தமிழ் என்று சொல்லுக்கு “இனிமை”, “தூய்மை”, “அன்பு” என்பவை பொருளாகுமென இந்நூலின் ஆரம்பத்திற் குறிப்பிட்டோம். இனிமைக்கும் தூய்மைக்கும் தன்னொப்பிலா மொழி தமிழாகும். “தேனினுமினியது தமிழ்: தெவிட்டாச் சுவையது தமிழ்@ இலக்கணஞ் சிறந்தது தமிழ்@ இயல் வளஞ் செறிந்தது தமிழ்@ ஒப்புயர்வற்றது தமிழ்@ ஒண்கலை நிறைந்தது தமிழ்@ தன்னேரிலாதது தமிழ்@ தனிப்புகழ் வாய்ந்தது தமிழ்@ பண்ணிற் சிறந்தது தமிழ்@ மண்ணிற் பழையது தமிழ்@ செந்தமிழ்@ உயர்தனிச் செம்மொழி”, என்றெல்லாம் புகழ்பெற்ற மொழி எமது தமிழ். இவ்வாறு நாம் மட்டுமன்றி. மொழிகளை ஒப்பிட்டுச் சீர்தூக்கி ஆராய்ந்த மேனாட்ட வருங் கூறுகின்றனர்.
மேலும், “தமி” என்ற பதத்திற்கு “ஒப்புயர்விலாத” என்பதும் கருத்தாகும். இறைவனைத் “தமியன்” என்கிறோம். இறையிலக்கணம் தமிழுக்கும் பொருத்தமாகும். எமது தமிழ் ஆதியும் அந்தமுமில்லாத மொழி. அன்பே உருவமானது. அருள் வடிவமானது. இன்பத்தமிழ். தெய்வத்தமிழ். கந்தன் அருளிய தமிழ்.
பண்டு தொட்டுத் தமிழ்மக்கள் இறையுணர்ச்சியுடைய வாழ்க்கை நடத்தினர். இந்த இறையுணர்ச்சியை வெளிப்படுத்தத் தமிழ்மொழி போன்று அருள்மொழி வேறில்லை. தமிழிலுள்ள பெரும்பாலான நூல்கள் சமய நூல்களாகும், பக்திப்பாடல்களாகும். நாயன்மாரும் நம்மாழ்வாரும் தமிழ் இசையையும் இறைவனையும் ஒன்றுபடுத்தி அன்புருகினர். பண்ணார்த்த பாட்டிசைத்தனர். ஞானசம்பந்தர் தம்மை “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். “தமிழொடு இசை பாடல் மறந்தறியேன்” எனத் திருநாவுக்கரசர் உருகுகிறார். சுந்தரர் இறைவனையே தமிழுக்கு ஒப்பிடுகிறார்.
“பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்”
“மற்றுநீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் தம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.”
திருமூலர்:- “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
பௌத்தம்:- மணிமேகலை, வீரசோழியம், திருப்பதிகம், சித்தாந்தத் தொகை, புத்த ஜாதகத் கதைகள்.
சமணம்:- நாலடியார், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.
கிறிஸ்த்தவம்:- தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம்.
இஸ்லாம்:- சீறாப்புராணம்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழ் என்பர். தொல்காப்பியரே இசைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரென்றால், அவர் காலத்துக்கு முற்பட்;டே தமிழிற் பல இசை நூல்கள் இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் இயல் இசை நாடக நூலாகும். பலவகைப்பட்ட இசைப்பாடல்கள் சிலப்பதிகாரத்திலுஞ் சங்க நூல்களிலுங் குறிப்பிடப்படுகின்றன:- “ஆற்றுவரி, சாந்துவரி, சாயல்வரி, நிலைவரி, முரிவரி திணைநிலைவரி, அம்மானை வரி, ஊசல்வரி, முகவரி, முகமிலவரி, வள்ளைப்பாட்டு முதலியவை. தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் முதலியவை பண்ணார்த்த இசைப்பாடல்களாகும். கீர்த்தனம், சிந்து, தெம்மாங்கு, பல்லவி, பாவையர் பாட்டு, ஒப்பாரி முதலியவை பிற்காலத்திலே தோன்றின. வடமொழியில் இசைநூல்கள் இயற்றிய பரதரும் சாரங்கதேவரும் தமிழிலிருந்து கடன்பட்டனர்.
சங்க நூல்களிற் பல கூத்து வகைகள் குறிப்பிடப்படுகின்றன:-
‘அகக்கூத்து, புறக்கூத்து, வேத்தியல், பொதுவியல், வசைக்கூத்து, புகழ்க் கூத்து, சாந்திக் கூத்து, இயல்புக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, விநோதக் கூத்து, தேசியக் கூத்து, பழைய நாடகத் தமிழ் நூல்கள் பல மறைந்து விட்டன. அகத்தியம், பரதம், குணநூல், கூத்த நூல், சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம், மதிவானர் நாடகத் தமிழ் நூல், முறுவல், பூம்புலியூர் நாடகம், விளக்கத்தார் கூத்து.
பலவகைப்பட்ட இயல் நூல்கள் தமிழில் உள. காப்பியங்கள். வீரகாவியங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், தோத்திரங்கள், வேதாந்த சித்தாந்த சாத்திரங்கள்.
காப்பியங்கள் ஐம்பெருங் காப்பியங்களாவன:- சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி. பிற்காலத்திலெழுந்த பெருங் காப்பியங்களாவன:- கம்பர் இராமாயணம், வில்லிபுத்தூர் ஆழ்வார் மகாபாரதம், சேக்கிழார் பெரியபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியர் கந்தப்புராணம், வீரமாமுனிவர் தேம்பாவணி, உமருப்புலவர் சீறாப்புராணம், ஐஞ்சிறுங் காப்பியங்களாவன@ சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாக குமார காவியம், பெருங் கதை வீரகாவியங்களாவன: புறநானூறு, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள். நீதி நூல்கள்:- திருக்குறள், நாலடியார், பதினென் கீழ்க் கணக்கு நூல்கள், ஒளவையார், இலக்கண நூல்கள்: பெருநூல் இயல் நூல், குமரம், அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல், வீரசோளியம், தண்டிலங்காரம், யர்பருங்கனக்காரிகை உரிச்சொல் நிகண்டு, இலக்கணக் கொத்து.
இவற்றைவிடப் பல புராணங்களும் அருட்பாடல்களும், பிரபத்தங்களும், உரை நூல்களும் தமிழில் உள.
“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச, பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும், மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”
எனப் பாரதியார் மனம் உருகினார். இன்று இக்கலைச் செல்வங்களும் தமிழில் உள. இலக்கிய இலக்கண வளங்களில் உலகில் முதனிலையிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.
“கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந்திட்பமும் உடையது. இலத்தின் மொழியைப் பார்க்கிலுஞ் சொல் வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தற்கால ஆங்கிலத்தையும் சர்மன் மொழியையும் ஒத்ததாகும்” கலாநிதி வின்சிலோ. தொன்மையிலும், சொன்னயத்திலும், இலக்கிய இலக்கண வளத்திலும், அறிவிலும், இனிமையிலும், தெளிவிலும், பண்பாட்டிலும், சிறப்பிலும் தமிழுக்கு ஒப்பான மொழியில்லையென இந்நூலிற் பலவிடயங்களிற் கூறினோம். மொழியுலகில் தமிழ் அன்னை சிறப்பாசனம் வகிக்கிறாள். இப்போது தமிழைப் பற்றிய புலவர் பாடல்களிற் சிலவற்றைப் பார்ப்போம். தமிழின் தொன்மையைப் பின் வரும் பாடல்கள் காட்டுகின்றன:-
“தொன்று நிகழ்த்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணரும் - இவள் என்று பிறந்தவள் என்று ணராத இயல்பின ளாம் எங்கள் தாய்” (பாரதியார்)
“பற்பல ஆயிரம் ஆண்டுகள் - இந்தப் பாரினில் இருந்தறம் பூண்டள் அற்புதம் இன்னமும் கன்னியே – புது அழகு தரும் தமிழ் அன்னையே” (நாமக்கல் கவிஞர்)
“பேராற் றருகில் பிறங்கு மணி மலையில் சீராற்றுஞ் செங்கோ றிறற் செங்கோ – நேராற்றும் பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்த பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி” (தமிழ் விடு தூது)
“சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதாயின் முது மொழி நீ அனாதி யென மொழிகுவதும் வியப்பாமே” (மனோன் மணியம்)
“பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினு மோர் எல்லையறு பரம் பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளிமுந் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக் கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” (மனோன் மணியம்)
“இருந்த தமிழே உன்னால் இருந்தேன் இமயவர்தம், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” (தமிழ்விடுதூது)
“நீராரும் கடலுடுத்த நிலமடைந்தைக்கு எழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநற் றிடுநாடு அத்திலக வாசைன போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே” (பேராசிரியர் சுந்தரம்பிள்ளை)
“இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கை கடந் தியலிசையில் செய் நடமே! வாழியரோ! பயிற்சி நிலப் பயிர்களெலாம் பசுமை யுற ஒளி வழியே உயிர்ப்பருளும் திறம் வாய்ந்த உயர் தமிழ்த் தாயே! வாழியரோ! (வி. கல்யாணசுந்தர முதலியார்)
“மூவேந்தர் தாலாட்ட முச்சரங்கத்தே கிடந்து பாவேந்தர் செந்நாளில் நடைபழகி மொழி பயின்று மங்குலுறை வேங்கடமும் வான்குமரிப் பேராறும் தங்குமிடைத் தமிழுலகும் அரசுபுரிந் தமிழ்த்தாயே”
”மாவாழ் பொதிய மலையிற் பிறந்து வரமுனிவன் பூவாழ் சரமெனும் பொற்றொட்டி லாடிப் புலவர்சங்கப் பாவாழ் பலகை இருந்து ஏட்டி வேதவழ்பாவையென்றன் நாவாழ்வு உகந்தமை நான் முன்பு செய்திட்ட நற்றவமே தவந்தரு மேலாந் தனந்தரும் இன்பத் தருந்தணியா நவந்தரு சீர் தரும் நட்புத் தரும் நல்ல வாழ்வு தரும் பவந்தரு தீவினை வேரும் மரமும் பறித்தழியாச் சிவந்தருஞ் செந்தமிழ்ச் செல்வியின் ஞானத் திருவடியே” (நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்)
“என்ன புண்ணியம் செய்தேனே நான் இந்நன்னாட்டினில் வந்து பிறந்திடவே”
“மன்னவர் மூவரும் வளர்த்த தீந்தமிழ் இன்பம் காதினிலே என்றும் சேரவே”
“அம்புவி யோர்க்கெல்லாம் அமுதென வேவளர் கம்பநா டன் தரும் காவியம் கேட்கவும் இன்ப வாழ்க்கையே எய்த மெய்ம் மறை தந்த வள்ளுவன் தமிழ் படிக்கவும்” (ம.ப. பெரியசாமித்தூரன்)
வீரத்தமிழ், எங்கள் தமிழ்: “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை@ உண்மை@ வெறும் புகழ்ச்சியில்லை@ ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” (பாரதியார்)
“வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே வண்ணப்பூவும் மணமும் போலே மகரயாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ? வையகமே உய்யு மாறு வாய்த்த தமிழ் என் அரும் பேறு துய்யதான சங்க மென்னும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை (தம்) கையிலே வேலேந்தி - இந்தக் கடல் உலகாள்மூ வேந்தர் கருத்தேந்திக் காத்தார் அந்தக் கன்னல் தமிழும் நானும் நல்ல”
“தமிழ் எங்கள் இளமைக்குப்பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிர்த்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!”
“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பந் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமிந்த ஊர்”
“நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்”
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” (பாரதிதாசன்)
“எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே” (பாரதியார்)
நங்கை தமிழை, மங்கை தமிழை, மாது தமிழை அன்னை தமிழைக் கண்டேன். காலாதி காலமெல்லாங் கண்டேன். பெருவள நாட்டிலே பிறங்கு மணிமலையில் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்யக்கண்டேன். குமரி நாட்டிலே பாண்டியர் ஆட்சியிலே சங்க மேறக் கண்டேன். கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அத்திலாந்திக வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலுமிருந்த நாடுகளிற் பேருலா வரக்கண்டேன். இமயந் தொடக்கம் இந்தியா முழுவதிலும் தனியரசு செய்யக் கண்டேன். ஆடல் புரியும் அரன் தமிழ்ப் பாடல் புரியும் பலன் வாழ் கூடலிற் சங்கப் புலவர் போற்ற மங்களமாக வீற்றிருக்கக் கண்டேன். நம்மாழ்வார் நாயன்மார் நாவில் திருநடனம் புரியக் கண்டேன் சோழப் பேரரசில் உலகாளக் கண்டேன். இன்று என்ன காட்சி, என்ன கோலம்! பூவிழந்து பொட்டிழந்து எமது அன்னை தலை விரித்தழக் கண்டேன். காலில் தளைகள், கைக்கட்டுச் சங்கிலிகள், காடையர் பூசிய தார் திருமேனியில், அடி உதைபட்டுப் புண்பட்ட அங்கம், வாடிய வதனம், நீர் பெருக்கெடுத்து ஓடுங் கண்கள்.
“பதி யிழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த நிதியி ழந்தனம் இனி நமக்குளதென நினைக்கும் கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலேன்” அரிச்சந்திரனின் இந்நிலைமையே இன்று எமதுமாகும். இந்நிலைமையிலும் அரிச்சந்திரன் நேர்மையிலிருந்து விலக மறுத்தான். இதுவன்றோ விரதமும் வைராக்கியமாகும். என்ன நேரினும் எமக்குத் தமிழ் மொழியில் நீங்காப்பற்றுந் தணியா ஆர்வமும் இருக்க வேண்டும்.