Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 8 அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
8 அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்
Permalink  
 


அறவாழியந்தணன்றாள்சேர்ந்தார்க்கல்லாற்
பிறவாழிநீந்தலரிது.

 

அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித்தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது, பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம்.

அறம் பொருளின்பத்தை ஆழியென்றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென்றுருவகியாது விட்டது, ஒருமருங்குருவகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:8)

பொழிப்பு (மு வரதராசன்): அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

மணக்குடவர் உரை: அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது.
இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது. (அவலம்-வருத்தம் தோன்றி நிற்றல்)

பரிமேலழகர் உரை: அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.
(அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)

வ சுப மாணிக்கம் உரை: அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந்தாலன்றிப் பாவக்கடலைக் கடக்கமுடியாது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது.

பதவுரை: அற-அறமாகிய; ஆழி-கடல், சக்கரம், சுனாமி(பெருவெள்ளம்), படைக்கலம்; அந்தணன்-கடவுள், அந்தண்மை கொண்டவன் அதாவது மிகக் குளிர்ச்சி பொருந்தியவன்; தாள்-அடி; சேர்ந்தார்க்கு-இடைவிடாது நினைந்தவர்க்கு; அல்லால்-அன்றி; பிற-பிறவாகிய; ஆழி-கடல்; நீந்தல்-நீந்தல், நீந்திக் கடத்தல்; அரிது-உண்டாகாது, கடினம்.


அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது;.
பரிப்பெருமாள்: அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது;
பரிதி: தன்மம் என்னும் சமுத்திரமாக உள்ள பரமேசுரன் பாதந்துணை இல்லாதவர்;.
காலிங்கர்: அறமாகிய பெருவெள்ளமான அனைத்துயிர்கட்கும் தண்ணளியை உடையனாகிய இறைவனது தாளினை வணங்கி வழிபட்டார்க்கல்லது;.
பரிமேலழகர்: அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது;.
பரிமேலழகர் குறிப்புரை: பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர்.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் அறவாழி என்ற சொல்லுக்கு அறக்கடல் என்றும் அந்தணன் என்றதற்கு இறைவன் என்றும் பொருள் கண்டனர். பரிமேலழகரது விரிவுரையில் "'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர்" என்று குறித்துள்ளதை நோக்கும்போது அறவாழி என்பதற்கு தரும சக்கரம் என்று அவருக்கு முன்னர் பொருள் கண்டுள்ளப்பட்டது தெரிகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'அறக்கடலாகிய அந்தணனது திருவடிப் புணையைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல்', 'ஆசைகளே இன்றி தர்ம சமுத்திரமாகிய பகவானை அடைக்கலம் புகுந்தால்தான் தர்ம மார்க்கம் தெரியும்.இல்லாவிட்டால்', 'அறக்கடலாகிய அழகிய அருட்கடவுளுடைய திருவடிகளைப் பற்றினவர்களுக்கல்லாது', 'அறக்கடலாகிய கடவுளுடைய அடிகளாகிய கப்பல்களை அடைந்தவர்கட்கு அல்லாமல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அறக்கடலாகிய அருள்வடிவினையுடைய இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர்க்கல்லாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

பிற ஆழி நீந்தல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: பிறவாழியை நீந்தலாகாது; அது பெறுதலரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது. [அவலம்-வருத்தம் தோன்றி நிற்றல்]
பரிப்பெருமாள்: ஒழிந்த பொருளும் காமமுமாகிய கடலை நீந்தியேறுதலரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறத்தைச் சொல்லிப் பிற எனலே அறமுதலான மூன்றினும் ஒழிந்த இரண்டினும் என்பது பெறுதும். இது காமமும் பொருளும் பற்றிவரும் அவலங் கெடுமென்றது
பரிதி: பாவக்கடலை நீந்தமாட்டார்.
காலிங்கர்: மற்று(றி) யாவர்க்கும் பிறவி பௌவத்தைக் கடத்தல் அரிது. [பௌவம்-கடல்]
பரிமேலழகர்: பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)

மணக்குடவர் உரையைப் பின்பற்றிப் பரிப்பெருமாளும் பரிமேலழகரும் பிற கடல் என்பதற்கு அறம் தவிர்த்த பொருளும் இன்பமுமாகிய கடல்கள் என்று பொருளுரைத்தனர். காலிங்கர் பிற கடல் என்றதற்குப் பிறவிக் கடல் என்று கொண்டார். பரிதி பாவக் கடல் என்றார். பொருளின்பக் கடல், பாவக்கடல், பிறவிக்கடல் என்ற மூவகைக் கடல்களைத் தொல்லாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏனயவர்க்குப் பாவக்கடலைக் கடத்தல் இயலாது', 'அதர்ம சமுத்திரம் போன்ற உலகத் துன்பங்களைக் கடக்கமுடியாது', 'பொருட்பற்று, இன்பப்பற்று என்னும் பிற இரு கடல்கலையும் கடக்க முடியாது', 'உலக வாழ்வின் பிற கடல்களைக் கடத்தல் முடியாது.', என்ற பொருளில் உரை தந்தனர்.

பிறவாகிய பாவம் என்ற கடலைக் கடத்தல் இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறக்கடலாகிய அருள்வடிவினையுடைய இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர்க்கல்லாமல் பிற ஆழி நீந்தல் அரிது என்பது பாடலின் பொருள்.
'பிற ஆழி நீந்தல் அரிது' குறிப்பது என்ன?

குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீட்சி பெற இறைவனை இடைவிடாது நினைக்க.

கடவுள் அறக்கடல்போன்று இருக்கிறார்; தண்ணளி நிறைந்தவர். அவரை இடைவிடாது நினைத்துக்கொண்டிருப்பவர்களாலேயே அவர்கள் உண்டுபண்ணிய தீய விளைவுகளிலிருந்து மீள முடியும்.
இறைவனுக்கு ஏற்றிக் காட்டப்படும் கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களுள், மிகச் சிறந்த பண்புகளால் அவன் இங்கு போற்றப்படுகிறான். இப்பாடலில் கடவுள் அறவாழி அந்தணன் அதாவது அறக்கடலாக, அழகிய குளிர்ந்த அருளாளனாக உள்ளான் எனச் சொல்லப்படுகிறான்.

அறவாழி அந்தணன்:
அறவாழி அந்தணன் என்பதற்கு அறக்கடலை உடைய கடவுள் என்றும் அறச்சக்கரத்தையுடைய கடவுள் என்றும் இருதிறமாகப் பொருள் கூறினர். சமயச் சார்பான உரை கூறியவர்களே அறச்சக்கரம் எனப் பொருள் கொண்டார்கள்.
சமணர்கள் 'அருகப் பெருமான் அறவாழியை (தரும சக்கரத்தை) யுடையவர்; அவருடைய அறநெறி அறவாழி என்று கூறப்படுகிறது. மேலும் சமணர் இன்றும் தங்களுடைய கோயில்களில் தரும சக்கரத்தை வைத்து வணங்குகிறார்கள்; அருகர் (தீர்த்தங்கரர்) எழுந்தருளும்போது அவருக்கு முன்னால் அறவாழி செல்கிறது என்பது சமணரின் நம்பிக்கை. பரிமேலழகர் இக்கருத்தையுட்கொண்டே தம்முடைய உரையில் 'அறவாழியென்பதனைத் தருமச்சக்கரமாக்கி அதனுடைய அந்தணரென்று உரைப்பாருமுளர்' என்று எழுதியுள்ளார். எனவே அறவாழி என்பது அருகனின் தருமச் சக்கரமே' என்பர்.
புத்த மதத்தைச் சார்ந்தோர் 'கௌதமர் போதித்த அறநெறியை 'தரும சக்கரம்'(அறவாழி) என்று பௌத்த சமய நூல்கள் கூறுகின்றன; அவர் கண்ட தத்துவத்திற்குத் 'தர்ம சக்கரப் பிரவர்த்தன சூக்தம்' என்பது பெயர்; புத்தரைப் பின்பற்றியவர்கள் முன்னாளில் புத்தருக்கு உருவம் அமைத்து வழிபடவில்லை; அவர்கள் பாதபீடிகை, தர்ம பீடிகை என்னும் இரண்டையும புத்த உருவத்துக்குப் பதிலாக வைத்து வணங்கினார்கள்; புத்தர் அறவாழியுருட்டினவர் (அறநெறியைப் போதித்தவர்), அறவாழி என்னும் தரும சக்கரத்தால் எல்லா உயிர்களையும் ஆள்கின்றார்' என்று கூறி அறவாழி என்பது புத்தரது தர்மசக்கரத்தையே குறிக்கிறது என்கின்றனர்.
இங்கு சொல்லப்பட்ட அறவாழி என்பது திருமால் ஏந்தியுள்ள சுதர்சனம் என்னும் சக்கரப்படையைக் குறிப்பது என வைணவர்கள் கூறுகின்றனர்.
குறளில் வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொருள்சேர் இறைவன், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான் எனப் பலபட இறைவனின் பண்புகள்தாம் பேசப்படுகின்றன. கடவுள் உருவமோ அமைப்போ அவனுடைய ஆயுதமோ குறளில் எங்கும் கூறப்படவில்லை அப்படி இருக்க இக்குறளைக் கொண்டு, இறைவன் தரும சக்கரத்தையுடையவன் என்று கூறுவது குறளின் பொதுமையுணர்வுக்கு மாறாக அமையும். சமயக்கணக்கர் வழி செல்லாத வள்ளுவரை ஒரு சமயத்தினராக்குதல் முற்றிலும் ஒவ்வாது. எனவே இப்பாடலில் சொல்லப்பட்ட அறவாழி அறச்சக்கரத்தையோ சக்கரப்படையையோ குறிக்கவில்லை என்பது தெளிவு.
அறவாழி என்பதற்கு அறக்கடல் என்ற பொருள் ஏற்கத்தக்கதாகிறது. அறக்கடல் அந்தணன் என்றதற்கு அறக்கடலான, அழகிய குளிர்ந்த அருளாளன் என்பது பொருள்.

காலிங்கர் என்ற பழைய உரையாசிரியர் ஆழி என்றதற்கு கடல் எனக் கொள்ளாமல் அறமாகிய பெருவெள்ளம் எனப் பொருளுரைத்தார். மேலும் அந்தணன் என்ற சொல்லுக்கு அனைத்துயிர்கட்கும் தண்ணளியை உடையன் என்ற பொருள் தருகிறார். இதனால் அறவாழி அந்தணன் என்றதற்கு வெப்பம் போக்கிக் குளிர்ச்சியைத் தரும் வெள்ளநீர் போல தண்ணளி செய்பவன் என்ற சிறந்த பொருள் இவரது உரையில் கிடைக்கிறது.
அறவாழி அந்தணன் என்பதற்கு அறக்கடலையுடைய அருளாளனான இறைவன் என்பது பொருள்.

தாள்சேர்ந்தார்க்கு அல்லால்:
தாள் சேர்ந்தார் என்ற தொடர்க்குத் தண்டபாணி தேசிகர் 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்த்து), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும். இவ்விளக்கம் வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதையும் தெளிய வைக்கிறது' என்று கருத்துத் தெரிவிப்பார்.
தாள் சேர்ந்தார் என்பதற்கு திருவடியை இடைவிடாது நினைப்பவர் அதாவது மறவாது இருப்பவர் என்பது பொருள். இறைவனை இடைவிடாது நினைப்பவர்கள் தம்மை 'மேலிருந்து அவன் கண்காணிக்கிறான்' என்றெண்ணி தீயன தவிர்ப்பர். தாள் சேராதார் தீயன புரிந்து பாவக்கடலில் விழுவர். இது 'தாள்சேர்ந்தார்க்கு அல்லால்' என்ற தொடரை விளக்கும்.

'அறமாகிய பெருவெள்ளம் என்றும் அனைத்துயிர்கட்கும் தண்ணளி என்றும் மொழியப் பட்டுள்ளதால் கடவுளின் கருணைக் குணத்தைப் போற்ற வந்த குறள் இது எனத் தெளிவாகிறது.
எவர் ஒருவர் அருள் வெள்ளமான இறைவனை எப்பொழுதும் நினைந்து கொண்டிருக்கிறாரோ அவர் குற்றம் செய்யாமாட்டாதவராவார். இறைவன் திருவடியைப் பற்றுக் கோடாகக் கொள்ளாதவர்கள் பாவக்கடலில் சிக்கித் தவிப்பர்; இவர்கள் பாவ மீட்சி காண முடியாது என்பதை எதிர்மறையாக 'தாள் சேராதார் பாவக்கடலை கடக்க முடியாது' என்கிறது இச்செய்யுள்.
இப்பாடல் பற்றிய காமாட்சி சீனிவாசன் கருத்து நினையத்தக்கது: 'அறத்தினின்றும் பிறழ்தல் இறைவனுக்கு மாறாகச் செய்யப்படும் பாவமாகும். செய்த தவற்றுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டுவோரைக் கடவுள் மன்னித்தல் கூடும். அவர்கள் தீமையைவிட்டு விலகி நல்வழியில் நடப்பதற்கேற்ற நல்லுணர்வைக் கடவுள் அவர்கட்கு அளித்தலும் கூடும். மக்கட்கு நீதியை, நல்வழியைக் காட்ட வல்லவர் கடவுளே. மக்கள் தாமே உணராத வகையில் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் குற்றங்களையும் கடவுள் உணர்கிறார். அவரைப் பணிந்து வேண்டிக் கொண்டால் நாம் அறியாத குற்றங்களையும் அவர் அறிந்து நீக்குவார் என்பது போன்ற கருத்துக்கள் திருக்குறளில் இல்லை. அறவாழி அந்தணன்..... (8) என்ற ஒரு குறளே அறத்தின்வழி நடப்பதற்கு இறைவன் துணை வேண்டும் என்னும் கருத்தை ஓரளவு தருகிறது எனலாம்'. பாவ மன்னிப்பு போன்ற செய்தி குறளில் இல்லையானாலும் பாவத்திலிருந்து மீட்சி பெறுதல் போன்ற கருத்தின் சாயல் இக்குறளில் காணப்படுகிறது என்பதுபட எழுதும் இவரது குறிப்பு இப்பாடலின் தனித்தன்மையைக் காட்டுகிறது.

'பிற ஆழி நீந்தல் அரிது' குறிப்பது என்ன?

பிற ஆழி நீந்தல் அரிது:
பிறவாழி என்ற தொடர்க்குப் பாவக்கடல், பொருளின்பக்கடல், பிறவிக்கடல், அறக்கடலுக்கு வெளியே உள்ள இன்பதுன்பக்கடல், அகங்காரக்கடல், அந்தண்மை பொருந்தப் பெறாத இல்லற துறவறங்களாகிய சமுத்திரங்கள் எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்.
பிற ஆழி என்பதற்கு பிறவாகிய ஆழி என்பது பொருள். பாடலின் முதல் அடி 'அறஆழி'யைக் குறிப்பிடுவதால் ஈற்றடியில் சொல்லப்பட்ட 'பிற' என்பது 'அறமல்லாத பிற' என்பதாகிறது. அறம் அல்லாத பிற என்பது மறம் அல்லது பாவம். பிறவாழி என்ற சொல் பின்தொடரும் நீந்தல் என்றதைச் சார்ந்து வருவதால் பிற ஆழியிலுள்ள ஆழிக்கும் கடல் என்பதே பொருள். 'பிற ஆழி நீந்தல் அரிது' என்றது 'அறமல்லாத கடல் அதாவது பாவங்களாலான கடலைக் கடப்பது கடினம்' எனப் பொருள்படும்.

பொருளின்பக்கடல் என்பது பிறவாழி என்ற தொடர்க்குப் பொருந்தாது என்பதை இரா சாரங்கபாணி 'பொருளும் இன்பமும் அறத்திற்கு உதவுவனவும், அறத்தான் வருவனவும் ஆதலான் அவ்விரண்டும் துய்த்தற்குரியனவே யன்றித் துறத்தற்குரியவாகா' என விளக்குவார். பின்வரும் குறள் ஒன்றில் பிறவிக்கடல் நீந்துதல் (குறள் 10) பற்றிக் குறிப்பிடப் பெறுவதால் இப்பாடலிலுள்ள பிறவாழி என்பதற்குப் பிறவிக்கடல் எனப் பொருள்கொள்ள வகையில்லை. உரையாசிரியர்கள் கூறியுள்ள மற்ற வகையான கடல்களும் பிறவாழி என்றதற்கு ஏற்கத்தக்கனவாக இல்லை. எனவே 'பிறவாழி' என்பதற்குப் பாவக்கடல் என்று பொருள் கொள்வது பொருத்தம்.

தனிமனிதரது பாவம் ஆழி அளவு பெரிதா? இதற்குத் திரு வி க 'மக்கள் அறநெறி நின்றொழுக முயல்கிறார்கள். இம்முயற்சி பெரிதும் வெற்றியளிப்பதில்லை. எவ்வழியாதல் பாவம் வாழ்விடைப் புகுந்து விடுகிறது. மிகச் சிறுபாவம் வாழ்விடைப் புகினும் வாழ்வு கேடுறும். ஒரு கலப்பாலில் ஒரு சொட்டு நஞ்சு வீழினும் அக்கலப்பாலும் நாஞ்சாகின்றதன்றோ? சிறுபாவம் விரைந்து பரவிப் பெருகிக் கடலாகி உயிரை ஆழ்த்தும். பாவம் கடலாகி உயிரை ஆழ்த்தி வருத்தலால் அதையும் ஆசிரியர் 'ஆழி' என்கிறார்' என விளக்கம் செய்வார்.
மனத்தில் தோன்றும் எண்ணற்ற கெட்ட எண்ணங்கள், நாளும் நாம் உரைக்கும் தீச்சொற்கள், நாம் செய்யும் சிறு சிறு தீச்செயல்கள் இவையெல்லாம் கடல் அளவு பெரிதுதாம். அறமல்லாத எண்ணங்கள் கொண்டிருந்தோர், புன்மொழி பேசியவர், தீய செயல்கள் புரிந்தோர் ஆகியோர் தீய விளைவுகளுக்கு உட்பட்டவர். இவர்கள் மனச்சான்றின் உறுத்தல்களினால் துன்பமுறுவர். தம் தவறுகளை எண்ணி வருந்தி, இறைவனை இடைவிடாது நினைத்தால், இவர்கள் தம் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள கடவுள் அருள் செய்வார். இதுவே பிற ஆழியை நீந்திக் கடப்பது அதாவது பாவக்கடலிலிருந்து மீள்தல் என்று வள்ளுவர் குறிப்பது.

அறக்கடலாகிய அருள்வடிவினையுடைய இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர்க்கல்லாமல் பாவம் என்ற கடலைக் கடத்தல் இயலாது என்பது இக்குறட்கருத்து.

 கடவுள் வாழ்த்துச் சொன்னால் தீவினை ஆற்றியவர்களுக்கும் அவர் தண்ணளி செய்வார்.

 

பொழிப்பு

அறக்கடலை உடையவனும் மிகுந்த தண்ணிய இயல்பையுடையவனுமாகிய இறைவனின் தாளைச் சேர்ந்தவர்க்கல்லாமல் மற்றவர்க்கு பாவக் கடலைக் கடத்தல் இயலாது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 5%2BKrl%2B08%2B%2BAravazi%2Bawthanan.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard