்காக உழைத்த ஒரு பெரும் தியாகி — இராஜ இராஜ சோழப் பெரு மன்னன். அதன் பின் 985 முதல் 1014 வரை முடி சூடி 30 ஆண்டுகள் ஆண்டான். ஈடு இணையற்ற மாமன்னன்.
மற்றும் ஒரு நிகழ்ச்சி: இராஜ இராஜனின் மைந்தன் இராஜேந்திரன் காலத்தில் நடந்தது. கங்கை வரை வென்று, கடாரத்து அரசனை கடல் கடந்து வெற்றி கண்ட “கங்கையும் கடாரமும் கொண்ட” மாமன்னன் இராஜேந்திரன். அவன்தான் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டியவன். அவனது இறுதி காலத்தில் நடந்தது. அவன் தனது வாழ்வின் இறுதியில் கட்டிலில் படுத்திருந்தான். அப்போது தனது நாட்டார் தலைவர்களையும் சேனைத் தலைவர்களையும் கூப்பிட்டு அருகில் அமரச் சொன்னான். அப்பொழுது அவனது கடைசி மகன் திருச்சிற்றம்பல உடையான் என்பவனை அழைத்து தனது மடியில் அமர்த்திக்கொண்டான். தன் முன் இருந்த நாட்டார்களையும் பார்த்து இதுவரையிலும் நீங்கள் எனக்கு ஆதரவும் அன்பும் கொடுத்து வந்தீர்கள். எனது எல்லா வெற்றிகளுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பையும் ஆதரவையும் இந்த என் மைந்தனுக்கு அளிப்பீர்களா? என்று கேட்டான். அவர்கள் எல்லாம் அரசனின் வேண்டுகோளைக் கேட்டு வியந்தனர். கண்டிப்பாக அளிப்போம் என்று உறுதி கூறினர். அடுத்த கணம் அவனது ஆவி பிரிந்தது. தனது இஷ்ட தெய்வமான சிவனடியை அடைந்தான் என இந்நிகழ்ச்சியை இந்தளூர் செப்பேடுகள் கூறுகின்றன.
அப்பொழுது தானைத் தலைவர்களும் நாட்டார்களும் அரசனின் அம்மைந்தன் திருச்சிற்றம்பல உடையானை அழைத்து உன் தந்தை கூறியபடி உனக்கு முடி சூட்ட அழைக்கிறோம் என்றனர். அப்பொழுது அவன், எங்கள் எல்லோருக்கும் மூத்தவர் இராஜாதி இராஜ சோழர். அவர் இப்பொழுது மதுரையில் ஆண்டு வருகிறார். எனக்கும் அவர்தான் அரசர். அவரை அழைத்து அவருக்குத்தான் முடி சூட்ட வேண்டும் என்று கூறிவிட்டான். அதன்படி மதுரையிலிருந்து இராஜாதி இராஜனை அழைத்து வந்து சோழ அரியணையில் ஏற்றினர். தனக்குக் கொடுத்த அரசைக்கூட ஆற்றல் மிகுந்த பெரியவரை ஆளச் செய்து அவருக்கு உதவியாக துணையாக சோழ மன்னர்கள் விளங்கினர். அதிகார வெறிகொண்டு நாட்டைப் பிடிக்கவோ, அல்லது ஆண்ட அரசனுக்கு எல்லாப் பணிகளுக்கும் முள் போல (கண்டகம்) குத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவோ அவர்கள் விளங்கவில்லை. இது தமிழர் தம் மரபு. வரலாற்றால் அவர்கள் காலத்திலேயே எழுதி வைக்கப்பட்டன. இது இங்கு ஈராயிரம் ஆண்டுகளாக இருந்த மரபு.
சங்கப் பாடல் ஒன்றில் “மூத்தோன் வருக என என்னாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”, என்று பாடல் கூறுகிறது. இத்துடன் இராஜேந்திரன் பெரும் மன்னன் ஆகியும் தனது நாட்டார் தலைவர்களிடத்தும் தானைத் தலைவர்களிடத்தும் கருத்தறிந்து ஆண்டது புலனாகிறது. அரசவையிலும் குடி மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆள்வதையே உண்மைக் குடியாட்சி எனக் கூறமுடியும்.
மேலும் அக்கால மன்னர்கள் தங்களை “சத்ய வாக்யர்” என்றும் பிரஜைகளிடம் தாய் தந்தை போன்ற அன்பு பூண்டவர்கள் என கூறிக்கொண்டனர். அவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் அது மந்திரத்துக்கு ஒப்பானது என பொய்யாய் போகக் கூடாது என கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.