நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து,
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்!
கள் உண்ணக் கூடாது என விலக்கிக்கொண்டு வாழ்பவருக்கும், கள் உண்டு வாழ்பவருக்கும் அறச் செயல் இது என எடுத்துரைப்பவர் அந்தணர். அந்தணர் இரு வகைப் படுவர். வேதம் ஓதுபவர் ஒரு வகை. மக்களை வழிப்படுத்துபவர் மற்றொரு வகை. இவர்கள் இருவருமே மக்களுக்கு அறிவுரை வழங்கி நெறிப்படுத்துவர். நூல் நெறி பிழையாமல் வாழ்ந்து காட்டுவர். குழந்தையை வளர்க்கும் தாய் போல், மக்களுக்கு உதவுவர். இவர்களின் நன்னடத்தையால் உலகத்தில் மழை சுரந்து பொழியும். அதனால் உலகத்துக்கு நல்லூழி அமையும். அறம் பிழையாது. செம்மை மாறாது. இப்படி உலகம் இயங்க உதவும் மற்றோருவர் ஆளும் அரசன். இப்படி ஆளும் அரசனே! அழகு செய்யப்பட்ட தேரில் வருபவனே! மணிகள் பல ஒலிக்கும் யானை மேல் வருபவனே!
அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடைப்
புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
உன் வெண்கொற்றக் குடை அறநெறியை நிழலாகத் தருகிறது. அப்படிப்பட்ட குடை நிழலுக்கு வெளியே இவள் கிடக்கிறாளோ? இவளைப் பார். தன் கணவன் அறநெறி பிறந்து மற்றொருத்தியிடம் இருக்க இவள் துன்புற்றுக்கொண்டிருக்கிறாள்.
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! 10
பொய்யாமை நுவலும், நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகா
இவளைப் பார். பிறை போன்ற நெற்றியில் பசப்பு நோய் ஏறி அவளது கணவன் வரவுக்காக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள். உன் செங்கோல் ஆளுகைக்குள் அழுத்தப்பட்டு மூழ்கிக் கிடக்கிறாளா?
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகா 15
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
இவளைப் பார். காம நோய் இவளை வருத்துகிறது. தான் வாழும் நாளையே இவள் நொந்துகொண்டிருக்கிறாள். "பாதுகாவல் தருவேன்" என்று உன் முரசு முழங்குகிறது. அந்த முரசின் பாதுகாவலில் இவள் இல்லையா? மூங்கில் போன்ற இவளது தோள் வாடிக் கிடக்கிறதே!
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்ட, கண் காணாதற்றாக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?
இப்படியெல்லாம் நேர்ந்துள்ளது. இவள் கணவன் இவளை விட்டுவிட்டு நீண்ட காலம் வெளியில் தங்கிவிட்டான். இவளோ அவன் குற்றத்தைக் காட்டினாலும் காணாமல் அவனுக்காகவே ஏங்குகிறாள். அவளது வளையல்கள் கழன்று விழுகின்றன. இந்தக் கொடுமையை ஆளும் அரசனாகிய நீ கண்டுகொள்ளவில்லை. இது உனக்குத் தகுமா?
கலித்தொகை – மருதக் கலி
பாடியவர் – மருதன் இளநாகனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்