Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு


Guru

Status: Offline
Posts: 7468
Date:
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு
Permalink  
 


 ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
 

http://www.tamilartsacademy.com/books/tavam/chapter26.xml
தென்னார்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது. இவ்வூரை திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.
இதை எங்கள் துறை கல்வெட்டியல் பயிற்சி நிறுவன மாணவர் திரு. செல்வராஜ் கண்டுபடித்தார். கல்வெட்டியல் நிறுவனத்தின் ஓராண்டுக் காலம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒரு பண்டைய ஊரைக் எடுத்துக் கொண்டு அங்குள்ள கல்வெட்டுகள், கோயில்கள், கலை, சிற்பம், சமுதாயம் முதலியவற்றை ஆய்ந்து நெடும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று அளிக்க வேண்டும். திரு. செல்வராஜ் ஜம்பை கிராமத்தை தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார். பண்டைய தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது உடனே வரவும் எனத் தந்தி அவரிடமிருந்து வந்தது. சென்னையிலிருந்து ஜம்பைக்கு திருக்கோயிலூர் வழியாக ஒரே மூச்சாக வழியில் காபிக்கு கூடநிற்காமல் சென்றேன். அந்திமயங்கும் நேரமாகிவிட்டது ஊரின் அருகில் இருந்த மலைக்கு வேக வேகமாகச் சென்றோம். இருட்டுவதற்குள் அந்த கல்வெட்டை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக இந்த நேரத்தில் மலைமேல் ஏற்றீங்களே திரும்பி வரும்போது வழி தெரியாதே பார்த்து கூட்டிட்டுப் போங்க என்று யாரோ ஒருவர் கூறியது எங்கள் காதில் ஒலித்தது. அக்குன்றத்தில் "ஆள் ஏறாப்பாறை", "சன்யாசி மடம்", "தாசி மடம்" என்ற பகுதிகள் உண்டு. தாசிமடம் என்பது இயற்கையாக அமைந்த குகைத்தளம். அதில்தான் அக்கல்வெட்டு இருக்கிறது. ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள அக்கல்வெட்டைப் படித்தேன்.
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி

என்று கி.பி. முதல் நூற்றாண்டு எழுத்துக்களில் உள்ள அதைப் படித்தேன். குகைக்கு வெளியே ஓடிவந்தேன். மாணவர் செல்வராஜைக் கட்டி அனைத்துக் கொண்டேன். மீண்டும் குகைக்குள் ஒடினேன். அந்தக் கல்வெட்டை எழுத்து எழுத்தாகப் படித்தேன். மீண்டு வெளியே ஓடிவந்தேன். செல்வராஜை முதுகில் தட்டிக் கொடுத்தேன். எப்பேர்ப்பட்ட கல்வெட்டு, What a discovery! நீங்கள் கண்டுபிடித்துள்ள கல்வெட்டு எப்பேர்ப்பட்டது தெரியுமா? என்று கேட்டேன். மீண்டும் உள்ளே சென்று "ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்ற பெயரைத் தொட்டுத் தடவி ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தேன். உடன் இருந்தவர்கள் என்ன இப்படி இருக்கிறாரே என எண்ணினார்கள். தசமுகனை சங்கரித்து, மைதிலியை மீட்டு, அயோத்திக்கு அண்ணல் இராமபிரான் திரும்புகிறான் என்று பரதனிடம் அனுமன் கூறியபோது பரதன் என்ன நிலை அடைந்தான் எனக் கம்பன் கூறுவான்.
ஆடுமின் ஆடுமின் என்னும் ஐயன்பால்
ஓடுமின் ஓடுமின் என்னும் ஓங்கு இசை
பாடுமின் பாடுமின் என்னும்
சூடுமின் சூடுமின் தூதன் தாள் என்னும்

வேதியர் தமைத் தொழும் வேந்தரைத் தொழும்
தாதியர் தம்மைத் தொழும் தன்னைத் தான் தொழும்
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால்

என்று தன்னிலை மறந்த நிலை. அதைத்தான் என்னிலைக்கு ஈடாகக் கூற இயலும். என் மனதில் அந்த அளவுக்கு உவகை ஏற்படுத்திய இக்கல்வெட்டின் சிறப்புதான் என்ன? அதில் உள்ள இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ" என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும். அதியமான் நெடுமான் அஞ்சியை அறியாத தமிழரும் உண்டோ? தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை தான் உண்ணாது தமிழ் மூதாட்டி ஔவைக்கு அளித்த வள்ளல் அல்லவா அவன். அதை ஒளவையே பாடுவாள். "அருமையான நெல்லிக்கனி அதை உண்டால் என்றும் இறவாமல் இருக்கலாம் என்று தெரிந்தும் அதை நீ உண்ணாமல் அச்செய்தியை எனக்கு சொல்லாமல் நான் என்றும் இறவாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு ஈந்தனையே அதியர் கோமான் அஞ்சி! நீ ஆலகாலவிடத்தை தன் மிடற்றில் அடக்கி உலகை உய்ய வைத்த சிவனைப் போல சிறப்பாயாக" என
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

எனப் பாடுகிறார். புறநானூறு இதையே சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் "நெல்லி அமிழ்து விளை தீகனி ஔவைக்கு ஈந்த அதிகன்" என்பார். இச்சிறந்த வீரனால் எவ்வளவு பாடல்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன! எவ்வளவு புலவர்கள் இவன் புகழைப்பாடி இருக்கிறார்கள்! ஔவையார், பரணர், மாமூலனார், அரிசில்கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தைமகள் நாகையார், ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன. தகடூரைத் இன்றைய தர்மபுரியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர். அதியமான் மரபின் முன்னோர்கள் தேவர்களைப் போற்றியவர்கள். வேள்வி வேட்டுச் சிறந்தவர்கள். கரும்பு பயிரிடும் மரபை அறிந்து இவ்வுலகில் கரும்பு பயிரிடச் செய்தவர்கள்.
"அமரர் பேணியும் ஆவூதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின்முன்னோர்"
........................................................... புறம்

அதியமானைப் பற்றிய பெரும்பாலான பாடல்களை ஒளவையாரே பாடியிருக்கிறார். சுருங்கச் சொன்னால் ஔவையைக் குறிக்கும்போது அதியமான் நெடுமான் அஞ்சியின் நினைவும், அதிகனைக் கூறும்போது ஒளவையின் நினைவும் வராமல் இருக்காது. அவ்வளவுக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவரும். அவனை மழை போல் வாரி வழங்கும் வள்ளல் என்பர். ஒரு நாள் அல்ல, இரு நாட்கள் அல்ல, பல நாட்கள் பலரோடு சென்றாலும் முதல் நாள் எவ்வாறு முகமலர்ந்து வரவேற்றானோ அதே போல் வரவேற்கும் தன்மையன் அதியன். பரிசு பெறவருவோருக்கு அவனது அரணின் வாயில் எப்பொழுதும் திறந்திருக்கும் என "பரிசிலருக்கு அடையா வாயில்" என்னும் புறப்பாட்டு.
அவன் பெரிய தேர்களையும், மதம் பொருந்திய யானைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும், வேல் ஏந்தும் வீரர்களையும் படையாகக் கொண்டான். "நெடுந்தேர் அஞ்சி", "நெடு நெறி குதிரை கூர்வேல் அஞ்சி", "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி" என்றும் புகழப்படுகிறான். இப்பேர்ப்பட்டவன் அமைதியே உருவமாகவும் இருப்பான். சீறிக் கிளம்பினால் பெரும் காட்டையும் கணத்தில் சுட்டெரிக்கும் ஊழித் தீயையும் போல் இருப்பான். இவனது தூசிப் படைமுன் எதிர்த்து நிற்கமாட்டாமல் மாற்றரசர் புறமுதுகிட்டு ஓடுவர். அதியமான் புகழும் வீரமும் பலவாறும் சங்கப் பாடல்களில் போற்றப் பட்டுள்ளது. இவன் பெற்ற வெற்றிகளில் இரண்டு சிறப்பாகக் கூறப்படுகின்றன. ஏழு அரசர்களுடன் போரிட்டு ஒருமுறை இவன் பெரும் வெற்றி கண்டான். இப்பெரும் வெற்றியை பாடும் அளவுக்கு ஆற்றல் படைத்த புலவர் அன்று இல்லை. இவன் அடைந்த மற்றொரு வெற்றி மலையமான் திருமுடிக்காரியை வென்று திருக்கோயிலூரைக் கைப்பற்றியது. அதுவே இவன் பெற்ற தலையாய வெற்றியாகும். இவ்வெற்றியை பெரும்புகழ் பரணரும் பாடினார் என்று ஒவையாரே பாடுகிறார்.
 
இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று.
"இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புண்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாங்குலன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லை
பாடுநர்க்கு ஒன்றீகுநருமில்லை"
........................................................... புறம்

என்னும் ஔவையின் பாடல் யார் உள்ளத்தைத் தான் தொடாது? அவனது உடல் தீயில் இடப்பட்டது. அவனுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். இம்மாபெரும் புகழ் படைத்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் உளவாகின்றனவே இவை அனைத்தும் உண்மையானவையா? அன்றிக் கற்பனையில் தோன்றிய புனைந்துரைகளா? உண்மையாயின் அவன் எப்பொழுது வாழ்ந்தான்? என்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு சிலர் சங்கப் பாடல்கள் புனைந்துரைப்பாடல்கள் என்பர். இன்னும் சிலர் சங்க கால இலக்கியங்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பர். கிறிஸ்துவுக்கும் 700 ஆண்டுகட்கும் முற்பட்டவை என்போரும் உண்டு. இவ்வாறு முரண்பாடுள்ள கருத்துகள் ஓய ஏதாவது சான்று கிடைக்காதா என்று ஏங்கும் நெஞ்சங்களும் உண்டு.
முதன் முதலில் புகளூர் ஆர்நாட்டார் மலைக்கல்வெட்டில் மூன்று சேரர் தலைமுறையைக் குறிக்கும் கல்வெட்டைப் படித்து சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களே கல்வெட்டில் குறிக்கப் பெறுபவர். இதிலிருந்து சங்க இலக்கியத்தின் காலத்தை கணிக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டியவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆகும். அவ்வளவு ஆதாரத்துடன் அவர் கூறியும் அதையும் நம்பாத பேர்வழிகள் நம்மிடையே உண்டு. எழுதியோரும் உண்டு. அந்த நிலையில் ஜம்பையில் இப்பொழுது கிடைத்துள்ள அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு சங்க இலக்கியத்தில் கூறியுள்ள அரசர்களும், தலைவர்களும், வாழ்ந்து வீரம் விளைத்து குடிகளைத் காத்து வரலாறு படைத்தவர்களே என ஐயம் திரிபற, ஆணித்தரமாக ஆதாரச்சான்றுடன் எடுத்துக் கூறுகிறது என்பதாலேயே இக்கல்வெட்டு சிறப்புடையது.
இக்கல்வெட்டின் முன்நின்றபோது சங்க இலக்கியமே எம்கண் முன் நின்றது. எப்பேர்ப்பட்ட வரலாறு படைத்த பெருமகனின் கல்வெட்டு என்பதால் தான் ஆனந்த மேலிட்டில் திளைத்தோம் என்று கூறினேன். அதுவும் அவன் ஆட்சியிலே வேறு யாரோ கொடுத்தது அல்ல. அதியமான் நெடுமான் அஞ்சியே கொடுத்தது. அதுமட்டுமல்ல தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்க பாடல் கூறிற்று என்று பார்த்தோம். ஔவையும், பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைப் பாடினார்கள் என்றால் என்ன சிறப்பு! அந்த திருக்கோயிலூருக்கு மிக அருகிலேயே இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றால் அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்தி கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவல்லவா! அவன் திருக்கோயிலூரை எறிந்ததும் உண்மை, ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று என்ன வேண்டும். அதியன் சிவனடியை வணங்கிய போதும், அவன் எவ்வாறு எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. அது மட்டும் தானா கல்வெட்டு "அஞ்சி ஈத்த பாளி" என்கிறது ஈதல் கொடுத்தல் என்னும் பொருளில் ஈத்த என்ற சொல் அப்படியே சங்கப் பாடலில் அதுவும் அதியமானைப் பற்றிய பாடலிலேயே பயன்பட்டுள்ளது. "ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" என்று கூறும் ஒளவையின் பாடல்.
தமிழக வரலாற்றுக்கு மட்டும் இக்கல்வெட்டு அரும்செய்திகளை அளித்துள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்திய வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை அளித்துள்ளது இக்கல்வெட்டு. அதியனை "ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி" என்று அழைக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் தனது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளபுத்ரர், ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை. அங்கெல்லாம் பெளத்த தருமம் திகழ அவன் வகை செய்தான்.
அசோகன் குறிக்கும் ஸத்யபுத்ரர் யார் என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் வாய் மொழிக் கோசர் என்பவராய் இருத்தல் கூடும் எனச் சிலர் கூறினர். காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாயிருக்கக் கூடும் என்று சிலர் கருதினார். மகாராஷ்டிரத்தில் ஸத்புத்ரர் என்போர் உண்டு. அவர்களாயிருக்கக் கூடும் என்போரும் உண்டு. ஸத்யமங்கலம் இவர் பெயரால் வந்தது என்றனர் சிலர். ஸதியபுதோ என்பவர் அதியமான்களாக இருக்கக்கூடும் என்று ஊகித்தவர்களும் உண்டு. இப்பொழுது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் ஸத்யபுத்ரர்கள் அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாக தெளிவாக்கிவிட்டது. அதியனை பொய்யா எழினி (சத்யபுத்ரர்) எனப்புறம் கூறும். எவ்வளவு சிறப்பான கல்வெட்டுப் பாருங்கள்!
ஓரே வரியுள்ள இக் கல்வெட்டுத்தான் எவ்வளவு செய்திகளை வரலாற்றுக்கு அள்ளி அள்ளி வீசுகிறது. இந்தக் கல்வெட்டின் முன் நின்றபோது அதியமான் நெடுமான் அஞ்சியே நம் முன் உயிர் பெற்று நிற்பது போன்ற ஒரு பிரமை. அவனைப் பாடிய ஔவை, பரணர், கபிலர், மாமூலனார், நத்தத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்தனார் போன்ற ஈடிலாப் புகழ் பெற்ற புலவர்கள் இக்கல்வெட்டு எழுதிய போது வாழ்ந்தவர்கள், கண்முன் நிற்பர். ஓரி, காரி, குமணன், பேகன், போன்ற வள்ளல்களும், கரிகால் பெருவளத்தான், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, எனும் சோழ மன்னர்களும் செல்வக்கடுங்கோ, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற சேரப் பேரரசர்களும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும் வாழ்ந்த காலத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது என்று அறியும் போது யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு
Permalink  
 


தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் உரை
 
முன்னுரை


 
 


Airavatham-mahadevan-Kalam.jpg


அண்மையில் 16-12-2018 அன்று கோவையில் “களம்”  அமைப்பினர் நடத்திய, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தொல்லியல் அறிஞர் திரு சுப்பராயலு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஐராவதம் மகாதேவன் அவர்களை நினைவுகூரும் வகையிலும், தொல்லியலைப் பற்றிய வரலாற்றுப் புரிதலை உணர்த்தும் வகையிலும் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதொன்று. ஆங்கிலேயர் காலம் தொட்டுப் பல்லாண்டுகள் தொல்லியல் ஆய்வுகள் மேன்மையுடன் திகழ்ந்த நிலை மாறி அண்மைக்காலத்தில் ஒரு வெறுமையை எட்டியுள்ள சூழ்நிலையில், தற்கால இளைய சமுதாயம் அவற்றை மீட்டெடுத்துப் புத்தாக்கம் தரவேண்டிய கடமையை வலியுறுத்தும் வண்ணம் உரை அமைந்திருந்தது. தொல்லியல் துறையிலும்,  மூத்த அறிஞர்கள் இல்லாத நிலை. துறை வெறுமையாகக் காணப்படுகிறது. கல்வெட்டு, வரலாறு, மொழியியல், இலக்கியம் ஆகிய பன்முனைகளும் இணைந்து ஆழமான ஆய்வுகள் நடைபெற்றால்தான் தமிழ் மொழியின் பழமை, தமிழர் நாகரிகத்தின் பழமை ஆகியவை நிலை நிறுத்தப்பெறும் என்பதான ஒரு கருத்தை சுப்பராயலு அவர்களின் உரை நமக்குச் சுட்டிக்காட்டியது. அவர் உரையின் கருத்துகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.


P1180537%2B-%2BCopy.JPG
சிறப்புரை ஆற்றிய திரு. சுப்பராயலு அவர்கள்
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்
 
ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிராமி எழுத்துகளின் ஆய்வுக்காகவே அறியப்படுகின்ற அறிஞர். பிராமிக் கல்வெட்டுகள் அமைந்திருந்த எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று, கல்வெட்டுகளைத் தொட்டுத் தடவிப் பார்த்துப் படித்தவர். திருவாதவூர் பிராமிக் கல்வெட்டைப் படிக்கையில், கட்டிடங்களுக்குச் சாரம் அமைப்பதுபோல் சாரம் அமைத்து அதன் மேலமர்ந்து எழுத்துகளைப் படித்தவர். அவரது மறைவை ஒட்டி வெளியான பல ஒளிப்படங்களில் இந்தக் காட்சியைக் காட்டும் ஒளிப்படமும் வெளியானதை நாம் அறிவோம். குளித்தலை அருகே ஐயர் மலை (ஐவர் மலை அல்ல) மீது ஏறுவது மிகக் கடினம். அக் கடினத்தையும் தாங்கிக்கொண்டு கல்வெட்டைப் படித்தவர்.



Airavatham-mahadevan-and-team-thiruvadav
சாரத்தில் ஏறித் திருவாதவூர் பிராமிக்கல்வெட்டு படித்தல்

 
சென்னையில் ஐராவதம் மகாதேவன்
 
1964-ஆம் ஆண்டு. சுப்பராயலு அவர்கள் சென்னைப் பல்கலையில் ஆய்வு மாணவராய் இருந்த காலம். சென்னை அருங்காட்சியகத்தில் SOUTH INDIAN ARCHAELOGICAL SOCIETY என்னும் பெயரில் ஒரு கழகம் (ASSOCIATION) தோற்றுவிக்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நிகழ்த்தப்பெற்ற காலம். அக்கூட்டங்களுக்கு ஐராவதம் மகாதேவன் அவர்கள் வருகை தருவதுண்டு. அருங்காட்சியகத்தில் அப்போது தொல்லியல்-கல்வெட்டு அறிஞர் டி.வி. மகாலிங்கம் அவர்கள் பணியில் இருந்தார். (சுப்பராயலு அவர்களின் ஆசிரியர் இவர்). ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அப்போது கல்வெட்டுகளைப் பற்றித் தெரியாது. நாணயவியலில் (NUMISMATICS)  ஆர்வம் கொண்டிருந்தார். 1965-ஆம் ஆண்டு புகளூர் பிராமிக்கல்வெட்டை நேரில் சென்று பார்த்துப் படித்து ‘இந்து’ நாளிதழில் கட்டுரை வெளியிட்டார். கல்வெட்டு ஆராய்ச்சியில் அது அவரது முதல் படி. புகளூர்க் கல்வெட்டு, தொல்லியல் துறையினரால் முதலிலேயே பார்க்கப்பட்டிருந்தது; ஆனால், படிக்கப்பட்டு அதன் பாடம் வெளியாகவில்லை. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டுச் செய்தியை வெளியிட்டது அக்காலத்தே பெரிதும் பாராட்டப்பெற்ற நிகழ்வு. காரணம், புகளூர்க்கல்வெட்டில் சேர மன்னர்களின் வரிசை கூறப்படுகிறது.
 
தமிழ் நாடு தொல்லியல் துறை – நாகசாமி – ஐராவதம் மகாதேவன்
 
1961-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கப்பட்டது, 1962-ஆம் ஆண்டு நாகசாமி அவர்கள் துறையின் தலைவரானார். தமிழ்க் கல்வெட்டியல் துறை நாகசாமி அவர்களால் பரவலாக்கப்பட்டது; “ஜனரஞ்சகம்” என்று அதைக் குறிப்பிடலாம். ஐராவதம் மகாதேவன் அவர்கள் நாகசாமி அவர்களுடன் இணைந்துகொண்டார்.  துறை வளரும்போது அவரும் வளர்ந்தார். அப்போது துறையில் இருந்தவர்களுக்குப் பிராமி எழுத்துப் படிக்கத்தெரியும்; ஆனால், கல்வெட்டுகளை நேரில் பார்க்கும் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், 1966-ஆம் ஆண்டில், ஐராவதம் மகாதேவன் அவர்கள் நாற்பது பிராமிக் கல்வெட்டுகளை நேரில் சென்று பார்த்து TRACING முறையில் படியெடுத்துக் கல்வெட்டுகளின் பாடங்களை CORPUS OF BRAMI INSCRIPTIONS என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.  பின்னர், 1968-ஆம் ஆண்டு அது SEMINAR  ஒன்றில் வெளியாகியது. அண்மையில், பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான நூலுக்காகத் தாம் பார்த்த இடங்களுக்கெல்லாம் மீண்டும் சென்று படித்தே எழுதினார். திருத்தமாக அமையவேண்டும் என்பதே நோக்கம்.
 
