Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 033 கொல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
033 கொல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
கொல்லாமை 
ஒன்றாக நல்லது கொல்லாமை.
குறள் திறன்-0321 குறள் திறன்-0322 குறள் திறன்-0323 குறள் திறன்-0324 குறள் திறன்-0325
குறள் திறன்-0326 குறள் திறன்-0327 குறள் திறன்-0328 குறள் திறன்-0329 குறள் திறன்-330

openQuotes.jpgஉயிர்களைக் கொல்லுதலாகிய மிகக்கொடிய பாவத்தைச் செய்யாமை.
- தமிழண்ணல்

 

கொல்லாமை இணையின்றான அறச்செயல்; கொல்வது தீச்செயல் (பாவம்) எல்லாவற்றையும் தருவது. இவை இவ்வதிகாரப் பொருண்மைகள். கொல்லாமை என்பது பிற உயிரைக் கொன்று போக்காதிருப்பது. கொல்லாமை அதிகாரம் துறவறஇயல் என்ற பகுப்பில் வைக்கப்பட்டிருந்தாலும் இவ்வியலிலுள்ள மற்ற அதிகாரங்களைப் போல இதையும் எல்லா மனிதர்களுக்கும் சொல்லப்பட்டதாகக் கொள்வது நன்று.

.

கொல்லாமை

எல்லா உயிர்களையும் போற்றுவது ஒழுக்க இயலில் மிகவும் உயர்ந்த பண்பு. உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்பது எங்கும் எப்பொழுதும் நிலவி வரும் அன்புக் குறிக்கோள். மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று எண்ணுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பு குறளுக்கு உண்டு. பிற உயிர் அதன் உடம்பை விட்டு நீங்குமாறு செய்வது கொலையாம். கொல்லாமை என்ற சொல் பொதுவாக எந்த உயிரையும் கொல்லாத அறம் மேற்கொண்டொழுகுதலைக் குறிக்கும். மற்ற உயிர்கள் உணவுக்காகவும் அவற்றின் உறுப்புக்களின் பயன்பாட்டிற்காகவும் கொல்லப்படுகின்றன. உணவுக்காக உயிர்களைக் கொல்வதுபற்றி புலால்மறுத்தல் அதிகாரம் ஆராய்கிறது. எந்த ஓர் உயிரையும் பொருளுக்காகவோ, பகை காரணமாகவோ, உயிர்ப்பலி வழிபாட்டிற்காகவோ, வேள்வியின் பொருட்டோ கொல்லுதல் கூடாது என்று கொல்லாமை அதிகாரம் கூறுகிறது. கொலைவினையர்களை மாக்கள் என்றும் இழிந்த தொழில் செய்பவர்கள் (புலைவினையர்) என்றும் இவ்வதிகாரம் இழித்துரைக்கின்றது.
கொல்லாமை தனிமனித அறமாகச் சொல்லப்படுகிறது. சமுதாய அறம் காக்க கொலைத்தண்டனையில் கொல்லப்படலாம் (கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் செங்கோன்மை, 550) எனக் குறள் கூறும். படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்கள் படைத்து படையையும் படைவீரர்களையும் புகழ்ந்தமையால் நாடு காக்கவும் உயிர்கள் கொல்லப்படலாம் என்பதும் வள்ளுவர்க்கு உடன்பாடுதான் எனத் தெரிகிறது.

தற்காப்புக்காகக் கொல்லலாமா? தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது என்கிறது ஒரு பாடல் (குறள் 327). தற்காப்புக்காக்கூட உயிர்களைக் கொலை செய்யலாகாது என்று இக்குறள் கூறுவதாகப் பலரும் உரைக்கின்றனர். மற்றோர் உயிரைப் போக்கினால் அல்லாமல் தன் உயிர் வாழ்க்கைக்கு இடம் இல்லாததுபோல் தோன்றும் நிலையில் - கொடிய விலங்கோ பாம்பு போன்ற நச்சு உயிர்களோ நமக்கு ஊறு செய்ய வந்தால்- என்ன செய்வது? அப்பொழுதும் கூட அவற்றைக் கொல்லக்கூடாது என்றுதான் சொல்லப்படுகிறது எனத் தோன்றவில்லை. 'தன்னுயிர் நீப்பினும்' என்றுதான் பாடல் சொல்கிறது. தன்னைக் கொல்லவரும் உயிர்களிடமிருந்து காத்துக்கொள்வதற்காகக் கூட உயிர்க்கொலை கூடாது எனக் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. தன்னுயிர் போனாலும் சரி என்பது வேறு; தன்னுயிரை நீக்கவரும் உயிரிடமிருந்து காத்துக் கொள்வது என்பது வேறு. தன் உயிர் காக்கும் மருந்துக்காகப் பிற உயிரைக் கொல்லவேண்டாம் என்றுதான் வள்ளுவர் சொல்லுகிறார். எனவே தன்னைக் காத்துக்கொள்ள, தேவைப்படின், கொடிய உயிர்களைக் கொல்லலாம் எனக் கொள்ளலாம்.

கொல்லாமை அதிகாரம் கூறும் செய்திகளாவன:
எல்லா அறவினைகளும் கொல்லாமை என்பதில் அடங்கும். உயிர்க்கொலை எல்லா தீச்செயல்களையும் தரும்;
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் பாத்துண்ணுதலை அதாவது பிறருடன் பகிர்ந்து உண்ணுவதை கொல்லாமையின் தலைசிறந்த வடிவம்;
மருந்துக்காகவோ, தெய்வத்திற்கு உயிர்ப்பலி வேண்டிக்கொண்டதற்காகவோ, வேற்றுலகத் தேவர்களுக்கு வழங்குவதற்கான வேள்விப்படையல் என்ற பெயரிலோ உயிர்க்கொலை கூடவே கூடாது. நன்மை உண்டாகும், செல்வம் பெருகும் என்று ஆசைகாட்டப்பட்டதால் உயிர்ப்பலி செய்யவேண்டாம்; அப்படி ஒன்றும் கிடைக்காது. ஒருவேளை பெற்றாலும் சான்றோர் அவ்விதம் தீநெறியால் கிடைத்த ஆக்கத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;
கொல்லாமை நல்ல அறம் என்று சொல்லும்போது பொய்யாமையும் நல்லது என்று சேர்த்துச் சொல்லப்படுகிறது. வள்ளுவர் பார்வையில் மனிதர் யாவரும் இவ்விரண்டு தலையாய அறங்களையும் கடைப்பிடித்தே ஆக வேண்டும்;
கொலைத்தொழில் செய்வோர் யாராயிருந்தாலும் இழிந்தோரே;
உடம்புநீக்கி வாழ்வு நடத்தியவனுக்குத் தன்னுடம்பு சீர்குலைந்த கொடிய வாழ்நாள்தான் மிஞ்சும்.

கொல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 321 ஆம்குறள் அறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும்; கொல்லுதல் எல்லாத்தீச் செயல்களையும் தரும் என்கிறது.
  • 322 ஆம்குறள் தனக்குள்ளதைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதல் நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் மேலானது எனச் சொல்கிறது.
  • 323 ஆம்குறள் இணையற்ற நல்ல அறம் கொல்லாமை; அதற்குத் துணை நிற்கும் பொய்யாமையும் நல்லது என்கிறது.
  • 324 ஆம்குறள் நல்ல வாழ்வுமுறை என்பது எதுவென்றால் எந்த உயிரும் கொலைப் படக்கூடாது என்ற கொள்கை எண்ணும் நெறியே எனக் கூறுகிறது.
  • 325 ஆம்குறள் பிறவி நின்றநிலைக்கு அஞ்சித் துறந்தார் எல்லாரினும் உயிர்களைக் கொல்ல அஞ்சி கொல்லாமை அறத்தை எண்ணுபவனே உயர்ந்தோனாவான் எனக் கூறுகிறது.
  • 326 ஆம்குறள் கொல்லாமை அறத்தை மேற்கொண்டு ஒழுகுபவன் வாழ்நாள்மேல் உயிரைப் பிரித்துக்கொண்டு போகும் இறப்புத் தெய்வம் நெருங்காது எனச் சொல்கிறது.
  • 327 ஆம்குறள் தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது என்கிறது.
  • 328 ஆம்குறள் நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று கூறப்பட்டாலும் கொலையால் கிடைக்கும் ஆக்கங்களைச் சான்றோர் இழிந்ததாகவே கருதுவர் எனச் சொல்கிறது.
  • 329 ஆம்குறள் கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் எனக் கூறுகிறது.
  • 330 ஆவதுகுறள் உயிரை உடம்பிலிருந்து போக்கியவர் நோயுடலும் நீங்காத தீச்செயல் (பாவம்) சுமக்கும் வாழ்வும் உடையார் என்கிறது.

 

கொல்லாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (322) கொலை என்பது -உயிரைப் பிரித்தல் மட்டுமன்று. தான் மட்டும் பொருளீட்டி உண்டு, பிறரை உணவு முதலியன இல்லாமல் சாக விடுதலையும் கொலைக் குற்றமாகவே கருதவேண்டும் என்ற பொருளில் இக்குறளில் சொல்லியுள்ளது வேறு எந்த அறநூலிலும் இல்லாத சிறப்பு என்பர். இக்குறளின் அடியில் காணப்படும் கருத்து என்னவென்றால் உலகில் நிகழும் பெரும்பான்மைக் குற்றங்களுக்கும் வறுமைதான் காரணம். உலகப் படைப்பில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைப்பதாகவே உள்ளது மாந்தர் தமக்குக் கிடைத்தைத் தமக்குள் பகிர்ந்து உண்பது போன்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டால் வறுமை நீங்கும். அவ்வாறன்றி தான் மட்டும் உண்டு, பசித்திருப்போரைப் பொருட்படுத்தால் இறந்துபோவதைப் பார்த்திருப்பது கொலைபோன்றதுதான். இதனாலேதான் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்கிறார் வள்ளுவர். எவ்வளவு உயர்வான கருத்து!

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று (323) என்ற குறள் வள்ளுவர் உள்ளத்தில் ஒரு போராட்டத்தை உண்டுபணியதுபோல் தோன்றுகிறது. கொல்லாமை, பொய்யாமை என்ற இவ்விரண்டு பேரறங்களுள் எதை முதன்மையாகச் சொல்வது என்பது அது. இரண்டுமே தலையாயின என்கிறார். அவர்க்கு ஒன்றை முதலில் வைத்து மற்றதைப் பின்னுக்குத்தள்ள விருப்பமும் இல்லை. பொய்யாமையால் கொலை நிகழலாம்; பொய்சொல்வதால் கொலை தடுக்கப்படலாம்; கொலை நடந்துவிட்டால் உயிரை மீட்பது எப்படி? எனவே கொல்லாமையை முதலில் சொல்லி அதற்குத் துணையாக உடன்போகும் பொய்யாமை என்றார்.

எவ்வகையான் வரும் கொலைப்பயனும் கடைதான் என்கிறது நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை (328) என்னும் பாடல். சான்றோர் முன்னின்று நடத்தினாலும் அவ்வகையான உயிர் நீக்கலும் இழிவானதுதான் என்று சொல்கிறார் வள்ளுவர். சான்றோர், நன்றுஆகும், ஆக்கம் பெரிது என்னும் சொல்லாட்சிகள் இக்குறள் கொலைசூழ் வேள்வி பற்றியது என்பதை எளிதில் உணரவைக்கின்றன.

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து (329) என்று கொலைத்தொழில் செய்வோரை பகுத்தறியும் திறனில்லாதவர், இழிதொழில் புரிபவர் என்று வசைபாடுகிறார் வள்ளுவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard