Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா!


Guru

Status: Offline
Posts: 7468
Date:
சங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா!
Permalink  
 


சங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா!

 

Published on : 02nd November 2014TM-7

நாட்டுப் பெயர்

சங்கப் புலவர்கள் பழங்கால இந்தியாவை "நாவலந் தண்பொழில்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.

""மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல் /

நாவலம் தண்பொழில் வடபொழில் ஆயிடை'' (பரிபாடல்- 5: 7-8), (அவுணர்களைச் சுற்றத்தோடு தன் வேலால் அழித்த நாவலந் தீவு வட பகுதியில்), ""நாவலந் தண் பொழில் வீவின்றி விளங்க'' (பெரும்பாண்-465). (நாவல் மரத்தால் பெயர் பெற்ற குளிர்ந்த நாடு).

நாவலந் தீவு என்ற தொடர் ஏலாதியில் (56) வந்துள்ளது. அதற்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி "ஏழ் கடலுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு'' என்று பொருள் கூறியுள்ளது.

நாட்டு எல்லை

காரிகிழார் என்ற புலவர் பாண்டிய அரசனைப் புகழும்போது,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கு

என்று கூறுகையில் (புறம்.6.1-4) இந்திய நாட்டின் அன்றைய நாவலந் தீவின் எல்லைகளையே குறிப்பிடுகிறார்.

மாங்குடி மருதனார் இன்னொரு பாண்டிய மன்னனைப் புகழும்போது அந்த எல்லைகளைத் ""தென்குமரி வடபெருங்கல் / குணகுட கடலா எல்லை'' (மதுரைக் காஞ்சி. 71-72) என்று கூறுவதும், குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் சேரனைப் புகழும்போது, ""தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை'' (புறம்-17.1-2) என்று கூறுவதும் அறியத்தக்கது.

"வட பெருங்கல்' என்பது இமய மலையே.

பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனார் வட எல்லையை இமயம் என்றும், தென் எல்லையைக் குமரி என்றும் குறிப்பிட்டுள்ளார். ""ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்/ தென் குமரியொடு ஆயிடை''(11. 23-24). பரணர் தொன்மத்தைப் பற்றிப் பேசும்போது இமயம் என்ற சொல்லையும், ""அன்னம்.... இமயத்து உச்சி வானர மகளிர்க்கு மேவல் ஆகும்'' (நற்றி.386.3). தமிழ் அரசரின் வீரத்தைப் பேசும்போது இன உணர்ச்சியை வலியுறுத்தி உள்நிலை ஆக்கமாகத் "தொன்முதிர் வடவரை' (ஆரிய அலறத் தாக்கிப் பேரிசை / தொன்முதிர் வடவரை வணங்கு விற் பொறித்து / வெஞ்சின வேந்தனை பிணித்தோன்'' (அகம்.396. 16-19) என்ற தொடரையும் பயன்படுத்தியுள்ளது மொழிப் பயன்பாடு, சூழலை (இங்கு கருத்துச் சூழலை) ஒட்டியது என்பது சமூக மொழியியல் நோக்கு ஆகும். காரிக் கிழார் பயன்படுத்திய "பனி படு நெடு வரை' என்பது கடன் மொழிபெயர்ப்பு (கர்ஹய் ற்ழ்ஹய்ள்ப்ஹற்ண்ர்ய்) என்று கருதத் தகுந்தது. அதையே (வட) பெருங்கல் (புறம்17.1, ம. கா.71) என்று குறுங்கோழியூர் கிழாரும், மாங்குடி மருதனாரும் குறிப்பிட்டுள்ளது உள்நிலை ஆக்கம் (கர்ஹய் ஸ்ரீழ்ங்ஹற்ண்ர்ய்) என்றாகும்.

மக்கள்

வட இந்திய மக்கள் "ஆரியர்' என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டாலும் அவர்களில் பல வகையினர் இருப்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

1. பொது - (மாரி புரந்தர நந்தி) ஆரியர் / பொன்படு நெடுவரை (அகம்.398,18-19).

2. யானைப் பாகர் - ஆரியர் / பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு (அகம் 276, 9-10).

3. கழைக் கூத்தாடிகள் - ஆரியர் / கயிறாடு பறை (குறுந்.7.3.)

4. பொருநன் - ஆரியப் பொருநன் (அகம். 386.10)

5. போர் வீரர் - ஆரியப்படை (அகம். 336.22),

6. அரசர் - ஆரியர் அலறத் தாக்கி (அகம். 396,16).

"வடவர்' என்ற பொதுச் சொல்லும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அது வட இந்தியரையும் தமிழகத்தில் வட பகுதியில் உள்ள (அருவா வட தலை) மக்களையும் குறிக்கக் கையாளப்பட்டுள்ளது.

""வடவர் தந்த வான் கேழ் வட்டம் / குட புல உறுப்பின் (அகம். 340.16-17-வடநாட்டில் உள்ளவர் கொண்டு வந்த வெண்ணிற வட்டக் கல்லில் மேற்கே உள்ள பொதிகை மலை)

""வடவர் தந்த வான் கேழ் வட்டம் / தென்புல மருங்கில் சாந்தொடு பெயர'' (நெடுநல்வாடை, 51 வடவர் -52 - வடநாட்டில் உள்ளவர் கொண்டு வந்த வெண்ணிற வட்டக் கல்லும் தென்னாட்டில் விளையும் சந்தனக்கட்டைகளும் பயனற்றுக் கிடக்க)

""வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல் கெட'' (பட்டினப்பாலை 276-277 - வடவர் (தமிழ்நாட்டு வடவர் அருவா வடதலை) துன்பப்பட, குடவர் (தமிழகத்தின் மேற்குப் பகுதியில் உள்ளவர்) எழுச்சிக் குன்ற, தென் பகுதியில் உள்ளவர்கள் சுற்றம் கெட) என்பவை சான்றாகத் திகழ்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/வடக்கும் தெற்கும்

 

முன்னுரை

அண்மையில் இந்து மாபெருங்கடலை ஆழ்ந்து ஆராய்ந்த எழுபது பேரைக்கொண்ட இரஷியாவின் விஞ்ஞான அறிவுக் குழுவினர் அம்மாகடலின் அடிப்பொருள்களை ஆராய்ந்ததன் பயனாக அங்கே 1000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் (100 Million) நிலப்பரப்பு இருந்ததென்றும், இலங்கைக்குத் தென்கிழக்கில் 550 கல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயர மலை உள்ளதென்றும் முடிவு செய்து அந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். அந்த ஆய்வுக் குழுவின் தலைவராகிய பேராசிரியர் P. பெஸ்ருகெள (Prof. P. Bezrukov) கல்கத்தாவில் 20.2.61ல் இவ்வுண்மையை வெளியிட்டதோடு, கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஆழ்கடல் மலைக்கு 15-ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடலில் முதல் முதல் கப்பலோட்டிய இரஷியப் பெருமகனாரின் பெயரையே[1] சூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.[2] இந்த ஆராய்ச்சியை உலகம் ஏற்று வியக்கின்றது. இத்தகைய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுமானால், நம் நினைவில் உள்ள பல உண்மைகள் வெளியாவதோடு, நாம் நினைத்தே அறியாத பலப்பல புது உண்மைகளும் புலனாகும். இமயம் கடலுள் ஆழ்ந்த காலமும், குமரிக்கண்டம் சிறப்புறத் திகழ்ந்த காலமும் உண்டு என்றால் எள்ளி நகையாடிய காலம் மறையத் தொடங்கிவிட்டது. ஆகவே, அறிவியல் ஆராய்ச்சி நன்கு வளர வளர நமக்குப் பல உண்மைகள் தெரியும். அவற்றுள் பல மனித வரலாற்று ஆராய்ச்சி எல்லையைக் கடந்து நெடுந்துாரம் முன்னே சென்று காண வேண்டிய நிலையில் உள்ளன. பரந்த அண்ட கோளத்தின் ஓர் அணுவாகிய உலகில் நின்றுகொண்டு, கணக்கிட்டறிய முடியாத கால எல்லையில் ஒரு நொடியே நிற்கும் மனித இனத்தின்-வாழும் இன்றைய மனிதன், வரலாற்றை வரையறுக்க முடியாது என்பதை இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் நிறுவுகின்றன. சிறப்பாகப் பரந்த இந்தியத் துணைக் கண்டத்திலும், அதன் பகுதியாய் உள்ள தமிழகத்திலும் இந்தக் கருத்துக்கள் விளக்கம் பெறாவிட்டாலும், பன்னெடுங் காலமாக நாட்டில் நிலவிக்கொண்டே வருகின்றன.

இந்திய நாட்டு வரலாற்றின் எல்லையை ஆராயத் தொடங்கின், கானும் வரலாற்று மூலங்கள் வழி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மால் செல்ல முடியாது என்பது உண்மைதான். என்றாலும், அதற்கு முன் ஒன்றுமே இல்லாத அநாகரிக நாடாய் இது இருந்து, இதன்மேல் மையல் கொண்டு அலெக்ஸாந்தர் வந்தார் என்று ஆராய்ந்து, அதிலிருந்து வரலாற்றைக் கணிக்க முடியுமோ! அலெக்ஸாந்தர் படையெடுப்பே இன்று இந்திய நாட்டு வரலாற்று எல்லைக் கல்லாய் அமைகின்றது[3]. தமிழ் நாடாகிய தென்னகத்தைப் பொறுத்தவரையில் தொல்காப்பியர் காலத்தை அறுதியிட முடியவில்லை எனச் சிலர் நினைத்தாலும், அதன் காலமாகிய சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால எல்லையே வரலாற்று எல்லையாகின்றது. இன்னும் சற்று முன் சென்றால் 5000 ஆண்டுகள் வரை தெளிவற்ற வரலாற்றை ஓரளவு காண இயலும். “அதற்கு முன் என்ன?” என்னும் கேள்விக்கு வருங்கால ஆராய்ச்சிகளே பதில் சொல்ல வேண்டும்.

