கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில் கல்வெட்டுகளில், கோயம்பேடு 12-13-ஆம் நூற்றாண்டுகளில் ஜயங்கொண்டசோழ மண்டலத்தில், புலியூர்க் கோட்டத்தில் மாங்காடு நாட்டைச் சேர்ந்ததாக இருந்தது என்று முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.. புலியூர்க்கோட்டத்தின் பரப்பு எவ்வளவு எனத்தெரிய சென்னைப்பகுதியின் கல்வெட்டுகளைப் பார்த்தல் நன்று எனவும் கண்டோம்.
சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்
தொல்லியல் துறையில் இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி அவர்கள் 1970-ஆம் ஆண்டில் பதிப்பித்த சென்னை மாநகர்க் கல்வெட்டுகள் நூலானது 2009-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. அந்த நூலைப்பெற்று, கல்வெட்டுகளைப் படித்துப் பார்த்ததில் புலியூர்க் கோட்டத்தின் பரப்பெல்லை ஓரளவு புலப்படுகிறது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் என்னும் நூலிலும் புலியூர்க்கோட்டத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
புலியூர்க்கோட்டம் தொண்டைமண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்று.
புலியூர்க்கோட்டம் – வேறு பெயர்: குலோத்துங்கசோழ வளநாடு
பேறூர் நாட்டின் கீழ் (தற்போது போரூர்) இருந்த ஊர்கள் :
1குளப்பாக்கம் (தற்போது திருப்பெரும்புதூர் வட்டம்)
2வள்ளிசேர்பாக்கம் (தற்போது வளசரவாக்கம்)
3மணற்பாக்கம்
நெடுங்குன்ற நாட்டின் கீழ் இருந்த ஊர்கள் :
1மாடம்பாக்கம் (தற்போது செங்கை வட்டம்)
2மதுரைப்பாக்கம் (தற்போது எங்குள்ளது?)
3கிளாம்பாக்கம் (தற்போது செங்கை வட்டம்)
4செம்மண்பாக்கம்
மயிலாப்பூர், புலியூர்க்கோட்டத்தில் அடங்கும். ஆனால் நாட்டுப்பிரிவு தெரியவில்லை. கல்வெட்டு வரிகளில் அதுபற்றிக் குறிப்பில்லை.
புலியூரில் தற்போது பாரத்துவாஜேச்வரர் கோயில் என்னும் கோயில் உள்ளது. அக்கோயில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் திருவாலிக்கோயில் என வழங்கியது. இந்த வாலிக்கோயிலில் கருவறையின் மேற்குச் சுவரில் தெலுங்குச்சோழனான விஜயகண்டகோபாலன் என்பவனின் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் சந்திவிளக்கு எரிக்க கறவைப்பசு இரண்டு கொடையாக அளிக்கப்பட்டன. கொடை கொடுத்தவன் வேற்காடு கிழான் தில்லைக்கூத்தன் பொன்னப்பிள்ளை என்பவன் ஆவான். வேற்காடு, தற்போதைய திருவேற்காடு என்பது கண்கூடு. வேற்காடு கிழான் என்பது வேற்காடு ஊர்த்தலைவனைக் குறிக்கும்.
சென்னை மாநகர்க் கல்வெட்டுகள் நூல் சொல்லும் பிற செய்திகள் :
நூலில், சென்னையைச் சேர்ந்த முப்பத்தொரு ஊர்ப்பகுதிகளின் கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டிருப்பினும் பெரிய பகுதிகளாகக் காணப்படுபவைதிருவல்லிக்கேணியும், மையிலாப்பூருமே. இவை இரண்டிலும் முறையே 91, 88 கல்வெட்டுகள் உள்ளன. மற்ற பகுதிகளில் மிகையாக 7 கல்வெட்டுகளும் அவை தவிர்த்து ஓரிரு கல்வெட்டுகளுமே உள்ளன. மற்ற பகுதிகளில்,
சைதாப்பேட்டை
புரசைவாக்கம்
எழும்பூர்
பெரம்பூர்
நுங்கம்பாக்கம்
சேத்துப்பட்டு
அடையாறு
இராயபுரம்
சாந்தோம்
ஆலந்தூர்
ஆகியன மட்டுமே குறிப்பிடத்தக்க பகுதிகள்.
திருவல்லிக்கேணி :
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மொத்தம் 91 கல்வெட்டுகள் உள்ளன.
இங்குள்ள மிகப்பழமையான கல்வெட்டு பல்லவ மன்னன் தந்திவர்மனுடையது. காலம் கி.பி.808.
சோழர் கல்வெட்டுகள் பல இருந்தாலும் அவை சிறு சிறு கல்வெட்டுகளே. 12-13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அரசர்கள் வீரரசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர்.
பாண்டியர் கல்வெட்டுகள் இரண்டே இரண்டு மட்டும் உள்ளன. காலம் 14-ஆம் நூற்றாண்டு. அரசர்கள் விக்கிரமபாண்டியனும், குலசேகரபாண்டியனும். இவற்றில் குலசேகரபாண்டியனின் கல்வெட்டு விரிவானது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் இறைவன் பெயர் இக்கல்வெட்டில் தெள்ளியசிங்க நாயனார் என்று காணப்படுகிறது. அயன்புரங்கிழான் (அயனாவரத்துத்தலைவன்) நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
விசயநகர அரசர் காலத்துக் கல்வெட்டுகள் மூன்று உள்ளன. அரசர்வீரவெங்கடபதி தேவ மகாராயர். இக்கல்வெட்டுகளில்திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் இறைவன் பெயர் தெள்ளியசிங்கப்பெருமாள் எனக்குறிப்பிடப்பெறுகிறது.
மயிலாப்பூர்
மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயில், விருப்பாட்சீசுவரர் கோயில், வாலீச்வரர் கோயில், காரணீச்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களிலும் சேர்ந்து 88 கல்வெட்டுகள் உள்ளன.
சோழர் காலம் - கி.பி. 11-13 நூற்றாண்டுகள் - அரசர்கள் முதல்குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், வீரராசேந்திரன், முதல் இராசாதிராசன்ஆகியோர்.
பிற்காலப் பல்லவர் காலம்– கி.பி. 13-ஆம் நூற்றாண்டு - அரசன்கோப்பெருஞ்சிங்கன்.
பாண்டியர் காலம்– கி.பி. 13-14 நூற்றாண்டுகள். அரசர்கள்சுந்தரபாண்டியன், கோச்சடையபன்மன்
தெலுங்குச்சோழர் காலம்– கி.பி. 13-ஆம் நூற்றாண்டு – அரசன்மதுராந்தகப் பொத்தப்பிச்சோழன்.
விசயநகரர் காலம் – கி.பி. 16-ஆம் நூற்றாண்டு –பிரதாபதேவராயர்.
பொதுவான செய்திகள் :
ஜயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்த மற்றொரு கோட்டம் புழல் கோட்டம். சிறப்புப்பெயர் : விக்கிரமசோழ வளநாடு. இது 12-14 ஆம் நூற்றாண்டு நிலை. புழல் கோட்டத்தில் துடர்முள்ளி நாடு இருந்தது. இந்த நாட்டில் அயன்புரம் இருந்தது. 18-ஆம் நூற்றாண்டில், பிழல் கோட்டம் என்று அறியப்பட்டது. இக்கோட்டத்தில் பொன்னேரி சீர்மையில் நெயிதவாயல் என்னும் ஊர் இருந்ததாகக் குறிப்புள்ளது. தற்போதும் இந்த நெய்தவாயல் உள்ளதா? தெரியவில்லை.
புலியூர்க்கோட்டத்தில் திருப்பாசூர் என்னும் ஊர் இருந்துள்ளது.
தற்போதுள்ள திரிசூலம் ஊர் 13-ஆம் நூற்றாண்டில் திரிச்சுரம் என்று வழங்கியது.
13-ஆம் நூற்றாண்டில் பாரையூர் என்னும் பெயரில் ஓர் அக்கிரகாரம் இருந்துள்ளது. இதன் மற்றொரு பெயர் செம்பியன்புலியூர். தற்போது பாரையூர் இருந்ததற்கான தடயம் ஏதேனும் உள்ளதா?
திருவான்மியூர் புலியூர்க்கோட்டத்தில் கோட்டூர் நாட்டில் இருந்தது. கோயிலின் இறைவனின் பெயர் திருவான்மியூர் உலகாளுடைய நாயனார் என்பதாகும். மருந்தாண்டார் என்னும் பெயரும் இவ்விறைவனுக்கிருந்தது.
தற்போதுள்ள வேளச்சேரி, 13-ஆம் நூற்றாண்டில் வேளச்சேரியான சினசிந்தாமணிச் சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்டது. அதாவது ஒரு பிராமண ஊராக இருந்துள்ளது. ஆனால்,”சினசிந்தாமணி” என்னும் பெயர் சமண சமயத்தோடு தொடர்புள்ளதாகக் காணப்படுகிறது. தெளிவாகவேண்டும். வேளச்சேரியில் கைலாசமுடைய நாயனார் கோயில் இருந்துள்ளது.
பார்த்தசாரதிக்கோயிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தின் தரையில் உள்ள 12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று,குலோத்துங்கனின் திருமாளிகை (அரண்மனை) இப்பகுதியில் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அரண்மனை வேறு பகுதியில் இருந்திருக்ககூடும். கல்வெட்டுள்ள கல் இக்கோயிலில் பாவுகல்லாகப் பயன்பட்டிருக்கக்கூடும்.
கல்வெட்டு வரிகள்:
ஸ்வஸ்திஸ்ரீ இத்திருமாளிகை
குலோத்துங்கசோழன்
தற்போதுள்ள அயனாவரம் 14-ஆம் நூற்றாண்டில் அயன்புரம் என்னும் பெயரில் இருந்தது. அயன்புரத்தின் குறுந்தலைவர்களாகக் கிழவன் வீரகாங்கையராயர் என்பாரும், தெள்ளியனான செழியதரையன் என்பாரும் குறிப்பிடப்படுகிறார்கள்.
புதுப்பாக்கம் 14-ஆம் நூற்றாண்டில் திருவல்லிக்கேணிக்கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஊராக (திருவிடையாட்டமாக) இருந்தது.
16-ஆம் நூற்றாண்டில், வேப்பேரியும், வேஷாறுபாடியும் திருவல்லிக்கேணிக் கோயிலுக்குத் தரப்பட்ட கிராமங்களாகும்.வேஷாறுபாடி என்பது தற்போதைய வியாசர்பாடியாகும்.
மயிலாப்பூரில் நகரத்தார் என்னும் வணிகர் இருந்தனர்.
16-ஆம் நூற்றாண்டில் விசயநகரர் காலத்தில், புழல்கோட்டம் சந்திரகிரி ராச்சியத்தில் இருந்தது. புழல் கோட்டத்தில், லாச்சிப்பட்டு என்னும் சீர்மை இருந்தது.
திருவல்லிக்கேணிப் பெருமாள்கோயில் கல்வெட்டுகள் தொண்ணூற்றொன்றில் பதிநான்கு கல்வெட்டுகள் சிவன்கோயில்களைச் சார்ந்ததாக இருப்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது. அவற்றில் திருவான்மியூர்க் கோயிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் எட்டு, கபாலீச்வரர் கோயிலைச் சேர்ந்தது ஒன்று. வைணவக்கோயில் வளாகத்தில் சிவன் கோயில் கல்வெட்டுகள் வந்தது எங்ஙனம் என்பது ஆய்வுக்குரியது. கோயில்கள் புதுப்பிக்கப்படுகையில் கல்வெட்டுகள் உள்ள கற்கள் இடம்பெயர்ந்திருக்குமா?
தற்போதைய பல்லாவரம் 13-ஆம் நூற்றாண்டில் பல்ல(வ)ர்புரமான வானவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கியது.
மயிலைக்கோயில் 13-ஆம் நூற்றாண்டுக்கல்வெட்டொன்றில், அழியாவிரதங்கொண்டான் மடம் குறிப்பிடப்பெறுகிறது. இந்த மடம் தற்போது உள்ளதா?
மயிலைக்கோயில் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில், ஐஞ்சுவண்ணம் வணிக கிராமம் குறிப்பிடப்படுகிறது. இது, அஞ்சுவண்ணம், மணிக்கிராமம் என்னும் வணிகக் குழுவினர் மயிலையில் இருந்துள்ளதைப் புலப்படுத்துகிறது. மயிலை ஒரு பெரிய வணிக நகரம் என அறிகிறோம்.
திருவான்மியூரில், சோழநாட்டைச் சேர்ந்த பெரிய அதிகாரியான பூதிமங்கலவன் அரையன் ஆட்கொண்ட நாயகனான சேதிராயன் என்பான் வடவீரசாயி(தி)க்காறன் மடம் என்றொரு மடத்தை நிறுவியுள்ளான்.
பெரம்பூர், 19-ஆம் நூற்றாண்டில் பிரம்பூர் என்று குறிப்பிடப்படுகிறது.
பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு, ”ரெயில் கம்பனியில் வேலை செய்யும் கெங்காதர மேஸ்திரி” சேமாத்தம்மன் கோயிலில் வாசற்படி கட்டிவைத்தார் என்று கூறுகிறது. கல்வெட்டில், காலம் சாலிவாகன ஆண்டு 1672-ஆங்கீரச எனக் குறிக்கப்படுகிறது. அதாவது கி.பி. 1750. இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட ஆண்டு, கி.பி.1853, ஏப்ரல் 16 எனவிக்கி பீடியா குறிக்கிறது. ஆங்கிரச ஆண்டு கி.பி. 1872 என்பதுதான் சரி.
சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் கல்வெட்டொன்று (காலம் 1884), சைதாப்பேட்டை தாலூகா “காரணி” கிராமம் பற்றிக்குறிப்பிடுகிறது. இந்த “காரணி” கிராமத்தில் “காருண்ணிய ஈஸ்வரர்” திருக்கோயில் இருந்த்தாகவும் குறிப்பிடுகிறது. ஒருவேளை, காரணீசுவரர் கோயில் அமைந்திருக்கும் பகுதிதான் இந்த “காரணி”கிராம்மாக இருக்கலாம்.
·சைதாப்பேட்டை சீனிவாசப்பெருமாள் கோயில் கல்வெட்டு, சைதாப்பேட்டைக்கு
“இரகுநாதபுரம்” என்று இன்னொரு பெயர் இருந்துள்ளதைச் சுட்டுகிறது.
சேத்துப்பட்டுப்பாலத்தின் மேற்குச்சுவர் மேல் உள்ள கல்வெட்டு, மன்றோ பாலம்
1824-ஆம் ஆண்டு கட்டப்பட்டதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பாடம்
MUNRO BRIDGE
Erected by Order
Of Government
A.D. 1824
”ஒயிட் மெமோரியல் ஹால்” அருகில் உள்ள “செயிண்ட் ஆண்ட்ரூஸ்” பாலத்தில் உள்ள கல்வெட்டு இப்பாலம், 1817-ஆம் ஆண்டு ”மேஜர் டி ஹவில்லாண்ட்” என்னும் பொறியாளரால் கட்டப்பட்ட்தாகக் குறிப்பிடுகிறது.
கல்வெட்டின் பாடம்
St. ANDREWS’S BRIDGE
erected under the
Orders of Government
1817
MAJOR DE HAVILLAND
Engineer
”கமாண்டர் இன் சீப் ரோடில்” உள்ள பாலத்தின் தென்சுவரில்
THE
COMMANDER-IN-CHIEF’S
BRIDGE
erected by Order
of Government
A.D. 1825
என்றும்,
வடசுவரில்,
JOHN LAW ARCHITECT
1825
என்றும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வுக்கூட அலுவலகக் கருங்கல் தூணில் உள்ள
கல்வெட்டு, கி.பி.1792-இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி வானிலை ஆய்வுக்கூடம் கட்டியதைக் குறிக்கிறது.
வேப்பேரி நெடுஞ்சாலையில் எஸ்.பி.சி.ஏ. கட்டிட்த்தின் வடக்குச் சுவரில் உள்ள
கல்வெட்டு, “சர் ஆர்தர் எலிபங்க் ஹேவ்லாக்” என்பவர், “இராஜா வேணுகோபால் பஹதூர் விலங்குகள் மருத்துவமனை”க்கு அடிக்கல் நாட்டியதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பாடம் :
1THIS STONE OF THE
2RAJAH VENUGOPAL BAHADUR
3HOSPITAL FOR ANIMALS
4WAS LAID BY
5H.E. SIR ARTHUR ELI BANK HAVELOCK G.C.M.G. G.C.I.E.
6GOVERNOR OF MADRAS
78TH APRIL 1899
இது தொடர்பாக எஸ். முத்தையா எழுதிய குறிப்பு, வேணுகோபால் பகதூர் என்பவர் இந்த மருத்துவமனை தொடங்கக் கொடையளித்தவர் எனக்கூறுகிறது.
Government in March, 1903, approved the establishment of the institution in Vepery in a bungalow rented at Rs.60 a month near the `Dog's Home' run by the Society for the Prevention of Cruelty to Animals. The SPCA offered to hand over this hospital to the college as a teaching hospital, provided it retained the name of the original donor, and so it became the Raja Venugopal Kishan Bahadur Hospital for Animals. With all this agreed on and Government granting additional land requested by Major Gunn, the institution started functioning in the rented bungalow, Dobbin Hall, from October 1, 1903, with Gunn, the Superintendent of the Civil Veterinary Department, Madras Presidency, as part-time principal.
”எல்பின்ஸ்டன்” பாலத்தின் மேற்குப்பக்கச்சுவரில் உள்ள கல்வெட்டு,
கி.பி. 1842-இல் பாலம் கட்டப்பட்டதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பாடம் :
1ELPHINSTONE
2 BRIDGE
3 1842
சென்னை ஆலந்தூர் “மேர்சன்” தெருவிலுள்ள துலுக்காணத்தம்மன் கோயிலின்
வடக்குச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கோயிலைக் கட்டியவர் ஒரு “பட்லர்” (ஆங்கிலேயரின் வீட்டில் பணிபுரிந்த தலைமைப்பணியாள்). அவர் பெயர் சுந்தியப்பன். கி.பி. 1810-இல் “கமிசரி ஜெனரல்” ஆக இருந்த”மேஜர்
வில்லியம் மாரிசன்” என்பவரிடம் பணியாற்றியவர். இவர் கோயில் கட்டிய செய்தி ஆங்கிலத்தில் ஒரு கல்வெட்டும், தமிழில் ஒரு கல்வெட்டுமாகக் கிடைத்துள்ளது. மேலே ஆங்கிலக்கல்வெட்டும், கீழே தமிழ்க்கல்வெட்டும்.
· மேற்கு சி.ஐ.டி. நகர் பாலத்தருகில் உள்ள தூண் மேல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இப்பாலம் 1786-இல் சென்னையைச் சேர்ந்த வணிகரான ADRIAN FOUR BECK என்பவர் தம்முடைய மரண சாசனத்தில் குறிப்பிட்டிருந்தபடி கட்டப்பட்டதைக் குறிக்கிறது. ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆக இரு கல்வெட்டுகள் இத்தூணில் உள்ளன. அப்போது ஆளுநராயிருந்தவர் மேஜர் ஜெனரல் காம்பெல் ஆவார்.
கல்வெட்டின் ஆங்கிலப்பாடம்:
1THIS BRIDGE
2ERECTED AS A PUBLIC BENEFIT
3FROM A LEGACY BESTOWED
4BY
5Mr. ADRIAN FOUR BECK
6A MERCHANT OF MADRAS
7IS A MONUMENT
8USEFUL AS LASTING
9OF THE GOOD CITIZEN’S
10MUNIFICENT LIBERALITY
11IT WAS ERECTED
12BY HIS EXECUTERS
13T.PELLING I.DEFRIES & P.BODKIN
14FROM THE PLAN
15AND UNDEER THE DIRECTION OF
16LIEUT:T COL:L PAT:K ROSS
17CHIEF ENGINEER
18IN THE YEAR OF OUR LORD
191786
20MAJ:r GEN:l SIR ARCH:d CAMPBELL
21KNIGHT OF THE MOST HONBLE: ORDER OF THE BATH
22BEING THEN
23GOVERNOR OF FORT ST; GEORGE
தமிழ்க்கல்வெட்டின் பாடம்:
1இந்த வாராவதி
2சென்னபட்டண வற்தகனாயிருந்த
3மேஸ்தரி அதிரியான் பொர்பாக்
4தம்முட மரண சாதனத்தில்
5எழுதினபடியே
6கட்டப்பட்டுது
7நல்ல ஊர் குடியாயிருந்த
8அவருட மகா உதார குணத்தின் நினைப்புக்கு
9இது பிறையோசனமும் உறுதியுமான
10அடையாளம்
11அவருட தன்ருணக்காறராகிய
12தாமசு பெல்லிங்சான் டிபிறிசு பிடா பாடகின்
13யென்கிறவர்களாலே
14இது
15லூடெனாண்டு கற்னல் பெதிரி கறாசு யென்கிர
16பெரிய யிஞ்சினீர்
17காறின வயணத்தின் படியேயும்
18அவர் வேலையை விசாரிக்கக் கொள்ளவும்
19நம்முட கற்தர் பிறந்த
201786 இலே
21மேசர் செனறல் சார் ஆற்ச்சை பெல்கேமல்
22சென்னபட்டணத்தின் பெரிய
23துரையா யிருக்குறபோது
24கட்டிவிக்கப்பட்ட வாராவதி
25சாலிவாகன சகாத்தம் 1808 வரு. பிறபவாதி
26சதாற்த்தம் வர். 40 க்கு பராபவ வரு.ம்
சென்னை மத்திய ரயில் நிலயத்துக்கு மேற்கே உள்ள பாலத்தின் வடக்குப் பக்கக் கல் மேல் உள்ள கல்வெட்டு பொது மருத்துவமனைப் பாலம் கி.பி. 1807-இல் கட்டப்பட்டதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பாடம்:
1GENERAL HOSPITAL
2BRIDGE
3BUILT
4ABOUT THE YEAR
51807
சென்னை தங்கசாலையில் உள்ள பேசின் பாலத்தின் வடக்குச் சுவரில் (உட்பக்கம்) உள்ள கல்வெட்டு இப்பாலம் கி.பி.1807-இல் கட்டப்பெற்றதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பாடம்:
1BASIN BRIDGE
2BUILT
3ABOUT THE YEAR
41807
சென்னை ஹாரீஸ் சாலையில் உள்ள பாலத்தின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, இப்பாலம் கி.பி. 1851-1855 காலத்தில் கட்டப்பெற்றதைக் குறிக்கிறது.
கல்வெட்டின் பாடம்:
1HARRIS BRIDGE
21851-1855
அதே பாலத்தின் வடக்குப்பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, மேற்படி பாலம் கட்டப்பெற்றதை விரிவாகச் சொல்கிறது. பாலத்தைக் கட்டியவர் செயல் பொறியாளர் இச்சின்ஸ் என்பவர். பாலத்தின் வரைபடம் ஆக்கியவர் தலைமைப் பொறியாளர் ஃபேபர் என்பவர். அப்பொழுது சென்னை ஆளுநராயிருந்தவர் லார்டு ஹாரீஸ் ஆவார்.
கல்வெட்டின் பாடம்:
1THIS BRIDGE
2WAS ERECTED IN 1854-55. WHILST
3LORD HARRIS
4WAS THE GOVERNOR OF MADRAS
5DESIGNED BY
6LIEUT. COL. C.E. FABER,
7CHIEF ENGINEER
8BUILT BY CAPT. H. HITCHINS.
9EXECUTIVE ENGINEER.
தமிழ் வடிவகல்வெட்டும் மேற்படி ஆங்கிலக்கல்வெட்டின் கீழேயே உள்ளது.
கல்வெட்டின் பாடம்:
1இந்த வாராவதி
2லார்ட் ஆரிஸ் துரையவர்கள்
3சென்னப்பட்டனம் கவர்னாராயிருந்த
41854-55 –ம் வருஷத்தில்
5சீப் இஞ்சினீராகிய
6லெப்டன் கர்னல் சி.யி. பேபர் துரை
7ஏர்ப்படுத்திய பிளான் படிக்கு
8எக்சிகியூடிவ் இஞ்சினீராகிய
9கேப்டன் எச். இச்சின்ஸ் துரையால்
10கட்டப்பட்டது.
மேலும் சில செய்திகள்- துணை நின்ற நூல் : ஊரும் பேரும்.
ஆசிரியர் க. குழந்தைவேலன் (தொல்லியல் துறை).
· தற்போதுள்ள திரிசூலம், கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராசேந்திரனின் காலத்திலேயே (கி.பி. 1022) பிராமணக்காணி ஊர் ஆக்கப்பட்டு, சோழ திவாகரச் சதுர்வேதிமங்கலம் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் திருச்சுரமுடையான் என்பதாகும். வடமொழி வாடை திருச்சுரமுடையானை திரிசூல நாதராக்கி விட்டது.
* பல்லவர் குடைவித்த குடைவரைக் கோயிலான சிங்கப்பெருமாள் கோயில் (செங்கை வட்டம்) கி.பி. 990-இல் தொண்டைமண்டலத்துக் களத்தூர்க் கோட்ட்த்துச் செங்குன்ற நாட்டுச் செங்குன்றம் என்னும் ஊரின் பிடாகையாக இருந்தது.
* தற்போதுள்ள வளசரவாக்கம், கி.பி. 1182-இல் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் தொண்டைமண்டலத்துப் புலியூர்க் கோட்டத்தில் பேறூர் நாட்டில் (தற்போதைய போரூர்) வள்ளிசேர் பாக்கம் என வழங்கியது. இங்கே திருவகத்தீசுரம், திருவேழ்வீசுரம் ஆகிய இரு கோயில்கள் இருந்துள்ளன. (தற்போதும் உள்ளன). மேற்படி குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் திருவேழ்வீசுரமுடையார் கோயிலுக்கு மூன்று விளக்கு எரிப்பதற்காகக் கொடையளிக்கப்பட்ட செய்தி உள்ளது. இக்கல்வெட்டு திருவகத்தீசுரமனுடையார் கோயிலில் உள்ளது. வளசரவாக்கம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது நமக்குப் புதிய செய்தி.
கல்வெட்டின் படம் ஒன்று கூட இல்லாமல், கட்டுரை முற்றுப்பெற்ற உணர்வு
ஏற்படவில்லை. மயிலைக் கபாலீசுரர் கோயில் கல்வெட்டுப்படம் ஒன்று கிடைத்தது. அது இங்கே:
சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களுள் கோயம்பேடு பகுதியும் ஒன்று. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறிகள் விற்பனைச் சந்தையும், மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அங்கேதான் உள்ளன. இவற்றின் அருகே நெடிதுயர்ந்த அடுக்குமாடி வீடுகள் அடங்கிய ஒரு பெருந்தொகுதியும் உண்டு. வளைந்து,வளைந்து மேலும் கீழுமாய்ப் பல மலைப்பாம்புகள் நெளிந்தோடுவதன் தோற்றத்தையொத்த ’கான்கிரீட்”சாலைகளை இணைக்கும் மிகப்பெரிய பாலங்களின் தொகுதியும் அங்கே உண்டு. பரபரப்பான இப்பகுதியில், சிவன் கோயில் ஒன்று, தான் இருக்குமிடம் சொல்லாமல் அமைதியாக நிற்பதைச் சென்னையில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தும் நான் கண்டிலன். தற்போது, பணி ஓய்வில், சென்னையை விட்டு நீங்கிக் கோவை வந்துசேர்ந்து, கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் திறம் பெற்ற பின்னர், சென்னை சென்றபோது, ஒரு நாள் கோயம்பேட்டில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்றேன்.
கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில்
கோயிலுக்குச் சென்றிருந்த நேரம் மாலை மங்கி இருள தொடங்கும் நேரம். கோயிலின் கருவறை ”கஜபிருஷ்டம்” என்னும் அமைப்பை உடையது. அழகாகத் தமிழில் தூங்கானை மாடம் என்று வழங்கும். கருவறை, சதுரமாக அமையாமல் வட்டமாக யானையின் பின்புறத்தை ஒத்த வடிவத்தில் அமைந்திருக்கும். கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றுக்கும் கருவறை அதிட்டானப்பகுதிக்கும் இடையில் அகழி போன்ற ஒரு பள்ளம். திருச்சுற்றில் போதிய வெளிச்சம் இல்லை. கைப்பேசியின் ஒளியில் சுவரில் உள்ள சில கல்வெட்டுப்பகுதிகளை ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஒளிப்படங்களை இல்லத்தில் கணினியில் பார்த்துப்பார்த்து கல்வெட்டுப் பாடங்களைப் படித்தேன்.
கல்வெட்டுகள் சொல்லும் நாட்டுப்பிரிவு
கல்வெட்டுப்பாடங்கள் பல்வேறு செய்திகளைக் கூறின. சென்னைப்பகுதியானது, சோழர் ஆட்சியின்போது ஜயங்கொண்டசோழ மண்டலத்தில் அமைந்திருந்தது. சோழர் ஆட்சியின்போது மண்டலம், வளநாடு, கோட்டம் அல்லது கூற்றம், நாடு ஆகிய நிலப்பிரிவுகள் இருந்தன. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்டசோழ மண்டலம் என்னும் பெயரில் இருந்தது. எனவே சென்னைப்பகுதியும் ஜயங்கொண்டசோழ மண்டலத்துள் அடக்கம். வளநாட்டுப்பிரிவில் இப்பகுதி குலோத்துங்கசோழவளநாட்டிலும், புலியூர்க்கோட்டத்திலும் சேர்ந்திருந்தது. நாட்டுப்பிரிவாக மாங்காடு நாடுஎன்னும் பிரிவு கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகிறது. மாங்காடு, இப்போதும் இப்பகுதியில் இருப்பதைக் காண்கிறோம். கோட்டத்தைக் குறிக்கும் புலியூரும் (பல நாடுகளை உள்ளடக்கியதால்) சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பரப்பில் எங்கோ இருக்கவேண்டும். (சரியான தகவல்களைத் தேடியிருக்கவேண்டும்; ஆனால் செய்யஇயலவில்லை.) கல்வெட்டுகளில், ”கோயம்பேடு” என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன்“குறுங்கால் ஆண்டார்” என்னும் பெயரில் குறிப்பிடப்பெறுகிறார். (இங்கேயுள்ள “ஆண்டார்” என்னும் வழக்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “ஆளுடையார்”என்று வழங்குவதைக் காண்கிறோம். பெரும்பாலான கோயில்களில் இறைவனின் பெயர், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பெயரினின்றும் வேறுபடும். இங்கே, இப்பொழுதும் இறைவனின் பெயர் “குறுங்காலீசுவரர்”என்னும் பெயரால் பழமையை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு என்னும் ஊர்ப்பெயரும் தன் பழம்பெயரை இழக்காமல் இருப்பது சிறப்பு. இறைவன் பெயர் ”குறுங்கால்” ஈசுவரர் என்று எவ்வாறு அமைந்தது?”குறுங்கால்” என்பது எதைக்குறிக்கும்? என்பன போன்ற குறிப்புகள் தெரியவில்லை. சரியான காரணத்துடன் கூடிய செவிவழிக்கதை இருக்கக்கூடும்.
மூன்றாம் குலோத்துங்கன்
கல்வெட்டுகளில் சோழ அரசன் மூன்றாம் குலோத்துங்கன் பெயர் காணப்படுகிறது. இவ்வரசன் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். பாண்டியரை வென்று “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய” என்ர விருதினைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவன். இந்த விருதுப்பெயர், இக்கோயில் கல்வெட்டுகளில் வருகின்றது. கல்வெட்டுகளில் இவனுடைய ஆட்சியாண்டு 25 என வருவதால், இக்கோயில் கல்வெட்டுகள் கி.பி. 1203 ஆண்டளவில் பொறிக்கப்பட்டவை என்பது உறுதியாகின்றது. எனவே, கோயில் 800 ஆண்டுகள் பழமைகொண்டது எனத்தெளியலாம்.
கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்
·ஒரு கல்வெட்டு, இதே ஊரைச்சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில்சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள், கொடையாளி கொடுத்த பசுவையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்றி நடத்துவதாக உறுதிமொழி அளிக்கும் செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்ற சிவப்பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.
·சிவப்பிராமணர் பெயர்கள்:
ஆளும்பிரான் பட்டன், குழைச்சோனாண் குலோத்துங்கசோழ பட்டன், சிவஞானதேவன், பெருமாள் பட்டன்.
·சிவப்பிராமணர்களிப்பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள்“காணியுடைய சிவப்பிராமணர்கள்”என்று சுட்டப்பெறுகின்றனர். கோயிலில் பூசைசெய்யும் பணியினை வழிவழியாக உரிமை பெற்றவர்களே காணியுடையவர்.
·ஆளும் பிரான் பட்டனின் பெயர் அவனுடைய கோத்திரமான“கவுதம” கோத்திரத்துடன் சேர்த்துச் சொல்லப்படுகிறது.
·இன்னொரு கல்வெட்டில், கோயம்பேடு ஊரைச்சேர்ந்த வடுகநாதன் என்பாரின் மகள் கோயிலில் சந்தி விளக்கெரிக்க“மாடை” என்னும் காசு இரண்டை “உபையமாக”(கொடையாக)க் கொடுத்த செய்தி வருகிறது.
கல்வெட்டில், இப்பெண்ணின் பெயர் “றியாண்டாள்” எனக் காணுகிறது. இப்பெயர், ”காறியாண்டாள்”என்பதாக இருக்கக் கூடும். காரியாண்டாள் என்னும் பெயர் காறியாண்டாள் என ரகர, றகர வேறுபாடு பெற்றது.
·“மாடை” என்பது ஒரு காசு வகை. பொன்னால் ஆனது எனக்கருதலாம். பல்வேறு அரசர்களின் காலங்களில் பல்வேறு பெயர்களுடன் மாடைக்காசு புழக்கத்தில் இருந்தது. இங்கேயுள்ள கல்வெட்டில், “புசபலப்புதுமாடை”என்ர பெயருள்ள மாடைக்காசு குறிக்கப்பெறுகிறது.
குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள். மற்றவை கி.பி. 13-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள்.
மேலும் சில கல்வெட்டுப் படங்கள்
இதுகாறும் கூறியவற்றால், 800 ஆண்டுப்பழமையான குறுங்காலீசுவரர் கோயிலைப்பற்றியும் அதற்கும் பழமையான கோயம்பேடு ஊரைப்பற்றியும் வரலாற்றுப்பின்னணியில் பல செய்திகளை நாம் அறிய இக்கோயில் கல்வெட்டுகள் சான்றாக விளங்குவதைக் காண்கிறோம். வரலாறு சொல்லும் இக்கல்வெட்டுகளை, வருங்காலத்தில், திருப்பணிகள் செய்யும் பேரால் அழித்துவிடாமல், சிதைந்து போகாமல் பாதுகாப்புடன் பேணுவதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் அடிப்படைக் கருத்து. இதைக் கண்ணுறும் சென்னைவாழ் கோயம்பேட்டு அன்பர்கள் மேற்படி வரலாற்றுச் செய்திகளைச் சுருக்கமாக ”பிளெக்ஸ்” பதாகையொன்றில் அச்சிட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் அத்தகு அறச்செயலுக்காக அவர்களை வணங்குகிறேன்.