25,000+ யூத போராட்டக்காரர்கள் 20,000 எடோமென்கள் சில நூறு அடியாபென் வீரர்கள்
இழப்புகள்
20,000 படைவீரர்கள் கொல்லப்பட்டனர்
பத்தாயிரங்கள்
ஆயிரங்கள்
மொத்த மரணம்: 250,000[1] – 1.1[2] மில்லியன் யூத போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்;97,000[2]அடிமைகளாக்கப்பட்டனர்
முதலாம் யூத-உரோமைப் போர் (first Jewish–Roman War, கி.பி. 66 – 73) அல்லது பெரும் கிளர்ச்சி (The Great Revolt, எபிரேயம்: המרד הגדול, இலத்தீன்: Primum Iudæorum Romani Bellum) என அழைக்கப்படும் இது யூதர்களின்உரோமைப் பேரரசுக்கு எதிரான பாரம்பரிய மூன்று கிளர்ச்சிகளில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும், மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றன.
இந்தப் பெரும் கிளர்ச்சி கி.பி 66 இல், உரோம, யூத இனங்களுக்கிடையே உருவாகியது. வரி எதிர்ப்புப் போராட்டம், உரோமானியா குடிமக்கள் மீதான தாக்குதல் ஆகியன நெருக்கடியை அதிகமாக்கியது.[3] இதற்குப் பதிலடியாக, உரோமானியர்கள் யூதக் கோவிலைக் கொள்ளை அடித்தும், கிட்டத்தட்ட எருசேலத்தில் 6,000 யூதர்களைக் கொன்றதாலும் ஒரு முழு அளவிலான கிளர்ச்சியை உருவாக்கினர். ஆனால், மிக விரைவாக யூத கலகக்காரர்களால், யூத நிலத்தில் இருந்த உரோமானியக் காவல் படைகள் துரத்தியடிக்கப்பட்டன. இதில் உரோம அரசன் இரண்டாம் அக்ரிப்பாவும் உரோம அதிகாரிகளும் எருசேலத்தை விட்டு வெளியேறினர். இந்தக் கிளர்ச்சி, கட்டுப்பாட்டை மீறிச் செல்வது தெளிவாகிய பொழுது, கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கு திரும்புவதற்காக சிரியாவின் ஆளுநராக இருந்த செஸ்டியஸ் காலுஸ், சிரியப்படையுடனும் அதன் துணைப்படைகளுடனும் களத்திற்கு வந்தான். ஆரம்பத்தில் சிரியப் படைகள் முன்னேறி, ஜாப்பா நகரைக் கட்டுக்குள் கொண்டு வந்ததும், பதுங்கிருந்த யூத கலகக்காரர்கள், சிரியப் படைகளைப் பெத் ஹாரோன் களத்தில் வீழ்த்தினர். இதில் 6,000 உரோமானியர்கள் கொன்றழிக்கப்பட்டனர். மேலும், உரோமானியப் படையின் அக்யுலா என்ற சின்னமும் இடிக்கப்பட்டது. இது உரோமனியத் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிறகு, எருசலேமில் சிகாரி என்றழைக்கப்பட்ட யூத குழுக்கள் மெனாகேம் பெண் டெபஹோடா தலைமையில் நகரைக் கைப்பற்ற முயன்று தோல்வியுற்றது. தலைவன் கொல்லப்பட்டான். சிகாரி குழுக்கள் நகரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். எருசலேமின் அடிப்படைவாத உளவுத் தலைவர் சீமோன் பார் கியோராவும் புதிய யூத அரசால் நகரை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் பென் ஆனானஸ் நகரை மீண்டும் வலிமைப்படுத்தத் தொடங்கினான். யோசப் பென் மத்தியாகு கலிலேயா நகரத் தளபதியாகவும், எலேசர் பென் ஹனானியா எடோம் பகுதி தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர்.
கர்வமற்ற, மிக்க அனுபவமுள்ள உரோமப் பேரரசன் வெஸ்பாசியனுக்கு, யூத பகுதியிலுள்ள கலகக்காரர்களை அழிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவனுடைய மகன் தித்தூஸ் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டான். கி.பி. 67 இல் நான்கு படைப்பிரிவுகளோடு, அரசன் இரண்டாம் அகரிப்பாவுடைய படைகளும் உதவிக்கு வர, கி.பி. 67 இல் கலிலேயா பகுதிக்குள் வெஸ்பாசியன் ஊடுருவினான். முதன்மை கலகக்காரர்களின் பாதுகாப்பில் இருந்த வலிமையான எருசலேம் நகரை நேரடியாகத் தாகர்ப்பதைத் தவிர்த்த உரோமப் படைகள், கலகக்காரர்களின் கோட்டையை முற்றிலும் ஒழிக்கவும், தண்டிக்கவும், முனைப்பியக்கதையை சளைக்காமல் ஏவ ஆரம்பித்தனர். சில மாதங்களுக்குள்ளாகவே வெஸ்பாசியனும், தித்துவும் கலிலேயா பகுதியின் யூதர்களின் முக்கிய கோட்டையை கைப்பற்றினர். மேலும், முற்றுகையின் 47 ஆம் நாளில் யோசேப் பென் மத்தேயகுவன் கட்டுப்பாட்டில் இருந்த யோம்பாத் பகுதியும் கைப்பற்றப்பட்டது. கலிலேயாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிலாட் (ஒரு யூத குழு) மற்றும் அகதிகள் எருசலேமிற்கு வந்து அங்கு ஒரு அரசியல் இடர்பாட்டை ஏற்படுத்தினர். சிலாட் படையில் ஜான் கிச்காலா மற்றும் எலேசர் பென் சீமோன் கட்டுப்பாட்டில் இருந்த குழுவிற்கும், எருசலேமின் சதுசேயகுழுவிற்கும் இடையே ஒரு எதிர்ப்பு மோதல் ஏற்பட்டு பின் அது பெரும் வன்முறையாக வெடித்தது. சிலாட் யூத குழுக்களுக்கு ஆதரவாக சண்டையிட 'எடொமிட்' படையினர் நகருக்குள் நுழைந்தனர். அனானுஸ் பென் அனானுஸ் கொல்லப்பட்டான். அவனுடைய படையினருக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. சிலாட் குழுக்களுக்கு எதிராக சண்டையிட, சதுசேயர் தலைவர்கள் சீமோன் பார் கியோராவை எருசலேமிற்கு அழைத்தனர். சீமோன் படை 15,000 படைவீரர்களுக்கு தளபதியாக இருந்தான். சீமோன் படை வந்ததும் நகரின் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பார்-கியோரா குழுவினருக்கும், ஜான் மற்றும் எலேசர் படையினருக்குமிடையே கடும் சண்டை கி.பி 69 இல் ஏற்பட்டது.
உரோம் நகரில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், சண்டைகள் காரணமாக, இராணுவ செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டதால் வெஸ்பாசியன் மீண்டும் உரோம் நகருக்கு அழைக்கப்பட்டு கி.பி. 69 இல் அரசனாக நியமிக்கப்பட்டான். வெஸ்பாசியன் புறப்பட்டதை தொடர்ந்து, தித்து எருசலேமில் கலகக்காரர்களின் மையப்பகுதியை கைப்பற்ற முன்னேறிச் சென்றான். மூன்று வார காலத்திற்குள்ளாக எருசலேமின் முதல் இரண்டு சுவர்கள் தகர்க்கப்பட்டன. ஆனால், கடினமான மூன்றாவது சுவரை உரோமப் படைகள் தகர்பதை, கலகக்காரர்கள் முன்னின்று எதிர்த்து தடுத்தி நிறுத்தினர். ஏழு மாத கால மிக கொடுமையான முற்றுகை சண்டையில், நகரின் உணவு விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. கி.பி. 70 ஆம் ஆண்டில் கோடை காலத்தில் பலவீனமான யூத படைகளின் பாதுகாவலை உரோமப் படைகள் தகர்த்து வெற்றிக் கண்டது. எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு, தித்து உரோமை விட்டு வெளியேறி உரோம இராணுவத்தின் பத்தாவது படையினரோடு மீதமிருந்த யூத கோட்டைகளை தோற்கடிக்க கிளம்பினான். கி.பி. 73-74 இல் மசாடாவை முற்றுகையிட உரோம முனைப்பியக்கம் இறுதி செய்யப்பட்டது.
யூதர்களுக்கு மிகவும் முக்கியமான (ஏரோது கட்டிய) கோயிலின் மாதிரி
ஏரோது அரசன் உரோமானிய ஆட்சிக்குழுவில் யூதர்களின் அரசனாக பற்றுறுதி குத்தகையின் அடிப்படையில் எருசலேமை ஆட்சி செய்ய நியமிக்கப்பட்டான். கி.மு. 37 லிருந்து 4 வரை ஆட்சி செய்தான். தனது சிம்மாசனத்தை உரிமை கோரி வாதாட யார் வந்தாலும், அவர்களை கொன்றொழிப்பதையே தனது முனைப்பியக்கமாக கொண்டிருந்ததனால் ஏரோது கொடுங்கோல அரசன் என்று அறியப்பட்டான். மக்கபேய அரச வம்சத்தில் இருந்த தனது அனைத்து உறவுகளையும் தூக்கிலிட்டு கொன்றான். இதில் அவனது மனைவி, மக்கபேயனின் மகள் மற்றும் அவளுடைய குடும்பத்தினரும் அடங்குவர்.[4] அவனுக்கு விசுவாசமாக இருப்பதே உயர்ந்த பெருந்தன்மை குணம் என்று புது வரைவிலக்கணத்தையே உருவாகினான். முந்தைய அரச வம்சங்களோடு தொடர்பில்லாதவர்களை புதிய குருக்களாக நியமித்தான். ஏரோதின் மறைவிற்கு பிறகு, அவனுடைய அரியணையை பிடிக்க அவனுடைய உறவினர்கள் பலபேர் உரிமை கோரினர். அது ஏரோதியரின் நால்வரணி பிரிவிலிருந்து தொடங்கியது.
ஏரோதுதினுடைய மற்றறொரு கொடுங்கோல் மரபாக பொருளாதார இன்னல்கள் இருந்தது. அவனுடைய மிகப்பெரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் எந்த ஒரு ஆதரவின்றியும் இருந்தனர்.[5] ஏரோதுடைய மரணத்திற்கு பிறகு, மோசமான பொருளாதார சூழ்நிலையால் கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. சரியான தலைமை இல்லாதலால் வன்முறைகள் கட்டுகடங்காமல் சென்றது. ஏரோதுடைய தலைமையிடம் வெற்றிடமானதால், வன்முறை நிகழ்வதற்கு ஏற்றவகையில் மிகப் பலவீனமான இடமாக அந்த இடம் மாறியது. இதுவே 'பெரும் கிளர்ச்சி' என்றறியப்பட்ட யூத-உரோம போரின் முன்னெச்சரிக்கையாக கருதப்பட்டது.[5]
ஏரோதுவின் இறப்பின் பின், அவனுடைய அரசவை ஆட்களுடைய பதவி இறக்கப்பட்டு, யூத நிலத்தை நிர்வகிக்க உரோமனியார்கள், அதிகாரிகள் குழுவை நிறுவினர்.[6] ஆரம்பத்தில், யூத மக்களின் சட்டம் மற்றும் பழக்க வழக்கங்களை மதித்து நடந்த உரோம அதிகாரிகள், அவர்களுக்கு சனிக்கிழமைகளில் முறையாக விடுப்பு எடுத்து கொள்ளவும் (சமய சடங்குகளுக்காக), மற்ற பாகால் சமயச் சடங்குகளை செய்ய நிர்பந்திக்காமலும் உரிமை கொடுத்தனர். மேலும் மற்றப் பகுதிகளில் உருவம் பொறித்த நாணயங்கள் பழக்கத்தில் இருந்தாலும், யூதர்களுக்கென உருவமற்ற நாணயங்களும் வெளியிடப்பட்டன.[6] ஆனால், பின்னர் யூதர்களின் சட்டங்களையும் வழக்கங்களையும் அவமரியாதை செய்ய ஆரம்பித்த அதிகாரிகளுக்கு எதிராக, அவர்களை நீக்குமாறு சிரியாவினுடைய ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.[6]உரோம யூத நிலம் அப்போது சிரியாவினுடைய துணைப் பகுதியாக இருந்தது.[7] கெஸ்ஸியஸ் புளோரஸ், அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.[6]யூத கோவிலின் கருவூலத்தை கொள்ளையடித்த புளோரஸ், குழப்ப நிலையை உருவாக்கினான். அதனை எதிர்த்த யூதர்களை கொன்றழித்தான்.[6] புளோரஸ் அதிகாரியாக இருப்பதில் பிரச்சனையை எதிர்கொண்ட யூதர்கள், அப்போதைய சிரியாவின் ஆளுநர் செஸ்டியஸ் கால்ஸியிடம் ஆதரவை திரட்ட முயன்றனர்.[6] இதன் பிறகு ஏற்பட்ட கலவரங்களே, இந்த உரோம-யூத கிளர்ச்சியின் ஆரம்பமாக உருவெடுத்து, பின் பல புரட்சி குழுக்கள் உருவாக வழிகாட்டியது.[6] இந்த கலவரங்களை கட்டுப்படுத்த புளோரஸ் முயற்சித்தாலும், அது மேலும் தீவிரமடையவே வழிவகுத்து, புரட்சியாளர்களின் கிளர்ச்சியை மேலும் தூண்டியது.[6]
கிழக்கு நடுநிலைப்பகுதியில், உரோமனியர்களின் ஆதிக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, பகுதி-சுகந்திரமாக இருந்த ஏரோதிய வம்சம் கி.பி. 6 இல் அதிகாரப்பூர்வமாக உரோம பேரரசுடன் தன்னை இணைத்துக் கொண்டது. சார்பு முடியரசிலிருந்து, உரோம மாகாணமாக நிலைமாறிய நிகழ்வு பெரும் பதற்றத்தை கொண்டு வந்தது. மேலும் கலிலேயாவன் யூதாசின் தலைமையில் உருவான யூத குழு, குயுரினியஸ் பிரபுவால் ஏற்படுத்தப்பட்ட வரியை எதிர்த்து எழுந்தது. ஆனால், இந்த கிளர்ச்சி உடனடியாக உரோமனியர்களால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கி.பி 7 லிருந்து 26 வரை ஓரளவு அமைதியாக சென்றது, ஆனால், கி.பி.37 இற்குப் பிறகு, மாகாணத்தில் சச்சரவுகள் வெடிக்க ஆரம்பித்தது. அரசன் கலிகுலாவிற்கு இடர்பாட்டை உருவாக்கியது. பதட்டங்களுக்கான காரணங்கள் சிக்கலானது. கிரேக்க கலாச்சார பரவல், உரோம சட்டங்கள், பேரரசில் யூதர்களின் உரிமை போன்றவை இதில் அடங்கும். கலிகுலா, எகிப்தின் நிர்வாக அலுவலர் ஆலுஸ் அவிளியுஸ் பிலாகஸ் மீது நம்பிக்கை வைக்கவில்லை. பிலாகஸ் உரோம அரசன் திபெரியளுக்கு விசுவாசமாக இருந்து, கலிகுலாவின் தாயாருக்கு எதிராக சதி செய்த அவன் மேலும் எகிப்திய பிரிவினைவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவன்.[8] கி.பி 38 இல் கலிகுலா அகரிப்பாவை எந்த ஒரு முன்னறிவுப்புமின்றி அலெக்ஸாண்றியா நகருக்கு அனுப்பி பிளாகஸனை நோட்டமிட்டான்.[9] இந்த வருகையின் போது கிரேக்கர்கள் ஆக்ரிப்பாவை யூதர்களுடைய மன்னன் என நினைத்து இகழ்ச்சி செய்தனர்.[10] அக்ரிப்பா, கிரேக்க மக்களுக்கும் கலிகுலாவிற்கும் இடையே சமாதானம் செய்விக்க முயன்று அரசனுடைய சிலையை யூதர்களின் தொழுகைக் கூடங்களில் வைக்க நினைத்தான்.[11]
ஆனால், இதன் விளைவாக நகரத்தில் மிகப்பெரும் மதக் கலவரம் வெடித்தது.[12] இதன் எதிர்வினையாக கலிகுலா பிலாகசை பதவியிலிருந்து இறக்கி, தூக்கிலிட்டான்.[13] கலிலேயா மற்றும் பார்த்தியா பகுதியின் நால்வர் ஆட்சியாளர்களில் ஒருவனான ஏரோது அந்திப்பாஸ், உரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய திட்டமிட்டான் என அக்ரிப்பா குற்றம் சாட்டினான். கலிகுலா ஹெராட் ஆண்டிபாசை நாடு கடத்தினான். ஆக்ரிப்பாவுக்கு அந்த நிலப்பகுதி பரிசளிக்கப்பட்டது.[14]
கி.பி 40 இல், அலெக்சாந்திரியாவில் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் இடையே மீண்டும் வன்முறை தலைதூக்கியது.[15] யூதர்கள் மன்னனை மதிப்பதில்லை என குற்றம் சாட்டப்பட்டனர்.[15] ஜாம்னியா நகரிலும் குழப்ப நிலை ஏற்பட்டது.[16] களிமன் பலிபீடத்தை அமைத்ததால் யூதர்கள் ஆத்திரம் அடைந்து அதை அழித்தனர்.[16] இதற்கு பதிலடியாக கலிகுலா யூத யூதர்களின் கோவிலில், தன்னுடைய சிலையை வைக்க கட்டளையிட்டான்.[17] ஆனால், இந்த கட்டளை நிறைவேற்றப்பட்டால் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வருமென பயந்த சிரியாவின் ஆளுநர் பப்ளியஸ் பெட்ரோனியஸ், ஒரு வருடம் வரை அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்தான்.[18] இறுதியில் அக்ரிப்பா கலிகுலாவை சமாதானம் செய்து அந்த உத்தரவை திரும்ப பெறச் செய்தான்.[15]
கி.பி 46 இல், யூத நிலப்பகுதியில், யூதர்களால் ஆட்சி எதிர்ப்பு வெடித்தது. இது சகோதரர்கள் ஜாகோப் மற்றும் சிமோனால் மேலும் தூண்டிவிடப்பட்டு, கி.பி 48 வரை நீடித்தது. இந்தக் கிளர்ச்சி, கலிலேயா நகரில் மையப்படுத்தி, பல இடங்களில் ஏற்பட்டது. கி.பி 48 இல் இரு சகோதரர்களும் உரோம அதிகாரிகளால் தூக்கிலிடப்பட்டனர்.
ஜொசிஃபஸ் கூற்றுப்படி, கோபமூட்டும் வகையில், சில கிரேக்க வணிகர்கள் யூதர்களுடைய உள்ளூர் வழிபாட்டு கூடத்தின் முன்னால் பறவையை பலியிட்டதே வன்முறைக்கு ஆரம்பமாக இருந்தது.[19] உரோம காவற்படைகள் இதில் தலையிடவில்லை, மேலும் கிரேக்க சாரார்களுக்கும், யூதர்களுக்குமான மத பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் எதிர்வினையாக யூத கோவிலின் வரைவாளர் எலிசர் பென் ஹனானியா வழிபாட்டை நிறுத்தி, உரோம அரசர்களுக்காக கோவிலில் ஒரு பலியீட்டை நடத்தினான். வரிவிதிப்பிற்கு எதிரான போராட்டங்களும் இதனுடன் சேர்ந்து அங்கிருந்த உரோம குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எருசலேம் முழுவதும் ஒருவித தேசத்துரோக மனநிலை உருவானது. உரோம ஆளுநர் கெஸ்ஸியஸ் புளோரஸ் ஆணையின் கீழ் உரோம படைகள் யூதர்களின் கோவிலை தகர்த்து, கோவிலின் கருவூலத்திலிருந்து பதினேழு தாலந்துகள் (தாலந்து என்பது அன்றைய கால எடைஅளவை குறிக்கும் அலகு) செல்வங்கள் எடுக்கப்பட்டு, இது அரசனுடைய செல்வம் என உரிமை கோரப்பட்டது. இதன் விளைவாக, நகரம் ஒருவித பதட்டத்திற்கு உள்ளானது மேலும் சில யூதர்கள், புளோரஸை பரிகசிக்கும் விதமாக, ஏழை புளோரஸிடம் பணம் இல்லை ஆகவே பணம் கொடுத்து உதவுங்கள் என்று கூடைகளில் வசூலிக்கத்தொடங்கினர்.[20] இதனால் ஆத்திரமடைந்த புளோரஸ், மறுநாள் எருசலேமிற்கு படைவீரர்களை அனுப்பி, நகரின் குழுத்தலைவர்களை கைது செய்து கசையாலடித்து சிலுவையில் அறைந்தான். இதில் பல உரோமைக் குடியுரிமை கொண்ட மக்களும் கூட அடங்குவர்.[21] விரைவிலேயே சித்தரவதைக்கு உள்ளான யூத நில தேசியவாதிகள் ஆயுதங்கள் தாங்கி, எருசலேமிலிருந்த உரோம படைவீரர்களை எதிர்த்து, அவர்களை பின்னோக்க வைத்தனர். நிலைமையின் தீவிரத்தை கண்டு பயந்த இரண்டாம் அக்ரிப்பா மற்றும் அவனுடைய சகோதரி பெரிநிஸ் கலிலேயா நகருக்குத் தப்பினர். யூத நிலப்பகுதியில் இருந்த உரோம குடிமக்கள், அதிகாரிகள் என எல்லோரும் யூத நில போராளிகளால் உரோம தடயமே இல்லாதவாறு சுத்தமாக விரட்டப்பட்டனர். நான்காம் நூற்றாண்டு தேவாலய பாதிரிமார்கள் எசுபியஸ் மற்றும் எபிஃபானியஸ் கூற்றுப்படி எருசலேமிலிருந்த கிறுத்துவர்கள் போர் தொடங்கும் முன்னரே பெல்லாவிற்கு இடம் பெயர்ந்தனர்.[22]
யூத நிலப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தின் விளைவாக, சிரியாவின் ஆளுநர் செஸ்டியஸ் கால்லுஸ் ஒரு படையைத் திரட்டினான். அப்படையானது, சிரியாவின் பன்னிரென்டாம் புல்மினட்டா படை, மூன்றாம் கால்லிகா படை, நான்காம் சய்திகா படை, ஆறாம் பெர்ராடா படை, மற்றும் துணைப்படைகள் என 30,000 போர் வீரர்களை உள்ளடக்கியது. இது சிரியாவை சுற்றியிருந்த மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை திருப்பி கொண்டுவர முனைந்தது. இந்த சிரியப் படை நார்பாட்டாவையும், சிப்போரியஸையும் கைப்பற்றியது. அவர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்தனர். சிப்போரியஸில் தப்பிய யூத கிளர்ச்சியாளர்கள் அட்ஸ்மோன் மலையில் அடைக்கலமாயினர். ஆனாலும் சிறிது காலத்திலேயே அவர்களும் வீழ்த்தப்பட்டனர். கால்லுஸ் பிறகு மேற்கு கலிலேயா பகுதியை அடைந்து, அங்கிருந்து செசாரியா மற்றும் யாப்பாவை நோக்கி முன்னேறினான். அங்கே கிட்டதட்ட 8,400 மக்களைக் கொன்றழித்தான். இராணுவ முனைப்பியக்கத்தை முன்னோக்கி செலுத்திய கால்லுஸ் லைட்டா மற்றும் அஃபெக் பகுதிகளை கைப்பற்றினான். ஜெவா பகுதியில் யூத நில கிளர்ச்சியாளர்களுடனான சண்டையில் 500 உரோம வீரர்கள் பலியாயினர். சீமோன் பார் கியோரா தலைமையில் இருந்த யூதக் குழு அடியாபென் பகுதி கூட்டாளிகள் உதவியோடு வலிமை பெற்றிருந்தது.
சிரியப் படைகள் பின்னர் எருசலேமை சுற்றி வளைத்தது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால், முதலில் முன்னேறிய படை பின்னர் கடற்கரை பகுதி நோக்கி பின்வாங்கியது. பெத் கரோன் யுத்தகளத்தில், பதுங்கிப் பாய்ந்த யூத கிளர்ச்சியாளர்கள் சிரியா படைகளை வெற்றி கொண்டனர். இது உரோம தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. பெத் கரோன் களத்தில் உரோமர்கள் தோற்றது. உரோம பேரரசு வரலாற்றிலேயே மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டது. கிட்டதட்ட 6,000 உரோம படை வீரர்கள் மாண்டனர் பலர் காயமுற்றனர். பன்னிரென்டாம் புல்மினட்டா தனது அகுலா சின்னத்தை இழந்தது. கால்லூஸ் அவனது படைகளை கைவிட்டுவிட்டு சிரியாவிற்கு ஓடினான்.
போர் இடம் பெற்ற இடத்தில் தற்போது உள்ள "எறி கருவி"யின் மாதிரி.
பேரரசன் நீரோ, கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வெஸ்பாசியனை கால்லூசுக்குப் பதிலாக நியமித்தான். கி.பி 67 இல் வெஸ்பாசியன் மற்ற படைகளான பிரடென்சிஸ் பத்தாம் பிரிவு, மெஸடோனியா ஐந்தாம் பிரிவு, ஆகியவற்றோடு பிடோலிமாய்ஸ் நிலப்பகுதிக்கு சென்றடைந்தான். அலெக்சாந்திரியாவிலிருந்து திரும்பிய வெஸ்பாசியனின் மகன் தித்தூஸ் அவனுடைய படைகளோடு அங்கு சேர்ந்துகொண்டான். இது போக மற்ற சில துணைப்படைகள், மன்னன் இரண்டாம் அக்ரிப்பாவின் படைகளும் சேர்ந்தன. 60,000 போர் வீரர்களுடன் கலிலேயா பகுதியைக் கைப்பற்றும் செயல்பாட்டை தொடங்கினான்.[23] பல நகரங்கள் சண்டையிடாமலேயே கைப்பற்றப்பட்டன. ஆனால் சில இடங்களில் படை ஆதிக்கம் செலுத்தவேண்டியிருந்தது. இவைகளைப்பற்றி ஜொசிஃபெஸ் தெளிவான விவரங்களை தொகுத்துள்ளார். கி.பி 68 இல் வடக்கு பகுதியில் யூதர்களின் எதிர்ப்பு ஒடுக்கப்பட்டது. வெஸ்பாசியன் செசாரியா கடற்கரையோரத்தை தலைமையிடமாக உருவாக்கி, நாட்டின் கடற்கரைப் பகுதியில் சீரான முன்னேற்றத்தின் மூலம் எதிரிகளை அழித்து வந்தான். ஆனால் எருசலேமில் நேரடியாக கிளர்ச்சியாளர்களை அவன் சந்திக்கவில்லை. ஜொசிஃபெஸின் கேள்விக்குட்டுத்த வேண்டிய கூற்றுப்படி, உரோமானிய படையெடுப்பில் 100,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அடிமைகளாக்கப்பட்டனர்.[24][25][26]
68 இல் புரட்சியாளர்கள் வெளியிட்ட நாணயம், குறிப்பு பழைய எபிரேய அரிச்சுவடி.[27]முன்பக்கம்: "சேக்கல், இசுரேல். வருடம் 3." பின்பக்கம்: "பரிசுத்த எருசலேம்"
கலிலேயா நகரிலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள் கால்லூஸ் படையால் அழிக்கப்பட்டிருந்த யோப்பா நகரை மறுகட்டமைப்பு செய்தனர். உரோமர்களிடமிருந்து பாதுகாத்துகொள்ள நகரை சுற்றி மதில்களை எழுப்பினர். தொடர்ச்சியாக அலெக்சாந்திரியாவிலிருந்து உரோம் நகருக்கு வழங்கப்பட்டுவந்த தானியங்களை தடுத்தனர்.[28]
“யூதப்போர்” என்ற புத்தகத்தில் ஜொசிஃபெஸ் பின்வருமாறு எழுதுகிறார்:
அவர்கள் மேலும் மிகப்பெரும் கடற்பறி கப்பல்களை கட்டினர், சிரியா, போனிசியா மற்றும் எகிப்து கடற்பகுதிகளில் கடல் வழிப்பறியில் ஈடுபட்டு, அந்தக் கடல்பகுதியில் அனைவரும் செல்ல இயலாத பாதையாக்கினர்.[29]
வடக்கு பகுதியில் தோல்வியுற்றிருந்த ஜான் கிஸ்காலா மற்றும் எலியேசர் பென் சீமோன் ஒரு பெரும் படையுடன் கலிலேயாவிலிருந்து எருசலேம் நோக்கித் தப்பினர். உரோமானிய படையால் தாக்கப்பட்டிருந்த பல குழுக்கள் இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்தனர். எருசலேம் கலவரமான பதற்ற நிலைக்கு இறங்கியது. நகரின் பெரும்பகுதிகள் சில அடிப்படைவாதிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. மோசமான உள்நாட்டுப்போர் மூண்டது. சிலாட் யூதப் படைகள், சிகாரி யூத படைகளில் சரணடைய மறுத்தவர்களை தூக்கிலிட்டது. கி.பி 68 இல், உள்நாட்டு சண்டையால் தெற்கு பகுதி தலைமையே இல்லாமல் நகரம் சீரழிந்தது.
புரட்சிக் காலத்தில் பெருந்தெருவின் அழிவைக் குறிப்பிடும் மைல் கல்
யூத நிலத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளையில், உரோமில் மிகப்பெரும் நிகழ்வுகள் நடந்தன. கி.பி 68 இன் மத்தியில், அரசன் நீரோவின் ஒழுங்கற்ற நடத்ததைகள் அதிகமாகி கொண்டு சென்றதில், அவனுடைய பதவியை நீடிப்பதற்கான ஆதரவை இழக்க நேரிட்டது. உரோம ஆட்சி மன்றம், பாதுகாப்பு பிரிவு மற்றும் பல இராணுவ படைத்தலைவர்கள் சேர்ந்து நீரோவை நீக்க சதி செய்தனர். ஆட்சிமன்றம் நீரோவை மக்களின் எதிரி என்று பிரகடனம் செய்தனர். நீரோ உரோமை விட்டு தப்பியோடி தற்கொலை செய்துகொண்டான். அதன் பிறகு, முன்னாள் ஸ்பெயின் ஆளுநராக இருந்த கல்பா புதிய அரசனாக நியமிக்கப்பட்டான். ஆனால் சில மாதங்களிலேயே கல்பா கொல்லப்பட்டான், அது அங்கு உள்நாட்டுப்போரை தூண்டியது. இந்த நான்கு பேரரசர்களின் ஆண்டுஎன்றறியப்பட்டது. கி.பி 69 இல் வெஸ்பாசியன் அரசனாக பதவியேற்க அழைக்கப்பட்டான். இன்னும் அதிக ஆதரவை பெற, வெஸ்பாசியன் உரோமிற்கு திரும்பினான். யூத நிலத்தில் நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டுவர அவனுடைய மகன் தித்தூஸை அங்கு நிறுத்தினான். ஏற்கனவே, பதவியிலிருந்து கீழிறங்கிய உசர்பெரிடமிருந்து மன்னனாக முடிசூட வெஸ்பாசியன் உரோம் சென்றான்.
எருசலேமில் தன்னுடைய படைகளின் இழப்பிற்குப் பயந்த வெஸ்பாசியன் நேரடியாக எருசலேமை முற்றுகையிடுவதை எதிர்த்து வந்தான். ஆனால் வெஸ்பாசியன் திரும்பிய பிறகு, தித்தூஸ் உரோம படைகளுடன் கலகம் நடைபெற்ற மாகாணத்தின் தலைமையிடத்திற்கு முன்னேறினான். மிக மோசமான ஒடுக்குதலுக்கு ஆளாகியிருந்த யூத அகதிகள் எருசலேமில் அடைக்கலம் தேடினர். யூத கிளர்ச்சியாளர்கள் உரோம படைகளுடனான நேரடி சண்டையை தவிர்த்து வந்தனர். உரோம படைய தோற்கடிப்பதைவிட பெரும்பாலான குழுக்கள் அவரவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் நிலம் இருக்க வேண்டும் என்பதையே முதன்மையாக கருதினர். உள்நாட்டுப்போரால் பலவீனமாக நகரம் இருந்தாலும், சிலாட் யூதப்படைகள் கணிசமான படைகளுடன் உரோம ஆக்கிரமிப்பை எதிர்த்துக்கொண்டிருந்தனர்.
பண்டைய உரோம சிறைச்சலையில் உள்ள கல் கொல்லப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது.
யூத மாகாணத்தின் தலைநகர் எருசலேமின் முற்றுகை ஒரு சிக்கலான இழுபறி நிலையாக மாறியது. எருசலேம் நகரின் பாதுகாப்பை உடைக்க முடியாத உரோம படைகள் நகரின் வெளியே நிரந்தரமாக ஒரு முகாமை நிறுவியது. எருசலேம் நகரை சுற்றியிருந்த மதில் சுவரின் உயரத்திற்கு நிகராக உரோம படையும் ஒரு சுவற்றை எழுப்பி, அதைச்சுற்றி அகழியையும் தோண்டினர். நகரை விட்டு தப்பியோட நினைப்பவர்கள் அகழியில் மாட்டிக்கொள்ளும்போது அவர்கள் பிடிக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு, பின்னர் சுவரின் உச்சியில் எருசலேம் நகரைநோக்கி நிறுத்தப்பட்டனர். சிலாட் யூத படை தலைவர்களான ஜான் கிஸ்சலா மற்றும் சிமோன் பார் கியோரா பகைமையை நிறுத்தி, போர்ப்படைகளை ஒன்றிணைத்து நகரை பாதுகாக்க முற்பட்டனர். அதே சமயம் உரோம படைகளும் முற்றுகைக்காக பாதுகாப்பு அரண்களை அமைப்பதை தொடங்கியது. யாரெல்லாம் நகரைவிட்டு வெளியேற முற்பட்டார்களோ அவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு நாளைக்கு கிட்டதட்ட 5,000 பேர் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.[30]
நகருக்குள் நடந்த உள் சண்டையின் போது, சிலாட் பிரிவினர் கையிருப்பிலிருந்த உணவுப்பொருட்களை வேன்டுமென்றே எரித்து நாசமாக்கினர், இதனால் போராளிகள் பேச்சுவார்த்தையின் பக்கம் முனையாமல் முற்றுகைக்கு எதிராக மேலும் சண்டையிடுவார்கள் என நினைத்தனர். இதனால் நகரில் வசித்த குடிமக்களும், போர்வீரர்களும் உணவின்றி பட்டினியால் மடிந்தனர். அன்றைய வரலாற்று ஆசிரியர் டாசிடஸ் குறிப்பிடும் போது, எருசலேமில் முற்றுகையிடப்பட்டிருந்தவர்கள் வெறும் 6,000 மக்கள்தான் இருப்பார்கள், எனெனில் அனேக ஆண்களும், பெண்களும் ஆயுதம் ஏந்தி போரில் இருந்தனர். நாட்டைவிட்டு வெளியேறி வாழ்வதைவிட சாவதேமேல் என போரிட்டனர்.[31] ஆனால் ஜொசிஃபெஸ் கிட்டதட்ட பத்துலட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டிருந்தனர் என கூறுகின்றார்.
எருசலேம் கருவூலத்தை கைப்பற்றிய உரோமப் படை (தித்தூஸ் வளைவு விபரங்களில் இருந்து).
கிட்டதட்ட ஏழுமாத கால முற்றுகையில், வெஸ்பாசியனின் மகன் தித்தூஸ் பிளாவியஸ் நகரில் பல மதில்களை அழித்திருந்தான். கி.பி 70 இல் கோடையில் எருசலேமின் மதில்சுவர் தகர்க்கப்பட்டது, நகரம் முழுவதும் எரித்தும் சூறையாடப்பட்டும் நாசமாக்கப்பட்டது. உரோம படைகள் நகரின் பலவீனமான மதில்சுவராகிய மூன்றாவது சுவரை தாக்க ஆரம்பித்தனர். அந்தசுவர் முற்றுகைக்கு சில காலங்கள் முன்னர்தான் கட்டப்பட்டிருந்தது. ஆகையால் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்தது. மே மாத இறுதியில் நகரின் முக்கியமான இரண்டாம் மதில் சுவரும் நொறுக்கப்பட்டது. உரோம படைகளின் இறுதி தாக்குதலின் போது, ஜான் கிஸ்காலா தலைமையிலான சிலாட் படைகள் கோவிலை தங்கள் வசம் வைத்திருந்தன. மேல்நகரம் சீமோன் பார் கியோரா தலைமையிலான சிகாரி படைகள் வசம் இருந்தது. கடைசிஅரணாக இரண்டாம் கோவில் திசா பாவ் விழாவின் போது அழிக்கப்பட்டது (29 அல்லது 30 சூலை 70).
எருசலேம் நகர அரண்களான மூன்று முக்கிய மதில்களும், கோவில்களும், கோட்டைகளும் அழிக்கப்பட்டன. நகரில் உயிருடன் இருந்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். ஜான் கிஸ்காஸா இரண்டாம் அக்ரிப்பாவினுடைய ஜோட்டபடா படை அரணில் சரணடைந்தான், ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டான். இரண்டாம் கோவிலின் கருவூலத்தை கைப்பற்றிய உரோம படையின் வெற்றியை பாறைசாற்றும் விதமாக தித்தூஸ் வளைவு இன்றும் உரோம் நகரில் உள்ளது.[32] எருசலேமின் வீழ்ச்சிக்குபிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக புரட்சிகள் கி.பி 73 வரை யூதப்பகுதியில் நடந்துகொண்டிருந்தது.
கி.பி 71 இல் தித்தூஸ் உரோமுக்கு பயணமானான். புதிதாக இராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்ட லுசிலியஸ் பாஸ்ஸஸ், யூத நிலத்தில் மிச்ச செயல்பாடுகளையும் முடிக்க ஆணையிடப்பட்டான். எஞ்சியிருந்த சில பாதுகாப்பு கோட்டைகளையும் கைப்பற்ற பத்தாம் பிரெடன்சிஸ் படையை பயன்படுத்தி பாஸ்ஸஸ் கிளம்பினான். ஹெரோடியம் பகுதியை கைப்பற்றிய பாஸ்ஸஸ் ஜோர்டானை கடந்து சாக்கடல்பகுதியான மசாயிரஸ் கோட்டையை கைப்பற்ற முனைந்தான். ஆனால் உடல்நலக்குறைவால் பாதியிலேயே பாஸ்ஸஸ் இறந்தான். லூசியஸ் பிளாவியஸ் சில்வா அவனுக்கு பதிலாக வந்தபின் யூதப்பகுதியின் கடைசிகோட்டை மசாடாவை அடைந்தான். கி.பி 72 இல் பத்தாம் படையணி, துணைப்படை, யூத கைதிகள் என அனைவரையும் பயன்படுத்தி 10,000 படை வீரர்களை திரட்டினான்.
எதிரிகள் சரணடையுமாறு அவன் தெரிவித்த கட்டளை நிராகரிக்கப்பட்டதால், சில்வா கோட்டையை சுற்றிவளைத்தான். ஜொஸஃபாசுடைய கூற்றுப்படி, உரோம படைகள் கோட்டையை தகர்த்து உள்நுழைந்தபோது 967 பாதுகாப்பு வீரர்களில் 960 வீரர்கள் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருந்தனர்.
பண்டைய உரோம நாணயம். "யூதேயா பிடிக்கப்பட்டது" என்பதை குறிக்கும் நாணயம், கிளர்ச்சிகள் எதிர்காலத்தில் வீணாகும் என்பதைக் காட்ட வெளியிடப்பட்டது. அழும் பெண் யூதேயாவை பிரதிபலிக்கிறாள்.
தித்துவை, கிட்டத்தட்ட 79. பின் பக்கத்தில், யூதேயாப் போர்களில் உரோம வெற்றியைக் கொண்டாடும் வகையில், வெற்றி ஆயுதங்களின் முன் யூதர் மண்டியிட்டுள்ளது குறிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய யொஹானன் பென் ஜக்கி தொழுகைக் கூடம்
யூத கிளர்ச்சியாளர்கள் தோல்வியுற்ற பிறகு, யூதக் கலகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அங்கும் இங்குமாக சிதறிச்சென்றனர், பலர் அடிமைகளாக்கப்பட்டனர். ஜொஸிஃபாஸ் மொத்தம் 1,100,000 மக்கள் முற்றுகையில் கொல்லப்பட்டதாக கூறுகின்றார். இதில் குறிப்பிடத்தகுந்த அளவு யூதர்களாலேயே கொல்லப்பட்டும், பட்டினியால் இறந்ததும் ஆகும். ஒரு மரண தொற்றுநோய் போல நடந்த அழிவும், அதன்பிறகான பட்டினியும் திடீரென அவர்களை தாக்கி அழித்தது போன்று இருந்தது இந்த நிகழ்வு.[33] கிட்டதட்ட 97,000 பேர் பிடிபட்டு அடிமைகளாக்கப்பட்டனர் மற்றும் பலர் மத்திய நிலப்பகுதிக்கு தப்பியோடினர்.[33]
தித்தூஸ் இந்த மிகப்பெரும் வெற்றியை ஏற்க விரும்பாமல் மறுத்தான்.[34] அவர்களுடைய கடவுளாலேயே கைவிடப்பட்ட அந்த மக்களை வெற்றி கொண்டதில் எந்த ஒரு சிறப்பும் இல்லை எனக் கூறினான்.
வெஸ்பாசியன் யூதப்பகுதியை விட்டு கிளம்பும்முன், ஒரு யூத பள்ளிக்கூடத்தை நிறுவி தோராவை கற்றுத்தரும் ஆசிரியரான யொஹானன் பென் ஜக்கி வெஸ்பாசியனிடம் அனுமதி வாங்கியிருந்தான். ஜக்கி அவரது மாணவர்களாலேயே சவப்பெட்டியில் வைத்து எருசலேமைவிட்டு கடத்தப்பட்டார். பின்னாளில் அந்த பள்ளி தல்மூத் கல்வியை கற்றுத்தரும் இடமாக மாறியது.
“பெரும் கிளர்ச்சி” யூத-உரோம போரின் ஆரம்பமாக கருதப்பட்டது. அது கிழக்கு மத்தியதரைப்பகுதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உரோம அரசு மற்றும் யூதர்களின் முன்னேற்றத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தியது. பெரும்கிளர்ச்சி முடிவுற்ற பிறகும், பதற்றம் இருந்து கொண்டிருந்தது. கிழக்கிலிருந்து பார்த்தய அரசால் அச்சுறுத்தல், கி.பி 117 இல் மத்தியதரைப்பகுதியில் யூத சமூகத்திடையே கிளர்ச்சி, அதனை கட்டுப்படுத்த உரோம படைகளுக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது. கியாட் போரின் கடைசிப்பகுதி மட்டுமே யூத நிலத்தில் நடந்திருந்தாலும் அது உரோம - யூத போரின் அங்கமாகவே கருதப்பட்டது. கியாட் போரினால் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பால் சைப்ரஸ், சைரெனைகா பகுதியில் மக்கள் தொகை குறைந்தது. யூத-உரோம போரின் கடைசிக் குழப்பம் கி.பி 132 இல் சிமோன் பார் கோக்பா தலைமையில் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கோக்பா வெற்றிபெற்று ஒரு சிறுநகரை நிறுவினாலும், பின்னர் உரோமபடை கோக்பாவை வீழ்த்தியது. இதன் முடிவு யூதஇனப்படுகொலை, யூத சமயத் தடை, யூத பகுதி பாலஸ்தினியா என பெயர்மாற்றம். ஹாட்ரியன் மறைவிற்கு பிறகு, யூதர்களுக்கு சிறிது விடுதலை கிடைத்தாலும், அவனது முனைப்பியக்கத்தில் தப்பித்தவர்கள் சிலரே. கலிலேயா பகுதியில் சிறு யூத சமூகம், மற்றும் மத்திய தரைப்பகுதியில் சில சமூகம் மட்டுமே இருந்தன. யூதப் போதகர்களின் யூதம் கலிலேயா பகுதியில் மறுபிரவேசம் எடுத்து மறுவாழ்வு பெற்றாலும், பாபிலோனிய யூதம் முக்கியமாக வளர்ந்தது.
யூதப் போதகர்களின் குறிப்பணிகள் போதகர் காமலியேலியால் உருவாக்கப்பட்டது. பரிசேயர்கோட்பாடுகளுடனான போதகர்களின் தொடர்புகள் விவாதத்திற்குட்பட்டது. ஆனால், கி.பி 70 இற்கு பிறகு, யூத சமூகத்தில் உயர் குரு நிலை போதகர்களால் மாற்றப்பட்டது.[2]
கி.பி 70 ஆம் ஆண்டு, இரண்டாம் கோவில் இடிக்கப்பட்டது யூத வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தொழுகைக் கூடம்யூதர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமானது.[2] கோவிலுக்கு பதிலாக தொழுகைக் கூடம் யூதர்களின் சந்திப்பு இடமாகியது. தலைமைக் குருக்களுக்கு மாற்றாக யூதப் போதகர்கள் யூத சமூகத்தின் தலைவர்களானார்கள். கி.பி 70 இற்கு பிறகு யூதப் போதகர்களின் கோட்பாடு அதிக ஆதிக்கம் செலுத்தியதால் அது யூதப் போதகர்களுடைய காலம் என்றழைக்கப்பட்டது.[2] பெரும் கிளர்ச்சிக்கு பிறகு யூத தலைமை வெற்றிடத்தை யூதப் போதகர்கள் நிரப்பினர். மேலும் அவர்களுடைய இலக்கியம் மற்றும் பயிற்றுவிப்பின் மூலமாக ஒரு புதிய யூத கோட்பாடுகளை உருவாக்கினர்.[35]
இந்த கிளர்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் ஜொசிஃபஸ் மூலமாக கிடைக்கப்பெறுகின்றன. ஜொசிஃபஸ் கலிலேயா பகுதியின் இராணுவ தளபதியாக இருந்தவர். பின்னர் யோத்ஃபாட் முற்றுகைக்குப் பிறகு உரோம படையில் பிடிபட்டார். தித்தூஸின் சார்பாக யூதர்களிடத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியவர். ஜொசிஃபசும் தித்துசும் நெருங்கிய நண்பர்களாயிருந்தினர். பின்னாளில் உரோம குடியுரிமை, உரோம அரசால் ஓய்வூதியமும் ஜொசிஃபசுக்கு கொடுக்கப்பட்டது. எருசலேமின் வீழ்ச்சிக்கு பிறகு ஜொசிஃபஸ் தாய்நாட்டிற்கு திரும்பவேயில்லை, வெஸ்பாசியன் மற்றும் தித்தூசின் ஆதரவோடு உரோம் நகரிலேயே ஒரு வரலாற்று ஆசிரியராக வாழ்ந்தார்.
↑Rivka Shpak Lissak, The Roman Policy: Elimination of the Jewish National-Cultural Entity and the Jewish Majority in the Land of Israel. Retrieved 15 Jan 2011.
↑ Jump up to:2.02.12.22.32.4Cohen, Shaye. "Roman Domination: The Jewish Revolt and the Destruction of the Second Temple" in Ancient Israel: From Abraham to the Roman Destruction of the Temple, ed. Hershel Shanks (Prentice Hall, Biblical Archeology Society), 297.
↑Cohen, Shaye. "Roman Domination: The Jewish Revolt and the Destruction of the Second Temple" in Ancient Israel: From Abraham to the Roman Destruction of the Temple, ed. Hershel Shanks (Prentice Hall, Biblical Archeology Society), 269.
↑ Jump up to:5.05.1Cohen, Shaye. "Roman Domination: The Jewish Revolt and the Destruction of the Second Temple" in Ancient Israel: From Abraham to the Roman Destruction of the Temple, ed. Hershel Shanks (Prentice Hall, Biblical Archeology Society), 273.
↑ Jump up to:6.06.16.26.36.46.56.66.7Cohen, Shaye. "Roman Domination: The Jewish Revolt and the Destruction of the Second Temple" in Ancient Israel: From Abraham to the Roman Destruction of the Temple, ed. Hershel Shanks (Prentice Hall, Biblical Archeology Society), 286.
↑H.H. Ben-Sasson, A History of the Jewish Peoples, page 247–248: "Consequently, the province of Judea may be regarded as a satellite of Syria, though, in view of the measure of independence left to its governor in domestic affairs, it would be wrong to say that in the Julio-Claudian era Judea was legally part of the province of Syria."
↑Eusebius, Church History 3, 5, 3; Epiphanius, Panarion 29,7,7-8; 30, 2, 7; On Weights and Measures 15. See: Craig Koester, "The Origin and Significance of the Flight to Pella Tradition", Catholic Biblical Quarterly 51 (1989), p. 90-106; P. H. R. van Houwelingen, "Fleeing forward: The departure of Christians from Jerusalem to Pella", Westminster Theological Journal 65 (2003); Jonathan Bourgel, "The Jewish Christians’ Move from Jerusalem as a pragmatic choice", in: Dan Jaffe (ed), Studies in Rabbinic Judaism and Early Christianity, (Leyden: Brill, 2010), p. 107-138.
↑Rocca S. 2008. The Forts of Judea 168 BC – AD 73. Osprey, Wellingborough, pp. 37–39, 47–48.
↑Max Dimont (June 2004) [1962 for first ed.]. "The Sealed Coffin". Jews, God, and History (2nd ). New York, New York 10014, USA: Signet Classic. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-451-62866-7. பார்த்த நாள்: 29 September 2009. "To make sure that no food or water supply would reach the city from the outside, Titus completely sealed off Jerusalem from the rest of the world with a wall of earth as high as the stone wall around Jerusalem itself. Anyone not a Roman soldier caught anywhere in this vast dry moat was crucified on the top of the earthen wall in sight of the Jews of the city. It was not uncommon for as many as five hundred people a day to be so executed. The air was redolent with the stench of rotting flesh and rent by the cries and agony of the crucified. But the Jews held out for still another year, the fourth year of the war, to the discomfiture of Titus."
↑Cohen, Shaye. "Roman Domination: The Jewish Revolt and the Destruction of the Second Temple" in Ancient Israel: From Abraham to the Roman Destruction of the Temple, ed. Hershel Shanks (Prentice Hall, Biblical Archeology Society), 298.