36. நால் வேதமும் தமிழ் வேதமும் தமிழ்ப் பாடல்களை 'வேதம்' அல்லது 'மறை' எனும் மரபு, இன்று தோன்றியதன்று. நாலு வேதமும் நான்மறை என்றும், தமிழ் வேதம் என்பதை தமிழ்மறை என்றும் ஆன்றோர் கூறுவர். தமிழகத்தில் தொன்றுதொட்டே நால் வேதத்தை ஓதி வந்துள்ளனர். வேதம் எனில் 'நன்கு கற்று அறிதல்' என்பது பொருள். நான்கு வேதம் என்பது ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்காம். இவை முறையே செய்யுளாகவும், உரை நடை இட்ட பாட்டுகளாகவும் உள்ளன. இவற்றை நன்கு அறியவும் பயன் பெறவும் ஆறு துறைகள் தோன்றின. அவற்றை வியாகரணம் (இலக்கணம்), நிருக்தம் (சொல் பொருள் தெரிதல்), சிக்ஷை (கேள்வி), சந்தம் (இசை), கல்பம் (நெறிமுறை), சோதிடம் (வான சாத்திரம்) என்னும் ஆறு துறைகள் வாயிலாக நன்கு அறிய இயலும் என ஆறு அங்கங்களாகக் கூறுவர். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் தொன்று தொட்டே தமிழகத்தில் சிறந்து ஆய்ந்து விளங்கின என்று சங்க நூல்கள் கூறுகின்றன.
புறநானூற்றில் ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் பாடிய பாடலில் சிவபெருமானே நான்கு வேதத்தையும், ஆறு அங்கங்களையும் படைத்தார் என்பதை, நன்று ஆய்ந்த நீள்நிமிர் சடை முது முதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த ஈர்இரண்டின் ஆறுணர்ந்த ஒரு முது நூல் என்று கூறுகிறார்.
பதிற்றுப் பத்து என்னும் தொகுப்பில் இந்நூல்களைக் கற்றுணர்ந்தோர் சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்ற ஐந்தைப்போற்றி சத்யமே கோட்பாடாகக் கொண்டு கடவுளைப் போற்றுவர் எனக் கூறப்பட்டுள்ளது.
சொல் என்பது சொல் இலக்கணத்தையும், பெயர் என்பது பொருள் இலக்கணத்தையும், நாட்டம் என்பது வான ஆய்வையும், கேள்வி என்பது வேதத்தையும் (இசையையும்), நெஞ்சம் என்பது மனம் சென்ற வழி செல்லாத கட்டுப்பாடுடைய நெஞ்சம் என்று பண்டைய உரை ஆசிரியர்கள் கூறுவர். அதனால் வேதம் அறிந்தோர் இலக்கணங்களால் மொழியை நன்கு கற்றுத்தேர்ந்து, ஒழுக்க சீலராய் தவத்துறை நின்று தெய்வம் போற்றுவாராய் வாழ்வர் எனத் தமிழ் மக்கள் கருதினர்.
இவைதவிர இராமாயணம், மஹாபாரதமும், புராணங்கள் ஆகியவற்றையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். இவை அனைத்தும் வேத உபநிடதங்களின் சாரமாகக் கருதப்பட்டதை பரிபாடல் கூறும். அதனால் இவையும் வேதங்களாகவே கருதப்பட்டன. பாரதம் பஞ்சமோ வேதஹ — பாரதம் என்பது ஐந்தாவது வேதம் எனக்கூறப்பட்டது. அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகள் எல்லாம் ஒழுக்க நெறியையும் தெய்வ வாழ்வையும் எடுத்துரைப்பவை. அதனால் அவ்வாறு கூறினர். அது மட்டுமின்றி நல்வாழ்வுக்குத் தேவையான உடலைப் பிணியின்றிப் பேணுவதற்கு, ஆயுளைப் பேணும் துறையை 'ஆயுள் வேதம் எனக்கூறினர்.
அதுபோன்று இசையையும், நாட்டியத்தையும் பேணிய துறையை நாட்டிய வேதம் என்றழைத்தனர். இதன் வாயிலாக எத்துறைகள் எல்லாம் இறவாத அறிவுச்செல்வத்தை அளித்தனவோ, எவை நமது வாழ்வை வளப்படுத்தி உயர்நிலை குறிக்கோள்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து இன்றும் இன்றும் நம்மிடையே நிற்கின்றனவோ அவற்றை வேதம் என அழைப்பது மரபு.
அவ்வழி தமிழிலே ஒப்பற்ற பாடல்களை இயற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களையும், தமிழ் மண்ணையும் தெய்வீக மணம் வீசும்படிச் செய்த திருமுறைகளைத் தமிழ் வேதம் என்றும் தமிழ்மறை என்று கூறுதலே பொருந்தும். இவை வேதமே என்பதில் ஐயமில்லை. நான்மறை என்ற வேதத்தை தெய்வம் அருளியவை என்றும் அவற்றிற்கு தெய்வத்தன்மை உண்டெனக் கூறுதல்போல நால்வர் தேவாரமும் ஏனைய திருமுறைகளும், ஆழ்வார் பாசுரங்களும் தெய்வத்தன்மை பொருந்தியவைதாம் என்பதில் ஐயமில்லை.
தவ முனிவர்களும், வேதம் பாடிய ரிஷிகளும், தங்கள் ஞானத்தால் இவற்றை தெய்வ வாக்கென அறிந்து புலப்படுத்தியதால், இவற்றைத் தூயமறை என்பர். வாக்கு என்பது உயிர்த் துடிப்பினால் உந்தப்பட்டு வெளிப்படுவது. அதனால் வேதவாக்குகளை தெய்வம் எடுத்துக் கொடுக்க தவமுனிவர் தமது பாடல்களால் வெளிப்படுத்தினர் என்பது இதன் பொருள். அவ்வகையே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் என அத்தனை பெரியோர்களுக்கும் சிவபிரானே அடி எடுத்துக்கொடுக்க அவர்கள் வாக்குகள் தெய்வப்பாடல்களாகப் போந்தன என்பதால், அவை தமிழ்த் திருமுறைகள், தமிழ் வேதங்கள் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே இப்பாடல்களைப் பாடியோர் ரிஷிகளே, தவமுனிவர்களே என்பதிலும் ஐயமில்லை.
திருமுறை அறிந்தோர் ஒழுக்கமும், தெய்வச் சிந்தனையும், அடக்கமும் உடையோர். அதனால் அரசரும் அவர் அறிவுரைகளை ஏற்று நடப்பர் என மாங்குடி மருதனார் என்னும் சங்கப்புலவர், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும்போது கூறுகிறார். ஆன்ற வேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக மன்னர் ஏவல் செய்ய எனப் புறப்பாடல் கூறும்.
காட்டிலே வேட்டையாடித் திரிந்த கண்ணப்பனையும், திருப்பாணாழ்வாரையும், நந்தனையும் தெய்வமாகவே உயர்த்தி அவர்களது சிலை வடித்து தெய்வத்தோடு தெய்வமாக வணங்கும் சமய வாழ்வில், ஏற்றத் தாழ்வு இல்லை என்ற படிப்பினையை நமக்களித்த ஆன்றோர்கள் திருமுறை நெறியில் நின்றவர்களே. அதனால் திருமுறையாகிய தமிழ் வேதத்தை போற்றலும், கற்றலும் அவ்வழி நெறிப்படுத்தலும் நமது கடனே. அதன் வாயிலாக நமது சிந்தனை தெளிவு பெறும்.
கலக்கமற்ற நீர் தெளிவாய் உள்ளது என்பதுபோல், உள்ளத்திலே கலக்கமின்றி வெறுப்பின்றி, பிறவற்றைத் தூற்றாது, நல்லதையே ஆயும் நிலையில் தெளிவு தோன்றும். தெளிவு நிர்மலமானது என்கிறோமே அதுதான் சிவன் என்கிறார் அப்பர் பெருமான். சிந்தையுள் தெளிவாகி தெளிவினுள் சிவமுமாகி என்று அப்பர் கூறுகிறார். திருமுறை தமிழ் வேத ஆய்வு அத்தெளிவையும், சிவநெறியையும் வளர்க்கும்.
வடமொழி வேத நூல் இந்திய நாடு முழுவதும் பரவியிருந்ததோடன்றி கடல் கடந்த சுவர்ணதீபம், காம்போஜம், சம்பா தேசம் முதலிய பல நாடுகளிலும் பரவி போற்றப்பட்டு, அந்நாட்டு மக்களுடன் ஒன்றாய் இயைந்து நிற்றலின் அதைப் பொதுநூல் என்றும், தமிழ் கூறும் நல்லுலகத்தே நிலைத்து அம்மக்களின் நெஞ்சுக்கு இனியதாய் நன்நெறி சேர்ப்ப துணையாய் நிற்றலின் தமிழ் வேதம் சிறப்பு நூல் எனவும் கொள்ளலாம்.
இவ்விரு மரபும் தூயவையாய் ஒன்றோடு ஒன்று முரண்படாதிணைந்து இனிய பெருவாழ்வு வாழ வழி வகுக்கும். அதனால் தமிழ் வேத ஆய்வு வரவேற்கத்தக்கதே