ஈகை பொதுவாகப் பிறன் வறுமைப் பிணியையும் சிறப்பாகப் பசிப்பிணி திருத்துதலையும் கருதிற்று. - நாகை சொ தண்டபாணி பிள்ளை
வறுமையால் இரந்துவந்து கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுத்தல், கொடிய வறுமைக்கண் பசி தீர்க்கும் உணவைக் கொடுப்பது ஈகை எனப்படும். அது வறுமையான் இழிந்தோனுக்கு, பொருளாலும் அருட்குணத்தாலும் உயர்ந்தோன் கொடுக்கும் கொடையாம். வறியராய் ஏற்றார்க்கு எதிர் ஈடு எதுவும் கருதாமல் ஈவது பற்றியது இவ்வதிகாரம். ஒப்புரவு உலக நடையை அறிந்து, அனைவர்க்கும் பயன்படும்வகையில் பொதுக்கொடை வழங்குவதையும் பொதுநலத் தொண்டு ஆற்றுவதையும் குறிக்கும்; ஈகை வறியவர்க்கு ஒன்று ஈவதைச் சொல்வது.
ஈகை
'இல்லை' என்று வருபவர்க்கு 'இல்லை' என்று கூறாது, அவரது பசிப்பிணி தீர்க்கும் அறச்செயலே ஈகையாகும். ஒரு பொருளும் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்துதவுவதை அது குறிக்கும். மற்றவர்க்குக் கொடுப்பது எல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுடையது. பசி தீர்த்தல் என்ற இந்த அறத்தை வள்ளுவர் இன்றியமையாத குணமாகக் கருதுகிறார். 'பசி என்னும் தீப்பிணி' 'அற்றார் அழிபசி' என்ற தொடர்களால் பசியைக் குறிப்பிட்டார். சங்க காலத்திலும் சிறு குடி பண்ணன் போன்ற வண்மையாளரை புலவர் 'பசிப்பிணி மருத்துவன்' என்று கூறிப் புகழ்ந்தனர். அக்காலத்தில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, குறள் காலத்தில் வறியவனின் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது என்பர். விருந்தோம்பல் என்பதும் அன்று ஈகையைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது என அறிகிறோம். ஈகை என்பது தனி உயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடை. புகழ் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்று ஈதலால் புகழ் பெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைத்துச் சொல்வார்.
ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வயிற்றீகை. அது இயல்பூக்க நிலையில் உண்டாவது. இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்கப்படுவது. அது எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. 'இம்மைச் செய்தது மறுமைக்காம்' என்று புதிதாய் அன்று கூறப்பட்ட வினைக் கொள்கையைப் புலவர் மரபு ஏற்றதில்லை. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும் அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; பிறரும் சான்றோர் சென்ற நெறி என, ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே (புறநானூறு 134 பொருள்: ஆய் அறம் செய்யும் வணிகம் அல்லன். தன் பணத்தை இந்த உலகில் முதலீடு செய்து மறு உலகில் அதன் ஊதியத்தைப் பெறுவதில்லை. சான்றோர்களின் மரபார்ந்த வழியில் அவன் வாரி வழங்குகின்றான்) என்று சங்கப்புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் முழங்கினார். அறம் அறத்திற்காகச் செய்யப்படவேண்டும். ஈகை ஈர உள்ளத்துடன் ஈகைக்காகச் செய்யப்படுவது.
வறியவர்க்குக் கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சியான இன்பம் இருக்கின்றது; இதை ஏன் ஈயாதவன் உணர்வதில்லை என வியக்கிறார் வள்ளுவர். ஈயாமல் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர் இகழப்படுகிறார். நிரப்பிய உணவைத் தனித்து உண்பது, இரப்பதைவிட பார்வைக்கு அருவருப்பானது, எனச் சொல்லப்படுகிறது. சாதலை எவரும் விரும்புவதில்லை; ஆனால் கண்முன் பசித்தவன் இருக்க அவன் துயர் தீர்க்க முடியாத நிலையில் சாதலை ஒருவன் விரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.
ஈகைஅதிகாரப் பாடல்களின் சாரம்
221 ஆம்குறள் ஈகை என்பது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றினைக் கொடுப்பதே ஆகும்; பிறர்க்குக் கொடுப்பன எல்லாம் பயன்கருதிய கொடுத்தலுக்கு ஒப்பாகும் என்கிறது.
222 ஆம்குறள் பிறரொருவரிடம் சென்று இரந்து பெற்றுக் கொள்ளுவது நல்வழி என்று சொல்லப்பட்டாலும் ஏற்றுக் கொள்வது தீயது; மேலுகம் கிடைப்பதில்லை சொல்வார்களானாலும் ஈகையே சிறந்தது எனச் சொல்கிறது.
223 ஆம்குறள் இல்லாதவன் என்ற துயரத்தை உரைக்கும் முன்பே கொடுத்தல் நற்குடிப் பண்பு உடையவனிடத்தே உள்ளன என்கிறது.
224 ஆம்குறள் இரந்தவர் பொருள் பெற்று முகமலர்ச்சி அடைதலைக் காணும் வரை இரக்கப்படுதலும் இனிது அல்ல என்று சொல்கிறது.
225 ஆம்குறள் ஆற்றலுடையவர் வலிமையில் பெரிது பசி பொறுத்தல்; அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான் என்கிறது.
226 ஆம்குறள் பொருள் இல்லாதவரின் மிக்க பசியைப் போக்குக! அது பொருளைப் பெற்றவன் (தனக்கு உதவ) வைக்கும் இடமாகும் எனச் சொல்கிறது.
227 ஆம்குறள் பங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை எனக் கூறுகிறது.
228 ஆம்குறள் பொருளைச் சேர்த்து வைத்து இழக்கும் கொடியவர்கள் பிறர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்தலால் எய்தும் இன்பத்தை அறியாரோ என்ன? எனக் கேட்கிறது.
229 ஆம்குறள் நிறையத் தாமே தனியாக உண்ணுதல் பிறரிடம் இரத்தலைக் காட்டிலும் உறுதியாகக் கொடுமைதான் எனக் கூறுகிறது.
230 ஆவதுகுறள் சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை; அதுவும் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ முடியாத போது என்கிறது.
ஈகை அதிகாரச் சிறப்பியல்புகள்
'பிராமணக் கொள்கையிலும் புத்தக் கொள்கையிலும் பகவத்கீதையிலும் வரும் அறநிலை, ஊதியக் கருத்திற்கு முழுதும் அடிமையானது போலக் குறளின் அறநிலையோ அடிமை ஆகவில்லை. "நன்மைக்கு என்றே நன்மை செய்ய வேண்டும்" என்ற அறிவு ஏற்கனவே இங்கு விளங்கக் காண்கிறோம். பல குறள்களினூடே இது ஒளிர்கின்றது' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து ஈகை செய்யவேண்டாம் என்று இவ்வதிகாரப் பாடல் வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (குறள் 221) கூறுகிறது. இங்கு அறத்திற்காக அறத்தைச் செய்க என வலியுறுத்தப்படுகிறது,
இரப்பதுதான் இன்னாது என்று எல்லாரும் நினைக்கிறோம். ஆனால் இரந்து நிற்பவனைப் பார்ப்பதும் அவன் துயரம்கேட்பதும் துன்பம் தருவதே என்கிறது இங்குள்ள பாடல். ஈவோனிடம் வந்து ஒன்றைக் கேட்கும் ஒருவர் அப்பொருளைப் பெற்று இன்புறும் வரையிலும் அவன் அவருடைய நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டியிருத்தலால் அது அவனுக்குத் துன்பத்தையே தருகின்றது என்கிறது இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு (குறள் 224) என்ற அப்பாடல்.
கொடுப்பதிலும் ஓர் இன்பம் இருக்கின்றது. அதைக் கொடுத்துப் பார்த்தால் உணரமுடியும் என்று ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர் (குறள் 228) என்ற பாடல் ஈயாதோரை கொடுப்பதற்கு ஊக்கப்படுத்துகிறது.
வறியவர்க்கு எதுவும் வழங்க இயலவில்லையே என்கின்ற மனத்துன்பம் பெரியதாகும். சாதலைக் காட்டிலும் துன்பமானது வேறு இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும் என்று சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை என்ற பாடல் மொழிகிறது (குறள் 230). தன் கண்முன்னே நிகழும் பசிக்கொடுமையையும் வலியையும் ஒருவனால் தீர்க்க முடியாத போது அவன் சாவை வள்ளுவர் வரவேற்கிறார். இது கொஞ்சம் கடுமையானது என்றாலும் 'செத்துவிடலாமே' என்ற அந்த எண்ணம் ஈரநெஞ்சம் உடைய யாருக்கும் உண்டாகத்தான் செய்யும்.