Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 079 நட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
079 நட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நட்பு 
நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.
குறள் திறன்-0781 குறள் திறன்-0782 குறள் திறன்-0783 குறள் திறன்-0784 குறள் திறன்-0785
குறள் திறன்-0786 குறள் திறன்-0787 குறள் திறன்-0788 குறள் திறன்-0789 குறள் திறன்-0790

openQuotes.jpgநட்பு என்பது மக்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக அன்புடன் நெருங்கிய பழக்கமுள்ளவர்களாக இருப்பது. இந்த அதிகாரம் நல்லவர்களுடைய நட்பினால் அடையக்கூடிய நன்மைகளைப்பற்றியும் உயர்ந்த நட்பின் பெருமையையும் பற்றிச் சொல்லுவது. இது எல்லா மனிதர்களுக்கும் பொது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

நட்பு அதிகாரப்பட்ட இடத்தில் கூற வேண்டுவன வெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், நட்பையும் அதனோடு சேர்த்து எண்ணக் கூடியவற்றையும் உடன்பாட்டுவகையால் கூறுவனவாக ஐந்து அதிகாரங்களாக வகுத்துக்கொண்டார் வள்ளுவர். முதல் அதிகாரமான இதில் நட்பின் இயல்புகள் விளக்கப்படுகின்றன. அதிகாரப்பாடல்கள் தனிமனித நட்புக்கு மட்டுமன்றி, நாடுகளுக்கிடையேயான நட்புக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அரசு,‌ நாடு, அரண்,‌ பொருள்களைப்‌ பெற்று, அவற்றை அழியாமல்‌ காக்கும்‌ படையை உடையனாயினும்‌ நட்பினர்‌ துணையும்‌ அவனுக்கு இன்றியமையாது வேண்டும். அரசுக்கு போர்க் காலத்தில் நட்பரசின் துணை தேவை. மாந்தர்க்குத் துன்பக்காலத்தில் நண்பர் உறவு உதவும்.

நட்பு

சமூக வாழ்வில் பலவகைப்பட்ட மக்களின் கூடி அவர்களின் துணையோடும்தாம் வாழ்க்கை நடத்தப்பட வேண்டி உள்ளது. மாந்தர் ஒருவரோடு ஒருவர் பழகுவதே உலகியலாக உள்ளது. வாழ்வு என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவியாகவும் துணையாகவும் வாழ வேண்டிய ஒரு சமூக உறவாகும். இந்நிலையில் மனித வாழ்வு சிறந்ததாக நட்புத் தொடர்பு தேவையாகிறது. நட்பு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்றியமையாது வேண்டப்படும் ஓர் உறவாகிவிட்டது.

நட்பு செய்தற்கு அரிதானது, பகைவர் சூட்சியினின்று காக்கும் காவலாகவும் நட்பு அமையும்; நற்குணம் கொண்டோருடனான நட்பு வளர்பிறைபோல வளரும். சிறியோர் நட்புத் தேய்பிறைபோலத் தேய்ந்துகொண்டே போகும்; ஒர் நூலைப் படிக்க படிக்க அதன் நயம் புதிதுபுதிதாக வெளிப்படுவது போன்று, நட்பு பழகப்பழக புதிய ஆழங்களும் இனிமையும் தெரிய வரும்; நட்டல் நகுதற்காக அன்று; தவறு கண்டுழித் திருத்துதற்காக; உணர்ச்சி ஒத்ததே நட்பு; உள்ளப் பொருத்தமே நட்பு. முகத்தில் மட்டும் மகிழ்ச்சிக் குறியினைக் காட்டி உள்ளத்தில் மலரா நிலை நட்பன்று; வந்த தீமைகளை வழி விலகச் செய்து, அழிவில், தானும் உடன் வருந்துவதே நட்பாம்; துன்பக்காலத்தில் விரைந்து வந்து உதவுவார் நண்பர்; அயர்வின்றி தேவைப்படும் வேளையெல்லாம் வேறுபடாமல் இயலும் வழிகளிலெல்லாம் உதவுவது நட்பு; நட்பினர் இருவரும் இவர் எமக்கு இன்ன தன்மையார் இன்ன முறையார் என்று சொன்னாலே நட்பின் உயர்வு குறையும்; இவை - நட்பின் சிறப்பு, பயன், நட்பு விளைவதற்குரிய காரணங்கள் நட்பின் இலக்கணம் முதலியன - நட்பு அதிகாரத்தில் கூறப்படுகின்றன.

நட்பு அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 781ஆம் குறள் நட்புறவுகள்போல உருவாக்கிக் கொள்வதற்கு அரியசெயல்கள் எவை உள்ளன? நட்பைப் போல செயலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள? என வியக்கிறது.
  • 782ஆம் நல்ல இயல்புடையவர்களது நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்பு தேய்பிறையின் தன்மையது எனக் கூறுகிறது.
  • 783ஆம் குறள் படிக்கப் படிக்க நூலினிமை போலும் பழகப் பழகப் பண்புடையவர் நட்பு எனச் சொல்கிறது.
  • 784ஆம் குறள் ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதன் பொருட்டு அல்ல; வரம்பிறந்த செயல் செய்வராயின், அவரை நண்பனாகத் தானே முன்வந்து கடிந்து திருத்தற்பொருட்டு என்கிறது.
  • 785ஆம் குறள் நட்பாதற்குப் கூடுதலும் பழகுதலும் வேண்டா; ஒத்த மனப்பான்மையே நட்பு ஆகும் உரிமையைக் கொடுக்கும் எனச் சொல்கிறது.
  • 786ஆம் குறள் முகம் மலரும்படியாக நட்புக்காட்டுவது நட்பாகாது; மனம் உள்ளுக்குள் மகிழும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும் என்கிறது.
  • 787ஆம் குறள் கேடான வழிகளில் செல்லும்போது அவற்றை விலக்கி நன்னெறியிற் செலுத்திப் பின்னும் கேடுவந்தவிடத்து அத்துன்பத்தின்போது தொடர்பு நீங்காதிருப்பதே நட்பாகும் எனச் சொல்கிறது.
  • 788ஆம் குறள் உடைநெகிழ்ந்தவிடத்து விரைந்து உதவும் கைபோல, நண்பரது துன்பத்தை வந்த அப்பொழுதே விரைந்து சென்று போக்குதலே நட்பாகும் என்கிறது.
  • 789ஆம் குறள் நட்பு மிக உயர்வுடன் தங்கியிருக்குமிடம் எதுவென்றால், மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் நண்பர் தளர்ச்சியுற்றபோது தாங்கி நிற்கும் நிலையே என்கிறது.
  • 790ஆவது குறள் இவர் எமக்கு இத்தகையவர்; யாம் இவர்க்கு இத்தன்மையினர் என்று புகழ்ந்து கூறினும் நட்பு சிறுமையுறும் என்கிறது.

 

நட்பு அதிகாரச் சிறப்பியல்புகள்

எத்துணையோ பேருடைய நட்பு கிடைக்கிறது. ஆனால் பண்புடையவர்களுடன் உண்டான நட்பு மட்டுமே பழகப் பழக இனிமை தருவது என நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு (783) என்ற பாடல் அதை உயர்த்திச் சொல்கிறது.

நட்புக்கொள்வது பெரும்பான்மை அடிக்கடிக் கூடிக் களித்து இன்புறுவதற்காகவே அமையும். ஆனால் வள்ளுவர் நட்டல் அதற்காக மட்டுமன்று எனச் சொல்லி நண்பன் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அறிந்தால் முந்திசென்று அவனைக் கடிந்து திருத்தவும் வேண்டும் என்று நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு (784) என்ற பாடல்வழி அறிவுறுத்துகின்றார்.

நட்பின் தோற்ற வளர்ச்சிக் காரணங்களுள் புணர்ச்சி அதாவது அடிக்கடி கூடுதல் ஒருவகை. அடுத்து நெருக்கமாகப் பழகுதல். மூன்றாவதாக உணர்ச்சி ஒற்றுமையாக இருத்தல். இவற்றுள் இறுதியாகச் சொல்லப்பட்ட ஒத்த மனப்பான்மையே உரிமையான நட்புறவு தரும் என்பது வள்ளுவர் கருத்து. இதைப் புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் (785) என்ற பாடல் உணர்த்துகிறது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788) என்ற குறள் நண்பனுக்கு உதவி செய்வதில் விரைவு காட்டவேண்டும், எதைப்போல் என்றால் தான் உடுத்திய உடை அவிழ்ந்துபோனால் எவ்வளவு விரைவுடன் கை சென்று மானம் காக்குமோ அதுபோன்று என்ற சிறந்த உவமை கூறி விளக்குகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard