பரிமேலழகர் உரை: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
இரா சாரங்கபாணி உரை: விருப்பு வெறுப்பின்றி நடுநிலையிலிருப்பவனின் திருவடியை இடையின்றி நினைப்பவர்க்கு எப்பொழுதும் துன்பங்கள் இல்லை. .
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர் ('சேர்ந்தார்' பாடம்): இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர். மணக்குடவர் குறிப்புரை: பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" எனப்பெயரிட்டார். பரிப்பெருமாள் ('சேர்ந்தார்' பாடம்): காமமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்; பரிப்பெருமாள் குறிப்புரை: இது கையாறு கெடும் என்றது. அறம் வேண்டும் என்றதற்கு அறவாழி அந்தணன் என்று பெயரிட்டார். பொருளும் காமமும் ஆகாவென்றற்கு 'வேண்டுதல் வேண்டாமையிலான்' என்று பெயரிட்டார். பரிதி: விருப்பு வெறுப்பு இல்லாதான் பாதம் சேர்ந்தார்க்கு; காலிங்கர்: உலகத்து யாதானும் ஒருபொருளை விரும்புதலும் விரும்பாமையும் இல்லாத இறைவன் அடியை அன்பொடு சேர்ந்தார்க்கு; பரிமேலழகர்: ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு.
பழம் ஆசிரியர்களுள் மணக்குடவரும் பரிப்பெருமாளும் வேண்டுதல், வேண்டாமை என்றதற்கு இன்பமும் வெகுளியும் என்று பொருள் கொள்கின்றனர்; பரிதி விருப்பு - வெறுப்பு என்கிறார்; காலிங்கர் விரும்புதல்- விரும்பாமை என்று உரை கண்டார்; பரிமேலழகர் இவரைத் தழுவி விழைதலும் வெறுத்தலும் என்றார். 'இவை இல்லாதவனது திருவடியைச் சேர்ந்தார்க்கு' என்று தொல்லாசிரியர்கள் இப்பகுதியை விளக்குவர்.
இன்றைய ஆசிரியர்கள் 'விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு', 'இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெறுப்பின்றி அவனை வணங்கவேண்டும்', 'யாதொரு பொருளையும் விரும்புதலும் வெறுத்தலுமில்லாத கடவுளுடைய மாட்சிமைப்பட்ட திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களூக்கு', 'எதையும் விரும்புதலும் வெறுத்தலும் இில்லாதவனாகிய கடவுளின் அடிகளைச் சேர்ந்தவர்க்கு' என்றபடி பொருள் உரைத்தனர்.
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது திருவடியை மறவாமல் நினைப்பவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.
யாண்டும் இடும்பை இல:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர் ('இலர்' பாடம்): எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பரிப்பெருமாள் ('இலர்' பாடம்): காமமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பரிதி: துன்பம் இல்லை என்றவாறு. காலிங்கர்: எவ்விடத்தானும் துயரம்இல்லை என்றவாறு. பரிமேலழகர்: எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. பரிமேலழகர் குறிப்புரை: பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.
பழைய ஆசிரியர்களில், 'யாண்டும்' என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமள், காலிங்கர் ஆகியோர் எவ்விடத்தும் என இடப்பொருளில் உரை கண்டனர். இச்சொல்லுக்கு பரிமேலழகர் எப்பொழுதும் என்று காலப்பொருள் கொள்வார். இடும்பை என்பதற்கு அனைவரும் துன்பம் என்றே பொருள் கூறினர். பரிமேலழகர் அது பிறவித் துன்பங்கள் குறித்தது என்றார். எவ்விடத்தும்/எக்காலத்தும் துன்பங்கள் இல்லை என்பது இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் கூறும் பொருளாகும்.
இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் துன்பங்கள் இல்லை' 'அப்படிச் செய்தால் எப்போதும் துன்பப்படாதிருக்கலாம்' 'எக்காலத்தும் துன்பங்கள் உண்டாகமாட்டா', 'எக்காலத்திலும் துன்பங்கள் இில்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.
எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்கள் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது திருவடியை மறவாமல் நினைப்பவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்கள் இல்லை என்பது பாடலின் பொருள். இறைவனை நினைத்தல் - துன்பம் நீங்குதல் இயைபு என்ன?
சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எச்சூழலிலும் துன்பங்களை உணரமாட்டார்.
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் அடியைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும் துன்பம் இல்லை. கடவுளின் பண்புகளில் ஒன்றாக விருப்பு வெறுப்பு இல்லாது இருப்பது என்று இங்கு சொல்லப்படுகிறது. அப்பண்பு கொண்ட கடவுளை இடைவிடாது நினைத்துக் கொண்டிருந்தால் எத்தகைய துன்பங்களும் எந்தக்காலத்தும் நம்மை வந்து அடையமாட்டா என்கிறது பாடல்.
எங்கும் நிறைந்து உலக நடைமுறையினை இயக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இல்லையென்றால் என்ன பொருள்? ஒருவர் வாழ்க்கையில் காரணமேயில்லாமல் உண்டாகும் துன்பங்களும் மற்றொருவர் வாழ்வில் எஞ்ஞான்றும் நடைபெறும் மகிழ்ச்சி நிகழ்வுகளும் இறைவன் ஆட்சியில் விருப்பு வெறுப்பு இருப்பதாகப் பாதிப்பு அடைந்தவருக்குத் தோன்றுகிறது. கெட்டவன் அடையும் ஆக்கமும் நல்லவன் உறும் கேடும் ஏன் என்று தமக்கு விளங்கவில்லை என்பதற்காக கடவுள் நடுநிலையில் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடவேண்டாம் என இங்கு அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்தான் என்பதை இக்குறள்வழி அழுந்தச் சொல்கிறார் வள்ளுவர். அவன் மீது நம்பிக்கை வைத்து நாளும் மறவாமல் அவனை நினைந்துகொண்டே இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறார்; அப்பொழுது ஒருவரது துன்பங்கள் நீங்கும் எனவும் கூறுகிறார்.
'வேண்டுதல் வேண்டாமை இலான்' என்ற தொடர் இறைவன் காய்தல் உவத்தல் அற்றவன் அதாவது 'இவன் வேண்டியவன், அவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு இல்லாதவன் என்பதைச் சொல்வது. தன்னை நம்புகிறவனும், நம்பாதவனும், அல்லது தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான். அவன் படைப்பில் அனைவரும் சமம்; அதனால் தம்மை வணங்குபவர்க்கு எதையும் தருவதோ, வணங்காதோரை ஒறுப்பதோ என்றபடி எதுவுமே இல்லை. அவன் எவரொருவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எதையும் செய்யத் தேவையில்லாதவன்; நடுநிலையிலிருப்பவன்; நீதியின் பெருந்தலைவன்.
நாமக்கல் இராமலிங்கம் 'பகவான் விருப்பு வெறுப்பு இல்லாத குணத்தின் பூரணம். நாமும் விருப்பு வெறுப்பில்லாமல் அவனை வணங்கினால்தான் அவனுடைய அருளை அனுபவிக்க முடியும். அதாவது அந்த பகவான் நமக்கு ஒரு நன்மை செய்ய வேண்டுமென்று கோரியோ அல்லது நாம் விரும்பாத இன்னொருவனுக்கு ஒரு தீமை செய்ய வேண்டும் ஏன்று கோரியோ வணங்கக்கூடாது'' எனக் கருத்துரைத்தார்.
'அடிசேர்ந்தார்க்கு' என்ற தொடர்க்கு 'இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு' என்றும் 'இடைவிடாது நினைப்பவர்க்கு' என்றும் பொருள் கூறுவர். இச்சொற்றொடர் பற்றிய தண்டபாணி தேசிகர் குறிப்பு சிறப்பாக உள்ளது. அவர் சொல்வது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்த்து), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'.
இறைவனை நினைத்தல் - துன்பம் நீங்குதல் இயைபு என்ன?
இறைவனை நினைத்தால் எவ்விதம் துன்பங்கள் விலகும்? விருப்பு வெறுப்பு துன்பங்களின் வாயில்கள். வேண்டுமென்கிற ஆசையும் அதனால் கிடைக்கும் இன்பம் என்கிற எண்ணமும், கிடைக்காததனால் விளையும் ஏமாற்றமும், சினமும், வேண்டாமென்கிற வெறுப்புணர்ச்சியும், துன்பம் அளிப்பவை. விருப்பு வெறுப்பைக் கடந்தவனாகிய இறைவன் அடி சேர்ந்தவர் விருப்பு வெறுப்பில்லா நிலைக்குச் செல்வர். கடவுள் பற்றற்றவனாதலால் அவனை இடைவிடாமல் நினைந்தோரும் பற்றற்றவராக மாறிவிடுவர். இந்த நிலையில் அவரது மனம் சமநிலைப்படும். விருப்பு வெறுப்பற்ற நிலையில் போட்டி பொறாமைகளுக்கு இடமில்லை. பகைமைக்கு இடமில்லை; இந்நிலையில் மன அமைதி இருக்குமாதலால் துன்பம் அவரைத் தாக்காது. துயரம் நீக்க வள்ளுவர் காட்டும் வழி விருப்பு வெறுப்பற்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்வது. வேண்டுதல் வேண்டாமையை விலக்கிவிட்டால் துன்பமில்லா நிலை அருகும். கடவுளைச் சிந்தித்துக்கொண்டிருந்தால் எப்படித் துன்பம் நீங்குகிறது என்பதற்கு உரையாளர்கள் தரும் பொதுவான விளக்கம் இது. மல்லர் என்ற பழைய உரையாசிரியர் 'கடவுளை நினைப்பவன் அவருக்குப் பொருந்தாத ஆசைகளை வெறுப்பான். அவாவினால் உண்டாகும் மயக்கத்தால் வருகிற நல்வினை தீவினை என்கிற கலப்பு அவனிடத்தில் உண்டாகாது; நல்வினை மாத்திரம் உண்டாகும்' என்ற பொருளில் உரை தந்தார்.
இறைவனை நினைத்தல் என்பது கடவுளின் அருள் வேண்டி இருப்பது. ஒருவன் தான் செய்யும் செயல்கள் யாவற்றையும் கடவுள் உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இதுவே இறைவனை நினைத்தல். அந்த உறுத்தல் ஒருவன் மனதில் இருந்தால் அவனுக்குத் தீவினை செய்ய அச்சம் உண்டாகும். அவன் நல்லவற்றையே செய்வான். அதாவது தீவினை அச்சம் கொண்டவன் துன்பத்தில் விழமாட்டான். இறைவனை நினப்பவர் இவ்விதம் துன்பம் உறா நிலை எய்துவர்.
விருப்பும் வெறுப்புமற்ற இறைவனது அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் துன்பம் இல்லை என்பது இக்குறட்கருத்து.
அதிகார இயைபு-விருப்பும் வெறுப்பும் நீக்கி கடவுள் வாழ்த்து சொல்பவர்க்கு எந்நாளும் துன்பமில்லை.
பொழிப்பு - விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் துன்பம் இல்லை.