நிகழ்ந்தவற்றுள் தன் நெஞ்சு அறிந்ததும் பிறர்க்கு தீமை அற்றதுமாய சொல் வாய்மையாம் என வரையறுத்த பொய்யில் புலவர், நூலோர் அதிரும்படி நிகழாத நற்பொய்யும் வாய்மைப்பாலது என்று உலகம் வாழப் புரட்சிப் புத்தறம் நட்டவர். - வ சுப மாணிக்கம்
வாய்மை என்பது பொய்சொல்லாமையைக் குறிக்கும். எதுவாய் இருந்தாலும் தீமை இல்லாதது வாய்மை; குற்றமற்ற நன்மை பயக்குமேல் பொய்யும் வாய்மையே என்பன வாய்மைக்கு வள்ளுவர் தரும் வரையறைகள். விதி விலக்கின்றி கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பொய்யாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டும் ஆகும்; அவற்றில் பொய்யாமையை அறங்களெல்லா வற்றுள்ளும் நல்லது என்று கூறுகிறார் அவர். வாய்மையைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஒருவர் வாய்மையின் வழியில் தவறாமல் செல்வாரேயானால் ஏனைய நன்மை எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் மற்றவை எல்லாம் அதனுள் அடங்கும் என்பது வள்ளுவரது வாய்மை மொழி.
வாய்மை
அறங்களெல்லாவற்றுள்ளும் நல்லது எதுவென ஆராய்ந்து அறிந்த வள்ளுவர் 'வாய்மையே தாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது; பிற அல்ல' என்று துணிகிறார். ஒரு சிறிதும் யார்க்கும் தீமை இல்லாதவற்றைச் சொல்லுதலே வாய்மையாகும் என்கிறார். வாய்மை என்பது மனங்கலந்து வரும் அகச்சொல்; ஆகவே நடந்த நிகழ்ச்சிகள் என்றாலும், பிறர் சொல்லியவை என்றாலும், உட்பண்பு அழியாதபடி வெளிப்படுதுதலே 'யாதொன்றும் தீமையிலாத சொலல்' ஆம். 'கண்டதைச் சொன்னேன்; உண்மையைச் சொன்னேன்' என்பதல்ல வாய்மை. மேலும் குற்றமற்ற நன்மை தருமானால் பொய்கூட உண்மையாகும் என்றும் சொல்லுகிறது குறள்.
உண்மை என்ற சொல் வாய்மை, மெய்ம்மை என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு, மனம் சொல் மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை வாய்மை மெய்ம்மை எனக் கூறுவர். சோமசுந்தர பாரதியார் 'மெய்ம்மை எனப்படுவது-உண்மையுரைத்தலும், உளதாந்தன்மையுமாம். மெய்ம்மை, வாய்மை, உண்மை என்பன தமிழில் ஒருபொருட் பன்மொழிகளாக வழங்கப்படுகின்றன; எனினும் உற்றுநோக்கில் இவைதம்முட் சிறிது பொருள் வேற்றுமையும் இனிது விளங்கும். உண்மை-உளதாயிருப்பது; வாய்மை-என்றும் யாண்டும் நன்றுபடப் பேசுவது; மெய்ம்மை-நிலைத்த உண்மைத் தன்மையாம்' என விளக்குவார். 'வாய்மையாவது சொல்லில் தூய்மையை உணர்த்துவது. மனத்தூய்மை செய்வினை தூய்மையாகிய இரண்டும் உண்மை, மெய்ம்மை எனப் பெயர் பெற்று, முன் பின்னாக நின்று வாய்மை வழி நிற்றலின் வாய்மை கூறி அவ்விரண்டனையும் உள்ளடக்கினார். ஒருவனது செயலும் மனமும் இடைநின்ற சொற்கருவியால் உணரப்படுதலின் வாய்மை கருவியாக மனிதனது உள்ளத் தூய்மையையும் செயல் தூய்மையையும் அறியத் துணை செய்வது இவ்வதிகாரம். அன்றியும், செயலும் நினைவும் எல்லா உயிர்க்கும் பொதுவாயும், சொல்லே மனிதனுக்குச் சிறப்பாகவும் பெற்ற பேறு ஆதலால், சொல் தூய்மையை உணர்த்தும் வாய்மையை மனிதனுக்கே உரிய ஒழுக்கச் சிறப்பில் தலைமையாக வைத்துக் கூறுகிறார்' என்பது இவ்வதிகாரம் பற்றி ஜி வரதராஜன் தரும் விளக்கம். உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை, மெய்யால் செய்யும் செயலில் மெய்ம்மை என வாழும் வாழ்வே ஒருவருக்கும் தீங்கு இல்லாமல் வாழும் சிறந்த வாய்மை ஒழுக்கமாகும்.
இவ்வதிகாரத்துள் மெய், உண்மை என்ற சொற்கள் ஆளப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது- வாய்மை பொய்யாமை என்ற சொற்களே பயின்று வந்துள்ளன. யாமெய்யாக் கண்டவற்றுள் என்று அவர் கூறுவதால் வாய்மையின் வேறாகவே மெய்யைப் பயன்படுத்துகிறார் என அறியாலாம்.
வாய்மை அதிகாரம் இல்லறத்தார் துறவறத்தார் இருவருக்குமே பொருந்தக் கூடியது. இது ஏன் துறவறவியலில் வைக்கப்பட்டது என்பது புரிபடவில்லை,
வாய்மை அதிகாரப் பாடல்களின் சாரம்
291 ஆம்குறள் வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எதுவாயினும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என வரையறை செய்கிறது.
292 ஆம்குறள் குற்றம் நீங்கிய நன்மை தரும் என்றால் பொய்யாகச் சொல்லப்படுவதும் மெய்ம்மையாக வைத்து எண்ணப்படும் என்கிறது.
293 ஆம்குறள் தன் மனம் அறிந்ததைப் பொய்யாது சொல்லுக; பொய் கூறின் தன் மனச்சான்றே தன்னை ஒறுக்கும் என்கிறது.
294 ஆம்குறள் மனமறியப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் அவன் உலகோர் உள்ளத்துள் எல்லாம் இருப்பான் என்று சொல்கிறது.
295 ஆம்குறள் ஒருவன் தன்உள்ளத்தோடு பொருந்த மெய் சொல்வானாயின் அவன் தவமுடையார் தானம்செய்வார் இவர்களை விட மேலானவன் என்கிறது.
296 ஆம்குறள் இவன் பொய்சொல்லான் எனப்படுவதுபோல புகழ் வேறொன்றில்லை; பொய்யாமை அவன் அறியாமலே எல்லா அறங்களின் நன்மைகளையும் கொடுக்கும் எனச் சொல்கிறது.
298 ஆம்குறள் ஒருவனுக்கு வெளிஉடம்பின் தூய்மை நீரால் உண்டாகும்; மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும் எனக் கூறுகிறது.
299 ஆம்குறள் எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல, சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும் எனக் கூறுகிறது.
300 ஆவதுகுறள் நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்கிறது.
வாய்மை அதிகாரச் சிறப்பியல்புகள்
உண்மை என்பது உளதாந்தன்மை அதாவது உள்ளதைச் சொல்வது, அதில் சொல்வதால் விளையும் நன்மை, தீமை பற்றி சொல்பவர் எண்ணுவதில்லை. வாய்மை என்னும் பொழுது காட்சியொடு, கருத்தும் ஆராயப்பட்டுச் சொல்லப்படுகிறது. வள்ளுவர் தனது தனித்த கோட்பாடாக வாய்மை என்பதற்கு ஓர் இலக்கணம் வகுத்து ஓர் அதிகாராமாக அதை விளக்குகிறார்.
வாய்மைக்குப் புதுமையான இலக்கணம் வகுத்த வள்ளுவர் அதைத் தீமை பயவாததைச் சொல்லுதல் எனக் குறிக்கின்றார். மேலும் குற்றமில்லாத நன்மை உண்டாகுமாயின் பொய்ம்மையும் வாய்மையாகவே எண்ணப்படும் என்றும் கூறுகிறார்: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்(291), பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (292) என்பன குறள்கள்.
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்(293), உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்(294), மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை(295) என்னும் குறட்பாக்கள் மனச்சான்றுக்கு மாறாகப் பொய் சொல்லுதல் கூடாது என்பதை வலியுறுத்தி அதன் உயர்வையும் சொல்கின்றன.
பொய்யாமை புகழ் தருவது மட்டுமன்றி பிற அறங்கள் தரும் நன்மைகளையெல்லாம் தரும் என வாய்மையின் சிறப்பை பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும்(296), பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று(297) என்ற இரு குறள்களும் கூறுகின்றன.
பொய்சொல்லாமைதான் நீதி வழங்கும் பொறுப்பிலுள்ள பெரியார்க்கு வழிகாட்டும் விளக்கு என்று எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) எனச் சொல்கிறது.
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) என்று தம்மை முன்னிலைப்படுத்திப் பெருமிதத்துடன் வாய்மை யொழுக்கம் போன்ற நல்லது வேறெதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.