தெளிந்த வரலாற்றுக் கால எல்லையாகிய தமிழ்நாட்டுக் கடைச்சங்க கால எல்லையிலும், வடநாட்டு வரலாற்றை வரையறுத்துக் காட்டும் அசோகர் கால எல்லையிலும் கீழ் வரம்பை அறுதியிட்டுக்கொண்டு, தெளிவு பெறாத 5000  ஆண்டுவரை செல்லும் அந்தச் சிந்துவெளி - குமரி முனைக் கால எல்லையை மேல் வரம்பாகக்கொண்டு, இரண்டிற்கும் இடையில் நாடு இருந்த நிலையை ஒரளவு காண முற்படுவதே இந்த நூலின் நோக்கமாகும். குமரி தாழ இமயம் உயர்ந்த நாள் எது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதுவும் உலக வாழ்நாளில் ஒருநாள்தானே என்ற எண்ண அடிப்படையில் தொடங்கி, கடைச்சங்ககால இலக்கியங்கள் காட்டும் வரலாற்று எல்லை வரையில் தெரியும் ஒரு சில பொருள்களை ஆராய்ந்தே இந் நூல் நாட்டுக்குச் சில கருத்துக்களைத் தருகின்றது. இக்கருத்துக்களின் அடிப்படையில் பல அறிஞர் கள் மேனாட்டிலும் வடநாட்டிலும் ஒரு சிலர் தென்னாட்டிலும் ஆராய்ந்துள்ளார்கள். எனினும், அக்காலத்தில் இந்திய நாட்டின் வடக்கும் தெற்கும் இணைந்த நிலையை அவர்கள் தொகுத்துக் காட்டவில்லை. எனவே அவர்களது ஆய்வின் துணைகொண்டே இத்தொகுப்பை நான் வெளியிட நினைத்தேன். இதில் கூறப்பட்ட முடிபுகளோ, அன்றிக் கருத்துக்களோ, முடிந்த முடிபினைப் பெற்று விட்டன என்று நான் வாதிட விரும்பவில்லை. இன்று வரலாற்றுலகில் காணும் பல்வேறு பொருள்களும் அவை பற்றி எழுந்த நூல்களும், பிறவும் இந்த முடிபுகளையே நமக்குத் தருகின்றன என்றே நான் காட்ட முயன்றுள்ளேன். வருங்கால ஆராய்ச்சி உலகம் எத்தனையோ புதுப்புது உண்மைகளைக் கண்டு விளக்கலாம். அக்காலையில் இவ்வர லாற்று எல்லையின் வாழ்க்கை முறைகளும் பிறவும் எவ்வாறு அமைந்ததென்று யார் சொல்ல இயலும்? இந்திய நாட்டு வரலாற்றையே சிந்துவெளி அகழ்ந்தெடுப்பு (Indus Walley Civilization) மாற்றி அமைத்ததை உலகம் அறியுமே. எனவே, வருங்கால ஆராய்ச்சிக்கு ஏற்ப ஒரு சில முடிபுகள் மாற்றமும் பெறலாம். எனினும், இன்றைய ஆய்வு நெறிவழி இம்முடிபுகள் ஏறகத்தக்கனவே என எண்ணுகிறேன். அன்றி இப்போதும் முடிபுகள் மாற்றம் பெற வழியும் விளக்கமும் இருப்பினும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் தயங்கேன். இத்துறையில் இது முதல் முயற்சி. வரலாற்றுக்கு முன் தெற்கையும் வடக்கையும் பிணைத்துப் பார்த்துத் தொகுத்து எழுதியவர் உளரோ என எண்ணுகின்றேன். எனவே, எனது இந்த முதல் முயற்சியில் தவறோ மாறுபாடோ இருப்பின், எடுத்துக்காட்ட அறிஞர்களை வேண்டுகிறேன்.

“வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்” என்ற இந்நூல் பரந்த பாரத நாடாகிய இந்தியாவின் பழங்கால நிலையினையும், அன்றைய வாழ்க்கை முறை நாகரிகம் முதலியவற்றையும் ஒரளவு காட்டும் என்ற நம்பிக்கையோடு நாட்டு மக்கள் முன் இந்த நூலை வைக்கிறேன். “வடக்கும் தெற்கும்” பற்றி இன்று வளரும் பல்வேறு கருத்துக்களுக்கு இடையில் அவ்விரண்டின் பிணைப்பினையும் அதன் வழித் தெரிந்த வரலாற்றையும் இந்நூல் எடுத்துக் காட்டும் என்னும் துணிபுடையேன்.

இந்நூல் வெளிவருங்கால், ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி நல்ல முறையில் அச்சிட்டு வெளிவர உதவிய அறிஞர் மகா வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

 

தமிழ்க்கலை இல்லம்,பணிவார்ந்த,
சென்னை-30, 24.2.61அ. மு. பரமசிவானந்தம்

தமிழ்த்துறைத் தலைவர்
பச்சையப்பன் கல்லூரி சென்னை 30


  1.  Afanasy Nikitin.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

1. வடக்கும் தெற்கும்



வரலாறு வரையறுத்த எல்லைக்கு அப்பாற்பட்டது. அதை எல்லை இட்டு அறுதியிடச் சில அறிஞர்கள் நினைக் கின்றார்கள். உலகத்தின் வரலாறு விஞ்ஞானம் வளர்வதன் முன் வெறுங் கதை வடிவத்தில் இருந்தது. இந்திய நாட்டிலே இந்த உலகம் பற்றி எழுதப்பட்ட கதைகள் எத்தனையோ! இன்றும் அவற்றுள் பல வாழ்கின்றன. ஆயினும், அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்த பின்னர் உலக வரலாறே புது உருப் பெற்றது. உயிர்த் தோற்ற வளர்ச்சியின் வரலாறும், மனித இனத்தின் தோற்ற வளர்ச்சி வரலாறும் இப்படியே புதுப்புது ஆராய்ச்சிகளின் வழி மாறிக்கொண்டே வருகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இந் நில வரலாறும் உயிரின வரலாறும் மட்டுமல்லாது, பிற நாகரிக, பண்பாட்டு வரலாறுகளும் இந்த இருபதாம் நூற்றாண்டின் ஆராய்ச்சிகளின் வழியே புதுப்புது உண்மைகளை உலகுக்கு உணர்த்தித் தம்மை அறிமுகம் செய்துகொள்ளுகின்றன. மனித இனம் தோன்றி மெள்ள மெள்ள வளர்ந்த கடந்த கால நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வரையறுத்துக் காட்ட முடியவில்லை. ஏன்? மனிதன் வாழ்ந்த நெடுங்கால வாழ்வே நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாததாகவே அமைந்துள்ளது. ஒருவேளை இன்றைய அறிவியல் நெறி அழிவுப்பாதையை விட்டு ஆக்கத்துறையில் கருத்திருத்தித் தொன்மைப் பொருள்களை ஆராயப் பெருமுயற்சி செய்யின் ஒரளவு பழங்கால உண்மைகள் பலவற்றை உணரலாம். ஆனால், இன்று நாம் காண்பது எல்லையற்றதாகக் கணக்கிடப்பெறும் மனித வரலாற்றில் ஓர் ஐயாயிரமாண்டுக்கான வரலாறேயாகும்; ஆனால், அந்த வரலாறும் தெளிவு பெற்ற நிலையில் இல்லை.

இத்தகைய குறைந்த அளவில் உள்ள கால எல்லையை ஆராயும் வரலாற்றாசிரியர் எத்தனையோ வகைகளில் மாறுபடுகின்றனர்; தத்தம் கொள்கைகளையே உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலே பலப்பல வகையில் தம் எழுத்துக்களை எழுதி வைக்கின்றனர். இந்த வரலாற்று எல்லையிலே மொழிப் பூசலும், இனப் பூசலும் பிற பூசல்களும் தலை விரித்தாடுகின்றன. காய்தல் உவத்தல் அகற்றி ஆராய வேண்டுவது எல்லாத் துறைக்கும் உலகில் ஏற்புடைத்து என்றாலும், சிறப்பாக வரலாற்றுத் துறைக்கு அஃது இன்றியமையாததாகும். ஆயினும், சிலர் அந்த நிலைமாறித் தத்தம் கொள்கை வழியே தம் மொழி இனம் இவையே வரலாற்றில் முற்பட்டன என எழுதுகின்றனர். என்றாலும், மேல் நாட்டு ஆய்வாளர் சிலரும் இந்திய வரலாற்றாசிரியரும் உண்மையை உணர்ந்து எழுதுகின்றமையின், ஒரளவு கடந்த ஐயாயிரமாண்டுகளுக்குரிய வரலாற்றைச் சற்றுத் தெளிவாக அறிய முடிகின்றது.

தமிழ் நாட்டு வரலாற்றைப் பற்றியும் வடவிந்திய வரலாற்றைப் பற்றியும் புராண மரபுகளும் பிற கதைகளும் எத்தனை வகையில் கற்பனை செய்து காண்கின்றன! அவற்றை வரலாறு என்றே கொள்ள இயலாது. தென்னாட்டு மொழி, கலை, ஆட்சி அமைப்பை எத்தனை எத்தனையோ ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் கொண்டு செல்கின்ற கதைகள் பலப்பல. அவற்றையெல்லாம் வரலாற்றுக்குத் துணையாகக் கொள்ளின், உண்மை வரலாற்றை உணர இயலாது. அப்படியே வடநாடு பற்றிய வரலாற்றுக் கதைகளுமாம். எனவே, அவற்றை விடுத்துக் கடந்த ஐயாயிரமாண்டுகளில் வடக்கும் தெற்கும் எந்தெந்த வகையில் இணைந்திருந்தன எனக் காண்பதும், அதற்கு முன் அறிவியல் வழியில் கண்ட நிலப்பரப்பும் மக்கள் வாழ்க்கை நெறியும் அமைந்த வகையைக் காண்பதும் வரலாற்றுக்கு ஏற்பனவாகும். இவ்வாறு காணும்போது தமிழ் நாட்டில் கடைச்சங்க காலத்துக்கு முன் தெளிந்த வரலாறு இல்லை. வடக்கிலும் மெளரியப் பேரரசுக்கு முன் - அலெக்சாந்தர் படையெடுப்புக்கு முன் - வரையறுத்த வரலாறு இல்லை. அக்காலத்துக்கு முன் உள்ள சில வரலாற்றுச் சிதறல்களே நமக்கு இங்குத் தேவைப்படுவன. எனவே, தெளிந்த வரலாற்றுக் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன் சுமார் மூவாயிரமாண்டுக் காலத்தும், அதற்கு முன்பும் வடக்கும் தெற்கும் எவ்வெவ்வகையில் இணைந்து நின்றன என்பதைக் காண வேண்டுவதே நம்முடைய பணியாகும். இந்தத் துறையை இவ்வாறு வரையறை செய்து கொண்டு யாரும் இது வரையில் ஆராய்ச்சி செய்யவில்லை என்றாலும் பலர் தனித்தனி வகையில் ஒவ்வொரு முறையில் அக்காலத்தைச் சார்ந்த வரலாற்றை ஆராய்ந்துள்ளனர். அவர்கள் குறிப்புக்களின் அடிப்படையை ஒட்டியே நாமும் அக்கால வரலாற்றைக் காணல் நலம் பயப்பதாகும்.

உலகில் உள்ள மக்களை அவர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் இவற்றை ஒட்டியும், அவர்தம் உடற்கூறுகளின் அமைப்பை ஒட்டியும் சில வகுப்புக்களாகப் பிரித்துள்ளனர். மக்கள் முதலில் தோன்றி வளர்ந்த இடங்களென இரண்டைத்தான் பெரும்பாலும் வரலாற்றை உணர்ந்தவர் கூறுகின்றனர். ஒன்று, இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே இருந்த பரந்த நிலப்பரப்பாகும், மற்றொன்று, மத்திய தரைக் கடற்பகுதியாகும். இந்த இரண்டிடங்களிலோ, அன்றி இரண்டில் ஒன்றிலோ, மக்களினம் முதல் முதல் தோன்றிப் பிறகு மெள்ள மெள்ள உலகெங்கணும் பரவியிருக்க வேண்டுமென்பது அறிஞர் பலர் கண்ட முடிந்த முடிபாய் உள்ளது. இவ்விரண்டில் 'லெமூரியா' என்னும் குமரிக் கண்டம் இழந்த ஒன்றாகி விட்டது. எனவே, அதன் அடிப்படையை வைத்து ஆராய வழி ஏற்படவில்லை. எனவே, குமரி முனை தொடங்கி, மத்திய தரைக்கடல் எல்லை வரையில் உள்ள இன்றைய பகுதிகளை வைத்து மனித இனம் வளர்ந்த வரலாற்றை ஆராய்கின்றார்கள் நல்லாசிரியர்கள். தென்னிந்தியாவிற்கும் மத்தியத்தரைக் கடற்பகுதிக்கும் பல வகையில் ஒற்றுமைகள் இருப்பதைக் காண்கின்றோம். எகிப்திய, கிரேக்க, ரோம நாடுகளின் நாகரிகத்துக்கும், பழந்தமிழ் நாட்டு நாகரிகத்துக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன என வரலாற்று ஆராய்ச்சி விளக்குகின்றது. கிரேக்கர் தம் பழைய மொழியில் தம்மைத் ‘தமிலி’ (Tamili) என்றே வழங்கிக்கொண்டார்கள்.[1] திராவிடம், தமிழ் என்ற இரண்டு சொல்லையும் ஆராய்ந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆசிரியர் தென்னாட்டுத் ‘தமிழ்’ அமைப்பை நன்கு விளக்கி, அம்மொழி பேசுவோரைத் தமிழர் எனவே வழங்குவதோடு, அவர்களைத் தொன்மை வாய்ந்தவர்கள் எனவே குறிக்கின்றார்.[2] கிரேக்க நாட்டில் ‘ஹெலன் கால’ எல்லைக்கு முன் இந்திய மக்களைத் ‘தமிலி’ (Tamil) எனவே வழங்கியுள்ளார்கள்.[3] இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் திரு. சட்டர்ஜி அவர்கள் சில திராவிடக் குடும்பங்களாவது மத்தியத்தரைக் கடலில் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்று திட்டமாக வரையறுக்கின்றார்.[4] எனவே, இந்திய நாட்டுத் தொன்மையான வரலாற்றையும் அதனுடன் தொடர்புடைய மத்திய ஆசியா, மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றின் வரலாற்றையும் ஆராயும்போது தென்னாட்டு வரலாறு முக்கிய இடம் பெற வேண்டும் என்று ஸ்மித்து போன்றவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றார்கள்[5]. இவற்றையெல்லாம் நோக்கும்போது மத்திய தரைக்கடற் பகுதியிலிருந்து குமரி முனை வரையில் ஒரு காலத்தில் ஒரே இன மக்கள் இருந்தார்களோ என எண்ண வேண்டியுள்ளது

இன்று இந்திய நாட்டு வரலாற்றை ஆராய்கின்ற பலர் ஆரிய திராவிட மாறுபாட்டையே முக்கியமாகக் குறிக்கின்றனர். சிலர் இந்த அடிப்படையில் பல வரலாற்றுக்கு ஒவ்வாத புதுப்புதுக் கருத்துக்களைத் தத்தம் ஏடுகளில் எழுதிவிடுகின்றனர். சிலர் இந்த அடிப்படையிலே நாட்டில் பலப்பல பிரிவுகளை உண்டாக்குகின்றனர். இந்த உணர்வெல்லாம் சற்று ஒய்ந்து சிந்தித்துப் பார்ப்பின், பல நல்ல உண்மைகள் உலகில் விளங்காமற் போகா. குமரி முதல் இமயம் வரையில் இன்று இணைந்துள்ள பரந்த இந்தியா, கடந்த ஐயாயிரமாண்டுகளிலோ, அதற்கு முன்போ இருந்த நிலையை ஒருவாறு உணர இன்று வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் உள்ளன. அவற்றின் வழி ஆராய்ந்தால், பல நல்ல உண்மைகளும் மறுக்க முடியாத பல முடிவுகளும் பெற முடியும் என்பது உறுதி. அத்துறையில் நாமும் ஓரளவு துருவி ஆராய்வோம்:

ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாகச் சிந்து வெளியில் குடியேறிய காலம் ஐயத்துக்கு இடமின்றி அறுதி செய்யப்பட்டுவிட்டது. அதாவது, அவர்கள் கி.மு. 1500ல், இன்றைக்குச் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்தவர்கள் என்பதாகும். அவர்கள் சிந்து வெளியில் வந்து மெள்ள மெள்ளக் கங்கைச் சமவெளியிலும் குடியேறித் தமது நாட்டு அமைப்பை விரிவுபடுத்தினார்கள். அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இருக்குவேதம் உண்டாயிற்று. இரானிய நாட்டிலிருந்து ஆரியர் சிந்துவெளிக்கு வந்த காலம் கி.மு. 2000க்கும் 1500க்கும் இடையில் இருக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளனர்[6]. இருக்கு வேதம் உண்டானபோதிலும், அக்காலத்தில் எழுத்துக்கள் இன்மையின், அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஒருவர் மற்றவருக்குச் சொல்லியே அதைப் பாதுகாத்தார்கள். அதனாலேயே அது ‘சொல்லப் பட்டது என்ற பொருளில் வழங்கி வருகிறது போலும்! இருக்குவேதம் உண்டான பிறகு நெடுங்காலம் அவர்களுக்கு எழுத்தே இல்லை[7]. மற்றும், அதுவரை அவர்களுக்கு நிலைத்த வீடுகளோ, தெய்வங்களோ இருந்தனவாக அறிய இயலவில்லை. அவர்கள் தங்கள் கால்நடைகளாகிய ஆடு மாடுகளை நம்பியே பிழைத்து வந்தார்கள்; அவற்றைக் காக்க வேண்டுமெனவே, கடவுளரையும் உண்டாக்கி வழி பட்டார்கள்[8]. கலையும் அறிவியலும் அவர்கள் அறியாதன[9] அவர்கள் இந்திரனையே தங்கள் கால்நடைகளைக் காக்கும் தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள்[10]. பிரமன், திருமால், சிவன் என்ற மூன்று மூர்த்திகளும் அன்று அவர்களுக்குத் தெரியாதவர்கள். எனினும், சிவ வழிபாடு அவர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்ததென்பதைச் சிந்துவெளித் தொல்பொருளாராய்ச்சி நமக்கு நன்கு காட்டுகின்றது. கிருட்டிணனும் அவர்களுக்கு விரோதியே[11] அனுமனும் அவர்களுக்குப் பிற்பட்டோர்களின் கடவுளாக வேண்டும். வேதத்தில் அனுமன் என்ற பெயரே இல்லை.[12]

ஆரியர்கள் இங்கு வருமுன் வாழ்ந்த மக்கள் நாடு நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்ததைக் கண்டு தாங்களும் வீடுகள் கட்டக் கற்றுக்கொண்டார்கள்[13]. கட்டுப்பாடான குடும்பவாழ்க்கை முறையும் அதன் அடிப்படையில் அமைந்த நால்வகைச் சாதிப்பாகுபாடும் அக் காலத்தில் உண்டாயின[14]. அவர்கள் பல நம்பிக்கைகளால் ஏற்பட்ட அச்சத்தால் கடவுளைப் போற்றினார்கள். சிவப்புப் பசு வெள்ளைப் பால் தருவது தேவரால் நடைபெறுவதென இருக்கு வேதம் எடுத்துக் காட்டுகின்றது[15]. சூரிய உதயம் அதிசயமான ஒன்று என அவர்கள் கொண்டார்கள்.[16] இந்திரனே முக்கிய தெய்வமாகக் கேட்கக் கேட்கத் தருபவனாக விளங்கினான்[17]. பசு எருது முதலியவற்றைப் பலி கொடுக்கும் வழக்கமும் அக் காலத்தில் இருந்து வந்தது. யாகமே இந்த ஆரிய அடிப்படையில் வளர்ந்த இந்தோ ஐரோப்பியர்தம் செயல் எனப் புலாஸ்கர் எடுத்துக் காட்டுகின்றார்[18]. ஆரியருக்கு அக்காலத்தில் மொத்தம் முப்பத்து மூவர் கடவுளர் இருந்தனர் என்றும், பதினொருவர் விண்ணிலும் பதினொருவர் மண்ணிலும், மற்றைப் பதினொருவர் நீரிலும் இருந்தனர் என்றும் வேதம் சொல்லுகின்றது[19]. இவர்களைப் பற்றிய விளக்கங்களெல்லாம் இங்கே நமக்குத் தேவையில்லை. இந்த இருக்கு, முன் கண்டபடி கி. மு. 2000க்கும் 1500க்கும் இடையில் தோன்றிக் காது வழியே கேட்கப்பெற்று, சுமார் 400 ஆண்டுகள் கழித்து எழுதி வைக்கப்பெற்றது. அதற்கு இடையில் இதில் உருத்திரனும், விஷ்ணுவும், பிற கடவுளரும் குறிக்கப் பெறுகின்றனர் என்றாலும் அவர்கள் முக்கியமாகப் போற்றப்படவில்லை. விஷ்ணு ஒரு பணியாளராகவே (worker) காட்டப்படுகின்றனர்[20]. உருத்திரனும் ஒரு குறையாகவே காட்டப்படுகின்றான். மங்கலமாகக் காணும் சிவனும் திருமாலும் சக்தியும் அவர்களுக்கு விளங்காதவர்களே. மற்றும் எங்கும் நிறைந்த பரம்பொருள் என்ற கடவுள் உணர்வு அவர்களுக்குத் தெரியாது[21]. பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்துக் கங்கைச் சமவெளியில் உருவாகிய அதர்வண வேதத்திலேதான் அந்தக் குறிப்பு ஓரளவு காட்டப்படுகின்றது[22]. அதிதி, ஆதித்தர், பிரகஸ்பதி போன்ற தெய்வங்கள் உள்ளன. அக்காலத்தில் அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த பரந்த இந்திய நாட்டு மக்களோடு போரிட்டதோடு, அவர்களுக்குள்ளேயே ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் போராட்டம் இருந்திருக்கிறது. அவர்கள் பாடல்கள் பெரும்பாலும் வெற்றிப் பாடல்களாய் இருப்பதால், அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றார்கள் எனக் கொள்ள இடமுண்டு. அவர்கள் கங்கைவெளிக்கு வருமுன்பும் வந்த பின்புமேதான், அப்பகுதிகளில் தங்கி வாழ்ந்த மற்றவர்களைப் பற்றியெல்லாம் எண்ணித் தங்கள் வாழ்க்கை பற்றியும், சுற்றுச் சூழல் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் எண்ணத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் எண்ணத்தால் எழுந்த இலக்கியங்களும், வாழ்க்கை முறைகளும், பிறவும் அளப்பில. அவற்றுள் பெரும்பாலான இன்றளவும் வாழ்கின்றன என்பது பொருந்தும். அந்தக் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த இருக்கு வேதமோ பிறவோ இன்று நாம் காணும் சம்ஸ்கிருத அமைப்பில் இல்லை என்பதும் அன்றைய அவர்தம் மொழி இக்காலச் சம்ஸ்கிருதத்திற்குப் பல வகையிலும் வேறுபட்டது என்பதும் வரலாற்றறிஞர் காட்டும் உண்மையாகும்[23]. இன்றைய சம்ஸ்கிருதம் பெரும்பாலும் சுமார் கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலேதான் செம்மை செய்யப்பெற்றது என்பதும் மொழி ஆராய்ச்சி வழியும் பிற நிலையிலும் புலனாகும் ஒன்றாகும்[24]. இவற்றாலெல்லாம் ஏறக்குறைய இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவில் குடியேறிய ஆரியர் பற்றியும் அவர்தம் அக்கால வாழ்க்கை பற்றியும் நன்கு அறிய முடிகின்றது. இந்த அளவிலேதான் அவர்கள் இருக்கு வேதத்தை ஒரு சிறு அளவு வரலாற்று எல்லைக்கு உரியதாகக் கொள்ளலாமேயன்றி அதை முழுக்க முழுக்க வரலாற்றுக்கு முழுநூலாகக் கொள்ள இயலாது[25]. இனி அவர்கள் வரும் காலத்தும் அவர்கள் வருகைக்கு முன்பும் இந்த இந்திய நாடு இருந்த நிலையையும் இதில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கை முறையையும் பற்றி சில சிந்தித்துப் பார்க்கலாமன்றோ!



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

குமரி நாட்டிலிருந்து வடக்கு நோக்கி மெள்ள மெள்ளக் குடியேறி இந்தியா முழுதிலும் அதன் எல்லை கடந்தும் ஒரு காலத்தில் வாழ்ந்தவரே திராவிடர் என்றும், மத்திய ஆசியாவில் தோன்றிப் பல்வேறு திக்குகளில் பரவிச் சென்றவரே ஆரியர் என்றும் வரலாற்றறிஞர் பலர் எழுதி வந்தனர்; இன்றும் எழுதுகின்றனர். பரந்த குமரிக்கண்ட நிலப்பரப்பிலேதான் புராணங்களில் காணப்பெறுகின்ற பல வீரர்கள் வாழ்ந்தார்கள் எனக் கூறுவர். இலங்கையும் மகேந்திர மலையும், பிற நாடுகளும் அங்கிருந்தன என்பர். புராண மரபுகளை அப்படியே சரியெனக் கொள்ள முடியவில்லை என்றாலும், அழிந்த குமரி நாட்டில் சிறந்த வீரர் பரம்பரைகள் பல வாழ்ந்திருந்தன எனக் கூறல் தவறாகாது. அந்தப் பரம்பரையினர் மிகு பழங்காலத்தே உலகம் முழுதும் பரவியிருந்தார்கள் என்றும், அவர்கள் பரம்பரையினரே மத்தியதரைக் கடற்பகுதிகளில் குடியேறி யிருந்தார்களென்றும், இங்கும் இமயத்தையும் தாண்டிச் சென்றார்கள் என்றும், பின் பெரு நிலப்பரப்பு அழிய, அவர்கள் முன் கொண்டிருந்த தொடர்பெலாம் அழிய, அங்கங்கே நிலைத்துவிட்டார்கள் என்றும் கூறுவர். இக்கூற்று உண்மையெனக் கொண்டாலும், அந்நிகழ்ச்சி எத்தனையோ, ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒன்றாக இருக்கவேண்டும். அந்தக் கால எல்லை இன்றைய வரலாற்று ஆராய்ச்சி எல்லைக்கு அப்பாற்பட்டதேயாகும். இந்துமகா சமுத்திரம் பரந்த நிலப்பரப்பாய் இருந்ததென்பதையும், இமயம் கடலுள் இருந்த தென்பதையும் தொல் பொருள் ஆராய்ச்சியாளரும், நில ஆராய்ச்சியாளரும், பிற தனித்துறை வல்லுநரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். எனினும், அங்கிருந்த மக்கள் இனமே உலகம் முழுவதும் பரவிற்று என்பதைத் தக்க சான்று கொண்டு காட்ட இயலவில்லை. ஆகவே, அது உண்மையென உணர்கின்ற வரையில் மக்களினம் நாட்டில் நுழைந்த வரலாறு பற்றிப் பிறர் கூறுவதை ஓரளவு சரி என்றே கருதி மேலே காண்போம்,

மத்திய தரைக்கடல் மக்களின் வாழ்வுக்கும் திராவிட மக்களின் வாழ்வுக்கும் பல தொடர்புகள் உள்ளன என்பதை மேலே கண்டோம். எனவே, திராவிடர்களும் ஆரியர்களைப் போன்று அங்கே இருந்து ஆரியருக்கு முன் உள்ளே புகுந்து வடவிந்தியப் பகுதிகளையெல்லாம் உரிமையாக்கிப் பின் மெள்ள மெள்ளத் தெற்கேயும் வந்து தங்கினார்களோ என்று காட்டும் ஆராய்ச்சி உண்மை எனக் கொள்ள வேண்டிய ஒன்று போலும்!

ஆரியர் இந்தியாவிற்கு வந்தபோது சிறந்த மக்களினத்தார் அவரினும் மேம்பட்டவராய் உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் நிறைந்தவராய் வாழ்ந்தனர் என்பதை வரலாற்று உலகம் கொண்டுள்ளது. அந்த இனத்தவரையே பலரும் திராவிட இனத்தவர் என்பர். அவ்வாறு கூற விரும்பாத சிலர் 'ஆரியருக்கு முற்பட்டவர்’ என அவர்களை வழங்குவர். அப்படியாயின், அவர்கள் பெயரற்றவர்களாகவா வாழ்ந்தார்கள்? இல்லை. எனவே, அன்று பரந்த பாரதம் முழுவதிலும் இருந்தவர்களைத் திராவிடர் எனக் கொள்வதில் தவறு இல்லை. இந்த உண்மையை S. K. சட்டர்ஜி அவர்கள் நன்கு காட்டுகின்றனர்; ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் மத்திய தரைக்கடற் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி வந்து, இந்தியா முழுதும் பரவிக் கோட்டைகளையும் நகரங்களையும் உண்டாக்கி, இமயம் முதல் குமரி வரை வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என அறுதியிட்டுக் காட்டுகின்றார்[26]. இந்த உண்மை, மொழி அடிப்படையிலும் வேறு பல வகைகளிலும் நன்கு விளக்கப் பெறுகின்றது. திராவிட மொழியின் மொழிச் சிதறல்கள்கூறுகள்-வடமேற்கே பலுசிஸ்தானத்திலும் தென்கிழக்கிலே ஆசாமிலும், மத்திய சூடிய நாகபுரியிலும் உள்ளமை இந்த உண்மையை நன்கு வலியுறுத்துமன்றோ? இன்று தென்னாட்டிலுள்ள் திராவிடருடைய பழக்க வழக்கங்களும் பிற பண்பாட்டியல்புகளும் இன்றும் வட இந்தியாவில் பல பகுதிகளில் உள்ளமையும் இந்த உண்மையை நன்கு எடுத்துக் காட்டுவதாகும்[27]. A. D. புலாஸ்கர் என்பவரும், ஆரியர் வருமுன் இந்தியாவில் சிறந்த பல பேரரசுகளும், நாடுகளும், நகரங்களும், பண்பாடுகளும் மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்றும், அவை திராவிட அடிப்படையைச் சார்ந்தன எனக்கொள்ளல் தவறாகாது என்றும் எடுத்துக் காட்டுகின்றார்[28]. இந்த நாகரிகமும் பண்பாடும் பிற வழிபாடு, வாழ்க்கை, மொழி, கலை முதலியனவுமே சிந்துவெளி நாகரிகத்தால் நாம் அறிவனவாகும் எனவும், எனவே, சிந்துவெளி நாகரிகக் கால எல்லையாகிய கி. மு. 3000 ஆண்டில் திராவிடர் இந்தியா முழுவதும் இருந்தார்கள் எனக் கொள்வது பொருந்தும் எனவும் சட்டர்ஜி அவர்கள் குறிப்பதும் இங்கு எண்ணத்தக்க ஒன்றாகும்[29]. ஆரியர் இந்திய நாட்டிற்கு வந்தபோது திராவிடர்கள் நகர்களும் கோட்டைகளும் கட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள் என வரலாற்று ஆசிரியர் பிறரும் நன்கு விளக்குகின்றனர்[30]. இவர், திராவிடர்கள் இந்தியாவின் பழங்குடிகளே எனக் காட்டுவர்[31]. இவர்களுடைய திராவிடப் பண்பாடு இங்கிருந்தே பிற உலகப் பகுதிகளுக்கு-பலுசிஸ்தானம், மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றிற்குச் சென்றிருக்கலாம் எனக் கூறுவார்கள். திராவிடர்களின் வட்டெழுத்து முறையும் செமிட்டிக் (Semitic) அடிப்படை யில் உண்டாயிற்று எனக் கூறுவர்; சிந்துவெளி மொழி, திராவிட மொழியை ஒத்ததே எனவும் காட்டுவர்[32]. திராவிடரே மிகப் பழைமையான நாகரிகம் வாய்ந்த இந்திய மக்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்[33]. திராவிடர்கள் ஆரியரினும் வேறுபட்ட நாகரிகம் உடையவர்களென்றும், உழவு அவர்களது முக்கியத்தொழிலாய் இருந்ததென்றும், நல்ல இலக்கியங்களை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்றும் குறிக்கின்றனர்[34].

வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவை ஆராய்ந்த பானர்ஜி அவர்கள், இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து சில உண்மைகளை நிறுவியுள்ளனர். திராவிட மக்கள் இறந்தவரைத் தாழியில் புதைத்தார்கள் என்ற உண்மையைத் தமிழ் நாட்டுப் புதைபொருள்கள் இன்று நன்கு விளக்குகின்றன. இந்த முறையும் தாழிகள் அமைப்பும் பல நாடுகளில் தமிழ் நாட்டில் உள்ளவை போன்றே இருக்கின்றன எனக் காட்டியுள்ளார்[35]. மத்திய தரைக் கடல் நாடுகள், மெசபட்டோமியா, பாபிலோன், பிரஷ்யா, பலுசிஸ்தான், சிந்துவெளி ஆகிய பகுதிகளில் அவை அகழ்ந்தெடுக்கப்படுகின்றன எனக் காட்டியுள்ளனர். திராவிடர்களுக்குக் கொளுத்தும் பழக்கம் இல்லை என்றும், ஆரியரோடு கலந்த பிறகே அந்தப் பழக்கத்தை மேற்கொண்டார்கள் என்றும் காட்டியுள்ளனர். சிந்து, பலுசிஸ்தானம் ஆகிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபொருள்கள் அவை திராவிடர்களுடையன என்றும், அக்காலத்தில் திராவிடர் செம்பைப் பயன்படுத்தினர் என்றும் காட்டுகின்றன என்பர்[36]. மற்றும் சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளில் பல, சென்னைச் செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லவபுரம், பெரும்பெயர் ஆகிய ஊர்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழிகளை ஒத்துள்ளன எனவும் காட்டுவர். மற்றும் மத்திய தரைக்கடலில் பழங்காலத்தில் கிரீட்டில் (Crete) ஹெரடொட்டஸ் (Herodotus) காலத்தில் இத்தகைய தாழிகள் இருந்தனவாம். அப்புதைபொருள்கள் குமரி முனையையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கப் பயன்படுகின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன அல்லவா?* [37]

பழங்காலத் திராவிட மக்கள் நல்ல பணப்புழக்கம் உடையவர்கள் என்றும், நிரம்ப நாணயங்கள் வைத்திருந்தார்கள் என்றும், பல அணைகள் கட்டி உழவுத் தொழில் செய்தார்கள் என்றும், அவ்வாறு கட்டி அழிந்த அணையின் சிதறல்கள் இன்றும் பலுசிஸ்தானத்தில் உள்ளன என்றும் காட்டுகின்றனர்[38]. மற்றும், ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது, வடவிந்தியா முழுவதிலும் திராவிடர்களே பரவி இருந்தார்கள் என்றும், ஆரியர் கங்கைச் சமவெளிக்கு வந்த போது, மகதம், தெற்குப் பீகார், இராஜபுதனம் ஆகிய பகுதிகளைத் திராவிடர்கள் ஆண்டார்கள் என்றும், அவர்களை ஆரியர்கள் அரக்கர் எனவே வழங்கினார்கள் எனவும் காட்டுவர்[39]. மற்றும் திராவிடர் இந்திய நாட்டில் மட்டுமன்றிக் கிழக்கே சுமத்திரா தொடங்கி மேற்கே மத்திய தரைக்கடல் வரை தம் பண்பாடும் நாகரிகமும் பரவ வாழ்ந்த ஒரு பெரும்பரம்பரையினர் எனவும் காட்டுகின்றனர்.[40]

