Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாசுபதம் – ஒரு பார்வை


Guru

Status: Offline
Posts: 7468
Date:
பாசுபதம் – ஒரு பார்வை
Permalink  
 


பாசுபதம்  ஒரு பார்வை
 
முன்னுரை
சென்ற 24-12-2017 ஞாயிறன்று, கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற வரலாற்று உலாவில் கலந்துகொண்டேன். காங்கயம் பகுதியில் பரஞ்சேர்பள்ளி, மடவிளாகம், மயில்ரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். மூன்றுமே, வரலாற்றுப் பின்னணியையும், கல்வெட்டுகள் உள்ள கோயில்களையும் கொண்டிருக்கும் ஊர்கள். பார்க்கப்படாத ஊர்கள். அவற்றுள், மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீசுவரர் கோயில், இக்கட்டுரை எழுதக் காரணமாய் அமைந்தது.
 
மடவிளாகம்  பச்சோட்டு ஆவுடையார் கோயில்
மடவிளாகம், காங்கயம் வட்டத்தில் பார்ப்பினி ஊரை ஒட்டியுள்ள ஓர் ஊர். இங்குள்ள பச்சோட்டு ஆவுடையார் கோயிலில், கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் (பெயர் தெரியாத அரசன்) காலத்துக் கல்வெட்டு ஒன்றும், கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விசயநகர அரசர் தேவராயர் காலத்துக் கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன. இக்கல்வெட்டுகள் நான்கிலும், இறைவன் பெயர் பச்சோட்டு ஆவுடையார் என்றே குறிக்கப்பட்டுள்ளது. உலாவுக்குத் தலைமையேற்று வந்திருந்த தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள், இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார்.
 
மடவிளாகம் என்பது படை வீரர்கள் இருக்கும் இடத்தையும், கோயிலின் மடங்கள் இருக்கும் இடத்தையும் குறிக்கும். இங்கே, கோயில் மடம் இருந்துள்ளது. அந்த மடம் ஒரு பாசுபத மடமாகும். பாசுபதம், சைவத்தின் ஒரு நெறி. சைவத்தின் ஒரு பிரிவு.
 
பச்சோட்டு ஆவுடையாரும் ஆருத்ர கபாலீசுவரரும்
பச்சோட்டு ஆவுடையார் என்ற பெயர் எப்படி வந்தது? தினமலர்”  நாளிதழின் கோயில்கள் பற்றிய இணையதளத்தில் இக்கோயில் பற்றிய குறிப்பு இவ்வாறு கூறுகிறது:   இக்கோயிலில், இறைவன் சிவன், தன் நகத்தால் தரையைக் கீறியதால் ஏற்பட்டதாகக் கருதப்படும்  ஒரு சுனைக் குளம் உள்ளது. இச்சுனைக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பச்சை மண்ணாலான ஒரு பானைக்குடம் தோன்றும். அது முழுதும் திருநீற்றுச் சாம்பல் நிறைந்திருக்கும். எனவே, இறைவன் பச்சோட்டு ஆவுடையார் எனப்படுகிறார். இது, கோயில் பற்றிய ஒரு தொன்மைப் புனைவு.  ஆனால், பாசுபதப் பின்னணியில் பெயர்க்காரணம் வேறு. பாசுபத நெறியில், பிரம்மனின் தலையைக் கொய்த சிவன், தன் கையில் பிரமனின் தலையைக் (பச்சை மண்டை ஓட்டை) கையில் ஏந்தியவாறு  இருப்பதால் இப்பெயர் பெற்றான். (பச்சை என்பது நிறத்தைக் குறிப்பதல்ல; பசுமையையும், இளமையையும் குறிப்பது.) இலகுலீச பாசுபதத்திலிருந்து கிளைத்தவையே காளாமுகமும், காபாலிகமும். இவையும் பாசுபதம் என்னும் பெயரால் அறியப்படுகின்றன. உருத்திரன் என்னும் சுடலைச்சிவனுடன்  தொடர்புடையவை. ஆருத்ரா (ஆதிரை என்று தமிழகத்தில் பரவலாக அறியப்படுவது.) என்பது ஒரு நாள்மீனைக் (நட்சத்திரம்) குறிப்பது; பச்சை, ஈரம் என்னும் பொருளுடையது. கொய்த நிலையில், பிரமனின் மண்டை ஓடு (கபாலம்) பச்சையாகவும், ஈரமாகவும் இருப்பதன் அடிப்படையில், ஆருத்ரா”  என்னும் அடைமொழியைப் பெற்ற கபாலம்”  ,  ஆருத்ர கபாலம் ஆனது. ஆருத்ர கபாலத்தை ஏந்திய சிவன், ஆருத்ரகபாலீசுவரன் என்னும் பெயர் பெற்றது பொருத்தமே. வடமொழியாளர்கள் ஆருத்ரகபாலீசுவரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் எனில், அழகுத் தமிழில் பச்சோட்டு ஆவுடையார்” என்றும் “பச்சோட்டு ஆளுடையார்”  என்றும் இறைவன் அழைக்கப்பெறுகிறான். கல்வெட்டுகளில் இப்பெயர்களே காணப்படுகின்றன. (பச்சை+ஓடு, “பச்சோடு”  என்றாகிறது. பச்சோடு ஏந்திய என்பதைக் குறிக்கையில், வேற்றுமை உருபு இணைந்தும் பின் மறைந்தும் “பச்சோட்டு”  என்றாகிறது.)
 
இலகுலீசர் -  இலகுலீச பாசுபதம்
பாசுபத நெறியைத் தோற்றுவித்தவர் இலகுலீசர் என்பார் ஆவர். எனவே, இவர் பெயரால் “இலகுலீச பாசுபதம்”  என்னும் பெயர் வழங்கிற்று. இவர், குஜராத் மாநிலத்தில் வடோதராவுக்கு அருகில் “கார்வான்”  எனத் தற்போது வழங்கும் “காயாவரோஹன”  என்னும் பகுதியில் பிறந்தவர். இவரது பிறப்பு ஒரு கடவுள் உருவாகவே (சிவனின் இருபத்தெட்டாவது அவதாரம்) கருதப்படுகிறது. சைவம், ஒழுங்கு குறைவுற்ற நிலையில் இருந்ததால், சிவனே சைவத்தை நெறிப்படுத்த மனித உருக்கொண்டு இலகுலீசராகப் பிறப்பெடுத்தார் என்று கருதப்படுகிறது. இவரது உருவச் சிற்பங்களில் கையில் ஒரு பெரிய தடி (தண்டம்) காணப்படும். ஒழுங்குபடுத்தும் செயலைக் குறியீடாக விளக்குவதற்கே கையில் தண்டம் காட்டப்பெறுகிறது. (லகுல”, “லகுட” ஆகியன தண்டம்/தடி என்பதைக் குறிக்கும் பிராகிருதச் சொற்கள்.) இவர், குஜராத், மகாராட்டிரம், ஒரிசா (தற்போது ஒடிசா) ஆகிய மாநிலங்களில் மடங்களை நிறுவிப் பாசுபத நெறியைப் பரப்பினார். ஏற்கெனவே, சமணர்கள் பள்ளிகளை உருவாக்கிக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்குக் கொடையாக நல்கி வந்த நிலையில்  சமணம் வளர்ச்சியுற்ற நிலையில் -  சமணத்துக்கு எதிராக இலகுலீசர் செயல்பட்டார். புதியதொரு நெறி என்று தோன்றாதவாறு, தொல்குடிச் சிவவழிபாட்டைப் பாசுபத வழிபாடாக விரிவாக்கினார். எனவே, பழங்குடியினரின் தன்மையை உள்ளடக்கியதாக இலகுலீசம் விளங்கிற்று. சமூக நெருக்கடிகளுக்கு ஆளான பழங்குடிகளுக்கு ஆதரவும், உதவியும் பாசுபதம் தந்தது.
 
 
தமிழகத்தில் இலகுலீச பாசுபதம்
கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம் செல்வாக்குப்பெறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் அதன் கிளைகள் (மடங்கள்) மிகுதி. பாசுபதத்தார், அரசர்களின் குருவாக உயரும் நிலையும் ஏற்பட்டது. இறந்துபோன அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களில் பூசைக்கும் நிருவாகத்துக்கும் பாசுபதத்தார் அமர்த்தப்பட்டனர். மேல்பாடிக் கோயில் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படைக் கோயிலாகும். அக்கோயிலைப் பிரித்துக் கட்டியபோது, அரிஞ்சயனின் எலும்புக்கூடு கிடைத்ததாக அறிகிறோம். அப்போது கிடைத்த கல்வெட்டொன்றில், “லகுலீச பண்டிதர் ரக்ஷை என்னும் தொடர் காணப்பட்டது. தருமபுரிப்பகுதியில் சென்னிவாய்க்கால் என்னுமிடத்தில் கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக்கல்வெட்டில் பாசுபதம் பற்றிய குறிப்புள்ளது. கன்னடக் கல்வெட்டில் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
1 கலிசோரேச்0வர பல்லவேச்0வர
2 உத்துங்க நிர்மல நன்னேச்0வர கீர்த்தி சா0ஸன லஸத் காஞ்சீ புஜங்கேச்0வர
6 .............................வித்தெ ராசி0ய குருகளு புஜங்கரா குரு க்ருஹந்தும்பேச்0வரந்தத் புஜங்கர சிஷ்யர்வேர லாகுளாகமிக வித்யாராசிகள் ஸாஸனம்
 
காஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாசுபத குரு புஜங்கர் என்பாரின் சீடர் வித்தியாராசி ஆவார் என்பது செய்தி. கல்வெட்டில் வரும் சொற்கள்காஞ்சீ புஜங்கர சிஷ்யர்” வித்யாராசி”   ஆகிய சொற்கள் இச்செய்தியைச் சுட்டுகின்றன. மேலும் ஒரு சொல் இங்கே குறிப்பிடத்தக்கது.  லாகுளாகமிக என்னும் அச்சொல்லை “லகுள” + “ஆகமிக எனப்பிரித்துப் பொருள்கொண்டால் லகுலீச ஆகமத்தைச் சேர்ந்த பாசுபதத்துறவிவித்யாராசி என்பது பெறப்படுகிறது. பாசுபதத் துறவிகளின் பெயர்கள் “ராசி”  என்னும் பெயரொட்டுடன் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் இரு குடைவரைக் கோயில்களில் பாறைப்புடைப்புச் சிற்பங்களாகவும், இருபத்தைந்து ஊர்களில்  தனிச் சிற்பங்களாகவும் இலகுலீசர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. குடைவரைக் கோவில்களாவன மதுரை-அரிட்டாபட்டியும், புதுக்கோட்டை-தேவர்மலையும். விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழப்பட்டு, மாரங்கியூர், பேரிங்கூர், சிற்றிங்கூர், கப்பூர், கண்டம்பாக்கம், ஓமந்தூர், வடமருதூர், கீழூர், மேல்பாக்கம், நெடிமோழையனூர், திருவாமாத்தூர், ஆனங்கூர் எனப் பதின்மூன்று சிற்பங்கள் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் பாசுபத நெறி தொண்டை நாட்டில் மிகுதியும் பரவியிருந்தமை புலப்படுகிறது. இலகுலீசர் சிற்பங்கள் கிடைத்த பிற ஊர்களில் குறிப்பிடத்தக்கவை திருவாரூர் (தஞ்சை மாவட்டம்), திருவொற்றியூர் (சென்னை மாவட்டம்), பேரூர் (கோவை மாவட்டம்), அரிகேச நல்லூர் (நெல்லை மாவட்டம்) ஆகியன. இவற்றில், திருவாரூர்ச் சிற்பம் சிறப்புப் பெற்றது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இவ்வரிய சிற்பத்தில், மிகப்பெரிய அளவில் சடை மகுடம் காணப்படுகிறது. சிற்ப இலக்கணங்களின் அடிப்படையில், மஹாராஜ லீலாசனத்தில் சூசி முத்திரையில் அமைந்துள்ளது. இடக்கையில், பாம்பு சுற்றிய இலகுல தண்டத்தைத் தாங்கியவராக விளங்குகிறார். கலை அழகுடன் உள்ளது. பேரூரில் இருக்கும் சிற்பம் வேறொரு சிறப்பைப் பெற்றுள்ளது. வட இந்தியப்பகுதிகளில் இலகுலீசருக்குரிய அடையாளமாக நிமிர் குறி சுட்டப்பெறுகிறது. தமிழகத்தில் நிமிர்குறியுடன் காணப்படும் சிற்பங்கள் பேரூர்ச் சிற்பமும், தாராபுரம் வட்டம் கரையூரில் கிடைத்த இலகுலீசர் சிற்பமும் மட்டுமே. இவை, கோவை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 
திருவொற்றியூர், இலகுலீச பாசுபதத்தின் மையம் போல விளங்கியது. இங்குள்ள கோயில், காரணை விடங்கதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. காரணை என்பதும் காயாரோகணம் என்பதன் திரிபாகவே இருக்கவேண்டும். காரோணம் என்பதும் இன்னொரு திரிபே. கச்சி, குடந்தை, நாகை ஆகியன காயாரோகணக் கோயில்கள் எனப்படுகின்றன. திருவானைக்காவில் பாசுபத கிருஹஸ்த மடம் ஒன்று  இருந்துள்ளது. அகில நாயகி திருமடம் என்னும் பெயரில் இலங்கிய இம்மடம், பாசுபத மரபின் சிறப்பிடம் பெற்றது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது என்கிறார் தொல்லியல் அறிஞர் கே.வி. மகாலிங்கம் அவர்கள். இம்மடத்தின் தலைவராகப் பதவியேற்ற சதாசிவ தீட்சிதர் என்பார் புகழ் பெற்றவர். கி.பி. 1654 முதல் கி.பி 1714 வரை இவர் ஆட்சி செய்துள்ளார்.  
 
கொங்குப்பகுதியில், காரைத்தொழுவு என்னும் ஊருக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்துள்ளது. அந்தப் பள்ளிப்படை, கொங்குப்பகுதியில் ஆட்சி செய்த வீரகேரள அரசன் ஒருவனுடைய மூத்த அப்பாட்டருடையது. (மூத்தஅப்பாட்டர்=கொள்ளுத்தாத்தா). இப்பள்ளிப்படைக் கோயில் பாசுபதத் தொடர்புடையது. கோவைப்பகுதியில், பாசுபதத் தொடர்புள்ள கபாலீசுவரர் கோயில் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ளது. பேரூரில் இலகுலீச பாசுபத மடம் இருந்துள்ளது. பேரூரில் கிடைத்துள்ள இலகுலீசருடைய சிற்பம் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளோம். கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் கொங்குப்பகுதி கங்கர் ஆட்சியின் கீழ் வந்தது. இந்தக் காலக்கட்டத்தில் பாசுபதம் கொங்குப்பகுதிக்கு வந்திருக்கவேண்டும் எனக்கருதப்படுகிறது.
 
பாசுபதம் - மேலும் சில செய்திகள்
 
சீடர்களும், கோத்திரங்களும்
இலகுலீசர் தம் தத்துவங்களைப் “பாசுபத சூத்திரங்கள்”  என்னும் நூலில் எழுதியுள்ளார். இந்நூலுக்குக் கௌண்டின்யர் என்ற முனிவர் உரை எழுதியுள்ளார். சங்ககாலத்திலிருந்தே தமிழகத்தில் பாசுபத சமயம் பரவியிருந்தது. கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பவனைப் பற்றிய குறிப்பு உள்ளது. வாயு புராணம், இலிங்க புராணம், கூர்ம புராணம் ஆகியவற்றில் இலகுலீசர், இலகுலீசரின் சீடர்கள்  ஆகியோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாயு புராணம், இலகுலீசர், வியாசரும், கண்ணனும் வாழ்ந்த காலத்தில் இருந்தவர் என்கிறது. இவரது சீடர்களாக, குசிகா(குசிகன், கௌசிகன்), கார்க்33(ர்), மித்ரா (மைத்ரேய), கௌருசிய(ன்) என்பவர்கள் குறிக்கப்படுகிறார்கள். இந்நான்கு சீடர்களும் தம் ஆசானிடம் கற்றுப் புரிந்துகொண்டவற்றை அவரவர் பாணியில் தனித்தனிப் பிரிவுகளாகப் பரப்பினர். இவர்களின் பெயரில் தொடர்ந்த மரபுப் பிரிவுகள் கோத்திரங்களாயின. ஐந்தாவதாக ஒரு சீடரும் உண்டு. அனந்தர் என்பது அவரது பெயர். அவரது வழி சித்34யோகே3ச்0வரி என்பதாகும். இது தாந்திரீக வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. அவர் வழி நடப்போர் அனந்த கோத்திரத்தார். அவர்கள் சித்தரைப்போலவும் பித்தரைப்போலவும் திரிந்து வாழும் இயல்பினர். மௌனம், மடி (சோம்பர்) உடையவர். மனித உரு, பேயுரு ஆகிய பல்வேறு வடிவங்களில் (வேடங்களில்) அலைபவர். மும்பைக் கருகில் இருக்கும் ஜோகே3ச்0வரி குகைக் கோயில் அனந்த கோத்திரத்தைச் சார்ந்தது. இக்கோயிலில், காலச்சூரி அரசர் ஆட்சியில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலகுலீசர் சிற்பம் உள்ளது. மும்பைக்கருகில் உள்ள எலிஃபெண்டா குகையிலும் இலகுலீசர் சிற்பங்கள் உள்ளன.
 
ஆந்திரம்-கருநாடகம் பகுதிகளில் பாசுபதம்
ஆந்திரத்தில் ரேணாண்டு அரசர்கள் பாசுபதத்தை ஆதரித்தனர். இவர்தம் கல்வெட்டுகளில், தொடக்கப்பகுதியான மங்கலக் கூற்றில் “சிவ-லகுலீச” , “லகுடபாணி”  ஆகிய தொடர்கள் காணப்பெறுகின்றன. கர்நூலில் இருக்கும் பைரவகொண்டா கல்வெட்டு இலகுலீசரைத் “தண்டீசுவரர்”  என்னும் பெயரால் குறிக்கிறது. கருநாடகத்தில், பாதாமிச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் காலம் வரை வைணவம் முன்னிலை பெற்றிருந்தது. விக்கிரமாதித்தன் காலத்தில் பாசுபத நெறி முன்னிலை பெற்றமை கல்வெட்டுச் சான்றுகளால் அறியப்படுகிறது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில்களில், தேவ கோட்டங்களில் இலகுலீசர் சிற்பங்கள் காணப்படுகின்றன.  அரசு ஆதரவினால் பாசுபத மடங்கள் உருவாகின. ஆலம்பூரில் பாசுபத மடம் இருந்துள்ளது. கல்வெட்டுகளில், பாசுபத மடத்தலைவர்கள், ஈசான ஆச்சார்யா, சைவ மாமுனி 
ஆகிய பொதுப்பெயரால் அழைக்கப்பெற்ற செய்தி காணப்படுகிறது. அவர்களின் இயற்பெயரோடு பட்டர், பட்டாரகர் என்னும் ஈற்றொட்டுப் பெயர்களும் உள்ளன. ஆலம்பூர், பின்னாளில், 9-ஆம் நூற்றாண்டில், காளாமுகம் செல்வாக்குபெற்ற இடமாக மாற்றம் பெற்றது. பாதாமியில், இலகுலீசர் கோயில் உள்ளது. பட்டதக்கல்லில் இருக்கும் விரூபாட்சர் கோயிலிலும், மல்லிகார்ச்சுனர் கோயிலிலும் இலகுலீசர் சிற்பங்கள் உள்ளன. தென்னிந்தியப் பகுதிகள் முழுவதிலும் ஏராளமான பாசுபதச் சிவன் கோயில்களைக் கண்டதாகச் சீனப்பயணி யுவான் சுவாங் பதிவு செய்கிறார்.
 
வடநாட்டில் பாசுபதம்
குஜராத்தில் தொடங்கிய பாசுபதம் வடநாட்டில் பல மாநிலங்களில் பரவிற்று. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப்,  ஆஃப்கானிஸ்தான், ஒடிசா, மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இலகுலீசர் சிற்பங்களும், கோயில்களும் உள்ளன. ஏறத்தாழ 4-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரம் ஆண்டுகள் பாசுபதம் நிலைத்திருந்தது எனலாம். பாசுபதத்தின் மிகுந்த செல்வாக்கான காலம் 7-ஆம் நூற்றாண்டுஎனக்கருதப்படுகிறது. பாசுபத நெறிப் பள்ளியில் இடைவிடாது தோன்றிய பல ஆசான்கள் தோன்றியதும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதுமே இதற்குக் காரணம். 8-ஆம் நூற்றாண்டு வடமொழிக் கவி பவபூதி, காளிதாசனுக்கு ஒப்பாகக் கருதப்படுகின்றவர். இன்னொருவர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞர் பாணபட்டர். இருவரின் நூல்களிலுமே, பாசுபதக் குறிப்புகள் உள்ளன. சீனப்பயணி யுவான் சுவாங் தன் குறிப்புகளில் பாசுபதத்தாரைப்பற்றி எழுதியுள்ளார். காசியில் அவர் பத்தாயிரம் பாசுபதர்களைப் பார்த்ததைப் பதிவு செய்துள்ளார். கடல் கடந்து தென்கிழக்காசிய வரை பாசுபதம் நீண்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
 
 
 
 
 
 
துணை நின்ற நூல்கள் மற்றும் இணையப் பகுதிகள்:
 
1 Indian Temples & Iconography - Indiatemple.blogspot.com
2 Hinduwebsite.com
தமிழகத்தில் லகுலீச பாசுபதம் –நூல். ஆசிரியர்கள் : மங்கை ராகவன்,
சி.வீரராகவன், சுகவன முருகன். பதிப்பாளர் : புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard