ஒவ்வொருவரும் தாம் தொடங்கப் போகும் எந்த வேலையையும் நன்றாக ஆராய்ந்து அதன் பலாப்லன்களைத் தெரிந்து கொண்டு, அதன் பிறகுதான் அந்த வேலையில் இறங்க வேண்டும் என்பதையும் அதன் வகையைச் சேர்ந்த அறிவையும் சொல்லுவது தெரிந்து செயல் வகை. - நாமக்கல் இராமலிங்கம்
ஒருவன் மேற்கொள்ளும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறத்தினைக் கூறுவது தெரிந்து செயல் வகை அதிகாரம்... தக்கவர்களைக் கலந்து தொடங்கி தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் துணைக்கொண்டு செய்யப்படவேண்டும் என்கிறது .
தெரிந்து செயல்வகை
தெரிந்து செயல்வகை- அதிகாரம் முயற்சியைத் திட்டமிடுதல் பற்றியது. இது அளவில் பெரிய முயற்சி தொடர்பானது போன்று தோன்றினாலும்,, போர், தொழில், வாணிகம்- போன்ற சிறிய, பெரியதான எந்தச் செயலுக்கும்- பொருந்தும்படியே அமைந்துள்ளது. அழிவு, நன்மை, நீண்டகால பய்ன் இவற்றை ஏண்ணி ஒரு செயலை மேற்கொள்க; திறமையரைத் துணை கொள்க; கைமுதலை இழக்க நேரும் சூதாட்டக் கூறுகள் கொண்ட முயற்சி தவிர்க்க; தமக்குத் தெளிவானதைச் செய்க; பதறாமல் செயல் ஆற்றுக; தொடர்ந்து கண்காணித்து வருக; பொறுப்பற்ற வகையில் முயற்சி தொடங்கற்க; முறையுடன் செய்க, வெறும் ஆள்பலம் நலம்பயவாது;; பங்கேற்பவர்க்கு உரிய ந்ன்மை செய்க; சமூகம் எள்ளாச் செயல் செய்க, என்பன இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
தெரிந்து செயல்வகை அதிகாரப் பாடல்களின் சாரம்:
461 ஆம்குறள் இழப்பு, ஆக்கம், நீண்ட கால ஆதாயம் இவற்றை எண்ணி செயலில் ஈடுபடுக என்கிறது.
462 ஆம்குறள் பெரியாரைத் துணைக்கொண்டு செயல் ஆற்றுவோர்க்கு எதையும் எளிதாகச் செய்ய முடியும் என்பது.
463 ஆம்குறள் முதலுக்கே மோசம் வரும் முயற்சியை அறிவுடையார் மேற்கொள்ளார் என்பதைச் சொல்கிறது.
464 ஆம்குறள் புரியாத தொழிலில் புக வேண்டாம் என அறிவுரை வழங்குவது.
465 ஆம்குறள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற மனப்பான்மையுடன் தொடங்கும் செயல் பகைவர் வளரவே துணை செய்யும் என்கிறது.
466 ஆம்குறள் செய்வன செய்து செய்யக்கூடாதன விலக்கி மேற்கொண்ட செயலுக்கு எந்தவகையிலும் கேடு நேராவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.
467 ஆம்குறள் முயற்சியை முதலில் தொடங்கிவிட்டுச் சிக்கல்கள் நேர்ந்தல் அப்போது எதிர்கொள்ளலாம் என்ற மிகைநம்பிக்கை இழுக்காய் முடிந்துவிடும் என்று சொல்கிறது.
468 ஆம்குறள் முறையறிந்து மேற்கொள்ளாத முயற்சி எவ்வளவு துணை இருந்தாலும் குறையாகவே முடியும் எனச் சொல்வது.
469 ஆம்குறள் ஏற்போரின் செயற்பாடு அறியாமல் செய்த நன்மையும் தவறாகப் போக வாய்ப்புண்டு என்று குறிக்கிறது.
470 ஆவதுகுறள் சட்டத்திற்கு) முரணானதும் சமுதாய நலனுக்கு ஏற்பிலாததுமான செயல்களைச் செய்யலாகாது என எச்சரிப்பது.
தெரிந்து செயல்வகை அதிகாரச் சிறப்பியல்புகள்
..பகைவரைப் பாத்திப் படுப்பது என்று முடியும் தொடர் கொண்ட குறள் (465) வளரும் நிலத்திலே பகைவர்களை நிலைபெறச் செய்தல் –என்ற உவமை மூலம் பொறுப்பற்ற தன்மையில் தொடங்கும் செயல் எதிர்கொள்ளும் நிலைமையின் கடுமையை நன்கு புலப்படுத்துகிறது. நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு... என்ற பாடல், (469) உரிய நன்மை உரியவர்க்குச் சென்றடைய வேண்டும் என்ற் ஆழ்ந்த கருத்தைத் தெரிவிக்கின்றது. வழிபயக்கும் ஊதியம், ஊக்கார் வகையற, எண்ணித் துணிக, பொத்துப்படும், கொள்ளாத கொள்ளாது போன்ற நயமிக்க சொற்றொடர்கள்/சொற்கள் இவ்வதிகாரத்தின்கண் உள்ளன.,