Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககாலத்தில் நாம் தமிழர்.


Guru

Status: Offline
Posts: 7468
Date:
சங்ககாலத்தில் நாம் தமிழர்.
Permalink  
 


சங்ககாலத்தில் நாம் தமிழர்.

தலைச்சங்கமும் இடைச்சங்கமும்.
பண்டு தொட்டுத் தமிழர் சங்கங்கள் அமைத்துத் தமிழை வளர்த்தனர். இக்காரணம் பற்றியே ‘சங்கத் தமிழ்’ என்பர். காலத்துக்குக் காலம் பல சங்கங்கள் இருந்த போதிலும், மூன்று சங்கங்கள் விசேடமாகக் குறிப்பிடப்படுகின்றன:- தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், தலைச்சங்க நூல்களும், தொல்காப்பியம் தவிர்ந்த இடைச்சங்க நூல்களும் எமக்குக்கிடைத்தில. கடைச்சங்க நூல்களிற் சிலவே கிடைத்திருக்கின்றன. பிற்கால உரையாசிரியர்கள் இச்சங்கங்களைப் பற்றிப் பல விபரங்கள் கொடுத்திருக்கின்றனர். எமது மரபுக் கதைகளிலும் இலக்கியங்களிலும் இச்சங்கங்களைப் பற்றிய குறிப்புக்கள் உள.

“தொல்லாணை நால்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்” (மதுரைக் காஞ்சி)

“ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவனாக
வுலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை” (புறம்)

“இமிழ்குரன் முரச மூன்றுட னாளுந்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே” (காரிக்காண்ணனார்)

“நான் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்”
(திருநாவுக்கரசு நாயனார்)

“உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோவன்றியேழிசைச் சூழல்புக்கோ”
(மாணிக்கவாசக நாயனார்)

இவ் விபரங்களிடையிற் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. தலைச்சங்கஇடைச்சங்க காலங்களுக்கும் உரையாசிரியர் காலங்களுக்குமிடையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் சென்றுவிட்டபடியினால் விபரங்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்திருக்கலாம். மிகைப்படுத்திக் கூறப்பட்டிருக்கலாம். மேலும், வடமொழியும் பௌராணிக மதமும், புராணங்களும் தென்நாட்டில் ஆதிக்கம் பெற்ற பிற்காலத்தில் உரையாசிரியர்கள் வாழ்ந்தவராவர். இவர்கள் தமது கொள்கைகளையும் கருத்துக்களையும் பல விடங்களில் வலிந்து புகுத்தினர். கற்பனையான கதைகளைச் சேர்த்தனர். பண்டைத் தமிழ் நூல்கள் ஓலைகளில் எழுதப்பட்டவை. ஏடுகளைக் காலத்துக்குக் காலம் பெயர்த்து எழுதும்போது, எழுதுவோர் தமது அறிவிற்கெட்டியவாறு திருத்தங்கள் செய்வதும், புதிய சூத்திரங்களை இடைச்செருகுவதும் வழக்கமாகும். ஒரு நூலின் காலத்தை இம் முரண்பாடுகளின் அடிப்படையில் வரையறை செய்வது தவறாகும். காலத்தை அந் நூலிற் குறிப்பிடப்படும் கருத்துக்கள் சமயக் கொள்கைகள். வாழ்க்கை முறைகள், சூழல்கள், சம்பவங்கள் முhலியவற்றின் அடிப்படையில், மட்டுமே வரையறை செய்யலாம்.

உதாரணமாகப் பண்டைக்காலத்தில் இக்காலத் தமிழ் எழுத்துக்கள் இருந்தன எனக் கூற முடியாது. தொல்காப்பியர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ நான்கு வகைப்பட்ட எழுத்துக்கள் இருந்தன. இவ்வெழுத்துக்களைப் பற்றிச் சங்க நூல்களிலுஞ் சில குறிப்புக்களைக் காணலாம்.

“வடிவு பெயர் தன்மை முடிவுநான் கெழுத்தே” வடிவெழுத்து உருவெழுத் தெனப்படும். இது பண்டைக்காலத்திற் சீனாவிலும் எகிப்திலும் வழங்கிய சித்திர சங்கேத இலிபிகளைப் (ர்நைசழபடலிh) போன்றதாகும்.

“காணப் பட்ட உருவ மெல்லாம்
மானக் காட்டும் வகைமை நாடி
வடுவி லோவியன் கைவினை போல
எழுதப் படுவ துருவெழுத் தாகும்.”

ஒரு பெயரைச் சுட்டுவதற்கு வழங்கப்பட்ட சங்கேதக்குறி பெயரெழுத்தாகும். இதுவுஞ் சீன மொழியில் வழங்கப்பட்டதாகும். தன்மை, சக்தி முதலியனவற்றைச் சுட்டுவதற்கு வழங்கப்பட்ட அடையாளக் குறி தன்மை யெழுத்தாகும். வினை முடிவுள்ள வாக்கியத்தைச் சுட்டுவதற்கு வழங்கப்பட்ட குறி முடிவெழுத்தாகும். பண்டைக்கால இந்திய எழுத்துக்கள் சிந்துவெளி ஓவிய எழுத்துக்கள் போன்றவையாக இருக்கலாம். சிந்துவெளி ஓவிய எழுத்துக்களிலிருந்தே பிராமி எழுத்துக்களும் ஏனைய தென்னிந்திய எழுத்துக்களும் தோன்றின என அறிஞர் கருதுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலுள்ள புள்ளி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே மறைந்து விட்டன. பிராமி எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவையாகும். இம் மூலம் சித்திர எழுத்துக்களாகும். இப்பண்டை எழுத்துக்களிலிருந்தே கிரந்தம் வட்டெழுத்து, கண்ணெழுத்து, மலையாள எழுத்து, சிங்கள எழுத்து முதலியவை யாவும் தோன்றின. கி.மு. முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம வாயங்கனசுத்த’ என்ற நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் தாமினி (தாமிழி) என்ற பெயரும் பராம்மி என்ற பெயருங் காணப்படுகின்றன. சமீப காலத்தில் வீரமா முனிவர் அச்சிடும் வசதிக்காகத் தமிழ் எழுத்து முறையிற் பல திருத்தங்கள் செய்தனர்.

இப்போது சங்கங்களைப் பற்றி எமது இலக்கியங்களிற் காணப்படும் குறிப்புக்களிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பெருவள நாட்டிற் சங்கம்
“பேராற்றருகில் பிறங்கு மணிமலையில்
சீராற்றுஞ் செங்கோ றிறற் செங்கோ – நேராற்றும்
பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்த
பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி” (தமிழ் விடுதூது)

பேராறும் மணிமலையும் பெருவள நாட்டில் இருந்தன. இங்க ஒரு தமிழ்ச் சங்கம் இருந்ததாக இப் பா கூறுகிறது. இச்சங்கத்தைப் பற்றிச் சில விபரங்கள் கிடைத்திருக்கின்றன. செங்கோன் காலத்தில் (கி.மு.14,000 அளவில்) இச்சங்கம் இருந்தது. முத்தூர் அகத்தியர் இக்காலத்தவராவார். இவர் பெருவள நாட்டிற் பஃறுளியாற்று அணைகட்டியவா. அருகிலிந்த முத்தூர் எனுஞ் சிற்றூரில் வசித்தவர். சக்கரன் என்பவன் இச்சங்கத் தலைவனாக இருந்தான். தனியூர்ச் சேந்தன், முத்தூர் அகத்தியன், பேராற்றி நெடுந்துறையன், இடை கழிச் செங்கோடன் என்போர் இச்சங்கமிருந்த புலவரிற் சிலராவர். செங்கோனின் வெற்றிகளைப் பற்றித் தனியூர்ச் சேந்தன் “செங்கோண் தரைச் செலவு” எனும் நூலை இயற்றினான். இந்நூல் முழுவதும் தாப்புலிப்பாவினால் இயற்றப்பட்டது. சக்கரன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இதற்கு முத்தூர் அகத்தியர் பாயிரம் பாடினார்:-

“செங்கோ ன்றரைச் செலவைச் சேந்தன் தனியூரான்
துங்கன் தமிழ்தாப் புலித்தொடரால் - அங்கிசைத்தான்
சக்கரக் கோமுன்னின்று சாற்றும் பெருவூழி
அக்கரக் கோநாமஞ்சு வோம்”

பெருவள நாட்டுச் சங்க இலக்கண நூல்கள் நெடுந்துறையன் பெருநூல், இடைகழிச் செங்கோடன் இயல் நூல், குமரம் என்பவை யாகும். பெருவள நாட்டிலே வேறு சங்கங்களும் இருந்தன.

(அ) பஃறுளி யாற்றுத் தென் மதுரைச் சங்கம்
(ஆ) பொதிய மலைச் சங்கம்
(இ) மகேந்திர மலைச் சங்கம்
(ஈ) மணிமலைச் சங்கம்
(உ) குன்ற மெறிந்த குமரவேள் சங்கம்


தலைச்சங்கமும் இடைச்சங்கமும்
தலைச்சங்கம் 4449 வருடங்கள் இருந்தது@ சங்கம் இரீயினோர் காஞ்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக 89 பாண்டிய மன்னராவர். சங்க உறுப்பினர் 549. இவர்களில் அகத்தியர். சிவபிரான், குமரவேள், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடிநாகராயர் என்போர் சிலராவர். சங்கப் புலவர் தொகை 4449. தலைச்சங்க அகத்தியர் வாதாபி அகத்தியராவார். இவர் அகத்தியர் எனும் இலக்கண நூலை இயற்றினர். தலைச்சங்க நூல்களாவன:-

இலக்கியம்:- முதுநாரை, முதுகுருகு, புறப்பொருள்

இலக்கணம்:- அகத்தியம்

இசை:- முறுகல், சயந்தம், குணநூல், செயிற்றியம்

நாடகம்:- பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அபிநயம், நற்றந்தம், வாமனம்.

கடுங்கோனே முதலாம் நிலந்தரு திருவிற் பாண்டியனாவான், (நிலந்தரு திருவென்பது பாண்டிய மன்னருக்கு3 சிறப்புப் பட்டப்பெயர் போலத் தோன்றுகிறது) தலைச்சங்கமிருந்த இடம் குமரி நாட்டின் தலை நகராகிய பழைய மதுரை அல்லது தென்மதுரையாகும். தலைச்சங்க காலத்தின் இறுதியிற் குமரி நாடும் தென் மதுரையும் கடலாற் கொள்ளப்பட்டன.

இடைச் சங்கம் 3700 வருடங்கள் இருந்தது. சங்கம் இரீயினோர் வெண்டூர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னராவர். சங்கமேறிய புலவர்தொகை 3700. சங்க உறுப்பினர் 59 இவர்களில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கொடுங்கோழி, மோசி, வெள்ள+ர்க் காப்பியன், சிறு பண்டாரங்கன், திரையன், மாறன், கீரந்தை என்போர் சிலராவார். இடைச்சங்க நூல்களாவன:-

இலக்கியம்:- கலி, குரு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம்.

இலக்கணம்:- அகத்தியம், தொல்காப்பியம், (ஐந்திரம் எனும் இலக்கண நூலுமிருந்தது)

இசை:- இசை நுணுக்கம், பூதபுராணம், அகவுள், சங்கமிருந்த இடம் கபாடபுரம், இதுவுங் கடலாற் கொள்ளப்பட்டது. 

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலா இறையனார் அகப்பொருளுரை முச் சங்கங்களின் காலங்களையும் ஆண்டுக் கணக்கிற் கூறுகிறது. தொல்காப்பியம் வேதவியாசர் நான்கு வேதங்களையும் வகுப்பதற்கு முற்பட்டது என்பதும் ஆதி ஊழியின் அந்தந்த நூல் என்பதும் கி.பி. 14ந் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியாரின் கருத்தாகும். “இரண்டாம் ஊழியதாகிய காபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மகாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்” எனக் கி.பி. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் கூறுகிறார். “இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், தொல்காப்பியம் அதன் வழி நூலென்பதுஉம், அது தானும் பனம்பாரனார் ‘வட வெங்கடம் தென்குமரி’ எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையாற் சாகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னைய தென்பதுஉம்” எனக் கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேராசிரியர் கூறுகிறார். “இடைச் சங்க மிருந்தார் தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது” (இறையனார் அகப்பொருளுரை.)

தலைச்சங்க இடைச்சங்க கால மன்னர்களைப் பற்றியும் கடற்கோள்களினால் அழிந்த தமிழ் நாட்டைப் பற்றியும் கடைச்சங்க கால நூல்களிற் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன.

“வடிவேலெறிந்த வான்பகை பொறாது 
பஃறுளியாற்றுடன் பன்மலை யடுகத்துக்
குமரிக் கோடுங் கொடுங் கடல் கொள்ள
வடதிசை லங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” (சிலப்பதிகாரம்)

“எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த
முந்தீர் வழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

“தொல்லானை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்.”
(மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார்)

“மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சொன்று மேவார் நாடிடம்படப்
புலி யோடு வின்னீங்கிப் புகழ் பொறிந்த கிளர்கொண்டை
வலியினான் வணங்கிய வாடாச்சீர் தென்னவன்.”

“தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை
யின் றேழ் நாளி லிருநில மாக்கள்
நின்று நடுக் கெய்த நீணில் வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர்
நாக நன்னாட்டு நானூ றியோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்” - மணிமேகலை

“மடவர னல்லாய் நின்றன் மாநகர்
கடல் வயிறு புக்கது” - மணிமேகலை

சங்க மென்பது வடசொல் என்றும் சமணரே முதன் முதலில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினர் என்றும், தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய விபரங்கள் தமிழ் நாட்டிற் சமணருக்குப்பின் எழுந்த கட்டுக்கதைகள் என்றுஞ் சிலர் வாதிக்கின்றனர். சங்கம் என்ற சொல் பழைய தமிழ் நூல்களில் இல்லை என்பது உண்மையே. ஆனாற் பண்டைக்காலத்தில் தமிழ் மக்கள் சங்கத்தைக் குறிப்பதற்குத் தொகை, மன்றம், அவை, அம்பலம், குழாம், பொதியில் என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பிற்கால உரையாசிரியர் இச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பிற்கால உரையாசிரியர் இச் சொற்களுக்குப் பதிலாகச் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். உதாரணமாக நாம் இன்று வழங்கும் யன்னல் என்பது போர்த்துக்கீசச் சொல். ஆதலாற் போர்த்திகீசர் காலத்துக்கு முன் தமிழர் வீடுகளில் யன்னல்கள் இருக்கவில்லையென வாதிக்கலாமா? தேவாரங்களிலே தானும் பழைய சங்கங்களைப் பற்றிக் குறிப்புக்களைக் காணலாம். எமது சமயகுரவர் தாமும் பொய்ப்புகழ் பாடினர் எனக்கூறும் அளவுக்கு இக்காலத்தில் எமது தமிழ்க் கலாநிதிகள் சிலரின் தலைக்குட் பகுத்தறிவு ஏறிவிட்டது.

சங்கங்களைப் பற்றிய விபரங்களை நம்ப முடியாது எனச் சிலர் வாதிக்கின்றனர். தலைச்சங்கம் 4449 வருடங்கள் இருந்ததெனவும் இரீயினோர் 89 பாண்டிய மன்னரெனவுங் கூறப்படுகிறது. அவ்வாறாயின் ஒவ்வொரு மன்னனின் ஆட்சிக் காலமும் சராசரியாக ஐம்பது ஆண்டுகளாக இருந்திருக்கவேண்டும். இடைச்சங்கம் 3700 வருடங்கள் இருந்தது. இரீயினோர் 59 பாண்டிய மன்னர். அவ்வாறாயின், ஒவ்வொரு மன்னனின் ஆட்சிக் காலமும் சராசரியாக அறுபத்து நான்கு ஆண்டுகளாக இருந்திருக்கவேண்டும். பண்டை வரலாற்றை நோக்கும் போது, மன்னரின் ஆட்சிக்காலம் சராசரியாக இருபது ஆண்டுகளுக்கு மேலிருக்கவில்லை. இக்காரணம் பற்றிச் சங்கங்கள் இருக்கவில்லை என வாதிப்பது பேதமையாகும். இதற்கு இரண்டு விளக்கங்கள் இருக்கலாம்.

(1)பிற்கால உரையாசிரியர்கள் சங்ககாலங்களை மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம். மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சராசரியாக இருபது ஆண்டுகளாக எடுத்துக்கொண்டால், தலைச்சங்ககாலம் 1780 ஆண்டுகளும் இடைச்சங்க காலம் 1180 ஆண்டுகளுமாக இருக்கவேண்டும்.

(2)இச்சங்கங்கள் தொடர்ச்சியாக இருக்கதிருக்கலாம். நூல்களை அரங்கேற்றுவதற்குக் காலத்துக்குக் காலங் கூட்டப்பட்டிருக்கலாம். இதுவே பொருத்தமான விளக்கம் போலத் தோன்றுகிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தலைச்சங்க இடைச்சங்க காலங்கள்
தலைச்சங்க நூல்களுந் தொல்காப்பியம் தவிர்ந்த ஏனைய இடைச்சங்க நூல்களும் எமக்குக் கிடைத்தில. எனவே, சங்க காலங்களைவரையறை செய்வதற்குத் தொல்காப்பியர் காலத்தை அறியவேண்டும். மேலும், கடைச்சங்க காலம் 1950 ஆண்டுகளெனக் கூறப்படுகின்றது. கடைச்சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிவடைந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் உள. கடைச்சங்க காலத்தை கி.மு. 1715 தொடக்கம் கி.பி. 235 வரையுமென அறிஞர் பலர் ஏற்றுக்கொள்ளுகின்றனர். எனவே, இடைச்சங்கம் கி.மு. 1718இற்கு முன் முடிவடைந்திருக்கவேண்டும்.

தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு மிகவும் பிற்பட்ட நூலெனவும், அது கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனவுஞ் சிலர் வாதிக்கின்றனர். தொல்காப்பியர் சமண முனிவர் என்பதும் ஐந்திரம் பத்ரபாகு இயற்றிய ஜெநேந்திரம் என்பதுமான ஆதாரமற்ற ஊகங்களே இவ்வாதத்துக்கு அடிப்படையாகும். தொல்காப்பியர் தலைச்சங்கத்தவர் என்பாருமுளர். ஆனால், தொல்காப்பியர் இடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தவர் என்பது மரபுவழிச் செய்தியாகும். மேலும் ஒரு நூலில் ஒழுக்க நெறிகள் கூறப்பட்டிருந்தால், அதைச் சிலர் சமண நூலெனக் கண்மூடித்தனமாக எடுத்துகொள்ளுகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் இதற்கு உதாரணங்களாகும். பண்டைத் தமிழர் சமுதாயத்திலும் சமயத்திலும் ஒழுக்க நெறிகள் இருக்கவில்லையா? தமிழருக்கு ஒழுக்கத்தை வட வரும் பிராமணருமா கற்பித்தனர்?

தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற கொள்கையைப் பல தமிழ் அறிஞர் தாமும் சமீப காலம் வரையும் ஏற்றனர். “இற்றைக்குச் சற்றேறத் தாழ இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்ற பழந் தமிழ் நூல் தொல்காப்பியம்” பேராசிரியர் இராமநாதன் செட்டியா. இக்கொள்கைக்குஞ் சில தவறான எடுகோள்களே ஆதாரங்களாகும்.

(1)இந்தியாவிற் சமஸ்கிருதம் தமிழுக்கு முற்பட்டதெனவும், தமிழ் வடமொழியின் ஒரு கிளை மொழி யெனவும் தமிழ் இலக்கியங்களும் இலக்கணமும் சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை யெனவும் சிலர் எடுத்துக்கொண்டனர். அவ்வாறாயின், தமிழ் இலக்கிய இலக்கணங்கள் சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களுக்குப் பிற்பட்டவையாக இருக்கவேண்டும். இது பிற்காலப் பிராமணீயப் பொய்ப் பிரசாரம் என்பதில் ஐயமில்லை. பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் என்பதையும் பேசிய மொழிகள் திராவிட மொழிகள் என்பதையும் தற்கால மேனாட்டறிஞர்களின் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

(2) பிற்காலச் சமஸ்கிருத நூல்களிலுள்ள சில சமயக் கொள்கைகளும் பழக்க வழக்கங்களும் தொல்காப்பியத்திற் காணப்படுவதினால் தொல்காப்பியம் இந்நூல்களுக்குப் பிற்பட்டதெனச் சிலர் வாதித்தனர். இந்து மதம் அடிப்படையில் திராவிடர் மதம் எனக்கண்டோம். இந்தியாவிற்குட் புகுந்த சிறிய காக்கோசியக் குழுக்கள் திராவிடரின் சமயத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி நாகரிகமடைந்தன. தொல்காப்பியத்தில் ஆரம்ப நிலைச் சைவ சமயத்தைக் காண்கின்றோம். இச்சைவ மதம் பண்டைத் திராவிடர் மதம் என்பதில் ஐயமில்லை.

(3) பாயிரத்திலே கூறப்படும் ஐந்திரத்தைப் பாணினியி; இலக்கணம் எனச் சிலர் எடுத்துக்கொண்டர். வேறு சிலர் பாணினியின் காலத்திலே வடமொழியில் இந்திரனால் இயற்றப்பெற்ற ஐந்திரம் என்ற ஓர் இலக்கண நூல் இருந்ததென்பர். தமிழில் இலக்ணமெழுதுவதற்கு வடமொழி இலக்கணங் கற்கவேண்டுமா? மேலும், தொல்காப்பியத்துக்கும் பாணினியின் இலக்கணத்துக்கும் எல்வித தொடர்புமில்லை. தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்தன. “முந்துநூல்கண்டு முறைப்பட எண்ணிப்புலந் தொகுத்தோனே” எனப் பாயிரங் கூறுகிறது.

(4) தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்ற கட்டுக்கதையுமுண்டு.

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ், தாவின் றுணர்ந்த
துன்னருங் கீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர்”

இது புறப்பொருள் மாலையில் ஒரு பாடலாகும். அகத்தியரை வடநாட்டு ஆரிய முனிவர் என எடுத்துக்கொண்டனர். ஆரியர் கி.மு. 7ம் 8ம் நூற்றாண்டில் தென்னாடு வந்தனர். எனவே, அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்திருக்க முடியாது. அகத்தியர் என்பது தமிழ்ச் சொல். பண்டைக் காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பற்பல காலங்களிற் பல்லாயிரம் அகத்தியர் இருந்தனர். இன்றும் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் இரண்டு மூன்று அகத்தியரைக் காணலாம். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் எவ்வித தொடர்புமில்லை. இருந்திருப்பின் நூலிலோ பாயிரத்திலோ இது குறிப்பிடப்பட்டிருக்கும்.

(5) தொல்காப்பியர் வடமொழியைக் குறிப்பிடுகிறார். ஆதலால் சமஸ்கிருதம் பரவியபின், தொல்காப்பியம் எழுதப்பட்டது.

“வட சொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”

தொல்காப்பியர் காலத்திலே பல வடமொழிகள் இருந்தன. அவர் குறிப்பிட்ட வடமொழி சமஸ்கிருதமன்று.

(6) ஓரை என்பது கிரேக்க சொல்லெனவும் இச்சொல் தொல்காப்பியத்திற் காணப்படுவதினால், தொல்காப்பியம் கிரேக்கர் இந்தியாவிற்கு வந்தபின் எழுதப்பட்டது எனவும் வாதித்தனர். இந்திய மக்கள் கிரேக்கரிடமிருந்தா சோதிடத்தைப் பெற்றனர்? சொற்களின் ஓசை அடிப்படையில் தொடர்பு காண்டல் தவறாகும். மேலும் மிகப் பழைய காலத்திலேயே இந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்களுக்கும் கிரேக்கருக்கும் தொடர்பு இருந்தது.

(7) தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர், ஐயர், பார்ப்பனர் முதலியோரை ஆரியப் பிராமணராக எடுத்துக்கொண்டனர். இவர்கள் திராவிட குலத்தவரன்றி ஆரியப் பிராமணர்களல்லர்.

தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற கொள்கைக்கு ஆதாரமான வாதங்கள் யாவும் தவறானவையாகும். எவ்வாறு நோக்கினும், தொல்காப்பியர் கலியுகத்துக்கு (கி.மு. 3102இற்கு) முற்பட்டவராவர்:-

(1)இடைச்சங்கமிருந்த கபாடபுரம் தாமிரபரணியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையில் இருந்தது. பாண்டியரின் தலைநகர் கபாடபுரமென இராமாயணங் குறிப்பிடுகின்றது. ஆனால், மகாபாரத காலத்தில் மணலூர் பாண்டியரின் தலைநகராக இருந்தது. மகாபாரத காலத்துக்கு முன் கபாடபுரம் அழிந்துவிட்டது. எனவே, இடைச்சங்க காலம் இராமாயண காலத்துக்கும் மகாபாரத காலத்துக்கும் இடைப்பட்டதாகும்.

(2) தொல்காப்பியர் காலம் இரண்டாம் ஊழியம் மகாபாரத காலம் மூன்றாம் ஊழியுமென உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

(3) கபாடபுரம் துவாரகைக் கண்ணனினால் அழிக்கப்பட்டதென்ற மரபுக்கதை ஒன்றுண்டு.

(4) தொல்காப்பியர் காலத் தமிழக எல்லைகளைப் பாயிரங் கூறுகிறது.

“வட வெங்கடந் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து”

இங்கு குறிப்பிடப்படும் தென்குமரி இக்காலத் தென்குமரிமுனையன்று. இரு மலைகள் எல்லைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. குமரி என்பது அக்காலத்தில் மத்திய ரேகைக்கு அண்மையிலிருந்த குமரி மலையாகும். அவ்வாறாயின் தொல்காப்பியர் காலத்திலே இலங்கை தமிழ்கூறு நல்லுலகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கவேண்டும். தற்போது இலங்கையின் தென்புள்ளி மத்திய ரேகைக்கு 6 வடக்கில் உளது. மத்திய ரேகைக்கு இப்புள்ளிக்கும் இடைப்பட்ட நிலப் பரப்புத் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பு ஏதோவொரு கடற்கோளினால் அழிந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட கடற்கோளொன்று கலியுகத்தின் ஆரம்பத்திற்குச் சற்று முன்பு கி.மு 3105இல் நடந்ததெனத் தெனன்ற் (வுநnயெவெ) எனும் இலங்கை வரலாற்றாசிரியர் கூறுகிறார். அக் காலத்தில் இலங்கையி;ன் மேற்குப் பகுதிகள் சிலவும் அழிந்திருக்கலாம். இப்போதுள்ள இலங்கை பண்டைக்கால இலங்கையிற் பன்னிரண்டில் ஒரு பாகமெனப் புத்த ஏடுகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் இலங்கை, மாலைதீவுகள் வரையும் பரந்து கிடந்தது.

(5) “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்” எனத் தொல்காப்பியர் கூறுகிறார். இப்பன்னிரு நிலங்களையும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் – பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, பன்றி நாடு, அரூவ நாடு, அருவா வடதலை, சீத நாடு, பூழிநாடு, மலாடு. தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு தற்காலத் தமிழ்நாட்டையும், கேரளத்தையும். கன்னட நாட்டையும், கோவாவையும், பம்பாய் மாகாணத்தின் சில பகுதிகளையும் அடங்கியதாக இருந்தது. தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தெலுங்கு நாடு பிரிந்துவிட்டது.

(6) வள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் இரும்பு பயன்படுத்தப்பட்டது. தொல்காப்பியர் இரும்புக் காலத்துக்கு முற்பட்டவராவர்.

(7) தொல்காப்பியர் காலத்துக்கும் கடைச்சங்க காலத்துக்கும் இடையில் தமிழ் மொழியிலும் தமிழர் வாழ்க்கையிலும் சமயத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

(அ) தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படும் புள்ளி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்துக்கு முன் மறைந்துவிட்டன. தொல்காப்பியர் விதிகளுக்கு மாறான சொல் வழக்குகளும் தொல் காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகளும் சங்க நூல்களிலுந் திருக்குறளிலுங் காணப்படுகின்றன.

(ஆ) கடைச்சங்க காலத் தமிழ் நாட்டில் நகரங்களும் வாணிபமும் செல்வமும் பெருகிவிட்டன. தொல்காப்பியர் கால வாழ்க்கையை அடுத்த அதிகாரத்திற் பார்ப்போம். தொல்காப்பியம் கூறும் தனிப்பட்ட நானில் வாழ்க்கை சங்க காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக இருக்கவேண்டும்.

(இ) தொல்காப்பியர் சைவ சமயத்தின் ஆரம்ப நிலையைக் காட்டுகிறது. தொல்காப்பியர் சைவ சமயத்தவர் எனவும் சைவ சமயக் கருத்துக்களைத் தொல்காப்பியத்தில் ஆரம்ப நிலையிற் காணலாம் எனவும் மறைமலை அடிகள் தெளிவாகக் காட்டுகிறார்.

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

தொல்காப்பியர் காலத்திற் சிவனோடு ஞாயிறும் திங்களும் வழிபடப்பட்டன. கடைச்சங்க காலத்திற் பல்வேறு மதங்களும் மதக் கொள்கைகளும் தமிழ் நாட்டில் தோன்றிவிட்டன. சமய வளர்ச்சி;யின் அடிப்படையில் நோக்கும்போது, தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக இருக்கவேண்டும்.

(8) தொல்காப்பியர் காலத்தில் ஆவணி வருட முதல் மாதமாக இருந்தது. இஃது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்ட காலமென வான நூலாரும் சோதிடருங் கூறுகின்றனர். எவ்வாறு நோக்கினும், தொல்காப்பியம் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்ட நூலாகும். அக்காலத்தில் ஏனைய மக்கள் மிருகங்களோடு மிருகங்களாகக் காடுகளிலும், மலைகளிலும், மரங்களிலும், குகைகளிலும் வசித்தனர். 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி இலக்கண இலக்கிய வளமுடைய செம்மொழியாக இருந்தது.

“பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றி இற்றை ஞான்று நம் கைவரப்பெற்ற தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் காலத்தாலுஞ் சிறப்பாலும் விளக்குவது ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியம் என்னுந் தலையாய இயல் நூலேயாகும். இது கடலின் கட்பண்டு நிலவிய முச்சங்கத்துள் தலைச்சங்க காலத்தில் தோன்றியதென்பது யாவரும் உணர்வர்” – திரு. பண்டிதமணி மூ. கதிரேசன் செட்டியார்.

கடைச்சங்கம் 1950 ஆண்டுகள் இருந்தது. அதை இரீயினோர் குடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர். அரங்கேறிய புலவர் நாற்பத்தொன்மர். சங்க உறுப்பினர் சிறு மேதாவியார், சேற்றம்பூதனார். அறிவுடையரனார். பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லத்துவனார், மருதனின் நாகனார், கணக்காயனார் மகன் நக்கீரர் முதலிய நாற்பத்தொன்மராவர். இச்சங்கமும் தொடர்ச்சியாகவில்லாது நூல்களை அங்கேற்றுவதற்குக் கூட்டப்பட்டிருக்கலாம். சங்கங்களிடையிலும் பல நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம்.

கடைச்சங்க காலத்தைப்பற்றி உறுதியான சான்றுகள் உள. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்கள் கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்தவையாகும். வள்ளுவர் ஆண்டு இன்று வரையும் தமிழ் மக்களிடையில் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது. இன்று கிறித்துவ சகாப்தம் 1978 வள்ளுவர் ஆண்டு 2009 ஆகும். வள்ளுவர் ஆண்டு தொடக்கம் கி.மு. 31. எனவே, திருக்குறள் கி.மு. முதலாம் நூற்றாண்டு நூலாகும். வள்ளுவர் காலம்பற்றி வீண் ஊகங்களுக்கு இடமில்லை. சிலப்பதிகாரமும், மணிமேகலையுஞ் சமகாலத்தவை. இலங்கை வரலாற்றுடன் ஒப்புநோக்கி இவற்றுன் காலத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக அறிஞர் வரையறை செய்திருக்கின்றனர். ஏனைய கடைச்சங்க நூல்கள் இவற்றுக்கு முற்பட்டவையாகும். களப்பிரர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற் பாண்டி நாட்டை வென்றதோடு கடைச்சங்கம் அழிந்தது.

கபாடபுரத்தைப் பாண்டியரின் தலைநகராக இராமாயணம் குறிப்பிடுகிறது. குமரி நாட்டையும் தென் மதுரையையும் பற்றிய குறிப்புகள் இராமாயணத்திலில்லை. இவை இராமாயண காலத்துக்கு (கி.மு. 6800இற்கு) முன் அழிந்திருக்கவேண்டும். முச்சங்கங்களையும் இரீயினோர் பாண்டிய மன்னராவர். பாண்டியர் இந்நெருங்காலம் பல்லாயிரம் வருடங்கள் ஆண்டனரா என்ற கேள்வி எழலாம். பாண்டிய அரச குலம் எப்போது தோன்றியது எனக் கூறல் இயலாது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு (கி.மு.30,000 தொடக்கம்) பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையும் பாண்டியர் ஆட்சி இருந்தது. பிற்காலத்தில் இவர்கள் சிற்றரசராகிவிட்டனர். அலெக்சாண்டரின் படையெடுப்பு வரையும் 154 பாண்டிய மன்னர் 6431 ஆண்டுகள் ஆண்டனர் என மேகஸ்தீன் எனுங் கிரேக்க நாட்டறிஞர் குறிப்பிடுகிறார். இடைச்சங்க கடைச்சங்க காலம் 5650 ஆண்டுகளாகும்.

இந்நூலின் இறுதியின் திருமந்திரமணி துடிசைக்கிழார் அ. சிதம்பரனாரின் கால அட்டவணை கொடுக்கப்படுகிறது. இவ்வட்டவணைப் படி சங்ககாலங்களாவன:-

தலைச்சங்கம் - கி.மு. 14,004 – கி.மு. 9564
இடைச்சங்கம் - கி.மு. 6805 – கி.மு. 3105
கடைச்சங்கம் - கி.மு. 1715 – கி.மு. 235

இதுவே இந்நூலிலுள்ள குறிப்புக்களுடன் பொருத்தமுடையதாகும். கபாடபுரம் கி.மு. 2000 இல் உண்டான கடற்கோளினால் அழிந்தது எனவும் தலைச்சங்க காலம் 1780 ஆண்டுகள் எனவும். இடைச்சங்க காலம் 1180 ஆண்டுகள் எனவுஞ் சிலர் கூறுகின்றனர். அவ்வாறாயின் சங்ககாலங்களாவன:-
தலைச்சங்கம் - கி.மு 4060 – கி.மு. 3180
இடைச்சங்கம் - கி.மு. 3180 – கி.மு. 2000
கடைச்சங்கம் - கி.மு. 1715 – கி.மு. 235

இஃது உண்மையாயின் தொல்காப்பியர் தலைச்சங்கப் புலவராக இருந்திருக்கவேண்டும். ஆனால், இக்கால வரையறை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard