Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 085 புல்லறிவாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
085 புல்லறிவாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
புல்லறிவாண்மை 
இன்மையுள் இன்மை.
குறள் திறன்-0841 குறள் திறன்-0842 குறள் திறன்-0843 குறள் திறன்-0844 குறள் திறன்-0845
குறள் திறன்-0846 குறள் திறன்-0847 குறள் திறன்-0848 குறள் திறன்-0849 குறள் திறன்-0850

openQuotes.jpgபுன்மை-அளவாலும், இயல்பானும் ஆம் சிறுமையை யுணர்த்துவனவாதலின் புல்லறிவு கற்ற நூற்பரப்பானும் அறியும்வன்மையானும் ஆகிய குறைவைக் காட்டும்.
- ச தண்டபாணி தேசிகர்

 

புல்லறிவாண்மை என்பது தாழ்ந்த அறிவை ஆளுந்தன்மையை அதாவது பயன்படுத்தலைக் குறிக்கும். புன்மைமிக்க அறிவினைக் கைக்கொண்டு, பெருமையுடையவன்போல் வாழ முயலுதல் ஆம். இது சிற்றறிவின் செறிவைச் சொல்வது. தான்‌ சிற்றறிவுடையவனாயிருந்தும்‌ தன்னைப்‌ பேரறிவு உடையவனாக மதித்து செருக்குடன் நடப்பது புல்லறிவு.

புல்லறிவாண்மை

அறிவை ஆளத்தெரியாதவர் பற்றி பேதைமை, புல்லறிவாண்மை ஆகிய அதிகாரங்கள் பேசுகின்றன. பேதைமை என்பதற்கு வெள்ளந்தியாய் இருத்தல் அல்லது உள்ளிருப்பு இல்லா வெறுமை எனக் கொண்டால் புல்லறிவாண்மை அரைவேக்காட்டுத்தனத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
வள்ளுவர் மிகவும் மனம் நொந்து இயற்றிய அதிகாரங்கள் பேதைமை, புல்லறிவாண்மை, கயமை ஆகியன என்பர். இவற்றுள் முதல் இரண்டு அதிகாரங்கள் கூறும் பேதையர், புல்லறிவாளர் ஆகியோர் பொதுவான இடையூறுகளை எதிர்க்கத் திறனற்றவர்களாவர். புல்லறிவாளர் இரக்கத்திற்குரியவர் ஆனாலும் அவர் இறுமாப்புடன் உலவிவருவதால் வள்ளுவர் அவர்களை வெறுப்பு கலந்த எள்ளலுடனே காட்டுகிறார்.

பிறப்பில் அறிவுடையார், பிறப்பில் அறிவிலார் என எதுவும் இல்லை. புல்லறிவாண்மை அதிகாரத்தில் சில இடங்களில் வள்ளுவர் 'அறிவிலார்' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும் அது முற்றிலும் அறிவு அற்றவரைக் குறியாது. பிறப்பில் அறிவிலாரை வள்ளுவர் இகழமாட்டார். தம்மறிவை ஆட்சிப்படுத்தினாரை, அறிவுடையார் என்றும், அதனை ஆளாதாரை அறிவிலார் என்றுமே அவர் கூறுவார்.
இவ்வதிகாரத்து பாடல்கள் எதிலும் புல்லறிவாண்மை என்ற‌ சொல் இல்லை. புல்லறிவு என்ற சொல் குறள்‌ 846-இல் ஆளப்பட்டது, நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை (நிலையாமை 331 பொருள்: நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் சிற்றறிவு கீழானது) என்ற பாடலில்தான்‌ இச்சொல்‌ குறளகத்தே காணப்படுகிறது. 'புல்லறிவு' என்றதற்குப் புல்லிய அறிவுடைமை, புல்லறிவு, அறியாமை, புல்லிய அறிவு, கீழ்ப்பட்ட அறிவு, தாழ்ந்த அறிவு, அற்ப புத்தி, சிற்றறிவு, இழிந்த அறிவு, எனப் பொருள் கூறுவர். இவ்வதிகாரத்திலேயே அதை வெண்மை என்று வள்ளுவர் குறிக்கிறார். இச்சொல்லுக்கு அறிவு முதிராமை என்பது பொருள்.

இவ்வதிகாரத்தில்‌ சிற்றறிவின்‌ இயல்பும்‌ அதனால்‌ வரும்‌ குற்றமும்‌ தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.
சிற்றறிவுடைமை இல்லாமையுள் பெரிய வறுமை; புல்லறிவாளன் மனம் உவந்து ஈய மாட்டான்; அவன் தன்னைத்தானே கொடூரமாக வருத்திக் கொள்பவன்; கல்லாதிருந்தாலும் அல்லது சிறிதளவே கற்றிருந்தாலும் தன்னைப் பேரறிவாளன் போலக் காட்டிச் செருக்குடன் திரிவான்; தான் பயின்றிராத தொழிலையும் செய்ய முனைவதால் அவன் கற்ற தொழில்மீதும் ஐயம் கொள்ளச் செய்வான்; சிற்றறிவுடையவன் தன்னிடமுள்ள குற்றங்களை நீக்காமல் அதற்குக் கோக்குமாக்காக வேறு தொடர்பில்லாத அமைதி கூறுவான்; தன்னிடம் சொல்லப்பட்ட மிகவும் காக்கப்படவேண்டிய மறைச்செய்திகளையும் தனக்குத் தெரியும் எனக் காட்டிக்கொள்ள அனைவர்முன் அதை வெளிப்படுத்தி உலகமறிந்த மறைச்செய்தி ஆக்கிவிடுவான்; சொன்னாலும் அறியான் தன்னாலும் அறியான் என்னும் அறிவிரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவன் அவன்; தனக்கு அறிவிக்க வருபவர்களையே அறியாதவனாக உணரச் செய்துவிடுவான்; அறிவுடையான் போலத் தன்னைக் காட்டிக் கொள்வதால் அறிந்தவர்கள் சொல்வதை மறுப்பான், மற்றவர்கள் உண்டு என்பதை இல்லை எனப் பிடிவாதமாகச் சாதிப்பான்.
இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.

புல்லறிவாண்மை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 841ஆம் குறள் இன்மைகள் பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமையே; பிறிதின்மை இல்லாமையாக உலகம் எண்ணாது என்கிறது.
  • 842ஆம் குறள் புல்லறிவாளன் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈவதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை; பெறுவானது நற்பேறு எனச் சொல்கிறது.
  • 843ஆம் குறள் புல்லறிவாளர் தாமே தம்மை வருத்திக் கொள்ளும் துயரை பகைவராலும் செய்ய இயலாது எனக் கூறுகிறது.
  • 844ஆம் குறள் புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது எனின் தம்மைத் தாம் நல்லறிவுடையார் என்று எண்ணிக் கொள்ளும் இறுமாப்பு என்கிறது.
  • 845ஆம் குறள் தனக்குப் பயிற்சியில்லாத செயலைத் தெரிந்தது என ஏற்றுக் கொண்டு நடப்பதனால் அவன் நன்கு பழகிய தொழில் திறம் மீதும் உலகம் ஐயம் கொள்ளும் எனச் சொல்கிறது.
  • 846ஆம் குறள் தம்மிடத்துள்ள குற்றத்தை ஒழிக்காத போது ஆடையால் தமது உறுப்பை மறைத்துக் கொள்ளுதலோ புல்லறிவாகத்தானே இருக்கும் என்கிறது.
  • 847ஆம் குறள் அருமையான மறைச் செய்திகளை வெளிப்படுத்தும் புல்லறிவாளன் தனக்குத்தானே பெருந்துன்பத்தைச் செய்து கொள்வான் எனச் சொல்கிறது.
  • 848ஆம் குறள் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிந்து தெளிய மாட்டான்; அவ்வுயிர் சாகும்வரை உலகத்தார்க்குத் துன்பம் தரும் என்கிறது.
  • 849ஆம் குறள் அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் அறியாதவன்; புல்லறிவாளன் தான் அறிந்த வகையில் அறிந்தவனாக இருப்பான் என்கிறது.
  • 850ஆவது குறள் உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் உலகத்துக் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான் என்கிறது.

 

புல்லறிவாண்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

புல்லறிவாண்மை வெண்மை என்றும் அறியப்படும் என்கிறது இக்குறள். வெண்மையாவது தான் ஒள்ளிய அறிவையுடையேன் என்னும் செருக்குக் கொள்வது. அப்பாடல்: வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு (844) என்பது.

பிறர் சொன்னபடியும் செய்யத்தெரியாதவனாகவும் தானும் தெளிவுபெற இயலாமலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தொடர்ந்து துன்பம் தந்துகொண்டே இருப்பான் அறிவுக்குறையுடியவன் எனச் சொல்வது ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய் (848) என்னும் பாடல்.

சிறந்த ஒலியமைப்புடன் கூடிய பாடலான காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு (849) என்பது சிற்றறிவினனை எந்தவகையிலும் திருத்தமுடியாது என்கிறது.

உலகமே ஒன்றுபட்டு ஒரு பொருளை உண்டு என்று சொல்ல புல்லறிவுடையவன் இல்லை என்று சொல்லும் இயல்புகொண்டவன். அவனைப் பேய் என இகழச்சொல்கிறது உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும் (850) என்ற குறள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard