Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 3. மலர் மிசை யேகினான்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
3. மலர் மிசை யேகினான்
Permalink  
 


மலர்மிசையேகினான்மாணடிசேர்ந்தார்
நிலமிசைநீடுவாழ்வார்.

 

மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.

மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசையேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும், 'பூமேல் நடந்தான்' என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. "மலர்மிசை நடந்தோன்" என்று இளங்கோவடிகளும் கவுந்தி யடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10:204.). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக்குறளின் உட்குறிப்பு.

அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவு பற்றிய கால வழுவமைதி . அடிசோர்தல் - இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல்



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

மணக்குடவர் உரை: மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

பரிமேலழகர் உரை: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)

இரா சாரங்கபாணி உரை: அன்பர் மனமாகிய மலரில் தங்குபவனது சிறந்த திருவடியை இடைவிடாது நினைப்பவர் இவ்வுலகில் நெடிது வாழ்வர்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்.

பதவுரை: மலர்மிசை-மலரின்கண்; ஏகினான்-நடந்தவன், சென்றவன், சென்றமர்ந்தவன், பரந்துள்ளவன், உலவவிடுபவர், விளங்குபவன், எழுந்தருளினவன், வீற்றிருந்தவன்; மாண்அடிசேர்ந்தார்--திருவடியை இடைவிடாது நினைந்தவர்; நிலமிசை-நிலஉலகின்கண்; நீடு-நெடிது; வாழ்வார்-நிலைபெற்றிருப்பார்.


:மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவர்;
பரிப்பெருமாள்: மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே;
பரிதி: பக்த சனங்கள் இட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்றவைத்தார்; [இட்ட-வழிபட்ட]
காலிங்கர்: மலர்மிசை ஏகினான் என்பது எல்லாருடைய நெஞ்சத்தாமரையினுஞ்சென்று பரந்துள்ளான். மாணடி என்பது மாட்சியுள்ள அடி.
பரிமேலழகர்: மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்.
பரிமேலழகர் குறிப்புரை: அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்.

'இறைவன் திருவடி சேர்ந்தார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'மலர்மிசை ஏகினான்' என்ற தொடரை விளக்குவதில் இவர்கள் வேறுபடுகின்றனர்; மணக்குடவரது உரைநடை சமண சமயக் கடவுளைக் குறிப்பதாக அமைகிறது என்பர்; பரிதியார் சிவன் என்று வைதிக சமயக் கடவுளைக் குறிக்கிறார். காலிங்கர் 'எல்லாருடைய நெஞ்சத்தாமரையில் சென்று பரந்துள்ளவன்' என்று கூற பரிமேலழகர் 'அன்பான் நினைவாரது 'நெஞ்சத்தாமரையில் விரைந்து சேர்ந்தார்'' என்கின்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சமலரின் இருப்பவன் அடியை நினைப்பவர்', '(அந்த பகவானை வேறெங்கும் தேடவேண்டியதில்லை) அவன் நம்முடைய மனதில் நம் கூடவே பிறந்தவன். (மனச்சாட்சியாக விளங்கும்) அவனிடம் அடைக்கலம் புகுந்தவர்கள்', 'உயிர்களது உள்ளம் கமலத்தின் மேலிடமாகிய பரவெளியிலே கூத்து இயற்றுகின்ற கடவுளுடைய பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாது நினைக்கின்றவர்கள்', 'மனமாகிய மலர்மீது சென்று பொருந்தி இருப்பவனாகிய கடவுளின் பெருமை மிக்க அடிகளை அடைந்தவர்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.

நெஞ்சமாகிய மலரில் இருப்பவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.


நிலமிசை நீடுவாழ்வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
மணக்குடவர் குறிப்புரை: நிலம் என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
பரிப்பெருமாள்: நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிலம் என்று பொதுப்படக் கூறுவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னை என்றார்க்குப், போக நுகர்தலும், வீடு பெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினார்.
பரிதி: 'பூமியின்கண் சகல பாக்கியமும் அனுபவிப்பார்'
காலிங்கர்: நிலமிசை நீடுவாழ்வார் என்பது நித்தராயுள்ளார். இந்நிலத்தின்கண் இவ்வாறு வணங்கி வழிபட்டு எவ்வுயிர்க்கும் உயிராய் நின்ற இறைவனது குற்றம் தீர்ந்த அடியினைச் சேர்ந்தார் யாவர் மற்று அவரே முத்தர் ஆவார் என்றவாறு. [நித்தர்-தம்முடைய யோகவன்மையால் பல ஆண்டு வாழ்பவர்; முத்தர்-வினைக்கட்டிலிருந்து விடுபட்டவர்)]
பரிமேலழகர்: எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.

பழம் ஆசிரியர்களுள், மணக்குடவர் இவ்வுலகம், மேலுலகம் இரண்டின் கண்ணும் நீடுவாழ்வார் என்று சொல்ல, பரிதியும் காலிங்கரும் இந்நிலத்தின் கண் வாழ்வர் என்பர். பரிமேலழகர் வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார் என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்வர்', '(உலகத்தில்) சுகமாக வாழ்பவர்கள்', 'நில முதல் நாதமுடிவாக உள்ள எல்லாத் தத்துவங்கட்கும் அப்பாற்பட்ட வீட்டின்கண் எக்காலத்தும் வாழ்வார்கள்', 'உலகில் நீண்டநாள் வாழ்வார்கள். (இறந்த பின்னர் புகழால் வாழ்தலும் அடங்கும்) ',என்ற பொருளில் உரை தந்தனர்.

இவ்வுலகின்கண் நெடிது வாழ்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சமாகிய மலரில் இருப்பவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் இவ்வுலகின்கண் நெடிது வாழ்வர் என்பது பாடலின் பொருள்.
கடவுளை நினைத்தலுக்கும் நெடுங்காலம் வாழ்வதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

 

கடவுளின் திருவடியை இடைவிடாது நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர்.

அன்பர்களுடைய மனமாகிய மலரில் அமர்ந்திருக்கும் கடவுளின் மாண்பாய அடிகளை மறவாமல் இருப்பவர் இந்த உலகத்திலே நெடுங்காலம் வாழ்வர்.
மலர்மிசை ஏகினான் என்ற தொடர்க்கு 'மலர் மேல் நடந்தவன்' 'அண்டவெளியில் பரந்துள்ளான்'. 'உள்ளக் கமலத்தின்கண் தோன்றுபவன்'. என்று மூன்று வகையான விளக்கங்கள் காணக் கிடக்கின்றன. மணக்குடவர் இத்தொடர்க்கு மலரின்மேல் நடந்தான் என்று பொருள் கூறினார். இது சமண (ஜைன) சமயக் கடவுளான அருகனைக் குறித்தது என்பது பலரின் கருத்து. அருகப் பெருமான் எழுந்தருளும்போது தாமரைப் பூக்கள் தோன்றி அவருடைய திருப்பாதங்களைத் தாங்குகின்றன என்ற சமணர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தது இது. அருகனே என்று நிறுவ சிலப்பதிகாரத்தில் இருந்தும் மேற்கோள் காட்டினர்:
மலர்மிசை நடந்த மலரடி யல்லதுயென்
தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅது 
(சிலப்பதிகாரம், நாடுகாண் காதை (200 - 205) பொருள்: எனது தலையினுச்சியும் பூவின் மீது நடந்த தாமரைபோன்ற அடிகளை அணியப் பொறுக்கு மல்லது பிறிதொன்றனையும் அணியப் பொறாது) என்று கவுந்தியடிகள் அருகக் கடவுளை வாழ்த்துவது 'அருகக் கடவுள் மலர்மேல் நடந்த மலர் போன்ற திருவடிகளையுடையவன்' என்ற கருத்தில் அமைந்தது என்றும், இக்குறள் குறிப்பிடுவதும் அருகக் கடவுளே என்பதற்கு இவ்வரிகள் சான்றாயின என்றும் கூறுவர்.
மலர்மிசை ஏகினான் என்ற தொடர் புத்தரைக் குறிக்கிறது என்றும் சிலர் உரைத்தனர். இங்கு 'மலர்' என்பது தாமரைப் பூ.என்றும் புத்தர் பிறந்தவுடனேயே ஏழடி நடந்தார் என்றும் ஒவ்வொரு அடியை வைக்கும்போது தாமரைப்பூ தோன்றி அவருடைய பாதங்களைத் தாங்கிக் கொண்டன என்றும் புத்த சமயநூல்கள் கூறுகின்றன என்றும் மேலும் அவர்கள் விளக்கினர்.
''மலர்மிசை ஏகினான்' என்ற தொடர் அருகனையும் புத்தனையும் குறிப்பதை மண்டல புரூடர் நிகண்டால் அறியலாம்' என்று இரா சாரங்கபாணியும் குறித்துள்ளார்.
ஆனால் சமணரின் ஆதிநாதர் அல்லது புத்தர் மலரிலே நடந்தவர் என்று பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' என்பது சமண-புத்தக் கொள்கைகளுக்குப் பொருந்தி வராது. அருகனும் புத்தனும் மனிதப் பிறவிகளே. மலர்மிசை ஏகினான் என்பது கடவுள் குறித்தது. அதற்கு மனிதரைச் சார்ந்து பொருள் கொள்ளமுடியவில்லை.
வள்ளுவர் எந்த இடத்திலும் சமயம் சார்ந்து குறள் படைக்கவில்லை. எனவே இக்குறள் அருகனையும் புத்தனையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.
இரண்டாவது வகையான விளக்கமாக, வேறு சிலர் 'மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்து நிற்பவன்' என்று பொருள் கொள்வர். “மலர்தலை உலகம்“ என்பதற்குப் பரந்து விரிந்திருக்கும் உலகம் எனத் தமிழ் இலக்கியங்களில் பொதுவான பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற புறநானூற்றுப் பாடலில் 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிக்கிறது என்பர் இவர்கள். 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல், பரவுதல்' என்று பொருள்; 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்று பொருள்; வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரிந்து 'பரந்த மேலிடம்' என்ற பொருள் தரும்; இது அண்டவெளியினைக் குறிக்கும்; 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்ற தொடர் அண்டவெளியினைக் குறிப்பதாக இவர்கள் விளக்கம் தருவர்.
மூன்றாவதாக நெஞ்சமலரில் வீற்றிருப்பவன் என்ற உரைப்பொருள் உள்ளது. காலிங்கர் முதலில் 'மலர்மிசை ஏகினான் என்பது எல்லாருடைய நெஞ்சத்தாமரையினுஞ்சென்று பரந்துள்ளான்' என்ற பொருள் வழங்கினார். அதைத் தழுவி பரிமேலழகர் தனது சிறப்புரையில் 'அன்பால் நினைத்தவர்களின் உள்ளக் கமலத்தின்கண்ணே நினைத்த வடிவில் விரைந்து தோன்றுவான்' என விரித்தார். இறை ஏகும் இடமான மனம் மலராக உருவகிக்கப்பட்டு தன்னால் நினைக்கப்படுபவன் நெஞ்ச மலரின்மேல் எழுந்தருளினவன் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. 'உள்ளமலரில் விளங்குபவன்' என்பது இறைப்பொதுமை சுட்டுவது. மலர்மிசை ஏகினான் என்பதற்கு இதுவே சிறந்த விளக்கமாகிறது.

சேர்ந்தார் என்றதற்கு அடைந்தார் என்பது நேர் பொருள். மாணடி சேர்ந்தார் என்றது இறைவனடி சேர்தல் எனப் பொருள்படும். இதைக் கடவுளை மனத்தால் அடைதல் அதாவது நினைத்தல் என விளக்குவர். சேர்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் 'இடைவிடாது நினைத்தல்' என்று உரை தருகிறார். இடைவிடாமல் நினைத்தல் என்றதை மறவாதே எண்ணுதல் என்று கொள்வது சிறக்கும்.
'(கடவுள் வாழ்த்து), அதிகாரத்து 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்' என்று ச தண்டபாணி தேசிகரின் அடிசேர்ந்தார் என்ற தொடரை விளக்குவார். இவ்விளக்கத்தால் வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதும் புலனாகிறது.

நிலமிசை நீடுவாழ்வார் என்பதற்கு இவ்வுலகின் கண் நெடிதுவாழ்வர் என்றும் மேலுலக இன்பம் அடைவர் என்றும் இவ்வுலக இன்பமும் வீட்டுலகப் பேறும் பெறுவர் என்றும் விளக்கம் தரப்பட்டன. 'மிசை நிலம் என்று மாற்றி மேல் நிலம் அதாவது வீடு என்றும் கொண்டனர். இந்நிலவுலகத்திலேயே நெடிது வாழ்வார் என்பது இயல்பான பொருள்.

மலர் அழகானது; சிறப்பானது; மென்மையானது; மணத்தையும், மகிழ்வையும் தருவது; தூய்மையானது. அழகிலும் தூய்மையிலும் ஒளியிலும் உள்ள இறைவன் மலர்மேல் இயங்குகிறான். எண்ணுவதற்கு எவ்வளவு இனிய காட்சி இது!
இறைவனைத் தேடி எங்கும் போகவேண்டாம். அவன் ஒவ்வொருவரது உள்ள மனமலரிலேயே வீற்றிருக்கிறான் அவனை மறவாமல் நினைந்திருப்பவர் இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வர்.
நீண்ட நாட்கள் வாழ்தல் சிறப்புடையது என்பதும் இப்பாடலின் வழி பெறப்படுகிறது.

'கடவுளை நினைத்தலுக்கும் நெடுங்காலம் வாழ்வதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

கடவுள் பற்றாளர் அதாவது கடவுளை மறவாதிருப்பவர் நீடு வாழ்வார் என்கிறது இப்பாடல்.
நீடு வாழ்வார் என்ற தொடர்க்கு நெடுங்காலம் வாழ்பவர், சகலபாக்கியமும் அனுபவிப்பவர், முத்தராவர், அழிவின்றி வாழ்வார், இறந்த பின்னர் புகழால் வாழ்வர், நெடுநாள் இன்புற்று வாழ்வர்., பெருவாழ்வு வாழ்வார், என்றும் மகிழ்ந்து இருப்பார், நெடிதுவாழ்வார், பெருக்கத்தோடு மிகச் சுகமாக இருப்பர், நிலைபெற்று வாழ்வார் எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்.
நீடு என்ற சொல்லுக்கு நெடுங்காலம் அல்லது; நிலைத்திருக்கை என்பது பொதுவான பொருள்.. நீடூ வாழ்தல் என்பது 'நீடித்த வாழ்வு', 'நிலைத்து நிற்கும் புகழ்', 'இன்புற்று வாழ்தல்' என்பனவற்றை உள்ளடக்கியது.
இக்குறளுக்கான உரையில் நாமக்கல் இராமலிங்கம் 'மனச்சாட்சியாக விளங்கும் இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் உலகத்தில் சுகமாக வாழ்பவர்கள்'' எனக் கூறுகிறார்.
மனச்சான்றின்படி வாழ்பவன் இறைவன் தன் மன மலரில் உறைகிறன் என்ற நினைவுடன் செயல்படுவான். அதுவே அவன் குற்றமற்ற அறவாழ்வு நடத்தத் துணை செய்கிறது. இந்த மனப்பயிற்சி உள்ள மனிதனிடம் மனஇறுக்கம் இராது. மன அழுத்தம் இல்லாத மனிதன் நீண்ட நாள் வாழ்வான் என்று மருத்துவ உலகும் கூறும். எனவே இறைவனை நினைத்தல் மன இறுக்கத்தை நீக்கி, உடல் காத்து, நீண்டநாள் வாழ்வு உறுதிப்பட வழிவகுக்கிறது.

நெஞ்சமாகிய மலரில் விளங்குபவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் இவ்வுலகின்கண் நெடிது வாழ்வர் என்பது இக்குறட்கருத்து.

 நெஞ்சமலரில் இருப்பவனை நினைந்த கடவுள் வாழ்த்து.

 

பொழிப்பு: மலர்மேல் சென்றவனது திருவடியை நினைந்து கொள்பவர்கள் நெடுங்காலம் வாழ்வர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

5%2BKrl%2BMalar%2Bmisai%2Beekinan.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard