முப்பாலுக்[கு] ஒப்புநூல்எப்பாலும்இல்லையால்,
அப்பாலைஎப்போதும்செப்புதலும், — அப்படியே
ஒப்புடன்வாழுவதும், செப்பரியவாழ்வுதரும்;
எப்பாலும்தப்பாச்சிறப்பு.
[வல்லிசைவண்ணத்துநேரிசைவெண்பா]
– பேராசிரியர் வெ.அரங்கராசன்
1.0. நுழைவாயில்
பழம்பெரும்நூல்களுள் திருக்குறளுக்கு மட்டுமே போற்றுதலுக்கும், ஏற்றுதலுக்கும் உரிய திருவள்ளுவமாலை என்னும் ஓர் அருந்திறனாய்வுப் பெருநூல் கிடைத்துள்ளது. அந்நூல் 53 ஆற்றல்மிகு புலவர்களால் ஆக்கப்பட்டது. அப்பெரும்புலவர்கள் திருக்குறளை அணுகியும், நுணுகியும், வீழ்ந்தும், ஆழ்ந்தும் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்கள்; அதில் தோய்ந்தவர்கள்; கூர்ந்து ஆய்ந்தவர்கள்; ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்கள்; நுண்பொருளையும் எண்பொருளாகக் கண்டவர்கள்; அதை மனத்தே கொண்டவர்கள்; ஆழங்கால்பட்டவர்கள். அத்துணைச் சிறப்புமிகு பெருநூலை ஆக்கிய சொல்நய மேலாண்மைத்திறன்கள் மிக்க அப்புலவர்களின் தக்க சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள், திருவள்ளுவமாலை நிறைநூலில் உள்நிறைந்து உறைகின்றன..
2.0 ஆய்வுக்கட்டுரையின்நோக்கு –- நான்கு
2,1. ‘உள்ளதன்நுணுக்கம்’ என்பது தொல்காப்பியம். அந்நுட்ப ஆய்வியல் வரைவிலக்கணத்திற்கு ஏற்பத் திருவள்ளுவமாலைச் சொற்களுக்குள், தொடர்களுக்குள் ஆழ்ந்து உறங்கும் பல்வேறு நுட்பங்களை ஆய்தல்.
2.2 திருக்குறளின் விழுமியங்கள், நனிநுட்பங்கள், முன்மைப்பாடு போன்ற பல்வேறு சிறப்பியல்புகளை அழுத்தமாகவும், ஆழமாகவும்
விளக்கப்படுத்திக் காட்டும் திருவள்ளுவமாலையின் சிறப்புக்களைப் புறத்தே காட்டுதல். .
2.3. திருவள்ளுவமாலைப் புலவர்களின் சொல்நுட்ப மேலாண்மைத் திறன்கள், பன்மாண் ஆற்றல்கள், நுண்மாண் நுழைபுலத் திறன்கள் போன்றவற்றை அளந்தும், ஆய்ந்தும் காட்டுதல்.
2.4. மேற்குறிப்பிட்ட அனைத்தையும்பற்றிய, விழிப்புணர்வைத் திருக்குறள் உலகிற்கு ஊட்டுதல்.
3.0. ஆய்வுக்கட்டுரையின்ஆய்வுப்பொருள்:
திருவள்ளுவமாலையின்சொல்நுட்பமேலாண்மைத்திறன்கள்
வெல்திறத் திருக்குறள் பல்வகைச்சொல், தொடர், பா நுட்பங்களைத் தன்னுள் நிரம்பக் கொண்டஅருநூல், நுண்நூல், நன்நூல் என்பதை அனைவரும் அறிவர். திருக்குறளின் ஓதுதிறன், உணர்திறன்பற்றி மாங்குடிமருதனார் பேசுவது திருவள்ளுவமாலையின் 24 – ஆவது பாடல் தொடரில் கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.
ஓதுதற்[கு] எளிதாய்உண்ர்தற்[கு] அரி[து]ஆகி
பொருள்உரை
திருக்குறள்படிக்கவும், கற்கவும், ஓதவும் எளியதாகஇருக்கும். ஆனல், அதன் பொருளை உணர்வதற்கு அரியதாக இருக்கும். ஏனென்றால், அது பற்பல சொல், தொடர், பா நுட்பங்களையும், பொருள், நய நுட்பங்களையும் தன்னுள்ளே உள்ளடக்கமாகக் கொண்டு ஒள்ளியதாய் விளங்குகின்றது என்பதால்.
திருக்குறளைப்போலவே ஓரளவு திருவள்ளுவமாலையும் தன்னுள்ளே சொல், தொடர்நுட்பங்களையும், சொல், பொருள்நுட்பங்களையும் கொண்டு விளங்குகிறது. அவற்றை ஆழ்ந்து ஆய்வதே இவ்ஆய்வுக்கட்டுரையின் ஆய்வுப்பொருள்ஆம்.
இவ்ஆய்வு இறைப்பவர்க்கு ஊற்றுநீர்போல் [திருக்குறள்1161] மிகும். ஆதலின், அறுவர் பாடல்களில் அமைந்துள்ள சில சான்றுகள் வாயிலாக மட்டுமே திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் இங்குஆராயப்படுகின்றன.
4.0. சொல்நுட்பவரைவிலக்கணம்
நுட்பச்சொல் என்பது சொல்நுட்பம் என்று ஏன் ஆயிற்றோ எனின், பின்மொழிநிலையல் என்னும் பரிமேலழகர் எடுத்துக்காட்டும் விதியின்படியாம்.
ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், கற்போரது நுண்நோக்கு ஆய்வு[MICRO STUDY] வழிப் புரிந்துகொள்ளுமாறு குறிப்பாகவும், மறைந்திருக்குமாறும் பல பொருள்களைச் சொல்லுக்குள் நுழைத்து நுணுக்கமாகச் சொல்லுதல் சொல்நுட்பம் எனலாம்.
இதனை ஆங்கிலத்தில் சட்ல்டி [SUBTLETY] எனலாம். இதற்கு ஆங்கில அகரமுதலி[LONG MAN DICTIONARY OF CONTEMPORARY ENGLISH — PAGE 1056] தரும்பொருள்: நுட்பம். விளக்கம்: இதைக் கவனிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், விளக்குவதற்கும் எளியது அன்று. [not easy to notice, understand or explain] என்பதாம். சொல்நுட்பத்தை ஆங்கிலத்தில் சட்ல்வேர்ட்[SUBTLE WORD]எனலாம்.
இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகம் மீநுண் தொழில்நுட்பம்[NANO TECHNOLOGY]பற்றிப் பெரிதும் பேசுகிறது. அதாவது, மிகமிகச் சிறிய ஒன்றிலிருந்து மிகமிகப் பெரிய பயன்கள் பலவற்றைப் பெறுதல் என்பது. இவ்விளக்கம் சொல்நுட்பத்திற்கும் செல்லும். சிறிய சொல்லிலிருந்து பல பெரிய நற்பயன்தரும் பொருண்மைகளைப் பெறுதல்தானே சொல்நுட்பமும்.
5.0. சொல்நுட்பஅமைவு
மணிகளால் தொடுக்கப்பட்ட மாலைக்குள்ளே மறைந்திருக்கும் நூல்போல்[திருக்குறள்1273] சொல்லுக்குள்ளே நுட்பப்பொருளும் மறைந்திருக்கும். மலர் மொட்டுக்குள்ளே மறைந்திருக்கும் நறுமணம்போல்[திருக்குறள்1274] சொல்லுக்குள்ளே நுட்பப்பொருளும் நிறைந்திருக்கும்.
படிக்கப்படிக்கத்தான் நூலில் மறைந்துள்ள பல்வேறு நயங்கள் வெளிப்படும்[திருக்குறள் 0783]. அதைப்போலத்தான்பாக்களில் /பாடல்களில் / செய்யுள்களில்/கவிதைகளில் அமைவுபெற்ற சொற்களைப் படிக்கப்படிக்கத்தான், அவரவர் நல்அறிவுத் திறனுக்கும், நுண்ஆய்வுத் திறனுக்கும்ஏற்ப, அச்சொற்களில் மறைந்துள்ள நுட்பப்பொருள்களும் வெளிப்படும்; ஒளிவிடும். உள்ளிடத்தை ஆராய்ந்து அங்குஉற்று / அங்கு அதனை உணர்வார் அறியும் வகையில் நுட்பப்பொருள் அமைவு பெற்றிருக்கும். [அகம்நோக்கி உற்றுஅது உணர்வார்— திருக்குறள்—0707] இத்தொடர் பொதுமைப் பொருளில்]
சொல்நுட்பம் உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் அமையும். அவற்றை நுண்ஆய்வு செய்து உணர்ந்து, மற்றவர்க்கும் உணர்த்தல்வேண்டும்.
பேராசிரியர் வெ.அரங்கராசன்