தொல்லியல் துறையும் கே.வி. சுப்பிரமணிய அய்யரும்
 
இந்தியக் கல்வெட்டுத் துறை தொடங்கி (1890-இலிருந்து) நூற்று இருபது ஆண்டுகள் ஆயின. தென்னிந்தியா முழுமைக்குமான கல்வெட்டுத் துறை 1967 வரை ஊட்டியில் இயங்கிவந்தது. நாடு முழுமைக்குமான கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவை தமிழ்க் கல்வெட்டுகள். தென்னிந்தியக் கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழ்க்கல்வெட்டுகள். கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதி. படிக்கும் பணியில் இருந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, கல்வெட்டுகளைப் படித்தலிலும், பதிப்பித்தலிலும் தேக்க நிலை உருவானது. 1914-ஆம் ஆண்டில் படி எடுத்த கல்வெட்டுகள் பல 2014-ஆம் ஆண்டு சுப்பராயலு அவர்களால் பதிக்கப்பட்டன என்பதைக்கொண்டு இத்தேக்க நிலையைப் புரிந்து கொள்ளலாம். போக்குவரத்து எளிதாக இல்லாதிருந்த காலம் அது. மதுரையில், கே.வி. சுப்பிரமணிய அய்யர் மாட்டுவண்டியில் போய் கல்வெட்டுகளைப் படித்த வரலாறு உண்டு. பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்க அடிப்படை வகுத்தவர் கே.வி. சுப்பிரமணிய அய்யரே ஆவார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பொள்ளாச்சியில் (1990-96) பணியாற்றியபோது, கே.வி. சுப்பிரமணிய அய்யரின் மகனார் வைத்தியநாத அய்யர் கோவையில் இருந்தார். அவருடன் ஐராவதம் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் உதவியும் அவருக்குக் கிட்டியது. 2003-ஆம் ஆண்டு, பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய நூலைச் செம்மைப்படுத்தி மறு TRACING முறையில் படியெடுத்து முழு நூலைப் பதிப்பித்தார். பணியில் இவருக்கு உதவியவர்கள் தொல்லியல் துறையைச் சேர்ந்த சாந்தலிங்கம், வேதாசலம் ஆகியோர் ஆவர். TRACING முறை என்பது எழுத்துகளின் மேல் வெள்ளை மையால் எழுதுவது. அதாவது விளம்பல் படி. இந்த TRACING முறை சரியான முறையல்ல.  எழுத்துகளோடு அவற்றின் அருகில் கல்லின் இயற்கைப் பொறிப்பும் இருக்கும்.  எனவே எழுத்துகளைப் படிப்பதில் தெளிவு கிட்டாது

பிராமி எழுத்து – வரலாற்றுப் பின்னணி
 
வட இந்தியாவில் பிராமி எழுத்து எழுதப் பயன்பட்ட மொழி பிராகிருதம் ஆகும். பிராகிருதம் மக்கள் மொழி; அக்காலத்திய உலகியல் மொழி. சமற்கிருத மொழி, சமயச் சடங்குகளுக்காகப் பயன்பட்ட மொழியாக மட்டும் இருந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாணினி, வட இந்திய மொழிகளை ஆய்ந்து “அஷ்டத்தியாயி” என்னும் இலக்கண நூலை எழுதி, வட இந்திய மொழிகளின் பயன்பாட்டை வரையறுத்துக் கொடுத்தார். அந்த இலக்கண மரபுக்குப் பின்னர் மேற்கொண்டு சமற்கிருதம் வளர்ச்சியுறவில்லை. பின்னர், சமற்கிருதம் செப்பனிடப்பட்டு, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இலக்கியங்களில் பயிலத் தொடங்கியது.
 
மகத நாட்டில் வழங்கிய பிராகிருத மொழியை அசோகர் தம் ஆட்சியில் நிருவாக மொழியாக ஆக்கினார். அப்போது சமற்கிருதம் இருந்தது. ஆனால், அரசனின் சாசனங்கள் மக்களை எட்டுவதற்கு மக்களுக்குத் தெரிந்த மொழியே வேண்டியிருந்தது என்னும் காரணத்தால் பிராகிருதம் பயன்பட்டது. பின்னர் வந்த குப்தர்கள் காலத்தில் சமற்கிருதம் நிருவாக மொழியாக உருவெடுத்தது. அசோகர் பிராமிக் கல்வெட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர்களுக்குத் தெரிந்த மொழி பிராகிருதம். எனவே, தமிழ் நாட்டில் கிடைத்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகளைப் படிப்பதில், பிராகிருத அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தமிழ் நாட்டுப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியோடு பொருந்தாமையால் தெளிவற்ற நிலையே இருந்தது. கே.வி. சுப்பிரமணிய அய்யர்தாம் இக்கல்வெட்டுகளில் இருப்பது தமிழ் மொழியே என்று கண்டார். 1924-ஆம் ஆண்டில், கல்வெட்டுகளைப் படித்து வெளியிட்டார்.
 
 
அடுத்த கட்டமாக, 1935-ஆம் ஆண்டில், அறிஞர் தி.நா.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்க்கல்வெட்டுகள் பற்றிய நூலை அவர் சார்ந்திருந்த சுதேசமித்திரன் அச்சகத்தில் வெளியிட்டார். அவரே அந்நூலைப் பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் அவர், எழுத்துகளின் வளர்ச்சி குறித்த பட்டியலைக் கொடுத்திருந்தார். தமிழகத்தின் தமிழ் பிராமி, ஆந்திரத்தில் பட்டிபுரோலு என்னுமிடத்தில் கிடைத்த பிராமி இரண்டையும் ஒப்புமைப் படுத்தி தி.நா.சு. அவர்கள் ஒரு கட்டமைப்பைக் குறித்திருந்தார். அசோகன் பிராமியில் கூட்டெழுத்து முறை இருந்தது. மெய்யெழுத்து இரட்டிக்கும்போதும், இரண்டு மெய்யெழுத்து ஒன்றாக வரும்போதும் இக்கூட்டெழுத்து முறையைப் பயன்படுத்தினார்கள். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : எடுத்துக் காட்டாக, ‘மக்கள்”  என எழுதுவதற்கு “மகள்”  என்பதாக எழுதி, ‘க’ எழுத்தின் கீழ் ‘க்’  எழுத்தை எழுதுவார்கள். கல்வெட்டுகளில் நாம் காணும் “ஸ்வஸ்திஸ்ரீ”  என்பதை எழுத, “ஸஸிஸ்ரீ”  என்னும் மூன்றெழுத்துகளை மேல்பகுதியில் அமைத்து, முதல் ‘ஸ’ எழுத்தின் கீழ் ‘வ’ எழுத்தையும், இரண்டாவதாக உள்ள ‘ஸி’ என்னும் எழுத்தின் கீழ் த்’  எழுத்தையும் எழுதுவார்கள்). இந்தக் கூட்டெழுத்து அமைப்பு தமிழ் பிராமியில் இல்லை. தமிழ் பிராமியில், மெய்யெழுத்தைக் குறிப்பதற்கே உயிர்மெய் எழுத்து எழுதப்பட்டது. உயிர்மெய் எழுத்தைக் குறிக்க, அவ்வெழுத்தின் மேல் ஒரு கோடு எழுதப்படும். (மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறை இல்லை). டி.வி. மகாலிங்கம் அவர்கள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்கத்தொடங்கி 1968-ஆம் ஆண்டில் நூல் வெளியிட்டார். ஐராவதம் அவர்களின் CORPUS OF BRAMI INSCRIPTIONS நூலுக்குப் பின்னரே டி.வி. மகாலிங்கம் அவர்களின் நூல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சிந்துவெளி எழுத்துகள் – ஆராய்ச்சி
 
1968-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முயற்சி செய்தார். முத்திரைப் பொறிப்புகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி அட்டவணைப் (CONCORDANCE)  படுத்தினார். இது ஒரு முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுகிறது. சர். ஜான் மார்ஷல் (SIR JOHN MARSHAL), ஃபாதர் ஹீராஸ்  (FATHER HERAS),  ஆஸ்கோ பர்ப்போலா (ASKO PARPOLA)  போன்றவர்கள் சிந்து சமவெளி எழுத்துகளை ஆய்ந்துள்ளனர்.  ஃபாதர் ஹீராஸ்  (FATHER HERAS) அவர்கள் சிந்து சமவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம் என்று கருதினார். சிந்து வெளியில் தமிழ் மொழி இருந்தது என்பதாக 1965-இல் ஆஸ்கோ பர்ப்போலா (ASKO PARPOLA) தம் ஆய்வுக்கட்டுரையில் குறித்துள்ளார்.  தமிழ் நாட்டில் ஐந்தாறு பேர் – மதிவாணன் போன்றோர் - சிந்து எழுத்துகளைப் படிக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். 1960-இல், சோவியத் ரஷ்யாவிலும் சிந்துவெளி எழுத்துகளை ஆய்ந்துள்ளனர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் முதலில் சிந்து எழுத்துகளைப் படிக்கவில்லை. CONCORDANCE என்னும் எழுத்துகளின் தொகுப்பை வெளியிட்டார். இது ஒரு நிகண்டு போன்ற தொகுப்பு எனலாம். வடமொழியில் “கோசம்”  என்பார்கள்; அது போன்றது. சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வு தொடர்பாக இந்நூல் ஒரு கொடை என்பதில் ஐயமில்லை. அது போலவே, அண்மையில், பிராமி எழுத்துகளைப்பற்றி முன்னரே எழுதிய நூலை மேம்படுத்தி வெளியிட்டுள்ளார். இந்நூலும் அவர் வழங்கிய கொடையாகும். ஆஸ்கோ பர்ப்போலாவும் (ASKO PARPOLA) CONCORDANCE தொகுப்பை எழுதியுள்ளார். 1994-இல் ஒரு நூலும் எழுதியுள்ளார்.
 
CONCORDANCE  நூலுக்குப் பிறகு, ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து எழுத்துகள சிலவற்றைப் படிக்கவும் தொடங்கினார். 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், உடல் நலக் குறைவு காரணமாக நூல் வெளியிடாது, நோட்டுப்புத்தகங்களில் எழுதி வைத்துள்ளார். தற்போது, அவரது எழுத்து நோட்டுகள் அனைத்தும் ரோஜா முத்தையா நூலகத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.
 
சிந்துவெளி எழுத்துகள், LOGO WRITING அல்லது LOGO GRAPH என்பதான ஒருவகைக் குறியீட்டெழுத்து முறையில் அமைந்துள்ளன. ஒரு பெயர்ச்சொல் போலவும், அதே சமயத்தில் சொல்லின் விகுதி போலவும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளன எனலாம். எடுத்துக் காட்டாக, “இல்”  என்னும் தமிழ்ச் சொல் வீடு’ என்னும் பொருள் தந்தாலும், ‘ஊரில்’, ‘தெருவில்’  ஆகிய சொற்களில் காணப்படுவது போல் ஒரு விகுதியாகப் படிக்குமாறும் அமைகிறது. சிந்து வெளி எழுத்துகள் இது போல் ஒரு சிக்கலைக் கொண்டுள்ளன.
 
LOGO GRAPH  எழுத்துகளை சித்திர எழுத்துவகை எனலாம். இவ்வகை எழுத்துகளைக் கிரேக்கர்கள் ஃபினீசியரிடமிருந்து (PHOENICIANS) பெற்றார்கள். ஃபினீசியருக்கும் முன்பு  இவ்வகை எழுத்துகளை சுமேரியர்கள் பயன்படுத்தினர். ஃபினீசியர்கள், கடல்சார் வணிகர்கள். அவர்கள், LOGO GRAPH சித்திர வடிவங்களை எழுத்தாக்கினார்கள். இவ்வகை எழுத்துகளில் உயிர் எழுத்துகள் இரா. மெய் எழுத்துகள் மட்டுமே உண்டு. வேறு வேறு வகையில் படிக்கும்படி அவை அமையும். எடுத்துக்காட்டாக, ஆங்கில எழுத்துகள் K T B  ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஒரு தொகுதியை, இந்தி மொழியில், ‘கிதாப்’,  என்றோ ‘குதுப்’  என்றோ இரு வேறு முறையில் படிக்கலாம்.  ஆனால், இவ்வெழுத்துகளைப் படிக்க மொழி ஒன்றின் அடிப்படை மிகத் தேவை. மொழி இன்னதென்று தெரிந்தால் மட்டுமே மேலே குறித்தவாறு படிக்க இயலும். சிந்து வெளி எழுத்துகளின் மொழி இன்னதென்று தெரியாததாலேயே இன்னும் படிக்க இயலவில்லை. எடுத்துக்காட்டாக, ‘கெ ட ட து’   என்பதை மொழி அறிந்தவர் மட்டுமே ‘கெட்டது’  எனப்படித்தல் இயலும். சிந்து வெளி ஆய்வில் எழுத்துகளைப் படிக்க முயலும் பெரும்பாலோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மொழி இயல் அடிப்படை ஆய்வு இப்போது இல்லை என்பது குறையாக உள்ளது. மொழி ஆய்வுக்கு மொழி இயல் மிகத் தேவை. மூல மொழி பற்றிய ஆய்வு தற்காலம் தேவை. அடிப்படை மொழி ஆராய்ச்சிக்கு முதலில் இடமளிக்கவேண்டும். பல பல்கலைக்கழகங்களில் மொழி இயல் ஆய்வுகள் இல்லை. சிந்து வெளி எழுத்துகள் பற்றிய புதிரை விடுவிக்க நாம் சுமேரியாவுக்குச் செல்லவேண்டும். சுமேரிய மொழி அறிவு வேண்டும்.
 
ஐராவதம் மகாதேவன் ஆய்வு செய்த சில பிராமிக் கல்வெட்டுகள்
 
அ) சித்தன்ன வாசல் கல்வெட்டு
 
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “தமிழ் – பிராமி கல்வெட்டுகள்
நூலில் உள்ள கல்வெட்டுப் பாடமும் குறிப்பும் கீழே:
P1180538.JPG
கல்வெட்டுப் பாடம்
எருமிநாடு குமுழ்ஊர்  பிறந்த காவுடிஈ
தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்    
 
இக்கல்வெட்டில் கன்னட மொழித்தாக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. காரணம், எருமி நாடு என்பதை எருமை நாடு எனக் கொள்வதே. எருமை நாடு, மகிஷ மண்டலம் எனச் சமற்கிருதத்தில் குறிப்பிடப்பெறும் மைசூர் நாட்டைக் குறிக்கும். அப்பகுதியில் இருந்த ஊர் குமிழூர். இச்சொல், குமிழ் என்று தேக்கு மரவகையின் அடியாகப் பெயர் பெற்றிருக்கலாம். காவுடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர்.  ‘கௌடி’ என்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் ‘காவுடி’ என்று எழுதப்பட்டுள்ளது.  இறுதியில் உள்ள ‘இ’ , பளிஇ, கணிஇ என்ற பிற தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வரும் வகையில் இகர இறுதிச் சொல்லான காவுடி என்பதிலும் எழுதப்பெற்றுள்ளது. தென்கு சிறுபோசில் என்பது தெற்கு சிறுவாயில் என்று பிற்காலத்தில் வழக்கில் இருந்த நாட்டுப்பிரிவின் பண்டைய வடிவம். வாயில் என்ற தமிழ்ச்சொல் ‘ஹொசிலு’ என்று கன்னடப் படுத்தப்பட்டு, அதன் தமிழ் வடிவமான ‘போசில்’ என்று இடம் பெறுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன்.
 
இளயர் என்ற சொல் வீரர் பிரிவினரைக் குறிக்கும். இவர்களைத் துளு நாட்டிலிருந்து வந்தவர் என்று மகாதேவன் வழக்கினை ஆதாரமாக்கிக் கூறுகிறார். இளயர் என்போர் வீரர் குழுவினர் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.
 
சித்தன்ன வாசல் கல்வெட்டு தனித்தன்மை வாய்ந்தது. இக்கல்வெட்டின் மூலமே, தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இருந்த தொடர்பினை நேரடியாக அறிகிறோம். எருமைநாடு என்ர பெயர் சங்க இலக்கியங்களிலேயே இடம்பெறும் ஒன்றாகும். அடுத்த ‘காவுடி’ என்ற சொல் சமண மதத்தில் இருந்த பெண்பாற் துறவியைக் குறிக்கிறது. சமண மதத்தில் அவ்வளவு பண்டைக் காலத்திலேயே பெண்குரத்தியர் இருந்ததற்கான முதற்சான்றாக இது அமைகிறது. சிறுபோசில் என்ற சொல்லும் ‘சிறுவாயில்’ என்பதன் கன்னட வடிவம் என்றாகும் நிலையில், இக்கல்வெட்டில் இடம்பெறும் கன்னட மொழியின் தாக்கத்தினை முதன் முதலாகக் காட்டும் சான்றாக இது அமைகிறது.
 
கட்டுரை ஆசிரியர் குறிப்பு :
 
தமிழ் பிராமியில், மெய்யெழுத்தைக் குறிப்பதற்கே உயிர்மெய் எழுத்து எழுதப்பட்டது. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறை இல்லை. உயிர்மெய் எழுத்தைக் குறிக்க, அவ்வெழுத்தின் மேல் ஒரு கோடு எழுதப்படும் என்பதாகப் பார்த்தோம். இந்த அமைப்புமுறை இக்கல்வெட்டில் இருக்கிறது. இக்கல்வெட்டில், ழ், ர், ந், ன், ல், ய், ட், ம்  என்னும் மெய்யெழுத்துகள் புள்ளி பெறாமல் உயிர்மெய் எழுத்துகளாகவே எழுதப்பட்டுள்ளன. உயிர்மெய் எழுத்துகளான – அகர அல்லது ஆகார எழுத்துகள் – நா, ற, த, கா, ள, த, ன  ஆகியவற்றின் மேற்புறம் ஒரு கோடு எழுதப்பட்டுள்ளது.  அனைத்திலும் ஒன்றுபோல் கோடு இருப்பினும்,  நா, கா என்னும் இரு நெடில் எழுத்துகள் மட்டும் அவ்வெழுத்துகள் அமைந்த ‘நாடு’,  ‘காவுடி’  என்னும் சொற்களின் பொருள் சுட்டு நோக்கி நெடிலாகப் படிக்கப்பட்டுள்ளன.  ஆனால், மெய்யெழுத்துகளை உயிர்மெய் எழுத்துகளாக எழுதும் விதி முறை இக்கல்வெட்டில் ஓரிடத்தில் மட்டும் பின்பற்றப்படவில்லை. ‘இளயர்’,  ‘செய்த’  ஆகிய இரு சொற்களில் வருகின்ற ‘ய’  உயிர்மெய், ஒன்றில் மெய்யாகவும், மற்றதில் உயிர்மெய்யாகவும் எழுதப்பட்டுள்ளன.
 
மற்றொன்று, பிராமியில் ‘இ’ எழுத்துக்கும், ‘ஈ’ எழுத்துக்கும் தனித்தனி எழுத்துகள் இருக்கும்போது, இக்கல்வெட்டில் ‘ஈ’  எழுத்தை ‘இகரமாகப் படித்திருக்கிறார். காவுடி’  என்னும் சொல்லை அடுத்து ‘ஈ’  எழுத்து உள்ளது; ஆனால் ‘இகரமாகப் படித்திருக்கிறார்.
 
அடுத்து, மேற்படி நூலின் குறிப்பில்,
 
//காவுடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர்.  ‘கௌடி’ என்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் ‘காவுடி’ என்று எழுதப்பட்டுள்ளது.//
 
என்று பதிப்பாசிரியர்கள் கூறியிருக்கின்றனர்.  காவுண்டன் என்பதன் பெண்பால் பெயரே காவுடி என்னும் கருத்தும், கௌடி என்பது பெண் துறவியின் (இயற்) பெயர் என்னும் கருத்தும் முரணாக உள்ளன.
 
ஆ) ஆனைமலைக் கல்வெட்டு
 
கல்வெட்டுப் பாடம்    (மேற்படி நூலில் உள்ளவாறு)


P1180539.JPG
 
இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்
 
குறிப்பு :     (மேற்படி நூலில் உள்ளவாறு)
 
இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரிஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள்.
 
இவம் என்னும் சொல் இபம் என்னும் சமஸ்கிருதச்சொல்லின் மறுவடிவமாகும்.   யானை என்பது இதன் பொருள். உறையுள் என்பது உறைவிடம் என்பதைக்குறிக்கும். பாதந்தான் என்பதைப் பாய் அல்லது படுக்கை தந்தான் எனக் கொள்ளலாம்.  ஆனால் இச்சொல்லைப் பதந்தன் எனக்கொண்டு மரியாதைச் சொல்லாகக் கருதுவர் ஐ.மகாதேவன். ஏரி என்னும் ஊரைச் சேர்ந்த ஆரிதன் என்பது ஒரு துறவியின் பெயர். அட்டவாயி என்பதன் தமிழ் வடிவமாக அத்துவாயி என்பதைக் கொள்ளலாம். அர்த்தம் உரைப்பவன், சமயச் சொற்பொழிவு நிகழ்த்துபவன் என்றும் இதற்குப் பொருள் கூறலாம். அரட்டன் என்பது அத்துறவியின் பெயராகவும் காசிபன் என்பது கோத்திரப் பெயராகவும் கொள்ளப்படும். ஆரிதன், அரட்ட காயிபன் என்னும் இரு துறவியருக்கான தங்குமிடமாக இக்குகைத் தளத்தைக் கொள்ளலாம்.                                                                                                                           
 
சுப்பராயலு அவர்களின் கருத்து:  ஐராவதம் மகாதேவன் ‘இவ’  எனப்படித்து யானை  எனப் பொருள் கூறுகிறார். ஆனால், ‘இவ் குன்றம்’  என்றும் படிக்கலாம். இவ்’  என்பது வேறு பாடம்.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :   இக்கல்வெட்டில், பா, தா, வா, கா ஆகிய உயிர்மெய் நெடில் எழுத்துகளுக்கு மட்டும் எழுத்துகளின் மேற்புறம் கோடு உள்ளது. இக்கல்வெட்டில் ‘இகர’  உயிர் எழுத்து எழுதப்பட்டு இகரமாகவே (குறிலாக) படிக்கப்படுகிறது. ட்’ என்னும் மெய்யெழுத்து மட்டும் புள்ளி பெற்று மற்ற மெய்யெழுத்துகள் புள்ளி பெறாமல் உயிர்மெய் எழுத்துகளாகவே எழுதப்பட்டுள்ளன என்பது சிந்தனைக்குரியது.
 
பிராகிருதம் பற்றி சுப்பராயலு அவர்களின் கருத்து:
 
தமிழர்களுக்கு முதலில் அறிமுகமானது பிராகிருதம். பின்னரே சமற்கிருதம் அறிமுகமாகிறது. எழுத்துகளைப் பரப்புபவர் வணிகர்கள்தாம். தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் உள்ள ஆள் பெயர்கள் பிராகிருதம். பிராகிருதத்தில் மெய் இரட்டிக்காது.
 
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156. 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard