Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்
Permalink  
 


வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

 

 

முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சிராப்பள்ளி –மனித வாழ்வியல் நெறிகளுள் முதன்மையானது அறம். அறமே நிலையற்ற வாழ்க்கையை நிலைபேறுடையதாக மாற்றும் கருவி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 11 அறநூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையாக விளங்கும் சிறப்புடையது திருக்குறள். திருக்குறளைப் பாகுபடுத்திய வள்ளுவப் பெருமான் அறத்துப்பாலை முதலில் வைத்து பொருட்பாலையும் காமத்துப்பாலையும் அதற்கு அடுத்து கூறியிருப்பதிலிருந்து அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அறத்தின் பல்வேறு வடிவாக்க நிலைகளை ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

செல்வம்
‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது நிதர்சனமான உண்மை. மனித சமூகம் உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு செல்வம் இன்றியமையாதது. இதனைத் ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ (தொல்காப்பியம்) என்ற முன்னோரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. செல்வம் உடைய மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் கிட்டும். இவ்விரண்டினையும் அறத்தினால் மட்டுமே அடைய முடியும் என்பதை

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.1

என்னும் குறள் தெளிவுப்படுத்துகின்றது.

‘அறம் செய விரும்பு’ என்னும் ஒளவையாரின் ஆத்திச்சூடி இதனை வழிமொழிகின்றது. மேலும்,
அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்றுப் பேணாரைத் தெறுதலும்என்று கலித்தொகைக் குறிப்பிடுகின்றது. பிறருக்குக் கொடுத்து மகிழவே பொருளைச் சேர்க்க வேண்டும் என்பதை

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புற பலவே3

என்று புறநானூறு தமிழரின் புறவாழ்வியல் புலப்படுத்தும் சிந்தனை. மேலும் தமிழரின் புறவாழ்வியல் புலப்பாட்டுச் சிந்தனைகளை உடம்பால் மட்டும் வாழாது உயிராலும் வாழ வேண்டுமெனில் அறம் செய்வதை கடமையாக கருதுதல் வேண்டும்.

‘எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ என்பது போல தண்டூன்றி கிழப்பருவம் எய்தக்கூடிய முதுமை விரைவில் வந்து ஒட்டிக்கொள்ளும் நிலையற்ற வாழ்க்கையில் அறச்செயல்களை நாள்தோறும் செய்வதன் வாயிலாக நன்மைகளைப் பெருக்கி பாவங்களை சுருக்கிக் கொள்ளமுடியும்.

மனச்சார்பு
ஒவ்வொரு செயலின் தொடக்கமும் மனச்சார்புடையது. மனத்தின் வழியே எண்ணமும் எண்ணத்தின் பின்புலமாக செயலும் அமைகின்றது. எனவே மாந்தர்கள் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். தூய உள்ளமே இறைவன் உறையும் ஆலயம். இதனை மனக்கோயில் கட்டிய பூசலாரின் வாழ்க்கை நமக்குப் பறைசாற்றுகின்றது.

அறம் செய்வதற்கு பொருள் தேவையில்லை. ஆனால் பொருள் இருப்பவர்கள் மட்டுமே அறம் செய்ய முடியும் என்ற முரண்பாட்டுச் சிந்தனைகள் நடைமுறையில் உண்டு. உலகப்பொதுமறை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.

புறத்தூய்மையில் நாட்டமுடைய மக்கள் அகத்தூய்மையை மறந்து விடுகின்றனர். அவர்களுக்கு,
“மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற”4

என்னும் எளிய திறவுகோலைக் காட்டுகின்றது வள்ளுவம்.

இனியசொற்கள்
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் புலப்பாட்டுக் கருவிமொழி. சமூகம் மொழியின் வாயிலாகக் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொண்டு உறவுப் பாலங்களை வலுப்படுத்திக் கொள்கின்றது. ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்னும் பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொண்டு வாழ்வது நலம். நம்முடைய இனிய சொற்கள் பாவத்திற்கு கழுவாயாக அமையும் அறத்திற்கு சமமானது என்பதை

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்5

 

 

 


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்6


என்னும் குறட்பாக்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே உள்ளார்ந்த விருப்பத்தோடு இனிய சொற்களை எடுத்துரைத்து அறத்திற்கு வலிமை சேர்ப்போம். இன்னாத சொற்களை நீக்கி இனியசொற்களை உரைப்பதையே இலக்காகக் கொண்டுவாழ்வோம். தீயச்சொற்களை கூறாதிருத்தல் இனியது என்பதை,


“அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்”7

என்று இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது.

இன்பம்
‘இன்பமும் துன்பமும் இல்லானே இறைவன்’ என்பது உண்மை. ஆனால் மனிதர்களுக்கு இன்பமும் துன்பமும் பிரிக்க முடியாத வாழ்வியல் அங்கம். இருப்பினும் மனித மனம் துன்பத்தை வெறுத்து இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. இளமை, பொருள், பதவி, செல்வாக்கு, புகழ் இவற்றால் வரும் இன்பம் நிலையற்றது. அழிவில்லாத இன்பத்தினை ‘அறம் செய்வதால் மட்டுமே’ பெறமுடியும்.

“அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல”8

என்ற ஏழுசீர்களுக்குள் பாருலகினர்க்குப் பக்குவமாக அறிவுரைப் புகட்டிய
வள்ளுவன் காலந்தோறும் இறவாதப் புகழுடன் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.

“அறமெனப்படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள்;;;;: மன்னுயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில்”9

“எவ்வுயிர்க் காயினும் இரங்குதல் வேண்டும் 
பசித்தோர் முகம்பார்”10

என்று பட்டினத்தாரும் அறத்தின் மேன்மையை வலியுறுத்திக் குறிப்பிடுகின்றார்.

கொல்லாமை
உயிர்க்கொலை தீது என்பதை அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன.; ‘உயிர்கொலை தீது’ என்ற நீதியைப் புகட்ட எழுந்த காப்பியமே யசோதரகாவியம். உயிர்க்களைக் கொன்றால் பிறவிகள் தோறும் துன்பத்தில் உழலுதல் வேண்டும். எனவே மனித நேயத்தோடு நடந்துக்கொள்ளுதல் அவசியம். வாய்மையிலிருந்து பிறழாத பண்பு, உயிர்களைக் கொல்லாதிருத்தல் இரண்டும் மிகச்சிறந்த அறங்கள் என்பதை வள்ளுவர்,

ஓன்றுஆக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று11

என்று சுட்டிக்காட்டுகின்றார்.

‘ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா’என்று இன்னா நாற்பது குறிப்பிடுகின்றது. உயிர்களைக் கொன்றால் தீது என்பதால் சமணர்கள் தாங்கள் செல்லும் வழியெல்லாம்  தூய்மைப்படுத்திச் சென்றனர்.   

புறாவிற்காக தன் தசையினை அரிந்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, பசுவின் கன்றுக்காக தேர்ச்சக்கரத்தில் தன் மகனை இட்டுக் கொன்ற மனுநீதி சோழன், மானுக்குப் பிணையாக நின்ற நபிகள் நாயகம், கொலை செய்யாதிருப்பாயாக என்று அறிவுறுத்தும் வேதநூல் அனைத்தும் சிறந்த வாழ்வியல் அறங்களைக் கற்பிக்கின்றன.

பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்12

என்னும் குறள் அறத்தின் மேன்மையை வலியுறுத்துகின்றது.

நிறைவுரை
உள்ளத் தூய்மையே உயரிய அறம் என்பதை எளிமையாகப் புலப்படுத்தும் காலக் கண்ணாடி நமது திருக்குறள். பிறன்இல் விழையாமை, ஈகை, விருந்தோம்பல், பொருள் செயல் வகை,    நல்குரவு, ஒப்புரவு அறிதல் என்ற பன்முக நிலைப்பாட்டுத் தன்மைகளின் அடிப்படையில் ‘அறம்’ என்னும் சொல்லை வள்ளுவர் கையாண்டுள்ளார். எனவே தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து, பின்பற்ற வேண்டிய நல்ஒழுகலாறுகளை செயல் முறைப்படுத்துவோம். மேலும் வளமான வாழ்க்கைக்கு வலுசேர்க்க வள்ளுவம் குறிப்பிடும் நலமார்ந்த சிந்தனைகளைச் சித்தத்தில் கொண்டு தமிழுலகிற்கும் தமிழினக் கலாசிசாரத்திற்கும் பெருமைச் சேர்க்க முனைவது நமது தலையாயக் கடமை.

சான்றெண் விளக்கம்
1.    திருவள்ளுவர் - திருக்குறள், அறன்வலியுறுத்தல், குறள்-31
2.    கலித்தொகை - பா.எண் 52
3.    புறநானூறு – பா.எண்.189
4.    திருவள்ளுவர் - திருக்குறள், அறன்வலியுறுத்தல், குறள்-34
5.    திருவள்ளுவர் - திருக்குறள், இனியவைக்கூறல், குறள்-96
6.    திருவள்ளுவர் - திருக்குறள், இனியவைக்கூறல், குறள்-92
7.    இனியவை நாற்பது – பா.எண்.28
8.    திருவள்ளுவர் - திருக்குறள், அறன்வலியுறுத்தல், குறள்-39
9.    மணிமேகலை -(227-29)
10.    மணிமேகலை (73)
11.    திருவள்ளுவர் - திருக்குறள், கொல்லாமை, குறள்-323
12.    திருவள்ளுவர் - திருக்குறள், வாய்மை, குறள்-296

துணைநூற்பட்டியல்
1.    ச.வே.சுப்பிரமணியன் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், மணிவாசகர் பதிப்பகம் சென்னை - 08.
2.    நா. மாணிக்கவாசகன் - புறநானூறு மாணிக்கவாசகன்,  உமா பதிப்பகம்  சென்னை - 01

anudiana.a@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard