35. பீகாரில் ஓர் ஆயிரத்தளி தமிழ் நாட்டில் தஞ்சாவூருக்கு அருகில் ஆயிரத்தளி என்று ஓர் ஊர் உள்ளது. அக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருந்தன. அவற்றில் நூற்றி எட்டுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்களை — மகாராஜா இரண்டாம் சரபோஜி, தஞ்சை பெரிய கோயிலுக்குக் கொண்டுவந்து திருச்சுற்றில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவர் பெரிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது அவற்றைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார் என்று மராத்தி ஆவணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த ஆயிரத்தளி புகழ் பெற்றது.
ஆயிரத்தளி என்னும் சொல்வழக்கு வட இந்தியாவிலும் இருந்துள்ளது. இங்கு சஹஸ்ர லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கினார் போலும். ஒன்பதாம் நூற்றாண்டில் பராந்தக சோழன் ஆண்ட காலத்தில், வங்காளம், பீகார் பகுதிகளில் பாலர் என்ற அரசர்கள் ஆண்டார்கள். அவர்களில் நாராயண பாலன் என்பவன் 855 முதல் 910 வரை ஆண்டான். அவன் 872இல் பீகாரில் தன் நாட்டில், கக்ஷா நாட்டில், ஒரு பெருங் கோயிலை தோற்றுவித்தான். அதை சிவ பட்டராக (பெருமாயனுக்காக) கட்டுவித்தான். அதைக் குறிக்கும் போது சஹஸ்ர ஆயுதத்தைக் கட்டினேன் என்று கூறுகிறான்.
நாராயண பாலன் அந்தக் கோயிலுக்கும், பூஜை, ஸ்னானம், நைவேத்யம் முதலியவற்றுக்காகவும், அக்கோயிலில் வழிபட வரும் பாசுபத சைவ ஆச்சார்ய பரிஷத்துக்கும், உணவுக்கும், இருக்கைகளுக்கும், உடை மருத்துவ வசதிகளுக்கும் அவ்வூரையும், அதன் வருவாயையும் கொடுத்தான். அதற்கும் தாள பத்திரம்போல் ஒரு செப்பேட்டைக் கொடுத்துள்ளான். பாகல்பூர் என்னும் ஊரில் கிடைத்த அச்செப்பேடு முழுவதும் சமஸ்க்ருத மொழியில் இருக்கிறது. சமஸ்க்ருதம் வழக்கு மொழியாக 9-10 நூற்றாண்டுகளிலும் ஆணை மொழியாக விளங்கியுள்ளது. அரசனுடைய 17வது ஆட்சி ஆண்டில் வைகாசி மாதம், ஒன்பதாம் நாள் இத்தானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற, குரவபட்டன் என்பவனை ஆணையராக நியமித்தான். இதை எழுதியவர்கள் பெயரும் செப்பேட்டில் உள்ளன.
செப்பேட்டின் தொடக்கத்தில் புத்த பகவானுக்கு வணக்கம் கூறித் தொடங்குகிறான். அதனால் இவன் சிறந்த பௌத்த சமய பக்தன் என்பது வெளிப்படை. ஆயினும் இவன் சிவபெருமானுக்காக ஆயிரத்தளி ஒன்றைக் கட்டி அதில் வழிபாட்டிற்கும், பாசுபத ஆச்சார்யர்களும் அவர்களது பரிஷத்துகளுக்கும் வேண்டியதற்காக இச்செப்பேட்டு சாசனம் அளித்துள்ளான். இது பௌத்த சமயத்துக்கும் இந்து சமயத்துக்கும் எவ்விதப் பகைமையோ, வெறுப்புக்களோ, இந்திய நாட்டில் இல்லை எனத் தெளிவாக்குகிற அடிப்படைச் சான்று.
இரண்டாவது இவன் இந்த ஆணையை இடும்போது ராசகுமாரர்களில் இருந்து சண்டாளர்கள் இறுதியாக உள்ள அத்தனை பேரையும், அவரவர் தகுதிக்கு ஏற்ப வணங்குகிறேன், கூறுகிறேன், ஆணை இடுகிறேன் என்கிறான். அரசர்கள், அரச குமாரர்கள் முதல் சண்டாள பர்யந்தன் (இறுதியாக சண்டாளர்கள்வரை யதர்கம் மானயதி போதயதி; ஆதே சாயதி ஸ) என்று குறிக்கிறான். சண்டாளர்கள் என்பது கடும் குற்றம் செய்து, பெரும் தண்டனை பெற்றவர்கள். அவர்களைக்கூட வாழவிட்டிருக்கிறான். அவர்களைக்கூட வணங்குகிறேன் என்னும் அரசனுடைய விநயம் தெளிவாகிறது. அவனது குடிகள் அத்தனை பேரையும் அன்புடனும், மரியாதையுடனும் பார்ப்பது பண்டைய இந்திய அரசாள்வோர் தர்மம்.
மூன்றாவதாக இவன் குறிப்பிட்டுள்ளது, நான் அளித்த பூமி தானமானது, ஆயிரத்தளியில் இருக்கும் பெருமான் சிவபட்டாரகருக்குக் கொடுத்தது. இதை வருங்காலத்து அரசர்களையும் இப்பொழுது வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். இதை நீங்கள் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். காப்பாற்றுங்கள் என்று கூறுபவன், கோயிலுக்குக் கொடுக்கும் நிலங்களை, சொத்துக்களை கொள்ளை அடிப்பவன் எப்படி அகோர நரகத்தில் துன்பப்படுவான் என்பதை நினைத்துக் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளான். கோயில் சொத்து குல நாசம் என்னும் நாம் கூறுவதுதான் இந்தியாவின் வடபகுதியிலும் திகழ்ந்த நம்பிக்கை.
இவ்வரசன் இச்செப்பேட்டில் பல இடங்களில் தர்மம், தர்மம், என அறத்தை வலியுறுத்திக் கூறுகிறான். அதனால் தன்னை இராமனுக்கு சமமாகக் கூறி, என்று இந்த இராமன் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறான்.
இராமன் சேதுவைக் கட்டினான். கடலின் இரு கரையையும் இணைப்பது. அதுபோல நான் செய்துள்ள இந்தத் தானமானது எளிமையானது. வருங்கால எல்லா அரசர்களையும் இணைக்கும் தர்ம சேது, அறமாகிய பாலம் இந்த இராம சேதுவைக் காப்பாற்றுங்கள். அதுபோல் இதையும் காப்பாற்றுங்கள் என்று வருங்கால ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளான். இச்செப்பேடு 1200 ஆண்டுக்கு முற்பட்ட அரசியல் பண்பைச் சித்தரிக்கிறது. இதுவே இந்தியாவின் பண்டைய பண்பு.