Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 059 ஒற்றாடல்அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
059 ஒற்றாடல்அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
ஒற்றாடல் 
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் விரைந்து அறிதல்.
குறள் திறன்-0581 குறள் திறன்-0582 குறள் திறன்-0583 குறள் திறன்-0584 குறள் திறன்-0585
குறள் திறன்-0586 குறள் திறன்-0587 குறள் திறன்-0588 குறள் திறன்-0589 குறள் திறன்-0590

openQuotes.jpgபிறர்பால் நிகழ்வதை அவரறியாமல் மறைவாகத் தெரிந்து கொள்வதே ஒற்றாகும். இவ்வதிகாரத்தில் பத்துக் குறள்களுள் நான்கு குறள்கள் மட்டும் ஒற்றின் இலக்கணம் கூறுகின்றன; எஞ்சிய ஆறும் அரசன் எவ்வாறு ஒற்றரைக் கையாளுதல் வேண்டும் என்பது பற்றியன. எனவேதான் ஒற்று என்னாது ஒற்றாடல் என்று தலைப்பிட்டுள்ளார். ஒட்டுக் கேட்டல் என உலகவழக்கில் ஒரு தொடருளது. பக்கத்தே அருகில் சென்று ஒன்றி நின்று கேட்டலை அது சுட்டும். ஒற்று என்பது ஒன்றுதல்- ஒருவரோடு ஒன்றிச் சார்ந்து உண்மை அறிதல் எனப் பொருள்படும். உளவறிதல், வேவுபார்த்தல், துப்பறிதல் என்பனவும் இப்பொருளவேயாம்
- தமிழண்ணல்

 

தம் நாடு செலுத்தவும், அயலாரிடமிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஒற்றர் பணி தேவையாகிறது. உளவு வழி தம்மைச் சுற்றி நடப்பனவற்றை அறியாவிட்டால் கலகக்காரர், பகைவர் இவர்கள் கை ஓங்கி நாடு அழிந்துபோகும். ஒற்றர் எனப்பட்டோர் உளவாளி எனவும், வேவுகாரர் எனவும் அழைக்கப்பட்டனர். ஒன்றி அறிபவர் ஆதலால் ஒற்றர் என அறியப்பட்டார். சில வேளைகளில் நாடாண்ட மன்னனே உருமாறிச் சென்று குடிகளின் நிறை குறைகளை ஒற்றி அறிந்து கொண்டனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. நாடாள்வோர் நாளும் தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணியான ஒற்றாளுதலை பொச்சாப்பு கொண்டு அலட்சியப்படுத்தினால் பகைவர் புலன்களை அறிந்து கொள்ள முடியாது.

ஒற்றாடல்

ஒற்றாடல் என்பது ஒற்று+ஆடல் என விரியும். ஒற்று என்பது உளவறிதலைக் குறிக்கும். ஆடல் என்பதற்கு ஆளுதல் என்பது பொருள். ஒற்றாடல் ஒற்றை ஆளுதல் எனப் பொருள்படும். இவ்வதிகாரத்துக் குறட்பாக்கள் ஒற்று என்ற சொல்லை வரையறுக்கும்போது அஃறிணைப் பொருளையே சுட்டுகிறது. ஆனால் உரையாசிரியர்கள் 'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணை எனச் சொல்லி இவ்வதிகாரத்தை ஒற்றரை ஆளுதல் என விளக்குவர். ஒற்றை அதாவது ஒற்றுத் தொழிலைக் கையாளுதல் என்ற பொருள் கொள்வதில் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது எனத் தெரியவில்லை.

அறம் கூறவந்த திருக்குறளில் மாறுவேடங்கள் பற்றியும் கள்ளத்தனங்கள் பற்றியும் ஏன் கூறப்படுகிறது என்ற வினா சிலருக்கு எழலாம். இதற்குப் பதில் இறுப்பது போன்று தெ பொ மீனாட்சிசுந்தரம் 'உலகம் உயர்நிலையாகிய அறிவு நிலையை எய்தவில்லை யாதலால் ஒற்றும் கூறுகின்றார் வள்ளுவர். இப்பெரியார் உயர்நிலையை அறிந்திருந்து வற்புறுத்தினாலும், உலகநிலையை அறியாது கண்மூடித் தவங்கிடப்பவர் அல்லர். உயர்நிலை ஒன்றே கூறி உலகநிலை கூறாதுவிட்டால், கயவரும் கல்லாரும் பகைவரும் எழுந்து உலகத்தை அழித்தேவிடுவர்' எனக் கருத்துரைப்பார்.

ஒற்றாடல்அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 581ஆம் குறள் உளவு, சிறந்த அரசியல்நூல் இவை இரண்டும் அரசனிடத்துத் தெளிவுற நிற்க என்கிறது.
  • 582ஆம் குறள் எல்லாரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எப்பொழுதும் வல்லறிதல் வேந்தன் கடமை எனக் கூறுகிறது.
  • 583ஆம் குறள் ஒற்றர் தந்த உளவுச் செய்திகளின் கருத்து உணரமுடியாத ஆட்சியாளன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை எனச் சொல்கிறது.
  • 584ஆம் குறள் அரசு வினைஞர், ஆட்சியாளரது சுற்றம், ஆகாதவர் என்ற எல்லாத்திறத்தாரையும் ஆராய்வது உளவு என விளக்குகிறது.
  • 585ஆம் குறள் கேள்விக்குரியதாகாத தோற்றத்தோடு, அஞ்சாது பார்த்து, எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் எனக் கூறுகிறது.
  • 586ஆம் குறள் துறந்தோர் போன்ற வேடங்களில் எல்லை கடந்து ஆராயும் இடத்து (ஐயுற்றோர்) என்செயினும் தளராததுவே ஒற்று என்கிறது.
  • 587ஆம் குறள் மறைக்கப்பட்ட செய்திகளைப் பிறரைக் கொண்டு கேட்டறிய வல்லவதாகி, அறிந்தவற்றுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுபடுபவதே ஒற்று ஆகும் என்பதைச் சொல்கிறது.
  • 588ஆம் ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியையும் வேறு ஒரு ஒற்றினால் அறிந்து ஒற்றுமை காண்க என்கிறது.
  • 589ஆம் குறள் ஓர் ஒற்றனை இன்னோர் ஒற்றன் அறிய முடியாதவாறு விடுத்து உளவுச் செய்திகளை அறிக; அங்ஙனம் வேறு வேறாகச் சென்ற ஒற்றர் மூவர் கூறுவன ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தால், அது நம்புதற்குரியது எனத் தெளியலாம் எனக் கூறுகிறது.
  • 590ஆவது குறள் பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதீர்; செய்தால் மறைவை தாமே வெளிப்படுத்தியாகிவிடும் என்கிறது.

 

ஒற்றாடல் அதிகாரச் சிறப்பியல்புகள்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று (குறள்: 584) என்ற பாடலில் சொல்லப்பட்ட மூவகையினரும் ஒரு நாட்டின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் ஆவர். அரசு செலுத்துவதில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் ஆதலால் இவர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நாடாள்வோன் கண்காணித்து வரவேண்டும் என்கிறார் வள்ளுவர். தமது அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு இழைக்க வாய்ப்பு மிகையாக உள்ளவர்கள் இவர்கள். எனவே ஆட்சியாளர்க்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் ஒற்று வளையத்தில் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளுக்கும் இப்பாடல் எத்துணை பொருத்தமாகிறது என்பதைக் காணலாம்.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று (குறள்: 585), துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று (குறள்: 586) என்ற பாடல்கள் ஒற்றுத் தொழிலில் முகத்தோற்றம், மாறுவேடங்கள் சிறந்த பங்கு வகிக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன.

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். (குறள்: 588) ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும்குறள்: 589) என்ற பாடல்களில் ஒருவர் தந்த உளவு அறிக்கையை மற்றும் இருவர் உளவு மூலம் சரிபார்க்க வேண்டும் என்றது உளவுச் செய்தி பிழையாகாமல் போவதற்குரிய வாய்ப்புக்களைக் குறைக்கும்; நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என்பனவற்றிற்காக. ஒற்றர்களை ஒருவருக்கொருவர் அறியாதவாறு விடுக்கவேண்டும். எனவும் சொல்லப்பட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard