பகையின் திறன்கள் பலவற்றையும் ஆராய்ந்து அறிதல். வேண்டாத பகையை விடுவதற்கும் வந்த பகையைப் போரிட்டு வெல்வதற்கும் பகைவரைப் பற்றிய அனைத்து விவரமும் தெரிந்திருத்தல் வேண்டும். - தமிழண்ணல்
பகை மாட்சி அதிகாரத்தில் பகைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியவர் யார் எனக் கூறப்பட்டது. பகைவரை அறியவேண்டிய முறைபற்றி இங்கே சொல்லப்படுகிறது. பகையே இல்லாதிருப்பதே நல்லது என ஒரு பாடல் சொல்கிறது. பகையை நட்பாக்கிக் கொள்பவரை உயர்த்திப் பேசுகிறது மற்றொரு குறள். பகைத்திறம் தெரிந்து தமக்கு வாய்ப்ப எண்ணிச் செய்ய வேண்டும், பகைவர்களின் நிலைமையை ஆராய்ந்து அறியவேண்டும், பகையாயுள்ளாரில் வெல்லற்குரியார் அல்லாதார் நிலைமையை அறிதல்வேண்டும் எனவும் கூறுகிறது இவ்வதிகாரம்.
பகைத்திறம் தெரிதல்
இவ்வதிகாரத்திற்கான பரிமேலழகரது உரைவிளக்கம் 'மாணாதபகையை (நன்மை பயவாத பகை) ஆக்குதற் குற்றமும், முன் ஆகிநின்ற பகைக்குள் நட்பாகக் கொள்ளுதற்குரியதும், நட்புமின்றி பகையுமின்றி நடுவுநிலையிற் வைக்கப்பட வேண்டியதும் (நொதுமல்), நடந்து கொள்ளவேண்டிய முறையும், நீக்க வேண்டிய பகையின்கண் செய்ய வேண்டியனவும், அழிக்கும் காலமும், நீக்காவிட்டால் வரும் குற்றமும் என்று கூறப்படும் இத்தகைய திறங்களை ஆராய்ந்தறிதலாகும். 'இரட்டுற மொழிதல்' என்பதனாற் பகையது திறமும், பகையிடத்து ஆக்கும் திறமும் என விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப் பகைய ஆகலின், இது பகை மாட்சியின் பின் வைக்கப்பட்டது' நல்ல தொகுப்புரையாக உள்ளது. இரட்டுற மொழிதல் என்பது ஒரு தொடரை இருபொருள்படச் சொல்லுதல்.
பகையென்று சொல்லப்படும் தீமை பயப்பதனை ஒருவன் விளையாட்டாகவும் விரும்பக்கூடாது; வில் வீரருடன் பகை கொண்டாலும், சொல் அறிஞருடன் பகை கொள்ளல் தகாது; சுற்றம், நட்பு, படை ஆகியவற்றுள் ஏதுமற்றவன் தனியாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பைத்தியக்காரன்; பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு, அமைதியாக ஆட்சி நடத்தும் பண்புடையவ பெருமையின் கீழ் இவ்வுலகம் அடங்கி நிற்கும்; தனக்கு உதவும் துணைவர் யாரும் இல்லை; தன்னை அழிக்கக்கூடிய பகைவர் இருவர் உடையவனாகவும், தான் தனியாகவும் இருப்பவன், அப்பகைவர் இருவருள் தனக்குப் பொருந்திய ஒருவரை, நல்ல துணைவராகப் பெற்றுக் கொள்ள வேண்டும்; பகைவன் ஒருவனை முன்பு ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாதிருந்தாலும் தனக்குத் தாழ்வு வந்தபோது, அவனோடு நட்பாகிச் சேராமலும் பகைத்து நீக்காமலும் இடைநிலையில் விட்டுவைக்க வேண்டும்; தமக்காக நொந்ததை மதியார்க்குத் தன் துன்பத்தைச் சொல்லக்கூடாது, தன் வலிவின்மையை எதிர்பார்த்திருக்கும் பகைவர்க்குத் தன் மெலிவை வெளிப்படுத்தக்கூடாது; வெல்லும் வழிவகை அறிந்து, அதற்கேற்பத் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்புடன் இருந்தால், பகைவரிடத்துள்ள இறுமாப்பு தானே அழிந்து விடும்; செடியாயிருக்கும் போதே முள் மரத்தைச் வெட்ட வேண்டும், களையப்பட வேண்டிய பகைவரை அன்னார் வலிவற்றிருக்கும் போதே களைய வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் அவர் ஆற்றல் பெற்றுத் தம்மைக் களைவர்; தன்னோடு பகைப்பாரது செருக்கை அடக்க இயலாதவர் மூச்சுவிடுகிறார், வாழ்கிறவர் அல்லர் என்பது திண்ணம். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.
பகைத்திறம் தெரிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
871ஆம் குறள் பகை என்று சொல்லப்படுகின்ற குணமற்றதனை விளையாட்டாகவும் யாரும் விரும்பத்தக்கது அல்ல என்கிறது.
872ஆம் குறள் போர்ப்படையுடைய ஆட்சியாளருடன் பகை கொண்டாலும் சொல்லாற்றல் கொண்ட அமைச்சர் பகை கொள்ளாதொழிக எனச் சொல்கிறது.
873ஆம் குறள் தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் பித்துற்றாரைவிட இரங்கத்தக்கவன் எனக் கூறுகிறது.
874ஆம் குறள் பகைவரையும் நண்பராகச் செய்து ஒழுகவல்ல பண்புடையவன் பெருமைக் கண் உலகு தங்கி இயங்குகிறது என்கிறது.
875ஆம் குறள் தனக்கோர் துணையிலதாயின், தனக்குப் பகை இரண்டு ஆயின் அவ்விரு பகையுள் ஒன்றினைத் தனக்கு நல்ல துணையாகக் கொள்க எனச் சொல்கிறது.
876ஆம் குறள் ஒருவனை முன்னரே நம்பித் தெளிந்தாலும் நம்பாமலிருந்தாலும் நெருக்கடி காலத்தில் அவனை நம்பாதும் பகைத்துக்கொள்ளாதும் இடைப்பட்ட நிலையில் விடுக என்கிறது.
877ஆம் குறள் தாம் அவர்பொருட்டு வருந்தியதை அறியார்க்கு தன் நோவு சொல்லற்க; பகைவரிடத்து வலியின்மை இருப்பது போல் காட்டிக் கொள்ளற்க எனச் சொல்கிறது.
878ஆம் குறள் வெல்லும் வகையை அறிந்து தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்ள பகைவரிடம் உள்ள ஆணவம் தானே மறையும் என்கிறது.
879ஆம் குறள் முள்ளுடைய செடியைச் சிறியதாயிருக்கும் போதே பிடுங்கி எறிக. அது வளர்ந்து மரமாகிவிட்டால் அதனைக் களைவாருடைய கையை வருத்தும் என்கிறது.
880ஆவது குறள் தம்மைப் பகைப்பவரது தருக்கினை அழிக்க முடியாதவர் மூச்சு விடுகிறார்; வாழ்கிறாரல்லர் என்பது திண்ணம் என்கிறது.
பகைத்திறம் தெரிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்
பகைவரிடமும் பண்புடன் நடந்து அவர்களை நண்பர்களாக மாற்றுவதே மாட்சிமை, தகைமை, பெருமை தரும் செயல். சங்க நூல்கள் விளக்கும் போர்முறைகள் எதையும் வள்ளுவர் போற்றவோ எடுத்தாளவோ இல்லை. அந்தப் போக்கிலிருந்து வேறுபட்டு, நாடாள்வோர், போர்கள் இல்லாத சமுதாயத்தின் தலைவனாக, அமைதியும் மக்கள் நலனும் காக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். ஒருவரின் ஆற்றலும், புகழும் போர்களின் வெற்றியால் தீர்மானிக்கப்படுகிறது என்ற அக்காலப் போக்கை ஏற்காது, அமைதிக்குக் கேடில்லாமல் நடந்து கொள்வதற்கான கோட்பாடுகளை அவர் நிறுவுவார். உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்று நாம் இன்று பெரிதாகப் பேசினாலும் எல்லைகளற்ற நாடுகள் என்ற நிலை எப்பொழுது உருவாகும் என்று எவராலும் சொல்ல இயலாத நிலைமையே உள்ளது. எனவே நாடுகளிடையே அச்சமும் பகையும் இன்னும் பலகாலம் இருந்துகொண்டே இருக்கும். வள்ளுவர் நடப்புலகம் தெரிந்தவர். உலகியல் அறிந்தே அவரது அனைத்துக் குறட்கருத்துக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே மற்றநாடுகளுடன் நட்புறவு, தன்னாட்டில் படைப்பெருக்கம் என்ற அடிப்படையில் அமைந்தன வள்ளுவ அரசின் வெளிநாட்டுக் கொள்கைகள். அவை இகல் அதிகாரத்திலும் இவ்வதிகாரத்திலும் வெளிப்படுகின்றன. கூடியவரை பகையையும் போரையும் நிகழாமல் தடுப்பதே சிறப்பு, இகலின்றிப் பிறருடன் நட்புக் கொள்வதே எல்லா நன்மைகளையும் தரும் என்ற அடியில் இவ்வதிகாரப் பாடல்கள் அமைந்தன.
பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று (871), பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு (874) ஆகிய பாடல்கள் வள்ளுவர் சண்டையை விரும்பியவர் அல்லர் என்பதைத் தெரிவிக்கும். வல்லமையில் ஒருவர் சிறந்து இருந்தாலும், பகைவரையும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர் பரிந்துரை. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து (879) என்ற பாடலும் பகையைத் தொடக்கத்திலேயே களைய வேண்டும் என்று அமைதி நாட்டத்தையே வலியுறுத்துகிறது. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு (878) என்பது வெல்லும்வகையை அறிவதையும் படை/ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் தன்னைக் காத்துக்கொள்வதையும் சொல்வது. இப்பாடல்கள் மேற்சொன்ன கருத்துக்கு அரண் செய்யும்.