இதுவரையில் நாம் கண்ட அனைத்தும் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டவற்றை விளக்கும் சான்றுகளாகும். இவை பற்றி நாம் மேலே கண்ட சில ஆசிரியர்களைத் தவிர்த்து, எண்ணற்ற அறிஞர் எழுதியுள்ளனர். மேலே கண்ட ஒவ்வொரு நூலிலும் அவர்கள் பலப்பல மேலை நாட்டு இந்திய நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் எழுத்துக்களைத் தத்தம் கூற்றுக்களுக்குச் சான்றுகளாக எடுத்துக் காட்டுகின்றார்கள். அவற்றையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டின், நூல் பெருகும் என்பதோடு, முடியாத ஒரு பெருஞ்சுமையுமாகிவிடும் என்று கூறி அமைகின்றேன். நூலுக்கு இடையில் கட்டுரைகளுக்குத் தேவையான வரலாற்று மேற்கோள்களை ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளேன். இன்னும் நல்ல விளக்கம் வேண்டுவோர், அவர்தம் முழு நூல்களையும், அவற்றின் துணையாய் உள்ள பிற வரலாற்றறிஞர் நூல்களையும் படித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இங்கே காட்ட விரும்பினவை ஒரு சிலவே. அவை, ஆரியர் இந்தியாவிற்கு வடமேற்குக் கணவாய் வழியாக இன்றைக்கு மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் வந்தார்கள் என்பதும், அவர்கள் வரும் காலத்தில் மிகச் சாதாரண மக்களாக, மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுள் எங்கோ பின்னால் இருந்தார்கள் என்பதும், அவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு முன்னால் தெற்கிலிருந்தோ அன்றி மேற்கிலிருந்தோ வந்து இந்தியா முழுவதும் பரவி இருந்த பெருங்குடி மக்கள் திராவிட இனத்தவர் என்பதும், அவர்களை அப்பெயரால் வழங்க இயலவில்லை என்றாலும் பின்னால் அப்பெயரால் வழங்கப் பெற்ற அவர்தம் முன்னோர்கள் பரந்த பாரதம் முழுவதும் இருந்தார்கள் என்பதும், அவர்கள் சிறந்த நாகரிகமும் பண்பாடும் கொண்டவர்களாய், நகர் அமைத்து, அணை கட்டிப் பயிர்த்தொழில் செய்து பலவகையில் சிறந் திருந்தார்கள் என்பதும், புதியவராய் வந்த ஆரியர் அவர்களைப் போரில் வென்று வென்று மெள்ள மெள்ளத் தெற்கே துரத்தினர் என்பதும், என்றாலும் இன்றளவும் அவர்கள் வாழ்ந்ததை விளங்கவைக்கும் பல சான்றுகளை அத்திராவிடர்கள் அவ்வடவிந்தியாவில் விட்டே வந்துள்ளார்கள் என்பதும், பின்னர் ஆரியர்கள் தங்கள் ஆணை வகையில் இந்தியநாட்டுப் பரப்பைப் பல வகையில் ஆளத் தொடங்கினார்கள் என்பதும் ஆகும். இன்று இந்திய வரலாற்றை ஆராயும் அறிஞர்கள் இந்த உண்மையை ஒத்துக் கொள்ளத்தக்க சான்றுகள் பலப்பல பல துறைகளிலும் உள்ளன. இப்படி உண்மையைக் கூறுவதால் ஒரு சாராருக்கு உயர்வோ மற்றொரு சாராருக்குத் தாழ்வோ உண்டாயிற்று என்று கூற முடியாது. அவரவர் கால எல்லையில் நின்று அவரவர் இனமும் பண்பாடும் வளருவதை உண்மையில் விளக்கிக் காட்டுவதுதான் வரலாறே அன்றி, அந்த அடிப்படை உண்மைகளை மாற்றித் தத்தம் விருப்பம் போல ஒருவரை உயர்த்துவதோ அன்றித் தாழ்த்துவதோ வரலாறு என்று எவ்வாறு கொள்ள முடியும்? இந்த அடிப்படையில் நின்றே அக்காலத்து வடக்கும் தெற்கும் ஒன்றிய வகையை சில கட்டுரைகளில் பின்னால் விளக்கியுள்ளேன். இனி ஆரியர் வடநாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் பரவி, அங்கு வாழ்ந்த மக்களோடு நெருங்கிக் கலந்த பிறகு எப்ப்டி அவர்தம் கலப்பும் கொள்கையும் விரவின என்பதையும் காணலாம்.

சந்திரகுப்தப் பேரரசுக்கு முன்னே சிறந்த பேரரசுகள் வடவிந்தியாவில் இருந்தன எனினும், அவை பற்றிய திட்டவட்டமான குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, அக்கால எல்லையில் நாமும் நின்று அக்காலத்தில் வடக்கும் தெற்கும் இணைந்ததைக் காட்டும் இரண்டொரு சான்றுகளையும் காணலாம். இதற்கும் நாம் முன் கண்ட ஆரியர் கங்கைக் கரைக்கு வந்த காலத்துக்கும் இடையில் ஓர் ஆயிரமாண்டுகள் கழிந்துவிட்டன. அந்த ஆயிரமாண்டுகளில் நாட்டில் என்னென்ன நடைபெற்றன என்பதைத் திட்ட மாகக் காட்ட முடியவில்லை. என்றாலும், அந்த நீண்ட நாட்களிலேதான் சிந்து சமவெளியிலிருந்து கங்கைக் கரைக்கும் அடுத்து மெள்ள மெள்ளத் தெற்கு நோக்கித் தமிழ்நாடு வரையிலும் ஆரியர்கள் போராலும் பிறவற்றாலும் தம் ஆணையைப் பரப்பிக்கொண்டு வந்தார்கள் என்பது தெரிகின்றது. அக்காலத்திலேதான் சம்ஸ்கிருதத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் எழுதப்பெற்றன. பாரதப் போர் ஏறக்குறைய, கி.மு. 1400ல் நடைபெற்றதென்பர். இராமாயணம் அதற்கு முந்தி என்பாரும் பிந்தி என்பாரும் உளர். இப் பாரத காலத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால், பிந்தியது என்பதே அதற்குப் பொருத்தமானதாக அமையும். எப்படியும் அவர்கள் கங்கை சிந்துசமவெளி வந்த பிறகு, பரந்த இந்திய நாட்டைப் பற்றியும் அறிந்த பிறகேதான் அவை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். அவற்றைப் பற்றி இதிகாச வரலாற்றுக் கதைகள் நூல் வடிவிலே நெடுங் காலத்துக்குப் பின்னரே வந்திருக்க வேண்டும். வேதத்தைப் போன்றே இவையும் பல காலம் கேள்வி வழியாகவே வந்திருக்கலாம். அன்றி, முதலிலேயே எழுதப்பெற்றனவாயினும், இன்று நாம் காண்பதற்கும் இவற்றின் முதல் எழுத்துக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்திருக்கவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மற்றும் இக்காலத்திலேதான் வடவிந்தியா ‘ஆரியா வர்த்தம்’ என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும். ஐம்பத்தாறு தேசத்து அரசர் பற்றிய கதைகள் பல இக்காலத்தனவேயாகும். வடவிந்தியாவைப் பல வகையில் துண்டாடித் தத்தமக்குக் கிடைத்த வரையில் அவரவர் கைப்பற்றி ஆண்டிருக்கவேண்டும். இக்காலத்திலேதான் இந்த நாட்டுப் பழங்காலப் பல வகைப் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் பிற நல்லியல்புகளையும் வந்தவர் கைக்கொண்டு தம்மவை ஆக்கிக்கொண்டிருக்க வேண்டும். மற்றும் சிவன், திருமால், சத்தி போன்ற கடவுளரைக் கண்டு வழிபடும் முறைகளும் அவற்றையொட்டிய சமய நெறிகளும் உண்டான காலமும் இதுவேயாகவேண்டும். இக்காலத்திலேதான் அவர் தம் சமயம் வளர்ந்ததோடு, அவர்தம் வைதிக சமயத்துக்கு மாறாக வடவிந்தியாவில் சமண புத்த மதங்களும் தோன்றி ஒன்றற்கொன்று மாறுபட்டுப் போர்களை நடத்தியிருக்க வேண்டும். இப்படிச் சமயம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் இரு சாராருக்கும் வடநாட்டில் போராட்டம் நடந்த காலமாக அந்த ஆயிரமாண்டுகளையும் கொள்வது பொருத்தமாகும். முடிவில் வந்தவர்தம் வாழ்வே வெற்றி பெற்றது என்பதையும் வரலாறு காட்டுகின்றது.

அதே காலத்தில் தெற்கே தமிழ் நாட்டில் அமைதி நிலவிற்று என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் தோன்றிய காலம் அதுவேயாம். அதன் காலத்தைப் பல வரலாற்று அறிஞர்கள் இன்றைக்கு மூவாயிரமாண்டுகளுக்கு முற்பட்டது என்பர். அதாவது, ஆரியர் இந்தியாவுக்கு வந்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து என்பதாம். அந்த ஐந்நூறு ஆண்டு இடைக்காலத்தில் ஆரியர் மெள்ள மெள்ள இந்திய நாட்டின் தென்கோடி வரையில் வந்துவிட்டனர் எனக் கொள்வதில் தவறு இல்லை. வருணப் பாகுபாடும், வருணன் போன்ற கடவுளர் வழிபாடும், பிற இரண்டொரு குறிப்புக்களும் தொல்காப்பியத்தில் வருவது கொண்டு அக்காலத்தே ஆரியர் தமிழ் நாட்டில் குடியேறிவிட்டனர் எனக் கொள்வது வரலாற்றுக்குப் பொருத்தமானதேயாகும். ஆயினும், அவர்கள் தங்கள் கொள்கை முதலியவற்றை வடநாட்டைப் போன்று இங்கு நிலைநாட்ட முடியவில்லை என்பதையும் உணரவேண்டும். அன்று மட்டுமன்றி, இன்றளவும் அவ்வேறுபாடு அப்படியேதான் நிற்கின்றது என அறிகின்றோம். எனவே, அந்த இரண்டொரு குறிப்புக்களை இடைச்செருகல் எனக் கொள்ளாது, அவற்றை அப்படியே கொண்டு, அக்காலத்தில் ஆரியர் தமிழ் நாட்டில் கால்வைத்துவிட்டனர் எனக் கொள்வதில் தவறில்லை எனல் பொருந்தும்.

ஆரியர்தம் மொழியியலும், பிற பண்பாடு முதலியனவும் பரந்த இந்தியா முழுவதும் பரவினவாயினும், தமிழ் நாட்டில் மட்டும் அன்று அவை இடம் பெறமுடியாது நின்றுவிட்டன. கடைச்சங்க கால எல்லை வரையில் தமிழ் நாடு ஒன்றிலும் மற்றவருக்கு முடிவணங்கா வகையில் நிமிர்ந்து வாழ்ந்தது. கடைச்சங்க காலத்தில் பல குறிப்புக்கள் வடக்குப் பற்றியும், அதன் வரலாறுகதை பண்பாடு பற்றியும் வருகின்றனவேனும், அவை தமிழ் நாட்டை வென்றதாகக் காண முடியவில்லை. மாறாகத் தமிழர் அவற்றை வென்று கொண்டனர். எனவே காண்கின்றோம். எனவே, இந்நூல் வரலாற்று எல்லையென நாம் கொள்ளும் கடைச்சங்க காலம் வரையில், தமிழ் நாட்டார் பிற நாட்டவர் இடையீடும் தொல்லையும் இல்லாமல் வாழ்ந்தனர் என்பது பொருந்தும்.

