”நான்கு வேதங்களும் பத்து உபநிஷதங்களும்” என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது,வேதம் என்ற நேரடியான வார்த்தையைத் தவிர்த்து,
இதே அர்த்தத்தில் உள்ள பிற சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட,தேடினேன்.சில சொற்கள் அகப்பட்டன. இச்சொற்கள், இச்சொற்களை
உட்கொண்ட சில வரிகள், இவ்வரிகளின் மேலோட்டமான அர்த்தம்,இவற்றைப் பற்றியே இப்பத்தி.
”அந்தணரோத்துடைமை மிகவினிதே” என்று இனியவை நாற்பதில்,அந்தணர் வேதத்தை மறவாமை இனிது எனும் அர்த்தத்திலும்,
“வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பானுரை” என்று இன்னா நாற்பதில், வேதம் ஓதுதல் இல்லாத அந்தணன் சொல் துன்பம் எனும் அர்த்தத்திலும்,
”ஒத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்” என்று பெருங்கதையிலும்,ஒத்து என்ற சொல் வேதம் என்ற பொருளில் வருகிறது.
”ஆரணத்தின் சிரம் மீது உறைசோதியை அந்தமிழால்” என்கிறார் கம்பர்.அதாவது,வேதத்தின் உச்சியில் விளங்கும் பரஞ்சோதியான நாராயணன் என்று
சடகோபர் அந்தாதியில் ஆரணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
”எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோர் இதுவே” என்ற குறுந்தொகைப்பாடலின் “உன் வேதத்தில்
பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மருந்து இருந்தால் சொல்” என்று அர்த்தம் தரும் இவ்வரிகளில் எழுதாக்கற்பு எனும் சொல் வேதத்தைக் குறிக்கிறது.
”அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தை செயந்தணர்” என்கிறார் திருமூலர், அதாவது, அந்தணர் வேதங்களை அணவுவர் என்ற பொருளிலும்,
“அருமறையின் நெறிகாட்ட,அயன் பயந்த நிலமகளை” என்ற கலிங்கத்துப்பரணியின் வரிகளில், “வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களை மக்களுக்குத்
தெரிவிப்பதற்காக, நான்முகன் படைத்த நிலமகளைக் கைப்பிடித்தவன்” என்று குலோத்துங்கச்சோழனைப் பாராட்டும் வரிகளிலும், அருமறை என்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது.
”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து” என்று சிலப்பதிகாரத்தில் வேதம் என்னும் பொருளில் மறைநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது.
ஆக,வேதம் என்ற பொருளில் ஒத்து,ஆரணம்,எழுதாக்கற்பு,அருமறை,மறைநூல் போன்ற சொற்கள் பிரயோகப்பட்டுள்ளன. இதே பொருளில் மேற்கூறிய சொற்களைத் தவிர்த்து,
வேறு சொற்கள் உளவா எனத் தெரிந்துகொள்ள ஆசை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.