தமிழகத்திலே முதன்முறையாக பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், தமிழ் மரபில் முதல் கலப்பு மணம் செய்தவர், முதல் விதவை மறுமணம் செய்தவர், முதல் சுயமரியாதை மணம் புரிந்தவர், முதன்முதலாக மேலைநாட்டு உடையில் தமிழ் பயிற்றுவித்த தலைமைத் தமிழாசிரியர் எனப் பல்வேறுபட்ட முதலுக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்கியக் கல்வியை ரசனைக்கு அப்பாற்பட்டு கொண்டுசென்று சமூகப் பண்பாட்டைக் கட்டமைத்த தமிழறிஞர் இவர். தமிழிலக்கிய மரபில் இவர்தம் பங்களிப்பு சமூக முக்கியத்துவம் பெற்றதும்கூட.
முற்போக்கு இலக்கியவாதியாக சமூக நிகழ்வுகளைப் பதிவாக்கியவர் - பல்வேறான திறனாய்வாளர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்டவர் - உழைக்கும் அடித்தட்டு மக்களை மையப்படுத்திய படைப்புகளை உருவாக்கிய படைப்பிலக்கியவாதி - சமூகப் பொருளாதார அரசியல் விழிப்புணர்வினூடாகத் தமிழிலக்கிய மரபை எழுச்சி பெறச் செய்தவர் - எனப் பன்முக ஆளுமை கொண்ட சாமி.சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் பற்றிய புரிதல் இன்றைய தலைமுறையினருக்குத் தேவையாகிறது. 1900ஆம் ஆண்டில் பிறந்து 1961ஆம் ஆண்டு இயற்கை எய்திய சாமி.சிதம்பரனாரின் காலக்கட்டம் தமிழக அரசியலிலும் சரி, தமிழிலக்கிய மரபிலும் சரி மிகவும் திருப்புமுனையாக அமைந்ததாகும். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழில் புரட்சியால் ஏற்பட்ட சமூக மாற்றமும் தமிழ் மரபை வெகுவாகப் பாதித்த காலமும் இதுவேயாகும். அப்படியான ஒரு சூழலில் மரபார்ந்த தன்மைக்குள் புதுமையைப் புகுத்தியவராக சாமி.சிதம்பரனார் காணப்படுகிறார்.
1921இல் வெளிவந்த வெண்பா யாப்பிலான 'நளாயினி கதை' என்னும் நூலே இவர்தம் முதல் படைப்பு. அந்நூல் ஏட்டளவில் உள்ளது. 1923ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளார். படைப்பிலக்கியங்கள், அரசியல் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், இலக்கிய ஆய்வுகள் என இவரது எழுத்துலகம் விரிந்த பரப்பைக் கொண்டது.
மறுபிறப்பில் நம்பிக்கையுடைய மக்கள் சங்க காலத்தில் இருந்தனர் என்றும் சங்க காலத்திலேயே ஆத்திக-நாத்திக பூசலும் நிலவியிருந்தது என்றும் அக்காலத்திய பொருளாதார நிலையை உழவுத் தொழிலே பெரும்பான்மையாக நிர்ணயித்தது என்றும் சங்க இலக்கியக் காலத்தை வரையறை செய்கிறார்.
தொழில் சிறக்கவும் உற்பத்தி பெருகவும் அறம் வலியுறுத்தப்பட்டது. குடிப்பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதை நீதி இலக்கியம் ஆதரிக்கவில்லை. மற்ற இலக்கிய காலங்களைக் காட்டிலும் நீதி இலக்கியக் காலத்தில் பேச்சுக்கலை முக்கியத்துவமாகிறது. வறியவர்க்கு ஈவதே இம்மைக்கும் மறுமைக்குமான புகழைச் சேர்க்கும். பொருளாதாரச் சமத்துவம் ஏற்பட அறத்தின்மூலமே வழி ஏற்படுகிறது.
உயிர்களிடம் அன்பு கொண்டு அமைதியை நிலவச் செய்தலே வீரமாகக் கருதப்பட்டது. மெய்ப்பொருளை உணர்வதே பெறற்கரிய பெருஞ்செல்வம் எனப் போற்றப்பட்டது என்று இவரது பக்தியிலக்கிய ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. தன்னுடைய சித்தர் இலக்கியம் பற்றிய ஆய்வில் மனிதநேயம் பெரிதும் பேசப்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். வள்ளலாரின் அருட்பாவில் பொதுவுடைமை கருத்துகளை சாமி.சிதம்பரனார் காணுகிறார்.
இவருடைய படைப்புகள் முழுக்க பகுத்தறிவுக் கொள்கையும் சுயமரியாதைச் சிந்தனையும் விரவிக் கிடக்கின்றன. இவர்தம் 'அணைந்த விளக்கு' அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய நாடகம். ஆபுத்திரம் நாடகம் மனிதநேயத்தை வலியுறுத்துவது. இரு நாடகமும் பௌத்த மதக் காப்பியங்களைத் தழுவி எழுதப்பட்டன. மனித சமூகத்துக்கு அறிவை வலியுறுத்திய மதம் புத்த மதம். புத்த தர்மம் என்பதற்கு புத்தி தர்மம் என்றும் அதுதான் மனித தர்மம் என்றும் பௌத்தம் கூறுகிறது. அதனாலே அறிவை வலியுறுத்தி தனது படைப்பை வழங்கியுள்ளார் சிதம்பரனார்.
சங்க கால இலக்கியங்கள் முதல் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை அவர் எழுதிய விளக்கங்கள் யாவும் அறிவின் தேவையை வலியுறுத்தி அமைந்தன. பண்டிதர்களிடம் காணப்பட்ட அறிவுசார் புலத்தை எளிய மக்களிடம் கொண்டுசெல்ல விழைந்தார். இலக்கியத்தினூடாக மக்களின் சமூகப் பொறுப்பை உணர்த்திக் காட்டியவர்.
தன்னுடைய படைப்பிலக்கியத்தின் வழியாக பகுத்தறிவுக் கருத்துகளையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் தீவிரமாக பரவச் செய்தவர். தத்துவநிலையில் நின்று தனிமனிதத் தேவையைத் தேடியவர்.
இலக்கிய ஆய்வின்வழி சமூகப் பண்பாட்டைக் கட்டமைக்கக் கூடிய தேவை அவரது காலத்தில் அவசியமாக இருந்தது. அதை அவர் நிறைவு செய்தார் என்று உறுதியாகக் கூறமுடியும்.
அரசியல் ஆளுமை:
இலக்கியமும் அரசியலும் என்றைக்கும் நெருங்கிய தொடர்புகொண்டு திகழ்கின்றன. இயக்கங்களுடன் இணைந்த இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலையை இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றிலே காண முடியும். அப்படியான தாக்கம் சிதம்பரனாருக்குள்ளும் இருந்தது. இவர், மிக இளமையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பற்றுடையவராக இருந்தார். ஆனால் அக்கட்சித் தலைவர்களின் முதலாளித்துவப் போக்கில் அதிருப்தி கண்டார். அதிலிருந்து விலகினார்.
அடுத்ததாக பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தில் பங்குகொண்ட சிதம்பரனார், சுயமரியாதை இயக்க நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, கலப்பு மணம், தீண்டாமை ஒழிப்பு எனச் சமூக அக்கறையுடையவராக எண்ணற்ற கூட்டங்களில் பேசியும் பத்திரிகைகளில் அவைகுறித்து எழுதியும் வந்தார். எஸ்.சி.பரன் என்ற புனைபெயரில் இந்தி எதிர்ப்பு குறித்து 'தமிழரின் முதல் வெற்றி' என்ற தலைப்பில் விடுதலை இதழில் கட்டுரை எழுதியுள்ளார். 'திராவிடக் கட்சியின் பொறுப்பு' எனும் தலைப்பில் 10-05-1951 அன்று விடுதலையில் கட்டுரை எழுதியுள்ளார். 'திராவிடக் கட்சியின் சிறப்பு' எனும் தலைப்பில் 11-02-1940 அன்று குடியரசு இதழில் கவிதை எழுதினார். விடுதலையில் 16-03-1951 அன்று வெளியான, 'எதிர்காலத் தேர்தல் எப்படி நடக்கும் ?' என்ற கட்டுரை அவர்தம் அரசியல் ஞானத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டும். விடுதலை இதழில் 13-05-1951 அன்று வெளியான, 'இந்தியா அடமானம் வைக்கப்படுகிறது' என்ற இவருடைய கட்டுரை அக்காலத்தில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நிலையை நுட்பமாக விளக்கும்.
நகரத்தூதன் இதழில் 24-06-1945 அன்று வெளியான 'சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்குள் பொறாமை ஏன் ? போட்டி ஏன் ?' என்ற கட்டுரை, அந்நேரத்தில் அவ்வியக்கத்திற்குள்ளாக நடந்த நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டும். இப்படியாக, பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சுயமரியாதைக் கருத்துகளையும் மக்களிடம் கொண்டுசென்ற தீவிர சுயமரியாதைக்காரராக விளங்கினார் சிதம்பரனார்.
பெரியாருடன் இருந்தபோதே இவருக்கு பொருள்முதல்வாதத்தில் ஈடுபாடு அதிகம். சோசலிச கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இலக்கியவாதியான ஜீவாவிடம் நட்பு கொண்டிருந்தார். இரண்டாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட சமாதானக் கவுன்சில், சோவியத் கலாச்சார சங்கம், ஆசிய - ஆப்பிரிக்க ஒருமைப்பாடு இயக்கம் போன்ற எல்லா முன்னேற்ற அமைப்புகளிலும் சேர்ந்து நற்பணி ஆற்றியுள்ளார். உள்நாட்டில் தொழிலாளி வர்க்க விவசாயப் போராட்டங்களுக்கு அவர் ஆதரவளித்துள்ளார். சீன எல்லைப் பிரச்சினையை காங்கிரஸ் ஒரு துருப்புச் சீட்டாக்கி, தேர்தலில் கம்யூனிஸ்ட் முற்போக்கு சக்திகள் வெற்றிபெறாமலிருக்க முயற்சி செய்யும் என்று அஞ்சாமல் அம்பலப்படுத்தினார். பழம்பெரும் தொழிலாளர் இயக்கத் தலைவர் ம.சிங்காரவேலு, வி.சக்கரைச் செட்டியார், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் துணிந்து பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.
பல்வேறு கட்சிகளில் பொறுப்பு வகித்தாலும் குறிப்பிட்ட கட்சியின் அரசியல்வாதியாக தம்மை வெளிக்காட்டியதில்லை. அவர் 'மக்களிடையே சாதி வேற்றுமை, இன வேற்றுமை, மொழி வேற்றுமைகள் பாராட்டக் கூடாது. மக்களனைவரும் கல்வி, பொருளாதாரம் ஆகிய வகைகளில் சமநிலை அடைய வேண்டும். வர்க்க பேதமற்ற சமுதாயம் ஏற்பட வேண்டும். இவை போன்ற கொள்கைகளே என்னுடைய அரசியல் கருத்துகள்' எனக்கூறும் சிதம்பரனாரின் அரசியல் ஈடுபாடு அளவிடற்கரியது.
தம்முடைய இலக்கிய ஆய்விலும் ஆழமான அரசியல் பார்வையைச் செலுத்தியிருந்தார். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் எனவும் விழைந்தார். தமிழறிஞர் க.கைலாசபதி, சிதம்பரனாரின் அரசியல் பாதையைப் பற்றிக் கூறியிருப்பது அரசியலில் இவருக்கான ஆளுமையை தெற்றெனப் புலப்படுத்தும்.
இதழியல் ஆளுமை
சாமி. சிதம்பரனார் இளம் வயதிலேயே நாட்குறிப்பு எழுதும் வழக்கமுடையவர். ஆதலால் நிகழ்வுகளைக் குறிப்பெடுக்கும் வழக்கமே பின்னாளில் பத்திரிகைத் துறையில் ஈடுபடக் காரணமாக அமைந்தது. தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே பத்திரிகையிலும் தொண்டு செய்துவந்தார். 1934-35இல் பள்ளி ஆசிரியராக இருந்தபோது மாயவரத்திலிருந்து வெளிவந்த 'வெற்றி முரசு' என்னும் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். 1948இல் பரலி சு.நெல்லையப்பரிடமிருந்து லோகோபகாரி இதழின் உரிமையை வாங்கி திரு.வேணுகோபால நாயக்கர் நடத்தியபோது ஓராண்டு காலம் அதன் ஆசிரியராக அமர்ந்து திறம்பட நடத்தினார். இவர், 1938இல் ஓராண்டு காலமும் 1952இல் ஓராண்டு காலமும் விடுதலையின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அதோடு மட்டுமன்றி குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, திராவிடன் ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
சுயமரியாதை இயக்கக் கருத்துகளை நாட்டில் நிலைக்கச் செய்ய ஒரு பரப்புரை நிறுவனத்தைப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்க தந்தை பெரியாருக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். இவரது இந்தக் கருத்தினூடாகவே குடியரசுப் பதிப்பகம் நிறுவப்பட்டது. மாபெரும் அறிவுப் புரட்சி ஏற்படுத்திய இதழாசிரியராக இவர் விளங்கினார் என்பதற்கு இதுவே சான்று.
அரசியலும் இதழியலும் வெகுஜன மக்களை எளிதாக கவரக்கூடிய துறைகள். அதனாலேயே இவரது நாட்டம் இதிலே மிகுந்திருந்தது. 30க்கும் மேற்பட்ட இதழ்களில் 13க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் படைப்புகளை வழங்கியுள்ளார். 1936இல் முன்னேற்றம் பிரஸ் ஆரம்பித்து அறிவுக்கொடி என்ற பத்திரிகை நடத்தினார்.
தனிமனித ஆளுமை
எவ்வித ஆடம்பரமுமின்றி எளிமையாக வாழ்ந்தவர். கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்புடன் திகழ்ந்தவர். எந்த காரணத்தைக் கொண்டும் எண்ணம் வேறு, எழுத்து வேறாக இருந்தவர் அல்லர். எண்ணியதை எழுதியவர். எழுதியதைச் செயல்படுத்தியவர்.
தமிழ்ப்பொழில் இதழ் ஆசிரியருக்கு தமிழர் வீரம் என்ற கட்டுரையை அனுப்பியபோது எழுதப்பட்ட கடிதத்தில், 'இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் புலவர்கள் மறுக்கத்தக்க பொருள்களும் விரவி வரும். அவற்றையெல்லாம் தாங்களே பார்த்துக் கீழே குறிப்பெழுதும் உரிமையுண்டு. அன்றியும் இக்கட்டுரைக்காரரின் எண்ணங்களுக்குப் பத்திரிகையும் சங்கமும் உடன்பாடுடையவை அல்ல என்று குறிப்பு எழுதிக் கொள்ளலாம். தயவுசெய்து என் எண்ணத்தை மாற்றாமல் எல்லாவற்றையும் அப்படியே வெளியிட வேண்டுகின்றேன்' என எழுதியுள்ளார். தமிழன் என்ற வார்த்தையின் அடையாளம் என்பது இதுதான்.
உணர்வுத் தளத்தில் இயங்கிக் கொண்டு அறிவு விளக்கு ஏற்றிய தமிழறிஞர் இவர். அதனால் ஈரம் பதிந்த அவரது பாதச் சுவடுகள் 22 தொகுதிகளாக நம் கையில் இருக்கின்றன. அவரது அரசியல் கட்டுரைகள், இதழாசிரியர் பணிகள் என முழுவதும் வெளிவந்தால் அவருடைய பன்முக ஆளுமையை முழுவதுமாக அறிய இயலும்.
(17-01-2017 சாமி.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.)
*
கட்டுரையாளர் குறிப்பு: சென்னை பெரம்பூரிலுள்ள செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘சாமி.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள்’ என்னும் தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்மையில், தன்னோடு பணியாற்றுகிற தமிழ்த்துறைத் தலைவர் வ.விசயரங்கன் அவர்களோடு இணைந்து ‘தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் உரையுடன்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரிய இலக்கண உரை நூலாகும். தமிழிலக்கியப் பரப்பில் இலக்கிய ஆய்வுகள், கவிதை எனச் செயல்பட்டு வருபவர்.