80-கள் மற்றும் 90-களின் ஆரம்பத்தில் எல்லாம் தமிழ் சினிமாக்களில் கிராமிய கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வரும். அவற்றில் மிக முக்கியமாக, நாம் கேள்விப்பட்டிராத ஒரு புதுவகையான மூடநம்பிக்கை ஏதேனும் ஒன்று கட்டாயம் இடம்பெறும்..! இப்பதிவுக்கு தொடர்புடைய மூடநம்பிக்கைகளாக... உதாரணமாக... அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஒரு ஹீரோயின் மனைவி, தன் அதிதீவிர சாமி பக்தியின் காரணமாக 'வாரத்துக்கு ஏழு நாட்கள் மட்டும்(!?) விரதம்' இருப்பார். இதனால், தன் ஹீரோ(?) கணவனை தன் அருகில் வரவோ (கனவு டூயட் தவிர்த்து மற்ற நேரங்களில்) தொடவோ அனுமதிக்காத நிலையில், 'சின்னஞ்சிறுசுங்க கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் ஒரு விசேஷமும் இல்லையே' என்று விஷயம் தெரியாமல், வீட்டில் உள்ள சில பெரிசுகள்... அந்த மனைவியை... 'தொட்டிகட்ட'(?) சொல்வார்கள் சகோ..!
அதாவது... ஒரு சின்ன மரக்கட்டையின் இரு புறமும் ஆணி அடித்து அது இரண்டையும் ஒரு ரிப்பனால் முடிச்சிட்டு இணைத்து விடவேண்டும். அப்புறம், ஊருக்கு வெளியே ஒரு மரம் இருக்கும்..! அதில் போய் அந்த 'பிள்ளைபாக்கிய தொட்டிலை' மரக்கிளைக்கொம்பில் தொங்கவிட வேண்டும்..! அவ்ளோதான்..! அப்புறம்...? பிள்ளை உண்டாகிவிடுமாம்..! அந்த மரத்தை பார்த்தால்... அதில் இலைகளை விட அதிகமாக இந்த ரிப்பன் தொட்டில்களே ஆயிரக்கணக்கில் தொங்கும்..! என்னவோர் அறியாமை..!
அப்புறம் இன்னொரு மெகாஹிட் சினிமாவில், ஹீரோயின் தன் பூவும் பொட்டும் தாலியும் நிலைக்க (அதாவது ஹீரோ உயிரோடு இருக்க) வேண்டுமானால்... ஒரு மஞ்சள் கயிறில் மஞ்சள் துண்டை கட்டி ஒரு (இதே வேறு மரம்) மரத்தில் தாலி கட்டி தொங்கவிட வேண்டும்..! அப்போது, அந்த மரத்தை காட்டுவார்கள்... பாருங்கள்..! மரம் முழுக்க மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அத்தனை ஆயிரம் தாலிகள் மரத்தில் தொங்கும்..! அட பரிதாபமே..!
இதை எல்லாம்... மக்கள் மகிழ்ந்து ரசிப்பார்கள்..! படம் செமை ஹிட்..! அடுத்த மூட நம்பிக்கை படம் ஹிட் ஆகும் போது முன்னதை மறப்பார்கள்..! இதனால் மட்டுமல்ல... இதற்கு முன்னாலும்... உலக அளவில் இந்தியர்கள் என்றால் அதிகம் மூடநம்பிக்கை உடையவர்கள் என்ற எண்ணம் எப்போதும் மேற்குலகத்தினருக்கு உண்டு. அதேநேரம், நாமோ... அறிவுசார் ஐரோப்பிய நாகரிகம் என்பது மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்ற ஒரு நம்பிக்கையில் இருக்கிறோம்..! ஆனால், இந்த நம்பிக்கை யாருக்கேனும் இருந்தால்... 'இப்படி நம்புவதுவும் ஒரு மூடநம்பிக்கை' என்று தற்போது ஐரோப்பியர்கள் நிரூபிக்கிறார்கள் சகோ..!
2006 -ல் I Want You -என்று ஒரு நாவல்..! ஓர் இத்தாலி ஆசிரியர் எழுதி ஹிட் ஆகி, பின்னர் சினிமாவாக இத்தாலியில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகியது. அதில், ஹீரோவும் ஹீரோயினும் தங்களுடைய காதல் வெற்றிபெற வேண்டும்(?) என்று, ஒரு பூட்டு வாங்கி அதில் தங்கள் இருவர் பெயரையும் எழுதி, இத்தாலியில் உள்ள பிரபலமான ஓர் ஆற்றுப்பாலத்தின் (Ponte Milvio) ஒரு கம்பி அல்லது கைப்பிடி கிரில்... ஆகிய ஏதோ ஒன்றில் கோர்த்து பூட்டிவிட்டு... சாவியை அந்த ஆற்றில் தூக்கி வீசி விடுகின்றனர். இப்படி செய்ததால்... அவர்களின் லவ், சக்சஸ் ஆகி விடுகிறதாம்..! இப்படி பூட்டுறத்துக்கு பேரு 'லவ்-லாக்'காம்..! இந்த லாக்கை போட்ட பின்னாடி, எவரும்... எதுவும்... காதலர்களை பிரிக்கவே முடியாதாம்..! அடக்கொடுமையே..!
.
.
இதைப்பார்த்த இத்தாலி காதலர்கள், தாங்களும் அதேபோல பூட்டு போட்டு சாவியை அதே ஆற்றில் வீச... அந்த ஆற்றுப்பாலம் எப்போதும் செமை ட்ராஃபிக்குடன் ஒரு காதலர் சரணாலயமாக ஆகிவிட, இதைக்கேள்வியுற்ற மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் காதலர்கள் இங்கே வந்து பூட்ட ஆரம்பிக்க... நொந்துபோன இத்தாலி அரசு... அந்த பாலத்தில் சேர்ந்துவிட்ட சுமார் 5000 பூட்டுக்களை உடைத்து விட்டு... அந்த கடுப்பில் இனி யாரும் பாலத்தில் பூட்டினால் 3000 ஈரோ வரை அபராதம் என்று சொல்லியும் வேலைக்கு ஆகவில்லையாம் சகோ..! எப்படியோ ரகசியமாக 'காதலை அங்கே பூட்டி' விடுகின்றனர்..!
.
.
இதே படத்தை செர்பியர்களும் உல்டா அடிக்க... அவரவர் நாட்டில் உள்ள ஆற்றுப்பாலத்தில், 'பாலத்தில் பூட்டு போட்டுவிட்டு, சாவியை ஆற்றில் கடாசி எறிந்து காதலை காப்பாற்றும், இந்த மூடநம்பிக்கை தற்போது ஐரோப்பா முழுதும் வெகு ஜோராக... (எங்கெல்லாம் பாலமும் கைப்பிடி தடுப்பு கிரில்லும் அல்லது வேறு ஏதேனும் பூட்டு மாட்ட பொருத்தமான இடம் பாலத்தில் இருந்தாலும், அங்கெல்லாம்...) படு வேகமாக இளைஞர்கள் மத்தியில் பரவிவருகிறது' என கவலை தெரிவிக்கிறது ஓர் ஐரோப்பிய நாளிதழ்..!
மூடநம்பிக்கை சினிமாவை பார்த்து விட்டு, நம்ம ஊரு புத்திசாலி மக்கள் போல அப்படியே மறந்து விடும் மக்களாக ஐரோப்பியர்கள் இல்லை போலும்..! நீங்களே பாருங்களேன்..! இந்த 21-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு நடக்கும் மூடநம்பிக்கை அக்கிரமத்தை..! அதுவும்... படித்த புத்திசாலிகள்... சிந்தனாவாதிகள் என்று எண்ணப்பட்ட ஐரோப்பியர்களிடம்..!
ஆனால், நம்ம பெங்காளி(தேசிகள்)கள்... உலகில் எந்த இடத்தில் பணம் பண்ணும் வாய்ப்பு இருந்தாலும் விட மாட்டங்க போல சகோ..! அது சரியான வியாபாரமா... தவறான வியாபாரமா... சட்டத்துக்கு உட்பட்டதா... என எந்த வரைமுறையும் இவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பதில்லை..! பணம் பண்ணுவது மட்டுமே ஒரே குறிக்கோள்..! இங்கேயும் நுழைந்து விட்டார்கள்..!
ஆக... பள்ளி, கல்லூரி... அறிவியல் படிப்பு மட்டுமே மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்கும் என்று கருத முடியவில்லை..! பெரும்பாலும், 786, தாயத்து, தகடு, தர்ஹா, பீடை மாதம் என படிக்காதவர்களிடம் இருந்தாலும்... படித்தர்களிடம்தான்... வாஸ்து, அதிஷ்டக்கல், நியுமராலஜி, 13-ம் நம்பர் பீதி, நல்ல நேரம், ராசி பலன், சகுனம், ஜோதிடம், தோஷம், ஜாதகம் பொருத்தம்... என ஏகத்துக்கும் மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கிறது.
இவை ஒழிய அனைவருக்கும் மெய்யான இறைநம்பிக்கை அவசியம். அது எப்படியெனில்...படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை ஆத்திகர்களின் மனதின் ஆழத்தில் இருந்து வர வேண்டும்..! இந்த உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால், பூட்டையும் சாவியையும் மூடத்தனமாக, காதலுக்கு ஆதாரமாக எல்லாம் இவர்கள் நம்பி இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா..?
இவை ஒழிய அனைவருக்கும் மெய்யான இறைநம்பிக்கை அவசியம். அது எப்படியெனில்...படைப்பினங்களால் நமக்கு நல்லது / கெட்டது எதுவும் நிகழ்த்த முடியாது; படைத்த கடவுளால் மட்டுமே நம்மை ஆக்கவும் அழிக்கவும், நமது விதியை நிர்ணயிக்கவும் முடியும் என்ற நம்பிக்கை ஆத்திகர்களின் மனதின் ஆழத்தில் இருந்து வர வேண்டும்..! இந்த உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால், பூட்டையும் சாவியையும் மூடத்தனமாக, காதலுக்கு ஆதாரமாக எல்லாம் இவர்கள் நம்பி இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா..?