இக்கடைச்சங்க காலத்துக்கு முன்னும் இதை ஒட்டியும் பலர் இவ்வடக்கையும் தெற்கையும் பிணைத்துக் காட்டுகின்றனர். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியனை வாழ வைத்த பெருமை கெளடில்லியர் என்ற சாணக்கியருக்கு உண்டு. அவர் தம் அர்த்தசாத்திரத்தில் தெற்கே உள்ள தமிழ் நாட்டைக் குறிக்கின்றார். தாமிர வருணியும், பாண்டி நாடும், ஈழமும் அதில் குறிக்கப்பெறுகின்றன. அக்காலத்தில் வடநாடும் தமிழகமும் வாணிபத்தில் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து சிறக்க வாணிபத் தொழிலை நடத்தின என அவர் குறிக்கின்றார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் உயர்ந்த மணிகளாகிய நவரத்தினங்களும், பிற உயர்ந்த பொருள்களும் இருந்தன எனவும் அவை வடநாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன எனவும் குறிக்கின்றார். வின்சென்டு ஸ்மித்து அவர்கள் இவற்றையெல்லாம் காட்டி அக்காலத்திலேயே வடநாடும் தென்னாடும் பல வகையில் இணைந்திருந்தன எனக் குறிக்கின்றார்[41]. சங்க இலக்கியத்தில் வரும் மாமூலனார் பாடல்கள் இவ்வுண்மைகளையே விளக்குகின்றன. ‘இந்திய வரலாற்று நூலும்’ இவ்வுண்மையை நன்கு குறிக்கின்றது[42]. மைசூர் நாட்டுக் கல்வெட்டு ஒன்று சந்திரகுப்தர் வடக்கு மைசூரை ஆண்டதாகக் குறிக்கின்றது[43]. இவ்வாறு ஸ்மித்து போன்ற வரலாற்று ஆசிரியர் பலர் ஆராய்ந்து கண்ட உண்மைகளைச் சிலர் தம் கருத்துக்கு ஏற்ப இல்லை எனக் கூற முன்வருவதை நினைக்க வருந்தாது என் செய்ய முடியும்?

இனி, ஏறக்குறைய இக்காலத்தில் வந்த பிற நாட்டார் குறிப்புக்களும் வடக்கையும் தெற்கையும் பிணைத்தே பேசுகின்றன. கி. மு. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் இந்தியா வந்த மெகஸ்தனிஸ், தாலமி போன்ற வரலாற்றறிஞரெல்லாரும் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் தமிழ் நாட்டில் மூவேந்தர் இருந்தனரென்றும் குறிக்கின்றனர். இவ்வாறு அக்கால எல்லையில் வடக்கும் தெற்கும் இணைந்து நின்றன. அதை அடுத்து ஒரு சில நூற்றாண்டுகளிலும் இந்த நிலையைக் காண்கின்றோம். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனது வடநாட்டு யாத்திரைக்கு உதவியவர் நூற்றுவர் கன்னர் என்பதும், அவரை வரலாற்றறிஞர் சதகர்ணி என முடிவு செய்தனர் என்பதும், அந்தச் சதகர்ணி என்ற பரம்பரையினர் ஆந்திர நாட்டு எல்லையில் ஆரியருடனும் நாகருடனும் தொடர்பு கொண்டு ஆண்டனர் என்பதும் வரலாறு கண்ட உண்மைகளாகும்[44]. ஏறக்குறைய அக்காலத்தை ஒட்டியே பின்னர் பஞ்சாபு வழியாக வந்த மற்றொரு மரபினராகிய பல்லவர் மெள்ள மெள்ளத் தெற்கு நோக்கி வர வழி தேடிக்கொண்டிருந்தனர் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் வாகடகர் ஆட்சி எழுமுன் மத்திய இந்தியாவில் சாதவாகனர் ஆட்சியே சிறந்திருந்ததென்பதை ஸ்மித்தும் பிறரும் நன்கு காட்டுகின்றனர்[45]. மற்றும் ஸ்மித்து. கி. மு. 20ல் ரோமர் தமிழ் நாட்டில் இருந்தனரென்றும், அகஸ்தஸ் பாண்டியரிடம் தூதனுப்பினார் என்றும் குறிக்கின்றார்[46]. மற்றும் அவரே சங்க காலத்தில் ஆரியர் ஆதிக்கம் தென்னாட்டில் அதிகம் வளரவில்லை எனவும் காட்டுகின்றார்[47]. நாம் இங்கு இந்த நூலில் அந்தக் கால எல்லையில் நின்று, காப்பியக் காலத்துக்கு முன் கடைச்சங்க கால எல்லை வரையிற் காணல் நலமாகும். எனவே வரலாற்று எல்லை விளங்காத அந்தப் பழங்காலத்தில், வடக்கும் தெற்கும் இணைந்த வகையில் ஒரு சிலவற்றை எண்ணி எழுதுவது பயன் உடைத்தாம் எனக் கருதுகின்றேன்.

குமரிக் கண்டம் வாழ்ந்த அந்த நெடுநாள் தொடங்கிக் கடைச்சங்க காலம் வரையில் வடநாடும் தென்னாடும் பல வகையில் இணைந்து நின்ற வரலாறு ஏட்டில் அடங்காதது. அதை ஆராய இன்னதென எல்லை காட்ட முடியாத நீண்டகால ஆராய்ச்சி தேவை. உலகெங்கணும் அறிஞர்கள் அந்த உண்மையைக் காணத் துடிதுடித்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஆராய்ச்சிகளெல்லாம் வளர வளர, எத்தனையோ புதுப் புது உண்மைகள் புலப்படும் என்பது உறுதி. சிந்து வெளியின் அகழ்ந்தெடுப்பு, பழம்பேரிந்திய நாட்டு வரலாற்றையே மாற்றிவிடவில்லையா எதிர்காலத்தில் அதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை புதுப் பொருள் கள் கண்டுபிடிக்கப்பட்டு வரலாற்றில் புதுப் புதுத் திருப்பு மையங்களை உண்டாக்குமோ, யார் அறிவார்? காலம் பதில் சொல்லும்.

நாம் இன்று கிடைக்கும் வரலாற்று நிலை பிறழாத சான்றுகளைக் கொண்டு, மிகு பழங்காலந் தொட்டுப் பரந்த இந்திய நாடு-வடக்கும் தெற்கும்-எவ்வாறு இணைந்துள்ளது என்பதை ஒருவாறு எண்ணிப் பார்க்கலாம் என நினைத்தேன். அந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தவை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து உருப்பெற்றன. இக் கருத்துக்களே முடிவென்று நான் கூறவில்லை. வரலாற்று ஆராய்ச்சி இவற்றை மாற்றியும் அமைக்கலாம். இன்றைய எல்லையின் வரலாற்றுச் சான்றுகள் நமக்கு அளிக்கும் முடிவுகளே இவை என்ற அந்த அளவோடு அமைதல் பொருந்துவதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

  1.  The Vedic Age (Published by the Bharatiya Itihasa Samiti) p. 158
  2.  Dravidian Comparative Grammar, Introduction, p. 3, 4.
  3.  Vedic Age, p. 158
  4.  Ibid. p. 158
  5.  Smith rightly observed many years ago, “Early Indian History, as a whole, cannot be reviewed in the perspective until the Non-Aryan institutions of the south receive adequate treatment.”-History of India, (Sinha & Banerji) p. 26.
  6.  Rig Veda, by Adolf Kaegi, (Prof. in the Univer'! * Zurich). Translated by R. Arrowsmith, Ph.D., р.11.
  7.  Rig Veda, p. 20
  8.  ibid.p.13.
  9.  ibid, p. 20
  10.  ibid. p. 13.
  11.  Stone age in India, by P. T. Srinivasa Iyangar, р. 162.
  12.  Vedlic Age, Vol. 1, p. 163.
  13.  Rig Veda, p. 12.
  14.  Rig Veda, p. 20
  15.  இருக்கு, 1:62:9. 11:33, 2:40:2, 4:3:9, 6:17:6, 6:44:24, 6:72:4
  16.  Rig Veda, p. 27.
  17.  இருக்கு, 1:30:9, 8:69:2 & 3, 6:21:8, 3:49;3, 7: 29, 4:10.
  18.  A.D. Pulasker in Treditional History from the earliest time to the accession of Parikhit (Vedic Age. р. 269)
  19.  இருக்கு. 1:130:11.
  20.  இருக்கு. 1:154:3, 1:22:161, 1,55:4.
  21.  Rig Veda, p. 64.
  22.  அதர்வணம், 4:16:15,
  23.  Rig Veda, p. 22.
  24.  ibid. p. 7.
  25.  Rig veda, p. 91. Its historical importance, its value or the history of mankind, cannot easily be over rated.
  26.  Race movements and Pre-Historic culture, by S.K. Chatterji (Prof. Calcutta University) Vedic Age, p. 154.
  27.  Vadic indla p. 155.
  28.  Treditional History from the earliest times to the accession of Parik****, by A.D. Pulasker. p. 313.
  29.  Vedlc Age, Vol. I, p. 158.
  30.  . History of India, by Sinha & Banerji, p. 26.
  31.  Ibid. p. 25,
  32.  History of India. p. 27.
  33.  ibid p. 25.
  34.  History of India, p. 26.
  35.  Pre-Historic, Ancient and Hindu India, by Banerjl, p. 12.
  36.  Pre Historic Anciient and Hundu lndla p. 13.
  37.  * இக்கட்டுரையின் இறுதியில் காண்க
  38.  Pre-Historic, Ancient and Hindu India, p. 13.
  39.  ibid. p. 20
  40.  Ibid. p. 29.
  41.  Oxford History of India, (ill Edition) p. 92
  42.  History of India, by Sinha & Banerji, p. 60.
  43.  ibid p. 70.
  44.  Political History of India, by H. Ray Chowdri pp. 280—81.
  45.  Oxford History of India. p. 140. Political History of India. p. 342.
  46.  Oxford History of India. p. 160.
  47.  ibid p. 161.
  48.  பக்கம் 22ல் காணும் தாழிபற்றி புதைக்கும் இடுகாடு பற்றித் தென்னாடும மத்திய தரைப் பகுதியும் இணைந்து குறிப்புகள் தருகின்றன என்பதை, நான் அண்மையில் (1985ல்) இத்தாலி சென்றபோது உரோம்' நகரின் புற எல்லையில் தாழிகள்-பழம் இடுகாடுகள் அமைந்த நிலையினை என் ஏழு நாடுகளில் எழுபது நாடுகள் என்ற நூலில் 74ம் பக்கத்தில் விளக்கியுள்ளேன். இந்த வரலாற்று உண்மை எவ்வளவு தெளிவானது-தமிழக மத்திய தரைக் கடல் இணைப்பு எவ்வளவு உண்மையானது என்பது வெளிப் படையாயிற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பண்டைத் தமிழகத்தின் எல்லை

E-mailPrintPDF

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -பண்டைத் தமிழகத்தின் எல்லை
தொல்காப்பியர் காலத்தில் பண்டையத் தமிழகம் இலக்கண இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியல் கூறுகளிலும் சிறந்து விளங்கியது. இதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் சான்றாக அமைகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தற்கால இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்த பண்டைத் திராவிடம், தொல்காப்பியர் காலத்தில் சுருங்கிக் காணப்படுகிறது. அது தமி்ழ்கூறும் நல்லுலகமாகச் சிறப்புற்று நின்றிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழ்கூறும் நல்லுலகமாகச் சிறந்து விளங்கியது என்பதை,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

(பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)

பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அறியமுடிகிறது. இப்பாயிரத்தில் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிலமாகத் திகழ்ந்ததை எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் எல்லைப் பகுதியைச் சிலப்பதிகாரம்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு
(சிலம்பு. 8 : 1-2)


என்று வேனிற்காதையில் குறித்திருக்கிறது. இங்கு நெடியோன்குன்றம் என்பது வடவேங்கடத்தையும் தொடியோன்பெளவம் என்பது குமரிமுனைக் கடலையும் குறிக்கும். புவியியல்படி, திக்குகளைக் கூறத் தொடங்குவோர் முதற்கண் ‘தலைப்பக்கம் வடக்கு’ என்று உரைப்பர். இத்தகைய மரபு இங்குக் கடைப்பிடிக்கப்பட்டமையை அறியலாம். வேங்கடம் என்பது வடஎல்லைப் பகுதியாக விளங்கியமை கருதத்தக்கது (இராமசுப்பிரமணியம்,2008:17). சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்திலும் நன்னூல் சிறப்புப்பாயிரத்திலும் தமிழகத்தின் எல்லைகளைக் காணமுடிகின்றன. தமிழகத்தின் எல்லைகளாகத் தெற்கே குமரி (முதலில் இது மலையாகவும் பின்பு ஆறாகவும் கடல்கோளுக்குப் பின்பு குமரிக்கடலாகவும் இருந்துள்ளது), வடக்கே திருவேங்கடமலை, கிழக்கும் மேற்கும் கடல்கள் இருந்துள்ளன.

குமரி, வேங்கடம், குண, குடகடலா
மண்திணி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்
(சிலம்பு.வஞ்சி.நூல்கட்டுரை.1-2).

குணகடல் குமரி குடகம் வேங்கடம் 
எனும்நான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
(நன்னூல் சிறப்புப்பாயிரம்.8 -9).


தொல்காப்பிய இலக்கண நூலில் வேங்கடமலை தமிழகத்தின் வட எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான வடஎல்லை வேங்கடத்துக்கு அப்பால் உள்ள ‘வட பெண்ணை ஆற்றின் தென்கரையாகும்’. வட பெண்ணையாற்றிலிருந்து அக்காலத்துத் தமிழ்நாடு தொடங்கியது. இதற்குச் சில சான்றுகள் உள்ளன. கல்லாடனார் வேங்கடமலைக்கு வடக்கில் ஓர் ஊரில் இருந்தவர் என்பதே இதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும் (வேங்கடசாமி,2001:162). திருவேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லையாக இருந்தது என்பதில் சற்றும் ஐயமில்லை. ஏனென்றால், பண்டை ஆசிரியர்கள் அனைவரும் அதனையே வட எல்லையாகக் கூறியுள்ள்னர் என்று மயிலை சீனீ. வேங்கடசாமி கூறியுள்ளார் (2001:294). இவர் திருவேங்கடமலையைத் தாண்டியும் (அதற்கு அப்பாலும்) தமிழ்கூறும் நல்லுலகம் இருந்துள்ளது என்பதை இலக்கியப் பாடல்கள் வழிச் சான்று காட்டுகிறார். திருவேங்கடமலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்டது என்பதை,

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் (அகம்.211)


என்று மாமூலனார் என்னும் புலவர் கூறுகிறார். அக்காலத்து, திருவேங்கடமலையையும் அதைச் சூழ்ந்த நாட்டினையும் புல்லி என்னும் சிற்றரசன் ஆண்டான் என்றும் (அகம்.61) அப்புலவரே கூறுகின்றார். அன்றியும் வேங்கடமலைக்கு அப்பால் உள்ள மொழிபெயர் தேயத்தில் வடுகர் வாழ்ந்ததாக அப்புலவரே கூறியுள்ளார்.

புடையல்அம் கழற்கால் புல்லி குன்றத்து
நடைஅரும் கானம் விலங்கி நொன்சிலைத்
தொடைஅமை பகழித் துவன்நிலை வடுகர்
பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் (அகம்.295)
.

எனவே, வேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லை என்பதும் அம்மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. ஆனால், வேங்கடமலையை மட்டும் வட எல்லையாகக் கூறியது எவ்வாறு பொருந்தும்? வேங்கடமலை தமிழகத்தின் வடக்கே குணகடல் முதல் குடகடல் வரையிலும் கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் ஒரு மலையன்று; அது குணகடலின் பக்கமாகக் கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஒரு பகுதி மட்டுமே. எனவே, கீழ்க்கடற் பக்கமுள்ள ஒரு மலையை மட்டும் வடஎல்லையாகக் கூறியது தமிழ்நாட்டின் வடஎல்லையை முற்றும் குறிப்பிட்டதாகுமோ? தமிழ்நாட்டின் வடக்கே மேற்கடற் பக்கமாகவும் ஓர் எல்லை கூற வேண்டுவது இன்றியமையாததன்றோ? அவ்வாறு ஓரெல்லை இருந்தே தீரவேண்டும். இல்லையென்றால், அது தமிழகத்தின் வடஎல்லை முழுவதும் கூறப்பட்டதாகாது. கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வேங்கடமலையை வடஎல்லையாகக் கூறியதுபோல மேற்குத் தொடர்ச்சி மலையிலும் ஓர் எல்லை கூறப்படவேண்டும். அவ்வாறு ஏதேனும் ஓர் எல்லை இருந்ததா? சங்க நூல்களில் இதற்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா? இந்த ஆராய்ச்சிக்கும் மேற்குறித்த சங்கப்புலவர் மாமூலனாரே நமக்குத் தோன்றாத்துணையாக இருந்து வழி காட்டுகின்றார். குடகடலுக்கு அருகில் தமிழ்நாட்டின் வட எல்லையாக ஒரு மலையை அவர் குறிப்பிடுகின்றார். அது ஏழில்மலை அல்லது ஏழிற்குன்றம் என்பதாகும். தலைமகன் (காதலன்) பிரிவின்கண் தலைமகள் (காதலி) தோழிக்குச் சொல்லியதாக இப்புலவர் பெருமான் செய்த செய்யுள் ஒன்றில் தற்செயலாக இதனைக் குறிப்பிடுகின்றார். அது வருமாறு:

அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
எவன்ஆய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
ஏழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொள
திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை
எரிமருள் கவளம் மாந்தி களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்ஊர் பாம்பின் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே (அகம்.349).


நன்னன் என்னும் சிற்றரசனது ஏழிற் குன்றத்துக்கப்பால் மொழிபெயர் தேயம் அதாவது தமிழ் அல்லாத வேறு மொழி வழங்கும் தேசம் இருந்தது என்பது இப்பாட்டினால் பெறப்படுகின்றது. இந்த ஏழிற்குன்றம் குடகடற் பக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொங்கண நாடாகிய துளுநாட்டில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வடஎல்லை மேல்கடற் பக்கமாகவுள்ள ஏழிற் குன்றத்தையும் கீழ்க்கடற் பக்கமாகவுள்ள வேங்கடமலையையும் கொண்டிருந்தது என்பது நன்கு விளங்குகின்றது. ஏழில்மலை இப்போது மலபார் மாவட்டத்தில் உள்ள கண்ணனூருக்கு வடக்கே பதினெட்டு மைலுக்கப்பால் இருக்கிறது. இங்கு ஏழில்மலை என்பதை உச்சரிக்கத் தெரியாதவர்கள் அதனை எலிமலை என்று வழங்கினர். பிற்காலத்தில் அந்த எலிமலையை வடமொழியில் மூஷிகமலை (மூஷிகம் – எலி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர். அந்த மலைப் பகுதியை ஆண்ட அரசகுலத்தைப் பற்றி முஷிக வம்சம் என்னும் வடமொழி நூலையும் எழுதிவிட்டனர். பிற்காலத்துப் போர்ச்சுகீசியர் இந்த மலையை மவுண்ட் டி எல்லி என்று கூறினர். தமிழ்நாடாக இருந்த சேரநாடு பிற்காலத்தில் மலையாள மொழிபேசும் நாடாக மாறிவிட்ட பிறகு ஏழில்மலை தமிழகத்தின் வடஎல்லையைக் குறிக்காமற் போயிற்று. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கரையில் வடஎல்லையாக இருந்தது ஏழில்மலை என்பது நன்கு தெரிகின்றது. பண்டைத் தமிழ்நாட்டின் வடஎல்லை கீழ்ப்புறமாக வேங்கடமலையும் மேற்புறமாக ஏழிற்குன்றமும் விளங்கியது (வேங்கடசாமி,2001:296). வேங்கடமலைக்கும் ஏழில்மலைக்கும் இடையில் உள்ள நாடுகளில் வடஎல்லையாக இருந்தவை எவை என்பதை மாமூலனார் பின்வருமாறு கூறுவதை,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் (குறு.11)


என்று கட்டி என்னும் சிற்றரசனது நாடு தமிழ்நாட்டின் வடஎல்லையாக இருந்தது என்றும் அவனது நாட்டுக்கப்பால் வேறுமொழி பேசப்படும் தேயம் இருந்தது என்றும் அவர் கூறுகிறார். அகநானூறு 44-ஆம் பாட்டில் சோழனுக்கும் சேரனுக்கும் நடந்த போரில் பல சிற்றரசர்கள் சேரனுக்குத் துணையாக இருந்தனர் என்றும் அவர்களுள் கட்டி என்பவனும் ஒருவன் என்றும் அறியக்கிடக்கின்றது. குறுந்தொகை கூறும் கட்டியும் அகநானூறு கூறும் கட்டியும் ஒருவனே என்பது ஆராய்ச்சியினால் விளங்குகின்றது. கட்டியரசன் கொங்கு நாட்டின் வடபகுதியை ஆண்டனர். அன்றியும் சேரனுக்கு உதவியாகச் சென்றவர்களுள் கங்கன் என்பவனும் கூறப்படுகின்றான் (அகம்.44). இந்தக் கங்கன் என்பவனும் தமிழ்நாட்டின் வடஎல்லையில் இருந்த நாட்டினை அரசாண்ட ஒரு சிற்றரசன் ஆவான். சிலப்பதிகாரம் கட்டி, கங்கன் என்பவர்களைக் கட்டியர், கங்கர் என்று இரண்டு குழுவினராகக் கூறுகின்றது. பங்களர் என்பவர் பங்கள நாட்டை ஆண்டனர். பங்கள நாடு இப்போதைய சித்தூர், வடார்க்காடு மாவட்டங்களில் இருந்தது. இது வங்காள நாடு என்னும் வங்கநாடு அன்று. சிலப்பதிகாரம் காட்சிக்காதை 157-ஆம் அடியில் ‘பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்’ என்று பங்களரையும் கூறுகிறது. பங்களரும் தமிழகத்தின் வடஎல்லையில் இருந்தனர். பங்களர், கங்கர், கட்டியர் ஆகிய இவர்கள் தமிழ்நாட்டின் வடஎல்லையில் இருந்தவர்கள் (வேங்கடசாமி,2001:297). அகநானூற்றில் மேற்குறித்த செய்திகளுக்குச் சான்றுகள் உள்ளன. அவைகள் வருமாறு:

எழாஅப் பாணன் நல்நாட்டு உம்பர் (அகம்.113:17).
நல்வேற் பாணன் நல்நாட்டு உள்ளதை (அகம். 325:17).


மேற்குறித்த பாடல் சான்றுகள் வாணாதிராயரின் நாடும் தமிழகத்தின் வடஎல்லையில் இருந்ததாகும். எனவே, பங்களர், கங்கர், கட்டியர், பாணர் (வாணாதிராயர்) ஆகியோர் தமிழகத்தின் வடஎல்லையில் இருந்தவர் என்பது தெரிகின்றது. வேங்கடமலை மட்டும் தமிழகத்தின் வடஎல்லை இல்லை என்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஏழில்மலையும் ஓர் எல்லை என்றும் இம்மலைகளுக்கிடையில் இருந்த நாடுகளில் கங்கர், பங்களர், கட்டியர், பாணர் முதலியோர் வாழ்ந்து வந்தனர் என்றும் இவர்கள் வாழ்ந்த நாடுகள் தமிழகத்தின் வடஎல்லைகளாக இருந்துள்ளன என்பதை வேங்கடசாமி கூறுகிறார் (2001:297-298). பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறியது பங்காளரைத்தானா? வங்காள தேசத்தவரையா பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது? மேல்நோக்காகப் பார்க்கும்போது, பங்களரும் வங்காளரும் ஒருவர் போலக் காணப்பட்டாலும் ஊன்றிப் பார்க்கும்போது பங்களரும் வங்காளரும் வெவ்வேறு நாட்டினர் என்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுகிற பங்களர் வங்காள நாட்டுப் பங்காளரை அன்று என்பது தெரிகிறது. பங்களர், பங்காளர் என்னும் சொற்கள் ஒரே ஒலியுடையனவாகக் காணப்பட்டாலும் இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றன என்று தோன்றுகிறது. இதற்குச் சாசனச் சான்றுகளும் கிடைக்கின்றன. தென்இந்தியச் சாசனங்கள் என்னும் நூலிலே எட்டாவது தொகுதியிலே கீழ்க்கண்ட செய்திகள் கிடைக்கின்றன:

1. சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு வடக்கில் வன்முகைநாட்டு உய்யக்கொண்டான் சோழபுரம் (S.I.I., Vol. VII, No.7).
2. சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு முகைநாட்டுக் காட்டுத்தும்பூர் (S.I.I., Vol. VII, No.11).
3. பங்களநாட்டுக் காட்டுத்தும்பூர் நந்திகம்பீஸ்வரம் (S.I.I., Vol. VII, No.11).
4. பங்களநாட்டு வடக்கில் வன்முகை நாட்டு உய்யக் கொண்டான் சோழபுரம் (S.I.I., Vol. VII, No.8).

மேலே காட்டப்பட்ட சாசனப் பகுதிகளிலிருந்து பங்களநாடு, சயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்தது என்பது தெரிகிறது. சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தொண்டைமண்டலமாகும். தொண்டைமண்டலத்துக்குப் பழைய பெயர் அருவாநாடு என்பதாகும். சயங்கொண்ட சோழமண்டலம், தொண்டைமண்டலம், அருவாநாடு என்னும் பெயருடைய நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் (தமிழகத்தின் வடஎல்லையில்) சேர்ந்ததுதான் பங்களநாடு என்பது இந்தச் சாசனங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பங்களநாடு சில உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் அப்பிரிவுகளில் இரண்டு வன்முகைநாடு, முகைநாடு என்பன என்பதும் இந்தச் சாசனங்களினாலே தெரிகின்றன. இந்தச் சான்றுகளைக் கொண்டு, சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற பங்களர் என்பவர் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்திருந்த பங்கள நாட்டினர் என்பது நன்கு விளங்குகிறது. பங்களர் என்னும் சொல் வங்காளரைக் குறிக்கவில்லை; தமிழரில் ஒரு பகுதியாரைக் குறிக்கிறது என்பதற்குச் சாசனச் சான்று காட்டி நிறுவப்பட்டது. கொங்கணர், கங்கர், கட்டியர் முதலிய பெயர்களைப் போலவே பங்களர் என்னும் பெயரும் சங்ககாலம் முதல் தொன்றுதொட்டு உள்ள பெயராகும். பங்களர் என்னும் பெயர் பிற்காலத்து வழக்குச்சொல் அன்று என்று கூறுகிறார் (வேங்கடசாமி,2002:141-145).

கி.மு.7-ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ்தவிர வேறு எந்த மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது. கடைச் சங்ககாலத்திலும் இந்நிலைமையே இருந்தமை சங்ககாலச் செய்யுள்களாலும் சங்கம் மருவிய வனப்புகளாலும் அறியப்படும். திராவிடம் (தமிழ்), ஆந்திரம், கன்னடம், மகாராட்டி, கூச்சரம் என்னும் ஐந்தையும் பஞ்சதிராவிடம் என்று பண்டைக் காலத்தில் வடவர் வழங்கியதால், ஆரியர் வந்தபின்பும் விந்தியமலை வரை தமிழும் அதன்திரிபான திராவிடமுமே வழங்கியமை பெறப்படும். ஆரியர்கள் வருகைக் காலத்தில் வட இந்தியாவிலும் திராவிட மொழிகள் வழங்கியதைப் பிராகுவீயும் இராசமகாலும் இன்றும் காட்டும் என்கிறார் ஞா.தேவநேயபப்பாவாணர் (வேங்கடராமன்,2006:10).

“சிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சொதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ்முத்திரைகள் காணப்படுகின்றன என ஈராசு பாதிரியார் கருதுகிறார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால், கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கியமொழி தமிழே. சமஸ்கிருதம் பிராகிருதம் தொடர்பான மொழிகள் வழங்கவில்லை என்று ந.சி.கந்தையாபிள்ளை குறிப்பிடுகிறார். ரிசுலி என்னும் ஆசிரியர் திராவிடரே இந்தியப்பழங்குடிகள் என்றும் இந்தியாவி்னின்றும் சென்ற மெசபதோமியநாகரிகம் செமித்தியநாகரிகத்திற்கு அடிப்படையாக இருந்ததென்றும் கூறுவர். சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவு தொல்பொருள் ஆய்வுக்கருத்துகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது. எனவே, இந்தியத் துணைக்கண்டத்தின் முதன்மொழி தமிழ் என்பதும் அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரரீக நாடுகளுடையே பரவி மாற்றமுற்றது என்பதும் தெளிவாகின்றன”(கா.கோ.வேங்கடரமன்,2006:12). ‘ஹெக்கெல் என்னும் ஜெர்மானிய அறிஞர் குமரிமுனைக்குத் தெற்கேயுள்ள ஞாலத்தின் நடுக்கோட்டிற்கு இருமருங்கும் இருந்த நிலப்பகுதிகளே மக்கள் வாழ்விற்குத்தக்க நிலையை முதற்கண் அடைந்தன என்றும் அங்கு மக்கள் முதற்கண்தோன்றி வளர்ந்து நாகரிகத்துக்கு வித்திட்டனர் என்றும் கூறியுள்ளார். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பாறைகள் மிகவும் பழமையான காலத்தில் உண்டாயின என்றும் ஒருபெரிய மலைத்தொடர் இந்தியாவியின் மேற்கரையில் இருந்து தெற்கேசென்று மேற்கும் கிழக்குமாக நீண்டிருந்தது என்றும் இழந்த இலெமூரியர் என்னும் நூலில் ஸ்காட் எலியட் என்பவர் கூறியுள்ளார். அம்மலைத்தொடர்ச்சியே ஆசியாவிற்கு இமயமலையும் ஐரோப்பாவிற்கு ஆல்ப்சு மலையும் வடஅமெரிக்காவுக்கு இராக்கிமலையும் தென்அமெரிக்காவுக்கு ஆண்டசுமலையும் பேர்அரணாக இருப்பதுபோல இலெமூரியா கண்டத்திற்கும் பேர்அரணாக இருந்தது என்றும் பெரும்புலவராகிய அக்கிலி என்பர் கருதுகின்றார்’ (கா.சுப்பிரமணியபிள்ளை,2010:13-14). ‘லினார்மென் என்ற ஆய்வாளர் ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதற்குமுன்னரே தமிழர்கள் குமரிமுனையில் இருந்து இமயமலைவரை பரவியிருந்தனர் என்று கூறுகிறார். மேலும், ஹேவல் என்ற அறிஞர் சுமேரியப்பகுதியில் தமிழர் இருந்துள்ளனர் என்று கூறுகிறார். மாம்கர் என்ற அறிஞர் கி.மு.2500 அளவில் இந்தியாவில் மிகச் சிறந்த நாகரிகமுடைய இனம் வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். ரைஸ்டேவிட்ஸ் என்ற ஆய்வாளர் தமிழர் கிரேக்கர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால்தான் கிரேக்க மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று கூறுகின்றார் இராபர்ட் கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர்’ (கா.வாசுதேவன்,2008:1). தமிழர்கள் பேசியமொழியும் பழந்திராவிடமொழியாகிய தமிழ்மொழியாகும். இப்படிப் பரந்தும் விரிந்தும் வாழ்ந்து வந்த தமிழர்கள் நாளடவில் தங்களுடைய எல்லையைச் சுருக்கிக் கொண்டே வேங்கடமலைவரையில் வந்துள்ளனர். அவர்கள் அதனைத் தங்கள் எல்லையாகவும் வகுத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். தற்பொழுது தமிழகத்தின் எல்லைப்பகுதி திருத்தணிகை மலைவரையில் அமைந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தின் எல்லைப்பகுதி வடவேங்கடம் முதல் தென்குமரிவரையில் சுருங்கிக் காணப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் சான்றுகளாக அமைகின்றன.

துணைநூல் பட்டியல்

ஆறுமுகநாவலர்., 1992, நன்னூல் காண்டிகையுரை சொல்லதிகாரம், சென்னை: முல்லை நிலையம்.
இராகவையங்கார்., 1947, குறுந்தொகை விளக்கம், சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
கருணாநிதி,ந., 2008, தொல்காப்பியம், சென்னை: வசந்தா பதிப்பகம்.
கலியாணசுந்தரனார், சா., 1947, குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை: கபீர் அச்சுக்கூடம்.
குருநாதன் (மற்றும் பலர்.)., 1988, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிமூன்று, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
சண்முகம் பிள்ளை, மு., 1994, குறுந்தொகை மூலமும் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
சிவலிங்கனார், ஆ., 1988, தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைவளம் எச்சவியல், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
சிவலிங்கனார், ஆ., 1988, தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைவளம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
சுப்பிரமணியன், ச.வே., 2004, சிலப்பதிகாரம், சென்னை: கங்கை புத்தகநிலையம்.
சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2009, அகநானூறு, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
தண்டபாணி தேசிகர், ச., 2003, நன்னூல் விருத்தியுரை, சென்னை: பாரிநிலையம்.
தண்டபாணி தேசிகர், ச., 2008, நன்னூல் விருத்தியுரை, சென்னை: சாரதா பதிப்பகம்.
தமிழண்ணல்., 2002, குறுந்தொகை, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
தாமோதரன்., 1999, நன்னூல் மூலமும் விருத்தியுரையும், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
வில்வபதி, கோ., 2003, நன்னூல் மூலமும் உரையும், சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.
வேங்கடசாமி நாட்டார், நா.மு., 2009, மணிமேகலை, சென்னை: சாரதா பதிப்பகம்.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி – 6, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 1, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 4, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-3, சென்னை: மக்கள் வெளியீடு.

S A ANNAIYAPPAN < annaiyappan.s.a@gmail.com>

* கட்டுரையாளர் - - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard